ஐயம், சந்தேகம், அயிர்ப்பு – (இலக்கிய நாடகம் – பகுதி 6)

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

கரு.திருவரசு



காட்சியில் வருவோர்: புலவர் பக்குடுக்கை நன்கணியனார், கவிஞர்.

காட்சி நிகழும் இடம். அழகிய மலைச்சாரல்.

காட்சி நிலை. புலவர் குன்றின்மேல் அமர்ந்திருக்கிறார். கவிஞர் அருகில் நிற்கிறார்.

கவிஞர்- புலவரய்யா, நாம் சற்றுமுன் கண்டது “பெருங்கதை அல்லது உதயணன் கதை” என்னும் காவியத்தில் வரும் காட்சிகள்.

புலவர்- ஆமாம் கவிஞரே! இந்தப் பெருங்கதையை முதன்முதலில் ” பிருகத்கதா” என்ற தலைப்பில் குணாட்டியர் என்பவர் பைசாச மொழியில் இயற்றியதாகவும், அதனைக் கங்கமன்னன் துர்விந்தன் என்பான் வடமொழியில் ஒரு காவியமாக இயற்றியதாகவும், அவனுடைய ஆட்சிப்பகுதியிலிருந்த கொங்குவேளிர் எனும் புலவர் அதைத் தமிழில் காவியமாக எழுதினார் என்பதும் செய்தி.

கவிஞ- கதையின்பமும் நல்ல இலக்கியச் சுவையும் கொண்டது இந்தப் பெருங்கதை.

புல- ஆமாம், நீங்கள் எடுத்துக் காட்டிய அந்தக் காட்சிகூட நல்ல கற்பனை நயமுள்ள காட்சிதான்.

கவிஞ- காட்சியும் கதையும் மேலும் சுவையாகத் தொடர்கிறது புலவரே! உதயணனின் புதுமையான திறமையான காதல் தூதை அவன் மனைவி வாசவதத்தை ஐயப்பட்டுக் கண்டுபிடிப்பதைமட்டும் தொடுவதுதான் எனது நோக்கம்.

புல- உதயணன் வாசவதத்தையையும் காதலித்துத்தான் மணம்புரிந்தான். அப்புறம் பதுமாவதி, இப்போது மானனீகை, என்று தொடரும் ஒரு காதல் மன்னனை ஐயப்படுதல் குற்றமா?

கவிஞ- ஐயப்பட்டுக் கண்டுப்பிடித்தும் ஆனதென்ன? அவன் காலத்து வழக்கப்படி வாசவதத்தையே பின்னர் மானனீகையை உதயணனுக்கு மணம் முடித்து வைக்கிறாள்.

புல- அதுமட்டுமா? நான்காவதாக விரிசிகை என்பவளையும் மணந்து நான்கு தேவியரோடு உதயணன் வாழ்ந்ததாகக் கதை, இல்லையா!

கவிஞ- ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் எனும் உயரிய வாழ்க்கையில்தான் சந்தேகம் என்பது சொந்தம் வைத்துக்கொள்ளக்கூடாது. அப்படிக் காட்டவந்த, தமிழில் புகழ்பெற்ற காவியக் கதையான இராமாயணத்திலே கூட இராமன் சீதைமேல் ஐயப்பட்டு அவளைத் தீக்குளித்து வரச்சொல்கிறானே, அது சரியா?

புல- இராமன் அதை ஊருக்காகச் செய்தான், உலகத்துக்காகச் செய்தான் என்று சொல்லப்பட்டாலும் அவன் ஐயப்பட்டது பட்டதுதான். பெண்கள் ஆண்கள்மேல் ஐயப்படுவதுதான் மிகுதி என்ற உங்கள் எண்ணத்தை உடைத்தெரிய இராமன் ஒருவனே போதும்.

கவிஞ- அதே இராமாயணத்தில் இன்னொரு காட்சி புலவரே! கம்பனின் படைப்பிலே ஒரு சிறந்த பெண்ணாக வரும் அந்தச் சீதை நல்லாள்கூட, ஓரிடத்தில் இலக்குவன்மேல் ஐயம் கொள்கிறாள். அந்தக் காட்சியையும் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் புலவரே!

