”கண்ணி நுண் சிறுத்தாம்பு”

This entry is part [part not set] of 32 in the series 20090305_Issue

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்மொட்டுப்போல் தன் எதிரே அமர்ந்திருந்த செண்பகத்தைப் பார்க்கப் பார்க்க, சுமதிக்கு பற்றிக் கொண்டு வந்தது கோபம் .
சொந்தக் குழந்தையாயிருந்தால் இழுத்து வைத்து நாலு அறையாவது கொடுத்திருப்பாள். இது அருமைத் தோழியின் ரொம்ப அருமையான குழந்தை.மெல்லவும் முடியாது, விழுங்கவும் முடியாத , தர்ம சங்கடமான நிலை.
இத்தனைக்கும் ஒரு வாண்டு, இந்த மொட்டுக் குட்டிக்கு இத்தனை அடமா? எங்கே கோளாறு? ஏனிந்தக் குழந்தைக்குத்
தமிழ் மொழியில் மட்டும் இத்தனை வீம்பு? கோடி காட்டினாலே, கற்பூரம் போல் பற்றிக்கொள்ளும் நல்லறிவும்,
ஆற்றலுமிருந்தும், பற்றிக் கொள்ள ஏன் மறுக்கிறாள்? .சுமதிக்கு உண்மையிலேயே செண்பகம் ஒரு சவாலாகவே இருந்தாள்..
சென்ற வாரம் மேகலை, செண்பகம் விஷயமாக உதவி கேட்டபோது, சிரிப்புத்தான் வந்தது.
உயர் நிலை நான்கு மாணவிகளுக்கும் ,கல்லூரி மாணவிகட்கும், இவள் துணைப்பாட வகுப்பு, [ட்யூஷன்] கற்பித்துள்ளது உணமையே. ஆனால்,இவ்வளவு சின்னக் குழந்தைக்கு,அதுவும் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு கற்பித்த அனுபவமே
இல்லையே. ஆனால் மேகலையின் கண்ணீரைக் கண்ட போது பாவமாகவும் இருந்தது.
கணவன், மனைவி, இருவருமே பட்டதாரிகள் தான் எனினும், சொந்தக் குழந்தைகள் தான் எப்பொழுதுமே பெற்றோர்களிடம் படிக்கமாட்டார்கள் என்பதும் அறிந்த உண்மை தானே. அதனால் தான் வேறு வழியின்றி, தோழிக்கு உதவுவதாக ஏற்றுக் கொண்டாள்.
ஆனால், அது கடப்பாறையை விழுங்கி சுக்குக் கஷாயம் குடிப்பதுபோல் எவ்வளவு பெரிய பிரச்சினை என்பதை,
செண்பகத்துக்குக் கற்பிக்கத் தொடங்கியபிறகுதான் தெரிந்தது.பாடல் என்றால் ரொம்ப பிரியமாக செண்பகம் பிடித்துக் கொள்வதை அறிந்த சுமதி, முதல் இரண்டு வாரத்துக்கு, தன்னுடைய சொந்தக் கவிதைகள் சில்வற்றை பாடலாக
கற்பித்தாள்.. பொன்னே., பூவே, சின்னக் கண்ணம்மா,, என்ற வரிகளில் குழந்தை மகிழ்ந்து பாடுவது ரசனையாகவே இருந்தது.
அதே ரசனையோடு பள்ளி சிலபசுக்கு வந்தபோது மட்டும் செண்பகம் முரண்டு பிடித்தாள்.
அ, —அம்மா
ஆ—ஆடு,
இ–இலை,
என்று கட கடவென்று செண்பகம் ஒப்பிப்பது, ஏதோ கொயினா மருந்தை கஷ்டப்பட்டு, விழுங்கித் தொலைப்பது போல்தான்
புலப்பட்டது..சரி.வீட்டுபாடம் கொடுத்தாலாவது செய்கிறாளா என்று பார்க்கலாமே என்றால், கம்பளிப்பூச்சியைப்போல், கையெழுத்தை கிறுக்கிக் கொண்டு வந்தாள். பயிற்சிப்பாடமோ பூர்த்தியாக்கப் படுவதே இல்லை.
