கால்டுவெல் , திராவிடம் குறித்து கண்ணன், நரேன்…

This entry is part [part not set] of 33 in the series 20100725_Issue

புதியமாதவி, மும்பை


——————————————————

கண்ணன் :

1>கால்டுவெல்லுக்கு முன்பு திராவிடம் என்ற சொல் இனம் என்ற பொருள்
தரும்படியா வந்துள்ளது?

கால்டுவெல்லுக்கு முன் 1816ல் எல்லீஸ் அவர்கள் முயற்சியால் திராவிட மொழிகள் சிலவும்
அவற்றைக் குறிக்க அப்பெயரும் அடையாளப்படுத்தப் பட்டுவிட்டன.
இன்று நாம் புரிந்து கொண்டிருக்கும் இனம் என்ற கருத்து 16ஆம் நூற்றாண்டுக்குப்பின்
வந்த மாந்தவியல் ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்ட கருத்து. எனவே இக்கருத்தை
நாம் நம் பழைய இலக்கியங்களில் தேடினால் கிடைக்குமா? என்பது யோசிக்க
வேண்டிய விசயம்.
குழு, குலம், குடி, சாதி என்ற பாகுபாடுகளை மட்டுமே காணலாம்.
ஆனாலும் இந்தப் பாகுபாடுகள் இன்றைய இனக்கோட்பாடுகளுடன்
முரண்படாமல் ஒரே அலைவரிசையில் இருப்பதும் நோக்கத்தக்கது.

1.1
சங்க இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் திராவிடம் என்ற சொல்
நமக்கு கிடைத்திருக்கும் எந்தப் பாடல்களிலும் இல்லை. ஆனால் ஆரியம்
என்ற சொல் பல்வேறு பாடல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களில்
கையாளப்பட்டிருக்கிறது.

1.2
தேவாரத்திலும், “தமிழன்” என்ற சொல்லே “ஆரியன்” என்ற சொல்லோடு காணப்படுகிறது. “ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்”, “தமிழோடு ஆரியமும் கலந்து” என்ற தொடர்களில் “ஆரியன்”, “தமிழன்” என்றே வருகிறது.

1.3

7, 8 அல்லது 11ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப் படும் நாமதீப நிகண்டு, “தமிழ்” என்பதற்கு “திரவிடம்” என்ற சொல்லைக் காட்டுகிறது[
(Sivasubramanya Kavirayar, NamaThipa Nikandu, Thanjavur University, 1985.)

1.4
9வது நூற்றாண்டைச் சேர்ந்த, சேந்தன் திவாகரம் பேசப்படுகின்ற, 18 மொழிகளுள் ஒன்றாக “திரவிடத்தை”க் குறிப்பிடுகிறது. பிறகு வந்த “காந்தத்து உபதேசக் காண்டம்” என்ற நூல் சிவபெருமான் எப்படி அகத்தியருக்கு திரவிடத்தினுடைய இலக்கணத்தை வெளிப்படுத்தினார் என்ற குறிப்பைக் கொண்டுள்ளது. “பிரயோக விவேகம்” என்ற நூலின் ஆசிரியர் சமஸ்கிருத வார்த்தை “திரமிளம்” என்பதுதான் “தமிழ்” என்றாகியிருக்க வேண்டும் என்று விளக்குகின்றனர்.

1.5
ஆனால், “தமிழ்” என்பதுதான் சமஸ்கிருதத்தில் “திரவிடம்” என்று வழங்கப் படுகிறது என்கின்றனர். சிவஞானயோகியும் திரவிடம் என்பது தென்மொழி என்பதனைக் குறிக்க உபயோகப்படுத்த படுகிறது என்கிறார்.(Sabapathy Navalar, Dravida Prakasikai, Madras, 1899, p.7.

