கவிப்பெரும்பேரரசு கரடிமுத்துவுக்கு ஞானபீடப்பரிசு

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

சொதப்பப்பா


***

குமாங்கோ குத்துங்கோ

கொல்லையில நீங்க போங்க

வாங்கோ வந்துங்கோ

வாங்கிட்டு குந்துங்கோ

என்ற கவிதையைப் பாடிய கவிப்பெரும்பேரரசு கரடிமுத்து தமிழக மக்கள் அனைவரும் பாராட்டும் பெரும் கவிஞர் என்பது அனைவரும் அறிந்ததே. இவரது எழுத்துக்களை கவிதைகள் என்று சொல்லப்படுவதால் நம்பிக்கை பெற்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் இன்று கிடைக்கும் காகிதம் ஒன்றுவிடாமல் கவிதைகள் எழுதி அதுவும் புதுக்கவிதைகளாக எழுதி தள்ளிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே.

சன் டிவியில் பிரபலமான புகழ்பெற்ற கவிப்பெரும்பேரரசு கரடிமுத்துவுக்கு ஞானபீடப்பரிசு வழங்கவேண்டுமென்று தமிழ்நாட்டு மக்கள் முக்கியமாக கவிப்பெரும்பேரரசு கரடிமுத்துவின் மனைவி கண்மணி கரடிமுத்து, மகள், மகன் ஆகியோர் விடுத்த கோரிக்கையைப் பரிசீலிப்பதாக ஞானபீட பரிந்துரைக் குழு கூறியது.

***

கவிப்பெரும்பேரரசு கரடிமுத்து பலவித முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர் வலைஞருடன் சந்திப்பு

கவிப்பெரும்பேரரசு கரடிமுத்து அவர்கள் இன்று பலவித முன்னேற்றக்கழக தலைவர் டாக்டர் வலைஞருடன் சந்தித்தார். பாறன் இறந்ததற்கு வருத்தம் தெரிவித்த கவிப்பெரும்பேரரசு கரடிமுத்து அவர்கள் பாறன் இரங்கல் கவிதை ஒன்றினை வாசித்தார்.

குமாங்கோ ஆமாங்கோ

பாறனுங்கோ எனக்கு அண்ணனுங்கோ

மாமாவுக்கே அம்மாவான

மருவாதித் திலகமுங்கோ

என்ற கவிதையை படித்ததும், டாக்டர் வலைஞரும் கவிப்பெரும்பேரரசு கரடிமுத்துவும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி கோவென்று கதறி அழுதனர்.

அருகே இருந்து இதனை படம்பிடித்துக்கொண்டிருந்த சன் நியூஸ் கேமிராமேன், கவிதை அளித்த துயரம் மேலிட்டு காமெராவைப் பிடிக்கக்கூட தெம்பில்லாமல் தடுமாறி விழுந்தார் என்றும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காமெரா உடைந்துவிட்டது என்பதைக் கண்டுகொண்ட கவிப்பெரும்பேரரசு கரடிமுத்து அவர்கள் டாக்டர் வலைஞரிடம் தனக்கு ஞானபீடப்பரிசு பெற்றுத்தர வேண்டும், என்று கேட்டுக்கொண்டதாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

***

கவிப்பெரும்பேரரசு குடியரசுத்தலைவர் ரப்பர் கலாம் அவர்களுடன் சந்திப்பு.

ஒரு கோடி இந்திய மக்களைச் சந்தித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டுள்ள குடியரசுத்தலைவர் ரப்பர் கலாம் அவர்களோடு சந்திக்க கவிப்பெரும்பேரரசு கரடிமுத்து அவர்கள் இன்று டில்லி விரைந்தார்.

வந்தாரை எல்லாம் உள்ளே விடும் ஜனாதிபதி மாளிகையில் அவரும் இன்று நுழைந்தார்.

