கனடாவில் கால்சட்டை வாங்குவது

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

அ.முத்துலிங்கம்


சமீபத்தில் ஒரு தகவலைப் படித்தேன். காலம் கடந்துபோய் இந்த தகவல் எனக்கு கிடைத்திருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ப. ஜீவானந்தம் பற்றியது. இந்த பெரியவரிடம் காக்கி கலரில் நாலு கட்டை கால்சட்டைகள் இருக்குமாம். இதையே அவர் மாறி மாறி அணிவார். பயணத்துக்கு வசதியானது. பெட்டி நிறைய உடுப்புகள் அடுக்கத் தேவையில்லை. ரயிலிலோ, பஸ்சிலோ தொற்றி ஏறிவிடலாம். முதல் நாள் இரவு தோய்த்தால் அடுத்த நாள் காலை காய்ந்துவிடும். பெட்டி போடும் அவசியமே இல்லை. மிகவும் செளகரியமான இந்த ஏற்பாடுகளை வாழ்நாள் முழுக்க அவர் கடைப்பிடித்தாராம்.

ஆனால் அவருடைய சீடர்கள் இந்த அருமையான வழியை பின்பற்றவில்லை. எனக்கும் இது முன்பே தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் இந்த உத்தியை பின்பற்றி பெரும் பணச்செலவையும், நேரச் செலவையும், உடல் செலவையும் என்னால் தவிர்த்திருக்க முடியும்.

கடைகளில் அலைந்து கால் சட்டை வாங்கும் தண்டனை எனக்கு சிறுவயதில் ஏற்பட்டது கிடையாது. எனக்கு மேலே நாலு அண்ணன்மார்கள். மூத்தவர் போட்டது அவருக்கு அளவு குறைந்ததும் இளையவருக்கு கிடைக்கும். அவருக்கும் இறுக்கத் தொடங்கியவுடன் அடுத்தவருக்கு வரும். இப்படியாக படிப்படியாக இறங்கி என்னிடம் வந்து சேரும். அப்பவும் அது உறுதியாகவும், பொக்கட்டுகளில் ஓட்டை விழாமலும், இடுப்பு சைஸ் கொஞ்சம் பெரிசாகவும் இருக்கும். இடது கையாலோ, வலது கையாலோ சட்டை கீழே விழாமல் இழுத்து பாதுகாத்தபடி நான் என் வேலைகளை செய்யப் பழகியிருந்தேன்.

அந்த நாட்களில், தீபாவளி சமீபிக்கும் போது இனிமேல் இல்லையென்ற ஓர் ஏழை தையல்காரன் எங்கள் வீட்டுக்கு கால்சட்டை அளவெடுக்க வருவான். நாங்கள் ஏழு பேர் வரிசையாக அளவு கொடுக்க நிற்போம். வாழ்நாளில் ஒருமுறை சரியான அளவில், நாரியில் இறுக்கிப் பிடித்து தானாகவே நிற்கும் கால்சட்டை போடலாம் என்பது ஆசை. ஆனால் ஐயாவுக்கு நாங்கள் மனதிலே நினைப்பது எப்படியோ தெரிந்துவிடும். டெய்லரிடம் ‘ஒரு இரண்டு இன்ச் விட்டுத் தையப்பா. இவங்க காலம்பற ஒரு சைஸ், இரவு ஒரு சைஸ் ‘ என்று சொல்லிவிடுவார். அதாவது நாங்கள் அவ்வளவு வேகமாக வளர்கிறோமாம். எப்படியோ பெருத்து டெய்லர் உத்தேசித்த சைஸை பிடித்துவிடுவோம் என்பதில் ஐயாவுக்கு நம்பிக்கை.

தீபாவளிக்கு முதல் நாள் இரவு என்னுடைய இருதயம் வெளியே வரத் துடிப்பதுபோல வேகமாக அடிக்கும். அன்று தையல்காரன் தைத்த உடுப்புகளைக் கொண்டுவரும் தினம். இவன் தொழில்நுட்பத்தின் உச்சத்தை தொட்டுவிட்டவன் என்று சொல்லமுடியாது. இவன் எடுத்து வரும் கால்சட்டையைக்கூட நாங்கள் கட்டி முடிந்துதான் போடுவோம். கடைசிவரை அதன் பருமனையோ, நீளத்தையோ எங்களால் நிரப்ப முடியாது. அந்த சைஸை குறிவைத்து நாங்கள் பெருக்கு முன்பாக கால்சட்டை கிழிந்துபோய்விடும். இப்படி கால்சட்டை அளவுகள் நெடுங்காலமாக எனக்கு பெரும் பிரச்சினையாகவே இருந்திருக்கின்றன.

