கமலஹாசன், குடும்பம், நீதிமன்றம், அரசாங்கம்

This entry is part [part not set] of 23 in the series 20020317_Issue

சின்னக்கருப்பன்


கமலஹாசனும் அவரது மனைவியும் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்பதை குமுதத்தில் படித்தேன். விவகாரம் இங்கு கமலஹாசனைப் பற்றியதல்ல. அவரது குடும்பத்தைப் பற்றியதும் அல்ல. கமலஹாசனின் வாழ்க்கை அவரது பிரச்னை. ஆனால், ஒரு சமூகத்தில் இருக்கும் கமலஹாசனை எவ்வாறு சமூகமும், நீதி மன்றமும், அரசாங்கமும் அணுகுகிறது என்பதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரை.

அந்த குமுதத்தின் கட்டுரையில், (அதிலுள்ளவை உண்மையா இல்லையா என்று எனக்கு தெரியாது. அது இந்தக் கட்டுரைக்கு தேவையும் இல்லை) கமலஹாசனும் அவரது மனைவியும் திருமணம் செய்து கொள்ளாமல், வெகுகாலம் சேர்ந்து வாழ்ந்து இரண்டு குழந்தைகளும் பெற்றுக்கொண்ட பின்னர், சிலரது அறிவுரையின் பேரில் திருமணம் செய்து கொண்டார்கள் என்றும், இப்போது அவர்கள் தனித்தனியே வாழ்கிறார்கள் என்றும், இருவருமே தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பெற்றோராக இருப்பினும், சேர்ந்து வாழ முடியாமல், சட்டரீதியான விவாகரத்துப் பெற்றுக்கொள்ளப்போகிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்த மேற்கண்ட கதை கமலஹாசனுடையதாகவோ, இன்னும் யாரோ முகம் தெரியாதவராகவோ இருக்கலாம். இருக்கும் 100 கோடி இந்தியர்களில் எத்தனையோ லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கையாக இருக்கலாம். அதனாலேயே இது நம்மை நாமே நிர்வகித்துக்கொள்ள உருவாக்கிய நீதிமன்றமும், அரசாங்கமும் சம்பந்தப்பட்ட விஷயமாகிறது.

ஒரு தீர்ப்பு மே 27, 2001இல் வெளிவந்தது. ஒரு தந்தை தன் மகளை ஒரு ஏற்கெனவே திருமணமான நபர் கடத்திச் சென்று விட்டார் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதனை நீதிமன்றம் நிராகரித்து, மேஜர் ஆன ஒரு பெண் யாருடன் வாழ்கிறாள் என்பது நீதிமன்றத்துக்கு தேவையில்லாத விஷயம், அது சட்டப்படி தவறு அல்ல என்று நிராகரித்துவிட்டது. திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பெண் யாருடனும் வாழலாம் என்று அதே நீதி கூறுகிறது. (கீழே ‘தி இந்து ‘வில் வந்த செய்தி இணைக்கப்பட்டுள்ளது) சமீபத்தில், இந்த நீதியைப் பற்றி தினகரன் சென்னைவாழ் மக்களிடம் பேட்டி கண்டு செய்தி வெளியிட்டிருந்தது. இதில் சிலர் திருமணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி குழந்தையும் பெற்றவர்கள். எதிர்பார்த்தது போல அவர்கள் இதனை ஆதரித்து பேசியிருக்கிறார்கள். சிலர் இது அனாசாரம் என்று பேசியிருக்கிறார்கள்.

