பித்தன் – நரேந்திரன் – அரவிந்தன் – கா.மெளலாசா –
நண்பர் இஸ்மாயிலுக்கு,
நீங்கள் பெரியாரைப் படித்திருப்பது குறித்து மகிழ்ச்சியே. அது இந்து மதத்தின் ஒரு பக்கம்.
களையப்படவேண்டிய பக்கம். ஆனால் ஒரு பக்கத்தை மட்டும் படித்துவிட்டு வாதத்திற்கு வருவது
ஏற்புடையதல்ல. கவிஞரின் புத்தகத்தையும் படியுங்கள். நான் இரண்டையும் படித்திருக்கிறேன்.
மற்ற மத போதகர்களின் நூல்களையும் படித்திருக்கிறேன். பெரியாரைப் படித்ததனால் விவேகானந்தரை
படிக்காமலில்லை. இரண்டையும் படித்து, மனதில் கொண்டு, சிந்தித்து ஒரு தெளிவுக்கு வரவேண்டும்.
என் கடிதத்தின் மற்ற பகுதிகளையும் படித்திருந்தால், நீங்கள் கேட்கும் இந்து மதக் கேள்விகளை
நானே கேட்டுகொண்டிருப்பது தெரியும். (கருவறையுள் நுழைவது குறித்து). அதை நீங்கள் எப்படிக்
கேட்டிருந்தாலும் நியாயமே! ஆனால் விவாதம் இந்து மதத்தைப் பற்றியது அல்லவே. நான் நண்பர் ரூமிக்கு எழுதியிருந்த கடிதத்திலேயே குறிப்பிட்டிருந்த்தேன். அதாவது உங்களிடம் ஒரு கேள்வி கேட்டால், பதிலுக்கு ஒரு கேள்வி கேட்பது
பதிலாகிவிடாது என்பது. உங்கள் மதத்திலுள்ள குறைகளை சுட்டிக் காட்டினால், பதிலுக்கு மற்ற மதங்களிலிள்ள குறைகளை சுட்டிக் காட்டுவது பதிலாகிவிடாது. அது கேள்விக்குமேல் கேள்வியே. நீங்கள் உங்கள் மதத்திலுள்ள கருத்துக்களைக் கூறி அதை சரியென்பதாக எழுதியிருந்ததில் நான் கண்ட தவறுகளை சுட்டிக் காட்டியே இந்த வாதம் தொடங்கப்பட்டது. அதற்கான மறுப்புகளையோ பதில்களையோ தருவது தான் சரி. அது போல இந்து மதத்தையோ அல்லது வேறு மதத்தையோ சிறந்தது என்று யாரவது எழுதினால் அப்போது உங்கள் கருத்துக்களை, கேள்விகளைக் கேளுங்கள். அவர்கள் விடையளிக்கட்டும். அப்படி இல்லையெனில் விவாதம் முடிவுறாதது மட்டுமல்ல, இடம் பெயர்ந்து, வேறு இடங்களுக்குள் பரவி விடுகிறது.
மதம் ஒழுக்கத்தைப் போதிக்கிறதுதான். மதம் சமுதாயம் சார்ந்தது தான். ஆனால் மத ஒழுக்கம் மட்டுமே ஒழுக்கமல்ல. சமுதாய ஒழுக்கத்தின் ஒரு பகுதிதான் மத ஒழுக்கம். அதுபோல மதமே சமுதாயமாகிவிடாது. அது சமுதாயத்தின் ஒரு பகுதிதான். சமுதாயத்தில் எல்லா மதத்தினவரும் இருக்கிறார்களல்லவா ? எனவே மத ஒழுக்கத்தை மட்டும் சமுதாய ஒழுக்கமாக கொள்ளமுடியாதென்பது தெளிவாகிறது. அதைதான் நான் குறிப்பிட்டேன். இந்து மதத்தில் பூசாரிகள் ஆடை அணிவது பற்றி எதுவும் சொல்லப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால் நீங்கள் மீண்டும் பெண் பூசாரிகள் கண்ணிய ஆடை அணியவேண்டுமென்று இந்து மதம் வற்புறுத்துகிறதா என்று கேட்கிறீர்கள்! அப்பெண்கள் கண்ணிய சமுதாயத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் அப்படி ஆடை அணிகிறார்களய்யா.
ஒரு கொலைக்குற்றத்திற்கான வழக்கு 10 ஆண்டுகள் நடைபெறுகிறது. ’10 வருடங்களுக்குமுன் கொலை செய்ததற்கு இப்போது தண்டனை கொடுக்க முடியுமா ? அப்போதே கொடுத்திருக்கவேண்டும் ‘ என்பது போல இருக்கிறது வியப்பான உங்கள் வாதம். 800 வருடங்களென்ன எத்தனை ஆயிரம் வருடங்களானாலும் அநீதி களையப்படவேண்டும். சில அநீதிகள் நிலைப்பது போல இருந்தாலும் என்றாவது நீதி வெளிவந்தே தீரும் என்றுதானே அனைவரும் கூறுகிறார்கள்.
சிறுவன் மிட்டாய் திருடிவிட்டால் க(த)ண்டிக்கக் கூடாதென யார் சொன்னது ? அதற்கு மரணதண்டனை வழங்கமுடியுமா என்றுதான் கேட்டேன். அவர்கள் நம்பும் கருத்தை தெரிவிப்பதெற்கெல்லாம் (தஸ்லிமா நஸ்ரீன், சால்மன் ருஷ்டி….)
மரணதண்டனை அதிகம் என்பதற்காகத்தான் அந்த எடுத்துக்காட்டு. தானாக முன்வந்து முகமூடி அணிபவரைத் தடுத்தால் அதுவும் தவறுதான். மத விசயங்களில் எல்லா கட்டாயங்களும் தவறுதான். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ‘, ‘கண்கள் மூளையின் சாளரங்கள் ‘ என்றெல்லாம் தமிழில் படித்து தொலைத்துவிட்டேனய்யா, எனவே முகத்திற்கு பதில் ஒரு கருப்புத் துணியைப் பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
மனிதன் தோன்றியபின்தான் கடவுளே தோன்றினார் என்று நான் சொல்லவில்லை. மதம் தோன்றியதாகத்தான் சொல்கிறேன். நெருப்புக்கோளத்திலிருந்து வெடித்து பூமி தோன்றிய போது மனிதனே இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப்
பின்தான் மனிதன் தோன்றியிருக்கிறான். அதற்குமுன் மதம் இருந்திருக்க முடியாதல்லவா ? கடவுள் ஆதி அந்தம் இல்லாதவர் அவர் அதற்குமுன்னும் இருந்திருப்பார். ஆனால் மதம் அப்படியில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்தான் கிறிஸ்து பிறந்தபின் கிறிஸ்துவம் தோன்றியது. அதற்குமுன்னும் அந்த மக்கள் கடவுளை வணங்கித்தான் வந்திருப்பார்கள். எனவே மதம் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டதுதான். அதற்காகவே, இராமனும், கண்ணனும், நபிகளும், கிறிஸ்துவும் ஒரு பிறவி எடுத்திருக்கிறார்கள்! மேலும் மதக்கருத்துக்கள் பல நூறு வருடங்களாக இருந்து வருகின்றன. இடை சொருகல்கள் இருக்கும். ஆரம்பத்தில் கடவுள் சொன்னதாக இருந்தாலும், பின் வந்த மத போதகர்கள் தங்கள் கருத்தையும் அதில் புகட்டி வருவார்கள். எனவேதான், மனிதநேயத்துக்கு எதிரான கருத்துக்கள் இருந்தால் – அது கடவுளர்கள் சொன்னதாகவே சொல்லப்பட்டிருந்தாலும் – அதை களைய பாடுபடவேண்டும் என்று கேட்டிருந்தேன். கடவுள் நிச்சயம் அப்படிப் பட்டக் கருத்துக்களை சொல்லியிருக்க மாட்டார்.
‘செளதிக்கு போனால் மூடிகிட்டு போகவேண்டியதுதானே ? ‘ என்று நீங்கள் எழுதியிருப்பது வியப்பாக இல்லை. (முதல் வாதமெனில் வியந்திருப்பேன்!) இந்த வாதம் என் கேள்விகளிலிருந்த அடிப்படை நியாயத்தையே தகர்த்துவிடுவதால் இனி உங்களிடம் பேசுவதில் ஒரு பயனும் இல்லை என்றாகிறது! அந்த சட்டமே மத சம்மந்தமானது, சட்டம் போட்டு மதத்தை பின்பற்ற சொல்லி ஏன் வற்புறுத்திகிறீர்கள் ? என்பதும் இஸ்லாமிய நாடுகளில் தான் இப்படி மதத்தை வற்புறுத்தும் சட்டங்கள் இருக்கின்றன இதை ஏன் நீங்கள் யாரும் தட்டிக் கேட்பதில்லை ? என்பதும் தான் கேள்வியே.
சட்டம் போட்டு கட்டாயம் தான் படுத்துவோம் என்று நீங்கள் இதில் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்து இருக்கிறீர்கள்!
இந்த சட்டங்கள் எந்த மதத்திற்கும் எதிரானதல்ல என்று வேறு நீங்கள் எழுதுகிறீர்கள்!! ? செளதிக்கு செல்லும் மற்ற மதத்தினர் தங்கள் கடவுள் உருவங்களை எடுத்து செல்லக் கூடாது. விமான நிலையத்திலேயே தடுத்துவிடுவார்கள்.
