கதி கூடின் கதி கூடும் காலமே! அ ‘கதி ‘க் காலமே!

This entry is part [part not set] of 25 in the series 20020106_Issue

வ.ந.கிாிதரன்


காலத்தின் விரைவு சிந்தனையை
நெருடும். அன்று அவ்வளவு மெதுவாகச்
சென்ற காலமாயிது!
பாடசாலை விட்டு வரும் வழியில்
எஞ்சினியர் வீட்டு வளவில் திருட்டுத் தனமாக
‘விலாட் ‘மாம்பழம் பறித்துண்ட போது,
வயற்புறக் குளத்தில் விரால்
பிடிக்க அலைந்த போது,
முருங்கையில் மரங்கொத்தி கண்டு
முதற் கதை படைத்த போது,
உடும்பு தேடி ‘ஜிம்மியுடன் ‘
காடுமேடென்று ஊர்ந்த போது
எத்துணை மெதுவாகச் சென்றதிந்தக்
காலம்.

‘டியூசன் ‘ முடிந்து அவள் கடைக்கண்
பார்வைக்காய் வீதிக் கோடியில்
காத்து நின்ற போது கூட
இவ்வளவு விரைவாகச் செல்லவில்லையே
இந்தக் காலம்.

பின்னொரு நாள் நடுநிசி நிலவே
துணையாக நண்பருடன்
பொருள்முடல் வாதம் பற்றி
வாதம் புாிந்த போது கூட
காலம் இவ்வளவு கடிதாகச்
சென்றதாயென்ன ? அன்று
சிறைப்பிடிக்கப் பட்ட ஒவ்வொரு கணமும்
பதியப் பட்ட உருவக் கோப்புகளாகி
எந்தன் நிலையான நினைவகத்தில்
இன்னுமிருக்குமளவிற்கு
எத்துணை மெதுவாகச் சென்றதிந்தக்
காலம்.

ஆனால்..இன்று.. ?

காலமே! உன் கடுகதிப் பயணத்தின்
காரணம் யாதோ ?

வேகம் கூடுமெனின், சார்பு நிலையில்
உன் வேகம் கூடக் குறைந்து விடுமென்று
தத்துவம் சொல்லிடுதே. ஆனால் நாடற்றவிந்த
அகதி வாழ்வின் வேகம் கூடியதன்றோ ?யார் சொன்னது
குறைந்ததென்று ? கடுகதியாய் விரையுமிவ்
வாழ்வில் காலமே நீயுமேன் கடுகதியில்
விரைகின்றாய் ?அன்று ஆடி அசைந்து
ஆறுதலாகச் சென்றவென் வாழ்வில் நீயுமேன்
ஆறுதலாகவாடிச் சென்றாய் ?காலமே!
கதி கூடின் காலந்தனின் கதி
குறையுமென்ற ஐன்ஸ்டைனின்
கூற்றும் பொய்யோ ?என்
கதி கூடின் கதி கூடும்

காலமே சொல். ‘அ ‘கதி ‘யிருப்பில்
கதியிருப்பதால் கதிகூடும் உன்னைப்
போல் நானுமொரு அ ‘கதி ‘யே! வெளிகளிற்குள்
திக்கிழந்ததொரு அகதி நான்.

அதனாலென் கதியும் உன் கதியாச்சு.

கதி கூடிப் போச்சு. பாவம். ஐன்ஸ்டன். அவன்
கதி இவ்விதமாச்சே! கதி கூடின் ‘காலம் ‘
கதி குறையுமென்ற மூடனவன்
காலத்தின் கோலம் முற்றுமறியாத
யானை பார்த்த குருடன் ‘
என்கின்றாயா காலமே! காலமே!
இன்று நான் உந்தன்
இருப்பறிந்தேன். உந்தன் கதியறிந்தேன்.

‘கதி ‘யற்ற அ ‘கதி ‘க்குக் ‘கதி ‘யற்ற
காலமும் துணையென்றுணர்ந்தேன்.
காலமே! போற்றி! போற்றி!

Series Navigation