ஒரு முன்னோடியின் பின்னாடி

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

வி மீனாட்சிசுந்தரம்


தமிழக சமூக சீர்திருத்த சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடி தந்தை பெரியார் தோன்றி 125 ஆண்டுகள் நிறைவை திராவிட இயக்கங்களின் சில தலைவர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழுவும் பெரியாரின் சிலைகளுக்கு மாலை அணிவிப்பதோடு நில்லாமல் அவரது சொல். செயல். ஆற்றல் ஆகியவைகளை இளைய தலைமுறையினர் தேடும் வகையில் சில கருத்துக்களை எழுதியும். பேசியும் கருத்தரங்குகள் நடத்தியும்ி சில முயற்சிகள் எடுத்தது, ஆறுதுல் அளிக்கிறது.

தமிழக மக்களின் வாழ்வில் பெரிய தாக்கத்தையும், பண்பாட்டில் உண்மையைத் தேடும் பாங்கையும் உருவாக்கிய அந்த முன்னோடியை நினைவில் நிறுத்த, தீக்கதிர், முரசொலி, விடுதலை ஆகிய மூன்று பத்திரிக்கைகள் தவிர விரிந்த பத்திரிக்கை உலகம் மவுனம் சாதித்தன. அல்லது நினைவுக் குறிப்புகளோடு நின்று விட்டன. அந்த நினைவுக் குறிப்புகளும், பெரியாரை வரலாற்று பெட்டகத்தில் அடைப்பவைகளாகவே இருந்தன. தொலைக் காட்சிகளில் பொதிகை தொலைக்காட்சி நிலையத்தார் ‘ஐயா’ என்ற தொடர் சித்தரத்தை வெளியிட்டு (அதிலும் விளம்பரத்தை கவரும் நிகழ்ச்சி வந்தால் இதற்கு வெட்டு) தன்மானத்தை காப்பாற்றிக் கொள்ள முயற்சித்ததாக கூறலாம். கடைசி வரை அதன் சுயமரியாதை காப்பாற்றபடுமா என்பது சந்தேகமாக உள்ளது. மற்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் பெரியாரைப் பற்றி எதையும் காட்டியதாக தெரியவில்லை. ஒரு வேளை “பெரியார் கருத்தை” பரப்பினால் மூட நம்பிக்கைகளையும், பெண் அடிமைத்தனத்தையும், பெண்களை வைத்தே பரப்பும் மெகா தொடர்களை பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து விளம்பரத்தை கவரும் மவுசு குறையும் என்ற பயம் கூட அந்த தொலைக்காட்சிகளுக்கு இருக்கலாம். (பணம் இல்லாதவன் பினம் என்று கருதுகிற பூர்சுவா உலகிலே சுயமரியாதை அதற்கு பின்தான்) ஆனால் எல்லா டி.வி.களும் பெரியாரின் சிலைகளை கும்பிட்டு மாலையிட வந்தவர்களை சிறப்பாகவே காட்டின.

மூன்று ரக வாரிசுகள்

அவ்வாறு பெரியார் சிலையை கும்பிட வந்தவர்களை பகுத்து ஆராய்ந்தால் அந்த முன்னோடியின் பின்னாடி மூன்று ரகமானவர்கள் இருக்கின்றனர் என்று தெரிகிறது.

முதல் ரகம் பெரியாரின் கருத்துக்களை பத்திரமாக பாதுகாப்போர்; இரண்டாம் ரகம் தி.மு.க. தலைவர் குறிப்பிட்ட பெரியாரை போற்றுவது போல் போற்றி அவரது கொள்கைகளை அழிக்க முயல்வோர் மூன்றாவது ரகம், பெரியாரின் கருத்து செயல், ஆற்றல் ஆகியவைகளின் நிறை, குறைகளை வரலாற்று ரீதியாக ஆய்வு செய்து அவரது கருத்தை மேலும் செழுமைப்படுத்தி பயன்படுத்த முயல்வோர். (ஒரு கருத்தை பூசிக்காதே அதை வளர்த்தெடு என்பது மார்க்சிசம் (No to Cult of an Idea. But to Cultivate that idea) இதில் யார், யார் எந்த ரகம் என்பதை வரலாறு தான் கூற முடியும், அல்லது மக்கள் தான் தீர்ப்பளிக்க முடியும்.

மார்க்சிஸ்ட்டுகள் பல்டியா ?

பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரை கடுமையாக விமர்சித்து, பின்னர் ஆரிய மாயையா ? திராவிட மாயையா ? என்ற நூலின் மூலம் பெரியாரின் செயலை விமர்சித்த பி. ராமமூர்த்தியின் மார்க்சிஸ்ட் கட்சியினர் இப்பொழுது மனம் திருந்தி பெரியாரை போற்ற முன்வந்து விட்டதாக வரவேற்பு ஒரு புறமும், மறுபுறம் இந்த கும்பல் பெரியார் கருத்தை புதைக்க வருகிறார்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்றும் கருத்துக்கள் உதிர்க்கப்படுகின்றன. இவ்வாறு பொருள்படும்படி கருத்துக்களை உதிர்த்தது சின்ன குத்தூசிகள் அல்ல, சாமான்யர்கள் அல்ல சாமான்யர்களின் வாழ்வு மேம்பட உடல், பொருள், ஆவி மூன்றையும் மனப்பூர்வமாகவே தர துணிந்து நிற்பவர். ஒரு காலத்தில் பொதுவுடைமை கருத்துக்களால் கவரப்பட்டு பொது வாழ்வில் நுழைந்து பின்னர் திராவிட கட்சியாக மாறிய நீதி கட்சியின் தத்துவார்த்த முறைகளே சிறந்தது என்று அதன் வாரிசாக நிற்பவர்.

பெரியார் இடதுசாரிகளின் நிரந்தர பகைவர் என்று காட்டிடவும், அந்த கருத்து மட்டும் ஆழமாக வேர் விட்டால் போதுமென்றும் கருதுகிற அறிவாளி கூட்டம் நிறைந்த தமிழகத்தில் வரலாற்றை புரட்டுவது எளிது. ஆனால் அதை நேர் செய்ய வேண்டியது உண்மையைத் தேடும் ஆற்றலை உருவாக்கப்பாடுபட்ட பெரியாருக்கு செலுத்தும் நன்றியாகும். தந்தை பெரியாருடன் கம்யூனிஸ்ட்டுகளின் உறவு என்பது சனாதன குரு சிஸ்ய பாரம்பரிய வழியில் அல்ல. சிங்காரவேலர், ஜீவா போன்றோர் பெரியாருடன் தொடர்பு கொண்ட காலத்திலிருந்தே வாதப்பிரதிவாதங்களின் மூலம் உருவாகிய நீண்ட நெடிய உறவு ஆகும். சமூக அக்கறை என்ற ஒன்றைத் தவிற வேறு எந்த ஆசைகளும் ஊடாடாத உறவு.

தந்தை பெரியாரும், தோழர் ராமமூர்த்தியும் நாடு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், முன்னும், பின்னுமாக பொது வாழ்வில் ஈடுபட்டவர்கள், தந்தை பெரியார் சிங்காரவேலர் நீங்கலாக கம்யூனிஸ்ட் கட்சியில் அன்று பிரபலமான அனைவருக்கும் மூத்தவர். இவர்கள் அனைவரும், பெரியாரின் வர்ணாஸ்ரம தர்ம ஒழிப்பு, உத்தியோக பார்ப்பனர்களின் ஆதிக்க எதிர்ப்பு, புரோகித பார்ப்பனர்களின் மூட நம்பிக்கை வளர்ப்பு முறைகளுக்கு எதிர்ப்பு ஆகியவைகளால் கவரப்பட்டவர்கள். பெரியாரை சுயமரியாதை இயக்கத்தின் தளபதி என்று கருதினார்கள். நம்மை அடிமையாக்க வெள்ளையர்கள் பார்ப்பன ஆதிக்கத்தை பயன்படுத்துகின்றனர் என்பதால் பெரியாரின் கருத்தோடு ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்ட கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் நாட்டுப் பற்றுமிக்கவர்களும் அனைவரும் ஒன்றி நின்றார்கள்.