இத்தனைக்கும் ஆங்கிலத்தில், கணிதத்தில் எல்லாம் 96,98 மதிப்பெண் வாங்கும், அறிவுள்ள குழந்தை செண்பகம்
என்றறிந்தபோது, சுமதிக்கு எந்தக் கோணத்தில் இக்குழந்தையை அணுகுவது என்றே யோசனையாக இருந்தது. இடையில் பள்ளியின் மாதாந்திரத் தேர்வில் நூற்றுக்கு 45மார்க் என்ற விகிதத்தில், செண்பகம் தோற்றுப் போன சோகத்தோடு
வந்தாள் ஒரு நாள்.
இன்று குழந்தையிடம் பேசியே ஆவது , என்ற கங்கணத்தோடு , சுமதி பேசத்தொடங்கினாள்.
”சொல்வதெழுதல் கொடுத்தால் தப்பு தப்பாய் செய்கிறாய்.கையெழுத்திலும் அக்கறை இல்லை. வீட்டுப்பாடம் கொடுத்தாலும் ஒழுங்காக செய்து வருவதில்லை.பிறகு நீ ஏன் தோற்றுப் போக மாட்டாய்? ஆங்கிலத்திலும் கணிதத்திலும் ,
காட்டும் அக்கறையில் துளி கூட தமிழில் காட்டமாட்டேன்கிறாய்? வீணாக என் நேரத்தையும் பாழடித்து, ஏன் எனக்கு சிரமம்
கொடுக்கிறாய்?”
எப்பொழுதும் போல் மெளனமாயிருந்து கழுத்தறுக்காமல், பட்டென்று பதில் கூறினாள் செண்பகம்.
’எனக்குத் தமிழ் படிக்க ப் புடிக்கலை டீச்சர்,”
ஒரு வினாடி அதிர்ந்து போனாள் சுமதி. அந்தச் சின்ன முகத்தில் பிரதிபலித்த, வெறுப்பைக் காட்டிலும், வேதனை சுமதியைத்
தொட்டது. நயமாகவே கேட்டாள்.
”ஏம்மா? உன் அம்மா எவ்வளவு கவலைப் படுகிறாள். தாய்மொழி தெரியாமல், வேறு எந்த மொழியில் நீ கெட்டிக்காரியாக இருந்தாலும், எதிர்காலத்தில் நிச்சயமாக எங்கேனும் நீ சிரமப் படுவாய்..தவிரவும் சிங்கப்பூரில் இரண்டாம் மொழியில், நல்ல மதிப்பெண் வாங்காவிட்டால், எந்தத் தேர்விலும் நீ முழுமையான தேர்ச்சி பெறமுடியாதே?”
”எனக்குப் புடிக்கலை டீச்சர், தமிழ் படிக்கவே புடிக்கலை டீச்சர், என் கிளாஸ் டீச்சரை எனக்குப் புடிக்கலை..
தமிழ் க்ளாஸ்ல படிக்கிற ப்ரண்ட்ஸ் யாரையுமே எனக்குப் புடிக்கலை டீச்சர்”
உதடு விம்ம, கண் கலங்க ,செண்பகம் கூறிவிட்டு அழத் தொடங்கியதும், பாய்ந்து சென்று குழந்தையை
மார்போடணைத்துக் கொண்டாள் சுமதி.
இவள் மனம் எங்கோ அடிபட்டிருக்க வேண்டும், என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது..
மேற்கொண்டு என்ன செய்வது என்பதுதான் கவலையாக இருந்தது.
அன்று மாலை குழந்தையை அழைக்க வந்த மேகலையை முதன் முதலாக கவனிப்பது போல் கூர்ந்து கவனித்தாள் சுமதி.
தாயும் மகளும் சுமதியின் வீட்டிலிருந்து புறப்படும் வரை , ஒரு வார்த்தை கூட, தமிழில் பேசிக் கொள்ளவே இல்லை.
அதற்கடுத்த வாரம், மேகலையின் வீட்டில் ஒரு முக்கிய நிகழ்ச்சிக்காக, கலந்து கொள்ள சென்ற போது, அவ்வீட்டின் சூழ்னிலை, அதிலும் குறிப்பாக செண்பகத்தின் அறை, என எல்லாமே சுமதியை வியப்பிலாழ்த்தியது.
குழந்தையின் அறை முழுக்க ஆங்கிலப் புத்தகங்கள், ஆங்கிலப் போஸ்டர், என ஆங்கில மொழி வளத்துக்காக, எல்லாமே
இருந்தது. போறாததுக்கு, கணிணி வகுப்புக்குக் கூட செண்பகம் போகிறாள், என்பதற்கு அடையாளமாக, விலை உயர்ந்த கணிணியும் செண்பகத்தின் அறையில் இருந்தது. வரவேற்பறையில் பியானோவைக் காட்டி, செண்பகம் அருமையாக
பியானோ வாசிப்பாள், என்று மேகலை கூறியபோது,உடனே மேகலையின் கணவர் சாரங்கன் பெருமிதமாகக் கூறுகிறார்.
