கற்பனை

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

பசுபதி


கண்கள் இழந்தபின்பு –மில்டன்
. கண்டதே கவிதையென்பர் -நாம்
பண்ணும் கற்பனைதான் — ஆன்மா
. பார்க்கும் விழிகளென்பர் (1)

‘கற்பனை காட்டுமெழில் — அதுவே
. காலம் கடந்தமெய்யாம் ‘ — என்று
நற்கவி ‘கீட்ஸு ‘ரைத்தான் –அது
. நமக்கும் பொருந்திடுமே ! (2)

கற்பனை ஊரென்ற — பாரதி
. கவிதைப் பொருளென்ன ?
‘புற்புத வாழ்வினையே — புனைவெனப்
. புரிந்திடில் மோட்சமுண்டு! ‘ (3)

‘இழந்த இன்பங்கள் –பெறவே
. ஏகுதீர் கற்பனையூர் ‘ – என்றார்
‘குழந்தை நிலையதனை — அவ்வூர்
. குறித்திடும் ‘ என்றபொருள் ! (4)

குழவிபோல் தூயநிலை — கவிஞர்
. கோரல் சரியன்றோ ?
அழகுறு கவிபடைக்க — நமக்கு
. அதுவே இயற்கையன்றோ ? (5)

கலைகள் மிளிர்ந்திடவே — உயர்
. கற்பனை ஒளிவேண்டும்; –எண்ண
அலைகள் கவியாக — புனையும்
. ஆற்றல் மிகவேண்டும் (6)

உணர்வெனும் விதைவேண்டும் — கவிதை
. உளத்தில் பிறந்திடவே — ஆனால்
மணமிகு கற்பனைகள் — வேண்டும்
. மலர்கள் சிறந்திடவே ! (7)

தணலைக் கனலாக்க — காற்றைச்
. சரியாய் ஊதவேண்டும்
உணர்வைக் கவியாக்க — கற்பனை
. யுக்தி பலவேண்டும் (8)

மனத்தில் மின்னிடுமோர் –உணர்வால்
. வாசகன் நனைவதில்லை!
கனத்த கருமுகிலாம் — புனைவே
. மனத்தில் மழைபொழியும் (9)

உதிக்கும் நிலாபோல –உணர்வு
. உள்ளத் தையொளிர்க்கும்
கதிரோன் கற்பனைதான் — மூலம்
. . கற்றை மதியொளிக்கு ! (10)

பகுக்கும் அறிவுக்கு — முதலிடம்
. படித்தோர் தருவதில்லை ;
வகிக்கும் தலைமையிடம் — புனைவே
. மனத்தின் திறன்களிடை. (11)

படைக்கும் திறனதனால் — கற்பனை
. பரமனை அணுகிவிடும் — அது
உடைக்கும் கட்டுகளை ! — மாந்தர்
. உணர்வின் விதிமீறும். (12)

படிப்பவன் மனமுலுக்கல் — வேண்டும்
. பாடல் தரமெட்ட !
படைத்தவன் மனவுணர்வை — கற்பனை
. படிப்போன் உணர்வாக்கும். (13)

அநுபவ தளைக்குள்தான் — உணர்வு
. அடிமையாய் நடைபோடும்
கனவுசெய் கற்பனையோ — எந்தக்
. கட்டையும் மீறிவிடும். (14)

புவியில் நாம்காணும் — உணர்வில்
. புதுமைகள் ஏதுமில்லை –அதைக்
கவியாய் செய்வேதம் — அது
. கற்பனை ரசவாதம் (15)

ஆர்த்திடும் கவியுணர்வை — நமது
. ஆய்வுத் திறனுடனே
சேர்ப்பது கற்பனையே — பாடல்
. சிறக்க நற்றுணையே (16)

கற்பனை செய்திடுவீர் — நம்மைக்
. . கடவுள் படைத்தகணம்!
கற்பனை செய்தன்றோ — உணர்வைக்
. கடவுள் படைத்திருப்பான் ? (17)

கனவில் புனைந்தளித்தான் — உலகே
. கடவுளின் முதற்கவிதை !
தனது கற்பனையால் — நமக்குத்
. தந்தனன் கவியாற்றல் ! (18)

~*~o0o~*~
pas@comm.utoronto.ca

Series Navigation