காதல் கருக்கலைப்பு
புதியமாதவி, மும்பை

உன்னைக் காதலித்தேன்
உன் காதல்தான்
எனக்கு
கவிதையானது.
வண்ணத்துப் பூச்சியாய்
உன் தோட்டத்தைச்
சுற்றியே
என்
பூமிவிடியல்கள்
காதல்
கல்யாணத்தில்
நம் சூரியப்பூமியில்
நட்சத்திரங்கள்
மட்டுமே
கண்சிமிட்டின.
முதல் வருடம்
குறைப்பிரசவம்.
அடுத்து அடுத்து
ஆணும் பெண்ணுமாய்
இரண்டுமே
அறுவைக்கத்தியில்
இரத்த வெள்ளத்தில்..
வலிக்கவில்லை..!
மீண்டும் மீண்டும்
நம் சூரியப்பூமியில்
நட்சத்திரங்கள்
கண்சிமிட்டின
ஐந்துதடவை
கருக்கலைப்பு
கரு சுமக்கும்
கருப்பைகள்
களைத்துவிடவில்லை.
இவை எல்லாமே
எனக்கே எனக்கானவைதான்
என்
தாய்வழிச் சொத்துக்கள்.
இத்தனை
வலியிலும்
வற்றிப்போகாத
என் காதல்
என்னையே
கருத்தடை
அறுவைக்கும்
அனுப்பினாயே…
அன்று
அன்றுதான்-
கருக்கலைப்பு
செய்துகொண்டது.
அன்புடன்,
புதியமாதவி
மும்பை.
puthiyamaadhavi@hotmail.com