ஒ லி ச் சி த் தி ர ம்

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

எஸ் சங்கர நாராயணன்


விசேஷ நாட்களில் எத்தனையோ விஷயங்கள் பெண்களுக்குச் சேர்ந்து போகின்றன. செலவு பற்றி அவர்கள் உற்சாகமாய்ப் பேச ஆண்கள் வரவு பற்றிக் கவலைப் பட்டார்கள்.

தீபாவளி நெருங்குகிறது என்று கணபதிக்கு உற்சாகம் தாளவில்லை. புதுசாய்ப் பட்டாசுக் கடைகள் மழைசீசன் நாய்க்குடைகள் போல ஊரில் முளைக்கின்றன. நாய்க்குடைக்கும் பட்டாசுக்கடைக்கும் முக்கிய வித்தியாசம்… நாய்க்குடைகள் மழைக்குப் பிந்தியவை. பட்டாசுக் கடைகள் தீபாவளிக்கு ‘முந்திய ‘ கடைகள்.

அகலமான பஜார்த் தெருவே கோமண சைசுக்கு ஆகிவிட்டது. ரெண்டு பக்கமும் ஜனங்கள் நடக்கவே வழி கிடையாது. இராத்திரி அந்தப் பகுதியே வெளிச்சக் காடாகி ஜ்வலிக்கிறது. கனவு லோகம். கணபதி தலை கிறுகிறுக்க சுற்றித் திரிந்தான். அவனுக்கு வீட்டுக்கு வரவே மனசில்லை. புதுரகப் பட்டாசு எதைப் பார்த்தாலும் ‘ ‘அண்ணாச்சி அது எவ்ளோ ? ‘ ‘ என்று விசாரித்தான், என்னவோ பையில் இருந்து உடனே துட்டெடுத்து நீட்டப் போகிறாப் போல. அவன் இம்சை தாளாத கடைக்காரர்கள் ‘ ‘எலேய் எந்திச்சி வந்தேன்னா, ஒற்ற மிதி. சாணி போட்ருவ… ‘ ‘ என்று வைதார்கள்.

கணபதியின் ஐயா ஆளு ஒண்ணுஞ் சரிக் கிடையாது. பஞ்சாயத்து பியூன். அந்த ரேன்ஜில் அவனவன் தினுசு தினுசாய் மோதிரம் போட்டுத் திரிகிறான். சலுானின் ஷேவிங் எடுக்கத் தயாராகிறாப் போல முன்ரெண்டு பட்டன் சட்டைபட்டனைக் கழற்றி விட்டு மைனர் செய்ன் காட்டித் திரிகிறான். அவங்கய்யா பயந்த மூஞ்சூறு. தவிர கொஞ்சம் பழைய ஆசாமி. நெக்குருக கைத்தல நிறைகனி… பாடுவார். பாட்டாய்யா அதெல்லாம் ? கைல துட்டு இல்லாம ஏது கைத்தல நிறைகனி. ஆரு கொசுறு குடுப்பா ? அதும் கை நிறைய… கணபதிக்கு ஐயாவையிட்டு வருத்தம்தான். வேற ஐயாவுக்குப் பிறந்திருக்கலாம். அதுபற்றி இனி ஒண்ணுஞ் செய்யேலாது.

ஐயா ஒருமுறை கூட அவனைப் பட்டாசு வாங்கக் கூட்டிப் போனதேயில்லை. அவரா இஷ்டத்துக்கு பாம்புமாத்திரை கம்பளாஸ்திரின்னு சொத்தையா அதும் இத்தனுாண்டு வாங்கிட்டு வர்றாரு கோவில் பூப்பிரசாதம் போல. அதிலும் பாதி புஸ்சுங்குது. அடங்கிருது. ஆனா புஸ்வாணம் வெய்யி. பட்டார்னு வெடிக்குது! வேபிள் மாத்தி ஒட்டிட்டானுங்களா ?

கம்பி மத்தாப்பு பத்துங்குள்ளாற கையை நீட்டி நீட்டி முழங்கை வலி கண்டுருது. பாதி மருந்து தீருமுன்னே அதும் கப்புனு அணைஞ்சிருது. நல்ல அமாவாசையாப் பாத்து எதுக்கு தீவாளி வெச்சான் ? போடு சக்கைன்னு ட்டப்பாஸ் வெளிச்சம் துாள் கிளப்பண்டாமா ?

