காத்திருக்கிறேன் அம்மாவிற்காக

This entry is part [part not set] of 29 in the series 20030119_Issue

எஸ். வைதேஹி.


எல்லாமாய் ஆகிவிட்டிருந்தது
அம்மாவின் பொழுதுகள்.
கனவுகளைத் தொலைத்த
கண்களுக்கிடையில்
வெள்ளிக் கிழமை
ஸ்நானமும்
நெற்றி வகிட்டு
குங்குமமுமாய்.

ரஸத்தின் புளிக்கரைசலுக்கும்
அவ்வப்போது
சோற்றுடன் கொதிக்கும்
மனதுக்குமிடையே
சிலும்பி நிற்கிறது
அழுக்கேறிய
தாலிக்கயறு.

சேலைகளுக்கும், நகைகளுக்கும்
இடையில் புரண்டு
கிடக்கிறது அவள்
தினமும் கழற்றி வைக்கும்
சரி தவறுகள்.

வேளை தவறாமல்
தத்துவங்கள் உதிர்த்து
சிரிப்பு மடங்கிய
அவள் உதடுக்குள்
அமுங்கிக் கிடக்கிறது
எப்போதாவது அவள்
எனக்கு சொல்லுவாள்
என்று நான் காத்திருக்கும்
அவள் பற்றிய எண்ணங்கள்.
***
svaidehi@hotmail.com

Series Navigation