கலாச்சாரம் பற்றி கடைசியாக….

This entry is part [part not set] of 23 in the series 20020317_Issue

ஜெயமோகன்


மாலன் தன் விமரிசனங்களை முடித்துக் கொண்டதால் நானும் அப்படிச் செய்வதற்கு முன்பாக சில விளக்கங்கள் பாக்கியிருப்பதை சொல்லிவிடுகிறேன்.

தமிழ் அறிவுலகின் மேலோட்டமான சிறு பகுதியுடன் தான் மாலனுக்கு தொடர்பு இருந்தது ,இப்போது அதுவுமில்லை என நான் அறிவேன். ஆயினும் அவர் என்னை நோக்கி முன்வைத்த வினாக்களுக்கு விளக்கமளிக்கும் பொறுப்பு எனக்கிருப்பதாக உணர்ந்தேன். ஆனால் அவருக்கு விவாதத்தின் சாரமான பகுதியுடன் தொடர்புகொள்ள இயலவில்லை என்று அவரது பதிலில் இருந்து அறிந்ததனால் தான் எனது பதிலில் வாசகர்களை நோக்கி பேச வேண்டியிருந்தது. இப்போது சில விஷயங்களை மேலும் விரிவாக சொல்ல முயல்கிறேன்.

கடந்த 50 வருடங்களாக உலக சிந்தனை தளத்திலோ , கடந்த 10 வருடங்களாக தமிழ்ச் சிற்றிதழ்களிலோ நடக்கும் பொதுவான விவாதங்களை சற்றேனும் கவனித்திருப்பவர்கள் திரு மாலன் செய்யும் வரையறைகள் , பிறரும் அவ்வறே வரையறுத்துக் கொள்ளவேண்டுமென அவர் வற்புறுத்துவது ஆகியவற்றை நான் எதிர்கொண்டுள்ள விதத்தை புரிந்து கொள்ள முடியும் .முற்றுறுதியான , அனைத்துப் பொதுவான வரையறைகளை இன்றைய சிந்தனைத்தளத்தில் பெரும்பாலோர் முன்வைப்பது இல்லை . இவ்விவாதத்தை மேற்கோள்களுக்குள் கொண்டு செல்ல விரும்பவில்லை . கலைச்சொற்களை போடவும் தயங்குகிறேன்.நமது பொதுப்புத்தி தளத்திலேயே இதை விவாதிக்க முடியுமா என்று பார்க்க விரும்புகிறேன். எனினும் பின் நவீனத்துவ சிந்தனையாளர்கள் உலக சிந்தனைக்கு வழங்கிய கொடை என்பது முற்றுறுதிகளை மறுப்பதில் /ஐயப்படுவதில் உள்ளது என்று மட்டும் முதலில் சொல்ல விரும்புகிறேன் . ஆனால் அடிப்படைகளை முற்றுறுதியுடன் வரையறுக்க தயங்குவதும் விமரிசனக் கருத்துக்களை மழுப்புவதும் வேறு வேறாகும் . எந்ததருணத்திலும் நான் என் விமரிசனக் கருத்துக்களை மழுப்பியதேயில்லை.

ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கால [Renaissance ]சிந்தனைப் போக்கின் அடிப்படையாக அமைந்தது ‘அனைத்துப் பொதுவானதும் புறவயமானதுமான வரையறைகளுக்கான ‘ தேடல் தான் . மறுமலர்ச்சிக்காலத்தின் முன்னுதாரணமான கிரேக்க செவ்வியல் சிந்தனையில் வரையறை செய்யும் போக்குக்கு சமானமாகவே அறியமுடியாமை நோக்குக்கும் ,[Agnosticism] ஐயவாதத்துக்கும் [ Skepticism ]இடமிருந்தது. மறுமலர்ச்சிக்காலம் மானுட அறிவு மீதான முற்றான நம்பிக்கை கொண்டாடப்பட்ட காலகட்டம். மறுமலர்ச்சிக்காலத்தின் வரையறை செய்யும் போக்குக்கு அக்கால நிரூபணவாத முறைமைகளுடன் நேரடி உறவு உண்டு— இக்காலகட்டத்தில் நிரூபணவாதமும் அறிவியல் நோக்கும் ஒன்றாகவே கருதப்பட்டன. இப்போக்குதான் இன்று நாம் பயிலும் பற்பல சிந்தனைத் தளங்களின் அடிப்படைகளை கட்டமைத்தது என்பது உண்மை . அந்த புறவயமான வரையறைகளில் இருந்தும் ,முறைமைகளில் இருந்தும் தான் மேற்கத்திய அறிவியங்கியல்[ Epistemology ] உருவாகி வந்தது. நாம் இன்று கற்கும் அனைத்து அறிவுத்துறைகளுக்கும் அடிப்படையாக அமைந்தது அவ்வறிவியங்கியலின் தருக்கமுறையேயாகும் .

மறுமலர்ச்சிக்கால அலையின் மிக முக்கியமான விளைவுகளான காண்ட், ஹெகல் , நீட்சே ,தெகார்த்தே மற்றும் அவ்வலையின் உச்சப்புள்ளியும் இறுதிவிளைவுமான மார்க்ஸ் முதலியோரின் கூறுமுறைகளுக்குள் பொதுவாக ஏதேனும் இருக்கிறது என்றால் அது அவற்றின் அடிப்படை அலகு ஒரு வரையறை ஆக உள்ளது என்பதே. இந்த வரையறையானது ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பசூழலில் இருந்து பெறப்பட்டு மற்ற வரையறைகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு படிப்படியாக முற்றிலும் பொதுவாக ஆக்கப்படுவதாக அவற்றின் தருக்கமுறை அமையும் . நமக்கு நமது கல்விமுறை மூலம் பழக்கமான அறிதல் மற்றும் தொடர்புறுத்தல் முறை இது . ஆகவே அனிச்சையாக நாம் செய்வது இதுதான் .நமது சிந்தனையே ஒவ்வொருதருணத்திலும் ஒவ்வொன்றையும் ‘எப்போதைக்குமாக ‘ வரையறை செய்வதாகவே உள்ளது. நேரெதிராக நாம் நம்பிக்கை கொண்டிருப்பினும்கூட இதிலிருந்து எளிதில் தப்பிவிட முடியாது .நாம் இதற்கு பழக்கப்பட்டு விட்டிருக்கிறோம்.