கணபதிக்கு உலகமே சோக மயமாய்ப் பட்டது.

—-

கணபதிக்கு சகா நான்தான். தன் ஆதங்கங்களைப் பகிர்ந்துகொண்டே வந்தவன் திடாரென்று ‘ ‘மாமா உங்க வீட்ல தீவாளி இல்லியா ? ‘ ‘ என்று கேட்டான் சந்தேகத்துடன்.

‘ ‘ஏண்டா ? ‘ ‘

‘ ‘தீவாளிக்கு என்ன பண்ணுவீங்க நீங்க ? ‘ ‘

‘ ‘புதுத்துணி எடுப்பம். பலகாரம் செய்வம். இனிப்பு செய்வம். கோவிலுக்குப் போவம். விளக்கு வைப்பம்… ‘ ‘

‘ ‘வெடி ? ‘ ‘

‘ ‘இங்க வெடிக்க ஆரிருக்கா ? ‘ ‘

‘ ‘ஐய வெடி இல்லாம என்ன தீவாளி ? ‘ ‘ என்றபடி கணபதி எழுந்து போய்விட்டான். தீவாளின்னா பட்டார்னு வெடி அடிக்க அடில, ஒண்ணுக்கு அடிக்கவனே அந்தாக்ல நடுங்கி நிறுத்திறண்டாமா ?

இதற்குமுன் நாங்கள் குடியிருந்த பகுதி பெரியது. அகலவாக்கிலானது. மேற்தளம் நல்ல உயரம். காத்து சுகமாய் வரும். தாழ்வாரத்தில் ஈசிசேர் போட்டு உட்கார்ந்தால் வெளியே மரத்தில் தென்னைமட்டைகள் உரசிக்கொள்ளும் ஓசையும், காகத்தின் சிறகுப் படபடப்பும், ரயில் போகும் தடதடப்பும் கேட்கும். மீண்டும் மனசில் நீர்ப்பாசிபோல ஆடைகட்டும். அந்த வசதிகளைப் புறக்கணித்து நான் ‘இங்கே ‘ குடிவருவேன் என இவள் எதிர்பார்க்கவில்லை.

நீளவாக்கிலான ஏழெட்டுக் குடித்தனங்கள் கொண்ட அந்தக் காம்பவுண்டில் எப்பவும் சப்தம் பிதுங்கி வழிந்தவாறிருந்தது… மூடிமீறிய சாக்கடை வழிசல் போல. வாசல் கதவைச் சாத்த முடியாது. ஒரு ஆள் சாத்திவிட்டுப் போனால் ஒரே நிமிடத்தில் அதை அடுத்த ஆள் வந்து திறக்கும் நாராச ஓசை. விடிய யிவடிய அந்த விளக்கு எரிந்து கொண்டே யிருக்கிறது. பன்னிரண்டு மணியானாலும் யாராவது அந்த நெடிய வழியில் வீடு திரும்பினார்கள். அந்நேரம் நைட்ஷிப்ட் வேலைக்குப் போகிறாட்களும் உண்டு. இந்த சப்த அமக்களம் போதாதென்று குழந்தைகள். இத்தனை குழந்தைகளை ஒருசேரப் பார்க்கவே அவளுக்கு மயக்கம் வந்தது. ஒரு வீட்டில் கைக்குழந்தை இருந்து நடுராத்திரியில் பாலுக்கு சைரன் எடுக்கும்.

விடுமுறை நாளோவெனில் இந்த இரைச்சல் இருமடங்காகி வாசல் அமளிதுமளி படும். பையன்களின் விளையாட்டு. சண்டைகள். எந்த விளையாட்டும் நிலைத்து மணிக்கணக்கில் நீடிப்பதில்லை. மாறிக்கொண்டே யிருந்தது.

சண்டையும் அவ்வண்ணமே!

