கந்தர்வனும் கடைசிக் கவிதையும்

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

எஸ். பாபு


—-

கவிஞர் மீரா, சு. சமுத்திரம், கோபிகிருஷ்ணன், கந்தர்வன் என மின்னிக்கொண்டிருந்த தமிழ் எழுத்தாளர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்துவிட, இருண்டு கொண்டு வருகிறது தமிழ் இலக்கிய வானம். கடந்த 22.4.2004 அன்று எழுத்தாளர் கந்தர்வன் மாரடைப்பால் காலமானார். சென்னையில் இருந்து அவரது உடல் அவரது ஊரான புதுக்கோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. மயானத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுதாளார் சங்கத்தின் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.

எனது உறவினராக (சகோதரின் மாமனார்) மட்டுமல்லாமல், எனக்கு இலக்கிய வழிகாட்டியாக, தந்தையைப்போல் பாசமிக்கவராக, இனிய நண்பராக விளங்கிய அவரைப் பற்றிய குறிப்புகளும் சில

நினைவுகளும்…

*

மூன்று கவிதை நூல்கள், சமீபத்தில் வெளிவந்த அவற்றின் முழுத் தொகுப்பு, ஐந்து சிறுகதை தொகுப்பு நூல்கள், ஏராளமான விமர்சன கட்டுரைகள், நூல்களுக்கான அணிந்துரைகள் என்று தனது கடைசி காலம் வரை எழுதிக்

குவித்தவர் கந்தர்வன். இவை தவிர இலக்கிய கூட்டங்களிலும் ஏராளமாய் உரையாற்றியிருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் பொறுப்புகளில் இருந்து அச்சங்கத்தை வழிநடத்தியவர். தொழிற்சங்க போராட்டங்களில் பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளுக்கு ஆளானவர். சாமானியர்களின் எழுத்தாளர் என்று

அறியப்பட்டவர். அவரது பல சிறுகதைகள் ஆனந்த விகடனில் வெளிவந்தவை. இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற இவரது ‘மைதானத்து மரங்கள்’ என்ற சிறுகதை ப்ளஸ் டூ பாடதிட்டத்தில் உள்ளது. இவரது ‘சாசனம்’ சிறுகதை இயக்குனர் மகேந்திரனின் இயக்கத்தில் திரைப்படமாக உருவானது.

*

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதிராஜாவின் திரைப்படங்களப் பற்றி ஆய்வரங்கம் நடத்தப்பட்டது. அதில் கந்தர்வன் பேசியபோது குறிப்பிட்டது…

“நாட்டின் முதல் குடிமகன் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் நாட்டின் கடைசி குடிமகனைப் பற்றி யாருக்கும் தெரியுமா ? யார் அவன் ? தாழ்ந்த சாதி என்று நாம் ஒதுக்கி வைத்திருக்கும் சேரியில் வாழ்பவனா ? எல்லோரது அழுக்குத் துணிகளையும் துவைக்கும் வண்ணானா ? அவனுக்கும் கீழானவனாக ஒரு காலத்தில் கருதப்பட்ட புதர் வண்ணானா ? (புதர் வண்ணான் என்பவன், சேரி ஜனங்களின் துணிகளைத் துவைப்பவன். அவன் யார் கண்ணிலும் படக்கூடாது. சாதாரண வண்ணான்கள் துவைக்கும் குளத்தில் கூட அதிகம் பயன்படுத்தப்படாத பகுதியாகிய ஒரு புதர் ஓரம் வைத்துதான் அவன் துணி துவைக்க வேண்டும்). ஆக புதர் வண்ணான் தான் நாட்டின் கடைசி குடிமகனா ? அவனும் இல்லை. பின்னர் யார் ? எப்போதும் வாயில் எச்சில் வடித்துக்கொண்டு, சற்றே மனநிலை

பிறழ்ந்தவன் போல, சிறுவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ளாகி, யார் வேண்டுமானாலும் அவனை வேலை வாங்கலாம், கேலி பேசலாம், அடிக்கக்கூட செய்யலாம் என்பது மாதிரியான ஒரு கேரக்டர் எல்லா

கிராமங்களிலும் உண்டு. அவன் தான் நாட்டின் கடைசி குடிமகன். அப்படிப்பட்ட கடைசி குடிமகனை (பதினாறு வயதினிலே சப்பாணி) ஹீரோவாக்கிக் காட்டிய சிறப்பு பாரதிராஜாவை மட்டுமே சேரும்.”

