ஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம்

This entry is part [part not set] of 41 in the series 20080508_Issue

தாஜ்


முகலாய பேரரசர்களில் ஒருவரான ‘அபு முசாபர் முகையுதீன் முகமது ஔவுரங்கசீப் ஆலம்கீர்’ என்கிற ஔரங்கசீப் எழுதிய ஒரு கடிதம், உலக சரித்திரத்தில் பிசித்திப் பெற்ற கடிதமாக நிலைப்பெற்று இருக்கிறது. தனக்கு கல்வி போதித்த ஆசிரியர் ஒருவருக்கு அவர் எழுதிய கடிதமது. தீவிர சிந்தனைகளை கொண்டதாகவும் யதார்த்த இழையோடியதாகவும் அந்தக் கடிதம் நம் பார்வையை ஈர்க்கிறது. கடிதத்தில் தெறிக்கும் அவரது கோபம் யோசிக்கத் தகுந்தது. என்னளவில் அது அர்த்தம் கொண்ட தும் கூட! படித்ததில் பிடித்ததான அந்தப் பிரசித்திப் பெற்ற கடிதத்தை கீழே தந்திருக்கிறேன்.

உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் தாஜ்மஹாலை கட்டியப் பேரரசர் ஷாஜகானுக்கும் அவரது காதல் மனைவியான மும்தாஜுக்கும் ஐந்தாவது வாரிசாக பிறந்தவர் ஔரங்கசீப்! தனது ஆட்சியை இன்றைய ஆப்கானிஸ்தான் – கந்தஹாரில் இருந்து தமிழ்நாட்டின் வட மாவட்டமான செஞ்சிவரை விஸ்தீரனப்படுத்தியவர். தந்தையின் மீதும், தமையன்கள் மீதும்கூட படையெடுத்தவர். அவர்களை வென்று அந்த ஆளுமைகளையும் தனது விஸ்தீரணத்திற்கு உட்படுத்தியவர்! இவரது ஆட்சி காலம் கி.பி. 1658 – 1707.

தனக்கு கல்வி போதித்த ‘முல்லா சாஹேப்’ என்கிற ஆசிரியரின் திறமையின்மைக் குறித்து, தனது மனதாங்களை ஔரங்கசீப் விமர்சனக் கோணத்தில் வெளிப்படுத்தி இருப்பது தேர்ந்ததோர் அழகு! கல்வி போதிப்பதில், போதாமை பெரும்பாலான ஆசி ரியர்களிடம் இருக்கிறது. அது காலம் காலமாக தொடர்வதாகவும் இருக்கிறது. தவிர, ஔரங்கசீப்பின் மனதாங்கள்களை ஒத்த உறுத்தல்கள் இன்றைக்கும் நம்மில் பலரிடம் இருக்கவே செய்கிறது. இதன்தொட்டே அவரது அந்தக் கடிதத்தை நாம் உணர்வு பூர்வமாக அனுகுகிறோம்.

தவிர, தனக்கு போதிக்கப்பட்ட அரேபிய மொழி / அதைக் கற்க ஆன அதிகப்படியான காலங்கள் / உபதேசிக்கப்பட்ட மதத் தத்துவங்கள் போன்றவற்றின் மீது ஔரங்கசீப் வைத்திருக்கும் விமர்சனங்கள் இன்றைக்கும் ஏற்புடையவை. சில பத்தாண்டுக ளுக்கு முன்னால், அரபு நாடுகளுக்கு வெளியே வாழும் இஸ்லாமியர்களில் பெரும்பாலானவர்கள், அரபு மொழியை இறைவ னின் மொழி என்றும்/ இதில் சொல்லப்படாதது எதுவுமில்லை என்றும் / இன்னும் ஏதேதோ மனம் சார்ந்த நிர்பந்தங்களினால் தங்களது பிள்ளைகளுக்கு உலக கல்வியை அறிமுகப்படுத்தாமல், பிரதேச மொழிவழி கல்வியைகூட காட்டாமல், தாய்மொழி கல்வியையும் தவிர்த்து, அரபி மொழியை மட்டும் கற்க வைக்க அவர்கள் காட்டிய ஆர்வம் அளப்பற்கறியது. இப்படியானவர் களின் கண்மூடித்தனங்களை சுட்டுவதாக ஔரங்கசீப்பின் இந்தக் கடிதம் விளங்குவது ஏற்புடையதாக இருக்கிறது. இந்தக் கடிதத்தை முன்வைத்து, சிந்திக்கப் பழகிய இஸ்லாமியர்கள் ஔரங்கசீப்பை வாஞ்சைக்கொண்டு ‘தோழமைப் பாராட்டினால்’ அதில் ஆச்சரியபட ஒன்றுமில்லை.