பள்ளிச்சிறுவர்களோடு சிறுவராக முழங்காலிலேயே நடந்து ரப்பர் கலாமை நெருங்கிய கவிப்பெரும்பேரரசு கரடிமுத்து சடாரென்று எழுந்ததனால் திடுக்கிட்ட காவலர்கள் அவரைச் சுடமுயன்றார்கள். கரடிமுத்துவைப் பார்த்தவுடனேயே சன் டிவியைப் பார்க்கும்போதெல்லாம் சிரிக்கும் ரப்பர் கலாம் அவர்கள் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். அதனால் குழப்பமடைந்த காவலர்கள் ஜனாதிபதி ரப்பர் கலாம் அவர்களிடம் இவரை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார்கள். ஓஹோ நல்லாத் தெரியுமே என்று தமிழிலேயே சொன்ன ரப்பர் கலாம் சிறுவர்களோடு பேசி அனுப்பிய பின்னால், கவிப்பெரும்பேரரசு கரடிமுத்துவோடு பேச அமர்ந்தார்.

கையோடு கொண்டுவந்திருந்த சால்வையை ரப்பர்கலாம் அவர்கள் மேல் போர்த்தி அய்யா என்று காலில் விழுந்தார் கவிப்பெரும்பேரரசு கரடிமுத்து அவர்கள். தமிழ்நாட்டு கலாச்சாரத்தை இங்கேயும் கொண்டு வந்திட்டாங்களா என்று கேட்ட ஜனாதிபதி எழுந்திரிங்கோ என்றார்.

உங்களுக்காக ஒரு கவிதை எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன் என்றார் கவிப்பெரும்பேரரசு கரடிமுத்து

குமாங்கோ தமாங்கோ

குமரி முனை ரப்பர்கலாமுங்கோ

ஆமாங்கோ நீங்கதான்

இன்னிக்கு ஜனாதிபதிங்கோ

முன்நெற்றியில் முடிவிழும் அழகில்

இந்திய மண்ணே மயங்கி விட்டதுங்கோ

கலாம் இல்லை நீங்க கலமுங்கோ

வெண்கலமாய்ச் சிரித்து

வெறுங்கலமாய் இருந்த பாரதம்

பெருங்கலமாய்ப் பிறப்பெடுத்ததுங்கோ.

இதைக்கேட்டு சிரித்த ஜனாதிபதி நல்லா கவிதை வாசிக்கிறீங்க.. என்று சொன்னார்.

கலாம் சிரிப்பதைக் கேட்ட பின்னால் காவலர்கள் அங்கிருந்து நகர, தடாரென்று காலில் விழுந்த கவிப்பெரும்பேரரசு கரடிமுத்து தமிழுக்கு ஞானபீடப்பரிசு வேண்டுமென்று தமிழர்கள் விரும்புகிறார்கள். தயவு செய்து எனக்கு அந்த ஞானபீடப்பரிசை வாங்கித்தர இயலுமா என்று கேட்டார் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

***

பிரதமர் ராஜ்பாயியைச் சந்திக்க கவிப்பெரும்பேரரசு கரடிமுத்து அமெரிக்கா பயணம்.

கவிப்பெரும்பேரரசு கரடிமுத்து இன்று அமெரிக்காவில் நடக்கும் கவி சம்மேளனத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா செல்கிறார். அந்த கவி சம்மேளனம் பாரதப் பிரதமர் ராஜ்பாயியும் கலந்து கொள்ளும் சம்மேளனம் என்பது குறிப்பிடத்தக்கது.

கவி சம்மேளனத்தில் ராஜ்பாயிக்கு பொன் சால்வை போர்த்தி, அவரை வாழ்த்தி 200 பக்கத்துக்கு கவிதையை வாசித்தார். அந்தக் கவிதையில் சில வரிகள்

குமாங்கோ டமாங்கோ

டமுக்கடிப்பான் டியாலோ

பூவுக்குள் பூகம்பம் நீ

பூப்போன்ற ராஜஸ்தானில் அணுகுண்டு போட்டு

அமெரிக்காலில் பூகம்பம் உருவாக்கியன் நீ

குமாங்கோ குத்துங்கோ

காலத்தை வென்றவன் நீ

காவியமானவன் நீ

நீயே ஆனவன் நீ

நானே ஆனவன் நீ

நீ அணுகுண்டு வெடித்தால் அழகிய கவிதை

நீ கவிதை வடித்தால் வெடித்தெழும் அணுகுண்டு

குமாங்கோ குத்துங்க்கோ

என்பது போல பலவரிகள் அதில் இருந்ததாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