அடுத்த செய்தி. குடும்பத்துக்குள்ள அடிச்சிப்பாங்க சேந்துப்பாங்க.. நம்ம யாரு கேக்கறது என்று பலகாலமாக இருந்த சமூக பழக்கத்தை முதன் முறையாக உடைக்க ஒரு சட்டம் மார்ச் 8, 2002இல் பாராளுமன்றத்தில் தாக்கல் ஆகி இருக்கிறது. (கீழே இந்துவில் இது பற்றி வந்த செய்தி இணைக்கப்பட்டுள்ளது). இந்த தாக்கீது சட்டமானால், ஒரு மனைவியை ஒரு கணவன் அடித்தால் அது சட்டப்படி குற்றமாகிறது. தொடர்ந்து அடிப்பதோ, அவளது வாழ்க்கையை நரகமாக்குவதோ, அவளுக்கு உடலில் காயம் ஏற்படுத்துவதோ, அவளை ஒழுக்கம் கெட்ட முறையில் வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்துவதோ, குடும்ப வன்முறை என்று வரையறுக்கப்படுகிறது. இவ்வாறான குடும்ப வன்முறையை செய்யும் கணவனை தடுக்க, மனைவியின் எந்த உறவினரும் அந்தப் பெண்ணைப் பாதுகாக்கவும், குடும்பத்தில் அமைதி நிலவுவதற்காகவும் நீதிமன்றத்தைக் கோரலாம். அந்த நீதி மன்ற ஆணையை மீறுபவர்களுக்கு 1 வருடம் சிறை தண்டனை அல்லது பண தண்டனை வழங்கப்படும். (இது சட்டரீதியான மொழிபெயர்ப்பல்ல.)

இத்தோடு, முரளி மனோஹர் ஜோஷி இன்னும் பல சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்பதாகப் பேசியிருக்கிறார். இதில் வரதட்சிணைஒழிப்பு சட்டம், பெண்களை கேவலமாகச் சித்தரிப்பதை தடுக்கும் சட்டம், பெண்களைத் தவறான வழியில் செலுத்துவதை தடுக்கும் சட்டம், சதி ஒழிப்பு ஆகிய சட்டங்கள் கடுமையாக்கப்படப் போகின்றன.

(இதில் பெரும்பாலானவர்களுக்கு எந்தவித எதிர்ப்பும் இருக்காது. ஆனால், நான் ‘பெண்களை கேவலமாகச் சித்தரிப்பதை தடுக்கும் சட்டத்தை ‘ (Indecent Representation of Women Act) எதிர்க்கும் ஆள். ஆனால் அது தனி கட்டுரை)

குடும்ப வன்முறைச் சட்டத்துக்கு வருவோம். ஆண்கள் பெண்களால் அடிபட்டால் இந்தச்சட்டம் அவர்களைக் காப்பாற்றாது. (விளையாட்டுக்காகப் பேசவில்லை. உண்மையிலேயே மனைவிகளால் அவமதிக்கப்படும், அடிபடும் கணவன்மார்களை எனக்குத் தெரியும்)

கமலஹாசனும் அவரது வாழ்க்கைத் துணையும் திருமண பந்தமின்றி இணைந்து வாழ்வது தனிப்பட்ட முறையில் சரியாக இருக்கலாம். ஆனால் சமூகத்தை நிர்வகிக்க உருவான நீதிமன்றத்தையும், அரசாங்கத்தையும் பொறுத்த மட்டில் அது தவறானதாகத்தான் இருக்க வேண்டும். இந்த விஷயம் நீதிமன்றத்துக்கு வராத வரையில் அது நீதிமன்றத்துக்குச் சம்பந்தமில்லாதது. ஆனால் அது நீதிமன்றத்துக்கு வரும்போது, அது எல்லோருடைய விஷயமும் ஆகிவிடுகிறது. ஏனெனில், அங்கு கொடுக்கப்படும் நீதி, எல்லோருடைய வாழ்க்கையையும் பாதிக்கிறது.

ஒரு தந்தை தன் மகள் நன்றாக வாழ வேண்டுமென்று விரும்புகிறார். ஆனால், நீதிமன்றம், அந்தப் பெண் மேஜராகிவிட்டாள் என்று சொல்லி அவரது அக்கறையை தூக்கி எறிகிறது. அந்தப் பெண் அந்த நபர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். அது யாரின் பொறுப்பு ? நிச்சயமாக அந்தக் குழந்தையின் பெற்றோர் பொறுப்புத்தானே.

