கடிதம் – பிப் 19,2004

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

மகுடேஸ்வரன்


திண்ணை சமீபத்திய இதழில் இரா. முருகன் சென்னையில் நடந்த தமிழ் இலக்கியம் 2004ஐப் பற்றிய spot visit கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அவ்விழா குறித்து அவருடைய பதிவுகள் சிலவற்றிற்கு நான் பகிர்ந்துகொள்ள விஷயமிருப்பதால் இவற்றை எழுதுகிறேன்.

தமிழ் இலக்கியம் 2004 நிகழ்வுகளில் அரங்கு நிரம்பி இருந்தது கவியரங்கத்திற்குத்தான் என்பதை தெரிவித்த இரா. முருகனுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் .எல்லா நிகழ்வை விடவும் கவியரங்கம் மிகுந்த எதிர்ப்பார்ப்போடும் சுவைஞர் திரளோடும் நிரம்பியிருந்ததே அக்கவியரங்கின் வெற்றிக்கு போதுமான சாட்சியாகும். சோடை போய்விடாத பல முகங்களை உடைய கவிதைகள் அங்கு வாசிக்கப்பட்டன. அதற்குக் காரணம் அழைக்கப் பட்டிருந்த கவிஞர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தளத்தினர். அவரவர் தளத்தை அவரவர் கவிதைகள் பிரதிபலித்தன.

கவியரங்க நிகழ்வுக்கு முன்னதாக அரங்கில் நுழைந்த நான் தற்செயலாக இரா. முருகனைப் பார்த்தேன். பல வருஷம் கழித்து எதிர்படும் அவருக்கு ஒரு வணக்கம் சொல்ல எத்தனித்தேன்.ஆனால் அவர் அதற்கும் முன்பாக கவனம் மாறி நகர, அவருக்கு உரிய நல விசாரனையைச் செய்ய முடியாதவனாகிவிட்டேன்.கவியரங்கு முடிந்ததும் நான் கிளம்பி விட்டதால் பிறகும் அவரைச் சந்திக்க இயலவில்லை. அவரைப் போலவே அநேக பெரியவர்களை நான் வணங்க இயலாதவனாகவே ஊர் திரும்பினேன். அதற்காக நான் என் வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1995 மார்ச் மாதத்தில் ஓர் நாள் திருப்பூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையைக் கணிணி மயப்படுத்த வந்திருந்த இரா. முருகன் அவர்களை வெகு தூரத்திலிருந்து உரக்க அழைத்துப் பேசிய எனக்கு இது ஒரு வகையான குற்ற உணர்ச்சியைக் கூட ஏற்படுத்திவிட்டது.

மேலும் நான் இத்தனை மேன்மக்களை ஒரே இடத்தில் சந்திப்பதும் இதுதான் முதல் அல்லது இரண்டாவது முறை. இதற்கும் முன் சுபமங்களா- நாடக விழா ஒன்றில் கோவையில் பற்பலரை ஒரே அரங்கில் பார்த்தேன். அப்பொழுது நான் யாராலும் அறியப்படாதவன்.

கவியரங்கில் கலந்து கொள்ள முடியுமா என்று சுமார் ஒரு வாரம் முன்னதாக கவிஞர் யுக பாரதி என்னைத் தொலைபேசியில் தொடர்பு பொண்டார். அதனால் என்ன கலந்துகொண்டால் போயிற்று என்றேன்.ஜனவரி முதல் இரண்டு வாரங்களில் திருப்பூர் நகரமே வருஷக் கடைசியில் தள்ளிப் போடப்பட்ட ஏற்றுமதி ஆர்டர்களைக் கப்பலேற்றிவிட மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் . நானும் அதோடு சேர்ந்து திணறிக் கொண்டிருப்பேன். அந்த ஞாபகம் எனக்குப் பிறகு வரவே என் கவியரங்கக் கமிட்மெண்டுக்கு என்ன புதிதாக எழுதிவிட முடியும் என்ற ஐயம் ஏற்பட்டது. அவசரமாக யுக பாரதியை அழைத்து – என்னால் புதிதாக எதையும் எழுத முடியும் என்று தோன்றவில்லை. இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் மூன்றாம் பால் கவிதைகள் நானூற்றிலிருந்து சிலவற்றை வாசித்து விடட்டுமா, ஆனால் அவை கவியரங்கிற்கு உகந்ததாகத் தாங்கள் கருதுகிறீர்களா …., என்று கேட்டு வைத்தேன். எதைவேண்டுமானாலும் வாசியுங்கள், எதற்கும் இதை கவிக்கோவிடம் தெரிவித்து வைக்கிறேன். என்றார். இவ்வாறாக என் கவியரங்கப் பங்கேற்பும் அதற்கான கவிதைகளும் முடிவு செய்யப்பட்டன.