வாஜ்பாயியைக் கட்டிப் பிடித்து சிலிர்த்துப் போன கரடிமுத்து, இதோ சிலிர்ப்பு என் இருதயச் சிரிப்பு, என்று கவிதையாய்ப் பொழிந்ததாகவும், பொழிவில் நனைந்த ராஜ்பாய் மூன்று நாட்கள் மூக்கை உறிஞ்சிக் கொண்டு அவதிப் பட்டதாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

***

ஞானபீடப்பரிசு குழுவினருக்கு கவிப்பெரும்பேரரசு கரடிமுத்து விருந்து

தமிழில் பரிசு கொடுக்கும்போதுதான் நமக்கு நல்லா விருந்து கிடைக்கிறது என்று குறிப்பிட்ட சில ஞானபீடப்பரிசு குழுவினர் நன்றாக சிக்கன் சிக்ஸ்டிபை போன்றவற்றை வெட்டி பல்குத்திக்கொண்டே ஞானபீடப்பரிசு கலந்துரையாடலுக்குச் சென்றார்கள். கூடவே சென்ற கவிப்பெரும்பேரரசு கரடிமுத்து அவர்கள், வலைஞருடன் என்ன பேசினார், ரப்பர்கலாம் அவர்களுடன் என்ன பேசினார், ராஜ்பாய் அவர்களுடன் என்ன பேசினார் என்பதையெல்லாம் விலாவாரியாக ஆங்கில மொழிபெயர்ப்பாளரை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டே வந்ததார். தயவு செய்து சாப்பிடும்போது மட்டும் உங்கள் கவிதையை வாசிக்காதீர்கள் என்று பெரும்பேரரசைக் கேட்டுக் கொண்டது ஞானபீடப் பரிசுக் குழு.

தொல்லை தாங்காத ஞானபீடப்பரிசுக்குழுவினர், கவிப்பெரும்பேரரசுக்கு ஞானபீடப்பரிசு கொடுக்க வேண்டுமென்றாலும், அவர் எழுதிய லாண்டிரி லிஸ்டுக்குக் கொடுக்கலாமே ஒழிய அவரது கவிதைகளுக்கு கொடுக்க கூடாது என்று முடிவு செய்ததாகவும் நம்பத்தகாத வட்டாரங்களில் கூறப்படுகிறது.

***

வரலாற்றில் முதன் முறையாக லாண்டிரி லிஸ்டுக்கு ஞானபீடப்பரிசு .

தமிழ் இலக்கிய வரலாற்றில் மட்டுமல்ல, எந்த இலக்கிய வரலாற்றிலும் இல்லாதபடிக்கு, முதன்முதலாக ஒரு லாண்டிரி லிஸ்டுக்கு ஞானபீடப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

கவிப்பெரும்பேரரசு கரடிமுத்து அதனை பெற்றுக்கொள்ள டில்லி விரைகிறார். அதனால் இன்று சன் டிவியில் காமெடி நேரம் கிடையாது என்று சன் டிவி தெரிவித்தது. கவிப்பெரும்பேரரசு கரடிமுத்துவின் ஆதரவாளர்கள் சன் டிவியில் காமெடி நேரம் கிடையாது என்ற அறிவிப்பைக் கேட்டு, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, தங்களது டிவியை தெருவில் கொண்டு வந்து வைத்து உடைத்தார்கள்.