புலவ- இராமன் சீதையைப் பரணசாலைக் குடிலில் வைத்து, அவளுக்குக் காவலாகத் தம்பி இலக்குவனை வைத்துப் போனபின் அவள் மாய மானைப் பிடித்துத்தரவேண்டுமென்று இலக்குவனை விரட்டிய காட்சிதானே, பார்ப்போம், பார்ப்போம்!

(காட்சி நிறைவு)

காட்சி- 9

காட்சில் வருவோர்: இலக்குவன், சீதை.

காட்சி நிகழும் இடம். ஒரு காடு, அந்தக் காட்டில் பரணசாலைக் குடில்.

காட்சி நிலை: குடிலின் முன்னே சீதை. இலக்குவன் வில் அம்போடு அவளுக்குக் காவல் பணியாளனாக நிற்கிறான்.

சீதை- கொழுந்தனாரே! சற்றுமுன் ஓடியதே ஒரு பொன்மான், அது எனக்கு வேண்டும், நீங்கள் அதைத் பிடித்துத் தாருங்கள்!

இலக்குவன்- அந்த மான் உண்மையான மானா? அது பொய்மான் அண்ணியாரே! வேறு ஏதாவது கேளுங்கள், நான் கட்டாயம் கொண்டுவந்து தருவேன்!

சீதை- எனக்கு அந்த மான்தான் வேண்டும். அது எவ்வளவு அழகாகத் துள்ளி ஓடியது, பார்த்தீர்களா!

இலக்- துள்ளி ஓடியது சரி, ஓடுமுன் அதைச் சரியாகக் கவனித்தீர்களா? அது சாதாரண மான் இல்லை. பொய்மான், மாயமான். அதன் உடல் எல்லாம் தங்கத்தாலும் கால், வால், காதுகள் எல்லாம் மாணிக்கக் கற்களாலும் செய்யப்பட்டதுபோல இருந்தன. தங்கத்தாலும் மாணிக்கத்தாலும் செய்யப்பட்ட மான் துள்ளி ஓட முடியுமா? அது மானல்ல, அரக்கர் செய்யும் மாயம். இப்படியொரு மானை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை, அண்ணியாரே!

சீதை- ஏன் இருக்கமுடியாது! நீங்கள் பார்த்ததில்லை என்பதால் அப்படி ஒரு மான் இருக்கமுடியாது என்று சொல்லிவிடுவதா?

இலக்- இல்லை அண்ணியாரே! அது திண்ணமாக மானில்லை. யாரோ ஏற்பாடு செய்து அனுப்பிய சதி. அண்ணன் என்னை உங்களுக்குக் காவல் வைத்துவிட்டுப் போயிருக்கிறார். அந்தக் காவலை, என் கடமையை உடைப்பதற்காக யாரோ செய்யும் சதி.

சீதை- சதியோ விதியோ, அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு விளையாட்டுத் துணைக்கு அந்த மான் வேண்டும். நீங்கள் அதைப்பிடித்துத் தரபோகிறீர்களா, இல்லையா!

இலக்- அந்த மானைப் பிடிப்பது எனத் துணிந்துவிட்டால் அது மாய மானாக இருந்தாலும் சரி, மந்திர மானாக இருந்தாலும் சரி, அதை நான் பிடித்துவிடுவேன்! அந்த மானோடு ஏதோ சூதும் துள்ளி விளையாடுவதாக எனக்குப் படுகிறது. எனவேதான் உங்களைத் தனியே விட்டுப்போக அஞ்சுகிறேன், ஐயப்படுகிறேன்.

சீதை- அப்படியா, நான் எவ்வளவு கேட்டுக்கொண்டாலும் நீங்கள் போகப்போவதில்லை!

இலக்- ஆமாம், உறுதியாக!

சீதை- அப்படியானால் நானும் ஐயப்படுகிறேன் கொழுந்தனாரே!

இலக்- நீங்களுமா!… அது பொய்மான் என்றுதானே!

சீதை- மான்மேல் எனக்கு ஐயமில்லை, உங்கள்மேல்தான் எனக்கு ஐயம் ஏற்படுகிறது!

