கடிதங்கள் – ஜனவரி 22, 2004

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

பரிமளம் – K.ரவி ஸ்ரீநிவாஸ் – பித்தன் – அரவிந்தன் நீலகண்டன்


கலவை வெங்கட் அவர்களுக்கு

உங்களுடைய கட்டுரைத் தலைப்பும் அதையொட்டிய கட்டுரையின் விவரங்களும் (மார்க் ட்வெய்ன் உட்பட) 19ம் நூற்றாண்டைப் பற்றியிருக்கின்றன. ஆனால் இந்தக் கட்டுரையை எழுதப் பயன்பட்ட தரம்பாலின் நூலிலோ 18ம் நூற்றாண்டு என்று இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தரம்பாலின் நூலைப் பற்றிக் கடந்தவாரம் நீங்கள் தெரிவித்த விளக்கங்களை அறியாத எனக்கு ‘நூல் பெயரில் கவனக்குறைவால் தவறு நேர்ந்திருக்கலாம்’ என்ற ஐயம் எழுவது இயற்கைதானே ? இதில் நான் எதைப் படித்துப் புரிந்துகொள்ளவில்லை என்று நீங்கள் கருதுகிறீர்கள் ?

***

நீங்கள் தெளிவாக ஒரு குறிக்கோளுடன் உங்கள் கட்டுரையை ஆரம்பிக்கிறீர்கள். [ ‘ஐரோப்பியர்களும் பாதிரியார்களும் வரும் முன்னால், நமது நாட்டில், கல்வி என்பது மேல் ஜாதி மக்களுக்கேக் கிட்டியது. கீழ் ஜாதி மக்களும், ஹரிஜன மக்களும் பள்ளிக்கூடங்களில் அனுமதிக்கப்படவில்லை. ஐரோப்பியர்களின் ஆட்சியிலே, பாதிரியார்கள் கல்விக்கூடங்கள் கட்டிய பின்னரே, கீழ் ஜாதி மக்களுக்கும், ஹரிஜன மக்களுக்கும் கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ‘] என்பது பொய் என்று நிறுவுவதுதான் அந்தக் குறிக்கோள்.

அப்படி நிறுவுவதற்கு நீங்கள் முதலில் ஐரோப்பியர்களும் பாதிரியார்களும் வரும் முன்னால் உள்ள பள்ளிகளைப் பற்றிய புள்ளிவிவரங்களைத் தரவேண்டும்; அடுத்ததாக, வந்த பின்னால் உள்ள விவரங்களைத் தரவேண்டும். இரண்டையும் ஒப்பிட்டுக் காட்டினால் உண்மை எது பொய் எது என்பது தெளிவாகிவிடும். ஆனால் நீங்கள் காட்டும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் ஐரோப்பியர்கள் வந்த பின்னால் உள்ள நிலையை மட்டும்தானே காட்டுகின்றன என்று நான் கேட்டால் நீங்கள் உடனே உங்கள் குறிக்கோளையே மாற்றிக்கொள்கிறீர்கள். மெகாலே நம் பாரம்பரியக் கல்வியை எவ்வாறு அழித்தார் என விளக்குவதுதான் என்னுடைய நோக்கம் என்று கடிதத்தில் எழுதுகிறீர்கள். [ஐரோப்பியர்களும், பாதிரியார்களும் நாட்டில் நுழைவதால் மட்டுமே நமது பாரம்பரியக் கல்வி அழிந்துவிடாது. அவர்கள் நமது பாரம்பரியக் கல்வி அழியும் விதமாகத் திட்டங்களைச் செயல் படுத்தியதாலேயே அழிந்தது. அங்ஙனம் அவர்கள் செயல் படுத்தியது மெகாலே வருகைக்குப் பின்னரே –அதாவது 1830-க்கு பிறகு. அதற்கான ஆதாரங்களையும் எனது கட்டுரையில் தந்துள்ளேன். மீண்டும் படிக்கவும்.]

***

இந்த நோக்கத்தையாவது நீங்கள் நிறைவேற்றியிருக்கிறீர்களா என்று பார்ப்போம்.

தலித்துகள் உட்படப் பல வர்ண மாணவர்களும் ஒன்றாகப் பயில்வதுதான் நம் பாரம்பரியக் கல்வி என்று கட்டுரையில் நீங்களே பாரம்பரியக் கல்விக்குத் தெளிவாக விளக்கம் அளிக்கிறீர்கள். [நமது பாரம்பரியக் கல்விக் கூடங்களில் ஹரிஜன மக்கள் உட்பட எல்லா ஜாதியினரும் ஒன்றாகவே பயின்றனர் எனவும், அத்தகைய பாரம்பரியக் கல்வித் திட்டம் அழிந்திடக் காரணமே ஐரோப்பியர்களின் அராஜக ஆட்சிதான் எனவும் நிரூபித்தவர் தரம்பால் என்னும் அறிஞர்.]

இதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் ? மெகாலேயின் அராஜகத் திட்டத்திற்கு முன் உள்ள புள்ளிவிவரங்களை எடுத்துக்காட்டியது போலவே திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்ட பிறகு உள்ள பள்ளி மாணவர்களின் வர்ண விகிதாசாரங்களை எடுத்துக் காட்டி தலித்துகளுக்குக் கல்வி மறுக்கப்பட்டதையோ அல்லது பல வர்ண மாணவர்களும் தனித்தனியாகப் பயின்ற முறைமையையோ விளக்க வேண்டும். இதை நீங்கள் அறவே செய்யவில்லை. மெகாலேயின் திட்டத்தால் இந்தியர்களின் தேசிய உணர்வுகள் எவ்வாறு மழுங்கடிக்கப்பட்டன என்பதை மட்டுமே விளக்கியுள்ளீர்கள். [ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், இந்தியர்களைத் தேங்காய்களாக மாற்றுவதே மெகாலேயின் குறிக்கோளாக இருந்தது. தேங்காய் ஓடு மர நிறமாக இருப்பினும் உள்ளே வெள்ளையாக இருக்கும். மெகாலே உருவாக்கிய Brown Sahib -களும் அது போலவே — மர நிறத் தோலுடையவர்களாயிருப்பினும், சிந்தனையால் பிரிட்டிஷ்காரர்களாகத் திகழ்ந்தார்கள். மெகாலே திட்டமிட்டபடியே, அவர்கள் தங்களின் பாரம்பரியத்தை மிகவும் இழிவாக எண்ணினர்.]

இதைக் கேட்டால் பதில் அளிக்கத் தகுதியற்ற குதர்க்க வாதம் என்கிறீர்கள்.

சிலருக்குக் கல்வி மறுக்கப்படுவதும், காலனிய மக்களின் தேசிய உணர்வுகள் மழுங்கடிக்கப் படுவதும் இருவேறு பிரச்சினைகள். இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாமல் நீங்கள் முன்னதில் ஆரம்பித்துப் பின்னதில் வந்து நிற்பது ஏன் ?

உங்கள் கட்டுரையை நான் படித்துப் புரிந்துகொள்வது இருக்கட்டும். முதலில் நீங்கள் ஒரு தெளிவுக்கு வாருங்கள்.

அன்புடன்

பரிமளம்


ஆசிரியருக்கு,

கடந்த வாரம் திண்ணையில் வெளியான கடிதத்தில் சோதிப்பிரகாசம் எழுதுகிறார்.

எடுத்துக் காட்டாக, புலையர் பெண்களைப் புணர்ந்து விட்டு வந்தால்தான் பயிர் செழிக்கும் என்று ஒரு சில நாயர்கள் கூறுவதைக் கேட்கின்ற ஜெயமோகனின் கதை நாயகன் கூறுகிறான்–நாயர் பெண் களைப் புலையர்கள் புணர்ந்தாலும் பயிர் செழிக்கும் என்று!

இங்கு கதாநாயகன் பெண்கள் குறித்து வெளிப்படுத்தும் கண்ணோட்டம் தெளிவாக உள்ளது.இது சாதி சமூதாயத்தை இழிவு படுத்துகிறதா அல்லது பெண்கள் மீதான வன்முறையை நியாயப்படுத்துகிறதா ? பெண்களின் மீதான் வன்புணர்ச்சியும்,வன்முறையும் அவர்கள் அந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்ற முறையிலும், பெண்கள் என்ற முறையிலும் நிகழத்தப்படும் உரிமை மீறல்கள்.எந்த வகையிலும் இதை நியாயப்படுத்தமுடியாது. ஆனால் இத்தகைய கண்ணோட்டம் சோதிப்பிரகாசத்தை பொறுத்தவரை சாதி சமுதாயத்தை இழிவுபடுத்தும் கண்ணோட்டம்.பெண்கள் குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.ஒரு வேளை சாதி சமுதாயத்தை இழிவு படுத்துவது என்ற பெயரில் பெண்கள் குறித்து கதாநாயகன் முன்வைக்கும் கண்ணோட்டம் சரிதான் என்று கருதுகிறாரோ ?. காலங்காலமாக பெண்கள் மீது போர்களிலும்,அதற்குப் பின்னும்,

கலவரங்களிலும், உள் நாட்டுப்போர்களிலும்,இனப்படுகொலைகளிலும் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை என்னவென்று சொல்வது ?இதை மனித உரிமை கண்ணோட்டத்தில்,பெண்ணிய கண்ணோட்டத்தில்

காணவேண்டுமா இல்லை காடு நாவலின் கதாநாயகன் கண்ணோட்டத்தில் காணவேண்டுமா ? (அந்த இடத்தில் நாவலாசிரியர் கண்ணோட்டமும் இதுதானா என்ற கேள்வி இங்கு எழுகிறது).

சாதிய பெருமையும்,ஆணாதிக்க கன்ணோட்டமும் இணைந்து முன்வைக்கப்படுவதை பல உதாரணங்கள் மூலம் காட்டமுடியும்.சாதியமும்,பெண்கள் மீதான வன்முறையும் குறித்து பெண்ணியவாதிகள் [உ-ம்

வசந்த்,கல்பனா(கண்ணபிரான்)] விரிவாக எழுதியுள்ளனர்.நானும்,சுந்தர் காளியும் சேர்ந்து எழுதியுள்ள

கட்டுரையில் தமிழ்த்திரைப்படங்களில் இது எப்படி வெளிப்படுகிறது/சித்தரிக்கப்படுகிறது என்பதை

குறிப்பிட்டுள்ளோம். பல ஆய்வுகள் பெண்கள் மீதான வன்முறைக்கும், தேசியம்,ஜாதி,இனம்,மதம் போன்ற

அடையாளங்களுக்கும் உள்ள தொடர்பினை காட்டியுள்ளன.இலக்கியத்திலும் இது பதிவாகியுள்ளது.

1947 ல் இந்தியா இரு தேசங்களாக பிரிக்கப்பட்ட போது பெண்கள் மீது மத அடிப்படையில் வன்முறை

நிகழ்த்தப்பட்டது.ஒரு ஜாதி/இனம்/தேசம்/குழு வினைச் சேர்ந்த பெண்கள் மீதான வன்முறை

அந்த ஜாதி/இனம்/தேசம்/குழுவிற்கு எதிரான தாக்குதலாகவும், ஒரு வெற்றியாகவும்,பழி தீர்க்கும்

முயற்சியாகவும்,பாடம் கற்பிக்கும் செயலாகவும் கருதப்படுவதை பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.சாதியத்தை

எதிர்ப்பது அல்லது ஒரு சாதியை எதிர்ப்பது என்ற பெயரில் பெண்கள் மீதான வன்முறையை எதிர்வினையாக/பதிலாக வைப்பது மிகவும் ஆபத்தானது.அதை சாதியத்தினை இழிவு செய்வதாக காண்பது அந்த வன்முறைக்கு ஆதரவளிப்பதாகும், நியாயப்படுத்துவதாகும்.இந்தக் கோணத்தில் நாம், சோதிப்பிரகாசம் எழுதியிருப்பதை அணுகலாம்.

கதாநாயகன் கூறுவதும், சில நாயர்கள் கூறுவதும் பெண்களைப் பற்றிய ஒரே கருத்தையே

முன்வைக்கின்றன.பெண்களை இழிவுப்படுத்துவதாகவும்,வன்முறையை நியாயப்படுத்துவதாகவும்தான் இதை காணமுடியும்.இதை சாதி குறித்த ஒன்றாகவே அவர் கருதுகிறார்.இந்த உரையாடலில் வெளிப்படும் தர்க்கம் எத்தகையது என்பதை அவர் கேள்விக்குள்ளாக்கவில்லை.அந்த நாவலை நான் படிக்கவில்லை, எனினும் கதாநாயகன் ஆணாதிக்க மனோபாவம் கொண்டவன், பெண்கள் மீதான வன்முறையை நியாயப்படுத்துபவன் என்றே இதன் மூலம் யூகிக்க முடிகிறது.இது போன்ற ஒரு உரையாடல் முற்போக்கு/திராவிட இலக்கியப்

படைப்பு ஒன்றில் காணப்பட்டிருந்தால் அது மலினமான சித்தரிப்பாக (அ) பிரச்சாரத் தொனி கொண்டது

என்று விமர்சிக்கப்பட்டிருக்கும்.(அவ்வாறு விமர்சிப்பவர்களால் பெண்ணிய நோக்கில் அது கேள்விக்குட்படுத்தப்பட்டு விமர்சிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறை.இங்கு பெண்ணிய கண்ணோட்டத்தில் இலக்கிய

விமர்சன முறை/பார்வை குறித்து தனக்கு தெரியாது என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம்.)

ஜெயமோகன் எழுதியுள்ள நாவல் என்பதால் அது சாதிய சமுதாயத்தை இழிவு செய்யும்

கண்ணோட்டம் என்ற பெயரில் உயர்த்திப் பிடிக்கப்பட்டு நம்முன் வைக்கப்படும். இதுதான் இங்கு நிலவும்

இலக்கிய அரசியல்.மேலும் அவர் எழுதியுள்ளார்:

அனுபவ அறிவு நிலையின் உச்சக் கட்டமான பகுத்தறிவினைக் கீறிப் பிளந்து, முரணியக்க(dialecti- cal) அறிவு நிலையினை நீந்திக் கடந்து, காரண அறிவு நிலையினை நாம் எய்துகின்ற பொழுதுதான் கார்ல்

மார்க்ஸ் போன்றோரின் நூல்களை நாம் புரிந்து கொள்ள முடியும் என்பதை மார்க்…ிய வாதிகள் அறிவர்

இதை விட மார்க்ஸ் எழுதியதைப் பற்றி அபத்தமாக யாரும் எழுத முடியாது என்று சொல்லலாம்.

ஜெயமோகன்தான் விவேகன் என்ற பெயரில் எழுதுகிறாரோ என்ற ஐயம் அப்போதே எழுந்தது.ஏனெனில் அவருக்கே உரித்தான அபத்தக் கண்ணோட்டம் அதில் வெளிப்படையாகத் தெரிந்தது.தொடர்முடிந்த பின் அதைப் பற்றி எழுதலாம் என்று நினைத்திருந்தேன்.

K.ரவி ஸ்ரீநிவாஸ்

ravisrinivas@rediffmail.com


நண்பர் நாகூர் ரூமிக்கு,

வணக்கம். என் கட்டுரைக்கு/கடிதத்திற்கு நான் விளக்கம் எதுவும் எதிர்பார்க்கவில்லை. அவரவர்களாகவே சிந்தித்தால்

போதும் என்றே எழுதியிருந்தேன். என்றாலும் நீங்கள் விளக்கமளித்ததற்கு நன்றி. ஆனால் ஒரு சில கருத்துக்களுக்கு

மட்டுமே விளக்கமளித்திருக்கிறீர்கள். (selective amnesia ?). திருமணத்திற்கு முன்னான அவர்களின் வாழ்வுமுறை,

மணமுறிவு, அதற்குபின் அவர்களின் நிலைமை போன்ற மற்ற கேள்விகளுக்கும் தகுந்த விளக்கமளித்திருந்தால் இன்னும்

நன்றாக இருந்திருக்கும். அனைவருக்கும் விளங்கியிருக்கும். மார்க்கத்தில் கட்டாயம் எதுவுமில்லாமலிருக்கலாம். நடைமுறையில் எப்படி என்பதுதான் முக்கியம். எல்லா பெண்களும் விரும்பியே தலையில் துண்டுபோடுகிறார்கள் என்று

நீங்கள் கூறுவது அதிசயமான செய்தி. ஒரு சமுதாயத்திலுள்ள அனைத்து மக்களும், குறிப்பாக பெண்கள், ஒரே கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை குழந்தைகள் கூட ஒத்துக்கொள்ள மாட்டார்கள்! ஒரு சிலர் விரும்பி அணியலாம் இல்லையென்று சொல்லுவதற்கில்லை. ஆனால் அனைவரும், என்பது கொஞ்சம் அதிகம். மேலும் தமிழ் நாட்டில் சில பகுதிகளை உதாரணமாக காட்டிவிட்டு இதை முடித்துவிட்டார்கள். தமிழகத்தோடு இஸ்லாம் முடிந்துவிடிவதில்லை என்பது என் தாழ்மையான கருத்து. காஷ்மீரில் பெண்களை துண்டு போட சொல்லி ‘கட்டாயப்படுத்துகிறார்கள் ‘ என்பதும், போடாத சில பெண்களை சுட்டுவிட்டார்கள் என்பதும் கூட செய்தியாக அனுதினமும் வருவது உங்களுக்கு தெரியாதென்று கருதுகிறேன். அதனாலேயே இப்படி எழுதியிருக்கிறீர்கள்! சரி, அது கூட தீவிரவதிகளின் செய்கை என்று நீங்கள் எளிதாக விளக்கி விடமுடியும். செளதி அரேபியாவிற்கு வேற்று நாட்டினர்-முஸ்லீமாக இருக்கவேண்டியதில்லை வேறு மதத்தினரும் கூட- வேலைக்கு செல்லும்போது தங்கள் மனைவியரை அழைத்து சென்றால் கூட தலைத்துண்டு

அணிந்துதான் அழைத்து செல்லவேண்டும். இப்போதும்கூட இது நடைமுறையில் உள்ளது என்பதும் தங்களுக்கு தெரிந்திருக்க நியாமில்லை என்று நினைக்கிறேன்! தெரிந்திருந்தால் இதற்கும் நியாயமான விளக்கம் அளித்திருப்பீர்கள் என்று கருதுகிறேன். பெண்களின் கண்ணியம்தான் இஸ்லாத்தில் முக்கியம் என்று அடிக்கடி சொல்கிறீர்களே, வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்திய மற்றும் வேறுநாட்டு பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்ற உலகறிந்த இரகசியம் உங்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்று கூறப்போகிறீர்களா என்ன ?!

‘பள்ளிவாசலுக்குச் செல்லவேண்டும் என்று எந்த முஸ்லீம் பெண்கள் இயக்கத்தினர் கொடி பிடித்தார்கள் ? ‘ என்ற உங்கள் கேள்வியைப்போன்ற பிற்போக்கான, முதலாலித்துவக் கேள்வி வேறு இருக்கமுடியாது. (கொடி பிடிக்கும் சுதந்திரம் கூட அவர்களுக்கு உண்டா என்பது தனி கேள்வி.) கொடி பிடிக்கவில்லை என்பதால் தானே காலங்காலமாக பெரும்பான்மை மக்களை, தாழ்ந்தவர்கள் – தீண்டத்தகாதவர்கள் என்று கூறி ஒரு பெருங்கூட்டமே ஏமாற்றி வந்திருக்கிறது. காந்தியும் அம்பேத்காரும், பெரியாரும் தோன்றியபின்பு இப்போதுதான் அவர்கள் கொடியே பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னும் அவர்கள் சமமாக நடத்தப்படாமலிருக்க இது போன்ற முதலாலித்துவ சிந்தனைகளே காரணம். சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நீக்கவேண்டும் என்று எண்ணி பாடுபடுவது அனைவரின் கடமை. பாதிக்கப்பட்டவர்கள் கொடிபிடித்தால் தான் அதைப்பற்றிக் கண்டுகொள்வோம் என்பது ஆதிக்க வர்க்க எண்ணமே.

‘பகுத்தறிவுள்ள எல்லோருக்கும் புரிந்துவிடுகின்ற காரணாங்களினால் தான் ஆண்கள் கூடுகின்ற இடங்கள் எல்லாவற்றுக்கும் பெண்கள் போகத்தேவையில்லை என்று உள்ளாது ‘ என்ற உங்கள் வாதத்தை எந்த பகுத்தறிவு உள்ளவரும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்! ‘ஆண்களின் கண்களைத்தான் நம்புவதற்கில்லை..! ‘ என்ற உங்கள் கருத்து ஆண்கள் யாவருமே (உங்களையும் சேர்த்து) மோசமானவர்கள் என்ற சாயத்தைப் பூசுவதோடு, பெண்களை அப்பட்டமாக முடக்கி வைத்துவிடுகிறது. ஆண்கள் இல்லாத இடத்திற்குத்தான் பெண்கள் செல்லவேண்டும் என்றால் அவர்கள் எங்கேயும் செல்லமுடியாதய்யா. என் முந்தைய கடிதத்தின் கடைசி பகுதியில் இப்படி எழுதியிருந்தேன்:

‘ ‘உலகில் பல அநியாயங்கள் பெண்களை முன் நிறுத்திதான் நடக்கிறது ‘ என்று காரணம் காட்டி பெண்களை பர்தாவுக்குள் ஒளிந்துகொள்ள நீங்கள் அழைப்பது முற்போக்கானக் கருத்தோ, அவர்களுக்கான முன்னேற்றப் பாதையோ, அல்லது அவர்களுக்கான சுதந்திரமோ அல்ல. எத்தனை அநியாயங்கள் நடந்தாலும், ‘நாங்கள் திருந்தவே மாட்டோம், எங்களுக்கு சுயக்கட்டுப்பாடு விதித்துக்கொண்டு, மரியாதையாக நடத்த மாட்டோம்; நீங்கள் வெளிவந்து தைரியமாக

வாழ்வதற்குண்டான சூழலை ஏற்படுத்தி தர முயலமாட்டோம். வேண்டுமானால் நீங்கள் ஓடி ஒளிந்துகொள்ளுங்கள் ‘ என்று

சொல்வதுபோன்ற ஆணாதிக்கக் கருத்துக்கள் முதல் பத்தியில் சொல்லப்பட்டக் கருத்துக்களுக்கு வலு சேர்ப்பதாகவே

இருக்கிறது. ‘

இதையேதான் உங்கள் கருத்தும் பிரதிபலிக்கிறது. ஆண்கள் தங்களை திருத்திக்கொள்வதை விட்டு பெண்களை அடங்கச்சொல்வது. ஏன் ஆண்கள் தங்கள் கண்களை துணிகொண்டு மறைத்துக்கொள்ளவேண்டும் என்று

கூறலாமே. (இது வாதத்திற்காக சொல்லப்படுகிறது. இதிலும் எனக்கு உடன்பாடில்லை.). அப்படி சொல்வது நியாயமாகப் படவில்லை, அதேபோல்தான் பெண்களைக் கட்டாயப்படுத்துவதும் நியாயமாகப்பட்வில்லை.

மற்றொன்று, ‘இந்த லட்சணத்தில் ஏன் ஒரு பெண் நபி வரவில்லை என்று கேள்வி வேறு ?! ‘ என்று நீங்கள் அங்கலாய்ப்பதற்கோ கோபப்படுவதற்கோ ஒரு முகாந்திரமுமில்லை. முதலில் கேள்வி என்னுடையதில்லை. இஸ்மாயில் அவர்கள் தன் கட்டுரையில் இந்த கேள்வியை கேட்டு அதற்கு விளக்கமளிக்க முனைந்திருக்கிறார். அந்த விளக்கத்தில் உள்ள குறைபாடுகளை மட்டுமே நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். மேலும் நானே கேட்டிருந்தாலும், யாரும் கேள்வியே கேட்ககூடாது என்று கருதுவது, சுதந்திரநாட்டில் அறிவுடமையாகாது. கேட்டது கேட்டாகிவிட்டது, யார் கேட்டிருந்தாலும் விளக்கமளிக்க முனையும்போது நியாயமான விளக்கமளிக்கலாம். அதைவிட்டு (வழக்கம்போல்) அந்தக்கால வரலாறு, இந்தக்கால வரலாறு என்று ஏதோ சம்மந்தமில்லாமல் எழுதிவிட்டு, இப்படி ஒரு கேள்வி வேறா என்று கேட்பதிலென்ன முறையுள்ளது ? அதேபோல எப்போதுபார்த்தாலும், ‘இப்படி கேள்வி கேட்பவர்கள் அவர்களிடத்தே இது போன்ற சிந்தனை இருக்கிறதா என்று ஆராயவேண்டும் ‘ என்று நீங்கள் கூறுவது வேடிக்கையானது. (அதில் நியாயமிருக்கிறது, ஆனால் அது கேள்விக்கான பதிலாகிவிடாது!). உங்கள் மதத்திலோ, கருத்துக்களிலோ யாராவது குறை சொன்னால், அல்லது குறை என்று அவர்கள் நினைத்து கேள்வி கேட்டால், அதற்கான நியாயமான பதிலோ, விளக்கமோ அளிப்பதுதான் முறையாக இருக்கும். அதைவிடுத்து உங்கள் மதத்தில் அப்படி இல்லையா, நீங்கள் இப்படி சிந்திக்கிறீர்களா ? என்று கேட்பது விளக்கமாகாது. ( ‘நீ ஏன் திருடினாய் ? ‘ என்று கேட்டால் ‘நீ திருடவில்லையா ? அதனால் தான் ‘ என்று பதிலுக்கு கேட்பதுபோல இருக்கிறது.) நீங்கள் அப்படி கேட்க எல்லா நியாயமும் உள்ளது, அவர்களுக்குள்ளது போலவே. ஆனால் அதை அதுபற்றிய வாதத்தின்போது கேட்பதுதான் சரியாக இருக்கும். மற்ற மதத்தைப்பற்றி அறியவோ, தவறு என்று சுட்டிக்காட்டவோ விரும்பினால் அதற்கான ஒரு வாதத்தை தொடங்குங்கள், அவர்கள் அதற்கு பதிலளிக்கட்டும்.

வழக்கம்போல இதற்கு விளக்கத்தை நான் எதிர்பார்க்கவில்லை. அவரவர்கள் சிந்தித்தாலே போதுமானது. ஆனால் விளக்கமளிக்கவேண்டும் என்று விரும்பினால், முறையான, நியாயமான விளக்கங்களையே எதிர்பார்கிறேன். வெற்று வார்த்தைகளையல்ல. வணக்கத்துடன் – பித்தன்.

***********

ஜெயமோகனின் ‘ஒரு கலாச்சார ஒடுக்குமுறை ‘ படித்தேன். மிக அருமையான கட்டுரை. எல்லோரும் சிந்திக்கவேண்டிய

விசயம். ஆனால் அதுபற்றி எதாவது செய்யமுடியுமா என்பது கேள்விக்குறியே. ஜனநாயக நாட்டில் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் எல்லாவற்றையும் முடக்கிப்போடும் எதேச்சாதிகார ஆட்சியில் சாதாரணர்கள் என்ன செய்யமுடியும் ?

என்றாலும் இதுபற்றிய வாதத்தினால் மக்களிடம் ஒரு விழிப்புணர்வு தோன்றினாலே போதும். அதற்கு வெகுஜன ஊடகங்கள் பயப்படாமல் இதுபற்றி விவாதிக்க வேண்டும். நடைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை.

‘ஜெ ‘ ஆட்சிக்கு ‘ஜே ‘ போடும் அசடுகள் இந்த கட்டுரையைப் படிக்கட்டும். ஜெயமோகனுக்கு நன்றி.

***********

அரவிந்தன் நீலகண்டனின் கடிதத்தைப்படித்துவிட்டு அழுவதா சிரிப்பதா தெரியவில்லை. கணினிக்கு சுழியும் ஒன்றும் தவிர வேறொன்றும் தெரியாது என்று ஒரு 10000 பேராவது இந்த தளத்திலேயே சொல்லிவிட்டார்கள். அதற்கு அடுத்தபடி, கணிதத்தைவேண்டுமானால் சொல்லலாம். அதுவும் கூட அறிவியல் தொழில்நுட்ப மென்பொருள்களுக்குத்தான். வேறு ஒரு புண்ணாக்கும் தேவையில்லை, உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் மென்பொருள் தயாரித்துவிடலாம். தேவையில்லாமல் பல வாரங்களாக சமஸ்கிருத பாடம் நடக்கிறது. ஈவேராவின் பிரச்சாரங்களை மட்ட-மலின-வக்கிர பிரச்சாரக்கூத்து என்று கூறும்போதே அவர் ‘கட்சி ‘ விளங்கிவிடுகிறது. இனி அவரிடம் என்ன விளக்கம் சொன்னாலும் சமஸ்கிருதந்தான் மென்பொருளுக்கு ஏற்ற மொழி என்றுதான் சொல்லிக்கொண்டிருப்பார். நிறைய தமிழ் புத்தகங்களும் படித்திருக்கிறார் என்றும் புரிகிறது. எனினும் ‘நம் பண்பாட்டின் ஒரு பகுதியை நாமே வெறுத்து ஒதுக்குவது சரியா ? ‘ என்ற பகுத்தறிவுக்( ?) கேள்வியை எழுப்புகிறார். கொஞ்சம் நியாயம் இருப்பதாகத்தெரிகிறது. ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது ஐயா. இந்தியாவில், புள்ளிவிவரங்களின் படி, குறைந்தது ஒரு 200 மொழிகளாவது இருக்கும். அவற்றையும்

படிக்க வேண்டும், இல்லையென்றால் நம் பண்பாட்டின் எதாவது ஒரு பகுதியை நாமே வெறுத்து ஒதுக்குவதுபோல ஆகிவிடும்! காஷ்மீரி, குஜராத்தி, பெங்காலி….பண்பாடுகள் நமக்குத்தேவையில்லையா அவற்றையும்ம் படிக்க சொல்லுங்களய்யா. அத்தனை மொழிகளையும் படிக்காமலேயே எல்லோரும் ஒரு நாட்டு மக்கள், ஒரே நாடு என்றும், கலாச்சார, பண்பாடுகள் தெரிந்தும் எப்படி வாழ்கிறார்கள் என்பதற்கும் கூட தாங்கள் விளக்கம் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

‘பாரதத்தில் சமஸ்கிருதம் ஏதோ ஒரு சமயத்தினரின், ஒரு சாதியினரின் மொழி என்பது தவறு ‘ என்று அடித்துக் கூறுகிறீர்கள். எத்தனை சாதியினருக்குத்தெரியும் என்பதற்கு புள்ளி விவரம் வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எந்த எந்த சாதியினர் எத்தனை சதவிகிதம் என்று பெரிய மனதுபண்ணி வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

காளிதாசனும், வால்மீகியும் விதிவிலக்குகள். எல்லாசாதியினருக்குமான மொழி என்று கதையடிக்காமல் புள்ளிவிவரங்கள் தரவும். அப்போது தெரிந்துவிடும். சமஸ்கிருதத்தில் புதியதாக என்ன படைக்கப்பட்டிருக்கின்றன. எல்லாம் பழையவைகள். பேச்சு மொழியாக உள்ளதா ? எனக்குத் தெரிந்தவரை இல்லை. பின் ஏன் அதை படிக்கவேண்டும்.

அதிலிருக்கும் பழைய படைப்புக்களைப் படிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவா ? யாராவது சில பேர் அவற்றை மொழி பெயர்த்துவிட்டால் போதாதா ? அதைவிட்டு ஏன் எல்லோரும் படிக்கவேண்டும் படிக்கவேண்டும் என்று புலம்புகிறீர்கள் ? வேறு எதாவது நியாயமான காரணங்கள் இருந்தால்- சங்கராச்சாரி கும்பாபிஷேகத்துல ஓதும்போது எல்லாருக்கும் தெரியனும் என்பது போன்ற காரணங்களில்லாமல்- தெரிவிக்கவும். அறிந்துகொள்ள ஆவாலாயிருக்கிறோம்.

************

‘வரதன் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம் தனியொருவர் எழுதிய கடிதமல்ல. கோடிகணக்கான தமிழர்களின் உள்ளுணர்வை வெளிப்படுத்தும் கடிதமாகும் ‘ என்று ஆணி அடித்து சொல்லுகிறார் விஸ்வாமித்திரா. ஏதோ கோடி கணக்கான தமிழர்களிடம் போய் கேட்டிருப்பார் போலிருக்கிறது! கலைஞர் ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டிவிட்டு ‘ஜெ ‘ ஆட்சி சிறந்தது என்கிறார் வரதன். பதிலுக்கு இந்த வாரம் ‘ஜெ ‘-ன் ஊழல்களை விவரித்து பதிலடி தருகிறார் நந்தன். இரண்டையும் படிக்கும்போது இரண்டு ஆட்சியிலும் ஊழல்கள் இருந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது.

இதில் ஒரு ஆட்சிதான் சிறந்தது என்பது வேடிக்கையானது. ஒரு ரூபாய் சம்பளத்தில் எப்படி கோடி கோடியாக சுருட்டினார் ஜெ என்று யாராவது விளக்கமளித்தால் பரவாயில்லை. அவர் நடிகையாக இருந்தபோது இலட்சங்களில் கூட சம்பளமில்லை. ஜெ டி.வி, ஜெயா பப்ளிகேசன் இவையெல்லாம் பின்னால் வந்தவை. அவருக்கு சொல்லக்கூடிய ஒரே காரணம் பிஸினஸாக திராட்சை தோட்டமுள்ளது என்பதுதான். ஒரு தோட்டத்தில் ஓரிரு வருடங்களில் இவ்வளவு கோடி வருமானம் வருமெனில் பேசாமல் இந்தியாவில் ஆட்சிகளைக் களைத்துவிட்டு எல்லாக் கட்சியினரையும் திராட்சை தோட்டம் வைக்க சொல்லலாம்! கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பார்கள். ஆனால் நம் நாட்டில் கண்ணாடியும் அணிந்துகொண்டு, புண்ணே இல்லை என்பது போல இன்னும் சொத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.கலைஞருக்கும் அப்படியே, சன் டி.வி பிற்பாடு வந்ததுதான் எனில் அவருக்கும் எப்படி இவ்வளவு சொத்துக்கள் வந்தன என்றும் கேட்கவேண்டும். சரி இவர்களாவது ஆட்சியிலிருந்தவர்கள். சசிகலா என்பவர் யார் ? ஜெ-வுடன் தங்கியிருக்கிறார் என்பதைவிட அவருக்கு வேறு என்ன முகாந்திரம் ? இதைவைத்துக்கொண்டு அவரும் அவர் குடும்பத்தாரும், மன்னார்குடியில் பாதியையும், மற்றும் தமிழகமெங்கும் சொத்துக்களாக வாங்கி குவிக்க உதவி செய்த ஆட்சி சிறந்தது என்று ஒருவர் கடிதமெழுதுகிறார். அது கோடிக்கணக்கான தமிழர்களின் உணர்வு என்று ஒருவர் சப்பைக்கட்டு கட்டுகிறார். என்ன வக்கிரமான சிந்தனை பாருங்கள். தங்கள் அணியை நிலைநாட்ட, நீதி நியாயங்களை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு எதைவேண்டுமானாலுல் எழுதலாம், மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைக்கும் புத்திசாலிகளை என்ன சொல்வது ? கட்சி, அணிகள்- சேரா எந்த பொதுமக்களும், இரண்டு ஆட்சிகளையும் பற்றி புகழ்ந்து பேச எந்தவிதக் காரணமுமில்லை.

அடுத்ததாக விஸ்வாமித்திரா கூறும் குற்றச்சாட்டு, கலைஞர் ஹிந்தி படிக்காதே என்கிறார் ஆனால் அவர் பேரன் ஹிந்தி படிக்கிறார் என்பது. கலைஞரை தாக்கவேண்டும் என்ற காரணத்திற்காகவே எழுதப்பட்டிருக்கிறது. கலைஞர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி எவ்வளவு வேண்டுமானாலும் தாக்கிக்கொள்ளுங்கள். கவலையில்லை. இது கலைஞரைப் பற்றியதன்று. இந்தி ஆதரவு நிலையைப்பற்றியது. ஹிந்தி ஆதரவாளர்கள் தங்கள் வசதிக்காக ‘ஹிந்தி எதிர்ப்பாளர்கள் ‘ என்று கூறுவது பற்றியது. அது ‘ஹிந்தி ‘திணிப்பு ‘ எதிர்ப்பு ‘ ஐயா. ‘ஹிந்தி எதிர்ப்பு ‘ அல்ல. திணிப்பு தான் முக்கியமாக

எதிர்க்கப்படுகிறது. சுலபமாக திரித்து எழுதிவிடுகிறார்கள்! யாரும் ஹிந்தியே படிக்கக்கூடாது என்று கலைஞரோ, ஹிந்தி எதிர்ப்பாளர்களோ சொல்லவில்லை. பம்பாய்க்கு வேலைக்கு சென்றாலும்கூட ஹிந்தி படிக்கக்கூடாது என்று (கலைஞர் ?) யாராவது சொல்கிறார்களா ? அல்லது நீங்களாக விரும்பி ஹிந்தி படித்தால் யாராவது வந்து கழுத்தை நெறிக்கிறார்களா ? பள்ளிகளில் கட்டாயமாக ஹிந்தி படிக்கவேண்டும் என்பதைத்தான் எதிர்க்கிறார்கள். கலைஞரின் பேரன் என்ன, கலைஞரே விரும்பி ஹிந்தி படித்தாலும்கூட அது தவறென்று கூறமுடியாது. புகுத்துவது தான் தவறென்று போராட்டம் நடந்தது.

**********

இதையொட்டி, சங்கரபாண்டி அவர்களின் கடிதம் மிக அருமை. நரேந்திரன் கடிதமும் சங்கரபாண்டியின் கடிதமும் ஒரே

நேரத்தில் வந்திருப்பது நன்று. நண்பர் நரேந்திரனின் கடிதத்திலும் சில நியாயங்கள் இருக்கின்றன. ஆனால் சங்கரபாண்டியின் கடிதம் அவற்றிற்கான சரியான விளக்கமாக இருக்கிறது. ஜப்பானுக்கு வேலைக்கு செல்வதால் ஜப்பானிய மொழி படிப்பதோ, குஜராத்துக்கு செல்வதால் குஜராத்தி படித்திருப்பதோ தேவையா என்று கேட்கிறார்.

இப்படி சொல்லிக்கொண்டே போனால் அனைத்து மொழிகளையும் பாடமாக பள்ளிகளில் வைக்க வேண்டியிருக்கும்.

அதைவிட, வங்கியில் கணக்கு திறக்கவோ, இரயில் பயண படிவங்கள் பூர்த்தி செய்யவோ, மத்திய துறை தேர்வுகளுக்கோ ஹிந்தியில் படிவங்களும் கேள்விகளும் எதற்காக என்று மிக அருமையாகக் கேட்டிருக்கிறார். விரும்பினால் எந்த மொழியையும் தமிழகத்தில் படிக்கலாம். ஒரு தடையுமில்லை. விருப்பமில்லாவிட்டால் தமிழைக்கூட படிக்கத் தேவையில்லை. வட மாநிலங்களிலிருந்து வந்து தமிழ்நாட்டில் அருமையாக வியாபாரம் செய்துகொண்டு இருக்கிறார்கள். என்பது போன்று அருமையாக விளக்கமளித்திருக்கிறார். இதைவிட எளிமையாக யாரும் விளக்கவே முடியாதென்பதாக விளக்கியிருக்கிறார். இந்த விளக்கங்களைக்கூட புரிந்துகொள்ள முடியாதவர்கள் ஒன்று அடி முட்டாள்களாக இருக்க வேண்டும் அல்லது புரிந்துகொள்ள விரும்பாதவர்களாக இருக்க வேண்டும். இரண்டு வகையினருக்கும் விளக்குவது வீண்.

நம் நாட்டில் படித்து வரும் பதவிகளிலேயே உயர்ந்தது, ஐ.ஏ.எஸ் வகை பதவிகள்

தான். தமிழையே மேற்படிப்பாக கொண்ட மாணவர், தமிழிலேயே தேர்வு எழுதி இந்த பதவியை அடையலாம்.

இப்பதவிகள் இந்தியா முழுவதிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதிலேயே ஐ.f.எஸ் பதவிகள் உலகநாடுகள் பலவற்றிற்கும் செல்லகூடியது. எனின் இவர்கள் பள்ளிகளில் அனைத்து இந்திய மொழிகளோ, உலக மொழிகளோ

படிக்கவேண்டும் என்று கூறவது சிறுபிள்ளைத்தனமான வாதம். இவர்களுக்கே தேவையில்லை எனில் அதிகம் படித்திராத தாத்தா பாட்டிகளுக்கும் குப்பன் சுப்பன்களுக்கும் ஹிந்தியில் இரயில் பலகைகள் எதற்காக ? பண்டைய காலத்திலேயே மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல கிழக்காசிய நாடுகளை தமிழர்கள் ஆண்டிருக்கிறார்கள். கிரேக்கம், சீனா, அரேபியா என பல நாட்டவருடன் வணிகம் செய்திருந்திருக்கிறார்கள். அத்தனை மொழிகளையும் படித்துவிட்டா இந்த அருங்காரியங்களை செய்தார்கள் ? ஒரு மொழியைக் கற்க இருவித காரணங்கள் சொல்லலாம். ஒன்று ‘அவசியம் ‘. பம்பாய்கோ, கல்கத்தாவிற்கோ செல்லவேண்டிய சூழ்ந்லையெனில் அங்கு போய் கற்றுக்கொள்ளலாம். ஆரம்பத்தில் சிறிது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் ஒன்றும் முடியாத காரியமில்லை. இரண்டாவது, விரும்பிக் கற்பது. வழக்கமாக தாய் மொழியை விரும்பி படிப்போம். மற்ற மொழிகளையும் விரும்பினால் படித்துக்கொள்ளலாம். இதில் தமிழகத்தில் எந்த தடையுமில்லை. எந்த எதிர்ப்பாளரும் தடை செய்வதில்லை. ஹிந்தியை கட்டாயமாக புகுத்த முயற்சி செய்து அரசியல் வாதிகளுக்கு ஒரு வாய்ப்பை அளித்துவிட்டு, பின் மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்று ஏன் புலம்புவானேன் ? அருமையான விளக்கங்கள் கொடுத்த அன்பர் சங்கரபாண்டிக்கு வாழ்த்துக்கள்.

– பித்தன்.

piththaa@yahoo.com

(நீக்கங்கள் உண்டு)


மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

திரு.கலவை வெங்கட்டின் கட்டுரைக்கான திரு.பரிமளத்தின் எதிர்வினையில் பிரிட்டிஷாரின் வருகைக்கு பின்னாலான தகவல்களை நமது பாரம்பரிய கல்வி அமைவுகளின் குணாம்சமாக அளித்திருப்பதாக பொருள்பட உரைக்கிறார். ஆயின் பிரிட்டிஷாருக்கு முந்தைய பாரத பாரம்பரிய கல்விநிலை சிறப்பாக இருந்தமைக்கு பிரிட்டிஷ் ஆவணச் சான்றே உள்ளது. உதாரணமாக, கெயிர் ஹார்ட்டி எனும் பிரிட்டிஷ் பாரளுமன்ற உறுப்பினர் ,மிஷினரிகள் பாரத பாரம்பரிய பள்ளிகள் குறித்து அளித்த மதிப்பீட்டின் அடிப்படையில், வங்காளத்தில் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புக்கு முன்னர் பாரம்பரிய சுதேசி பள்ளிகள் மட்டும் 80,000 (அதாவது அன்றைய மக்கட்தொகையின் பிரகாரம் 400 பேருக்கு ஒரு பள்ளி) இருந்ததாக கூறுகிறார். லட்லோவ் தனது ‘History of British India ‘வில் தெளிவாகவே குறிப்பிடுகிறார், ‘தன் பாரம்பரிய உருவத்தை தக்கவைத்துக் கொண்ட ஒவ்வொரு ஹிந்து கிராமத்திலும் அனைத்துக் குழந்தைகளும் எழுத, படிக்க, கணிக்க தெரிந்தவர்களாக இருந்தனர். ஆனால் எங்கெல்லாம் நாம் பரவினோமோ அங்கெல்லாம் கிராம கல்வி முறை அழிந்துவிட்டது. ‘ பெல்லாரியின் ஆட்சித்தலைவர் கேம்ப்பெல் தனது 1823-ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் பாரதிய கல்விமுறை குறித்து குறிப்பிடுகிறார், ‘[பாரம்பரிய கல்விமுறையில்] குழந்தைகள் எழுதப்படிக்க மிகுந்த திறனுடன் கற்பிக்கப்படுகிறார்கள் என்பதுடன் முன்னேறிய நிலையிலுள்ள மாணவர்கள் பின்தங்கிய மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றனர். அவர்களது கல்விமுறையின் மிகச்சீரிய தன்மையினால் இங்கிலாந்திலும் நாம் இம்முறையை பின்பற்றுவது நியாயமான விஷயம். ‘ என்பதுடனேயே அவர் பிரிட்டிஷார் கீழ் அன்றைய நிலையை ‘இன்றோ ஒரு மில்லியன் மக்களில் 7000 பேர் கூட பள்ளியில் இல்லை. ‘ எனவே பாரம்பரிய கல்விமுறை குறித்த திரு.கலவை.வெங்கட்டின் கருத்துக்கள் உண்மையானவை என்பதுடன் அது பிரிட்டிஷாரால் சீர்குலைக்கப்படுமுன் இருந்த கல்வி நிலையையே காட்டுகிறது. பிற்காலத்திலும் கூட ஸ்வாமி விவேகானந்தர் மற்றும் ஆரிய சமாஜத்தினர் கல்வியை அனைத்து மக்களிடம் கொண்டு செல்ல முயன்றபோது, மிஷினரிகளுடன் காலனிஅரசு இணைந்து அரசு-இயந்திர தடைகளை உருவாக்கினர் என்பதை ஆவணச்சான்றுகளுடனான உண்மை.

அரவிந்தன் நீலகண்டன்

———————————

infidel_hindu@rediffmail.com


ஆசிரியருக்கு,

சில வாரங்களுக்கு முன் யமுனா ராஜேந்திரன் எழுதிய கட்டுரைக்கு பதில் எழுதும் போது ரஜனி தேசாயும்,

சிலரும் சேர்ந்து எழுதிய ஒரு வெளியீட்டைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.கைவசம் அது இல்லாததால்

விரிவாக அதைப் பற்றி எழுத முடியவில்லை. Aspects of India ‘s Economy ன் சமீபத்திய இதழில்

பின் நவீனத்துவ அரசியல் பார்வை குறித்த ஒரு விமர்சனம் உள்ளது.இது மும்பையில் நடைபெறும் WSF பற்றிய விமர்சனத்தின் ஒரு பகுதி.தன்னார்வ அமைப்புகள், வெகுஜன மக்கள் இயக்கங்கள் குறித்தும் இதில் பேசப்பட்டுள்ளது.இணையத்தில் இதை கீழ்க்கண்ட முகவரியில் காணமுடியும்.

http://www.rupe-india.org/35/contents.html

K.ரவி ஸ்ரீநிவாஸ்


Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்