*

இன்தாம்.காம் என்ற இணைய இதழில் வெளிவந்த கந்தர்வனின் பேட்டியிலிருந்து சில கேள்விகளும் பதில்களும்…

கேள்வி: நீங்கள் ஒரு பக்கம் சாய்ந்து எழுதுவதாக ஒரு எழுத்தாளர் கூறியுள்ளாரே ?

கந்தர்வன்: எந்த நல்ல நீதிபதியும் ஒரு பக்கம் சாய்ந்துதான் தீர்ப்பு சொல்ல வேண்டியிருக்கிறது. எழுத்தாளான் நீதிபதிக்கும் மேலானவன். அந்த வகையில் நான் ஒரு பக்கம் சாய்ந்து சரியாகத்தான் எழுதுகிறேன்.

கேள்வி: அரசு விருதுகள் எந்த அளவுக்கு ஒரு படைப்பாளியை வளப்படுத்தும் என்று நினைக்கிறீர்கள் ?

கந்தர்வன்: சிறந்த எழுதாளர்களுக்கு அதற்குரிய பீடங்களும் நிறுவனங்களும் பரிசுகள் விருதுகள் அளிக்க கடமைப்பட்டவை. ஆனாலும் ஒன்றை கவனிக்க வேண்டும். புதுமைப்பித்தனும் பாரதியாரும் எந்த விருதை வாங்கிக்கொண்டு இவ்வளவும் செய்தார்கள் ? தமிழக அரசைப் பொறுத்தவரையில் அது இன்னும் நவீன இலக்கியத்தின் பக்கமே வரவில்லை. பாரதிதாசனுக்குப் பிறகு என்ன நடந்திருக்கிறது என்பதே அதற்குத் தெரியவில்லை. நவீன இலக்கியங்களை வளர்ப்பதிலும் எழுத்தாளார்களை உற்சாகப்படுத்துவதிலும் அரசுக்கு ஒரு கடமை உண்டு.

*

கந்தர்வன் எழுதிய ஒரு கவிதையிலிருந்து சில வரிகள்…

“வீட்டு வாசலில்

சதா பூ உதிர்த்துக் கொண்டிருக்கும்

பன்னீர் மரம்.

காலையில் எழுந்ததும்

அம்மா அவசர அவசரமாக

வாசல் பெருக்குவாள்.

அவளைவிட அழகான கோலத்தை

யார் போட்டாலும்

அம்மாவுக்குப் பிடிக்காது.”

*

க.வை. பழனிச்சாமி என்ற எழுத்தாளர் எழுதிய ‘மீண்டும் ஆதியாகி’ என்ற நாவல் வெளியீட்டு விழா

சேலத்தில் நடந்தபோது அவ்விழாவில் கந்தர்வன் பேசியதிலிருந்து ஒரு துளி…

“தாய்நாடு, தாய்மொழி, பூமித்தாய் என்றெல்லாம் பெண்ணுக்கு ஏன் இத்தனை சிறப்பு ? ஏனென்றால் ஒரு ஆண் பிறக்கும் போதும் அருகில் இருப்பவள் பெண். ஒரு ஆண் இறந்த பின்பும் அருகில் இருப்பவள் பெண். குழந்தை

பிறக்கும்போது ஆண்களை அருகில் அனுமதிக்க மாட்டார்கள். கிராமமாக இருந்தால் பெண்கள் சேலையை நாலு பக்கமும் பிடித்துக் கொண்டு மறைத்துக் கொள்வார்கள். ஆக, ஒரு ஆண் பிறக்கும்போது அருகில் இருப்பவர்கள் பெண்கள் தான். இழவு நடந்த வீட்டில் பிணத்தின் அருகில் அமர்ந்து அழுது கொண்டிருப்பவர்கள் பெண்கள் தான். இஷ்டமில்லாதபோதும் கூட அழுதே தீரவேண்டும். சற்றே சோர்ந்து ஓயும் வேளையில் புதிதாக யாராவது அப்போதுதான் வெளியூரிலிருந்து வந்து சேர்வார்கள். நிறுத்தியிருந்த அழுகையை புதிதாய் தொடங்கவேண்டும். அதுவும் உறவின் முறையைச் சொல்லி அழ வேண்டும். இறந்தவரின் மகன் வந்தால் ‘உன்னை வம்பாடுபட்டு படிக்கவச்ச உங்க அப்பாரு கடைசியா உம்முகத்தைக்கூட பாக்காம போயிட்டாரே…’