இந்தியாவில், ஆங்கில அரசின் ஸ்தாபிதத்தை எதிர்த்து முதல் சுகந்திர முழக்கமிட்டவர்கள் முஸ்லீம்களாகவே இருந்தார்கள்.
ஆங்கிலேயனிடம், அறநூறு வருடம் ஆண்ட தாங்களது ஆட்சியைப் பறிகொடுத்தவர்கள் அவர்களாக இருந்தப்படியால் அவர்களின் இந்த முதல் எழுச்சியை நாம் புரிந்துக் கொள்ள முடியும். ஆங்கிலேயனை அவர்கள் எதிர்த்ததினாலேயே அவர்க ளது மொழியையும், அந்த மொழியூடான உலக கல்விகளையும் அவர்கள் புறகணித்தார்கள். அப்படி புறகணித்தவர்கள் எல் லோரும் தங்களின் இறை மொழியோடு தஞ்சம் ஆனார்கள். அதையொட்டியே, அதிகத்திற்கு அதிகமாக மதரஸாகள் எழுந் தது. கல்வியென்றப் பெயரில் அதனுள்ளேயே அவர்கள் வம்சாவளியாய் தொடர்ந்து மண்டை காய்ந்தார்கள். இவர்களுக்கு உலக கல்வியைப் பற்றிய விழிப்புணர்வெல்லாம் இந்திய சுகந்திரத்திற்குப் பிறகான சங்கதி!

என் பாட்டிக்கு, தாய் மொழியில் படிப்பறிவு கிடையாது. அவர்களுக்கு, அரபி மொழியின் அர்த்தம் புரியாது என்றாலும் அதை எழுத்துக் கூட்டி வாசிக்கவும், அப்படியே அதை மனனம் செய்யவும் தெரியும். ஆனால், இஸ்லாம் சார்ந்த நீதிக் கதை களும், நபிமார்களின் வரலாறுகளும் கொண்ட ‘அரபி எழுத்துக்களில்’ எழுதப்பட்ட புத்தகங்களை தமிழ் நடையில் வாசிப்பார் கள். அன்றைக்கு அப்படி ஒரு ‘அரபி தமிழ்’ தமிழக இஸ்லாமியர்களின் புழக்கத்தில் இருந்தது. அன்றைக்கு அரபி மொழி தவிர்த்து பிற மொழிகளைப் படிப்பதும், உலக கல்வியை தேட முயல்வதும் இஸ்லாத்திற்கு விரோதமாக, ஹராமாக (ஒதுக்கப் பட்டதாக) பார்க்கப்பட்டது. மூர்க்கத்தனமான அன்றைய மதப் போதகர்களால் அந்த அளவிற்கு இஸ்லாத்தில் உலக கல்வி ஓரம் கட்டப்பட்பட்டது. அதனால்தான், தாய் மொழியை படிக்க – வாசிக்க ஆசை கொண்டவர்களும்கூட அரபி வழியாக அந்த மொழியை வாசிக்க வேண்டி இருந்தது. மேலே குறிப்பிட்டதுபோல் இந்திய சுதந்திரத்திற்கும் பிந்திய காலங்களில்தான் இஸ்லாத்திற்குள் வலம்வந்த முற்போக்கு வாதிகளால், பிற மொழிக் கல்வியும், உலக கல்வியும் இந்த சமுதாயத்திற்குள் ஊக்கு விக்கப்பட்டது. ‘சீனா சென்றேனும் கல்வியை தேடு’ என்கிற முகம்மது நபியின் ஹதீஸ் சார்ந்த ஸ்லோகத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லி, இஸ்லாமியச் சமூகத்தை மரியாதைக்குறிய அந்த முற்போக்குவாதிகள் தயார் படுத்தினார்கள்.