கனடா வந்தபோது இவை தீர்ந்துவிடும் என்று நம்பினேன். மாறாக இன்னும் பெரிதான பிரச்சினைகள் கிளம்பின. பலர் எனக்கு தந்த எச்சரிக்கைகளில் முதன்மையானது பால் சாப்பிடுமுன் கவனமாக இருக்கவேண்டும் என்பது. எங்கள் ஊர் மாடுகளில் கறக்கும் பால் தண்ணீராக இருக்கும். பால்காரன் வேறு எங்கள் ஆரோக்கியத்தை உத்தேசித்து பாலை இன்னும் மெல்லிசாக ஆக்கிவிடுவான்.

இங்கு கறவை மாடுகள் கட்டிப் பாலையே உற்பத்தி செய்யும். கொழுப்பு தளும்பும். இந்தப் பால் உடம்பில் சேர்ந்ததும் உங்கள் சிங்கார நாரி அளவு சீமைக்கிளுவை போல கொழுத்துவிடும். அதனால் மாற்றி மாற்றி கால்சட்டை வாங்குவதற்காக கடைகளுக்கு செல்ல நேரிடும்.

கனடாவின் கடைகளில் உங்களுக்கு நீண்ட கால்சட்டை வாங்க வேண்டுமென்றால் அதற்கு தனியாக அரைநாள் ஒதுக்க வேண்டும். காரணம் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி காற்சட்டைகளைப் போட்டு அளவு பார்க்க வேண்டும். அது பெரிய நேரத்தை வீணாக்கும் வேலை.

நாரி சைஸ் பொருந்தினால் கால் நீளம் சரி வராது. கால் நீளம் சரி என்றால் நாரி சைஸ் சரிவராது. கனடியர்களையே மனதில் வைத்து இவை உருவாக்கப் படுவதால் உங்கள் உடம்பு அளவுகள் வேகமாக அகப்படுவதில்லை.

அபூர்வமாக இரண்டு அளவுகளும் அமைந்து வந்தால், கால் சட்டையின் நிறம் ஒத்துக்கொள்ளாது. அல்லது ஸ்டைல் சரியாக இருக்காது. முழங்காலில், கணுக்காலில், பின்னுக்கு, பக்கத்தில் என்று ஒன்பது பக்கெட்டுகள் வைத்த கால்சட்டையாக இருக்கும். ஒன்பது பக்கட்டுகளுக்கும் சாமான்கள் சேகரித்த பின்னரே அப்படியான ஒரு கால்சட்டையை நீங்கள் தேர்வு செய்யலாம்.

இதில் இன்னொரு சங்கடமும் இருக்கிறது. கால் சட்டை இடுப்பு அளவு ஒற்றைப்படையாக இருக்காது. உங்கள் இடை அளவு 31 அங்குலமாகவோ, 33 அங்குலமாகவோ இருந்தால் நீங்கள் துரதிர்ஷ்டசாலி. உங்கள் நாரியளவு இரட்டைப்படையாக கூடவேண்டும் என்று கனடிய அரசாங்கம் எதிர்பார்க்கிறது. 30 இன்ச், 32 இன்ச், 34 இன்ச் அப்படி நீங்கள் வளரவேண்டும் என்பது சட்டம். இது எப்படி கனடியர்களுக்கு மட்டும் சாத்தியமாகிறதோ எனக்கு தெரியாது.

இந்த நிலவரத்தில் என்னுடைய சைஸ் 33 1/2. அதாவது 33 சைஸுக்கே நான் இந்தப்பாடு படவேண்டி இருக்கிறது. இந்தக் கோலத்தில் இன்னும் அரை அங்குலத்துக்கு எங்கே போவது. அது எப்படி அனைத்து கனடியர்களும் தங்கள் நாரிகளை இரண்டு இரண்டு இஞ்சுகளாக வளர்க்கிறார்கள். இந்த மர்மத்தை நான் எப்படியும் விடுவிக்கவேண்டும்.

இரண்டு பக்கத்திலும் நிறைய கடைகள் இருந்தன. சில கடைகள் ஆண்களுக்கு மட்டுமேயானவை. நல்ல ஒரு கடவுளுக்கு வாகனமாகும் தகுதி படைத்த மூஸ் என்னும் பெரு விலங்கு கடை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அங்கு ஆடைகளை விற்பதற்கு முறையாக சிங்காரம் செய்த, தங்கள் பெயர்களை மார்பிலே அணிந்த, இளம் பெண்கள் ஆர்வமாக இருந்தனர். உலகத்தில் உள்ள அத்தனை கலர்களிலும், அத்தனை டிசைன்களிலும், அத்தனை நீளங்களிலும், அகலங்களிலும், பளபளக்கும் கால்சட்டைகள் தங்கள் தங்களுக்கு விதித்த கொழுவிகளில் தொங்கியபடி காத்துக்கிடந்தன. அவற்றில் ஒன்றுகூட என் இடைக்கோ, உயரத்துக்கோ, ரசனைக்கோ ஏற்றமாதிரி அகப்படவில்லை.

