காதலுக்கு என்ன விலை ?

This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

சத்தி சக்திதாசன்


கண்களிலே தோன்றியபோதும்
தெரியவில்லை
இதயங்களை இடம்
மாற்றிய பின்னும்
இயம்பவில்லை
நிழலாக உன்னைத்
தொடர்ந்த போதும்
தோன்றவில்லை
இரவலாகத்தான் கேட்டேன்
இனி எனக்குத் தேவையில்லை
என்றன்று நீ
கசக்கிப் பின் திரும்ப
தந்தபோதும்
கூறவில்லை
ஆகாயத்திலே மின்னும்
துருவ நட்சத்திரமாய்
ஒளிவீசிக் கொண்டிருக்கும்
இப்போதாவது சொல்வாயா
என்
காதலுக்கு என்ன விலை ?

உள்ளத்தால் உன்னை
உண்மையாய்
நேசித்ததிற்கு
உன்பாதம் வலிக்கக்கூடாதென்று
நீ நடக்கும் பாதையெங்கும்
ரோஜா இதழ்களால்
மெத்தை போட்டததற்காக
பேரூந்து வண்டியிலே
பேதையுனக்கு இடமில்லை என்றே
நானும் உன் பின்னே
பாடசாலை நோக்கி நடந்ததிற்காக
எட்டாத தொலைவில் வண்ணநிலவாக
வலம்வரும்
இப்போதாவது சொல்வாயா
என்
காதலுக்கு என்ன விலை ?

உடைந்த இதயத்தை
ஒட்ட வைப்பதற்கு
இழந்த இன்பத்தை
ஈடுசெய்வதற்கு
தொலைத்த
சுயமரியாதையை
கண்டுபிடிப்பதற்கு
இதயத்தின் ஓரங்களிலே
ஒட்டிக்கொண்டிருக்கும்
சோகக்கீறல்களெனும் ஓட்டடையை
தட்டுவதற்கு
தயக்கம் சிறிதுமின்றி
தனக்கென ஓர்
வழ்க்கையைத் தேடிக்கொண்ட
இப்போதாவது சொல்வாயா ?
நானதற்கு
கொடுக்கும் கூலியும்
என்
காதலின் விலையும்
ஒன்றுதானென்று
—————————
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்