என் நூலொன்றில் [நவீனத்துவத்துக்கு பின் தமிழ் கவிதை .கவிதா பதிப்பக வெளியீடு] இலக்கியம் [அல்லது பொதுவாக கலைகள் ] பிற அறிவுத்துறைகள் ஆகிய இரண்டின் வெளிப்பாடுகளுக்கு இடையேயான வேறுபாடு என இதையே சுட்டியிருந்தேன். அதாவது பிற அறிவுத்துறைகளில் அவற்றின் அடிப்படை அலகு ஒரு வரையறையாக இருக்கும் . இலக்கியத்தில் அடிப்படை அலகு ஒரு படிமம் .வரையறை புறவயமானது ,நிலையானது [குறைந்த பட்சம் கொள்கையளவிலாவது ] . படிமம் அகவயமாகவே பொருள்படுவது ,தொடர்ந்து மாறுபடுவது . இதற்கு இப்படி பொருள் என அறிவுத்துறை சார்ந்த ஒன்றைப்பற்றிச் சொல்லலாம், இதை இப்படி நான் இப்போது வாசிக்கிறேன் என்றே இலக்கிய ஆக்கம் ஒன்றைப்பற்றி கூற முடியும். அதாவது எங்கு அறிவியங்கியல் செயல்படுகிறதோ அது அறிவுத்துறை .எங்கு அதற்கு வேலையில்லையோ அது இலக்கியம் என நாம் வரையறை செய்யலாம் .

இந்த வரையறையை முனைமழுங்கச் செய்கின்றன பின் நவீனத்துவ கால சிந்தனைகள் என்று சுருக்கமாக சொல்லலாம். ‘அறிவதிகாரம் ‘ என்ற ஒன்றை பின் நவீனத்துவ சிந்தனை அடையாளம் கண்டது என்றும் ,அதை அனைத்து அறிவுச் செயல்பாடுகளுக்கும் ஆதார உந்துதலாக கூறியது என்றும் நாம் அறிவோம் .சந்தர்ப்ப சூழல் சார்ந்த அறிதல்களை தன் தருக்கம் மூலம் முற்றுறுதியான உண்மைகளாக ஆக்குவதிலேயே அறிவதிகாரத்தின் செயல்முறை உள்ளது. ‘இதுவே உண்மை ‘ என்பவன் நடைமுறையில் ‘ நானே உண்மை ‘ என்றுதான் சொல்கிறான் என்றது பின் நவீனத்துவம். ஆகவே அது இறுதிக்கூற்றுகளை தவிர்த்தது. மேலும் அடிப்படையில் அது நிரூபணவாதத்துக்கு [empiricism ]முற்றிலும் எதிரானது.ஆகவே மேற்கத்திய அறிவியங்கியலுக்கும் எதிரானது. முற்றிலும் புறவயமான வரையறை என ஏதும் சாத்தியமல்ல என்று அது வாதிடுகிறது. கருத்துக்கள் அவற்றுடன் இணைந்த சந்தர்ப்பம் சார்ந்தும் , அவை முன்வைக்கப்படும் பேசுதளம் அல்லது சொற்களன்[discourse] சார்ந்தும் உடனடியாக ,தற்காலிகமாக மட்டுமே பொருள்படுகின்றன என்கிறது .

ஒன்றின் இலக்கணத்தை குலைப்பது என்பது அதன் கடைசி எல்லையை மீறிச் செல்வதன் பொருட்டேயாகும். சமகால அறிவுத்துறைகளின் எல்லைகளை அவற்றின் அடிப்படை இலக்கணமான அறிவியங்கியலை மறுப்பதனூடாக மீறிச்செல்ல பின் நவீனத்துவ சிந்தனைகள் முயல்கின்றன என்று சொல்லலாம்.வரையறை செய்வது தேவையற்றது என்றோ ,காலாவதியாகிவிட்டதோ என்றோ இதற்குப் பொருள் இல்லை .அறிவியங்கியல் சார்ந்த அணுகுமுறைகள் அவற்றின் உச்ச சாத்தியங்களை நிகழ்த்திய துறைகளிலேயே , அப்போக்கின் போதாமையை நிரப்பும் பொருட்டே , பின் நவீனத்துவ அணுகுமுறைகள் உருவாயின.ஆகவேதான் இன்றைய சிந்தனையாளர்களின் ஆக்கங்களில் இருந்து நம்மால் மேற்கோள்களை எடுத்துக் காட்ட முடிவது இல்லை,அவை அச்சொற்களன் சர்ந்தவை மட்டுமே . தத்துவம் என்பது ஒவ்வொரு அறிவுத்துறையிலும் உள்ள சாரமான வரையறை மற்றும் தருக்க அமைப்பின் தொகுப்பு. ஆகவே பின் நவீனத்துவ சிந்தனை தத்துவத்துக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது.

‘கடைசி தத்துவவாதி ‘ என்று பின் நவீனத்துவர்களால் சொல்லப்படும் விட்ஜென்ஸ்டைனின் கூறுமுறையில் இப்போக்கின் முதல்க்கட்ட கூறுகள் வெளிப்பட்டன. தருக்கத் தொடர்ச்சியற்ற , பெரிதும் கவித்துவம் மூலம் உரையாடக்கூடிய , உதிரி வரிகள் மூலம் பேசியவர் அவர். தருக்கம் மூலம் அவற்றை எதிர்கொள்வதும் அரிது. வெவ்வேறு தளங்களில் செயல்படும் தெரிதா ஃபூக்கோ போன்ற சிந்தனையாளர்கள் தங்கள் அணுகுமுறைகளில் இப்போக்கை கொண்டிருப்பதை காணலாம் . பிரதி இல்லை சூழலே உள்ளது [no text only context] அர்த்தம் சொல்மீது வழுக்கிச் செல்கிறது[ gliding of the meaning ]போன்ற புகழ்மிக்க சூத்திர வாக்கியங்களைநாம் நினைவு கூரலாம் . இதன் விளைவாக இவர்களின் விவாத மொழியும் அறிவியங்கியலின் விதிகளிலிருந்து விலகி இலக்கியத்திற்குரிய அகவய நகர்வுகள் கொண்ட படிம மொழியாக மாறியுள்ளது. சமீபத்தில் சி ஜி யுங் , ழாக் லக்கான் ஆகிய இருவரின் உளவியல் கட்டுரைகளை சொல்புதிதிற்காக மொழிபெயர்த்தபோது இதை துல்லியமாக உணரமுடிந்தது .முன்னவரின் மொழி கறாரான வரையறை மொழி .பின்னவர் படிமங்களையும் சொல்விளையாட்டுகளையும் புதிர்களையும் பயன்படுத்துகிறார் .முழுக்க முழுக்க அச்சொற்களன் சார்ந்து மட்டுமே செயல்படுவதனால் பலசமயம் முன்னுக்குப்பின் முரண்படுகிறார் .ஆனால் யுங்கின் ஆழ்படிம ஆய்வு தொடாத பல தளங்களை நோக்கி லக்கான் நகர்கிறார்.