மதம் சார்ந்த மொழி குறித்து, முன்னூற்றி ஐம்பது வருடப் பழமைக் கொண்ட ஔரங்கசீப்பின் சிந்தனையை முன்வைத்துப் பார் கிறபோது வியப்பாக இருக்கிறது. அவரது சிந்தனையின் தொடர்ச்சி பிற்காலத்தில் இஸ்லாமியர்களிடம் எதிரொலிக்காமல் அறு பட்டும் போனதை எண்ணுகிறபோது வேதனையாகவும் இருக்கிறது. உலக மொழிகளினூடாக உலக கல்வியைத் தேடாத புறக ணிப்பால் இந்தியாவில் சிறுபான்மையான ஓர் சமூகம் சகலத்துறைகளிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு கிடப்பதை காண்கிற போது, வேதனை இன்னும் கூடுகிறது.

இன்றைக்கும் இங்கே, உலகபோக்கை கணிக்காத பிற்போக்குத்தனமான இனத்தலமைகளால் மதரஸாகள் செயல்பட்டுக் கொண் டுதான் இருக்கிறது. என்றாலும் அதற்குப் பழையபொழிவில்லை. இன்றைய இஸ்லாமிய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் மதரஸாக்களின் பிடியில் இருந்து தப்பித்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்! தனக்கு போதிக்காதுவிட்ட உலக கல்வி குறித்த அவ சியத்தை எண்ணி, ஔரங்கசீப் கொண்ட ஆதங்கத்தை ஒத்ததோர் ஆதங்கம் இன்றைய இஸ்லாமிய இளைஞர்களுக்கும் உறை த்திருக்கிறது. இன்றைக்கு இவர்கள் உலககல்வி அனைத்தையும் பிசிரில்லாமல் படிக்கின்றார்கள். அரபி மொழி ஒன்றே இஸ்லா மியர்களுக்குப் போதும், அதுவே இறைவனின் மொழி, அதுவே சாஸ்வதமான மொழி, அதில் எல்லாம் இருக்கிறது என்ப தான ஒத்தைச் சிந்தனையை தாண்டியவர்களாக இருக்கிறார்கள். என்றாலும், ஔரங்கசீப் மாதிரி உண்மைகளை உலகுக்கு உர க்கச் சொல்லாதவர்கள். உண்மையைகளை மறைத்துக் கொண்டு வாழும் இரட்டை வாழ்க்கை எல்லோருக்கும் இனிப்பது மாதிரி அவர்களுக்கும் இனிக்கிறது.

ஔரங்கசீப்பின் பிரசித்திப் பெற்ற இந்தக் கடிதத்தை, துக்ளக் வார இதழ் பல வருடங்களுக்கு முன், 01.11.1974 இதழில் பிரசுரித்
திருந்தது. வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்கி அந்த கடிதத்தை, துக்ளக் இப்பொழுது மீண்டும், 30.04.2008 இதழில் மறுப்
பிரசுரம் செய்திருக்கிறது. சுமார் முப்பத்தி நான்கு வருடம் கழித்து மறுபிரசுரமாகியிருப்பதில் இருந்து இந்தக் கடிதத்தின் முக்கி யத்துவத்தையும், அறிவார்ந்த வாசகர்கள் தேடும் இதன் அவசியத்தையும் யூகித்து உணரலாம். இனி அந்தக் கடிதம் உங்கள் பார்வைக்கு.