இலக்- என்மேலா, என்மேலா, என்னவென்று?

சீதை- நான் தனியளாக இருக்கிறேன், நீங்கள் ஏதோ கெட்ட எண்ணத்தோடுதான் என்னைவிட்டுப் போக மறுக்கிறீர்கள் என்று நான் ஐயப்படுகிறேன்.

இலக்- ஓ!… என்ன சொல்லிவிட்டீர்கள்! சரி, நான் உடனே அந்த மானைப்பிடிக்கப் புறப்படுகிறேன்.(என்று புறப்பட்டவன் சற்று நிதானித்து, சீதை நிற்குமிடத்துக்கு முன்னே குறுக்கலாக ஒரு நீண்ட கோடு போட்டு) நான் உங்களுக்குமுன்னே ஒரு கோடு போடுகிறேன். அண்ணியாரே! என்ன நடந்தாலும் யார் அழைத்தாலும் நீங்கள் இந்தக் கோட்டைத் தாண்டி நீங்கள் செல்லக்கூடாது. நான் விரைவில் வருகிறேன்!

(என்று சென்றுவிடுகிறான். காட்சி இருளாகிறது. இருளின் ஒரு மூலையில் வட்ட ஒளியில் புலவரும் கவிஞரும் தோன்றுகின்றனர்.)

புல- சீதை இலக்குவன் மேலேயே ஐயப்பட்டாள் என்பது ஒரு கொடுமைதான்!

கவிஞ- சந்தர்ப்பம்! சூழ்நிலை! நான் நமது சந்திப்பின் தொடக்கத்திலேயே பாடவில்லையா!

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் – அதற்குச் சந்தர்ப்பம் சூழ்நிலை தாய்தந்தை யாகும்.

புல- நல்லறிவும் குணத்தெளிவும் இருந்தால் இந்தச் சந்தர்ப்பம் சூழ்நிலை எல்லாம் மனிதரை அசைக்கமுடியாது.

கவிஞ- மெய்தான் புலவரே! அடுத்து வருவது, நீங்கள் சொல்வதற்கு விளக்கமான காட்சி. சோழ வளநாட்டில் அமைச்சராயிருந்த சீநக்கர் என்பவரும் பொய்யாமொழிப்புலவரும் நெருங்கிய நண்பர்களாயிருந்தனர். புலவர் ஊர்தோறும் அலைந்து பாடிக்களைத்துப் போனால் அமைச்சர் வீட்டுக்கு வந்துவிடுவார்.

புல- பாடிக் களைப்பதுதானே புலவர் தொழில்.

கவிஞ- அமைச்சரின் வளமனைக் கதவுகள் புலவருக்காக எப்போதும் திறந்திருக்கும். அமைச்சரின் துணைவியாரும் அமைச்சர் இல்லத்தில் இருக்கிறாரோ இல்லையோ, புலவருக்கு வேண்டிய அனைத்தும் வேண்டியபடி செய்து கவனிப்பார். புலவர் வந்துவிட்டால் உண்ணல், உடுத்தல், உறங்கல் எல்லாமே அமைச்சரின் இல்லத்தில்தான். ஒருநாள், அமைச்சரின் படுக்கையின்மேல் புலவர் அமர்ந்துகொண்டு சுவடி படித்தவாறு அமைச்சரின் வருகைக்காகக் காத்திருந்தார்

(காட்சி நிறைவு)

thiru36@streamyx.com

Series Navigation

ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! – (இலக்கிய நாடகம் – நான்காம் பகுதி)

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

கரு.திருவரசு


காட்சி- 4.

காட்சியில் வருவோர். துரியோதனன், அவன் மனைவி பானுமதி, கர்ணன்.

காட்சி நிகழும் இடம். துரியோதனன் அரண்மனையில் விருந்தினர் கூடம்.

காட்சி நிலை. கர்ணனும் அவன் நண்பன் துரியனின் மனைவி பானுமதியும் நட்புமுறையில் தரையில் அமர்ந்து நட்புமுறையில் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருக்கின்றனர். (கர்ணன் ஒரு சிற்றரசன் என்றாலும் சாதாரணத் தோற்றத்தில் இருக்கிறான். பானுமதியோ நல் அணிமணிகளோடு இடையிலே முத்துச்சரம் கோத்த மேகலையும் அணிந்திருக்கிறாள்)

கர்ணன்- (பெரிதாகச் சிரித்து) சொக்கட்டான் ஆட்டம் என் பக்கம் திரும்பிவிட்டது பானு. இனி வெற்றி எனக்குத்தான்.