அந்த விற்பனைப் பெண்ணை எனக்கு பிடித்துக் கொண்டது. கறுப்பு மஞ்சள் சீருடை அணிந்திருந்தாள். அநாதி காலம் தொட்டு உலகத்து கணிதவியலாளர்கள் வட்டத்தில் சதுரம் செய்யவோ, சதுரத்தில் வட்டம் செய்யவோ முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெண் அதை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு தன்னுடைய வட்டமான முகத்திலே பல சதுரங்களை அடக்கி வைத்திருந்தாள். சதுரமான நெற்றி, சதுரமான தாடை, சதுரமான கன்னங்கள். மூச்சு காற்று தொடும் நெருக்கத்தில், ஏதோ கூச்சப்படவைக்கும் விவகாரத்துக்கு அழைப்பதுபோன்ற குரலில் ‘உங்களுக்கு நான் உதவி செய்யலாமா ? ‘ என்றாள். இவள் ஒரு கிழக்கு ஐரோப்பிய நாட்டில் இருந்து வந்தவளாக இருக்கலாம். வாரத்துக்கு பத்தாயிரம் ரூபா சம்பளம் வாங்கும் தேநீர் ருசிப்பாளர்போல வார்த்தைகளை நாக்கிலே வைத்து உருட்டி அனுப்பினாள். அங்கே அடுக்கியிருந்த அத்தனை கால்சட்டைகளையும் ஒன்று மாறி ஒன்று எடுத்து எனக்கு முன்னால் விரித்து போட்டபடியே இருந்தாள்.

வாசனைத்திரவியம் விற்கும் பகுதியில் இவள் இதற்கு முன் வேலை செய்தவளாக இருக்கவேண்டும். என்னை நோக்கி வரமுன்னரும், வந்த பின்னரும், என்னைக் கடந்து போன பிறகும் ஓர் அபூர்வமான, இதற்கு முன் அனுபவித்திராத நறுமணம் அங்கே நிறைந்தது. இவள் உண்டாக்கிய அந்த நறுமணக் கூடாரத்தில் நானும் இவளும் மட்டுமே இருந்தோம். இடது கையில் நாலு சட்டைகளும், வலது கையில் நாலு சட்டைகளும் ஏந்தியபடி ஒரு பறவை செட்டை விரித்து நடப்பதுபோல வந்தாள். ஒரு பரிவாரம் பின்னே தொடரும் அரசனைப்போல நான் நடந்து சென்று உடுப்புகள் அளவு பார்க்கும் அறைக்குள் நுழைந்துகொண்டேன். அங்கே ஏற்கனவே நிலத்தில் இன்னொருவர் சரிபார்த்து விட்டுப்போன ஆடைகளை அகற்றி அந்த இடத்தில் என்னை நிற்க வைத்தாள். பிறகு கதவை சாத்திக்கொண்டு போனாள். கால்சட்டையை ஒவ்வொன்றாக மாட்டிப் பார்த்தேன். ஒன்றுமே சரிவரவில்லை. 33 1/2 இடுப்புக்கு கனடாவில் உடுப்பு செய்ய மாட்டார்கள்.

இரண்டு கிழமையாக அந்தப் பெண்ணுடைய முகம் என்னை என்னவோ செய்தது. ஒரு மணித்தியால உழைப்பு வீணாகப் போனதில் அவளுக்கு பெரிய வருத்தம். முகம் சுருங்கிப் போனது. இந்த துக்கத்தில் என்னுடைய நாரி இன்னும் கொஞ்சம் பெருத்துவிட்டது. கட்டாயம் 34 இன்ச் இருக்கும். இனி பிரச்சினையே கிடையாது. மறுபடியும் ஒரு முயற்சி செய்யலாம் என்று முடிவு செய்தேன்.

நான் திரும்பவும் மூஸ் காவல் நின்ற கடைக்கு போனபோது கால்சட்டையை எப்படியும் வாங்கிவிடவேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தேன். அந்தப் பெண் அதே இடத்தில் அமர்ந்திருந்தாள். என்னைக் கண்டதும் எழும்பி வந்தாள். கறுப்பு மஞ்சள் சீருடை. ஆனால் முகத்தைப் பார்த்ததும் அவள் வேறு பெண் என்பது தெரிந்தது. அவள் நடையின் அங்க அசைவுகளும் வித்தியாசமாக இருந்தன. அவளைச் சுற்றி ஒரு நறுமணக் கூடாரம் உண்டாகவில்லை. அவள் வார்த்தைகளை நாவிலே வைத்து ருசி பார்த்து உருட்டி விடவும் இல்லை. தங்க நிறம் பூசிய அதரங்களை அசைத்து ‘உங்களுக்கு நான் உதவி செய்யலாமா ? ‘ என்றாள். அந்த வார்த்தைகள் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தன.

முற்றும்

amuttu@rogers.com

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்