கண்ணீர்

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


அது கடற்கரையை ஒட்டிய விசாலமான பெருஞ்சாலை. இருபக்கமும் குட்டையும் நெட்டையுமாய் சற்றே மங்கலான பச்சை நிறத்தில் அடர்த்தியில்லாத புதர்கள். அரிதான மனித நடமாட்டம். வேகமாகச் செல்ல விரும்பும் வாகனங்களுக்கு வாய்ப்பான பாதை.

அவன் மாலை நேரத்தில் நெடுந்தூரம் நடப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். உடலைத் தழுவிச் செல்கிற கடற்; காற்றின் சுகத்தில் வெறிச்சென்ற யாருமற்ற ஏகாந்த சூழலில் தனியாக வேகமாக நடப்பது அவனுக்குப் பிடித்திருந்தது. அன்றாடம் மனதைப் பாதிக்கும் உலகியல் விசயங்களிலிருந்து விலகி சுயபரிசோதனையில் இறங்கி அமைதி பெற அந்த வழமையான நடை அவனுக்கு உதவியாக இருந்தது. அன்று மாலை ஆறு மணியளவில் அவன் வழமை போல தன் நடையைத் தொடங்கினான்.

தூரத்தில் – தெருவின் சரி மத்தியில் நாய் ஒன்று படுத்திருப்பது போல மங்கலாகத் தெரிந்தது. மனித நடமாட்டம் குறைவென்பதால் தெரு நாய்கள் சுதந்திரமாகத் திரிந்ததை அவன் முன்னரும் கண்டிருக்கிறான். வேகமாக வந்த ஓரிரு வாகனங்கள் அந்த நாய்க்கு வழிவிட்டு மரியாதையாக விலகிச் சென்றதைப் பார்க்க அவனுக்கு அதிசயமாக இருந்தது. எவ்வளவு வீரமான நாய்!

சமீபித்த போதுதான் அது எழுந்து கொள்ள முடியாமல் இருந்ததை அவனால் பார்க்க முடிந்தது. தெருவில் குறுக்காக ஓடிய போது வேகமாக வந்த ஏதாவது வாகனமொன்றில் அடிபட்டிருக்க வேண்டும். தெருவில் பெரிதாக இரத்தம் சிந்தியிருக்கவில்லை. கால் எலும்புகள் உடைந்திருக்கலாம். யாருக்கும் சொந்தமான நாயாகவும் தெரியவில்லை.

அருகில் போய் தலையைத் தடவி விட்டு அது தன்னைக் கடிக்குமா கடிக்காதா என்று அறிந்து கொள்ள விரும்பினான். ஆனால் சின்ன வயதில் இரண்டொரு தடவைகள் வாங்கிய கடிகளினால் அவனுக்கு நாயென்றால் பயம். வலியினால் முனகிக் கொண்டிருக்கும் அந்த நாய் கடிக்காது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அவன் ஜாக்கிரதையாக எட்ட நின்று பார்த்தான். எதிரே வந்த வாகனமொன்று சிறிது நின்று நாயோடு சேர்த்து அவனையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு சென்றது.

வாயில்லாத சீவன்களிடம் அன்பு காட்ட வேண்டும் என்று அவனது அம்மா சின்ன வயதில் அவனுக்கு சொன்ன பல காருண்யக் கதைகள் வரிவரியாக தலைக்குள் வந்தன. அதெல்லாம் சரிதான் – கடித்து விட்டால் வயிற்றைச் சுற்றி ஊசி போடுவார்களே! தன் பக்கம் நாயின் கவனத்தைத் திருப்ப எட்டத்திலிருந்து அதனை பா.. .. பா.. .. பா.. என்று அழைத்தான். அவனது பா பா பா அதனிடம் பலிக்கவில்லை. அது அசைவில்லாமல் அலட்சியமாக இருந்ததைப் பார்க்க அவனுக்குச் சினமாக இருந்தது.

“நான் கூப்பிடுகிறேன் தலையைத் திருப்பிப் பார்க்கக் கூட உனக்கு முடியாதா.. .. .. திமிர் பிடித்த நாயே என்ன பாடாவது பட்டுக் கொள்”. மனதிற்குள் சொன்னபடி அவன் நடந்தான். நாய் பலவீனமாய் முனகியது. கஷ்டப்பட்டு தன் தலையைத் திருப்பி அவனைப் பார்த்தது. அவன் நின்றான்.

இன்னும் சிறிது நேரத்தில் இருட்டி விடும். அதன்பின் வருகிற வாகனங்கள் நாய்க்காக நின்று வழிவிட்டுப் போகும் என நிச்சயமாகச் சொல்ல முடியாது. அதன் கதை இன்னும் சொற்ப நேரத்துள் முடிந்து விடலாம். அவனுக்கு நெஞ்சிற்குள் என்னவோ செய்தது. நடப்பதைத் தொடர மனமில்லாமல் திரும்பி வந்தான்.

