கடிதம் அக்டோபர் 21,2004 -பகவத் கீதையைச் சுற்றி நடக்கும் மதச்சார்ப்பற்ற சித்து விளையாட்டுக்களுக்கு சில பதில்கள்

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்


1. பகவத் கீதைக்கு பலர் பல வியாக்கியானங்களையும், பாஷ்யங்களையும் எழுதியுள்ளனர். ஆதி சங்கர பகவத்பாதரும், ஸ்ரீ ராமானுஜரும், மத்வரும் அதனை தத்தம் வெகுவாக வேறுபடும் நிலைபாடுகளிலிருந்து விளக்கம் எழுதியுள்ளனர். அண்மைக்காலத்தில் பகவத்கீதையினை வெகுவாக பயன்படுத்திய ஹிந்து சமுதாய சீரமைப்பாளர்கள் மற்றும் ஆன்மிக அருளாளர்களுள் சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர், லோகமான்ய பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி, ஆச்சார்ய வினோபா, சுவாமி சித்பவானந்தர், சுவாமி சின்மயானந்தர் ஆகியோர் முக்கியமானவர்கள். இதைத்தவிர ஒரு காலகட்டத்தில் விளங்கிய பிறப்படிப்படையிலான சாதிய அமைப்பை நியாயப்படுத்தும்படியான கீதை விளக்கங்களை பிரபலப்படுத்துபவர்கள் திரு.ஜெயமோகன் குறிப்பிட்டது போல கோரக்பூர் கீதா பிரஸ் காரர்கள். துவைதிகளிலேயே உலக அளவிலதான இயக்கமான ஹரே கிருஷ்ண இயக்கம் பழமையில் ஊறிய இயக்கமாயினும் சாதிய விளக்கத்தை ஏற்கவில்லை. (எட்மண்ட் வெப்பர் இதுகுறித்து எழுதியுள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை திரு.ரவி ஸ்ரீநிவாஸ் படித்துப்பார்க்கலாம்.) மேலும் மகாத்மா காந்தியின் கீதை உரைகளில் சாதி அறியப்படும் விதம் அத்தனை திருப்தி அளிப்பதில்லை எனும் உண்மையையும் நாம் எதிர்நோக்க வேண்டியுள்ளது. இந்த வரிசையில் பகவத்கீதை குறித்து மிகத்தீர்க்கமான பார்வையை வைத்தவர் என காஞ்சி பரமாச்சாரியார் அவர்களை நாம் காண முடியாது. பொதுவாக ஹிந்து தேசியவாதத்தின் வரலாற்றை அறிந்தவர்கள் அது ஸ்வாமி விவேகானந்தர் மற்றும் ஸ்ரீ அரவிந்தரிலிருந்து தமது கருத்தாக்கத்தை உருவாக்கிய அளவு திலகரைக் கூட கருத்தாக்க அளவில் பயன்படுத்தியதில்லை என்பதை அறிவர். (பரம பூஜனிய குருஜி அவர்கள் ராமகிருஷ்ண மடத்தின் ஸ்வாமி அகண்டானந்தரிடம் தீட்சை வாங்கியவர் என்பதும் பரம் பூஜனிய டாக்டர் கேசவ பலிராம் கெட்கேவார் அவர்கள் தமது முதல் சேவை நிகழ்வை ராம கிருஷ்ண மடத்தின் வெள்ளநிவாரண சேவைகளிலுமே தொடக்கினர்.) அண்மையில் வெளியான ஒரு ‘மதச்சார்பற்ற ‘ இடதுசாரி ஆய்வுநூல் ஹிந்து தேசியவாதத்ஹின் வேர்களை ஸ்வாமி தயானந்தர், ஸ்வாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர் ஆகியோருக்கு கண்டறிந்து, எனவே இந்திய தேசியத்தின் வரையறை இம்மூவரையும் நிராகரித்து காந்தியிலிருந்து தொடங்கவேண்டும் என வலியுறுத்தியிருந்தது நினைவிருக்கலாம். சுவாரசியமாக இம்மூவரில் பிறப்படிப்படையிலான வர்ணஅமைப்பினை ஏற்பவர் எவருமிலர் மாறாக மகாத்மா அவ்வாறல்ல. ஆக பகவத் கீதை வியாக்கியான வேறுபாடுகளை கொண்டு சங்கம் எவரையும் விமர்சித்ததில்லை; எதிர்த்ததில்லை. வாசிப்பு பிரதிகளில் எண்ணிறந்த வேறுபாட்டுச் சாத்தியங்களை உள்ளடக்கிய பகவத் கீதை போன்றதோர் நூலில் சங்கத்தின் வாசிப்பு பிரதி எவ்விடம் சார்கிறது என்பதனை பார்த்தால் அது போதுமானது. பரம பூஜனீய குருஜியின் ஞான கங்கை முழுக்க அது தெள்ளத்தெளிவாக வெளிப்படுகிறது. அது பிறப்படிப்படையிலான வர்ண அமைப்பினை ஏற்பதல்ல. அதற்கு மாறுபட்ட – ஸ்ரீ அரவிந்தருக்கும், ஸ்வாமி விவேகானந்தருக்கும் மாறுபட்ட வாசிப்புப்பிரதியை திண்ணமாக வைத்தமைக்காக சங்கம் மகாத்மாவையோ அல்லது பரமாச்சாரியரையோ கண்டனம் செய்வது – அல்லது ஏன் செய்யவில்லை என்பது அபத்தமானது.