1.6
காரவேலன் தோற்கடித்த “த்ரமிரதேச சங்கடனம்”: கலிங்கத்தை ஆண்ட காரவேலன் தனது எல்லைகளுக்கு அச்சுருத்தலாக 1300 வருடங்களாக இருந்து வந்த ஒரு “த்ரமிரதேச சங்கடனம்” – தமிழ் / திராவிட அரசர்களின் கூட்ட்டணி – பற்றிய குறிப்புள்ளது

1.7

புராணங்களில் பாகவத புராணம் (9 அல்லது 10 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க
வேண்டும் ) ‘திராவிட தேசத்து ஈஸ்வரனும்’ என்று பதிவு செய்திருக்கிறது.

1.8
தமிழ் என்ற சொல்
தமிழ் மொழி (புறம்.50: 50: 9-10; 58: 12-13);
. தமிழ் படை (சிறும்பாணாற்றுப்படை. 66-67);
தமிழ்நாடு (பரிபாடல்.6:60)
என்ற பொருளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே தான் திராவிடம், திராவிடன் சொற்கள் தென்னிந்தியர்களைக் குறிக்க
வடமொழியில் வழக்கில் இருந்தச் சொல்லாக இருக்கும் சான்றுகளைப் பற்றிக்
கொண்டு நீ தமிழனா? திராவிடனா? என்ற கேள்வியை எழுப்பி தமிழ்த்தேசிய
உணர்வை மீட்டெடுக்க நினைக்கிறார்கள் ஒருசாரார்.

>2 கண்ணன் கேள்வி:
பஞ்ச திராவிடம், பஞ்ச கௌடம் என்று பாரதத்தின் நிலப்பகுதிகளையல்லவா இரண்டகாப் பிரித்துக் குறிப்பிட்டார்கள்; இதில் இனம் எங்கே வந்தது அல்லது எப்போது வந்தது? கால்டுவெல்லுக்கு முன்பா பின்பா? அதைத் தெளிவுப்டுத்தினால் நல்லது.

2.1
பஞ்ச திராவிடம் , பஞ்ச கெளடம் பாரத நிலப்பகுதிப் பிரிவுகள் தான்.
வாழ்நிலம் வாழ்ந்தவர்களுக்கும் அடையாளமாகி வருவது இயல்பு. மேலும்
ப்ழைய வடமொழி நூல்களுக்கு உரை எழுதியவர்கள் பஞ்ச திராவிட பிராமணர்கள்
என்றால் தென்னிந்திய பிராமணர்களையும்
பஞ்ச கெளட பிராமணர்கள் என்று வட இந்திய பிராமணர்களையும் குறிப்பதாகவே
உரை எழுதியுள்ளார்கள்.

2.2
பஞ்ச திராவிடம் என்பது ஆந்திரா, கர்னாடகா, மகாரஷ்டிரா, குஜராத் இத்துடன் திராவிட என்ற ஐந்து பிரிவாக சொல்லுவார் ஜோகேந்திரநாத் பட்டாச்சார்யா.
1896 அவர் எழுதியுள்ள நூல் Hindu castes amd sect.
இந்தவகையில் தமிழர்களையும் மலையாளிகளையும் ‘திராவிட’ என்ற ஒன்றாகவே
அடையாளப்படுத்தி இருப்பது கவனிக்க வேண்டும். ஏனேனில்,
பஞ்ச திராவிட, பஞ்ச கெளட பிரிவுகள் மலையாள மொழி தோன்றுவதற்கு
வெகுகாலத்திற்கு முன்பே உருவானவை.

2.3
தென்னிந்தியப் பிராமணர்கள் தங்களைத் திராவிடர் என அழைத்துக் கொள்வதை
பதிவு செய்திருக்கிறார் எட்கர் தர்ஸ்டன். (குலங்களும் குடிகளும் தொகுதி 2, தமிழ்ப்
பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1987, பக் 251)

2.4
கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் பெயர் இன்றும் மேற்சொன்ன கருத்துகளுக்கு
ஆதாரமாக இருக்கிறது. அவர் தன் நேர்காணலில்
தன் முன்னோர்கள் கும்பகோணம் ஐயர் வகுப்பைச் சார்ந்தவர்கள் என்றும்
அதனால்தான் ‘திராவிட்’ என்ற பெயரொட்டைக் கொண்டிருப்பதாகவும்
சொல்கிறார். அவருடைய தன் வரலாறும் அவர் பார்பனப்பிரிவைச் சார்ந்தவர்
என்று பதிவு செய்துள்ளது.