“பியானோ மாத்திரமல்ல. நடனம் கூட செண்பகம் கற்றுக் கொள்கிறாள், தெரியுமா?”
சுமதிக்கு சென்பகத்தைப் பற்ரிய சிக்கலின் நூலிழையைப் பிடித்துவிட்டதாகவே தோன்றியது.
அன்று தம்பதிகளின் திருமண ஆண்டுவிழா, என்பதால் பட்டுப் பாவாடையும், ஜரிகை சட்டையும் போட்டுக் கொண்டு,
கழுத்தில் காசுமாலை, இடுப்பில் ஒட்டியாணம், காதில் ஜிமிக்கியுமாய், தங்க புஷ்பம் போல் செண்பகத்தை அலங்கரித்திருந்தார்கள்.
”டீச்சர்’ என்றவாறே, குழந்தை அய்ஸ்க்ரீமை, சுமதிக்கு நீட்டியபோது, அப்படியே கட்டிக் கொள்ள வேண்டும்போல் , அத்தனை அழகாக இருந்தாள் கண்மணி..
பெற்றோர் வெட்டிய கேக்கை அத்தனை பேருக்கும் வினியோகித்த அந்த சமத்து கூட கண் கொள்ளா காட்சியாகவே இருந்தது.
ஆனால் சுமதியைக் கவர்ந்த மிகப் பெரும் வேடிக்கை, அந்தக் கும்பலில் யாருமே,தங்களுக்குள் தமிழ் பேசிக் கொள்ளவே இல்லை.
ஆங்கிலம்தான் அங்கு மிகச் சரளமாக ஊடாடியது . செண்பகத்தின் வயதை ஒத்த குழந்தைகளூடே, மகிழ்ச்சியே சாட்சியாய்
செண்பகமும் ஆங்கிலத்தை உச்சரித்த அழகு சொக்க வைத்தது.
பிறந்ததிலிருந்தே கேட்ட ஞானமும்,பயிற்சியுமே, இத்தனை ஆற்றலுக்கும் காரணம் என்பது தெளிவாகப் புரிந்தது.
தமிழில் , ல; கர, ழ, கரம், கூட வாயில் வராமல் தடுமாறும் குழந்தை,, ஆங்கிலத்தில் இப்படிப் பிளந்து கட்டுகிறாள், தவறு எங்கே என்று யூகிப்பதொன்றும் கம்ப சித்திரமல்ல.
மறுவாரம் சுமதி எழுதி அரங்கேற்றிய, ’சித்திரக் கண்ணம்மா’ என்ற குழந்தைகள் நிகழ்ச்சிக்கு ,பிடிவாதமாய்
செண்பகத்தையும் அழைத்துக் கொண்டு போனாள் சுமதி. செண்பகத்தின் வயதுள்ள குழந்தைகளும், அதைவிட
வயது குறைந்த குழந்தைகளும், மழலை மிழற்றலோடு, பாரதிக் கவிதையை, அபினயத்தோடு, உச்சரித்ததை, ஆர்வமாய், வேடிக்கை பார்த்தாள் செண்பகம். தன்னை மறந்து அவர்களுக்கு ஜரிகை எடுத்துக் கொடுக்கவும்,, உடை அணியவும் கூட
உதவினாள்.
மொத்தத்தில் நிகழ்ச்சியை, அணு அணுவாய் ரசித்த செண்பகம், ஏக்கத்துடனேயேதான் வீடு திரும்பினாள், என்பது
மறு நாளே தெரிந்தது.
டீச்சர், நான், நானும் உங்க புரோகிராமில் பங்கெடுக்கலாமா?? என்று தயங்கித் தயங்கி,
மறுனாள் செண்பகம் கேட்டபோது, முறுவல் மாறாமலே கேட்டாள் சுமதி.
உனக்குத்தான் தமிழே பிடிக்காதே? என்னுடையது தமிழ் நிகழ்ச்சியாயிற்றே?
தமிழ் சரியாகக் கூடப் பேசத் தெரியாத உனக்கு எப்படி வாய்ப்புக் கொடுக்க முடியும்?
