கண்டதைச் சொல்லுகிறேன்: பேட் பாய்ஸ்

This entry is part [part not set] of 36 in the series 20030911_Issue

ஞாநி


வெற்றியின் ரகசியம் என்ன ? வழக்கமாக வெற்றியின் ரகசியம் உழைப்பு, கடும் உழைப்பு என்று வெற்றி பெற்ற முதலாளிகள் சொல்வார்கள்.அப்படியானால் கடுமையாக உழைக்கிற எல்லாரும் ஏன் வெற்றியடைவதில்லை ? கூடவே அதிர்ஷ்டமும் வேண்டும் என்பார்கள்.

சுஜாதாவும் ஷங்கரும் வித்யாசமான பதிலை பாய்ஸ் படத்தில் சொல்லுகிறார்கள். நேர்மைதான் வெற்றியின் ரகசியம். எவ்வளவு உன்னதமான கருத்து ? படத்தில் இந்த நேர்மை எப்படி வெளிப்படுகிறது ?

கேர்ள்ஸ் ஆசைகளை அடக்கிக் கொள்ள என்ன செய்கிறார்கள், மார்பகங்களை பெரிதாக்கவும் கெட்டிப்படுத்தவும் என்னென்ன பயிற்சிகள் செய்கிறார்கள் என்று பாய்ஸ் நேரடியாக கேர்ள்சிடம் ‘ நேர்மையாக ‘ கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள்.

பெண் உறவுக்கு ஏங்கும் பாய்ஸ் என்ன செய்ய வேண்டும் ?

சுஜாதா(70)வும் ஷங்கரும்(35) நேரடியாக்வே வகுப்பு எடுக்கிறார்கள் பஸ்சில் எப்படி இடிக்கலாம், உரசலாம், ஜவுளி-நகைக் கடைகளில் ‘சுரணை ‘யற்ற மாமிகளை எப்படி தடவலாம் என்று காட்சி ரூபத்தில் கற்றுக் கொடுத்திருப்பது நிச்சயம் எல்லா வீட்டுப் பெண்களுக்கும் ‘பயன் ‘படும். இனிமேல் வீட்டை விட்டு வெளியில் வரவே பயப்படுவார்கள்.

கதாநாயக பாய் காதலில் ஜெயிப்பதற்காக அண்ணா சாலையில் நிர்வாண ஓட்டம் ஓடுகிறான். ஆனால் காதலில் எதிரிகளான பெற்றோர்களின் சித்ரவதையினால், பாய்ஸும் கேர்ளும் வீட்டை விட்டு நடுத்தெருவில் குடிகார அங்கிளின் ( தமிழில் சொன்னால் தப்பாகிவிடும்) உதவியுடன் வாழ்க்கையில் வெற்றி அடையப் போராடுகிறார்கள். போராடிக் கண்டுபிடித்த உண்மைதான் ‘நேர்மையே வெற்றியின் ரகசியம் ‘. நமக்கு எளிதில் புரிவதற்காக, இதை மார்பகங்கள் குலுங்கக் குலுங்க பெண்கள் ஆடிப் பாடிச் சொல்கிறார்கள்.

நேர்மை என்பதை நாம் தப்பாகப் புரிந்துகொண்டு விடக் கூடாது. அய்யப்பன் சீசனில் பாய்ஸ் பணத்துக்காக அய்யப்பன் கேசட் போடுவது நேர்மை. எம்.டி.வி விருதுக்காக ஆபாசமாக ஆடுவது நேர்மை. காதலுக்காக நிர்வாணமாக தெருவில் ஓடுவது நேர்மை. ஆனால், ஊழல் அரசியல்வாதிகளை எதிர்த்து தெரு நாடகம் போடும் ‘தீவிர ‘வாதிகளுக்குப் பணத்துக்காகக் கூடப் பாட்டு போட்டுக் கொடுப்பது தப்பு. அதனால் பொடாவில் கைது செய்யும் ஆபத்து ஏற்படும். எனவே ச்மத்தான பாய்ஸும் கேர்ள்சும் பஸ்சில் இடிப்பது, கடையில் உரசுவது, வீட்டில் யாரும் இல்லாதபோது பாலியல் தொழிலாளியை அழைத்துவருவது போன்ற ‘நேர்மை ‘யான விஷயங்களை மட்டும் செய்யலாம்.