2. இதனை பரமாச்சாரிய சுவாமிகளே மிகத்தெளிவாக ‘தெய்வத்தின் குரலில் ‘ கூறியுள்ளார்கள்: ‘என்னிடம் கொண்டுள்ள மதிப்புக்கு பொருள் நான் கூறியவற்றையெல்லாம் நீங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்பதில்லை என்று தெரியாமல் இல்லை. சொல்லவேண்டியது என் கடமை நான்கூறுகிறேன். ‘ என்று ஒன்றுக்கு பலமுறை கூறியுள்ளார்கள்.

3. எனில் பகவத்கீதையை பரமாச்சாரியார்தான் பிறப்படிப்படை வர்ணாச்சிரம நூலாகக் குறுக்கினார்கள் எனவேதான் கருணாநிதி பகவத் கீதையை நிராகரித்தார் எனில் அதே அளவுக்கு திருக்குறளின் ‘பார்ப்பான் பிறப்பொழுக்கம் ‘ குறித்தும் திருக்குறளை மேற்கோள் காட்டி பரமாச்சாரியார் கூறியுள்ளதால் அதையும் கருணாநிதி நிராகரித்தாரா எனும் கேள்வி எழுகிறது. இல்லையெனில் ஏன் ?

4.கருணாநிதிக்கு பிறப்படிப்படையிலான அதிகார அமைப்பு சமுதாயத்தில் நிலவுவது குறித்தல்ல கவலை. பெண்ணுரிமைப் பாடும் கவிதாயினிகள் கூட கருவறை வாசனையை பொதுப்பிரக்ஞையில் எழுப்பும் குடும்ப உறுப்பினர்கள் முதல் மத்திய மந்திரிகளாவது கூட குடும்பத்தகுதியை பார்க்கிற அதை வெளிப்படையாக கூறும் நேர்மை இல்லாத தன்மையை உடைய ஒரு மனிதர், அவரது கட்சிப்பிரச்சனைக் கூட கருவின் குற்றமாக வெளிப்படக்கூடிய ஒரு மனிதர் அவ்வாறு நினைத்து சீறி எழுவார் என நான் நினைக்கவில்லை – அந்த அளவுக்கு எனக்கு கற்பனை வளம் இல்லை – மன்னிக்கவும்.

5.பரமாச்சாரியாரின் கீதை வியாக்கியானங்களையும் சரி, ஞானபூமி மற்றும் கோரக்பூர் பிரசுரங்களின் கீதை வியாக்கியானங்களை வெகுவாக கண்டிக்கிற டி.ராமன் எழுதிய ‘கீதை சொல்லும் சாதி ‘ எத்தனையோ ஆண்டுகளாக சங்க காரியாலயங்களில் கிடைக்கின்றன. பரமாச்சாரியாரின் விளக்கம் தவறு ஸ்வாமி சித்பவானந்தர் இப்படி கூறியுள்ளார் இதைதான் நாம் ஏற்கமுடியும் என கருணாநிதி சொல்லியிருந்தால் அது கண்டனத்துக்குள்ளாகாது. எனக்கு கீதையில் நம்பிக்கை இல்லை என கூறியிருந்தால் அது கண்டனத்துக்குரியதாகாது. மாறாக, ‘எனவே நாம் கீதையையே ஒதுக்குவோம். கீதை சொல்வதை இப்படி சாதீயமாகத்தான் பொருள் கொண்டு ஒதுக்கவேண்டும். ‘ என வாக்கு வங்கி அரசியலுக்காகக் கூறும் போதுதான் பிரச்சனை ஆரம்பமாகிறது.(பரமாச்சாரியாரே நான் சொல்லுகிறபடிதான் நீ கீதைக்கு பொருள் கொள்ளவேண்டும் எனக் கூறவில்லை என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.) சங்கம் பதிலளிக்க வேண்டியுள்ளது.

-எஸ்.அரவிந்தன் நீலகண்டன்

infidel_hindu@rediffmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்