– தாஜ்
***********

(1658-ஆம் ஆண்டு ஔரங்கசீப் ஹிந்துஸ்தானத்தின் சக்ரவர்த்தியாக முடிசூட்டப் பெற்றார். அல்லது முடிசூட்டிக் கொண்டார்.
ஔரங்கசீபிற்கு இளம் வயதில் ஆசிரியராக இருந்த முல்லா சாஹேப் என்பவருக்கு, ஔரங்கசீப் எழுதிய கடிதம் இது. ஔரங் கசீப் சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்ட பிறகு முல்லா சாஹேப், ‘தனக்கு ஔரங்கசீபின் அரச சபையில் கௌரவ பதவியும், சன் மானமும் தர வேண்டும்’ – என்று கோரியிருந்தார். அதற்குப் பதில்தான் ஔரங்கசீபின் இந்தக் கடிதம்.)

கற்றவரே!

நீர் என்னிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? நான் உங்களை என்னுடைய அரசவையில் ஒரு முக்கிய பதவியில் அமர்த்தவேண் டுமென்று உங்களால் நியாயமாக எதிர்பார்க்க முடியுமா? ஒன்று சொல்கிறேன், நீங்கள் எனக்கு எப்படிக் கல்வி போதித்திருக்க
வேண்டுமோ, அப்படிச் செய்திருந்தால் உங்களுக்கு நான் பதவியைத் தருவது போன்ற நியாயமான காரியம் வேறு எதுவுமே
இருக்க முடியாது.

ஏனென்றால் நான் ஒரு விஷயத்தை நிச்சயமாக ஒப்புக்கொள்வேன். ஒரு குழந்தை தன்னுடைய தந்தைக்கு எவ்வளவு கடமைப்
பட்டிருக்கிறதோ, அந்த அளவுக்குத் தனக்கு முறையான கல்வியைப் போதித்த ஆசிரியனுக்கும் கடமைப்பட்டிருக்கிறது.

ஆனால், நீங்கள் எனக்குப் போதித்த முறையான கல்வி என்பது எங்கே இருக்கிறது?

ஐரோப்பாவை ஒன்றுமில்லாத ஒரு சூன்யப் பிரதேசம் என்று போதித்தீர்கள், போர்ச்சுகீஸிய நாட்டு மாபெரும் மன்னரைப் பற் றியோ, அவருக்கு அடுத்த ஹாலந்து மன்னரைப் பற்றியோ, இங்கிலாந்து மன்னரைப் பற்றியோ, நீர் எமக்கு ஒரு விபரமும்
கூறவில்லை, பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாட்டு மன்னர்களை எல்லாம் நமக்கு அடங்கிய, மிகச் சிறிய குறுநில மன்னர்கள்
என்று கூறினீர்கள். ஹிந்துஸ்தான் மன்னர்களின் பெயரைக் கேட்டாலே உலகத்தில் எந்த நாட்டு மன்னனும் நடுங்கினான் என்று கதை கட்டினீர்கள். எங்கள் பரம்பரையைப் புகழ வேண்டும் என்பதற்காக, உலகத்தில் உள்ள மற்ற நாடுகள் எல்லாம் நமக்கு அடங்கியவையே என்று கூறினீர்கள். ஆஹா…! வியந்து பாராட்டப்பட வேண்டிய சரித்திர அறிவு!

எனக்கு நீங்கள் என்ன கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்? – உலக நாடுகளில் எல்லாம் என்ன நடக்கிறது? அந்த நாடுகளின்
பலம் என்ன? அவர்களின் போர் முறைகள் என்ன? மதக்கோட்பாடுகள் என்ன? ராஜதந்திரங்கள் என்ன? – இவற்றை எல்லாம் எனக்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருக்க வேண்டாமா? உண்மையான சரித்திரத்தை எனக்குக் கற்றுக் கொடுத்து, பல நாட்டு மன்
னர்களின் வாழ்வையும் தாழ்வையும், அவர்களது எழுச்சியையும் வீழ்ச்சியையும் நான் உணரும்படி செய்திருக்க வேண்டாமா?
எவ்விதமான தவறுகளால் அல்லது எதிர்பாராத நிகழ்ச்சிகளால், அங்கே புரட்சிகள் தோன்றின – அந்த சாம்ராஜியங்கள் அழிந் தன – என்றெல்லாம் நீங்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா?