நாய் கடிக்கும் என்னும் விசயத்தை மறந்து போய் பக்கத்தில் வந்து குந்தியிருந்து அதன் தலையைத் தடவினான். அது சும்மாயிருந்தது. அதன் வலியிலும் அவனது தடவல் அதற்கு ஆறுதலாக இருந்திருக்க வேண்டும். அவன் மேலும் தடவட்டும் என்று தலையைச் சற்றே தாழ்த்திக் கொடுத்தது.

அதனை எப்படித் தூக்கிக் கொண்டு போய் புதருக்குள் விடுவது! யாரும் ஒரு கை கொடுத்தால் இலகுவாக முடியும். அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். தூரத்தில்> சந்தியருகே வந்த இருவர் இன்னொரு குறுகிய பாதையில் திரும்பு முன்னர் சிறிது நின்று அவனையும் நாயையும் பார்த்து ஏதோ கதைத்து விட்டு அவன் கூப்பிடுவதற்குள் நடந்தனர்.

தனியாக நின்று கொண்டு எப்படித் தூக்குவது ? நெஞ்சோடு அணைத்துத்தான் தூக்க வேண்டும். நாயின் பாரம் பிரச்னையில்லை. ஆனால் இப்போது அவனது கண்களுக்குத் தெரியாமலிருக்கிற அதனுடைய இரத்தக் காயங்களும் நொறுங்கிப் போன உறுப்புகளும் தூக்கி நெஞ்சோடு அணைக்கும் போது தெளிவாகத் தெரியும். அதனைக் கண்களால் பார்க்கும் துணிவு அவனிடம் இல்லை. அப்படியொரு பயந்த சுபாவம்.

ஒரு கையால் அதனுடைய உடலைக் கிளப்பிக் கொண்டு மற்றக் கையால் இழுத்தான். கால்கள் இழுபட்ட போது நொந்திருக்க வேண்டும். அது முனகியது. இழுப்பதை நிறுத்தி விட்டு இடுப்பில் கையை வைத்துக் கொண்டு பார்த்தான். நோகாமல் எப்படி இழுத்துக் கொண்டு போவது ? வேறு வழி தெரியவில்லை. கொஞ்சம் வேகமாக இழுத்தான். அடப் பாவி இப்படி இழுப்பதிலும் பார்க்க நீ சும்மாவே போயிருக்கலாம் என்பது போல அது வேதனையில் கத்தியது.

“பொறம்மா பொறம்மா.. .. .. ஆ ஆ வா வா”.. .. .. அது கத்தக் கத்த கொஞ்சம் கொஞ்சமாக இழுத்தான். ஒருவாறு தெருவின் ஓரக்கட்டிற்குக் கொண்டு வந்தாயிற்று. அந்தக் கட்டுக்கு மேலால் எடுத்து விட்டால் புதருக்குள் பாதுகாப்பாக விட்டு விடலாம். அடுத்த நிமிடம் அதை அப்படியே அலக்காகத் தூக்கி மெதுவாகப் புதருக்குள் சரித்து விட்டான். புதருக்குள் உருண்ட நாய் ஓலமிட்டது. தொடர்ந்து கத்த முடியவில்லையோ என்னவோ உடனேயே ஓய்ந்தும் போனது.

“சரி இனிப் பயமில்லை போயிற்று வாறன்” .. .. .. யாரோ ஒரு மனிதனோடு கதைப்பது போல அதனிடம் சொல்லி விட்டு அவன் நடந்தான். சுற்றிலும் இருள் படிந்து விட்டிருந்தது. அவனது முதுகிற்குப் பின்னால் வானத்தில் அப்போதுதான் முளைத்த மஞ்சள் பந்து மெல்லிய வெள்ளித் திரையை போர்க்கத் தொடங்கிற்று. வேகமாக நடக்க நடக்க சுடுநீரிலிட்ட ஐஸ் கட்டி போல அவனது நெஞ்சு இளகி இளகி உருகிக் கொண்டிருந்தது. அவனையறியாமல் கண்களிலிருந்து கண்ணீர் ஓடிற்று. ஏனென்று புரியவில்லை. பக்கத்தில் யாருமில்லை. அவன் வாய் விட்டு சுதந்திரமாக அழுதான். வாயில்லாத சீவனுக்கு துளியளவு நேசம் காட்டியதற்கா இத்தனை ஆறுதல்!!