பேசும் விஷயத்தை ஏதாவது ஒரு வகையில் புறவயமாக வரையறை செய்து கொள்ளாமல் விவாதிக்க முடியாது.அதே சமயம் முற்றுறுதியான வரையறையானது ஒரு சாத்தியக்கூறை திறக்கும் போது பலநூறு சாத்தியக்கூறுகளை மூடிவிடும்.காரணம் அது சிந்தனையின் முன்னகர்வுப் பாதையை எப்போதைக்குமாக முன்கூட்டியே திட்டமிட்டுவிடுகிறது . இப்படிச் சொல்லலாம் முன்னதாக சாவியை நாம் வடித்துக் கொண்டால் அது அதற்குரிய பூட்டுகளையே திறக்கும்,பதிலாக ஒரு கம்பியை தேவைக்கு ஏற்ப வளைத்து சாவிகளை உருவாக்கிக் கொண்டால் அதன் சாத்தியங்கள் நம் திறமையை மட்டுமே எல்லையாகக் கொண்டவை [க்ளோட் லெவி ஸ்ட்ராஸின் உவமை] வரையறைகளை தற்காலிகமாக ,சந்தர்ப்ப சூழல் மற்றும் பேசுதளம் சார்ந்து அமைத்துக் கொள்வது இன்றைய சிந்தனைகள் பலவற்றின் பொதுப்போக்காக உள்ளது,குறிப்பாக சமூக சிந்தனை மற்றும் கலையிலக்கிய விவாதங்களில் . பின் நவீனத்துவ சிந்தனையின் பல போக்குகளை எதிர்ப்பவர்கள் கூட இந்த அம்சத்தில் ஒன்றுபடுகிறார்கள் .முன்னதை தருக்கபூர்வமான வரையறை அல்லது தத்துவார்த்தமான வரையறை என்று சொல்லலாம்[logical or philosophical definition] இன்றைய போக்கு செயல்தள வரையறையாகும் . [ functional definition]

கடைசியாக ஒன்று ,நான் பின் நவீனத்துவ சிந்தனையை ஏற்பவனல்ல .அதன் ஒழுக்கமற்ற ,மையமற்ற , சிதைவை இயக்கமுறையாகக் கொண்ட போக்குகளில் எனக்கு உடன்பாடு இல்லை .ஆனால் முழுமுற்றாக வரையறை செய்யாமலிருப்பது , சூழல் சார்ந்து விவாதப்பொருளை தீர்மானிப்பது , போன்ற அதன் பல கூறுகள் நமது நியாய மரபில் இருப்பவை.[நியாயத்தை பொறுத்தவரை அறிபடுபொருள் அல்லது விஷயம் முற்றிலும் சொற்களன் சார்ந்ததே] இங்கு ஆன்மவாதிகளே பேசுபொருளை விவாததளத்துக்கு வெளியேயும் எப்போதைக்குமாக நிர்ணயிக்க முயன்றவர்கள். பெளத்த தருக்கமரபு அதற்கு எதிரானது .இந்த அம்சம் எனக்கு உவப்பாக உள்ளது.

மிகவும் சுற்றிவிட்டேன் என்று தெரிகிறது. ஆனால் மிகவிரிவான ஓர் அடிப்படையை சுருக்கமாகவேனும் சொல்லவேண்டியிருந்ததனால் வேறுவழி இல்லை. மாலன் என்னிடம் எதிர்பார்ப்பது சம்பிரதாயமான முதல் வகை வரையறையை. அது எனக்கு சாத்தியமில்லை என்றும் செயல்தள வரையறையை மட்டுமே என்னால் அளிக்க முடியும் என்றும் என் முதல் கட்டுரையில் சொல்லியிருந்தேன்.மாலன் தனக்கென கொண்டுள்ள வரையறையோ மிக மேலோட்டமான ஒன்று. தருக்க பூர்வமான வரையறைக்கு போனால் கூட கலாச்சாரம் என்பது வெறுமே விழுமியங்கள் மட்டுமல்ல. கறாரான ஒழுக்கவாதிகள் மட்டுமே அப்படி கூறமுடியும் . பிறருக்கு விழுமியங்கள் என்றால் என்ன,யார் உருவாக்கியவை ,எந்த அடிப்படையில்,எப்படி அவை செயல்படுகின்றன போன்ற பல கேள்விகள் எழுந்து அடிப்படைத் தேடல்கள் உருவாகிவிடும். அதற்குரிய ஆய்வு உபகரணங்களும் தேவையாகிவிடும். முன்கூட்டியே தத்துவார்த்தமாக கலாச்சாரத்தை வரையறுத்துவிட்டுத்தான் ஒருவர் கலாசாரத்துக்குப் பங்களிப்பு செய்யமுடியும் என்ற அபத்தமான இறுக்கமான முடிவுக்கெல்லாம் மாலனை கொண்டுசெல்வது இந்த குறுகலான பார்வைதான்.

என்னுடைய வரையறையை வாசகன் நான் பேசும் தளம் சார்ந்து ஊகித்துக் கொள்ள முடியும் என்ற கூற்றைக்கண்டு மாலன் அடையும் குழப்பத்தை நவீன சிந்தனைகளுடன் பரிச்சயம் உள்ள ஒருவர் அடையமாட்டார் என்று எண்ணுகிறேன்.இன்றைய எந்தவொரு சிந்தனையளனையும் அப்படித்தான் புரிந்துகொள்ள முடியும். கலாச்சாரத்தை நான் அடையாளம் காணும் பல்வேறு தளங்களை உதாரணம் கூறிவிட்டு இதுவரையிலான எனது செயல்பாடுகள் மூலம் அவற்றிலிருந்து அடையப்பெற்ற சாத்தியமான குறைந்தபட்ச பொது வரையறையை முன்வைத்திருந்தேன். ஒவ்வொரு செயல்தளத்திலும் அந்த வரையறை சற்று மாறுபட்டபடித்தான் முன்னகரும். அடுத்தகட்டத்துக்கு நான் நகர்ந்தால் தலைகீழாக திரும்பவும் கூடும்.இவ்வரையறை என் முன் நிபந்தனை அல்ல. இது என் இயக்கம் மூலம் உருவாகி வருவதே .அதாவது என் கலாச்சார இயக்கம் மூலம்தான் நான் கலாச்சாரமென்றால் என்ன என்று வரையறை செய்கிறேன். இதை விரித்தால் எல்லா கலாச்சார செயல்பாடுகளும் கலாசாரம் என்பதை மறுவரையறை செய்யும் முயற்சிகள் என்று சொல்லலாம். அல்லது குறைந்தபட்சம் கலாச்சாரம் என்றால் என்ன என்று கண்டு பிடிக்கும் முயற்சிகள் .அது ஒரு தொடர் இயக்கம் .ஆகவே வரையறை ஒருபோதும் முற்றானது அல்ல. என் குடும்ப சூழலில் கலாச்சாரம் என்று அறிவதற்கும்,மொழிச்சூழலில் கலாச்சாரம் என்று அறிவதற்கும் ,ஒரு மானுடனாக அதை உணர்வதற்கும் இடையே பலவிதமான வேறுபாடுகள் உள்ளன . தொடர்ச்சியும் உண்டு. இவ்வரையறைகளின் தொகையே நான் கலாச்சாரம் என்பது .