உலகத்தில் வேறு எந்த நாடுகளுகளிலும் இப்படி மற்ற மதத்தை பின்பற்றுவதை தடுப்பதில்லை. இதுவும் கூட எந்த மதத்தினருக்கும் எதிரானதல்ல என்பீர்களோ ?!
சட்டம் ஏற்றப்பட்டு விட்டதாலேயே அதை தவறென்று கருதக்கூடாதென்றுm கூறமுடியாது. சட்டங்கள் மனிதர்களால் இயற்றப்படுகின்றன. தவறுகள் இருக்கும். மூடிகிட்டு சட்டம் சரியென்று போகவேண்டியதுதானே எனக் கூறினால் என்ன செய்ய ? தவறுகளை திருத்தவே சட்ட திருத்த மசோதாக்கள் இருக்கின்றன. (ஜனநாயக நாடுகளில்) அதுபோல தவறு இருப்பின், மற்ற மதத்தினரைப் புண்படுத்துவதாக இருப்பின் அதை களைய குரல் கொடுக்க வேண்டும். அப்படி ஏன்
‘தவறுகள் இருப்பின் அதை களைவது ஒவ்வொரு இஸ்லாமியனின் கடமை ‘ என்று கூறுபவர்கள் குரல் கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள் ? என்றுதான் கேட்டேன். உங்கள் இயலாமையும் கோபமுமே வெளிப்படுகிறது. உண்மை அல்ல.
‘பர்தா என்பது இஸ்லாமின் அடையாளம், அதில் எந்த முரணான கருத்தையும் ஏற்பதில்லை ‘ என்று எழுதியுள்ளீர்கள்.
இப்படி கண்மூடித்தனமாக ஏற்பது என்று ஆனபின் விவாதம் எதற்கு ? நீங்கள் இஸ்லாமியக் கருத்துக்களை, சரியென்று எண்ணி பெருமையை காட்ட முதலில் எழுதியிருக்கவேண்டும். நான் தான் அது தெரியாமல் விவாதத்தை தொடங்கிவிட்டேன் போலிருக்கிறது. உங்கள் முதல் கட்டுரையிலேயே, இது இப்படித்தான் எந்த மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று எழுதியிருந்தால் நாம் தேவையில்லாமல் 4 வாரங்களையும், நேரத்தையும் வீணாக்கியிருக்க
வேண்டியிருந்திருக்காது. ‘தவறுகள் இருந்தால் களைய பாடுபடுவோம் ‘ என்று எழுதியதை நான் தான் உண்மையென்று எண்ணி தவறாக புரிந்துகொண்டிருந்திருக்கிறேன்! நான் போன வாரமே குறிப்பிட்டதுபோல தவறு இருப்பதையே ஒத்துக்கொள்ளாத போது அதை திருத்துவது எப்படி ? ‘திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ‘ என்ற பாடலைப்போல தவறுகள் கொண்டவர்கள் தங்களாகவே உணர்ந்து திருந்த வேண்டும். எத்தனை சட்டங்களும், கருத்துக்களும், விவாதங்களும், அவர்களை திருத்திவிட முடியாது. எனவே உங்கள் விருப்பப்படியே இந்த விவாதத்தை நிறுத்திக்கொள்வோம்.
நீங்கள் நண்பராக இருக்கும் நிலையில் ஒரு மாற்றமுமில்லை. கருத்துக்களோடுதான் என் மோதல். தனி மனிதர்களைத் தாக்குவதில் எனக்கு நம்பிக்கையில்லை. அந்தணர்களையோ, சங்கராச்சாரியையோ தாக்கி நான் எழுதுவது போல தோன்றினாலும் கூட அவர்கள் கொண்டிருக்கும் ஜாதி வெறிக் கருத்துக்களைத் தாக்கியே என் மோதல்கள்.
நட்புடன்,
பித்தன்.
****
ஐயா ஞாநி அவர்களே, இனி நீங்களோ உங்கள் நண்பர்களோ நாடகம் போட வேண்டுமெனில் உங்கள் நாடக ஆக்கத்தை எடுத்துக்கொண்டு வரதனிடமோ சங்கராச்சாரியிடமோ போங்கள். அவர்கள் அனுமதி அளித்தால் போடுங்கள். அல்லது அவர்களே ஒரு ‘சிரிப்பு ‘ நாடகத்திற்கு ஐடியா கொடுப்பார்கள்!! ஆகா என்ன ஒரு சுதந்திர நாடு!
இன்னும் ஆதிக்கவெறி அடங்காமல் இருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது. இந்த வரதன் இருக்கிறாரே, ஞாநியின் கட்டுரையை, அதில் சொல்லப்பட்ட நாடகத்தைப் பற்றி முழுமையாகப் படித்தாரா என்பதே கேள்விக்குறி ? இந்து மதத்தைப் பற்றியோ சங்கராச்சாரி பற்றியோ யாராவது எழுதியிருக்கிறார்களா ? எடு பேப்பரரை (அல்லது தட்டச்சு/கணினியை), தி.மு.க., கலைஞர், ஸ்டாலின், பா.ம.க, ம.தி.மு.க மற்றும் R.S.S-கு எதிரானவர்கள் அத்தனை பேரையும் பற்றி திட்டி எழுது, அப்புறம் மீதியைப் பார்த்துக்கொள்ளலாம் என்று இருப்பார் போலிருக்கிறது. அந்த நாடகத்தில் என்ன தவறு என்று விளக்கி எழுதியிருந்தால் பரவாயில்லை. அந்த நாடகத்தில் வாரிசு ஒன்றும் பட்டத்திற்கு வரவில்லையே
அப்புறம் எதற்கு, வாரிசு அரசியல்களை தேவையில்லாமல் இப்போது சாடுவது ? அந்த நாடகத்தில் தகுதி உள்ளவன் தலைவனாகிறான், இதில் இவருக்கு அல்லது சங்கராசாரிக்கு என்ன பிரச்சனை ? அதை விளக்கினால் தேவலை.
அதுவும் நாடக்த்திலுள்ள சங்கராச்சாரியே, தகுதி இருப்பதால் தலைவராக ஏற்றுக்கொள்கிறார். ஒரு உண்மையான துறவி அப்படித்தான் சொல்வார். இப்போதிருக்கும் சங்கராச்சாரி துறவியே இல்லை. அரசியல் வாதி என்பதையே இது காட்டுகிறது. துறவி என்பவன் ஆணவம் அழிந்தவன். ‘இந்து மதத்தை காப்பாதுறதுக்குத்தான் ( ?!!) நான் இருக்கேனே உனக்கு எதுக்கு அந்த வேலை ? ‘ என்று கேட்கிறார் என்றால் என்ன ஒரு ஆணவம் இருக்க வேண்டும். அவர் எப்படி துறவியாக இருக்கமுடியும் ? துறவி என்பவன் எல்லாப் பற்றுக்களையும் அறுத்தவன். வெறுமே, திருமணம் செய்துகொள்ளாமலிருப்பவன் அல்ல. ஆட்சி அதிகாரங்களில் தலையிடும், அதிகாரிகளை காலில் விழவேண்டும் என்று ஆதிக்க அதிகாரப் பற்று கொண்டவன் எப்படி துறவியாக இருக்கமுடியும் ?
‘நாலாந்திர கட்சியான தி.மு.க.வில் தகுதி இருந்தால் தி.மு.க. தலைவராக முடியுமா ? ‘ என்று கேட்கிறார் வரதன். என்ன சொல்லவருகிறார். தி.மு.கவில் தகுதி இருந்தால் தலைவராக முடியாது என்பது போல சங்கர மடத்துக்கும் தகுதி இருந்தால் தலைவராக முடியாது (இல்லையென்றால் இப்போதிருப்பவர் எப்படி மடத் தலைவராகியிருப்பர் ?!) சாதி தான் முக்கியம் என்று தங்கள் சாதி வெறியை ஒத்துக்கொள்வதோடு, சங்கரமடமும் ஒரு நாலாந்திர மடம் என்றும் ஒத்துக் கொள்கிறார். பாரட்டத்தான் வேண்டும்! ஒரு V.C. கான தகுதி படிப்பு இருந்தால் V.C. ஆகலாம். இதில் என்ன தவறு ?
(இப்போது அப்படி தேவையில்லை. தகுதி இல்லையென்றாலும் காஞ்சிக்கு போய் அவா காலில் விழுந்தால், அவா கிட்ட இருந்து மந்திரி அவா கிட்ட போய் நீங்கள் V.C. ஆகிவிடலாம்!)
எல்லோருக்கும் ஐடியா கொடுக்கிறாரே, இவரே போய் ஸ்டாலின், அன்புமணி பற்றியெல்லாம் நாடகம் போட வேண்டியதுதானே. அவா சொன்னதற்காக வெறும் சிரிப்பு நாடகம் தான் போடுவார்கள் போலிருக்கிறது.