2.5
தென்னிந்தியாவில் திராவிட தேசம் என்ற பெயரிலேயே ஒரு தேசம் இருந்ததாகவும்
புராதன இந்தியாவின் 56 தேசங்களில் அதுவும் ஒன்று என்று வடமொழிச் சார்பு
நூல்கள் குறிப்பிடுகின்றன..
பாண்டிய தேசம், சோழ தேசம், கர்னாடக தேசம், கேரள தேசம் ஆகியவை
அல்லாத திராவிட தேசத்தை இதிகாச நாயகர்களுடன் தொடர்பு படுத்திக்
புராணங்கள் பேசுகின்றன.

2.6
திராவிட”: சமஸ்கிருத மூலங்கள்: மனுவின் படி “திராவிடர்” தகுதியிழந்த / விலக்கப் பட்ட சத்திரியர் மற்றும் அவர்கள் விர்ஸபனுடைய மகனான “திராவிட” என்பவனது வழிவந்தவர்கள் எனக்குறிப்பிடுகின்றார். மஹாபாரதத்தில் கொடுக்கப்பட்டுள்ள, இரண்டு தகுதியிழந்த சத்திரியர்களின் பட்டியல்களில் “திராவிட” என்போர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாகவத புராணம் சத்தியவிரதனை “திராவிடரின் அரசன்” என்று குறிக்கிறது. sசித்திரகுப்தனின் அமைச்சராக இருந்த சாணக்கியன், திராவிட நாட்டை அதாவது காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவன் என்றே குறிப்பிடப்படுகிறான். அதுமட்டுமல்லாது, அவனது பல பெயர்களில் “திரமிள” என்பதும் உள்ளது – வாத்யாயன, மல்லங்க, குடில, த்ரமிள, பக்சிலஸ்வாமி, விஷ்ணுகுப்த, அங்குல முதலியன். CE 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த குமாரில பட்டர் “ஆந்திய திராவிட பாஷா” என்ற சொற்றொடரை உபயோகித்துள்ளார். விசிஸ்டாதுவைத இலக்கியங்களில் (சுமார் 7வது நூற்றாண்டு CE) “திரமிடாச்சாரியார்” என்பவர் காணப்படுகிறார். வராஹமிஹிரருடைய பிரஹத்சம்ஹிதை, யோகயாத்ரம், வராஹபுராணம், வராஹிதந்த்ரம், மஹாபாரதம் முதலிய நூல்கள் ஆந்திரர், கருநாடகர், கூர்ஜர், தைலிங்கர், மஹாரஷ்டிரர் என்பவர்களை “திராவிடர்” என்றே குறிக்கின்றன. இவர்கள் “பஞ்ச திராவிடர்” என்றே குறிப்பிடப்படுகின்றனர். இங்கு, “பஞ்ச திராவிடர்” மற்றும் “பஞ்ச கௌடர்” இரண்டு சொற்றொடர்களும் பிராமணருக்கு உபயோகப்படுத்தப் பட்டுள்ளது.