மாலனின் மற்ற வினாக்களுக்கெல்லாம் என் முதல் விளக்கத்திலேயே பதில் உள்ளது. என் மலையாளப்பின்னணியில் தாய்வழி மரபு உள்ளது . உலகில் 20 ம் நூற்றாண்டு வரை அம்மரபு தொடர்ந்த சமூகங்கள் வெகுசிலவே . ஆயினும் அம்மரபின் ஒரு மிகச்சிறு அம்சம் அம்மரபில் மட்டுமே பொருள்படுவதாக இருக்கும்போது மிகப்பெரும்பகுதி உலகமெங்கும் பொருள்படுவதாகவே இருக்கும் .அ ந்த அடிப்படையிலேயே இலக்கியம் என்ற வடிவம் உருவாகியுள்ளது .தமிழ்க் கலாச்சாரம் என்று சொல்லும் போது அதையும் இப்படி செயல்தள வரையறையே செய்யமுடியும் .அது மொழியிலிருந்து பிரிக்கமுடியாதது.மொழியின் வழியாகவே அதற்கு எனது பங்களிப்பு உள்ளது .அதேசமயம் அது மொழிமட்டுமல்ல. {நனவிலியும் [unconscious] ஆழ்மொழியும்[Langue ] ஒன்றல்ல என்று நம்புவோமெனில் }அது ஒருதளத்தில்தமிழ் நாடு என்ற இட அடையாளம் உடையது அதே சமயம் அது மானுடத்தின் ஒரு பகுதியும்கூடத்தான்.கலாச்சாரம் என்பது ஒரு சந்தர்ப்பசூழல் சார்ந்து நாம் அடையாளப்படுத்திக் கொள்வதாகவே நம்மால் அறியப்பட சாத்தியமானது . அதேசமயம் நாம் அறிவதற்கு அப்பால் அதற்கு தன்னளவில் முழுமையான ஓர் இயக்கம் இருக்கலாம். என் கட்டுரையில் முதலில் நான் சொன்னது இதுதான் .கலாச்சாரம் என்பது பொருண்மையான ஓர் இயக்கமல்ல .அது ஒரு அகவய உருவகமாகவே நம்மால் அறியப்படமுடியும்.பொது அடையாளங்கள் மூலம் அதை நாம் புறவயமாக ஆக்கலாம் . அப்போது அதற்கு தமிழ்,மலையாள,இந்திய,கீழை ,மானுட ,கலாச்சாரம் என்று அடையாளமும் போடலாம் ,அவ்வளவுதான். அவ்வடையாளங்களை சொற்களன் சார்ந்து மட்டுமே பொருள்கொள்ள முடியும்.

மாலனின் மற்ற கேள்விகளுக்கும் என் பதிலில் விளக்கம் இருந்தது ,வேண்டுமெனில் இப்போது விரித்து கூறலாம். கலாச்சாரத்துக்கும் பொருளியல் அடிப்படைக்கும் உள்ள உறவு என்பது சற்று வேறுபட்ட ஒரு தளத்தில் கடந்த அரைநூற்றாண்டாக செவ்வியல் மார்க்ஸிய X நவ மார்க்ஸிய விவாதங்களில் பேசப்படும் ஒன்று .கலாச்சாரம் என்பது பொருளியல் அடிப்படையை பாதுகாக்கும் / விழுமியங்களின் தொகை மட்டுமே என்பது போன்ற மாலனின் கருத்துக்கள் பழமைவாத மார்க்ஸியர்கள் கூட இன்று அழுத்திச் சொல்ல சற்று தயங்கக் கூடியவை. பொருளியல் குறுக்கல்வாதம் என்ற பேரில் தமிழ் சிற்றிதழ்களில் அண்டானியோ கிராம்ஷியை முன்வைத்து மிக விரிவாக பேசப்பட்டு பின்னகர்ந்துவிட்ட ஒன்று அது [பரிமாணம் ,நிகழ் முதலிய பல சிற்றிதழ்களில் ] தமிழின் சாரமான அறிவியக்கத்துடன் உதாசீனமான உறவு இருப்பதனால் போலும் மாலன் மிகப் புதிய வினாவாக போடும் இப்பிரச்சினை எத்தனை எளியது, பழையது என அவர் அறியவில்லை . கலாச்சாரம் போன்ற அடிப்படை விஷயங்களை யோசிக்கும்போது நாம் பல்வேறு வகை குறுக்கல் வாதங்களுக்கு[reductionism ] சென்று சேர வாய்ப்பு உள்ளது . பிரபலமாக உள்ள குறுக்கல் வாதங்கள் இரண்டு . ஒன்று , ஆன்மீக குறுக்கல்வாதம் ,அதாவது எல்லாவற்றையுமே கலாச்சாரத்துக்கு அப்பால் உள்ள ஒரு மையத்தில் கொண்டு சென்று சேர்ப்பது. பிறிதொன்று பொருளியல் குறுக்கல்வாதம் . ஒன்று மற்றதன் எதிர்வினை,எதிர்முனையும்கூட . எத்தனை வம்பு கோபங்கள் இருந்தாலும்கூட ,சிற்றிதழ்களிலாவது ஒரு தொடர் கருத்தியல் விவாதம் நடந்தபடியே இருக்க வேண்டும் என்பதன் தேவை மாலனின் இப்பதிலால் உறுதிப்படுகிறது.பொதுவாக விவாதங்கள் அதில் தொடர்புள்ளவர்களை எளிய முடிவுகளுக்கு வராமல் தடுக்கின்றன..