இறந்தவரின் மகள் வந்தால் ‘கடன உடன வாங்கி கட்டிக் குடுத்து உன்னை கரையேத்தின உங்க அப்பாரு உன்னை காணாம போயிட்டாரே…’ இழவு நடந்த வீடுகளில் ஆண்களின் நிலைமை அப்படியில்லை. இரண்டு நிமிடம்

பிணத்தினருகில் நின்றுவிட்டு வெளியில் பெஞ்சில் உட்கார்ந்து அரசியல் பேசலாம். ‘கடைசி மக மெட்ராசுல இருந்து வரணுமே.. அப்படான்னா காலையில தான் எடுப்பாக..’ என்று ஓரமாக சாய்ந்து தூங்கக் கூடச் செய்யலாம். டா குடிக்க எழுந்து போகலாம். அல்லது வந்ததற்கு தலையைக் காட்டிவிட்டோமே என்று டா குடிக்கப் போகிற சாக்கில் அப்படியே பஸ் ஏறி போய்விடவும் செய்யலாம். ஆக, ஒரு ஆண் இறந்த பிறகும் அருகில் இருப்பவர்கள் பெண்கள் தான்.”

*

ஆனந்தவிகடன் பவழ விழா போட்டிகளில் அவரது கதை முத்திரைக் கதையாக வெளிவந்த போது, அச்சமயத்தில் எனது இரண்டு கவிதைகள் முத்திரைக் கவிதைகளாக வெளியிடப்பட்டு பரிசு பெற்றிருந்தன. “ஒரு எழுத்தாளனாக அறியப்பட்ட எனது கதை பரிசு பெறுவதைவிட புதிதாக எழுதத் தொடங்கியிருக்கும் உங்கள்

கவிதை அதுவும் இரண்டு கவிதை பரிசு பெற்றிருப்பதுதான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். சிறந்த கவிஞராக வருவீர்கள்” என்று என்னை வாழ்த்தினார்.

*

தற்போது திரைப்பட பாடலாசிரியராக இருக்கும் நா. முத்துகுமாரின் இரண்டாவது கவிதை நூலான ‘நியூட்டனின் மூன்றாவது விதி’ நூலுக்கு கந்தர்வன் முன்னுரை எழுதியிருந்தார். அதிலிருந்து சில வரிகள்…

“நா. முத்துகுமாரின் ‘பட்டாம்பூச்சி விற்பவன்’ என்ற முதல் தொகுப்பை படித்தேன். தன்னுரையில் கவிஞர் இப்படிச் சொல்கிறார்: ‘ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து கவிதைப் புஸ்தகம் போட்டேன். தா….ளி, விசிட்டிங் கார்டு மாதிரி ஓசியில குடுக்க வேண்டியிருக்கு’. முத்துக்குமாரின் இந்த வரியைப் படித்ததும் அவருக்கு உடனடியாக ஐம்பது ரூபாய் மணியாடர் அனுப்பினேன்”

*

கிளி புறா போன்ற பறவைகளையும், நாய் பூனை போன்ற பிராணிகளையும் வளர்க்கிறோம்; ஆனால் ஆடு மற்றும் கோழியை அடித்துச் சாப்பிடுகிறோம் என்ற கருத்து வரும்படியாக நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது இது சம்பந்தமாக ஒரு நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தார்:

“ஒரு தீபாவளி நாளன்று இன்னும் விடிந்திராத அதிகாலை நான்கு மணிக்கு மட்டன் வாங்க வழக்கமாகச் செல்லும் பாய் கடைக்குப் போனேன். கறி வாங்குவதற்கு க்யூ வரிசை இருந்தது. நானும் சேர்ந்து கொண்டேன். சில ஆடுகள் தோலுரிந்து தொங்கிக் கொண்டிருக்க அவரவர் கேட்ட கறியை பாய் அரிந்து கொடுத்துக் கொண்டிருந்தார். சாலையின் மறுபுறம் இருட்டில் சில ஆடுகள் கட்டிப்போடப்பட்டிருந்தன. அவை மரண ஓலமிட்டுக் கொண்டிருந்தன. வெட்டப்பட்ட ஆட்டுக்கறி தீர்ந்து போனதும், புதிதாய் ஒரு ஆட்டை வெட்டுவதற்காக எல்லோரையும் கொஞ்சம் பொறுமை காக்கச் சொல்லிவிட்டு பாய் சாலையை கடந்து சென்றார். அப்போது சாலையில் அதிவேகமாய் ஒரு லாரி வந்தது. வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் பலர் ஏக

குரலில் ‘பாய்…பாத்து..பாத்து..’ என்று சத்தமிட்டனர். நான் நினைத்துக் கொண்டேன். இவர்கள் பாய் என்ற அந்த மனிதர் மீது இருக்கும் பாசத்தினாலா அப்படிச் சொல்கிறார்கள் ? இல்லை.

லாரியில் அடிபட்டு அவர் போய்ச் சேர்ந்துவிட்டால் தீபாவளியும் அதுவுமாய் கறி கிடைக்காமல் போய்விடுமே என்பதால் தான்..”

*

கந்தர்வன் கடைசியாய் எழுதிய கவிதை:

தூக்கம்

—-

அதிகாலை எழுந்து வாசல் வந்தால்

ஈரக் குறுமணல் சித்திரம் வரைந்து

தெரு வற்றிய றாய்க் கிடக்கும்

மழையா பெய்தது ராத்திரி என

வாயசையும் மெல்ல

கொடு வாயோடிய முகத்தில்

கண்களைக் கசக்கி பாயைச் சுருட்டையில்

மதுரைச் சித்தியின் குரல்

பட்டாசாலையில் சங்கீதமாய்க் கேட்கும்

சித்தியா வந்தது ராத்திரி என

வாயசையும் மெல்ல

தொழுவத்தில் அம்மா

வாளியும் வைக்கோலுமாய்த் திரியும்

அப்பா சிரித்த முகமாய்

ஓலைப் பெட்டியில் இளங்கொடி சேர்ப்பார்

லெச்சுமி கன்னா போட்டுச்சு என

வாயசையும் மெல்ல

சுடலை சாம்பல் பூசி உடுக்கையடித்து

குடுகுடுப்பைக்காரன் ங்காரமாய் வந்து

தெருவை நடுங்க வைத்துப் போனானென

பெரியம்மா பாதி வாய் திறந்து

பயந்தபடி சொல்லும்

குடுகுடுப்பையா வந்தான் ராத்திரி என

வாயசையும் மெல்ல

அடிக்கடி தெருவிலும் ஊருக்குள்ளும்

விடிகாலைப் பொழுதுகளில்

வீட்டு வாசல்கள் முன்

சங்கும் சேகண்டியும் கேட்கும்

சட்டடித் தீயும் பச்சை மூங்கிலும் தெரியும்

ராத்திரி எப்ப நடந்ததென

குடம் உடைக்கும் வரை

கேட்டுத் திரியும் கூட்டம்.

(தீம்தரிகிட இதழில் வெளிவந்த கவிதை)

நாம் தூங்கும்போது நமக்குத் தெரியாமல் எத்தனையோ விஷயங்கள் நடந்து விடுகின்றன. நாம் அறியாத சமயங்களில் என்னென்னவோ நிகழ்ந்துவிடுகின்றன. கந்தர்வனுக்கு தான் அறியாத கணத்தில் மாரடைப்பு என்னும் கொலை வாளேந்தி வந்த சேர்ந்த மரணத்தைப் போல.

எஸ். பாபு

agribabu@rediffmail.com

Babu Subramanian

Postdoc

Department of Agriculture, Food and Nutritional Science,

410, Agriculture / Forestry Centre,

University of Alberta,

Edmonton T6G 2P5

Alberta, CANADA.

Office phone: 780-492-1778

Home phone: 780-432-6530

Series Navigation

எஸ். பாபு

எஸ். பாபு