பெரியாரின் சிறப்புகள்

தோழர் ராமமூர்த்தியின் திருமணத்தை நடத்தி வைத்தவர் தந்தை பெரியார். தோழர் பாப்பா உமாநாத் திருமணத்தை வந்து வாழ்த்தியவர் தந்தை பெரியார். முதல் தேர்தலில் காங்கிரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக பெரியாரும், பாப்பாவும் பல மேடைகளில் சேர்ந்து பிரச்சாரம் செய்தவர்கள். 1952 தேர்தலில் ஒரே மேடையில் காங்கிரஸ் கொள்கைகளை விமர்சித்த தந்தை பெரியாரை கம்யூனிஸ்ட்டுகள் பெரிதும் மதித்தனர். கம்யூனிஸ்ட்டுகள் பெரியாரை உயர்வாக கருதியதற்கு சீர்திருத்த கருத்துக்கள் மட்டுமல்ல காரணம். பெரியாரின் உண்மை தேடும் ஆர்வம், நேர்மை, தூய்மை, துணிவுடைமை, புகழ்தேடிி ஓடாபாங்கு காது குளிரும் புகழ்ச்சிக்கு காட்டும் அருவருப்பு, கசக்கும் கருத்துக்களை கேட்கும் பாங்கு, எதையும் மூடநம்பிக்கையோடு அனுகாமை, தன்னைவிட வயது குறைந்தவர்கள் கூறுகிற கருத்தில் சரி என்று பட்டால் ஏற்கும் மனப்பாங்கு ஒரு கருத்தை பூசிக்காமல், பத்திரமாக பாதுகாக்காமல் செழுமைப்படுத்த முயற்சிக்கும் ஆவல் ஆகியவைகளால் இந்த கம்யூனிஸ்ட்டுகளின் மனதிலே உன்னத இடத்தை பிடித்து விட்டார். பெரியாரை தனிப்பட்ட முறையில் குறைகள் சொன்னால் இவர்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருவதையும் கண்டவர்கள் உண்டு. ஆனால் திராவிட இயக்கம் பெரியாரின் தனிப்பட்ட குறைகளை பெரிதுப்படுத்தியே பிரிந்தது என்பது வரலாறு. (திராவிட இயக்கம் இப்படி தனிப்பட்ட தலைவர்களின் குறைகளை பெரிதுபடுத்தவும் பிரிகிற போக்கை சமூகவியலாளர்கள்தான் விளக்க முடியும்)

ஒற்றுமை, வேற்றுமை

பெரியாருக்கும், கம்யூனிஸ்ட்டுகளுக்கும் ஒரு வேற்றுமை இருந்தது. செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த தந்தை பெரியாரோ தன்னைத்தானே தயாரித்துக் கொண்டவர், புத்தரைப்போல் பயனங்கள் மூலம் உண்மையைத் தேடும் சிந்தனை ஆற்றலை கைவரப் பெற்றவர். நமது முன்னோர்களின் வேதங்கள் புராணங்கள் ஆகியவைகளின் நிறை குறைகளை அறிய கற்றவர். பல அறிஞர்களின் சொற்களாலும், சிங்காரவேலர், ஜீவா போன்றவர்களோடு கொண்டிருந்த நெருக்கத்தாலும், தனது சிந்தனை ஆற்றலை வளர்த்துக் கொண்டவர். விவாதங்களின் மூலம் உண்மையைத் தேடியவர்.