என் வரையறை இம்மாதிரி குறுக்கல்வாதங்களுக்குள் சிக்காமல் சற்று கவனத்துடன் செய்யப்பட்ட ஒன்று என வாசகர்கள் ஊகித்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.இந்த விவாதம் [கலாசாரம்Xபொருளியல் அல்லது நேரடியாக சொன்னால் மேற்கட்டுமானம்Xஅடித்தளம் ] சற்று பெரியது,இப்போது அது குறித்து பேச முடியாது.ஆகவே தான் நான் அத்திசை நோக்கி நான் அதிகமாக நகரவில்லை. ஆன்மீக குறுக்கல்வாதம் மதம் சார்ந்தது என்றால் பொருளியல் குறுக்கல்வாதம் செவ்வியல் மார்க்ஸியம் சார்ந்தது என்று நாம் அறிவோம்.ஆனால் மார்க்ஸுக்கே இத்தகைய குறுக்கல்நோக்கில் ஐயமிருந்தது என அவர் ஷேக்ஸ்பியர் மற்றும் ஜெர்மனிய இசை குறித்து கூறுமிடங்களில் காணலாம்.லெனின் கூட இத்தகைய ஐயம் கொண்டிருந்தார் என அவர் ஹெர்மிட்டேஜ் ஓவியங்கள் குறித்து சொன்ன மேற்கோளை முன்வைத்து கூறப்பட்டுள்ளது . இந்த குறுக்கல்வாதம் அதிகார பூர்வ மார்க்ஸிய நோக்காக முன்வைக்கபட்டது ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் அவரது பிரச்சார பீரங்கிகளால்தான் . துரதிருஷ்டவசமாக இங்கு மார்க்ஸியமாக முன்வைக்கப்பட்டு அரைநூற்றாண்டுக்காலம் பிரச்சாரம் செய்யப்பட்டது ஸ்டாலினிசமேயாகும். அதிலிருந்து கைலாசபதியும் ,நா வானமாமலையும் ,ரகுநாதனும் பெற்றுக்கொண்ட பொருளியல்குறுக்கல்வாதம் 70 களில் இங்கு சிற்றிதழ் சூழலில் பிரபலம் .அப்போது கற்றுக் கொண்ட வாய்ப்பாட்டையே இப்போது மாலன் முன்வைத்திருக்கிறார்.

70களிலேயே பொருளியல் குறுக்கல்வாதத்துக்கு எதிராக மு தளையசிங்கம் , வெங்கட் சாமிநாதன் ,பிரமிள் முதலிய பலர் விரிவாக கருத்து தெரிவித்து பெரும் விவாதம் இங்கு நடைபெற்று ள்ளது . அது சர்வதேச அளவில் நடந்து வந்த விவாதங்களின் தொடர்ச்சியும் கூட. தமிழில் நுண்கலைகள் ,இலக்கியத்தின் கலை அம்சம் ஆகியவற்றில் பொருளியல் குறுக்கல்வாதம் எந்த அளவு அபத்தமான விளைவுகளை உருவாக்குகிறது என்று மட்டுமே சுட்டிக்காட்டப்பட்டது. விசித்திரமாக இப்போது படக்கூடிய விஷயம் , தமிழில் ஒட்டு மொத்த கலாசார விவாதத்திலும் பொருளியல் குறுக்கல்வாதம் பிழைபட்ட முடிவுகளை ஏற்படுத்தும் என்ற வாதம் மார்க்ஸியர்களாலேயே , குறிப்பாக ஞானி எஸ் வி ராஜதுரை முதலியோரால் முன்வைக்கப்பட்டது என்பது . பிறகு தமிழவனால். கலாசாரம் பொருளியல் சக்திகளின் விளைவு மட்டுமே என்ற வாதத்துக்கு எதிராக ஒரு தளத்தில் பொருளியல் அடிப்படையையே கலாசார சக்திகள் நிர்ணயிக்கவும் கூடும் என்று ஞானி பேசினார்.அதை ஒட்டிய விவாதம் 90களில் கூட நீண்டிருக்கிறது.இறுதியாக அன்பு வசந்த குமார்,எஸ் வி ராஜதுரை , ஞானி ஆகியோருக்கிடையே அன்னியமாதலை முன்வைத்து நிகழில் நடந்த விவாதத்தை சொல்லலாம். இவற்றிலெல்லாம் நானும் சிறிய அளவில் பங்கு கொண்டதுண்டு. இவ்விவாதத்தின் விரிவுக்குள் போகவில்லை.ஆனால் ஏதோ ஒரு வகையில் இவற்றை அறிந்துள்ள எவரும் ஒரு குறுக்கல்வாத தரப்பை கண்மூடித்தனமாக சொல்லமாட்டார்கள் என்று எண்ணுகிறேன் .

மாலனுக்கும் எனக்கும் உள்ள இடைவெளியே இதுதான் .நான் என் தரப்பை இந்த பெரும் விவாதத்துக்கு பின்னால் வந்த ஒருவன் என்ற நிலையில் நடத்த , அவர் அதற்கு முந்தைய காலத்தில் நின்று விட்டவராக நடத்துகிறார் .அவர் வாசித்த தளம் ,காலகட்டம் ஆகியவற்றுக்குப் பிறகு வந்த எல்லா விஷயங்களும் பம்மாத்து என்பதில் அவர் ஐயமற்றவராக இருப்பதன் விளைவே அவரது குறுகல்அணுகுமுறை . என் பார்வையில் சமூகப் பொருளியல் சார்ந்த நோக்குக்கும் ஆன்மீக வாத நோக்குக்கும் இடமுள்ளது. உதாரணமாக இப்போது தமிழிசை பற்றி சில படித்து வருகிறேன். இசையின் சமூகப் பொருளாதார அடிப்படை சார்ந்து அதை அணுகுவேன் .அதுவும் கலாச்சார ஆய்வே. ஆனால் அது இசையை முழுக்க அறிய உதவாது . ராகங்களுக்கும் மனஇயக்கத்துக்கும் உள்ள உறவுக்கு வேறு அகவய ஆய்வுமுறை தேவை.அதுவும் கலாசார ஆய்வே . ஆகவே கலாச்சாரம் என்றால் என்ன என்ற வினாவுக்கு இரு தளங்களிலும் செல்லுபடியாகக் கூடிய ஒரு வரையறையையே நான் தரமுடியும். ஆரம்பகட்டத்திலெயே செய்யப்படும் எளிய வரையறை சிந்தனை எத்தனை பெரிதாகிறதோ அந்த அளவுக்கு பெரிய பிழைகளை உருவாக்கியபடியே போகும் .ஆகவேதான் செயல்தள வரையறை தேவையா கிறது.

