கனவில் நிகழுகிற பயங்கர உலகம்

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

தீபச்செல்வன்



01.
எனது கனவுகள் ஏன்
பயங்கரமானவையாக
இருக்கின்றன?

முதலில் இரவு
பயங்கரமாக வருகிறது
மிக தாமதமாகவே
தூக்கம் வருகிறது
முழு தூக்கத்தையும்
பயங்கர கனவுகள்
விழுங்கி விடுகின்றன.

02
ஆற்றங்கரை குடிசைகளை
வெள்ளம்
அள்ளிப்போகிறது
எனது அம்மாவையும்
தங்கையையும்
எங்கள்
சமையல் பாத்திரங்களையும்
வெள்ளம்
வழித்தெடுத்துக்கொண்டிருக்கிறது.

03
நான் ஒரு மாட்டு வண்டியில்
எனது நகரத்திற்கு
போய்க்கொண்டிருக்கிறேன்
வழிநிறைய கிடந்த
சோதனைசாவடி ஒன்றின்
சுவர்களில் மோதி
நான் பயணித்த வண்டி
சிதைகிறது
இழுத்து வந்த எருதுகள்
செத்து கிடக்கின்றன
வேறு இரண்டு எருதுகள்
தமது கொம்புகளால்
என் வயிற்றை கிழிக்கின்றன.

04
ஆறுகள் சிதைந்து கிடக்க
மரங்கள்
அழிக்கப்பட்டிருக்க
எனதூரில்
எல்லோரும் கூடியிருக்கிறார்கள்
சவப்பெட்டிகளும்
பாடைகளும்
நிறைந்து கிடக்கின்றன
வானத்தை இருள்
சூழ்ந்திருக்க
அவர்கள் கட்டி
அழுதபடியிருக்கிறார்கள்.

05
எனது கால்கள் உடைந்து கிடக்க
பாழடைந்து வரும்
நகரத்தில் உறைந்து விடுகிறேன்
வெளுறிய வீதியில்
செல்ல முற்பட்ட
என் மாட்டு வண்டி
சாம்பலாய் கிடக்கிறது.

06
பகல்களில் தப்பியிருந்தேன்
மெல்ல அச்ச மூட்டியபடி
பயங்கர இரவு வருகிறது
மெல்ல மெல்ல அச்ச மூட்டியபடி
பயங்கர தூக்கமும் வருகிறது.

மிக வேகமாவே
அச்சமூட்டியபடி
பயங்கர கனவுகள் வந்து
தீவிரமாகின்றன
நான் திடுக்கிடுகிறேன்.

எனது கனவுகள்
ஏன் பயங்கரமானவையாகவே
தொடர்கின்றன.. ?


deebachelvan@gmail.com

Series Navigation

தீபச்செல்வன்

தீபச்செல்வன்