ஒரு பெண்ணும் ஆணும் ஒருவரை ஒருவர் தொடும்போது காதலும் காமமும் எதிர்காலச் சிந்தனையை மூளையில் இருக்க விடுவதில்லை. அது ‘நம்பிக்கை ‘ ஆகிவிடுகிறது. எல்லையற்ற நம்பிக்கை காதலாகவும், காமமாகவும் விரிவடையும் போது, அங்கு சமூகம் கேட்கும் திருமணம் என்ற சட்டரீதியான உறவு, வெறும் ஊராருக்காகச் செய்யும் சடங்கு விஷயமாகிவிடுகிறது.

ஆனால், காதல் காலம் முழுவதும் நிலைத்து நிற்பதில்லை என்பதுதான் அவலம். சினிமா அல்ல வாழ்க்கை. திரையில் திருமணம் நடக்கும் போது திரைக்காதல் முடிந்து விடுகிறது. நிஜம் திருமணத்துக்குப் பிறகுதான் ஆரம்பிக்கிறது.

சமீபத்தில் மதுவந்தி எழுதிய ஒரு கதை படித்தேன். அதனை எத்தனை பேர் சரியாகப் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. மழையும் வெயிலும் என்ற இந்தக் கதையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் சண்டை வருகிறது. என்ன சண்டை என்பது சொல்லப்படவில்லை. (அது தேவையும் இல்லை). மனைவியின் கோபம் காலையில் தீர்ந்து விடுகிறது. உடல் ரீதியான மாற்றங்கள் உணர்வு ரீதியான வெளிப்பாட்டை உருவாக்குகின்றன. அதுவே கோபமாகவும் சண்டையாகவும் வெளிப்படுகிறது என்பதை இறுதி வரியில் எழுத்தாளர் சொல்கிறார். அதே நேரத்தில், கணவனிடம் கொஞ்சம் கோபம் மிச்சமிருப்பதையும் காண்பிக்கிறார். முந்தின நாள் சண்டையில் பேசிய பேச்சுக்கள் இருவர் மனதிலிருந்தும் சுத்தமாகக் கரைந்து சென்றுவிடுவதில்லை. இதே போல் ஒவ்வொரு மாதமும் சில கோப எச்சங்களை விட்டுச் செல்கிறது.

இதுதான் வாழ்க்கை. குழந்தைகளுக்காகவும், மற்றும் சமூக கட்டுப்பாடுகளுக்காகவும், திருமணம் தொடர்கிறது. தொடர்ந்த திருமண வாழ்க்கை ஒரு கட்டத்துக்கு அப்புறம் புரிதலை உருவாக்குகிறது. மனதில் கோபம் தலைக்கேறி, கட்டுப்படுத்த சமூகம் இல்லாதிருக்கும் பட்சத்தில், விவாகரத்தாக பல வேளைகளில் முடிகிறது. விவாகரத்தின் போது, நீதிமன்றம் தலையிட்டு, அந்த விவாகரத்துக்குப் பின்னர், அந்தப் பெண் ஏழ்மையில் வாடாமலிருக்க வழிவகை செய்கிறது.

விவாகமே நடக்கவில்லை என்றால், நீதி மன்றம் என்ன செய்யும் ?

சரி விவாகமே நடக்காமல் இருவர் இணைந்து இருப்பது சரியானது என்றால், ஏன் விபச்சார தடைச் சட்டங்கள் இருக்கின்றன இந்தியாவில் ?