விளையாட்டு மாற மாற சப்த ஹுங்காரங்கள் மாறிக் கொண்டே யிருக்கும். திடாரென அந்த விளையாட்டு ஸ்தம்பித்து ஒரு பெருத்த அழுகுரல். குழந்தைக் குரல். எங்காவது பட்ட அடி. முட்டி ரத்தம். சட்டை கிழிந்த அழுகை கூட இருக்கலாம். நமக்கு எந்தக் குழந்தை என்று அந்தப் பீதிப்பிளிறலில் அடையாளந் தெரியாது… பெத்தவளுக்குத் தெரியும்… சாதாரணமாகவே சில குழந்தைகளே இப்படி சோப்ளாங்கிகளாய் ஒழுகு மூக்கைச் சிந்தக்கூட முடியாமல் திகைத்து நிற்கின்றன. அதன் அம்மாக்கள் இதை அறிவர். பெத்தவள் வெளியே வந்து அவளது ஆத்திரத்துக்கு நாலு சாத்து சாத்துவாள். இந்த இழவு தாங்காமல் உள்வீடுகளில் ஒரு வீட்டில் டி.வியை இன்னுஞ் சத்தம் கூட்டி வைப்பார்கள்.

கரண்டு கட்டானால்தான் அமைதி என்றான நிலை. ஆனால் கரண்டு கட்டினால் தொண்டையிரைச்சலை அடக்க முடியுமா ? வாசல் சப்தக் கொந்தளிப்பை அமர்த்த முடியுமா ?…

கணபதி சப்த அசுரர்களின் தலைவன். வாழ்க்கையில் குறும்பு செய்வதே அவனது லட்சியமாய் இருந்தது. எலேய் நீ பேதில போற நாளும் வராதா ?- என்று தாயார் கத்துவதைக் காது குளிரக் கேட்டான் அவன். நாங்கள் குடிவந்த புதுசு. இவன் இம்சை தாளாமல் யாரோ காலி பண்ணிப் போக, நாங்கள் குடி வந்தோம் போல. ஆரடாது ?… என அவனில் சுவாரஸ்யம். கணபதி உள்ளே எட்டிப் பார்த்தான்.

ஆரது ?… என்றேன் நான். சட்டென்று தலையை இழுத்துக் கொண்டான் போல. பதில் இல்லை. வாசல்ல யார் ?… என்று நான் ஓர் அதட்டல் போட்டேன். தயங்கினாப்போல உள்ளே வந்தான். ‘பக்கத்து வீடு… கணபதி, ‘ என்றான்.

‘உள்ள வா கணபதி. என்ன படிக்கறே ? ‘

சட்டென உற்சாகமாகிப் பேச ஆரம்பித்து விட்டான். ‘என்ன மாமா வீட்டுக்குள்ளியே ஸ்டைல் கண்ணாடி மாட்டிட்டிருக்கேள் ? ‘

‘ம் ‘

‘நான் வேணா ஒரு தபா போட்டுப் பாக்கவா உங்க கண்ணாடியை ? ‘

‘வா ‘

உடனே நான் ஒத்துக் கொள்வேன் என்று அவன் எதிர்பார்க்கவில்லை போல. மாமா ஒரு மாதிரி லுாஸ் என நினைத்திருப்பான். வந்து என் கண்ணில் இருந்து கண்ணாடியை உருவியவன் திகைச்சிட்டான்.

‘என்னடா ? ‘

‘பாவம் மாமா நீங்க… ‘ என்றான் கொடியிறங்கினாப் போல. ‘எப்டி மாமா உங்க பார்வை போச்சு ? ‘

நான் அவனை உற்சாகப் படுத்த விரும்பி ‘உங்கப்பா என்ன செய்யிறார் கணபதி ? ‘ என்றேன்.

‘அவரு கெடக்காரு… ‘ என்றான். இப்போது அவன் பேச்சை மாற்ற விரும்பினான் போல.

—-

வெயில் உக்கிரப்பட்ட கொடும் பொழுதுகளில் பையன்கள் என் வீட்டில்தான் இருந்தார்கள். பெத்தவங்களும் நிம்மதியாய் அனுப்பி வைத்தார்கள். நிமஷத்துக்கு ஒரு விளையாட்டு.

ஒத்தையா ரெட்டையா பம்பையா பரட்டையா ?

மொத எழுத்து க – கடேசி எழுத்து யி… என்ன படம் ?

ஈராறு மூவஞ்சு மூணுக்கு வெட்டு. மறு ஆட்டை உண்டு!

இங்க பாத்தியா மூணு முத்தை எடுத்து -ஒண்ணு ரெண்டு மூணுன்னு போட்டு காசி தட்டிட்டேன்.