சந்தி வரை நடந்து விட்டு திரும்பி வருகையில் புதருக்குள் பார்த்தான். அவர் அமைதியாகப் படுத்திருந்தார். சற்று எட்டத்தில் அவரை வருத்தம் பார்க்க வந்த நாலைந்து உறவினர்கள் இருட்டில் நின்றது தெரிந்தது. இனிப் பிரச்னையில்லை.. .. .. அவன் வீட்டை நோக்கி நடந்தான்.

இரவு சாப்பிடும் போது அவனுக்கு நாயின் நினைப்பு வந்தது. அதற்கு யார் சாப்பாடு போடுவார்கள்; ? அவன் கடைச் சாப்பாட்டில் நாக்கு ருசி மரத்துப் போனவன். ஏற்கனவே பிசைந்து விட்ட சோற்றில் ஒரு பகுதியைப் பார்சலாக்கிக் கொண்டு இருட்டிற்குள் நடந்தான். நாய் அதே இடத்தில் அப்படியே இருந்தது. அவனைக் கண்டதும் உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பது போல அவனுக்கு முகத்தை நீட்டியது. நன்றியுள்ள நாய் வாலை ஆட்ட வேண்டுமே! லைற்றை வாலுக்கு நேராக அடித்துப் பார்த்தான். வால் ஆடவில்லை. விபத்தின் போது அதுவும் செயலற்றுப் போயிருக்க வேண்டும்.

நேரம் ஒன்பதாகி விட்டது. கடலலைகளின் ஓயாத அடிப்பு சோவென்று இரைந்து கொண்டிருந்தது. மாலை நேரத்தில் அவனை மயக்கி விடுகிற அதே சூழல் இப்போது பயத்தை உண்டாக்குவதாய் மாறியிருந்தது. அவன் சாப்பாட்டுப் பார்சலை விரித்துப் போட்டு விட்டு சிறிது நேரம் நின்றான். அது சாப்பிடவில்லை. பசி வந்தால் சாப்பிடும் என்ற நம்பிக்கையில் அவன் விரைவாக வீட்டிற்குத் திரும்பினான்.

அடுத்தநாள் மாலை அவன் போன போது அவர் அப்படியே இருந்தார். இரவு வைத்த உணவைக் காணவில்லை. ஒருவேளை வருத்தம் பார்க்க வந்தவர்கள் அதற்குக் கொஞ்சமும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டிருப்பார்களோ.. .. .. சாப்பிட்டதனால் அவரது தலை கொஞ்சம் நிமிர்ந்து விட்டது போலவும் தோன்றியது. அவன் மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு திரும்பினான்.

அன்று இரவும் அவன் தன் சாப்பாட்டில் அரைவாசியை பினைந்து எடுத்துக் கொண்டு இரவு ஏழு மணிபோலப் போனான். அப்போதும் அது சாப்பிடவில்லை. “எனக்கு முன்னால் சாப்பிட வெட்கமாயிருக்கா.. .. .. சரி சரி.. .. .. நான் போறன் நீங்க சாப்பிடுங்க”.. .. .. அவன் நடந்தான். திரும்பி வரும் போது தான் கதைக்கும் தமிழ் வார்த்தைகளை அந்த நாய் எப்படி விளங்கிக் கொள்ளும் என்று நினைத்த போது அவனுக்குச் சிரிப்பு வந்தது.

அடுத்த நாள் மாலை அவன் நடக்கப் போகவில்லை. வேறு வேலையாக வெளியே போயிருந்ததால் இரவு வீட்டிற்கு வர ஒன்பதரை மணியாகி விட்டது. வந்த கையோடு அதற்கென்று தனியாக இறைச்சி வைத்துக் கட்டிய பார்சலை எடுத்துக் கொண்டு இருட்டிற்குள் நுழைந்தான்.

சமீபத்தில் வந்ததும் பார்த்தான். அவர் இப்போது சரிந்து படுத்திருந்தார். அவன் டோர்ச் லைற்றை அடித்துக் கொண்டே பா.. .. .. பா என்றான். அது நல்ல நித்திரையிலிருந்தது.

“நான் மினக்கெட்டு இந்த நேரத்தில வந்தால் உங்களுக்கு நடப்புத் தானே வரும்.. .. சரி சரி….எழும்புங்க”.. .. .. சாப்பாட்டைப் பிரித்து இறைச்சியின் வாசனை மூக்கில் அடிக்கட்டுமென முகத்திற்குக் கிட்ட வைத்தான்.

அது அசையவில்லை. ம்.. ..ம்.. .. எழும்பம்மா.. .. சாப்பிடு.. .. உனக்கு ஸ்பெஷலா இறைச்சி கொண்டந்திருக்கிறன்.