மார்க்கண்டேய, கருட, விஷ்ணு-தர்மோத்திர புராணங்கள் மற்றும் பிரஹத்சம்ஹிதை தென்மேற்கு இந்தியாவில் உள்ள மக்களாக காம்போஜர், ஸ்ரீமுகர், அனர்த்தர் முதலியோருடன் “திராவிடரையும்” சேர்க்கின்றன. தசகுமார சரித்திரம்[“திராவிட”நாட்டைக் குறிப்பிட்டு, அதில் காஞ்சி என்ற நகரம் உள்ளதாகக் குறிக்கிறது. காதம்பரி அந்நாட்டைச் சேர்ந்தவர் அல்லது அங்கு வசிப்பவர் “திராவிடர்” எனக்குறிப்பிடுகிறது. ஒரு முனிவர் “திராவிட-கௌடகர்” என்றும், ஒரு உபநிஷதம் “திராவிட-உபநிஷதம்” என்றும் குறிக்கப்படுகின்றன. பரதமுனி நாட்டிய சாஸ்திரத்தில் “திராவிட” என்றும், பாணர் ஒரு “திராவிட மார்க்கம்” என்பதனையும் குறிப்பிடுகின்றனர். பில்ஹணருடைய “விக்ரமாத்தித்யனுடைய திக்விஜயம்” என்ற நூலில் சோழனின் படை “திராவிடப் படை” என்றும், சோழமன்னன் “திராவிட மன்னன்” என்றும் குறிப்பிடுகின்றது. மியூர் மற்றும் கால்ட்வெல் முதலியோரே 1854ல், பாபு ராஜேந்திரலால் மிஸ்ரா என்ற இந்திய மொழியியல் வல்லுனர் பிராக்ருத மொழிகளுள் “திராவிடி” ஒன்று மற்றும் அது “சௌரஸேனி”ற்கு சமம் என்று குறிப்பிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே, இங்கு, “திராவிட” என்பது பூகோளரீதியில் தென்னிந்தியா அல்லது தென்னிந்திய பகுதி மற்றும் தென்னிந்திய மொழி, குறிப்பாக தமிழைக் குறிக்க உபயோகிக்கப் பட்டது என்றதனை அறியலாம்.

ஜைனர்களின் “திரமிள” மற்றும் “திரவிட”: ஜைனர்களின் சம்வாங்க சூத்திரம் c.300 BCE), பன்னவன்ன சூத்திரம் (c.168 BCE) முதலிய நூல்கள் நமது நாட்டில் இருந்த மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட 18 மொழி-வரிவடிவங்களில் (script) “தமிலி” என்பது ஒன்றாகும், என கூறுகின்றன. ஜைன மதத்தை தெற்கில் பரப்ப வஜ்ரநந்தி என்ற திகம்பர ஜைன குரு, மதுரையில் (470 CE) ஒரு “திராவிட சங்கத்தை” ஏற்படுத்தினார். சதுரன்காய புராணத்தில் (421 அல்லது 605 CE) “திராவிட-வலிக்கில்ல-சைத்திரத்ரிதோவார” என்று குறிப்பிடும்போது, விரிஸபஸ்வாமியின் மகனாக “திராவிட” என்று உள்ளது, ஆனால் இவர் ஜைனர். ஹேமசந்திரருடைய “ஸ்தவீரவலி சரித்ர” என்ற நூலில் “தமிள” என்று குறிப்பிடுகின்றார், ஆனால், ஃப்லீட் (John Faithful Fleet) என்பார் “திரமில” பல்லவர்களுடைய “திராவிட நாடு” என்றும் மற்றும் அதன் தலைநகர் காஞ்சி, அது கிழக்குக்கடற்கரையில் இருந்தது என்று விவரிக்கிறார்.