அராபியாவிலிருந்து ஆட்கள் வந்து ஏழைப்பெண்களை திருமணம் செய்துவிட்டு, பெண்களை விவாகரத்தும் செய்துவிட்டுப் போய்விடுகிறார்கள்; இது விபச்சாரம் செய்ய சட்டப்படியான முறையாக சில பகுதிகளில் உபயோகிக்கிறார்கள் என்ற ஒரு செய்தி வெகுகாலத்துக்கு முன்னர் வந்தது. அப்படிப்பட்ட ஏமாற்று வேலைக் கூட இந்த தீர்ப்புக்குப் பின்னர் வேண்டாமே ?

விபச்சார தடைச்சட்டத்தின் கீழ் இனிமேல் யாரையும் கைதுசெய்ய போலீஸ் எப்படிச் செல்லும் ? (விபச்சார தடைச்சட்டமே வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி வெகுகாலத்துக்கு முன்னால் திண்ணையில் ஒரு விவாதம் நடைபெற்றது பலருக்கு ஞாபகமிருக்கலாம்). பணம் கைமாறியது என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என்று வாதிடமுடியுமா ? சேர்ந்து வாழும் இருவரில் ஒருவரே சம்பாதித்தால், அதனை எப்படி எடுத்துக்கொள்வது ?

குடும்ப வன்முறையை காரணம் காட்டி ஒருவர் கணவன் மீது வழக்குத் தொடரலாம் என்று சட்டம் வரப்போகிறது. சேர்ந்து வாழும் அந்தப் பெண்ணின் கதி என்ன ? திருமணம் செய்யவில்லை. திருமணம் செய்யாமலேயே நாம் சேர்ந்து வாழலாம் என்று ஆண் ஆசை காட்டுகிறான். (இதுதான் சட்டபடியான விஷயமாயிற்றே) பெண்ணும் காதலுக்குக் கண்ணில்லை என்று பின்னாலேயே போகிறாள். அவன் அவளை அடிக்கும் போது, எந்த சட்டத்தின் கீழ் அந்தப் பெண்ணுக்கு குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் ?

குடும்ப வன்முறை தடுக்கும் சட்டமே நிறைவேறுமா என்பது எனக்குக் கேள்விக்குறி. சில சமயப்புத்தகங்கள், கணவன் மனைவியை அடிப்பதை நியாயப்படுத்தலாம். அதனை மேற்கோள் காட்டி, சிறுபான்மையினர் உரிமையில் பாஜக அரசு தலையிடுகிறது என்று சிறுபான்மையினரைச் சேர்ந்த ஆண்கள் கத்த ஆரம்பித்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

சமூகம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. மாறிக்கொண்டே இருக்கும் சமூகத்தின் பழைய சட்டங்களை தூக்கி எறியவும், அல்லது மாற்றவும், புதிய சட்டங்களை உருவாக்கவும் நமக்கு நாமே ஒரு ஒழுங்கை அமைத்துக் கொள்கிறோம். அது ஜனநாயகமாகவும், பாராளுமன்றமாகவும், அந்த பாராளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட சட்டங்களைப் புரிந்து, அதனை ஆதாரமாகக் கொண்டு நீதி தேடி வரும் மனிதர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைக்க நீதி மன்றங்களாகவும் விரிகிறது.

நீதி மன்றங்கள் புது சட்டங்களை எழுத முடியாது. அதனை பாராளுமன்றத்தில் இருக்கும் நமது பிரதிநிதிகள்தான் செய்ய வேண்டும். அந்த சட்டங்களைப் புரிந்து கொண்டு, நடைமுறையில் பிரயோகம் செய்வது மட்டுமே நீதி மன்றங்கள் செய்யும், செய்ய வேண்டும். அந்த நீதி மன்றங்கள் சொல்லும் கட்டளைகளை போலீஸ் நடைமுறைப்படுத்த வேண்டும். இதுவே நாம் வகுத்த ஒழுங்குமுறை.