பிரெஞ்சு புரட்சிக்கு வித்திட்ட ஐரோப்பிய என்சைக்ளோபீடிஸ்ட்டுகள (நடமாடும் பல்கலைக் கழகங்கள்)ி என்று அழைக்கப்படுகிற் அறிஞர்களின் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டவர், ஆனால் தோழர் ராமமூர்த்தி போன்றோர் பாட்டாளி வர்க்க போராட்டத்தாலும், பாட்டாளி வர்க்க கட்சியின் ஒழுங்கமைப்பாலும் உருவாக்கப்பட்டவர்கள். எனவே இலக்கு ஒன்றானாலும், நடைமுறையில் கருத்து வேறுபாடு வருவது இயல்பு. அன்று கம்யூனிஸ்ட்டுகள் ஒன்றுபடு, போராடு என்ற யுத்தியை கையாண்டு பெரியாரோடு இணைந்தும், முரண்பட்டும் செயல்பட்டனர். அன்று தந்தை பெரியார், பொதுவுடைமை கட்சியின் வழி முறைகளின் மூலம் சமூக சீர்திருத்தத்தை காண முடியுமா ? நீதிக் கட்சியின் வழியில் ஆளுவோருக்கு அனுசரணையாக இருந்து பார்ப்பண ஆதிக்க எதிர்ப்பு, ஜாதி ஏற்றத் தாழ்வு ஆகியவைகளை ஒழிக்க முடியுமா ? இதில் எது சரி என்பதில் முடிவெடுக்காமல் உற்றுக் கவணித்து வந்தார். சில நேரங்களில் விலகி நின்றார். சில நேரங்களில் கம்யூனிஸ்ட்டுகளோடு ஒன்றி நின்றார். அன்று பெரியாரை கம்யூனிஸ்ட்டுகள தங்கள் பக்கம் வைக்க ி பெரிதும் முயன்றனர். இந்த போராட்டத்தை சிங்காரவேலர்தான் துவக்கினார். பின்னர் ஜீவா தொடர்ந்தார், அதன் பின்னர் ராமமூர்த்தி முயற்சித்தார். கம்யூனிஸ்ட்டுகளின் நிலைபாட்டிற்கு எதிரான நிலை எடுக்கும் பொழுது விமர்சித்தனர். 1935இல் நடந்த சுயமரியாதை மாநாட்டில் ஜீவா பேசுகிறார், “இன்று சுயமரியாதை இயக்கத்தின் பரம விரோதி, இந்த புனித இயக்கத்தை தோற்றுவித்த இதன் தலைவர் ஈ.வே.ரா.தான் என்று அவரை அவர் முன்னிலையில் குற்றம் சாட்டுகிறேன்” என்று தொடங்கி, “த்லைவர்களைப் பின்பற்றி கொள்கையை கைவிடுவது எங்கள் பரம்பரையல்ல கொள்கை வழியில் முன்னேறிச் செல்ல தயங்க மாட்டோம்” என்று ஜீவா பேச்சை முடிக்கிறார். இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திராவிட இயக்கங்கள் எதுவானாலும், அவைகளோடு இணைந்து மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கு செயல்படுவது போல் பா.ஜ.க. பக்கம் திராவிட இயக்கங்கள் போகிறபோது, மார்க்சிஸ்ட்டுகள் விமர்சித்ததைப்போல் அன்றும் கம்யூனிஸ்ட்டுகள் பெரியாரின் சில செயல்பாடுகளை விமர்சித்தனர். அதன் மூலம் அவரை தங்கள் பக்கம் இழுக்க முயன்றனர். அதே நேரம் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களும் குறிப்பாக காங்கிரஸ் தலைமை பெரியார், கம்யூனிஸ்ட் ஒத்துழைப்பிற்கு வேட்டு வைப்பதிலேயே குறியாக இருந்தனர். ஒரு கட்டத்தில் வெற்றியும் பெற்றனர்.

நமது கடமை

இன்று நாம் பெரியாரின் முரன்பட்ட நிலைபாடுகளில் எதை ஏற்க வேண்டும், எதை நிராகரிக்க வேண்டும் என்ற கேள்வி எழுபது இயல்பு; தி.மு.க. தலைவர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதைப் போல், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் இரண்டையும் தோற்றுவித்தவர் தந்தை பெரியார்; என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை; சுயமரியாதை இயக்கம் பொதுவுடைமை கருத்துக்களின் தாக்கத்தால் தந்தை பெரியார் உருவாக்கியதாகும்; அதில் சிங்காரவேலர், ஜீவா போன்றவர்களுக்கு பங்கிருந்தது. பின்னர் நீதிக் கட்சியின் வாரிசாக திராவிட இயக்கம் உருவானது. இதில் அண்ணா போன்றோர் பங்களித்தனர்.

பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தை மேலும் வளர்த்தெடுக்க மார்க்சிஸ்ட்டுகள் விரும்புகின்றனர். பின்னர் கம்யூனிஸ்ட்டுகள், மார்க்சிஸ்ட்டுகள் பெரியார் மீது வைத்த விமர்சனங்களில் குறைகளே இல்லையென்று யாரும் கூறிவிட முடியாது. அவர்களது செயல்களிலும் குறைகள் இருக்கக்கூடும். அதே நேரம் பெரியார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்ற பூசணை செய்வது சரியுமல்ல. அது பெரியார் வழியுமல்ல. பெரியாரை அன்று விமர்சித்தவர்கள் இன்று புகழ்கிறார்கள் என்று வசைபாடுவது பெரியாரை இளைய தலைமுறை புரிந்து கொள்ள உதவாது. பெரியார் உயிரோடு இருக்கும் பொழுதே கம்யூனிஸ்ட்டுகள் தொடங்கிய பணியாகும். பெரியாரின் சுயமரியாதை இயக்கமே சாதி ஏற்றத் தாழ்வு, தீண்டாமை ஒழிப்பிற்கு சிறந்த மருந்தாகும் என்று அன்றும் கருதினர், இன்றும் கருதுகின்றனர்.