‘மாமா நாம விளையாடுவமா ? ‘ என்றான் கணபதி.

‘என்ன விளையாட்டுடா… ‘

‘கண்கட்டி கண்ணாமூச்சி… ‘

‘எனக்குக் கட்டிக்க வேணாம். நீ ஓடு நான் பிடிக்கறேன்… ‘

சிறிய அறை. கணபதி மாட்டிக் கொண்டான் சுலபமாய். தவிர என் சூட்சுமம் அப்படி. கணபதி அறியான் அதை. உடம்பு சூடும் வியர்வையும் சிறுமூச்சுமே போதும். இருந்த இடத்தில் இருந்தே நான் அவன் இருக்கும் இடத்தைச் சொல்லி விடுவேன். அவன் சிரமப்பட்டு ஒளிந்து கொண்டிருப்பான். வெட்கமாகிப் போகும் அவனுக்கு. சூப்பர் மாமா நீங்க… என்பான் ஆச்சரியத்துடன்.

—-

என் உலகம் வாமனனின் கணக்கு போல தப்படிகளால் ஆனது. என் வீட்டு வாசல் இறங்க பதினெட்டு தப்படியில் பொதுக்கிணறு. நிம்மதியற்ற குடக்கூலிக்காரர்கள் ஆத்திரமாய்ப் பட்டார் பட்டார் என்று துணி துவைக்கிற ஓசை. கிணற்றுள் வாளியிறக்கி பன்னிரண்டாவது இழுவையில் கையருகில் எடுக்கிற அளவில் தண்ணீர் வாளி மேலே வரும்.

குழந்தைகளோடு, அதுகளுக்கு சமதையாய் நான் விளையாடுவது அவளுக்கு ரசிக்கவில்லை. என்னவோ மறுகரையில் வாழ்கிறாப்போலவே அவளுக்கு மேடுதட்டிக் கிடந்தது மனம். என்மேல் காதல் இல்லை என்றும் கூற முடியாது. அவள் தத்தளிப்பை யார் அறிவார் ?

என்னிடம் இருந்த பணத்தை கவனித்து பெத்தவர்கள் ஆறுதல்படுத்தி என்னைக் கல்யாணம் செய்து கொள்ள அவளை சம்மதப்படுத்தி யிருக்கலாம். அது தவறும் அல்லதான். அவள்வீட்டில் அவள் நாலாவது பெண். கல்யாணம் என்பதே திகைப்பாய் இருந்தது.

பெண் பார்க்கப் போனபோது நான் அவளிடம் மனம்விட்டுப் பேச விரும்பினேன். அவள் யார், எப்படி யிருப்பாள் எனக்குத் தெரியாது. அவளாகவே பேசினால் நல்லது. அவளது மெளனம்… நான் அதை எப்படி எடுத்துக் கொள்வது…

‘கஸ்துாரி… பெயரில் வாசனை மணக்கிறது… ‘ என்றேன் நான். ‘நீயாகப் பேசினால் ஒழிய உன்னைப் பற்றிய முதல்யூகத்துக்கூட என்னால் முடியாது அல்லவா ? ‘ நான் புன்னகைத்தேன்.

‘ம் ‘ என்றாள் மெல்ல. ‘எனக்கு என்ன பேச தெரியவில்லை ‘ என்றாள்.

‘மிக நேர்மையான அழகான வெளிப்பாடு… ‘ என்கிறேன் நான். ‘கஸ்துாரி உனக்கு மறுப்பில்லையானால் நான் உன் கையைச் சிறிது பிடித்துக் கொள்ளட்டுமா ? ‘

குளுமையான கைகளை எனக்குத் தந்தாள். ‘பெண்ணின் கரங்கள் வெத்திலை மேல்ப்பக்கம் என்றால் ஆணுடையவை கீழ்ப்பக்கம்… ‘ என்றேன் சிறு புன்னகையுடன்.

‘என்னால் முடிந்தவரை உன்னை சந்தோஷமாய் வைத்துக் கொள்வேன் கஸ்துாரி ‘ என்றேன் நான்.

‘சரி ‘ என்றாள் ஒற்றைச் சொல்லில் எளிமையாய்.

எங்கள் கல்யாணம் நடந்தது.