உங்களிடமிருந்து என்னுடைய முப்பாட்டனார்களின் பெயர்களைக்கூட அறிந்து கொள்ளவில்லை. ஹிந்துஸ்தான் சாம்ராஜிய த்தை ஸ்தாபித்த புகழ்பெற்ற என்னுடைய முன்னோர்களைப் பற்றிக்கூட உங்களிடமிருந்து நான் ஒன்றும் தெரிந்து கொள்ளவி
ல்லை. இந்த மாபெரும் சாம்ராஜியத்தை ஸ்தாபித்த அவர்களுடைய சரித்திரத்திற்கும், நீங்கள் எனக்குக் கற்பித்ததற்கும் – அவ்
வளவு பெரிய இடைவெளி இருந்திருக்கிறது.

எனக்கு அரேபிய மொழியை எழுதவும் படிக்கவும் கற்றுக்கொடுக்க முனைந்தீர்கள். பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக விழு ந்து விழுந்து படித்தாலும், முழுமையாக கற்றுக்கொள்ள முடியாத ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்ததன் விளை வாக, என் வாழ்நாளில் அவ்வளவு நேரத்தை வீணடித்ததற்காக உங்களுக்கு நான் ரொம்பவும் கடமைப் பட்டிருக்கிறேன். ஒரு வருங்கால அரசன் பன்மொழிப் புலவனாக இருந்துதான் தீர வேண்டுமா என்ன? அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பேசும் மொழியை விடுத்து, இப்படி ஒரு கடினமான மொழியில் புலமை அடைவதுதான் ஒரு அரசனுக்குப் பெருமையா? ராஜ பரிபா லனத்திற்கான, அவசியமான – முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய நான், அரேபிய மொழியைக் கற்பதில் காலம் கழித்தேன்!

ஒரு மனிதன் தன்னுடைய இளம் வயதில் நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டால், அந்த நினைவு வாழ்நாள் முழுவதும் நிலைத்து, அவனைப் பெரும் சாதனைகளைச் செய்யத் தூண்டும் என்பது உங்களுக்குத் தெரியாது போலும்! சட்டம், மத வழி பாட்டு முறைகள், விஞ்ஞானம் – இவற்றை எல்லாம் என் தாய் மொழியில் நான் கற்றிருக்க முடியாதா? அரேபிய மொழியை ஏன் என் தலையில் கட்டினீர்கள்?

என் தந்தை ஷாஜஹானிடம் எனக்கு மதத் தத்துவங்களை போதிக்கப் போவதக நீங்கள் சொன்னது, எனக்கு நன்றாக நினைவி ருக்கிறது. அர்த்தமே இல்லாத – இருந்தாலும் புரிந்து கொள்ள முடியாத – புரிந்து கொண்டாலும் மனத் திருப்தி அளிக்காத – மனத் திருப்தி அளித்தாலும் இன்றைய சமுதாயத்தில் எந்தவித பயனுமே இல்லாத, புதிர்களை எல்லாம் என்னிடம் போட்டுக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் கற்றுக் கொடுத்த தத்துவங்களைப் பற்றி இப்படித்தான் புகழ முடியும். – அவையெல்லாம் புரிந்து கொள்ள மிகக் கடினமானவை; மறப்பதற்கு மிக எளியவை.

நீங்கள் போதித்த மதத்தத்துவங்களைப் பற்றி என் நினைவில் மீதம் இருப்பதெல்லாம் காட்டு மிராண்டித்தனமான, இருள் அட ர்ந்த பெரிய பெரிய வார்த்தைகள்தான். மேதாவிகளையும் கூட குழப்பக் கூடிய பயங்கரமான வார்த்தைகள்! உங்களைப் போன் றவர்களின் அறியாமையையும், இறுமாப்பையும் மறைக்க, உங்களைப் போன்றவர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தை கள்.

‘உங்களுகுத்தான் எல்லாம் தெரியும். உங்களைப் போன்ற மேதாவிகளுக்குத்தான் இந்த பயங்கர வார்த்தைகளில் அடங்கியிருக் கிற அரிய தத்துவ ரகசியங்கள் புரியும்’ – என்று மற்றவர்கள் நினைத்து ஏமாந்து போவதற்காக, உங்களைப் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட வெறும் வார்த்தைகள்.