இது மாற்று வழி

1935-லேயே ஜீவா குறிப்பிட்டதைப்போல சுயமரியாதை, சமதர்ம அனுகுமுறையை சரியென்பதே அனுபவம் ஆனது. ஜீவா, சீனிவாசராவ், ராமமூர்த்தி போன்ற சமதர்ம தளபதிகளில் பி. சீனிவாசராவ் தஞ்சை மண்ணில் சுயமரியாதை – சமதர்ம அனுகுமுஆறாயல் ஆற்றிய சாதனைகள் வரலாறாகும்.

உலக நாடுகளில் ஏதேனும் ஒருவகையில் ஒடுக்கப்பட்ட மக்களில் போராட்ட அனுபவங்களின் சாரமே மார்க்சிசமாகும். அது தமிழகத்து ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதை இயக்கத்தோடும், தொடங்கிய காலத்தில் இருந்தே உறவு கொண்டு இருந்தது. சிங்காரவேலரின் பணிகளை நினைவு கூர்ந்தால் இது புலப்படும்.

எனவே பெரியாரை அன்று விமர்சித்த மார்க்சிஸ்ட்டுகள் இன்று புகழ்கிறார்கள் என்பது வரலாற்று புரட்டு. எந்த ஒரு கருத்தும் பத்திரமாக பாதுகாக்க வேண்டிய சொத்தல்ல. அது சொத்துடைமை வர்க்கப் பார்வை. நீயூட்டன் கருத்தை ஐன்ஸ்டான் உயர்த்தியதுபோல், எகல் கருத்தை மார்க்ஸ் உயர்த்தியது போல், மார்க்ஸ் கருத்தை லெனின் உயர்த்தியது போல், சன்யாட்சென் கருத்தை மாவோ உயர்த்தியது போல் தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை கருத்தை மேன்மைப்படுத்தி மக்கள் வாழ்வில் மாற்றம் கொண்டு வர பயன்படுத்த வேண்டும். பெரியாரின் கருத்தை அப்படித்தான் பாதுகாக்க முடியும். மார்க்சிஸ்ட்டுகள் மீது யார் அவதூறு பொழிந்தாலும் கவலைப் படார். அந்த வழியில் பெரியாரின் சமூக சீர்திருத்த கருத்துக்களை குறிப்பாக சுயமரியாதை கருத்துக்களை உயர்த்திப் பிடிப்பர், புதைக்க மாட்டார்கள், புதைக்கவும் விடமாட்டார்கள்.

தலை தூக்கும் சவர்க்காரிசம்

பா.ஜ.க. ஆறு ஆண்டுகள் அரசாங்க எந்திரத்தில் ஊடுறுவி நிற்க விட்டதால் ஏற்பட்ட அபாயத்தை திமுக உணர்கிறது என்பதை காண்கிறோம். அந்த ஆறாண்டு காலத்தில், பாசிஸ்ட் சவர்க்காரிசத்தை பரப்பும் துணிச்சலை பா.ஜ.க. பெற்று விட்டது. இன்று அது முள்மரமாக வளர்ந்து விட்டது. இன்றும் நம் சமூகத்தில் சாதிய ஏற்றத் தாழ்வு, தீண்டாமை, மத மோதல்கள் பழைய வடிவிலும், புதிய வடிவிலும் இருப்பதை மறுக்க முடியாது. அவைகள் தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்லுவது உண்மையை மறுப்பதாகும். சாதி மறுப்பு திருமணங்கள் குறைந்து வருவதே இதன் அடையாளமாகும்.

வேண்டுகோள்

பெரியார் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கத்தை. சிங்காரவோலர். ஜீவா. ராமமூர்த்தி. பி. சீனிவாசராவ் போன்றோர் முயற்சித்த சுயமரியாதை – சமதர்ம வழியில் தொடர்ந்து எடுத்துச் செல்ல மார்க்சிஸ்ட்டுகள் உறுதி பூண்டுள்ளனர். நாங்கள்தான் செய்தோம் என்று மார்தட்டி கொள்ள அல்ல, குறுகிய கட்சி நலன்களை முன்வைத்தல்ல, எனவே பெரியாரை கடத்தப் பார்க்கிறார்கள். புதைக்கப் பார்க்கிறார்கள் என்று ஒதுங்காமல் திராவிட இயக்கங்கள் ஆதரவு நல்குமென எதிர்பார்க்கிறார்கள். நாட்டுப் பற்றுள்ள நல்லோர், விஞ்ஞானப் பார்வை மக்கள் பெற அயராது உழைக்கும் அறிஞர்களும் உதவுவர் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

***

cpimtn@sify.com

Series Navigation