அதனிடமிருந்து அவன் எதிர்பார்த்த ஆர்வத்தைக் காணவில்லை. சந்தேகம் வந்தது. தலையை மெதுவாகத் தடவிப் பார்த்தான். தடவிய கையை கட்டெறும்புக் கூட்டம் மொய்த்துக் கடித்தன. நெஞ்சிற்குள்ளிருந்து எதுவோ கழன்று விழுந்ததைப் போலிருந்தது அவனுக்கு. அசையாமல் எழுந்து நின்றான். எவ்வளவு நேரம் அப்படியே நின்றான் என்று புரியவில்லை. கடற்கரைப் பக்கமிருந்து தனித்த நாயொன்றின் நீண்ட ஊளைச்சத்தம் கேட்ட போது அவன் புறப்படத் தயாரானான்.

தன் சட்டையைக் கழட்டி அதனைப் போர்த்து மூடி விட்டு இருட்டிற்குள் அவன் நடந்தான். உயர்ந்து எழுந்து பாய்ந்து வரும் கடல் அலைகள் போல அவனது நெஞ்சை என்னவோ நிரப்பிக் கொண்டு வந்தது. அறைக்குள் வந்து அவசரமாய்க் கதவைப் ப+ட்டிக் கொண்டான். அவன் குலுங்கிக் குலுங்கி நெடுநேரம் அழுத சத்தம் வெளியே யாரையும் அந்த இரவில் தொந்தரவு செய்யவில்லை.

***

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

கண்ணீர்

This entry is part [part not set] of 16 in the series 20011029_Issue

சேவியர்


தேசங்கள் தோறும் பாயும்
சமத்துவ நதி
கண்ணீர்.

இதயக்காட்டுக்குள்
இடிவிழும்போதும்,
மனசின் மதில் சுவரில்
மண்வெட்டிகள்
மூர்க்கத்தனமாய் மோதும் போதும்,
கண்களில் விழும் மழை
கண்ணீர்.

தோல்விகளும், ஏமாற்றங்களும்
கால்களைக் கட்டிக்கொண்டு
வேர்விட்டுக் கிடக்கும்
வேதனை கணங்களில்
விழியில் வெடித்தெழும்
உப்பு நதி, கண்ணீர்.

சந்தோஷத்தின்
மின்மினிக்கூட்டங்கள்
சட்டென்றழைக்கும் மாநாட்டில்
நெஞ்சப்பூவில் ஈரம் விழ,
கண்ணில் பொடிக்கும்
சிறு பனித்துளி கண்ணீர்.

எப்போதேனும்
விழிகளுக்குள் விழுந்துவிடும்
சிறு சிறு துகள்களை
கால்வாய் வெட்டிக்
கடத்திவிடுவதும்
இதே கண்ணீர் தான்.

சில வேளைகளில்
மனைவியரின் மனுக்களுக்கு
முன்னுரிமை பெற்றுத்தரும்
சிபாரிசுத் தூதுவனாகும்.
சில வேளைகளில்
முதலைக் கண்ணீராய் வந்து
கவனிப்பாரின்றி நிராகரிக்கப்படும்.

களைத்துப் போன
கருவிழி
வெளிக்கொட்டும் வியர்வையும் இதே.
ஆனால்
பெரும்பாலும் இது
இளைத்துப் போன இதயத்தின்
இரட்டை உறவினன் தான்.

கண்ணீர்,
மனசின் வலிகளுக்காய்
கண்கள் தொங்கவிடும்
அடையாள அட்டை.

மலைகளாகும் மகிழ்ச்சிகள்
மண்டியிட்டலறும் போது
கண்கள் செலுத்தும்
காணிக்கை.

பிரிவுகள் நெருங்கும் போதும்,
நெருக்கம்
பிரியும் போதும்,
உறவுகள் சொல்லும்
ஈரத்தின் இறுக்கம் தான்
கண்ணீர்.

நாகரீகம் கருதி சிலநேரம்,
தன்மானம் கருதி சில நேரம்,
தனிமைக் கடலில்
கண்ணீர்
உப்பளமாய் உறையும்.

உணர்வுகளின்
ஊசிப்பொத்தல்களில்
நிம்மதிக் களிம்பாய்
நிறைவதும் கண்ணீர் தான்.

கண்கள் இருக்கும்
உயிரினங்களின்
பிரபஞ்ச பாஷைதான்
இந்தக் கண்ணீர்.

துயரங்களின்
கிழிசல்களாய்
இரத்த வாசனையோடு
கசியும் கண்ணீருக்கு கட்டுப் போடு.

ஒரு கையில்
பனித்துளியாய்
சிறு கண்ணீர் துளி சரியும் போது,
மறு கையில் சூரியனோடு வந்து
அதை உறிஞ்சிக் கொள்.

கண்ணீர்
எப்போதுமே அடையாளம் தான்.
அடையாளம் பெரும்பாலும்
அடைக்கலம் ஆவதில்லை.

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்