… ஆனாலும் சிறு இழப்புகள்… இழப்புசார்ந்த ஏக்கங்கள் இல்லாதிருக்குமா என்ன ? நல்லநாள் பொழுதுகளில் தலைநிறையப் பூவும் சிறப்பு அலங்காரமும் கண்ணாடிமுன் செலவழித்த நேரங்களும் ருசிக்க ஆளின்றி வனசந்திரிகையாய் ஆனதை முள்நெருடலாய் அவள் உணர்கிறாள். வந்து நமஸ்கரிக்கையில் ஒரு விக்கல்.

வெள்ளைச் சட்டை வெள்ளை வேட்டி, என வாழ்ந்த நான் அவளுக்காக லுங்கியும் வண்ண ஆடைகளுக்கும் மாறிய விவரம் அவளே அறிய மாட்டாள்…

இத்தனை பண செளகர்யம் இருந்தும் பணக்கார பாவனைகள் அற்ற ஒரு மனுசன். அதையே அவள் தாள வேண்டும். விவகாரம் என்னவென்றால், இது மாதிரியான விஷயங்கள் கல்யாணத்துக்கு முன் நல்லம்சங்களாகவும், திருமணம் முடிந்த பின் ஏமாற்றங்களாகவும் திரும்பிப் படுத்துக் கொள்கின்றன.

எங்களுக்கிடையே ஒரு பாலமாக ஒரு குழந்தையின் அவசியம் இருயவருக்கும் புரிகிறது. இல்லாதது ஏக்க நிழலை உள்ளே மெல்லப் பரத்தி வருவதை இருவருமே உணர்கிறோம்.

பெருங்குடும்பத்துக் கடைசிப் பெண். நீண்ட பயணத்துக்காய் அடைபட்ட சூட்கேஸ்போல, அவள் உள்மூச்சு திணறிக் கொண்டிருக்கிறாள். ஒருவேளை, குழந்தை வாழ்வின் அசுவாரஸ்யங்களில் ஒன்றெனவும் அவள் உணரக் கூடும்.

அன்றாட வேலைகளிலேயே அவள் சிறிது அசிரத்தையானவள்தான். அவளது சமையல் அத்தனை ருசியானது அல்ல. காய்ந்து அவள் மடித்து வைத்த துணிகளில் திருப்பியும் நனைத்துப் பார்த்தால் சோப்பு நுரைக்கும்.

ஆனால் இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் – என் உலகோ கடுமையான ஒழுங்குகள் சார்ந்தது. உதாரணமாக அலமாரி மேல்தட்டில் மூணாவது மருந்து ராத்திரி ராத்திரி நான் சாப்பிட வேண்டியது. அஜீர்ண மாத்திரைகள் மேஜை டிராயரில் உள்ளன… தலைவலித் தைலம், பேனா, காசட் என்று ஒவ்வொன்றுக்கும் மாற்றப்படாத ஸ்தல-அடையாளம் பேண வேண்டியிருந்தது நான். இதில் அலட்சியம் எனக்குக் கட்டுப்படி ஆகாது. கண்ணாமூச்சி விளையாட்டில் நான் முட்டிதட்டிக் கீழே விழுந்தாற் போல ஆகிவிடும்.

குளித்துவிட்டு நானேபோய் என் உடைகளை மாற்றிக் கொள்ள வேணுமானால் அவளும் இவ்வொழுங்குகளைக் கைக்கொள்ள வேண்டும். முகத்தில் மோதும் காற்று. நான் ஈசிசேரில் இருந்தபடி ‘வாசக்கதவு திறந்து கிடக்கு என்றேன். அவள் எழுந்துபோய்ச் சார்த்திவிட்டு வந்தாள். உள்ளே சிறு சலிப்பு அவளுக்கு இருக்கலாம்.

ஐம் சாரி கஸ்துாரி.

—-

பணத்துடன் வாழ்க்கையை அனுபவிக்கிறது ஜோரான அனுபவந்தான். அதற்கும் பாவம் அவளுக்குக் கொடுப்பினை இல்லாமல் எனது சப்த ஏக்கத்துக்கு வழிவிட்டு இந்த டஞ்ஜனுக்கு வந்து வாழ்கிறாள். அதுவே கொடுமையல்லலா ? எனக்குப் புரிகிறது.