அதுக்கு நான் என்ன செய்யணும் டீச்சர்?
அப்படி வா வழிக்கு!
இன்றையிலிருந்து ஞான் கொடுக்கும் பாடங்களை ஒழுங்காக செய்யவேண்டும். அடம் பிடிக்கக் கூடாது.!
என்ன சரியா?!”
செண்பகம் அப்படியே தன் வாக்குறுதியைக் காப்பாற்றியது ,அளப்பரிய மகிழ்ச்சியைத் தான் கொடுத்தது.
ஆங்கில ஸ்டைலில் தமிழை உச்சரித்தாலும், இரண்டே மாதத்தில், 65 மதிப்பெண் வாங்குமளவுக்கு, செண்பகம்
முன்னேறியதில், மேகலையும் சாரங்கனும், வீடு தேடி வந்து நன்றி கூறிய போது,அருமைத்தோழியிடம்,
இன்று பேசியே ஆவது எனும் உறுதி பிறந்தது. ஆனால்,
‘ வீட்டில் தமிழ் பேசுங்கள், தமிழ்ப் புத்தகங்களை குழந்தைக்கு வாங்கிப் போடுங்கள்.தமிழ் நிகழ்ச்சிகளுக்கு
குழந்தையை அழைத்துச் செல்லுங்கள்., என்று ஒரு தமிழ்ப் பெற்றோரைப் பார்த்து, உபதேசிக்கும் நிலைமை
தனக்கு நேர்ந்ததற்காக உண்மையிலேயே, வெட்கிப் போனாள் சுமதி.
“குறைந்த பட்சம் உங்களுக்குள்ளாவது,தமிழில் பேசுங்களேன்,!” என்று சுமதி வேண்டியபொழுது,
தம்பதிகள் குனிந்த தலை நிமிரவில்லை. அகம் அடிபட்டுப் போனது நன்றாகவே தெரிந்தது.
தங்களுக்குள்ளேயே ஆங்கிலம் தான் சரளமாக இருப்பதால், குழந்தையிடம் உணர்வுகளை
பகிர்ந்து கொள்ள தமிழில் முடியுமா?! என்று மேகலை மெல்லக் கேட்டபோது, மீண்டும் வெட்கியவள் சுமதியே.
இவர்களுக்கே ஒழுங்காக தமிழ் பேசத்தெரியாது, என்னும் உண்மை, அப்பொழுதுதான் பொட்டிலறைந்தது.
வியந்துபோய்த் தோழியைப் பார்த்தாள்.
நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு,கழுத்தில் கெட்டித்தாலி மூக்கில் கூட ஃபேஷன் மூக்குத்தி,
காலில் கூட அது என்ன சொல்வார்கள்??! ஓ! ஓ! மெட்டி, மெட்டி தானே ? ஏன்? தோற்றத்தில் கூட இளங்கறுப்பாய்
இந்தியத் தோற்றமே! மேகலை, சாரங்கன், என்ற பெயர்கள் கூட அழகான, அருமையான தமிழ்ப் பெயர்கள் தானே?
ஹூம்,
ஆனால் மொழியைப் பகிர்ந்து கொள்ள மட்டும் ஆங்கிலம் தான் வேண்டும், எனும் இந்த அசட்டுத் தனத்தை மட்டும், சுமதியால் ஜீரணிக்கவே முடியவில்லை.
மறுனாளே, முதல் வேளையாய், செண்பகத்தின் தமிழாசிரியையை தொலை பேசியில் தொடர்பு கொண்டபோது,
ஒரு இனிய ஆச்சரியம் காத்திருந்தது.
”டீச்சர், என்னைத் தெரியவில்லையா? நான் தான் மரகதம்!” எனக் காதில் தேனாய்ப்பாய்ந்தத குரல் தானா
செண்பகத்தின் ஆசிரியை. மரகதம் நீயா?!
இந்த மரகதத்தையா செண்பகத்துக்குப் பிடிக்கவில்லை? சுமதியின் பிரியத்துக்குகந்த முன்னாள் மாணவியாயிற்றே
மரகதம்?
”கலித்தொகையும், ,குறுந்தொகையும், பரிபாடலும், கற்றுக் கொடுங்களேன், டீச்சர், !”