சென்னை தணிக்கை அலுவலகத்தில் டிரெயிலர் படத்துக்கே ஏராளமான வெட்டுகள் விழுந்ததும், மொத்தப் படத்தை தணிக்கைக்கு ஹைதராபாதுக்கு கொண்டு போய்விட்டார்கள். இந்த ‘நேர்மை ‘தான் வெற்றியின் ரகசியம் !

.பெண்களைக் கேவலமாக, கீழ்த்தரமாக சித்திரிப்பதில் தொடங்கி,பெண் சீண்டலை ஊக்குவிப்பது , இளம் மனங்களை வக்கிரப்படுத்துவது வரை பல்வேறு இ.பி.கோ செக்ஷன்களின் கீழ் பலவிதமான குற்றங்கள் பாய்ஸ் படத்தில் செய்யப் பட்டிருக்கின்றன.பூங்காவிலும் பீச்சிலும் இருக்கும் அப்பாவிகளிடம் வீரம் காட்டும் போலீசுக்கு ‘படைப்பாளிகள் ‘ வீட்டு வாசலுக்குப் போகும் நேர்மை உண்டா ?

ஆபாசமான வசனங்களும், காட்சிகளும் நிரம்பிய இந்தப் படத்தை இவர்கள் உருவாக்கியது பணத்துக்காகவா ? இருவரும் ஏற்கனவே லட்சாதிபதிகள். புகழ் ? இன்னுமா ? இளைஞர்களின் அசலான பிரச்சினைகளில் ஒன்றான பாலியல் ஒடுக்குமுறையை சமூகத்துடன் பகிர விரும்பிய அக்கறையா ? படத்தில் அந்த அக்கறைக்கு துளியும் இடம் இருக்கவில்லையே.

என்னைப் பொறுத்த மட்டில் அசல் பிரச்சினை வேறு.

ஒரே ஒரு முறை நம் வீட்டில் ஒரு பத்து ரூபாயைத் திருடிவிட்டால், அந்த வேலைக் காரரின் நிலை என்ன ? நிரந்தரமாக குற்றவாளிப் பட்டம். நம் வட்டாரத்திலேயே வேறு யார் வீட்டிலும் அவரை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியாத நிலையை வேகமாக ஏற்படுத்திவிடுவோம்.

ஆனால் இவ்வளவு கேவலமான படைப்பை தெரிந்தே உருவாக்கித் தருபவர்கள் நம் சமூகத்தில் எந்தப் புறக்கணிப்புக்கும் இழிவுக்கும் ஆளாவதில்லை. தொடர்ந்து சுஜாதாவை தீவிர இலக்கிய இதழ்கள் முதல் வெகுஜன இதழ்கள் வரை விமர்சனம் இன்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கும். ஷங்கருக்கு அடுத்த வாய்ப்பு உண்டு. வேலைக்காரிக்குக் கிடையாது. குறைந்தபட்சம் ஷங்கரும் சுஜாதாவும் ஒரு பொது மன்னிப்பைக் கோரவேண்டுமென்று எழுதும் நேர்மை கூட நமது ஊடகங்களில் பலருக்கு இல்லை.

காரணம் நமது சமூகம் எப்போதுமே புத்திசாலித்தனத்தையும் சாமர்த்தியத்தையும் கொண்டாடுகிறது. அவற்றைப் பயன்படுத்தி பணமும் புகழும் சேர்த்துக் கொள்பவர்களை ஆராதிக்கிறது. ஆனால் புத்திசாலிகள் நேர்மையானவர்களா என்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.அதனால்தான் நேர்மையின் பெயராலேயே ஒரு கேவலமான படைப்பை தைரியமாக சந்தைக்குக் கொண்டு வர முடிந்திருக்கிறது.

(இந்தியா டுடே செப்.17,2003)

Series Navigation