பௌத்த நூல்களிலுள்ள “தமிள”: பாலி வம்சாவளிகள் “தமிள” என்பரைப்பற்றி பல குறிப்புகளை கொடுக்கின்றன. லலிதாவிஸ்தார என்ற சமஸ்கிருத நூல் (c.2ndcent.CE) உத்தன் என்பவரின் காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட 64 மொழி-வரிவடிவங்களில் “திராவிட லிபியும்” ஒன்று என்று கூறுகிறது. “தமிள” நாட்டைச் சேர்ந்தவர் கஸ்ஸப தேர என்ற ஆசிரியர் வினய நூற்களுக்கு ‘விமதிவினாதினி’ என்ற பெயரில் உரை எழுதியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. புத்த நூல்களின்படி – தீபவம்ஸம், மஹாவம்சம் – இலங்கையில் சிங்களவருடன் சதா சண்டைப் போட்டுக் கொண்டிருக்கும் மக்கள் – “தமிளர்கள்”. அதுமட்டுமல்லாது, அவர்கள் “அநாரியர்கள்” என்றும் குறிப்பிடப்படுகின்றனர். பௌத்தர்கள் தங்களை “ஆரியர்” என்றே குறிப்பிட்டுக் கொண்டனர். ஆகையால் தமக்கு எதிராகவுள்ளவர்களை “ஆரியர்”-அல்ல என்ற பொருள்படும் “அநாரியர்கள்’ என்ற சொற்றொடரை உபயோகப்படுத்தினர், எனத் தெரிகிறது. அவ்வாறு கூறும்போது அத்தகைய “தமிளர்” யார், இந்தியாவின் எப்பகுதியினின்று வந்தனர் என்று கூறப்படுவதில்லை, ஆனால் பாண்டிய-சோழ பிரதேசங்களை வித்தியாசப் படுத்திக் காட்டுகின்றன. தீபவம்ஸத்தில், “தமிளர்” 8 முறை குறிப்பிடப் படுகின்றனர். இதே மாதிரி, புத்தகோஸரும் “தமிளர்”களை யவனர் மற்றும் கிராதர்களினின்று ஒரு பக்கமும், ஆந்திரர்களினின்று மறுபக்கமும் வேறுபடுத்திக் காண்பிக்கிறார். யுவான் சுவாங் (Yuan Chwang) 637 CEல் தமிழகத்திற்கு வந்தபோது தனது குறிப்புகளில் காஞ்சியை (Kan-chih-pulo) “திராவிட” (Tolo-pi-la) நாட்டின் தலைநகராக குறிப்பிட்டுள்ளார். பெய்டிங்கர் அட்டவணையின்படி (Peutinger Tables), அவர் தில, திமிர், சிம்போ முதலிய வார்த்தைகளை “திராவிட”நாட்டைக் குறிக்க உபயோகப்படுத்தியதாகத் தெரிகிறது. பராக்கிரம பாஹு – I (1153-86 CE) “தமிளாதிகாரின் ரக்க” என்பனின் சேவையைப் பெற்றிருந்ததாக உள்ளது.

கல்வெட்டுகளிலுள்ள திரவிட, த்ரமில, தமில முதலியவை: இருக்கின்ற பழங்காலதிலிருந்து 18ம் நூற்றாண்டு வரை தேதியிட்டுள்ள கல்வெட்டுகள் மற்றும் தாமிரபட்டயங்களில் காணப்படுகின்ற சமஸ்கிருத- திரவிட, திராவிட, திரமிட; மற்றும் பிராக்ருத- தமில, தமிள, த்ரமிட, திரமிள முதலியன பொதுப்பெயர் மற்றும் உரிசொல்லாக உபயோகபடுத்தினாலும், அவை “தமிழ்” மொழியைத்தான் காட்டுகின்றன என்று நன்றாகத் தெரிகின்றது.

மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகளில் சில திராவிடம் என்பதை தேச அடையாளமாகவும் மொழி அடையாளமாகவும்
/குழு/குலம்/குடி அடையாளமாகவும் காட்டுவதைக் காணலாம்..
எனினும் இன்று நாம் புரிந்து கொண்டிருக்கும் இனம் என்ற பொருளில் இச்சொற்களை அடக்குவது
சாத்தியமில்லை. நாம் புரிந்து கொண்டிருக்கும் இனம் என்ற கருத்து 16ஆம் நூற்றாண்டுக்குப்பின்
வந்த மாந்தவியல் ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்ட கருத்து.

நரேன்
———-
3) . திராவிடம் என்ற சொல் சமஸ்க்ரிதத்தில், தெலுங்கில் உபயோகத்தில் இருந்தததை மறுப்பதிற்கில்லை.

தமிழில் 1856-க்கு முன் உபயோகத்தில் இருந்ததா?.

இந்தக் கேள்விக்கான பதில்
1.3 முதல் 1.7 வரை .. சொல்லியிருக்கிறேன்.