‘பிடிக்கவில்லை எனில் வெளியே போகவேண்டியதுதானே ‘ என்று நீங்கள் சொல்ல முடியாது. (ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்ட முடியாது.) நீங்களே சொல்கிறீர்கள் குறவர்கள் தான் உண்மையான தமிழர்கள் என்று. எனவே குறவர்கள் சொன்னால் சங்கராச்சாரிகளும் , சங்கர மடங்களும் தானே போகவேண்டும்! சங்கரமடம் தொண்டு நிறுவனமா ? இதைப்போய் காதில் பூ சொருகிக்கொண்டிருப்பவர்களிடம் சொல்லுங்கள் ஒத்துக்கொள்வார்கள். தொண்டு என்பது எதையும் எதிர்பாராமல் செய்வது. காந்தி செய்தது தொண்டு. அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவரே பிரதமராக வரவேண்டும் என்று நினைத்திருந்தால் யாரும் தடை சொல்லியிருக்க மாட்டார்கள். ஆனால் அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆட்சி அதிகாரம் வேண்டி, எல்லோரும் தங்களை தலைவராக ஏற்று தொழவேண்டும் என்ற நினைத்துக்கொண்டு, சாதிவெறிக்கு மதத்தின் பெயரால் தூபம் போட்டுக்கொண்டிருக்கும் சங்கரமடம் தொண்டு நிறுவனமா ? அட வெட்கக்கேடே.
எதற்கெடுத்தாலும் இந்து மதத்தலைவர்களை( ?!) திட்டுகிறார்கள் என்று புலம்பினால் எப்படி. முதலில் இந்து மதத் தலைவர் என்று சொல்வதே அபத்தம். இந்து மதத்திற்கு என்ன, எல்லா மதத்திற்கும் கடவுள் தான் தலைவன்.
மற்றவர்கள் தலைவன் தாள் பணிபவர்கள் தான். மதத்த்லைவர்கள் என்ற சொல் பிரயோகமே பின்னர் அரசியலோடு மதம் கலக்க ஆரம்பித்த பின் வந்தது. ஆழ்வார்கள், நாயன்மார்கள், சமயக் குறவர்கள், துறவிகள் இப்படித்தான் முன்பு குறிப்பிடப் படுவார்கள். தலைவர்கள் என்று சொல்லிக்கொள்வதிலேயே அவர்கள் ஆதிக்க ஆசைக்கு அடிமையானவர்கள் என்று விளங்குவதோடு, உண்மையான தலைவரை – கடவுளை – மதிப்பதையும் தங்கள் வசதிக்கு மாற்றிகொண்டிருக்கிறார்கள் என்பதும் விளங்கும். 5 சங்கராசாரிகள் இருக்கிறார்கள். சைவர்களை வைணவர்கள் ஒத்துக்கொள்வதில்லை. சஙகரர்களை ஜீயர்களும், ஜீயர்களை சஙக்ரர்களும் ஒத்துக்கொள்வதில்லை. இதில் என்ன தலைவர் வேண்டிகிடக்கிறது ? இந்த சங்கராச்சாரிக்கு முன் இந்து மதம் இல்லையா ? இவர் தான் வந்து காப்பாற்றுகிறாரா ? என்ன ஒரு ஆணவ சிந்தனை. பல காலம் இந்து மதம் விரிந்து பரவி கிடக்கிறது. யாரும் அதைக் காப்பாற்றத் தேவையில்லை. அதுதான் எல்லாரையும் காப்பாற்றும். இந்து மதத்தைக் காப்பாற்றும் பொறுப்பை யாரும் இவருக்கு தரவில்லை. இந்து மதத்தில் யாரும் இவரை தலைவராக நியமிக்கவில்லை. நான் தான் இந்துமதத் தலைவன், இந்துமதத்தைக் காப்பாற்றுபவன், என்று யார் சொல்கிறார்களோ அவர்கள் உண்மையான தலைவனான இறைவனுக்கு துரோகம் செய்வதோடு தலைவனாக, ஏன் ஒரு துறவியாக இருக்கும் தகுதியையும் இழந்துவிடுகிறார்கள். குறைந்த பட்சம் இந்துமதக் குரு என்று கூட யாரும் சொல்லிக்கொள்ள முடியாது. யாராவது சிலருக்கு வேண்டுமானால் குருவாக இருக்கலாம், அதுவும் அவர்கள் குருவாக ஏற்றுக்கொண்டால்தான் அப்படி சொல்லிக்கொள்ள முடியும்.
****
அரவிந்தன் நீலகண்டனின் கடிதத்தில் புதிதாக எதுவும் இல்லை. நான் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதில் இல்லை. சமுதாய காரணங்களுக்குத்தான் சமஸ்கிருதம் படிக்கவேண்டும் எனில் ஒரே ஒரு நியாயமான காரணத்தையாவது சொல்ல சொல்லியிருந்தேன். சொல்லுவார் என்று எதிர்பார்த்தேன். அவரால் சொல்ல முடியவில்லை. பாவம் இருந்தால் தானே சொல்லமுடியும் என்று தேற்றிக்கொண்டேன். அம்பேத்கார் போல, அப்துல் கலாம் சொன்னால் தமிழை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்வீர்களா ? என்றும் கேட்டிருந்தேன். இப்போது அம்பேத்கார் சட்ட அமைச்சராக சொன்னது என்கிறார். அப்துல் கலாம் ஜானாதிபதி என்பது அவருக்கு தெரியாது போலிருக்கிறது. என்றாலும் கேள்வியை மாற்றி தெளிவாக கேட்கிறேன். ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் பாராளுமன்றத்திலேயே, தமிழ்தான் தேசிய மொழியாக இருக்கத் தகுதியானது என்று சொன்னால் தமிழை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்வீர்களா ?! அப்படித்தான் ஹிந்தி மொழி வெறியர்கள் விட்டுவிடுவார்களா ?! விவேகானந்தரின் கருத்து முழுக்க முழுக்க மதம் சார்ந்தது என்று முன்பே குறிப்பிட்டாயிற்று. விவேகானந்தரின் எந்த புத்தகத்தை வாசித்தாலும், அவர் வேத, உப நிஷங்களில் கொண்டிருந்த ஈடுபாடு தெரியும். அவற்றை எல்லோரும் படிக்கவேண்டும் என்று விரும்பி கூறியிருக்கிறார். சமஸ்கிருத நூல்களாகிய வேத உபனிஷத்துக்களை படிக்க சொன்னதால் சம்ஸ்கிருதத்தை படிக்க சொன்னது போல இருக்கிறது.
இப்படியும் சொல்லலாம். அதாவது சம்ஸ்கிருதம் படிக்க சொன்னது வேத உப நிஷத்துக்களை படிக்க சொல்லவே.
ஆனால் அதற்கு இப்போது தேவையில்லை. அவைகளை மொழி பெயர்த்துவிட்டாலே போதும் என்று தொடர்ந்து எழுதி வருகிறேன். அது ஏன் உங்களுக்கு புரியவில்லை என்று தெரியவில்லை. (புரிந்து கொள்ளும் எண்ணமேயில்லை! ?).
நீங்கள் கூறிய புறப்பாடலில் ‘முதுநூல் ‘ என்றுதான் உள்ளது, அதை எப்படி சமஸ்கிருதம் என்று அர்த்தப் படுத்துகிறீர்கள்
என்று விளங்கவில்லை. அதே போல பாரதியார் பாடல்
‘மெய்மை கொண்ட நூலையே – அன்போடு
வேதமென்று போற்றுவாய் வா வா வா ‘ என்றுதான் உள்ளது. இதையும் எப்படி சம்ஸ்கிருதத்திற்கு சம்பந்த படுத்துகிறீர்கள் என்று விளங்கவில்லை. நீங்கள் தலைகீழாக கருத்து கொள்வது போல தெரிகிறது. அதாவது இப்போது நீங்கள் வேதம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் நான்கையும் மெய்மை கொண்ட நூலகள் என்று பாரதியார் கூறுகிறார் என்று கருத்து கொள்வதுபோல தெரிகிறது. அது அப்படி இல்லை ஐயா. மெய்மை கொண்ட நூல்கள் அனைத்தையும் –
திருவாசகத்தையும், திருக்குறளையும் இன்னும் அனைத்து நல்ல நூல்களையும் – வேதம் என்று போற்றுவாய் என்றுதான்
பாரதியார் கூறுகிறார். (இப்படித் தலைகீழாகத்தான் இந்து மதக்கருத்துக்களையும் புரிந்துகொண்டு இருப்பீர்களோ ? )எங்கே, திருவாசகத்தையும், திருக்குறளையும் வேதமென்று, சங்கராச்சாரிகளையோ அந்தணர்களையோ சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்!
நீங்கள் சிறுதொண்டருக்கு கொடுத்த பாடல் வரிகளாகிய
‘ஆயுள்வே தக்கலையும் அலகில்வட நூற்கலையும்,
தூயபடைக் கலத்தொழிலும் துறை நிரம்பப் பயின்றவற்றால் ‘
என்பதிலேயே ‘வட நூற்கலையும் ‘ என்று மிகத் தெளிவாக வட மொழி, தமிழருக்கானது இல்லை என்று மிக மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறதே. தமிழருக்கான மொழி என்றால் இப்படி பிரித்து எழுத அவசியமே இல்லையே.
‘சமஸ்கிருத மூலத்தைப் படிக்காமல் செவிவழி இராமகாதை அறிவின் மூலம் முயற்சித்தார் என்று வாதத்திற்காக கூட கம்ப நாட்டாழ்வாரை கீழ்மை படுத்த வேண்டாமே. ‘ என்று குறிப்பிடுகிறீர்கள். இதில் கீழ்மை படுத்த என்ன இருக்கிறது.
அப்படி எழுதியிருந்தால் அது கம்பனுக்கு இன்னும் பெருமைதான். சமஸ்கிருதம் படித்திருக்காவிட்டால் கம்பர் கீழானவராக ஆகிவிடுவாரா ? அடடே, என்னே உங்கள் சமஸ்கிருத வெறி! சமஸ்கிருதம் படித்திருந்தால் அந்த (சாதி வெறியை அளிக்கும் மொழியை படித்த) பாவத்தைப் போக்கிக் கொள்ளவே தெய்வத்தமிழில் இராமாயணத்தை கம்பர் எழுதியிருக்கவேண்டும்!!
எல்லோரையும் கோவிலுக்குள் விடு, எல்லோரையும் சமமாக நடத்து என்று சொல்லிய பெரியார் சமூக சீர்திருத்தவாதி இல்லையாம்! இன வாதமாம். ‘இந்த தெருவுக்குள்ளே வரப்படாது, என்னை தொடப்படாது, தொட்டா என் தீட்டு உனக்கு ஒட்டிக்கும்; கீழ் சாதி மேல் சாதி ‘ என்பது போன்ற அடிமுட்டாள்தனமான கருத்துக்களை சொல்பவர்கள்தான் சீர்திருத்தவாதிகள் போலிருக்கிறது!! பெரியார் சமூக சீர்திருத்தவாதியில்லை எனில் யாருமே சீர்திருத்தவாதியில்லை.
அவர் கூறிய கருத்துக்களை பகுத்தறிவற்றது என்று சொல்லும் தகுதி, சங்கராச்சாரிகளின் கால்களிலேயே அடிமை பட்டுக்கிடக்கும் எவருக்கும் இல்லை.
‘இந்த பகுத்தறிவுக் கருத்துக்களை சமுதாய சீர்திருத்தம் என்று சொல்வதைப் போல வயிற்றைக் குமட்டும் விஷயம் வேறெதுவும் இருக்கமுடியாது ‘ என்று நீங்கள் சொல்வது எதிர்பார்க்கக் கூடியதுதான். இத்தனைக் காலமாய் அதிகம் படிப்பறிவில்லாத, வெகுளியான மக்களை ஏமாற்றி, நீ கீழ் சாதி என்ற கீழ்த்தரமான கருத்தைப் பரப்பி, அவர்கள் உழுது கொடுக்கும் உணவையே வெட்கமில்லாமல் உண்டு, தொந்தி வளர்த்து திரியும் கூட்டத்திற்கு, ‘அனைவரும் சமம், நீயும் வந்து வேலை பார் ‘ என்று சொன்னால் குமட்டத்தான் செய்யும். இதில் ஒன்றும் அதிசயமில்லை. குமட்டட்டும். நல்லது தான் இத்தனைக் காலம் வயிற்றுக்குள் வளர்த்து வந்த விஷங்கள் வெளியே வர உதவும்! அப்படியாவது மேலான மனிதர்கள் ஆக முயற்சிக்கட்டும். என்றாலும் அவர்கள் மண்டைக்குள்ளிருக்கும் விஷங்களும் இரங்கி மக்களை சமமாக ந்டத்தும் நாள்தான் பொன்னான நாள். அப்போதுதான் அவர்களும் முழுமையான மனிதர்களாக உயர்வு பெறமுடியும்.
இனவாதத்திற்காக மக்களைக் கொன்று குவித்த தீவிரவாத ஹிட்லரோடு, இனவாதத்தை அழிக்கக் குரல் கொடுத்து, மூட நம்பிக்கைகளை சுட்டிக்காட்டிய சமூக சீர்திருத்தவாதி பெரியாரை ஒப்பிடுவதே மடத்தனம். அப்படி செய்யும்போதே
உங்கள் நியாயமற்ற இலக்கு தெரிந்துவிடுகிறது. சுதந்திரம் வாங்கி தந்த காந்தியையே ‘அவர் ஒன்றும் செய்யவில்லை, நாட்டின் தந்தையில்லை ‘ என்பது போன்ற பொய்யான தகவலை வரலாறு ஆக்க முயற்சித்துக்கொண்டிருக்கும் கும்பல்களிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும் ?
பெரியாரின் சீர்திருத்தக் கருத்துக்கள் உங்களுக்கு பிடிக்காமலிருப்பது புரிகிறது. ஆனால் காரணம் விளங்கவில்லை!
இனவாதக் கருத்துக்கள் என்று நீங்கள் ஒதுக்குவதற்கான முகாந்திரம் உள்ளது. ஆனால் அது மேம்போக்காக பார்ப்பதினால் வருவது. பெரியாரின் வழிமுறைகள் அடாவடியாகத் தெரியும். ஆனால் அதன் அடிப்படையில் நியாயம் உள்ளது. ‘பாம்பையும் பார்ப்பனையும் பார்த்தால் பார்ப்பனை முதலில் அடி ‘ என்று சொல்வது தவறானதுதான். அனால் இவை வெறும் வார்த்தைகள் தான். அவர் ஒன்றும் அவ்வாறு செய்துவிடவில்லை. ராஜாஜியுடன் அவர் நட்போடுதான் இருந்திருக்கிறார். ஒரே மேடையில் இருவரும் தோன்றியிருக்கிறார்கள். அப்போது பெரியார் ஒன்றும் தடி கொண்டு இராஜாஜியை அடித்துவிடவில்லை! பெரியாரின் மோதல்கள் ராஜாஜியின் ஜாதிவெறிக் கருத்துக்களோடுதான்.
பெரியாரின் மோதல்கள் இந்துமததிலுள்ள மூட நம்பிக்கைகளோடு தான்; ஜாதியை நியாயப்படுத்தும் சமயக் கருத்துக்களோடுதான். இதைப் புரிந்து கொள்ள முடியாமல் நுனிப்புல் மேய்பவர்கள்தான் வெறும் வார்த்தைகளைப் பார்த்துவிட்டு, இனவாதப் பிரச்சாரம் என்று சொல்கிறார்கள். கீழ்சாதிக்காரர்கள் எனப்படுவோரையும் சமமாக நடத்தச்
சொல்லும் மனித நேயம் பெரியாரிடம் இருந்திருக்கிறது. அதை அவர் செய்யவேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை.
வெறும் மனித நேயம்தான். அவ்வளவு மனித நேயம் கொண்ட ஒரு மனிதர் ஒரு இனத்தவரை பார்த்ததும் அடிக்க சொல்கிறார் என்றால் ஏன் ? என்று சம்பந்தப் பட்டவர்கள் சிந்திக்கவேண்டும். மனித நேயம் கொண்ட மனிதர்களாகவே அவர்கள் நடந்து கொள்ளவில்லை. நிலமை அவ்வளவு மோசமாக இருந்திருக்கிறது. ஒரு பெரியார் வந்து போன பின்னும் நிலமை இன்னும் அப்படியேதான் இருக்கிறது. இன்னும் மனு கருத்துக்களை உண்மை என்று, சாதி வெறி ஊட்டும் சங்கராச்சாரிகளும், அவர் காலில் விழும் கூட்டமும் இருந்து கொண்டுதானிருக்கிறது. மனிதர்களை மலந்திண்ண வைக்கும் கூட்டத்தைக் கண்டிக்க ஆளில்லை. நிலமை இப்படி இருக்கும் வரை பெரியாரின் கருத்துக்களுக்கு
வலு இருந்துகொண்டுதான் இருக்கும். பெரியாரின் கருத்துக்களை நீங்கள் ஒழிக்க விரும்பினால் முதலில் உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். மனிதர்கள் யாவரும் சமம் என்று உணரவேண்டும். உணர்ந்து அதன்படி நடந்தால்
பெரியாரின் கருத்துக்களுக்கு பின் வேலையேயிருக்காது.
எந்த பிராந்தியத்துக்கான மொழி என்று கேட்டால் சரியாக சொல்ல முடியாது. ஏனெனில் அதன் முக்கிய நூல்கள்
இந்துமதத்தை பரப்பக்கூடியதாக இருக்கிறது. ஆனால் எந்த இனத்தவருக்கான மொழி என்று கேட்டால் யாராலும் சொல்லிவிட முடியும். இந்திய மக்கள் தொகையில், இன பரவல் படி, அனைத்து மாநிலங்களுக்குமான ஒற்றுமை என்ன ?
அந்தணர்கள். இவர்கள் மட்டும்தான் பரவலாக விரவிக் கிடக்கிறார்கள். (இப்போது வேலை வாய்ப்புக்களுக்காக பரவி இருப்பவர்களை நான் சொல்லவில்லை). எனவே அவர்கள் தான் வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து வந்த ஆரியர்கள் என்பது தெளிவாக தெரிகிறது. (இந்தியா முழுவது பரவிக் கிடக்கிறோம் எனவே நாங்கள் தான் இங்கிருந்தவர்கள்
என்றும் வாதிட முடியாது. அப்படி இருந்தால் அவர்கள் தான் அதிகமாக (மெஜாரிட்டி) இருப்பார்கள்.) அப்படி வந்தவர்கள்
கொண்டுவந்த வடமொழிதான் சமஸ்கிருதம். பரவலாக இருப்பதற்கு காரணம் அது மட்டுமே. அதிலும்
இந்து மதக் கருத்துக்களையே அதிகம் கொண்டதாக வைத்திருந்ததால், சமயக் கருத்துக்களுக்காக (மட்டுமே) அதை
வெகு சில மற்றவர்களும் அறிய முற்பட்டிருக்கலாம்.
இப்படி பார்த்தாலே தெளிவாகத் தெரியும் மக்கள் பரவலை, ஆரிய திராவிட பிரிவைச் சொல்ல ஐரோப்பாவிலிருந்து வரவேண்டுமா ? எதற்கெடுத்தாலும் ஐரோப்பிய இனவாதம் என்றால் எப்படி. ஐரோப்பியர்கள் சொன்னது என்பதாலேயே
அது தவறாக இருக்கவேண்டுமென்பதில்லை. ‘ஐரோப்பியர்கள் சொல்லி இருக்கிறார்கள் எனவே அது தவறான வாதம், ஐரோப்பியர்கள் அனைவருமே மோசமானவர்கள், நம்மை அடக்கியாள வருகிறார்கள் ‘ (நாங்கள் தான் இருக்கிறோமே அதற்கு!) என்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான ஆர்.எஸ்.எஸ் ரக கருத்துக்களை ஏற்கமுடியாது.
கலை (இயல், இசை, நாடகம், ஓவியம்), அறிவியல், உணவு, பழக்க வழக்கங்கள், ஒழுக்கம், பண்பு, வரலாறு, வீரம், மதம் எல்லாம் சேர்த்துதான் சமுதாயம். மதம் மட்டுமல்ல. வேறு மதத்தினரும் சமுதாயத்தில் இருக்கலாம். எனவேதான் சமயக் குறவர்கள் கருத்தை மட்டும் கொண்டு, சும்மா பரவி வந்த ஒரு மொழியை, அதுவும் சமயக் கருத்துக்களுக்காக மட்டும் பரவிய ஒரு மொழியை, ஒரு சமூக கலாச்சாரத்தோடு இணைக்கமுடியாது. சம்ஸ்கிருதம் இந்து மதக்கருத்துக்கள்
நிறைந்த மொழி. கூடவே சாதிவெறி கீழ்த்தரமான கருத்துக்களும் நிறைந்த மொழி. தமிழ் கலாச்சாரமென்ன, இந்தியாவிலுள்ள எந்த கலாச்சாரத்திற்குமே தொடர்பில்லாத மொழியாக இருக்கக்கூடும். தமிழ் கலாச்சாரத்திற்கும், சமஸ்கிருதத்திற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. இந்து சமய நெறி (சம்ஸ்கிருதத்திலுள்ள இந்து சமய கருத்துக்களும் சேர்த்து)
தமிழ்கலாச்சாரத்தின் ஒரு பகுதி அவ்வளவுதான்.
தங்களுக்கு நகைச்சுவை உணர்வு குன்றிவிட்டதாகத் தெரிகிறது. சிரிப்பு நாடகத் தலைவர் சங்கராச்சாரியின் காலில் விழுந்து பயின்றீர்கள் எனில் சீக்கிரம் பெரிய இடத்துக்கு வந்துவிடலாம். மற்றபடி என் வயிறு புண்ணாவதை எண்ணி
தாங்கள் நகைச்சுவை உணர்வை குறைத்துக்கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். என்மேல் தாங்கள் கொண்ட அதீத அக்கறைக்கும் நன்றி.
வணக்கங்களுடன்,
பித்தன்.
****
ஜெயமோகனின் ‘இலக்கிய விவாதங்களும் எல்லை மீறல்களும் ‘ படித்தேன். என் முந்தைய கட்டுரைக்கு விளக்கமாக எழுதிருப்பதாகத் தெரிகிறது. மிக அழகாக விளக்கியிருக்கிறார். பாராட்டுக்கள். இன்னும் சில எதிவினைகளும் கேள்விகளும் தோன்றுகின்றன. கொஞ்சம் விரிவாக எழுதவேண்டியுள்ளது. நேரமின்மையால் பிறகு அதற்கு வர
எண்ணியிருக்கிறேன். பார்க்கலாம். நேரம் கிடைக்கட்டும்.
– பித்தன்.
piththaa@yahoo.com
இரண்டு பதில்கள்.
முதலாவது திரு. அபராஜிதன் அவர்களுக்கு,
‘தவறு செய்தால் கடவுள் தண்டிப்பார் ‘ என்ற அச்ச உணர்வு மனிதர்களை மனசாட்சிக்கு விரோதமில்லாமலும், நல்லொழுக்கத்துடனும் நடக்க வைக்கும் என்பது என் நம்பிக்கை. அதனால்தான், தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகிப் போனதற்கு இறையச்ச உணர்வு இல்லாமற் போனமையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று எழுதினேன். இன்றைக்கு தமிழ்நாட்டில் ‘பக்தி ‘ என்ற பெயரில் நடக்கும் கேலிக்கூத்துகளை நான் ஒரு போதும் ஆதரித்ததும் இல்லை. இனியும் ஆதரிப்பதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன்.
அமெரிக்க காவல்துறை பற்றி நீங்கள் எழுதி இருந்தது சரியானதுதான். அதே சமயம், தவறு செய்த அமெரிக்க காவலதிகாரியை சட்டம் விட்டு வைப்பதில்லை. அதற்கான தண்டனையை அவர்கள் பெற்றுத்தான் இருக்கிறார்கள் நீங்கள் எழுதிய அனைத்து சம்பவங்களிலும். தமிழ்நாட்டில் தவறு நிரூபிக்கப்பட்ட எத்தனை காவலதிகாரிகள் அவ்வாறு தண்டிக்கப் பட்டிருப்பார்கள் ? மிக மிகக் குறைந்த அளவில்தான். அப்படியே தண்டனை அளிக்கப் பட்டாலும், அதே குற்றம் செய்த சாதாரண ஒரு பொதுஜனத்திற்கு அளிக்கப்படும் தண்டனையை விடவும் அது குறைவாகத்தானிருக்கும். என்ன ? ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்படுவார்கள். அல்லது அதிக பட்சம் ஆறு மாத சஸ்பென்ஷனில் இருப்பார்கள். ஆளும் கட்சி அரசியல்வாதி ஒருவரை கைக்குள் போட்டுக் கொண்டால் அந்த தண்டனையும் ‘பணால் ‘.
ஜார்ஜ் புஷ்ஷின் டான் ஏஜ் மகள்கள் மது அருந்தியதற்காக கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். அவர் அமெரிக்க ஜனாதிபதியான பின்பு நடந்த, எல்லாப் பத்திரிகைகளிலும் வெளிவந்த செய்தி அது. ஜனாதிபதியின் மகள் என்பதற்காக அவர்களை கைது செய்யாமல் விடவில்லை அமெரிக்க போலிசார். அதைத்தான் சட்டத்தின் முன் சாமானியனும், ஜார்ஜ் புஷ்சும் சமமாக நடத்தப்படுவார்கள் என்று எழுதி இருந்தேன்.
அமெரிக்க நீதித்துறை பற்றி நீங்கள் எழுதி இருந்தவையும் உண்மையானவையே. இன்றும் இனவெறியுடன் நடக்கும் நீதிபதிகளும், காவலதிகாரிகளும் அங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கான கண்டனங்களும் வெளிப்படையாகவே பொது மக்களாலும், பத்திரிகைகளாலும் தெரிவிக்கப்பட்டு, நடவடிக்கையும் எடுக்கப் படுகிறது. அமெரிக்காவில் பொதுவாக காணப்படும் check and balance system இந்தியாவில் இல்லவே இல்லை. நீதித்துறையயோ, காவல்துறையையோ விமரிசித்து எழுத முடியுமா இந்தியாவில் ? வேறு வினையே வேண்டாம்.
உங்கள் கருத்துகளை எனக்குத் தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
இரண்டாவது பதில் திரு. நிலாவசந்தனுக்கு,
திண்ணையின் அடிப்படை கான்செப்ட்டே யார் வேண்டுமானும், எதைப் பற்றி வேண்டுமானுலும் தங்கள் கருத்துக்களை எழுதலாம் என்பதுதான். அந்த வகையில்தான் நான் எனது எண்ணங்களை எழுதி வருகிறேன். மற்றவர்களுக்கு பிடிக்குமா, பிடிக்காதா என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. மற்றவர்கள் சொல்வதைத்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமும் எனக்கில்லை.
உங்களுக்கு ஒரு தலைவரைப் பிடிக்கும் என்றால் அவரின் அருமை, பெருமைகளைப் பற்றி நீங்கள் எழுதலாமே ? திண்ணையில் பிரசுரிக்காமலா போய்விடப் போகிறார்கள் ? யாரும் உங்களை தடுத்து நிறுத்தப் போவதில்லை.
என்னை ஒரு பெரிய எழுத்தாளனாக ஒருபோதும் நான் எண்ணிக் கொண்டதுமில்லை. சொல்லிக் கொண்டதுமில்லை. எழுத்தாளனாக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான். நான் எழுதுவதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பதே எனக்குத் தெரியாது. உங்களையும் சேர்த்து ஒரு பதினைந்து பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதில் ஒருவர் குறைந்து போனால் எனக்கு குடி ஒன்றும் முழுகிப் போய்விடாது பிரதர்.
நான் எழுதியதை எல்லாம் திண்ணை பிரசுரித்து விடுவதில்லை. எனது பல கட்டுரைகளைத் திண்ணை தயவு தாட்சணியமின்றி நிராகரித்திருக்கிறது. இவ்வளவு ஏன் ? எனது ‘இது என் நிழலே அல்ல! ‘ கட்டுரை மூன்று முறை நிராகரிக்கப்பட்டு, மூன்று முறை மாற்றி எழுதப்பட்டு ஒரு பெரும் போராட்டத்திற்குப் பின்தான் திண்ணையில் வந்திருக்கிறது. மற்றபடி, திண்ணையை நடத்துபவர்கள் எந்த திசையிலிருக்கிறார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது. அபாண்டமாக அவர்களைக் குற்றம் சாட்டுவது சரியில்லை நண்ப.
அப்புறம், என் கட்டுரைகள் மட்டும் முதல் பக்கத்தில் பிரசுரமாகும் ரகசியம் என்ன ? என்று கேட்டிருந்தீர்கள். கிட்டே வந்து காதைக் கொடுங்கள் சொல்கிறேன். ‘அது வந்து…ஒரு சங்கதியைத் திண்ணைக்கு அனுப்பும் போது அது கட்டுரையா அல்லது கடிதமா என்பதைத் தெளிவாக எழுதி விடுவேன். அதுதான் ரகசியம்…உஷ்…வெளியே யாரிடமும் சொல்லி விட வேண்டாம். சரியா ?..மூச் ‘.
குட் பை மிஸ்டர் நிலாவசந்தன் (பெயர் நன்றாக இருக்கிறது)!
என்றும் அன்புடன்,
நரேந்திரன்.
narenthiranps@yahoo.com
அரவிந்தன்
அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு
சென்னை புத்தகக் கண்காட்சி பற்றி மத்தளராயன் தந்த பதிவுகளைத் தாமதமாகப் பார்க்க நேர்ந்தது. அதில் என் புகைப்படத்தைப் போட்டு அவர் எழுதியிருந்த வரிகள் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தின. வெகு ஜன இதழ்களில் அரசியல், சினிமா புள்ளிகளைப் பற்றி எழுதும் தொனியில் அவை எழுதப்பட்டிருந்தன. காலச்சுவடுக்கும் ஜெயமோகனுக்கும் கடும் சண்டை நடந்தாலும் காலச்சுவடு ஸ்டாலில் ஜெயமோகனின் காடு நாவல் விற்ற பணத்தை வாங்கிப் போட்டுக்கொண்டு நான் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருப்பதுபோல மத்தளராயன் என்ற பெயரில் ஒளிந்திருக்கும் இரா. முருகன் எழுதியிருக்கிறார். உண்மையில் ஏதோ வேலையாக இருந்த என்னைத் திரும்பிப் பார்க்கச் சொல்லி, ஸ்மைல் பண்ணுங்க என்று சொன்னவர் அவர்தான். ‘எதுக்கு ஃபோட்டோ எடுக்கறீங்க ? ‘ என்று கேட்டதும், ‘திண்ணைல கூட வரலாம் ‘ என்று சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால் நான் இயல்பாகச் சிரித்ததாகவும் அதுவும் காடு விற்ற பணத்தை வாங்கிப்போட்டுக்கொண்டு சிரித்ததாகவும் திண்ணையில் எழுதியிருக்கிறார். இது பொய் மட்டுமல்ல. அற்பத்தனத்தின் உச்சம்.
காடு உள்ளிட்ட ஜெயமோகனின் பல நூல்கள் காலச்சுவடு ஸ்டாலில் விற்பனை ஆயின. ஜெயமோகனின் இலக்கிய அரசியல் செயல்பாடுகளைக் காலச்சுவடு விமர்சித்துவருகிறது. ஆனால் அவரது இலக்கியப் படைப்புகள் குறித்து அதற்கு எந்த ஒவ்வாமையும் இல்லை. ஜெயமோகனுக்கும் காலச்சுவடுக்கும் இடையிலான உறவு கசந்த பிறகுகூட அவரது விஷ்ணுபுரம் நாவல் குறித்த கருத்தரங்கைக் காலச்சுவடு நடத்தியது. அதில் நான் உள்படப் பலர் அந்நாவல் குறித்து சாதகமாகவே பேசினோம். விஷ்ணுபுரம், காடு ஆகியவற்றோடு, எஸ். ராமகிருஷ்ணனின் நாவல்கள், அம்பையின் சிறுகதைகள், சுந்தர ராமசாமியின் நாவல்கள் முதலான பல நூல்களும் சிறப்பான முறையில் விற்றதில் தீவிர இலக்கிய வாசகன் என்ற முறையில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் மத்தளராயன் சிறுபிள்ளைத்தனமாகக் குறிப்பிடுவதைப்போல பணம் வாங்கிப் போட்டுக்கொள்ளும் மகிழ்ச்சி அல்ல அது.
‘விரோதியின் நூலை விற்றுக் கிடைத்த பணத்தை எண்ணி மகிழ்ச்சியடையும் முரண்பாடு ‘ குறித்து அங்கதச் சுவையோடு எழுதியிருப்பதாக மத்தளராயன் நினைத்திருக்கலாம். ஆனால் மலினமான கேளிக்கை சார்ந்த இதழியலின் முதிர்ச்சியற்ற வெளிப்பாடாகவே இது இருக்கிறது. மத்தளராயனின் இதழியல் ஆளுமையின் வெளிப்பாடாக இது இருக்கலாம். ஆனால் திண்ணை.காமின் தகுதிக்கு ஏற்றதாக இது அமையவில்லை.
அன்புடன்
அரவிந்தன், சென்னை
பெண் நபி, இஸ்லாம் பற்றி சர்ச்சை தொடர்ச்சி :
பித்தனின் பெண்களில் ஏன் நபி இல்லை என்ற வாதத்திற்கு நண்பர் நாகூர் ரூமியோ அல்லது முகம்மது இஸ்மாயிலோ, இந்து மதத்தில் எந்தக்காரணத்திற்காக பெண்கள் பூசாரியாக அனுமதிக்கப்படவில்லையோ அந்தக்காரணத்திற்காகத்தான் அவர்களை நபியாக இறைவன் அனுமதிக்கவில்லை என்று வாதத்தை முடித்திருக்கலாம். (எந்தக்காரணத்திற்காக பூசாரியாக அனுமதிக்கப்படவில்லையோ அதேக்காரணங்களோடு அவர்கள் ஏன் தெய்வங்களாக வணங்கப்படுகிறார்கள் என்று முகம்மது இஸ்மாயில் எதிர்கேள்வி கேட்காமல் வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்).
தங்களின் பதிலில் பென்களுக்கு இயற்கையாக ஏற்படும் மாதவிலக்கு போன்ற காரனங்கள் சிலைகளை தொட்டு அபிஷேகம் செய்ய தடையாக இருக்கிறதாகவும், ஆனால் கிராமப்புறங்களில் சிறு கோவில்களில் பென்கள் பூசாரியாக இருக்கிரார்கள் என்றும் கூறியுள்ளீர்கள்.(ஏன் கிராமப்புறங்களில் சிறு கோவில்களில் பென்பூசாரிகளுக்கு இயற்கையாக ஏற்படும் மாதவிலக்கு ஏற்படுவதில்லையா என்றும் கேட்கவில்லை.)தாங்கள் சொல்வதுபோல் மாதவிலக்கு என்ற காரனத்திற்காக மட்டும்தான் அவர்கள் பூசாரியாக இந்து மதத்தில் தடை என்ற கருத்தை ஏற்றுக்கொண்டால் ஏன் இயற்கையாக (செயற்கையாகவும் கூட) மாதவிடாய் வராத பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட தலித் ஆன்கள் பூசாரியாக தடை ? ஏதாவது குக்கிராமங்களில் சிறிய ஆல வேப்ப மரத்தடி சிறு தெய்வங்களை, ஊருக்கு வெளியே நிற்கிற காவல் தெய்வங்களை மட்டும் பராமரிக்கும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பூசாரிகளை நாங்கள் பார்த்திருக்கிறோம் ஆனால் புகழ் வாய்ந்த, அதிக காணிக்கை வசூலாகிற பெருந்தெய்வங்களுக்கான பெரியகோயில்களில் ஏன் பார்க்க முடியவில்லை என்பதுதான் கேள்வி.
நீங்கள் சொல்வது போல் மாதவிடாய் மட்டும் காரனமில்லை. ‘குறைந்தபட்சம் தமிழ் சமய நூல்களை படிக்காமல் ‘ அதிகபட்சம் ‘சம்ஸ்கிருத சமய ‘ நூல்களை படித்தால் உங்களுக்கு வேறுபல காரணங்களும் விளங்கும் என்பது என் தாழ்மையான கருத்து. (அர்ச்சனை பன்னுவதற்கே அருகதையில்லா தமிழ் மொழியிலுள்ள இந்துசமய நூல்களையா படித்தீர்கள் ? என்று நான் கேட்கமாட்டேன்)
நீங்களே ‘க்ளூ ‘ கொடுத்து நன்பர் இஸ்மாயிலை இந்து மதத்தில் ஏன் குறிப்பிட்ட சாதியினர் மட்டும் பூசாரியாக இறைவனால் நியமிக்கப்பட்டார்கள் என்ற நியாயமான கேள்வியை கேட்கசொல்லியிருந்தீர்கள். இன்னும் ஏன் குறிப்பிட்ட சாதியினர் மட்டும் வேதம் ஓதுவதை காதில் கேட்கக்கூடாது என்றும், ஏன் குறிப்பிட்ட சாதியினர் மட்டும் குறிப்பிட்ட தெருவில் நுழைந்தால் ‘தெருவாசிகளே ‘ ஏன் தீட்டாகிவிடுவார்கள் ?, கோயிலுக்குள் நுழையக்கூடாது நுழைந்தால் சாமி ஏன் தீட்டாகிவிடும் ? தமிழகத்தில் ஏன் சைவர்கள் வைனவர்களை கழுவில் ஏற்றிபடுகொலை செய்தார்கள் ? யாணைக்கு பட்டை போடுவதில் ஏன் அந்தனர்களுக்குள் குழுச்சண்டை ஏற்பட்டது ? (மற்ற சாதியினருக்கு பட்டை நாமம் சாத்துவதில் ஏன் அவர்களுக்குள் சண்டை வந்ததே இல்லை என்ற கேள்வி வேண்டாம்) போன்ற கேள்விகளடங்கிய ‘மாதிரி வினாத்தாள் ‘ கொடுத்திருந்தால் ஆயிரக்கனக்கான எதிர்கால இந்து மதசீர்திருத்தவாதிகளுக்கு உதவியாக இருந்திருக்கும்.
முக ஆடை அனியாதவர்கள் மீது ஆசிட் ஊற்ற இஸ்லாம் கூறவில்லை குர் ஆனிலும் ஹதீஸிலும் ஆதாரமில்லை. ஆனால் ஆஸிட் ஊற்ற கூறும் காரணம் இஸ்லாத்தில் இருப்பதாக ஆதாரமில்லாமல் ‘உடான்ஸ் ‘ விட்டிருப்பதை ‘வீரத்துரவி ‘ இராம கோபாலன் மட்டும் படித்தால் தங்களை அவருக்கான ‘ஆஸ்தான பேச்செழுத்தராக ‘ நியமித்துவிடுவார்!
முகலாய மன்னர்கள் கோவில்களை இடித்துவிட்டு பள்ளிவாசல்களை கட்டியதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கிறது என்று தாங்கள் சொல்லுவதை நான் நம்புகிறேன். அதே போல் ‘மன்னின் மைந்தர்களை ‘ வந்தேறிகளாகவும், கைபர் போலன் கனவாய் வழியாக வந்தவர்களை ‘மன்னின் மைந்தர்களாகவும் சித்தரித்து காட்டும் வரலாறை நம்புகிறேன், இந்தியாவில் இஸ்லாம் மட்டும்தான் வாளால் பரப்பப்பட்டது இந்து மதத்தின் வர்னாஸ்ரம ‘வாளோ ‘ அல்லது ‘கழுவோ ‘ ஒருபோதும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட இந்துக்களை கட்டாயப்படுத்தி முஸ்லிகளாக்க எந்த ஒரு பங்களிப்பும் செய்யவில்லை என்பதற்கான ‘ஏராளமான ‘ ஆதாரங்களையும் நம்புகிறேன்.
முகம்மது இஸ்மாயிலும், நாகூர் ரூமியும் அப்படித்தான் நம்பவேண்டும். ஏனென்றால் இது சம்பந்தமாக வாதடுவது- முஸ்லிம்களுக்கு நல்லதல்ல.(உங்களுக்கு தேவையில்லாத ‘காந்தி படுகொலை ‘ நிகழ்ச்சிகளெல்லாம் ‘ஏராளமான ‘ ஆதாரமில்லாத்தால் அந்த வரலாற்று புத்தகத்தில் விரிவாக இடம்பெறவில்லை அதனால் RSS வெறியனால் காந்தி சுட்டு கொல்லப்பட்ட உண்மையை தொடர்ந்து நம்பவா அல்லது காந்தியே தற்கொலை செய்து கொண்டதாக நம்பிவிடவா ?)
ஆடை அனிவது ஒழுக்கம் சம்பந்தபட்டது என்று ஒத்துக்கொள்கிரீர்கள் ஆனால் கண்ணியமாக ஆடை அனிய கட்டாயம் தேவையில்லை என்று மனித உரிமைகளை பற்றி சொல்கிறீர்களே ? நான் கேட்கிறேன், கட்டாயப்படுத்தி கண்ணியமிக்கவர்களை உருவாக்கினால் தப்பா ? ஒழுக்கத்தை கட்டாயபடுத்தாமல் சொல்லிகொடுத்தால் சில குழந்தைகள் ஏற்றுக்கொள்ளாது ஆனால் கட்டாயப்படுத்தி சொல்லிக்கொடுத்தால் பயந்துக்கொண்டாவது ஏற்றுக்கொள்ளுமே அனைத்துகுழந்தைகளும் !
பாரத திருநாட்டில், கனவனாக இருந்தாலும் மனைவி விரும்பாவிட்டால் தொடக்கூடாது என்று சட்டமே உள்ளது என்பது தங்களின் பொன்மொழி. ஆமாம் உண்மைதான்..பிற்படுத்தப்பட்ட பென்களும் ‘ரவிக்கை ‘ அனியலாம், தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களும் (உயர்த்தப்பட்ட ஹிந்துக்களைப்போல்) கோவிலுக்குள் நுழையலாம், பள்ளிக்கு படிக்க செல்லலாம், பச்சிளங்குழந்தைகளை திருமணம் செய்து கொடுக்கக்கூடாது, கனவனை இழந்தப்பென்களை அவனின் பிணத்தோடு சேர்த்து எரிக்கக்கூடாது என்பதற்கு கூட சட்டம் கொண்டு வந்தது நம் நாடு. சட்டத்துக்கு பஞ்சமா இந்த பாரதத்திலே! (நல்லவேளை சட்டம் கொண்டு வந்து இந்து மதத்தையும் மக்களையும் காப்பாற்றினார்கள் இல்லையென்றால் இதுபோன்ற மதகோட்பாடுகளை எதிர்த்து சமுதாய விழிப்புனர்ச்சியும் புரட்சியும் ஏற்பட்டு ‘மீனாட்சிபுரம் ‘ ரஹமத்நகர் ஆனதுபோல் ஹிந்துஸ்தானே இன்று முஸ்லிம்ஸ்தானாகா அவதாரமெடுக்க வகை செய்திருக்கும்) அதுசரி தீண்டாமை ஒழிப்பு சட்டம் என்று ஒன்றை எப்பொழுதோ கொண்டுவந்தும் இன்னும் ஏன் அடிப்படை கல்வியறிவுமிக்க தமிழகத்திலேயே நூற்றுக்கனக்கான கிராமங்களில் ‘இரட்டை குவளை ‘ முறை நடைமுறையில் உள்ளது. ? ஏன் சட்டம்தெரிந்த ஒருவர் இந்திய ஜனாதிபதியை கைது செய்ய வாரன்ட் பிறப்பித்தார் ? சட்டத்தை, நீதிமன்றத்தை து(எ)ச்சமாக மதித்து அதன் ஆைணையை மதிக்காமல் பாப்ரி மஸ்ஜிதை இடிக்கபடவில்லையா ?
சட்டத்தை செயல்படுத்தும் காவல் துறைக்கு நீதிமன்றம் எத்தனையோ முறை எச்சரிக்கை விடுத்துள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள் (ளா ?). இதெல்லாம் விட்டுவிட்டு.சட்டம் எல்லாருக்கும் பொது என்று சட்டத்திற்குமுன் வக்காலத்து வாங்குவது போல் பாசாங்கு பன்னுகிறீர்கள். (அதனால் சட்டம் கிட்டமெல்லாம் பேசாதீர்கள் உங்களுக்கு நல்லது அல்ல என்று கூறமாட்டேன்.) சட்டத்தால் சாதிக்கமுடியாததை இஸ்லாமிய கோட்பாடுகள் சாதித்திருக்கின்றன என்பது எனது தாழ்மையான கருத்து.
ஒழுக்கத்தைக்கற்றுக்கொடுத்தால் அவர்களே கண்ணியமான ஆடை அனிவார்கள் என்கிரீர்களே அது எப்படி..முஸ்லிம்களுக்கு கன்னியமான ஆடை உங்களைப்போன்றவர்களுக்கு வேண்டுமென்றே ‘கன்னியமில்லாத ‘ ஆடையாக தெரிகிறது. ஒழுக்கம் மற்றும் கண்ணியம் என்பதன் புரிதல் ஒவ்வொருவருக்கும் வேறுபடும் அதன் அடிப்படையிலே ஆடைகளின் நீளமும் உயரமும் கூடும் குறையும்..இதைப்போன்ற குழப்பங்களுக்கு இஸ்லாம் இடம் கொடுக்கவில்லை (வேண்டுமானால் Unifirm Civil Code என்பது போல Uniform Dress Code கொண்டுவர முயற்சியுங்கள்)
முக்காடு அனிந்த முஸ்லிம் பென்களையே பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் உங்களை போன்ற ‘இலவச சூல வழங்கிகள் ‘ இஸ்லாமிய எழுச்சியையும், விழிப்புனர்ச்சியையும் அடிப்படைவாதம் தீவிரவாதம் என்று அழைப்பதில் ஆச்சரியமில்லை.
இந்துத்வவாதிகளுக்கும் இந்து மதத்துக்கும் சம்பந்தமில்லை என்று அடித்து ஆனித்தரமாக கூறுவது கண்டேன். நீங்கள் சொல்கிற கதையை எல்லோரும் நம்பவேண்டுமென்கிறீர்களா ? முடியவில்லையே. தலித்துகளுக்கும் இந்து மதத்துக்கும் சம்பந்தமில்லை என்ற நிதர்சனமான உண்மையை சொன்னால் சங்கராச்சாரியாரிலிருந்து சாமான்யன் வரை ஒத்துக்கொள்வான்.
உங்கள் கூற்றுப்படி இந்து முன்னனியில் இருப்பவர்களும், பஜரங் தளத்தில், விஷ்வ ஹிந்த் பரிஷத்தில் இருப்பவர்களும் இந்துமதத்தை சார்ந்தவர்கள் இல்லையென்று கூறுகின்றீர்களா ? இவர்களுக்கு வக்காலத்து வாங்கும் காஞ்சி சங்கரர் என்ன முஸ்லிமா ?
இஸ்லாத்தில் விவாகரத்து முறை எளிதாக்கப்பட்டிருக்கிறது பற்றி ஏளனம் பேசுகிறீர்கள்…ஒருவனுக்கு ஒருத்திதான் என்று இந்து மதமும் சட்டமும் கூறுகிறது ஆனால் எத்தனையோ இந்துக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை உடையவர்களாக இருக்கிறார்களே..நான் சொல்வது என்னவென்றால் சட்டம் இருப்பதால் எல்லா இந்துக்களும் ஒரு மனைவியுடன்தான் இருக்கிறார்கள், சின்னவீடு என்ற வார்த்தையே இந்து அகராதியிலும் வாழ்விலும் கிடையாது, யாரும் விவாகரத்து செய்வதேயில்லை என்ற கூற்றையும் அதேசமயத்தில் இஸ்லாத்தில் பலதார மணமும், ‘தலாக்கும் ‘ அனுமதிக்கப்பட்டதால் எல்லா முஸ்லிம் ஆன்களும் ‘நான்கு ‘ பென்களை திருமணம் செய்து சுழற்சி முறையில் விவாகரத்தும்-மறுமணமும் செய்துகொண்டே ‘மகிழ்ச்சியாக ‘ வாழ்கிறார்கள் என்ற தங்களின் அம்பட்டமான் பொய்களை மறுக்கிறேன்.
பெரியாரின் வார்த்தைகளை மட்ட மலின பிரச்சார கூத்து என்று அரவிந்தன் போல் ஒதுக்காமல், பெரியார் சமூக அக்கறை மிக்கவர் அவரின் வாதத்தில் உண்மை இருந்தது என்பதை (வரதன் உனர்ந்ததுபோல்) உனர்ந்து, இந்து மதத்திலுள்ள சமூக ஏற்றத்தாழ்வுகளை பெரியார் சுட்டிக்காட்டிய போது சிறுபான்மை உயர் சாதியினரைத்தவிர, பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று கன்னியத்துடன் ஒத்துகொண்டதற்கு நன்றி (சங்கரர் ஏற்றுக்கொண்டாரா ? தமிழக சங்க் பரிவாராம் ஏற்றுக்கொண்டதா என்று நான் எதிர் கேள்விகள் கேட்கவில்லை)
வளைகுடா நாடுகளுக்கு செல்லும் மற்ற நாட்டு பென்கள் எப்படி நடக்கிறார்கள் மற்றும் நடத்தப்படுகிறார்கள் என்று எங்களுக்கு தெரியும் அதேபோல் தன் நாட்டு, மாநிலப் பென்களை சகோதரி என்று கூறி அழைத்து வந்து அரபு ஷேக்குகளை ‘ஷோக்கு ‘ பன்னி சக ஊழியனை விட Express வேகத்தில் பதவி உயர்வு பெற்றவர்களால் பாதிக்கப்பட்ட என் நன்பர்கள் புலம்ப கேட்டிருக்கிறேன். உடன்பிறந்தவர்கள் என்று பென்களை அழைத்து வந்து சொந்த நாட்டானிடம் விபச்சாரம் செய்ய விட்டு எப்படி பிழைக்கிறார்கள் என்பதையும் அவர்களிடம் காசு பணத்தை இழந்து ‘பண்டாரம் பரதேசிகளாக ‘ பஹரைன், குவைத் மற்றும் துபாயிலிருந்து திரும்பியவர்களையும் பார்த்திருக்கிறேன். (அப்படிபட்ட நாடுகளில் வேலை செய்யவேண்டும் என்று நமக்கென்ன தலையெழுத்தா ? திரும்பி வரச்சொல்லுங்கள் எல்லாரையும் ‘அகண்ட பாரதத்திற்கு ‘ வந்து முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட எத்தனையோ பள்ளிவாசல்களை இடித்துவிட்டு கோவில்களாக மாற்றும்வேலையில் ஈடுபடச்சொல்லுங்கள்..அது சரி உங்கள் கூற்றுப்படி முகலாயர் ஆட்சிகாலத்தில் முஸ்லிம்களாக மாற்றப்பட்ட கோடிக்கனக்கான இந்து சகோதரர்களை எப்பொழுது மீண்டும் தாய் மதத்திற்கு கொண்டுவரப்போகிறீர்கள்)
மதம் மனிதனால் ஏற்படுத்தப்பட்டதுதான் ஆனால் எல்லா மதமும் அல்ல. ஒரு சில மதங்கள்தான் ‘மனிதர்களில் ‘ ஒரு குறிப்பிட்ட சாதியினரால் ஏற்படுத்தப்பட்டு, அவர்களின் ஆதிக்கத்திலேயே இன்னும் இருந்து, மற்ற பெரும்பான்மை மக்களை சதி செய்து பல சாதியினராக கூறுபோட்டு, அவர்களெல்லோரும் தங்களை நோக்கி கும்பிடுபோட செய்து வருகிறது.
முடிவாக ஒன்றுமட்டும் சொல்லிக்கொள்கிறேன் இதுபோன்ற மதசீர்திருத்தம் என்ற சப்பைக்கட்டுகளாலோ, மதமாற்ற தடை சட்டம் போன்ற பூட்டுகள் கொண்டோ இருப்பவர்களை கட்டிபோட்டுதான் இஸ்லாமிய மதம் காக்கப்பட-வளர்க்கப்பட வேண்டும் என்றில்லை
முரன்பாடான கருத்துக்களையும், மதத்தின் அடிப்படையையும், ஆனிவேரையும் பிடுங்கி எறிந்தவர்களையும், எறிய முயற்சிப்பவர்களையும்,
பிடிக்கவிலையென்று சுயமாக வெளியேறிபோனவர்களை, போகதுடிப்பவர்களையும், வலிந்துசென்று அவர்களும் தன்னை சார்ந்தவர்கள்தான் என்று கூறி அவர்களை ‘வாழவும் விடாமல் சாகவும் விடாமல் ‘ தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டிய ‘கதியில் ‘ இஸ்லாம் இல்லை.
அதனால் ‘கன்னியமில்லாத ‘ முக்காடு பிடிக்கவில்லையென்றால் இஸ்லாத்தை விட்டு வெளியேறி கன்னியமான ஆடையை ஊக்குவிக்கும் சுதந்திரமுள்ள, பென்களை மட்டுமல்லாது சாதிவேறுபாடின்றி சமமாக நடத்தும், ஆனாதிக்கமில்லாத எந்த மதத்திலும் முஸ்லிம்கள் தங்களை இனைத்துக்கொள்ளலாம்..
அன்புடன்
கா.மெளலாசா
moulasha@hotmail.com
- கனடாவில் கால்சட்டை வாங்குவது
- கவிதை
- கவிதை
- தவம்
- கவிதை
- ஒரு கவிதையே கேள்வியாக..
- தேவைகளே பக்கத்தில்
- பத்திரமாய்
- குட்டி இளவரசியின் பாடல் பற்றி
- அவன்
- பிரிவிலே ஓற்றுமையா ?!
- ஆறுகள் – கழிவு ஓடைகள் : ஜெயமோகனின் புது நாவல் ஏழாம் உலகம் .
- சுப்ரபாரதிமணியனின் சமயலறைக் கலயங்கள்
- சிதைந்த நம்பிக்கை
- கதை ஏன் படிக்கிறோம் ?
- தக்கையின்மீது நான்கு கண்கள் – குறும்படம்
- விருமாண்டி – கடைசிப் பார்வை
- நிழல்களின் உரையாடல்(Mothers and Shadows)-மார்த்தா த்ராபா[தமிழில் அமரந்த்தா]
- உஸ்தாத் படே குலாம் அலி கான் – ஹரி ஓம் தத்சத்
- ஃப்ரை கோஸ்ட்
- கடிதங்கள் – பிப்ரவரி 19,2004
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி
- கடிதம் – பிப் 19,2004
- மனிதம் : காவல் துறையும் மனித உரிமைகளும்
- கவிப்பெரும்பேரரசு கரடிமுத்துவுக்கு ஞானபீடப்பரிசு
- தேர்தல் ஸ்பெஷல் படங்கள்:
- வாரபலன் – பிப்ரவரி 19,2004 – சீனியர் மேனேஜர் அவஸ்தை – குறுநாவல் குறுகுறுப்புகள் – வழி தவறிய காவிய நயம்- குஞ்சுண்ணி
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 7
- மூடல்
- பொருட்காட்சிக்குப் போகலாமா..
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தாறு
- விடியும்! – நாவல் – (36)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -12)
- சில நேரங்களில்…சில குழந்தைகள்
- அமெரிக்கா ரிட்டர்ன்
- தாண்டவராயன்
- நாகம்
- இந்தியாவில் பெண்கள் மசூதியால் ஏற்பட்ட புயல்
- பயங்கரவாதியை உருவாக்குவது எது ? – பகுதி 1
- உறக்கத்தில் பளிச்சிடும் உள்ளொளி
- ஈராக்: அமெரிக்க ஆளுகையின்கீழ் பெண்ணுரிமை
- குழந்தைகளுக்கான கல்வி
- ஆஸ்திரேலியப் பழங்குடியினர் மீது ஆஸ்திரேலிய அரசின் தொடரும் அடக்குமுறை
- யுத்த நெடி , இந்தியக் கூலியின் அரேபியக் காலம் , இருத்தலிஸம்
- அன்புடன் இதயம் – 8 – ஒரு வாரிசு உருவாகிறது
- கிராமத்தில் உயிர்!
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- காலத்தின் கணமொன்றில்
- விட்டுசெல்….
- நிசப்தத்தின் நிழலில்
- நெஞ்சத்திலே நேற்று