பானுமதி- முதல் ஆட்டத்திலும் அப்படித்தான் தெரிந்தது. இறுதியில் நீங்கள் தோற்கவில்லையா! இப்போதும் அதே கதைதான், பாருங்களேன்.

கர்- இல்லையில்லை, இம்முறை நான்தான் வெற்றிபெறுவேன். அப்பொழுதுதான் அறுதி வெற்றி முடிவுக்காக நாம் மூன்றாவது ஆட்டத்துக்குப் போகலாம்.

பானு- அப்படியெல்லாம் நடக்காது கர்ணமா மன்னரே! இந்த ஆட்டத்திலும் நீங்கள் தோற்று இன்றைய விளையாட்டே நிறைவுபெறப் போகிறது. இதோ பாருங்கள் காய்களை…(என்று தாயம் உருட்டுகிறாள்)

கர்- அதையுந்தான் பார்த்துவிடுவோமே! (என்று அவன் உருட்டுகிறான்) ஆங்… இதோ தாயம் விழுந்துவிட்டது, வெற்றி நெருங்கிவிட்டது.

பானு- இன்னொரு உருட்டலில் எனக்கும் வெற்றி வருகிறது… (தனக்குள்) ஆ, மன்னர் வருகிறாரே!

(வாயில்புறத்தே கணவன் வருவதைப் பார்த்து, மரியாதைக்காகச் சடாரென எழுகின்றாள். தனக்குப் பின்னால் துரியன் வந்திருப்பதைக் கவனியாமல் ஆட்டத்தின் சுவை வேகத்திலே இருந்த கர்ணன், அவள் தன்னுடைய வெற்றியைத் தடுப்பதற்காகப் பாதியில் எழுகின்றாள் என நினைத்துத் தோல்வி வெறியோடு…)

துரி- பானு!… ஆட்டத்தின் இடையில் எழுந்தால் எப்படி ?… நான் விடமாட்டேன்! உட்கார் பானு! உட்கார்!

(என்று அவள் இடுப்பைப் பற்றி இழுக்க முயல்கிறான். அவன் கை பானுமதி இடுப்பில் அணிந்திருந்த மேகலையைப் பற்ற, அவள் வேகமாக எழ, மேகலை அறுந்துபோக; மேகலையிலிருந்த முத்து மணிகள் சிதறி ஓடுகின்றன)

பானு- அய்யய்யோ!… என்ன என் இடைமேகலையைப் பற்றி இழுத்துவிட்டார்கள் ? மேகலையே அறுந்து முத்துகளெல்லாம் சிதறிவிட்டனவே! அய்யய்யோ!

(கர்ணனும் பானுமதியும் பதறி நிற்க, வந்த துரியோதனன் மிகவும் இயல்பாகப் பேசுகிறான்)

துரியோதனன்- என்ன கர்ணா, சிதறிய முத்து மணிகளை எல்லாம் நான் எடுக்கவோ! கோக்கவோ!… முத்துகளை எல்லாம் பொறுக்கிச் சேர்த்துவிடுவோமே!

(என்று சொல்லிக்கொண்டே மணிகளைப் பொறுக்கத் தொடங்குகிறான் துரியன்)

கர்- ஓ… துரியோதனா, நண்பா! தவறு, பெருந்தவறு. பானு என் வெற்றியைப் பொறுக்காமல், அதைத் தடுக்கத்தான் திடாரென எழுகின்றாள் எனத் தவறாக நினைத்து ஏதோ ஒரு வேகத்திலே அவள் மேகலையைப் பற்றி இழுத்துவிட்டேன். என்னைப் பொறுத்தருள் நண்பனே!