கவியரங்கிற்கு வரும் முன்பு புத்தகக் கண்காட்சி வளாகத்திற்கு சென்றிருந்தேன். அங்கு நான் சந்தித்த நபர்கள் சிலர் அப்துல் ரகுமான் தலைமையில் நீங்கள் வாசிப்பதா ? நீங்க யாரு… உங்கள் அருமை என்ன… பெருமை என்ன… அந்தஸ்து என்ன.. உடன் வாசிக்கும் மற்றவர்களை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா ? போயும் போயும் இப்படிச் செய்கிறீர்களா ? என்றனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை . கள்ளங் கபடமில்லாத கொங்கு நாட்டு ஆசாமியல்லவா… ? சென்னையில் நிகழும் அரசியல் எனக்கு காற்று வாக்கில் கூட கேட்க நியாயமில்லை. எனக்குக் கவிதை தெரியும் . கவிதை எழுதுபவர்களை மதிக்கத் தெரியும் . அவ்வளவுதான். அதிலும் சிலர் சென்னைக்குத் தங்கள் ஜாகையை ஒட்டு மொத்தமாக மாற்றிக் கொண்டதில் இந்த அரசியல் காய்த்துப் பழுத்து அழுகியும் விட்டது போல. யார் தலைமை என்றாலும் நான் வாசிக்க இருப்பது என் கவிதையைத் தானே என்ற தென்பில் கவியரங்கிற்குள் நுழைந்தேன். அதே கவியரங்கில் உடன் வாசித்த மற்றும் சிலரை இரா. முருகன் போன்றோரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அவருடைய பதிவில் அவர்கள் பெயரைக் கூட குறிப்பிடாததிலிருந்து தெரிகிறது. கவியரங்கிற்கு ஒத்துக் கொண்டவர்களில் ஒரு கவிஞர் கலந்து கொள்ளவும் இல்லை.

இந்தக் குழப்பமான மன நிலையுடன் இருந்தேன் என்றாலும் நான் கவிதை வாசித்தேன் . அக்கவிதைகளை உரிய ஏற்ற இறக்கங்களில் துல்லியமான தோரணையான உச்சரிப்பில் படித்தேன். கவிஞர்களில் அதிகக் கவிதைகள் வாசித்தவனுன் நானே. என்னிடம் 400 கவிதைகள் உள்ளனவே . அப்துல் ரகுமான் கேட்டுக் கொள்ளவே முடித்தேன்.

அரங்கத்தில் இருந்தோருக்கு என் கவிதைகள் மரபான கவியரங்கிற்கு பாடுபொருள் பெரிய நெருக்கடிகளைக் கொடுத்தது. தப்பித் தவறிக் கை தட்டி விட்டால் தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார்களோ என்ற அச்சம் அவர்களை அமைதி காக்கச் செய்தது. என் கவிதையும் வாசிப்பு முறையும் தேர்ந்த ஒன்றாக இல்லாதிருந்தால் இரா.முருகன் ஒரு கவிதையின் ஈற்றடிகள் சிலதை இவ்வளவு தூரம் ஞாபகத்தில் செலுத்திக் குறிப்பிட முடிந்திருக்காது.