நானும் இப்படி நிதானமாக வெல்லாம் இல்லாமல் நுங்கும் நுரையுமாய் ஓடிக் கொண்டிருந்த நதிதான். இந்த சுட்டிப்பயல் கணபதிபோல வாலில்லாக் குரங்கென வாலிபம் கழித்தவன்தான்… தீபாவளியன்று பரபரப்பாகி அம்மாவைச் சுற்றிச் சுற்றி வருவேன். பட்சணம் பண்ணும் அம்மாவுடன் வேடிக்கை பார்த்தபடி கண்சுழ்ற்றும் துாக்கத்துடன் விடிய விடிய கூட உட்கார்ந்திருப்பேன். அம்மா அதட்டித் துாங்கப் போகச் சொல்லுவாள். துாங்குவதாய் பாவ்லா பண்ணினாலும் முழித்திருக்க ஆவேசமாய் முயல்வேன். தீவாளிக்கு மொதவெடி நான் வெடிக்கண்டாமா ?… என நினைப்புடன், ஆனால் தானறியாமல் துாக்கம் அயர்த்தி விடும்.

அம்மா எழுப்புவாள். வெளிச்சம் வந்திருக்கும். என் கண்ணெல்லாம் சிவந்து எரியும்.

—-

‘ ‘என்ன கணபதி ஒரு மாதிரியா இருக்கே ? ‘ ‘

‘ ‘போங்க மாமா எனக்கு ஒண்ணும் பிடிக்கல… ‘ ‘

இந்தமுறை போனஸ் என்று அரசு பெரிசாய் மனமுவக்கவில்லை, என்பதில் ஐயா அவரே ஆள் சவங்கி கிடந்தார். வந்த காசும் போனசைக் காரணங் காட்டி அவ்வப்போது வாங்கிய கடனுக்கே இழுத்துட்டது. எப்படியோ புதுத்துணி எடுத்துவிட்டார். அதையும் சொன்ன நேரத்தில் தைத்துத் தரவில்லை என்று கணபதிக்கு டெய்லர் பாயிடம் கோபம். ‘ ‘அடுத்தவாட்டி ஒம்மகிட்ட ஆரு தைக்கக் குடுப்பா ? அதுக்கு ஏப்ப சப்பையா வேறாளைப் பாரும்வே… ‘ ‘ என்று சவடால் பேசிவிட்டு வாங்கி வந்தான்.

ஆ வெடிக்கு என்னா செய்யிறது. இதோ தீபாவளி. ஐயா மலங்க மலங்கக் கெடக்காரு. லுாசுப்பிறவி. எப்ப கேட்டாலும், அடுத்த தீவாளிக்கு-ன்றாரு. ஒவ்வொரு தீபாவளிக்கும் இதையே சொன்னா எப்பிடி ? அதுக்குள்ள எனக்கு கெழடு தட்டிரும்.

ஏற்கனவே அவரு டப்பாஸ்னு வாங்கித் தந்தாலும் நெருப்பு வெச்சா சட்னு வெடிக்கறதில்லை. எங்கியாச்சும் நெருப்பு துாங்கிப் பாத்திருக்கியா ? ஐயா பட்டாசுல சிவப்புப் பூவா அப்டியே பாம்புக்குட்டியாட்டம் படுத்துக் கெடக்கும். சனியன் சட்டுப் புட்டுனு வெச்சாத்தானே ? அதுக்குள்ள பக்கத்தாள் ரெண்டு வெடி குண்டிப்பக்கம் வெச்சிருவான்.

இந்த வருசம் துாங்கற வெடி கூட இல்லாமப் போச்சே மக்கா.

‘எ ‘ங்கியாச்சும் ஓடிப்போயிறலாம்னு இருக்கு மாமா… ‘ ‘

‘ ‘ஆரு நீயா ? ‘ ‘ என்று சிரித்தேன்.

‘ ‘ஏம் மாமா ? ‘ ‘

‘ ‘ஒனக்கு மணிக்கு ஒருதரம் திங்க இல்லாம முடியாதடா… ஆரு குடுப்பா ? ‘ ‘

அவனிடமிருந்து பதில் இல்லை.