4 ‘திராவிட பிரகாசிகை’ பதிப்பு பெற்ற வருடம் 1899

4.1. உங்கள் சரியான பதிலுக்கு மிக்க நன்றி.
சபாபதி நாவலர் பிறந்த வருடம் 1844
நூல் வெளிவந்த வருடம் 1899 என்பது தான் உண்மை.
தமிழர் இனவியல் கட்டுரையில் தவறுதலாக 1844 ல் பிறந்த சபாபதி நாவலர்
என்பதை 1844 எழுதிய என்று தவறு நடந்திருக்கிறது.
நீங்கள் சுட்டிக்காட்டிய பின் அக்கட்டுரையாளரிடம் தொடர்பு கொண்டு
உங்கள் கருத்தை முன்வைத்தேன். நூலகத்திற்குப் போய் 20/7/10 அவர்
உங்கள் கருத்தை உறுதி செய்திருக்கிறார்.
திருத்தம் வெளியிடுவதாகச் சொல்லியிருக்கிறார்.
எனினும் தொடர் கட்டுரை புத்தகமாக வருவதற்கு முன் எடுத்தாளும் போது
நான் இன்னொரு முறை சரிபார்த்திருக்க வேண்டும்.
இத்தவறுக்கு நானே பொறுப்பு. மிக்க நன்றி நரேன்.

4.>கால்டுவெல் தன் சுயலாபத்திற்காக திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தினாரா?

மேற்குறிப்பிட்ட சான்றுகள் மூலம் திராவிடம், திராவிடர் என்ற சொல் தமிழனின் அடையாளமாகவோ
தமிழ் மொழியின் அடையாளமாகவோ தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்ற முடிவுக்கே
வர வேண்டியுள்ளது.

அதாவது வடமொழியில் தென்னிந்தியர்களைக் குறிக்கும் திராவிட அடையாளத்தை / கருத்துருவாக்கத்தை
எடுத்துக்கொண்டார். ஆனால் தமிழர்களால் எந்த இலக்கியத்திலும் திராவிடம்/திராவிடர் என்று
அடையாளப்படுத்தாத ஒரு சொல்லை முழுக்கவும் தமிழுக்கும் தமிழர் அடையாளத்திற்குமான
குறியீடாக்கியதில் வெற்றி பெற்றார். அவர் வாழ்ந்த காலத்தின் ஆய்வுலகமும்
அவருக்கு பக்கபலமாக இருந்தது. அதனால் தான்,
என் எதிர்வினையில்
“எனவே திராவிடம் என்ற இங்கு ஏற்கனவே இருந்த ஒரு கருத்தியலைத்தான்
கால்டுவெல் தன் ஆய்வில் எடுத்துக் கொண்டாரே தவிர அவர் உருவாக்கிய
வார்த்தையோ கருத்துருவாக்கமோ அல்ல.” என்று குறிப்பிட்டேன்.
கால்டுவெல் தன் நூலில் திராவிடம் என்ற சொல்லை எடுத்தாளுவதற்கான காரணங்களைப்
பட்டியலிட்டிருக்கிறார்.
தமிழர்கள் தங்களை எங்குமே திராவிடம், திராவிடர் என்று அடையாளப்படுத்திக் கொள்ள
வில்லை. வடமொழியினர் திராவிடர் , திராவிடம் என்று தென்னிந்தியாவை அடையாளப்படுத்துவதை
அறிந்தும் தமிழர்கள் அச்சொல்லை விலக்கியே வந்திருக்கிறார்கள்! அதனால் தான்

“கால்டுவெல் செய்ததெல்லாம் திராவிடம் என்ற சொல்லை தமிழர்களுடன்
இணைத்தது தான். அது சரியோ தவறோ விமர்சனத்திற்கு உரியதுதான்” என்றும்
தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன்.
என்ன காரணத்தினாலோ இந்த வரிகளை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.

மேலும் மனித சமுதாயத்தை இனவரைவியல் ஆய்வுக்குட்படுத்திய காலம் 16ஆம்
நூற்றாண்டுக்குப்பிந்தான். கால்டுவெல் அந்த ஆய்வுகளின் பாதையில் தான்
பயணிக்கிறார் என்றாலும் கால்டுவெல் சமூக வெளியில் தனித்து நிற்கிறார்.
இக்கருத்தை கால்டுவெல் திராவிட இனவரைவியல் என்று தனியாக ஒரு கட்டுரையில்
எழுதியுள்ளேன்.

கண்ணன் , நரேன் இருவருக்கும் திண்ணைக்கும் என் நன்றியும் வணக்கங்களும்.


புதியமாதவி, மும்பை

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை