கங்காணி

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

மணி வேலுப்பிள்ளை


குண்டுச் சத்தம் ஒருவாறாக ஓய்ந்தது. முதல் வேலையாக நாங்கள் கங்காணியைத் தேடிப் புறப்பட்டோம். அவனுடைய வேப்பமரம் கண்டதுண்டமாய்ச் சிதைந்து கிடந்தது. சுற்றுவேலி அரைகுறையாய் எரிந்து புகைந்தது. மரத்தடி மணலில் அவன் அலங்கோலமாயக் கிடந்தான். கிட்ட நெருங்கினோம். ஈக்கள் எங்ளை முந்திவிட்டன! உடலை மூடுவதற்கு நிலத்தில் கிடந்த வேப்பங் குழையை எடுத்தபொழுது அவனுடைய நாயின் முண்டம் கீழே தெரிந்தது…

கங்காணிதான் எங்கள் காவிய நாயகன். அவனைப் பற்றியும் அவனுடைய நாயைப் பற்றியும் பேசிச் சிரித்து மகிழ்வதை நாங்கள் ஒரு கலையாக வளர்த்து வந்தோம். கங்காணியின் நாய்க்கு கடுவன் என்று பெயர். கடுவனை ஓர் ஆறறிவு படைத்த மனிதனாகவே அவன் மதித்து வந்தான். அவனுடைய இயல், இசை, நாடகம் எல்லாம் கடுவனோடுதான் அரங்கேறும். அவனுக்கும் கடுவனுக்கும் இடையே ஊடல், பிரிதல், கூடல் எல்லாம் நடைபெறும்.

கங்காணி கடுவனுக்குச் சாப்பாடு வைப்பான். ஆனால் தண்ணீர் மட்டும் வைக்கமாட்டான். அதற்கு ஒரு தருக்கரீதியான காரணம் இருக்கிறது: ஒரு நாள் கங்காணி குந்தியிருந்து சிறுநீர் கழித்திருக்கிறான். கடுவன் தனது முன்னங்கால்களை அவனுடைய முதுகில் ஊன்றி நின்றுகொண்டு தானும் சிறுநீர் கழித்திருக்கிறது. கங்காணி அதனைப் பொருட்படுத்தியதாகக் காட்டிக் கொள்ளவில்லை. சர்வ சாதாரணமாக எழுந்து அதன் பளுவில் அவன் உதைத்த உதையில் அதற்கு வயிற்றாலே போய்விட்டது!

அன்று முதல் அவன் கடுவனுக்குத் தண்ணீர் வைப்பதில்லை. அத்தகைய நாயை விருந்தோம்புவோருக்குப் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் நான் முந்தி, நீ முந்தி என்று போட்டி போட்டுக்கொண்டு அதற்குத் தண்ணீர் வைப்போம். மற்ற நாய்களைப் போல் வாய்க்கால்களில் தண்ணீர் குடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அதற்கு ஏற்படவில்லை. அதற்கு நாங்கள் இடம் கொடுக்கவில்லை.

வேப்பமர முன்றல்தான் கங்காணியின் உறைவிடம். வேம்பைச் சுற்றி வேலி அடைத்து, உள்ளே மணல் பரப்பியிருந்தான். பனியோ வெயிலோ மழையோ புயலோ அதுதான் அவன் போக்கிடம். வேம்பில் ஒரு தண்டவாளத் துண்டு தொங்கியது. வகுப்பு நடக்கும் நேரங்களில் 40 நிமிடங்களுக்கு ஒரு தடவை அதில் ஓர் அலவாங்கினால் அடித்து ஓசை எழுப்புவான். அப்பொழுது ஒரு பாடம் முடிந்து அடுத்த பாடம் தொடங்கும். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை அவ்வப்பொழுது, அதாவது தூக்கம் கலையும் வேளைகளில், அவ்வாறு ஓசை எழுப்புவதே கங்காணியின் தலையாய கடமை. உறக்கம் கெடும் தருணங்களில் அந்த ஓசை தலைமை ஆசிரியரின் செவிப் பறையில் மோதும். அவன் பள்ளி வளவைக் கண்ணும் கருத்துமாயக் கண்காணித்து வருகிறான் என்பது அவருக்குப் புரியும்.

கங்காணியின் சாராயப் புட்டிகளைக் கால்களால் தட்டி உருட்டி விளையாடுவதில் கடுவனுக்குக் கொள்ளை இன்பம். சாராயப் புட்டிகளோடு விளையாட வேண்டாம் என்று எத்தனையோ தடவைகள் கங்காணி கடுவனை எச்சரித்திருக்கிறான். ஆனால் விளையாட்டு வி~யத்தில் அது தானே எசமானாய் மாறிவிடும். அவன் ஒரு வெறும் சாராயப் புட்டியால் அதன் மண்டையில் ஒரு போடு போட்டும் அது சொல்வழி கேட்கவில்லை.

ஒரு நாள் கங்காணியின் சாராயப் புட்டி ஒன்று காணாமல் போய்விட்டது. பள்ளிக் கூலியாட்கள்மீது அவனுக்குச் சந்தேகம். அவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்காதபடியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கடுவன் சாராயப் புட்டியைச் சரிவரக் கண்காணிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, வழக்கம் போல் அதற்கு ஓர் உதை கொடுத்து அனுப்பிவிட்டு, ஒரு பாட்டுப் பாடினான்:

‘கடுவன் பூராயம் பார்க்கவே போயாச்சு

அடியேன் சாராயப் புட்டியும் போயாச்சு… ‘ ‘|

எங்கள் விடுதியைச் சுற்றி சற்சதுரமாக 7 அடி ஆழத்திலும் 5 அடி அகலத்திலும் ஒரு கிடங்கு வெட்டப்பட்டிருந்தது. அதற்கு மேலே பனங்குற்றிகளை அடுக்கி, படங்கு விரித்து, மண் பரப்பி மூடப்பட்டிருந்தது. நாலு பக்கமும் உள்ளே நுழைவதற்கு வாயில் இருந்தது. பீரங்கித் தாக்குதல்களோ விமானத் தாக்குதல்களோ இடம்பெறும் தறுவாயில் நாங்கள் ஓடிப்போய் உள்ளே பாய்ந்து பதுங்குவதற்காகவே அந்தக் கிடங்கு வெட்டப்பட்டிருந்தது. ஆதலால் அதற்குப் பதுங்கு கிடங்கு என்ற பெயர் வழங்கி வந்தது.

நாயும் பூனையும் தேளும் தேரையும் பதுங்கு கிடங்கின் நிரந்தர வாசிகள். இடைக்கிடை கிடங்கினுள் கடுவன் குரைப்பது கேட்கும். உடனே கண்காணிக்கு ஆள் அனுப்பப்படும். அவன் ஒரு கையில் பொல்லும் மறு கையில் விளக்கும் கொண்டு கிடங்கினுள் இறங்குவான். அவனை எதிர்கொள்ளும் கடுவனிடம் ‘ம், என்ன சங்கதி ? ‘ என்று வினாவுவான். கடுவன் ஒரு நடை நடந்து திசைகாட்டிக் குரைக்கும். கங்காணி அதே திசையில் அடி எடுத்து வைப்பான்.

அங்கே ஒரு நச்சுப் பாம்பு எதிர்ப்பட்டால், கங்காணி அதனை அடித்துச் சாக்காட்டுவான். அப்புறம் ‘ம், சரி சரி, கெட்டிக்காரன் ‘ என்று சொல்லிக் கடுவனைத் தட்டிக் கொடுப்பான். ஒரு சாரைப் பாம்பைக் கண்டால், அதை விரட்டிவிட்டு ‘ம், போதும் போதும், பொத்தடா வாயை ‘ என்று கடுவனை அதட்டுவான். ஒன்றையும் காணாவிட்டால் கங்காணி ஒன்றுமே பேசமாட்டான். வந்த வழியே திரும்புவது போல் பாசாங்கு பண்ணிக்கொண்டு பாடத் தொடங்குவான்:

‘கடுவனோ, உன்னை

விடுவனோ ? இல்லை

சுடுவனோ… ?||

எசமான் பாடுவது ஏனென்று புரியாமல் கடுவன் மிலாந்திக்கொண்டு நகரும். அப்பொழுது அதன் பளுவில் ஒரு பாந்தமான உதை விழும். அது குய்யோ முறையோ என்று குரைத்துக்கொண்டு ஓட்டம் பிடிக்கும். அதனை எங்கள் பொன்னு அக்கா ‘உதைத்தது கண்டனர், குரைத்தது கேட்டனர் ‘ என்று உரைப்பது வழக்கம்!

கங்காணி பகலில் தனது படுக்கையில் கிடந்து ஷஈழநாடு| வாசிப்பான். அல்லது ஷஈழ வானொலி| கேட்பான். அப்படியே உறங்கிவிடுவான். அவனுடைய குறட்டை விடுதிவரை கேட்கும். நாங்கள் ஓடிப்போய் வேலியில் பொட்டு வைத்து ஊடுருவிப் பார்ப்போம். கங்காணியின் கவட்டுக்குள் கடுவன் படுத்திருக்கும். அப்புறம் கடுவனுக்கு உதை விழுவதைக் கண்டு களிப்பதற்காக நாங்கள் வேலியைச் சுற்றி வேவு பார்த்துக்கொண்டு நிற்போம்.

கங்காணி புரண்டு படுக்க முற்படுவான். கடுவன் உறக்கம் கலைந்து உறுமும். கங்காணியின் மூஞ்சையில் கடுகடுப்பு புலப்படும். கொஞ்ச நேரம் அசையாமல், புரளாமல் படுத்திருப்பான். அப்புறம் திடாரென்று கடுவனின் பளுவில் ஓர் உதை விழும். அது அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்து பதுங்கு கிடங்கை நோக்கி ஓடும். அப்பொழுது கங்காணி ‘நான் அந்த வைரவர் என்ற எண்ணமோடா உனக்கு ? ‘ என்று கேட்டுக்கொண்டே எழுந்து கடுவனை விட்டுக் கலைப்பான். நாங்கள் கெக்கட்டம் விட்டுச் சிரித்துக்கொண்டு எங்கள் விடுதிக்குத் திரும்பி ஓடுவோம்.

கடுவனைத் தேடி ஏழெட்டுப் பெட்டை நாய்கள் வந்து போகும். கடுவனும் போய் அவற்றைச் சந்தித்து வரும். அவை வெட்டவெளியில் களவொழுக்கத்தில் ஈடுபடும். ஒரு நாள் பதுங்கு கிடங்கினுள் கடுவனும் அதன் காதல் நாயகி ஒன்றும் கூடிக் குலாவிய பிறகு ஒன்றை ஒன்று விட்டுப் பிரிய முடியாத நிலையில் கங்காணியிடம் வகையாக மாட்டுப்பட்டுக் கொண்டன. அவன் அந்தப் பெட்டை நாயை உதைத்து விரட்டிவிட்டு கடுவனைப் பிடித்துக் கொறகொறவென்று இழுத்துக்கொண்டு போய் வேப்பமரத்தில் கட்டிப்போட்டு ஒரு வேப்பந்தடியை முறித்து குளறக் குளற விளாசித் தள்ளினான். அப்பொழுது அவன் இசைத்த பாடல்:

‘காதல், காதல், காதல்

என் கையில் அகப்பட்டால்

நோதல், நோதல், நோதல்… ‘

கிடங்கினுள் பதுங்காத ஒரே ஒரு பேர்வழி கங்காணிதான். குண்டோசை கேட்கும்போது எங்கே நிற்கிறானோ அங்கேயே நிலத்தில் விழுந்து குப்புறக் கிடந்துவிடுவான். ஏற்கெனவே உறக்கத்தில் இருந்தால் எழும்பமாட்டான். ஆனால் கடுவன் அவனைச் சும்மா விடாது. நாங்கள் பதறுவதைப் பார்த்து வெருளும். வேம்படிக்கு விரைந்து ஊளையிட்டுக் குரைத்து எசமானை எழுப்பும்.

தனது உறக்கத்தைக் கெடுத்த கடுவனை அவன் ஒரு தரம் வைவான்: ‘ஆ, வைரவா! உன் அப்பனின் நெற்றிக் கண்ணைப் பாவித்து இந்தக் கடுவனை எரித்தருள மாட்டாயா ? ‘ என்று கேட்டுவிட்டு புரண்டு படுப்பான். அப்பொழுது குண்டோசை கேட்கும். ‘அடடா, தப்பு! தப்பு! ‘ என்று சொல்லிக்கொண்டே உருண்டு புரண்டு குப்புறக் கிடப்பான். கடுவன் வானைப் பார்த்து ஊளை இட்டுக்கொண்டு வேம்படிக்கும் கிடங்கடிக்கும் இடையே யாடு பாயும்…

கங்காணியின் உடலும் கடுவனின் உடலும் எங்கள் நெஞ்சங்களில் புதையுண்டு போயின. அந்தப் பிறவிகள் இரண்டும் இல்லாத விடுதியும் ஒரு விடுதியா என்ற கேள்வி எங்கள் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் உறுத்தியது. போரினால் ஊரழிந்த வேளையுிலும் எங்களால் இளமைப் பருவத்தையும் விடுதி வாழ்வையும் துய்க்க முடிந்தது என்றால், அதற்குக் கங்காணியும் கடுவனுமே காரண கர்த்தாக்கள்.

2000-07-29

manivel7@hotmail.com

Series Navigation