இத்தகைய நுட்பமான விவாதம் /புரிதலை உடனே அறிவுஜீவி பம்மாத்து என்று சொல்லிவிடும் போக்கு தமிழ் நாட்டில் எப்போதும் உண்டு.ஆனால் புரிதலே செயலை தீர்மானிக்கிறது உதாரணமாக விழுமியங்களே கலாச்சாரம் என்று கூறும் ஒருவர் எளிதாக கலைகளின் நுட்பமான பகுதியை நிராகரித்துவிட முடியுமென்று காண்பது எளிது. அவர் ஒரு ஊடகத்தின் ஆசியராக இருக்கும்போது ஒரு பெரும் கலைஞனை அவமதித்து துரத்தவும் கூடும். பொருளியல் குறுக்கல் வாதம் கலாசாரத்தில் மூர்க்கமாக செயல்படுத்தப்பட்டதன் அழிவை உலகுக்கு காட்டும் மூன்னுதாரணமாக உள்ளது மாவோவின் கலாச்சாரப் புரட்சியே .ஒரு சூழலின் மையத்தில் செயல்படும் சிலரிடமாவது சற்று ஆழமான புரிதல் இருக்கவேண்டிய அவசியத்தை இது காட்டுகிறது .தமிழில் இன்றைய பிரபல ஊடகங்களில் இருந்து அதை பெற முடியாது என்பதற்கு மாலனின் கருத்தே சான்றாகும் .

மாலனின் வினாக்கள் குறித்து எனக்கு இப்போதும் மகிழ்ச்சிதான்.பொதுவாக கலாச்சாரம் குறித்தெல்லாம் பலவாறான விவாதங்கள் தமிழ் சிற்றிதழ்ச் சூழலில் நடந்துவருகின்றன. நான் பலதளங்களில் விரிவாகவே எழுதியுமிருக்கிறேன். [விழுமியங்களுக்கும் சமூகப் பொருளாதர தளங்களுக்கும் உள்ள உறவு , அனைத்துமானுடர்களுக்கும் உரிய அறம் என்ன ,மானுடக்கலாசாரத்தின் சாரமென்ன என்பது குறித்தெல்லாம் பின் தொடரும் நிழலின் குரல் பக்கம் பக்கமாக பேசுகிறது ] ஆனால் அவை பெரும்பாலும் இத்தளத்தில் பரவலாக செயல்பட்டுவருபவர்கள் மத்தியில்தான் . ஆகவே இதுவரையிலான விவாதத் தொடர்ச்சி , விவாத அடிப்படைகள் , கலைச்சொற்கள் முதலியவை எல்லாருக்கும் தெரிந்திருக்கும் என்ற ஊக அடிப்படையிலேயே அவ்விவாதங்கள் நிகழும் .உதாரணமாக என்னுடையது செயல்தள வரையறைகள் மட்டுமே என்று அங்கு நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை . என் நூல்களில் தரிசனம் ,கலை போன்ற மேலும் பல சொற்களை இவ்வாறுதான் வரையறை செய்துள்ளேன் . அந்நூலிலேயே பின்பு அவை பலவாறாக உடைக்கப்பட்டுமுள்ளன .மாலனைப்போல வெளியே இருந்து ஒருவர் வந்து அடிப்படைகள் பற்றி கேள்வி எழுப்பும்போது சற்று புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது.அது உதவிகரமானதுதான்.

88888888

சன் தொலைக்காட்சியின் நிபுணர் பங்கேற்பு குறித்து மாலன் சொன்னது எனக்கு என் தரப்பை வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பு தருகிறது.ஒவ்வொரு துறையிலும் அதன் அதிகாரபூர்வ,வெற்றிகரமான முகம் ஒன்று உண்டு.மாலன் கூறும் நிபுணர்களில் மூன்றுபேர் அப்படிப்பட்டவர்கள். அத்துறையின் சம்பிரதாய கருத்துக்களை அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட சொற்களில் முன்வைப்பார்கள்.இந்தியாவில் பல காரணங்களால் இவர்களின் தரம் வருத்தமூட்டும்படியாக இருப்பதை காணலாம்.சன் செய்திகளின் செய்தி ஆய்வுகளில் இவர்களில் சிலரின் பங்கேற்பும் அதை உறுதி செய்தது.இத்துறைகளில் உண்மையான தீவிரம் கொண்ட அறிஞன் ஓர் அன்னியனாக ,தனித்தவனாக ,அதிகாரமற்றவனாக ,பலசமயம் பைத்தியக்கரனாக காணப்படுவான் .அவனை பெரிய ஊடகங்கள் கணக்கில் கொள்வதில்லை .அதிகார அமைப்பு அவனுக்கு எதிராக இருப்பதே காரணம் .

ஒரு உதாரணம் சொல்கிறேன். கடந்த காலங்களில் வேளாண்மை குறித்த எந்த பேச்சிலும் வேளாண்மை கல்லூரி முதல்வரான ஜெயராஜ் முதலியோர் மட்டுமே முக்கிய ஊடகங்களால் முன்னிறுத்தப்பட்டனர். நவீன வேளாண்முறைகள் இந்திய விவசாயியை சுரண்டி சுற்றுச்சூழலை அழிப்பவை என்று கண்டறிந்து , வேளாண் விஞ்ஞானி பதவியை துறந்து , இயற்கை விவசாய ஆய்வாளராக மாறி , தமிழகம் முழுக்க அதை பிரச்சாரம் செய்ய அலைந்த நம்மாழ்வாரை நிகழ் என்ற சிற்றிதழே கண்டடைந்து தொடர்ந்து முன்வைத்தது.ஞானி தன் சொந்தப்பணம் மற்றும் நண்பர்களின் பணம் ஏன பெருந்தொகையை அவரது கருத்துக்களை பிரச்சாரம் செய்ய செலவிட்டிருக்கிறார் இன்று அவர் அங்கீகரம் பெற்று விட்ட பிறகே முக்கிய ஊடகத்தில் ஒரு சிறு இடம் அவருக்கு கிடைத்துள்ளது. முக்கிய ஊடகம் வ. செ.குழந்தைசாமியையே கல்வியாளராக முன்வைக்கும் .சிற்றிதழே பேரா ஜேசுதாசனை முன்வைக்கும். அதிகார அமைப்புகளுடனான நெருக்கம் பதவி பட்டங்களின் வால் போன்றவை இங்கு உண்மையானதகுதியை மறைத்துவிடுகின்றன.