என ஸ்பெஷல் டியூஷனுக்கு [சிறப்பு வகுப்புக்கு] ஆசையாய் வந்து போனவளாயிற்றே மரகதம். அரைமணி நேரம் மரகதத்தோடு
பேசிய பிறகு,, செண்பகத்தைப் பற்றிய , இரண்டாவது முடிச்சும் அவிழ்ந்தது.
தமிழ் வகுப்பிலும் செண்பகம் ஆங்கிலமே பேசுவதால்,மரகதம் கண்டிக்க, தோழிகள் சிரிக்க, எனப்பல, கரணங்களால் தான் , செண்பகத்துக்கு, தமிழ் வகுப்பு, தமிழ் டீச்சர், தமிழ்த்தோழியர், என யாரையுமே புடிக்கலை.
இப்பொழுது புரிகிறதா??
மரகதம் சுமதியின் வேண்டுகோளை , சிறந்த ஆலோசனையாக, செவி மடுத்ததோடன்றி,
“இது என் கடமை, டீச்சர்” நிச்சயம் நான் உதவுவேன், “ என்றபோதே, பாதிக் கிணறைத் தாண்டிய நிம்மதி பிறந்தது.
சில தினங்களுக்குப் பிறகு, பள்ளியில் கதை சொல்லும் போட்டிக்குத் தன்னை தெறிவு செய்துள்ளதாக மகிழ்ச்சியும் ,
வெட்கமுமாகத் தகவல் கொண்டு வந்தாள் செண்பகம்.
உடனே நூல் நிலையங்களிலிருந்து சில சிறுவர் கதைப் புத்தகங்களை சுமதி, தேர்வு செய்து கொடுத்தாள்.
கதை சொல்லும் பயிற்சியை, ஏற்ற இறக்கத்தோடு, சுமதி கற்றுக் கொடுக்க, சிக்கென அதை அப்படியே
பிடித்துக் கொண்ட குழந்தை, போட்டியில் முதல் பரிசு வாங்காவிடினும் , இரண்டாம் பரிசு வாங்கினாள்.
இதற்குப்பிறகு, தொலைக்காட்சியில், தமிழ்ச் செய்தி காணும் ஆர்வம் தெரிந்தது.. ”
காண்போம், கற்போம்” நிகழ்ச்சியை ரசித்துப் பார்ப்பது மட்டுமன்றி, செண்பகம் அதுபற்றி,
நிறைய கேள்விகளும் கேட்டாள். சுமதியின் வீட்டிற்கு வரும் தமிழ்ப் பத்திரிகைகளையும் கூட, எழுத்துக்கூட்டிப்,
படிக்கத் தொடங்கினாள். இந்த ஆர்வத்தில் சில நாட்களுக்குப் பிறகு ,
சொந்த வீட்டிற்கும் , தமிழ்ப் பத்திரிகை வரும்படி பெற்றோரிடம் ஏற்பாடு செய்து விட்டாள்.
எல்லாவற்றிற்கும் மேலாய் மனதைக் குளிரக் குளிர அபிஷேகம் செய்த சம்பவம் ஒன்று நடந்தது,
ஒரு நாள் மேகலை, தொலைபேசியில் சொல்கிறாள்.
‘சுமதி, இப்பொழுதெல்லாம், செண்பகம் சதா வீட்டில் தமிழ் தான் பேசுகிறாள்.
அதில் பல சொற்கள் புரியவே மாட்டேன்கிறது,
நேற்று, அப்படித்தான், பேரூந்துக்கு நேரமாகிவிட்டது என்றபோது, ஒரு வினாடி எனக்கு ஒன்றுமே புரிய வில்லை,
தெரியுமா?
பேரூந்து? !
சுமதிக்கு ஏனோ பெருமிதத்தில் மனசு நிரம்பி வழிந்தது. அதே சமயம் வாய் விட்டுச் சிரிக்க வேஎண்டும் போலும் இருந்தது.
மேகலையயும், சாரங்கனையும் , இனி செண்பகம் வழிக்குக் கொண்டு வந்து விடுவாள்.
பொறுப்புத் தீர்ந்த நிம்மதியில், , தன்னுடைய அடுத்த படைப்புக்காக, எழுத அமர்ந்த சுமதி,, இறுதியாக ஒருமுறை தொலைபேசியில் செண்பகத்தை அழைத்தாள்.
“என்ன செண்பகம்? பள்ளியில் தமிழ் வகுப்பு எப்படி இருக்கிறது? “
“ தமிழ், எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கிறது , ஆசிரியை”

[ முற்றும்]

Series Navigation

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்