கல்பாக்கம்

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

ஞாநி


ிகல்பாக்கம் அணு உலைகள் நிரந்தர ஆபத்தாக இருந்து வருவது பற்றியும், அங்கு வேலைசெய்யும் ஊழியர்களுக்கு ஏற்பட்டு வரும் உடல் நல ஆபத்துகள் குறித்தும் ஜனவரியின் நடைபெற்ற ஒரு விபத்து பற்றியும் ஏப்ரல் இதழில் முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். தமிழக அரசிடமிருந்து இது பற்றி எந்த சலனமும் இல்லை.

தீம்தரிகிட கட்டுரைக்குப் பின் ஆங்கில இதழ் அவுட்லுக் நிருபர் ஆனந்த் இது பற்றி தானும் நேரில் விசாரித்து ஒரு கட்டுரையை அவுட்லுக் இதழில் எழுதினார். பிறகு அணுசக்தித்துறை உயர் அதிகாரிகள் எல்லாரும் கல்பாக்கம் வந்து சென்றார்கள். பத்திரிகையாளர் கூட்டம் நடத்தி விளக்கங்கள் அளித்தார்கள்.

இந்திய அணுத்துறை வரலாற்றிலேயே இவ்வளவு தீவிரமான ‘சம்பவம் ‘ இதுவரை நடந்ததில்லை என்று ஒப்புக் கொண்டார்கள். அவர்கள் ‘சம்பவம் ‘ என்றும் நாம் ‘ விபத்து ‘ என்றும் சொல்லும் நிகழ்ச்சி நடந்த பகுதியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் இதுவரை இருக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டார்கள். கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் உட்பட ஆறு ஊழியர்களுக்கு நிர்ணயித்த அளவுக்கு மேல் கதிர்வீச்சு ஏற்பட்டது என்பதையும் ஒப்புக் கொண்டார்கள்.

ஆனால் அந்த ஊழியர்களை பத்திரிகையாளர்கள் சந்திக்க அனுமதிக்கவில்லை. ஒவ்வொரு ஊழியருக்கும் அவர் வழக்கமாக எந்த அளவுக்கு கதிரியக்கத்துக்கு உட்பட்டிருக்கிறார் என்பதை இனியேனும் தெரிவிக்கமுடியுமா என்றால், அதுவும் மறுக்கப்பட்டுவிட்டது. ஜனவரியில் இந்தப் பிரச்சினையை பல முறை மேலிடத்துக்குச் சொல்லியும் கேட்காத நிலையில் வேலை நிறுத்தம் செய்ய வேண்டி வரும் என்று ஊழியர் சங்கம் அச்சுறுத்தியபிறகுதான் மேலிடம் பிரச்சினையில் அக்கறை செலுத்த ஆரம்பித்தது நினைவிருக்கலாம். அந்தத் தொழிற்சங்க நிர்வாகிகள் இருவர் இப்போது வேறு ஊருக்கு தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட அரசாங்கம், நிர்வாகம் இருக்கக்கூடிய இந்தியாவில்தான் உச்ச நீதி மன்றம் என்னவானாலும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தமே செய்யக்கூடாது என்று புத்திமதி சொல்லியிருக்கிறது.

இந்தியாவில் அணுசக்தித்துறை என்பதே மின்சாரத்துக்கானது அல்ல. இதுவரை அணுமின்சாரம் இந்தியாவில் எந்த மூலையிலும் மின்சாரப் பற்றாக்குறையை தீர்க்கவில்லை. கல்பாக்கம் உலைகளைக் கட்டி முடிக்கவே 15 ஆண்டுகள் ஆகின. இயங்கத்தொடங்கிய முதல் ஐந்து ஆண்டுகளில் 200 முறை பிரச்சினைகளினால் உலைகள் நிறுத்தப்பட்டன. உற்பத்தித்திறனில் 50 சதவிகித அளவுக்காவது இயக்கினால் போதும் என்பதுதான் இலக்காகவே வைத்துக் கொள்ளப்பட்டது.

இப்போதைய ‘சம்பவம் ‘ பற்றி அதிகாரிகள் அக்கறை காட்டியதற்குக் காரணம் ஊழியர்கள் சங்கம் கடும் நிலை எடுத்தது மட்டுமல்ல, இது ப்ளுட்டோனியம் ரிபிராசசிங் பிளாண்ட்டில் நடந்ததனால்தான். ரீபிராசசிங்க்குக்கு அடுத்த கட்டத்தில்தான் அணு ஆயுதத்துக்கான புளுட்டோனியம் எடுக்க முடியும். ‘சம்பவ ‘த்தினால் ஆறு மாதங்களுக்கு பிளாண்ட் செயல்படுவது நின்று போயிற்று.

மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். மின் உற்பத்திக்கு அணுசக்தி சரியான வழியல்ல. பல தலைமுறைகளுக்கு ஆபத்தான கழிவுகளைத்தான் உற்பத்தி செய்யும். மின்சாரத்தை அல்ல.

இரவு உணவு இல்லாமல் பசியுடன் தூங்கச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டுமே சுமார் 3 கோடி. வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் என்று அரசே ஒப்புக் கொள்ளுவோரின் எண்ணிக்கை சுமார் 27 கோடி. இதை துளிக் கூட மாற்றாமல், வல்லரசு வேடங்கட்டி ஆடுவதற்காக அணுகுண்டு தயாரிப்பவர்கள்தான் உண்மையான பயங்கரவாதிகள்.

( தீம்தரிகிட ஆகஸ்ட் 2003)

dheemtharikida@hotmail.com

Series Navigation

ஞாநி

ஞாநி