மாலனின் வரிகள் என்னை சற்று எரிச்சல் மூட்டாமலும் இல்லை . ஏகாதிபத்திய அரசியல் குறித்து ஐம்பது வருடங்களாக ஆய்ந்து ,பேசி ,மக்களிடையே பணியாற்றி வரும் ஞானி போன்றோர் இவருக்கு சிற்றிதழ் சார்ந்த உதவாக்கரைகள் , எங்காவது அரசியலில் ஒரு முனைவர் பட்டம் பெற்ற ஆசாமி அறிஞர் நிபுணர். தமிழ் நாவல் பற்றி பேச நாவலாசிரியர்களை விட்டுவிட்டு நாவல் பற்றி முனைவர் பட்டம் பெற்ற ஒரு பேராசிரியரை அனுப்பும் தமிழ் மனோபாவத்தின் சரியான உதாரணம் இது.ஏன் இங்கு சிற்றிதழ் தேவை என்பதற்கு வேறு காரணமே வேண்டியதில்லை.மொத்தத்தில் மாலன் என்ன சொல்கிறார் ? ஞானி போன்றோருக்கு அவரது பிரபல ஊடகத்தில் இடமில்லை , காரணம் அங்கு வாலும் கிரீடமும் உள்ளவர்களுக்கே வாய்ப்பு. ஆனால் ஞானி சிற்றிதழ் நடத்தவும்கூடாது,அது பம்மாத்து. என்னுடைய எழுத்துக்கள் மாலன் நடத்திய ‘உயர்தர ‘ ஊடகங்களில் இடம்பெறும் ‘தரம் ‘ அற்றவை. ஆனால் நான் சிற்றிதழில் எழுதுவது வெறும் சுயநலம் மட்டுமே. மொத்தத்தில் மாலன் இப்படி கேட்கிறார் . , ‘ ‘அதுதான் கோட் சூட் போட்டு ரூ 30000 சம்பளம் பெறும் அறிஞர்கள் [முதலாளிமனம் கோணாமல்] சமூகத்துக்கு உயரிய விழுமியங்களை அளிக்கிறோமே , நீங்களெல்லாம் ஏன் நடுவே வந்து குழப்புகிறீர்கள் ? ‘ ‘

[அவரது எமெர்ஜென்ஸிப் புரட்சி எனக்கு புதிய செய்தி. பிறகும் அப்படி ஏதும் அவர் எழுதி காட்டியதுமில்லை. ரசாயனத் தொழில் நடத்தினார் ,அதில் பிரச்சினைகள் வரவே பிரபல இதழ்களில் வேலை செய்தார் , இந்தியா டுடே தொடங்கப்பட்ட போது பல சிபாரிசுகளுடன் அதில் ஆசிரியராக நல்ல ஊதியத்தில் சேர்ந்தார் . அதில் வேலை பார்ப்பவர் குறித்து விமரிசித்து அதிலேயே பிரசுரித்ததை அதன் உரிமையாளர்கள் விரும்பாததனால் விலகினார் இப்படி பல கேள்விப்பட்டுள்ளேன் . நானறிந்தவரை அவர் தான் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் திறமையான செய்தி த் தொடர்பாளர் மட்டுமே . ரபி பெர்னாட் போல நாளை அவர் ஜெயா டிவிக்கு போய் சகலகலாவல்லிமாலை பாடினாலும் ஆச்சரியப்படமாட்டேன் ]

88888888888888888

மாலனின் மற்ற சில்லறை விவாதங்களை நான் அதிகம் பொருட்படுத்தவில்லை . செல்லப்பா முதலியோர் குறித்தெல்லாம் நான் கூறியவை செல்லப்பாவாலும், சுந்தர ராமசாமி , பிரமிள் முதலியோராலும் எழுத்தில் பதிவு செய்யப்பட்டவை. கசடதபற எழுத்தின் தொடர்ச்சி அல்ல முரண்பாடு என்பது அவ்விதழாளர்களாலேயே சொல்லப்பட்டதுதான்.தன் வாழ்நாள் முழுக்க செல்லப்பா எழுத்துவுக்கு பிறகுவந்த எதையுமே ஏற்கவில்லை என்பதும் ஓர் வரலாற்று உண்மை.

மாலன் நடத்திய இந்தியா டுடே இதழுக்கு 1989 ல் என் தொடக்க காலத்தில் அவ்விதழ் குறித்து ஒரு நையாண்டிக் கட்டுரை அனுப்பியதை தவிர்த்தால் அவர் இதழ்களின் /அவரது பரிசீலனைக்காக எதையுமே நான் அனுப்பியதில்லை . அவரது ரசனை மீது எனக்கு அந்த அளவுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்பதோடு சமீப காலம் வரை இலக்கிய நோக்கற்ற எந்த வணிக இதழிலும் எழுதவேண்டாம் என்ற எண்ணமும் எனக்கு இருந்தது. இக்காலகட்டத்தில் தமிழின் எல்லா பிரபல இதழ்களும் என்னிடம் பலமுறை படைப்புகளை கேட்டுமுள்ளன. என் எழுத்தின் நிபந்தனைகளை இப்போதும் நானே தீர்மானிக்கிறேன்.மாலனின் [ அவர் மட்டுமே அறிந்த ] புறக்கணிப்பால் எனக்கு ஏதும் ஆகிவிடவில்லை என்று அறியுமளவாவது தமிழ் இலக்கிய உலகுடன் அவருக்கு தொடர்பு இருக்கும் என்று நான் நம்புகிறேன் . இலக்கியத்தில் , கருத்தியலில் என் பங்களிப்பு என்ன என்று அவரால சமீபத்தில் உள்வாங்கிக் கொள்ள முடியாது என்றே அவரது எழுத்துக்கள் காட்டுகின்றன.

சிற்றிதழியக்கம் குறித்த என் ஐயங்களை சிற்றிதழ்களிலேயே பதிவு செய்துள்ளேன். அவற்றின் தவிர்க்கமுடியாத தேவையையும் . இவற்றை திண்ணையிலேயே மீண்டும் எழுதியுமுள்ளேன். இப்போது மாலனின் எழுத்து அதை மேலும் உறுதி செய்துள்ளது. சிற்றிதழ் எழுத்து என்பது ஒரு கருத்துச் சூழலின் மையத்தில் நடப்பது.உத்வேகத்தாலும் ஆழத்தாலும் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துவது அவற்றின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுவது. ஆகவே அது இல்லாத சூழல் இல்லை. ஆனால் அடுத்த கட்டத்தில் இருக்கும் நடுவாந்தர இதழ்கள் சிற்றிதழ் இயக்கம் மூலம் திரண்டு வருவதை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும். அவை பிறகு வெஉஜன ஊடகங்களை ,செய்தி ஊடகங்களை பாதிக்கும்.இதுவே இயல்பான இயங்குமுறை. தமிழில் நடுவாந்தர இதழ்கள் இல்லாத நிலையில் சிற்றிதழ் இயக்கத்தில் பெரும்பகுதி வீணாகிறது . இன்னும் சொல்லப்போனால் ஒரு தவிர்க்கமுடியாத தொடர்ச்சியை பேண வேறுவழியின்றி இயங்கிக் கொண்டிருப்பவையாகவே சிற்றிதழ் இயக்கம் இன்று உள்ளது .ஓரளவேனும் சிற்றிதழ் இயக்கத்தின் சாராம்சமான பகுதியை வெகுஜன ஊடகத்துக்கு எடுத்துச் செல்லவேண்டியுள்ளது.ஆனால் அப்படி நேரடியாக எடுத்துச் செல்வது நடைமுறையில் அசாத்தியமாகவே இருக்கிறது .