சட்டங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருந்தால், அதனை நிவர்த்தி செய்ய வேண்டியதும் பாராளுமன்றத்தின் கடமைதான். சட்டங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருப்பின் அதனை சில நேரங்களில் நீதி மன்றங்கள் சுட்டிக்காட்டுகின்றன. எந்தச்சட்டத்தின் படி யார் நிர்வகிக்கப்படுவார்கள் என்பதையும் நம் பாராளுமன்றமே தீர்மானிக்கிறது. அதன்படி, இந்துக்களுக்கு தனி சிவில் சட்டமும், முஸ்லீம்களுக்கு தனி சிவில் சட்டமும், கிரிஸ்தவர்களுக்கு தனி சிவில் சட்டமும் நம்மால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய அரசியலமைப்புச்சட்டத்தை பொறுத்த மட்டில், குற்றச்சட்டங்கள் அனைவருக்கும் பொது. ஒரு கொலைக்கு தண்டனையோ, ஒருவர் செய்த திருட்டுக்குத் தண்டனையோ அவர் சார்ந்த மதம் சார்ந்து வழங்கப்படுவதில்லை. (அவரவருக்கு தனித்தனி குற்றவியல் சட்டங்கள் இருக்கக்கூடாது என்று சொல்லவில்லை. இருக்கலாம். சொல்லப்போனால், நம் அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம் உருவாக்க வேண்டும், அதனை உருவாக்க தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் முயலவேண்டும் என்பது ஒரு அறிவுரையாக சொல்லப்பட்டுள்ளது. 1950இல் எழுதப்பட்ட அறிவுரை, பாஜக ஆதரவு தெரிவிப்பதால், இன்று காலாவதி ஆகிவிட்டது என்றுதான் கொள்ளவேண்டும்)

சரி மீண்டும் குடும்பத்துக்கு வருவோம்.

கமலஹாசனின் மனைவியும், குழந்தைகளும், இவர்கள் விவாகரத்து செய்வதால் அன்றாடச் சாப்பாட்டுக்கு அல்லாடப்போவதில்லை. உண்மைதான். ஆகவே, அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக்கொண்டால் கூட, ஒரு வேளை கணவன் கைவிட்டுவிட்டால், அந்தக் குழந்தையை வைத்து காப்பாற்றும் வலிமை பெண்ணுக்கு உண்டு. இந்தத் திறன் மேல்தட்டு மக்களோடும், ஒரு சில வேளைகளில் மேல் நடுத்தர மக்களோடும் நின்று விடுகிறது. இவர்களுக்கு இந்த திருமண பந்தம் அனாவசியம் என்பதற்காக, இதனை இந்தியாவில் உள்ள எல்லோர் மேலும் திணிக்க முடியாது. அப்படி கமலஹாசன் போன்ற மேல்தட்டு மக்களின் தனிமனித உரிமைகளைப் பாதுகாப்பது முக்கியமென்றால், கீழ்தட்டு மக்களின் வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்ள தனிச்சட்டம் வேண்டும். ஒரு ஏழைப்பெண் குழந்தையோடு அநாதரவாக தெருவில் நிற்கப்போவதை பார்த்து நீதிமன்றம் கூட எதுவும் செய்யமுடியாத நிலையிலிருந்து அவளைக் காப்பாற்ற வேண்டும். இது ஜாதிக்கொரு நீதி, பணம் படைத்தவனுக்கு ஒரு நீதி, ஏழைக்கு இன்னொரு நீதி என்ற வகையில்தான் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். யாருக்கு இந்த விஷயத்தில் நீதி தேவையோ, அவர்களுக்காகத்தானே நான் வாதிட முடியும் ?

ஆகவே, ஒரு ஆணும் பெண்ணும் திருமணமின்றி இணைந்து வாழ்வது சட்டப்படியான குற்றமாக இருக்க வேண்டும். திருமணமின்றி இணைந்து வாழ்ந்து குழந்தை பெற்றால் அதுவும் சட்டப்படியான குற்றமாக ஆக்கப்படவேண்டும். அதுவே பெண்களுக்குப் பாதுகாப்பானது. இல்லையேல், இந்த உரிமையே ஒரு குடும்ப வன்முறையாக ஆகிவிடக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. நீதிமன்றத்தில் இந்த முறையீட்டை, ஒரு குடும்ப வன்முறை சட்டத்தில் இருப்பது போல, உறவினரால் மட்டுமே செய்யப்படக்கூடியதாக இருக்கவேண்டும்.