அங்கு வாசிக்கப்பட்ட என் கவிதைகள் மரபான கவியரங்கிற்கு பழகிய முதியோரைக் கவர்ந்ததோ இல்லையோ இளைஞர்கள் பலரைக் கவர்ந்தது தெரிந்தது. மற்றொரு கவிஞர் ஒரு கவிதை வாசித்துக் கை தட்டல் பெற்றார் . 2003 இல் செய்தியில் அதிகம் அடிப்பட்ட பெண்மணி யார் ? கஞசாப் பெண் செரீனாவா ? கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போன சிம்ரனா ? என்றெல்லாம் என்னால் சத்தியமாக எழுதவும் முடியாது . ஏற்கவும் முடியாது. என் கண்டனத்தை அக்கவிஞரிடம் நேரிலும் சொன்னேன் என்று ஞாபகம்.

2002 டிசம்பர் 15 அன்று என் கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் காவ்யா வாசகர் கூட்டமாக நிகழ்ந்தது.ஏழு கவிதை நூல்களின் வெளியீட்டு விழாவான அந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கிற்கு முதல் ஆளாகச் சென்று சேர்ந்தவன் நான். எனக்கும் முன்பாக ஒருவர் வந்து காத்துக் கொண்டிருந்தார் அவர்தாம் திரு எஸ். பொ. அவர்கள்.

அந்த மேன்யைான காத்திருப்பைக் கவுரவிக்கும் பொருட்டும் என் நண்பன் யுக பாரதியின் அழைப்பின் நிமித்தமும் அப்துல் ரகுமான் என் மீது கொண்டிருக்கும் அன்பின் நிமித்தமும் நான் தமிழ் இலக்கியம் 2004 கவியரங்கில் கலந்து கொண்டேன். எந்த நிர்பந்தமும் இல்லாத தலைமையில் என் கவிதைகளை சுதந்திரமாக வாசித்தேன். இன்னும் சொல்லப்போனால் அக்கவியரங்கை என் சோதனை முயற்சிக்குப் பயன்படுத்திக் கொண்டேன்.

இரா. முருகன் குறிப்பிடும் ஏமாற்றம் கவியரங்கம் என்ற வெளிப்பாட்டு முறைக்கே பொருந்தும். ஏனென்றால் கவிதைகள் செவி நுகர் கனிகளாக இருக்கும் வரை கவியரங்கம் ஜொலிக்கும் . செவி நுகர் கனிகளாக இல்லாத இருமையான கவிதைகள் கவியரங்கிற்கு ஏற்றவை அல்ல. கவியரங்கம் செத்துப் போய்விட்டது என்போரும் உளர். அக்கவியரங்கம் அப்துல் ரகுமான் வாசித்த கவிதைக்கும் உர் ரென்று அமைதி காத்தன குறிப்பட விரும்புகிறேன்.

இரா.முருகன் கோவை ஞானியின் பெயரை அக்கட்டுரையின் அநேக இடங்களில் ஞாநி குறிப்பிட்டுள்ளதைக் குறையாகச் சொல்வேன்.

மகுடேசுவரன்

முதல் தளம்

கணேஷ் நிட்டிங் வளாகம்,

421 அவிநாசி சாலை

திருப்பூர் 641602

தமிழ்நாடு இந்தியா

தொலைபேசி … 0421 -2205889/2245184/2374874

மின்னஞ்சல்..magudeswaran@vsnl.net

பின் குறிப்பு…

மாலன் அவர்கள் செல்லப்பிள்ளைகள் தறுதலைகளாவது பற்றிச் சொன்னாராம். தமிழ்க் கடவுள் முருகனைத் தறுதலை தகப்பன்சாமி என்பார்கள். நான் முருகனைப் போன்ற தருதலை என்பதைப் பணிவுடன் திரு. மாலனிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகுடேஸ்வரன்

Series Navigation

மகுடேஸ்வரன்

மகுடேஸ்வரன்