கவிதையிலே ஒரு கதை: ‘பாலம் ‘

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

செங்காளி


அடையாறு நகரினிலே அழகான ஒருவீடு.
வானதியும் வடிவேலும் வாழ்ந்துவரும் வீடு அது.
வானதிக்கும் வேலுவுக்கும் வகைக்கொரு குழந்தையுண்டு.
மூத்தவன் பன்னீர்தான் மும்பையிலே இருக்கின்றான்.
சின்னவள் பூங்குழலி செல்லமாய் வளர்ந்தவள்.
பாரதியை மணமுடித்து பாஸ்டனில் இருக்கின்றாள்.
நெடுமாறன் குடும்பத்தின் நெருங்கிய நண்பராவார்.

வடிவேலு வானதி வாழ்க்கையிலே அவர்களுக்கு
பொருள்வளமும் பிறவளமும் பொருந்தியே இருந்தாலும்
மனதில் இருவருக்கும் மகிழ்ச்சிதான் சிறிதுமில்லை.
சிறுசிறு வேற்றுமைகள் சிலநேரம் தோன்றியங்கே
சச்சரவாய் மாறிப்பின்னர் சண்டையில் முடிந்தனவே.
மனம்விட்டுப் பேசிடவே மறுத்திட்டார் இருவருமே.

குழந்தைகள் இருந்தபோது குறைவாக இருந்தயிவை
குழந்தைகள் சென்றவுடன் குன்றாகப் பெருகினவே.
வீட்டிலே இருவரும் விலகியே இருந்தாலும்
வெளியார்க்குத் தெரியாமல் வகையாக நடித்தனரே.
நெடுமாறன் மட்டும்தான் நன்றாக இதையறிவார்.

இப்படித்தான் இருவருமே இருந்திட்ட ஒருநாளில்
வாசல்மணி ஒலிகேட்டு வடிவேலு சென்றங்கே
கதவைத் திறந்தவுடன் கண்டிட்டார் நண்பரைத்தான்.
நெஞ்சிலொன்றை அணைத்தபடி நின்றிருந்தார் நெடுமாறன்.
வாசலில் குரல்கேட்டு வானதியும் அங்குவந்தார்.

நண்பர்களைக் கண்டவுடன் நெடுமாறன் சொல்லிடுவார்,
‘பத்துமாதக் குழந்தையிது, பாதுகாக்க யாருமில்லை.
சின்னியென்ற இதன்கதைதான் சோகம் நிரைந்ததுவே.
பக்கத்து வீட்டிற்குப் புதிதாகக் குடிவந்து,
தாரணியும் சின்னியும் தனியாக வாழ்ந்திருந்தார்.

திடாரென்று வந்தகாய்ச்சல் தாரணியைத் தாக்கிவிட
மருத்துவ மனையிலே மயக்கத்தில் இருக்கின்றார்.
உறவென்று அவர்களுக்கு யாருமில்லை என்பதனால்
என்னிடமே வைத்திருக்க எடுத்துவந்தேன் சின்னியைநான்.
அலுவலக வேலையாக அயலூர்நான் போகவேண்டும்
வரும்வரைக்கும் சின்னியைத்தான் விட்டிடவா உங்களிடம் ‘.

இதைக்கேட்ட வடிவேலு இல்லாளின் முகம்நோக்க.
வானதியும் சின்னியைத்தான் வாங்கி அணைத்திட்டார்.
அணைப்பளித்த சுகத்தை அனுபவித்த சின்னியவர்
முகத்தில் முகம்பதித்து முத்தமொன்று கொடுத்ததுவே.
‘கவனமாய்ப் பார்த்திடுவோம் கவலையே வேண்டாமென ‘
வானதி சொன்னதற்கு வடிவேலும் சரியென்றார்

சின்னிவந்த பின்னர்தான் சிறுசிறு மாற்றங்கள்
வடிவேலு தம்பதியர் வாழ்க்கையில் தோன்றினவே.
சின்னியைக் குளிப்பாட்டிச் சத்துணவு ஊட்டுவது,
வெளியேகூட் டிச்சென்று விளையாட்டு காட்டுவது,
விதவிதமாய் பொம்மைகள் வாங்குவது என்றுதானே
சின்னியின் வேலைகளைச் சேர்ந்தே செய்தனரே.
மகிழ்ச்சியோடு இருவருந்தான் மனம்விட்டுப் பேசினரே.

நெடுமாறன் திரும்பிவரும் நாளும்தான் நெருங்கிவர
வடிவேலும் வானதியும் வாடிப்போய் இருந்தனரே.
தங்களது வாழ்க்கையிலே திடுமென நுழைந்துவிட்டு
அளவற்ற இன்பத்தை அள்ளிக் கொடுத்தவனை
எப்படித்தான் பிரிவதென ஏங்கினார் இருவருமே.

அந்தநாளும் வந்ததுவே; அவரும் வந்துவிட்டார்.
தயக்கத்தில் தம்பதிகள் தடுமாறி இருந்தபின்னர்,
‘சின்னியை நாங்கள்தான் சீராக வளர்த்திடுவோம்
எப்பொழுதும் இவனும்தான் எங்களுடன் இருக்கட்டுமே ‘
என்றபடி வானதிதான் ஏக்கத்துடன் கேட்டுவிட்டு
அவரின் பதிலறிய ஆவலுடன் காத்திருந்தார்.

சிந்தனையில் நெடுமாறன் சிறிதுநேரம் இருந்தபின்னர்
சிரித்தபடி இப்படித்தான் சொல்லிடுவார் மெதுவாக,
‘இதைப்பற்றிப் பேசத்தான் இங்குவந்தேன் இன்றைக்கு.
தாரணியின் உடல்நிலைதான் தேறிடவே நாளாகும்,
அவனை வளர்த்திடவே ஆசையிருப்பின் உங்களுக்கு
இங்கேயே இருந்திடவே இசைவும் கொடுத்துவிட்டார் ‘.

இதைக்கேட்ட தம்பதிகள் இன்பத்தில் திளைத்திட்டார்.
செல்லமாய் வானதியும் சின்னியை முத்தமிட
அதுவும்தன் வாலையாட்டி அன்புடன் குரைத்ததுவே.
நண்பர் கொண்டுவந்த நாய்க்குட்டி இப்படித்தான்
பிரிந்தவர் சேர்ந்திடவே பாலமாய் அமைந்ததுவே.

ஆதங்கம் அறுபட்டு அன்பினால் இணைந்திட்ட
தம்பதிகள் இருவருமே தம்நன்றி சொல்லிவிட,
இவர்கள் இருவருந்தான் இணைந்து வாழ்வதற்கு
தான்போட்ட திட்டம்தான் தக்கபடி வெற்றிபெற
நிறைந்த மனதுடனே நெடுமாறன் விடைபெற்றார்.

—-

நன்றி: கதம்பம் ஆனி 2003

natesasabapathy@yahoo.com

Series Navigation

செங்காளி

செங்காளி