‘ ‘கணபதி ? ‘ ‘

‘ ‘ம் ‘ ‘

‘ ‘போயிட்டியோன்னு நினைச்சேன். டேய. இப்ப என்ன… ஒனக்கு தீவாளிக்கு வெடி வேணும். அவ்ளதானே ? ‘ ‘

‘ ‘ஹ ‘ ‘ என்றான் அலட்சியமாய், ‘ ‘நீரு வாங்கித் தர்றா மாதிரிப் போசியாறது. ‘ ‘

‘ ‘தந்தாப் போச்சு. என்னிக்கு தீவாளி ? ‘ ‘

‘ ‘நாள நின்னு… ‘ ‘

‘ ‘அவ்ளதானே ? நீ குளிச்சி புதுத் துணிமணி கிணிமணி மாட்டிட்டு நம்ம வீட்டுக்கு வந்திரு. வெடிகிடில்லாம் நான் வாங்கி வைக்கிறேன். இங்கியே கொண்டாடிர்லாம் தீவாளி. ‘ ‘

கிட்ட வந்து என் கைகளைப் பிடித்துக் கொண்டான். அவன் உடம்பு பரவசத்தில் நடுங்கியது. ‘ ‘நீங்க வெடில்லாம் வாங்க மாட்டேன்னீங்களே ? ‘ ‘

‘ ‘வெடிக்க ஆளில்லைல்லா. அதான் அப்டிச் சொன்னேன்… ‘ ‘

‘ ‘நான் இருக்கேம் மாமா… ‘ ‘

‘ ‘அப்ப வாங்கிருவம்… ‘ ‘

‘ ‘சரி மாமா ‘ ‘ என்று வாசல்வரை போனவன் திரும்பி வந்தான். ‘ ‘மாமா டூப் கீப் ஒண்ணில்லையே ? ‘ ‘

—-

புதுத்துணி. எண்ணெய் சீயக்காய் மணக்கிற உடம்பு. கணபதி அதிகாலையிலேயே ஆஜர் அட்டென்டன்ஸ். ‘ ‘என்னென்ன பட்டாசெல்லாம் வாங்கீர்க்கீங்க மாமா ‘ ‘ என்று பார்சலைப் பிரிக்கப் பார்த்தான்.

‘ ‘எலேய் இர்றா. பெரியவங்க குடுத்தா நமஸ்காரம் பண்ணி வாங்கிக்கிர்றதில்லையா. ‘ ‘

வந்து காலைத் தொட்டு மனசாரக் கும்பிட்டான். பெரும் அனுபவமாய் இருந்தது. என்ன அழகான குழ்ந்தை… கொடுப்பினை இல்லையே எனக்கு…

‘ ‘பட்டாஸ் வெடிக்கும்போது பாத்து ஜாக்கிரதையா வெடிக்கணும்டா, புரிஞ்சதா ? ‘ ‘

‘ ‘நீங்க கவ்வலையேப் படண்டாம். நான் தைரியசாலி! லெக்ஷ்மி வெடியவே கைல பிடிச்சி வீசுவேன்… ‘ ‘ என்று சிரித்தான்.

‘ ‘அட கோட்டிக்காரா அப்டில்லாம் விளையாடப்டாது… பெரிய பத்தியா வெச்சிக்கிட்டு, தள்ளி நின்னு வெடிக்கணும்… ‘ ‘

‘ ‘பயந்தாங்குளி. ‘ ‘

‘ ‘ஆமா ‘ ‘ என்றேன் நான். ‘ ‘உன் வயசுல நான், லெட்சுமி அவுட்டு கூட இல்ல. புஸ்வாணம். பத்த வெச்ச ஜோரில் குபீர்னு பத்திக்கிட்டது. என் ரெண்டு கண்ணுக்குள்ளயும் நெருப்பு பூவாப் பாயுது பாத்துக்க… ‘ ‘

என் மடியில் உட்கார்ந்திருந்த கணபதிக்கு உடம்பு துாக்கிப் போட்டது. ‘ ‘ஐயோ ‘ ‘ என்றான்.

‘ ‘பாத்துக் கோளாறா வெடி. கிராக்குத்தனம் பண்ணிப்பிறாதே… போ. ‘ ‘

பார்சலை வாங்கிக் கொண்டான். குழந்தை உற்சாகத்தை அமர்த்தி விட்டேனோ என்றிருந்தது. வருத்தமாய் இருந்தது.

sankarfam@vsnl.net

Series Navigation