வழக்கம்போல பிரபலப் பத்திரிக்கைகளான ஆனந்தவிகடன், குமுதம், கல்கி ஆகிய பத்திரிக்கைகளில் கவிப்பெரும்பேரரசு கரடிமுத்துவின் பேட்டிகள் வெளியாகியிருந்தன. ஆயிரமாயிரம் சன் டிவி ரசிகப் பெருமக்களின் பேராதரவைப் பெற்ற நான் ஞானபீடம் பரிசு பெற்றதைப் பொறுக்காத காழ்ப்புணர்ச்சிக் கயவர்கள் கடுப்பைக் காட்டுவதை தாம் சட்டை செய்யவில்லை என்று பதில் அளித்தார். காமெடி டைம் சன் டிவியில் மட்டுமல்ல இந்தியாவெங்கும் பரவி தமிழின் புகழ் பரவ ஞானபீடப் பரிசு உதவும் என்று அவர் தெரிவித்தார்.

வழக்கம்போல பொறாமையால் வெந்த சிறுபத்திரிக்கை நடத்துபவர்கள், மேலும் ஒருமுறை தமிழ் இழிவு படுத்தப்படுகிறது என்று புலம்பித்தள்ளியிருந்தார்கள். தரமற்ற படைப்புகளுக்கு பரிசுகள் தரப்படுவதை என்று கண்டனம் செய்து இரண்டு பக்கம் எழுதிவிட்டு, தமக்குள் சண்டை போடுவதைத் தொடர்ந்தார்கள். பூனைச்சாமியார் படம், சுடுகாட்டில் புத்தகவெளியீடு என்றெல்லாம் கலகத்தைத் தொடர்ந்து செய்யலானார்கள்.

கவிப்பெரும்பேரரசு கரடிமுத்துவின் ரசிகர்கள் அவருக்கு ஊரெங்கும் போஸ்டர்கள் அடித்துக் கொண்டாடினார்கள். யானையின் மேலேற்றி ஊர்வலம் போனபோது, கரடிமுத்துவின் கவிதையைக் கேட்டு யானை மிரண்டு ஓடியதாய் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன. ஞானபீடம் தானபீடமல்ல, மோன பீடம், தமிழ் வாழும் வானபீடம் என்று கவிதை வாசித்தால் மிரளாதா பின்னே ?

கரடிமுத்துவின் மனைவியின் புடவை தமிழ்ப் புடவை, அவர் மூக்கு தமிழ் மூக்கு என்று ஒரு சிந்தனைச் சிற்பி ஒரு இலக்கிய விழாவில் பேசினார்.

ஞானபீடப் பரிசு ஞானபீடப்பரிசுதான். அது லாண்டிரி லிஸ்டுக்குக் கிடைத்தால் என்ன ? வாழ்த்து அட்டைக்குக் கிடைத்தால் என்ன ? பஞ்சாங்கத்திற்குக் கிடைத்தால் என்ன ? சோதிடப் புத்தகத்துக்குக் கிடைத்தால் என்ன ? தமிழுக்குக் கிடைத்தது என்று மகிழ்ச்சியடையவேண்டும் என்று பேசிய அவரது பேட்டியை பலர் சிலாகித்து பேசியதாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

***

அவரது ஒரு கவிதையை இங்கு பிரசுரித்து இந்த செய்தித் தொகுப்புக்குப் பெருமை சேர்க்கிறேன்.

குமாங்கோ தமாங்கோ

நான் வாங்கிய ஞானபீடம்

தமிழ் பெற்ற ஞானபீடம்

தமிழ்த்தாய்க்கு வழங்கிய பொற்குடம்

தமிழ் அத்தை இருக்கும் முன் கூடம்

தமிழ் மாமியார் அடைந்த பெரும் பாடம்.

நான் தானே முதலில்

தமிழுக்கு ஞானம் கொடுத்தவன்.

வானம் பார்த்த தமிழுக்கு

ஞானம் தந்த கவிதைக்கு

ஞான பீடம் ஏற்றிய காலம்

தேனாய் இனிக்கும் சுவையறிய

மானம் ஏதும் பார்க்காமல்

பானம் பருகிட வாரீர்- தமிழ்க்

கானம் உறிஞ்சிட வாரீர்

ஏனம் கொண்டு வாரீர்

ஆமாங்கொ சொல்லுங்கோ.

***

Series Navigation