இது கமலஹாசனின் விஷயமோ, அல்லது செல்வந்த குடும்பத்தில் பிறந்த அந்த அலகாபாத் பெண்ணின் விஷயமோ அல்ல. இது துன்பப்படப்போகும் ஏராளமான கீழ்த்தட்டு, நடுத்தர வர்க்க குடும்பத்தின் பிரச்னை. அந்த குடும்பங்களில் பிறந்து, திரைப்படம் பார்த்து கனவு காணும் முதிர்ச்சியற்ற வயதுடைய இளம்பெண்களின் பிரச்னை.

**

Notes: 1:

The Human Resource Development Minister, Dr. Murli Manohar Joshi, has said that the Government hopes to bring in this year a new legislation to tackle the widespread problem of domestic violence against women. Several other legislations including Indecent Representation of Women Act, the Sati Act, the Immoral Traffic (Prevention) Act and the Dowry (Prohibition) Act will also be reviewed during the year, which is being celebrated as the Women ‘s Empowerment Year, he said.

Notes 2.

Domestic Violence Bill introduced in LS

New Delhi, March 8. (PTI): A Bill seeking to provide protection to victims of domestic violence, making the offence punishable with imprisonment up to one year, was introduced in Lok Sabha today.

The Protection from Domestic Violence Bill 2002 seeks to provide that any conduct of relative of the victim which subjects her to habitual assault or makes her life miserable or injures or harms, or forces her to lead an immoral life would constitute domestic violence.

Under the Bill, the Judicial Magistrate of the First Class or a Metropolitan Magistrate may take cognisance of the domestic violence and pass a protection order requiring the relative of the woman to refrain from committing such an act.

The Magistrate might even require as an interim and urgent measure from the relative of the woman to execute a bond, with or without sureties, for maintaining domestic peace.

The statement of objects and reasons of the Bill says the violation of the order would constitute an offence punishable with imprisonment up to one year or with fine or with both.

The Bill, which was introduced by Minister of State for Women and Child Development Sumitra Mahajan, also seeks to set up an institution of protection officer to help the victim of domestic violence in making application to the Magistrate and in availing of her other legal rights.

Notes 3.

Living together without marrying legal: HC

ALLAHABAD, MAY 27. 2001. In a landmark judgment, the Allahabad High Court has ruled that a man and a woman can live together without getting married if they wish. “This may be regarded as immoral by society but it is not illegal. There is a difference between law and morality, ‘ ‘ a Division Bench comprising Mr. Justice M. Katju and Mr. Justice R. B. Mishra observed last week while directing authorities to set the petitioner, Ms. Payal Sharma, free and allow her to go anywhere and live with anyone as per her wish.

The petitioner, a resident of Kannauj district in Uttar Pradesh, produced documentary evidence, including her high school certificate, to prove that she was 21-years-old and a major. On the basis of the evidence, the court directed the authorities to set her free. The court also directed the police to provide security to Ms. Sharma following perceived threat to her life as claimed by her in the petition.

The girl had moved the court praying that she be left on her own will after being forced to live in a Nari Niketan at Agra following her arrest along with Mr. Ramendra Singh, with whom she was living for some time.

The Agra police had arrested her and Mr. Singh on the basis of an FIR lodged by her father.

In the FIR, the girl ‘s father had alleged that Mr. Singh, who was already married, had kidnapped his daughter on October 30 last year. Police had produced the two before the Chief Judicial Magistrate who directed the girl to be sent to Nari Niketan and released Mr. Singh on bail.

– PTI

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்