காரண காரியங்களை மட்டுமே பார்க்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தக் கூடிய மதத் தத்துவங்களை நீங்கள் எனக்குப் போதித் திருந்தால் – மனதை ஒரு நிதானத்தில் அடக்கி வைக்கப் பயன்படும் அரிய தத்துவங்களை எனக்கு நீங்கள் போதித்திருந்தால் – அதிர்ஷ்டத்தினால் தாக்கப்பட்டு, செல்வத்தில் திளைத்தாலும் சரி – துரதிஷ்டத்தினால் தாக்கப்பட்டு தோல்வியைத் தழுவினாலும் சரி – இரண்டுக்குமே மயங்காத மனோதைரியத்தை அளிக்கக் கூடிய தத்துவங்களை நீங்கள் எனக்குப் போதித்திருந்தால் – நாம் யார்? உலகத்தின் மேன்மை என்ன? எப்படி இந்த பூமி இயங்குகிறது? – என்பதை எல்லாம் நான் உணர்ந்து கொள்ள உதவி செய்யும் வகையில் நீங்கள் எனக்குக் கல்வி போதித்திருந்தால் – இப்பொழுதும் சொல்கிறேன் – இந்த மாதிரி விஷயங்களையும் தத்துவங்களையும் நீங்கள், எனக்கு கற்றுக் கொடுத்திருந்தால், நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாக இருந்திருப் பேன். அலக்ஸாண்டர், அவனுடைய குரு அ ரிஸ்டாடிலுக்கு எவ்வளவு கடமைப்பட்டிருந்தானோ, அதைவிட உங்களுக்கு நான் கடமைப்பட்டிருப்பேன். அலெக்ஸாண்டர், அரிஸ்டாடிலுக்குச் செய்ததற்கும் மேலாக உங்களுக்குச் செய்திருப்பேன், நன்றி காட்டிருப்பேன்.

சதா என்னை முகஸ்துதி செய்து கொண்டே இருந்ததற்குப் பதிலாக, ராஜபரிபாலனத்துக்குத் தேவையான விஷயங்களை என க்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருக்க வேண்டாமா? குடிமக்களுக்கு அரசன் செய்யவேண்டிய கடமைகள் என்ன? அரசனுக்குக் குடிமக்கள் செய்யவேண்டிய கடமைகள் என்ன என்பதை எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா? என் வாழ்க்கைப் பாதையில் ஒரு கட்டத்தில் என்னுடைய பதவிக்காகவும், உயிருக்காகவும் கூட, என்னுடைய உடன் பிறந்த சகோதரர்களுடனே யே நான் வாள் எடுத்துப் போரிட நேரிடும் என்பதையும் உணரும் அளவுக்கு, நீங்கள் போதித்த கல்வி அமைந்திருக்க வேண்டாமா?

ஒரு நகரத்தை எப்படிக் கைப்பற்றுவது? ஒரு போர்ப் படையை எப்படி நடத்திச் செல்வது – என்பதை எல்லாம் நான் அறிந்து
கொள்வதில் நீங்கள் அக்கறை காட்டினீர்களா?

பயனுள்ள விஷயங்களை ஏதாவது நான் இப்போது அறிந்து வைத்திருந்தால், அதற்காக நான் மற்ற பலருக்குக் கடமைப்பட் டிருக்கிறேன் – நிச்சயமாக உமக்கல்ல!

போங்கள்! நீங்கள் எந்தக் கிராமத்திலிருந்து வந்தீர்களோ, அந்தக் கிராமத்திற்கே போய் சேருங்கள்! நீர் யார்? எங்கிருந்து வந்தீர்கள்? என்ன ஆனீர்கள்? என்பதையெல்லாம் எவருமே தெரிந்து கொள்ளவேண்டாம்.

– ஔரங்கசீப்
************************
நன்றி: துக்ளக் / 30.04.2008
தட்டச்சு, வடிவம்: தாஜ்
****************************
satajdeen@gmail.com

Series Navigation