சிற்றிதழ்களின் நோக்கம் தரம் குறித்து அறிய எளிய வழி அவற்றை படித்து பார்ப்பதுதானே ? சாரு நிவேதிதா , ரவிக்குமார் போன்றவர்களின் கருத்துக்களை சிற்றிதழில் எவர் பொருட்படுதுவார் என்று தெரியவில்லை . இவர்களின் கருத்துக்கள் ஒரு வகை பாவனைகள் மட்டுமே . இவர்களின் வாசிப்பு மிகவும் ஐயத்துக்கு உரியது . பெரிய இதழ் ஒன்று சிற்றிதழ் குறித்து எழுத வாய்ப்பு அளித்தபோது பெரிய இதழ்களின் மனம் குளிரும்படியாக கருத்து தெரிவித்திருக்கிறர்கள்[அதே சமயம் இங்குள்ள விசுவாசங்களையும் பேணியபடி ] .இதை உடனே நமது கேளிக்கையாளர்கள் மேற்கோள் காட்ட ஆரம்பித்துவிடுவார்கள் என்று நான் உடனே எழுதியிருக்கிறேன். ஆகவே ஆச்சரியமில்லை. ஏன் கோ ராஜாராம் இதே மின்னிதழில் எழுதுவதை பார்க்கக் கூடாது ? சிற்றிதழ்கள் வெளிவர பல காரணங்கள் இருக்கலாம்.ஒரு தரப்பை, ஓர் எழுத்து முறையை ,ஒரு தத்துவத்தை முன்வைப்பது எப்போதும் அவற்றின் இயல்பு.அவற்றுக்கேற்ப அவை ஆக்கங்களை ,எழுத்தாளர்களை முன்வைக்கவும் செய்யும் .[எழுத்து வில் செல்லப்பா எவ்வளவு எழுதினார் என்று அதை புரட்டி பாருங்கள் ]இப்போது வரும் ஒவ்வொரு சிற்றிதழுக்கும் அதற்கே உரிய தெளிவான செயல்தளம் இருப்பதை எவரும் காணலாம்.பன்முகம் -இலக்கியக் கோட்பாடு ,புனைகளம்- ஓவியம் நாட்டார்கலைகள் ,அட்சரம் –புதுவகை எழுத்துமுறை,ஒப்புரவு —தமிழியக்கம் ,சொல்புதிது –தத்துவம் அறிவியல் ,அசை– மார்க்ஸிய மறு ஆய்வு என.

நான் சிற்றிதழ் நடத்த பணத்தாசை , சுயமுனைப்பு ஆகியவை மட்டுமே காரணமெனச் சொல்லும் மாலன் சற்று சொல் புதிது இதழ்களை புரட்டி பார்த்திருக்கலாம். 9 இதழ்களிலாக நாங்கள் யாரை முன்னிறுத்தியுருக்கிறோம் என்ன செய்திருக்கிறோம் என்று கவனித்திருக்கலாம் .நான் கோருவது இதழைப் பார்த்து, அதன் பணியை ஒப்புக் கொள்பவர்களிடமிருந்து சந்தாக்களை மட்டுமே . நேற்று வரை ஒரு சந்தாவில் தபால்செலவு போக மிஞ்சுவது பிரதிக்கு 20 ரூபாய் . அடக்கவிலையே அதுதான் .இப்போது தபால் கட்டணம் ஏறியபின் சந்தக்களுக்கு சொல் புதிது இலவசமாகவே போகிறது. ஒரு கீழ் மத்தியவற்க அரசு ஊழியனான நான் இதுவரை எழுதிச் சேர்த்த பணம் உட்பட மிகக் கணிசமான தொகை சொல் புதிதிற்காகவும் பிற சிற்றிதழ்களுக்காவும் அவை சார்ந்த செயல்பாடுகளுக்காகவும் செலவிட்டிருப்பதை சற்று கூச்சத்துடன் மட்டுமே சொல்ல வேண்டியுள்ளது. சிற்றிதழாளர்களில் இழக்காதவர் எவருமே இல்லை . என் செயல்பாடுகளில் எனக்கு நம்பிக்கை உண்டு , அவதூறு புதியதுமல்ல .

இப்போது தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் , குறித்த விரிவான ஒரு பேட்டிக் கட்டுரைக்காக ஆறுமாதகால உழைப்பு மற்றும் சொந்த செலவில் எட்டுபயணங்களுக்கு பிறகு முடித்து அச்சுக்கு அனுப்பிவிட்டு வந்து அமர்ந்து மாலனின் குறிப்பை படித்தபோது ஒருகணம் சிரிப்பு வந்துவிட்டது மாலனால் தமிழ்ச்சூழலின் இவ்வுணர்வுகளை புரிந்துகொள்ள முடியாது. எல்லா காலத்திலும் அவரைப்போன்றவர்கள் இருந்துள்ளார்கள். கலாச்சாரச் செயல்பாடு என்பது ஒருவகையில் அவரைப்போன்றவர்களை தாண்டி ,அவர்களால் சிறுமைப்படுத்தப்பட்டு , அதன் பிறகும் இனம்புரியாத ஒரு ஊக்கத்தால் நடத்தப்படுவதாகவே என்றும் இருந்துள்ளது. மறுபக்கமும் உண்டு . இன்று சற்றுமுன்பு அசோகமித்திரன் சொல்புதிதை 2001ன் சிறந்த பிரசுரமாக எழுதியிருந்ததை ,பேரா ஜேசுதாசனின் பேட்டி குறித்த அவரது பெருமதிப்பை ,இவ்விதழின் ஆக்கத்துக்குபின்னாலுள்ள உழைப்பு குறித்து அவர் சொன்னதை படித்தபோது ஏற்பட்ட திருப்திதான் அது. [முந்தைய இதழ் குறித்து கோ. ராஜாராம் திண்ணையில் எழுதியிருந்ததும் நினைவு வருகிறது. ] சிற்றிதழ் இயக்கம் என்பதே அவதூறுக்கும் சிறு அங்கீகாரங்களுக்கும் இடையேயான ஓயாத ஊசலாட்டம்தான்.

[பி கு.இக்கட்டுரையில் கையாண்டுள்ள குறைந்தபட்ச கலைச்சொற்களுக்கு ஆங்கில சொற்களையும் அடைப்பிற்குள் தரவேண்டியிருப்பது சிற்றிதழ் சார்ந்த விவாதத்தில் பயன்படுத்தப்படும் இந்த சொற்கள் இணைய விவாதங்களில் பொதுவாகக் காணப்படாமையினாலேயே .]

**

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்