துரி- (இயல்பாகவே) என்ன பேசுகிறாய் கர்ணா! எந்தத் தவறும் நடந்துவிடவில்லை. பானு என்னைப் பார்த்ததும்தான் எழுந்தாள், நீ நான் வந்ததைப் பார்க்கவில்லை. சொக்கட்டானில் சொக்கிப் போயிருந்ததால் அவள் தோல்விக்குப் பயந்து எழுந்து ஓடப்பார்க்கிறாள் என்று நினைத்துவிட்டாய். உன் நிலையில் நான் இருந்தாலும் அப்படித்தான், அதுதான் நடந்திருக்கும்.

கர்- ஓ… ஓ… கர்ணா! கர்ணா உன்னை நண்பனாக அடைய என்ன பேறு செய்தேன், என்ன பேறு செய்தேன். எங்கிருந்தோ வந்துசேர்ந்த ஏதுமில்லாத இந்தத் தேரோட்டி மகனுக்கு நீ என்னென்ன தந்தாய்! என்னை மனிதனாக்கி, எனக்கொரு நாடு தந்து அதற்கு மன்னனாக்கி, உன் உற்றார் உடன்பிறந்தார் , ஏன் இந்த உலகமே என்னை மதிக்கும் ஓர் ஏற்றம் தந்து, எல்லாம் தந்த நண்பா! உன் மனைவியின் மடியைப் பிடித்திழுத்த இந்த மடையனைப் பொறுத்தருள வேண்டும், பொறுத்தருள வேண்டும்!

துரி- என்ன பேசுகிறாய் கர்ணா! உன்னை எனக்குத் தெரியாதா! என் மனைவி பானுமதியின் குணநலனும் எனக்குத் தெரியாததா! (மனைவியை நோக்கி) பானு! நீயேன் தயங்கி நிற்கிறாய் ? சிதறிய முத்து மணிகளை நீயும் பொறுக்கி எடு! நண்பா, நீயும் எடு!

கர்- நண்பனே, நண்பனே! தெளிந்தபின் ஐயுறவு தேவையேயில்லை என்று தெளிந்தவனே! இனி எத்தனை பிறவி எடுத்தாலும் உனக்கு நண்பனாகவே நான் பிறக்க விரும்புகிறேன், வேண்டுகிறேன்! (என்று துரியோதனனைக் கட்டித் தழுவிக்கொள்கிறான்.)

(காட்சி இருளில் மெதுவாக நிறைவு பெறுகிறது. அரங்கின் கோடியில் ஒளிவட்டத்துள் கவிஞரும் புலவரும் தோன்றுகின்றனர்.)

புல- அருமை, அருமை! தெளிந்த நட்புக்கு இலக்கணம் சொல்லும் இனிய காட்சி கவிஞரே!

கவி- தொடர்ந்து இன்னொரு காட்சியை விளக்கப்போகிறேன் புலவரே! ஒரு கணவன் தன் மனைவியின் வழியாகவே, அவள் ஐயப்படாமலே, அவளுக்குத் தெரியாமலே தன் காதலிக்குத் தூது அனுப்பமுடியுமா ?

புல- அதெப்படி ? அவள் ஐயப்படாமல் இருப்பதற்கு ஏதாவது செய்யலாம். ஆனால், அவளுக்குத் தெரியாமல் அவள் வழியாக எப்படித் தூது அனுப்பமுடியும் ?

கவிஞ- உதயணன் கதையிலே வருகிறது அந்தப் புதுமையான காதல் தூது. மனைவியே அவள் கணவனுக்கும் கணவனின் காதலிக்கும் இடையே தூது போகிறாள் அதை உணராமலே!

புல- விந்தையாக இருக்கிறதே, கதையைச் சொல்லுங்கள் கவிஞரே!

கவி- சொல்கிறேன்! சொல்கிறேன்!

(காட்சி நிறைவு, நாடகம் தொடரும்)

thiru36@streamyx.com

Series Navigation

ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! – இலக்கிய நாடகம்

This entry is part [part not set] of 48 in the series 20060203_Issue

கரு.திருவரசு


நாடகத்தில் வருவோர்

1. ஒரு மலேசியக் கவிஞர்

2. புலவர் பக்குடுக்கை நன்கணியார்

இவர் சங்கப் புலவர்களில் ஒருவர். காலக்கணித வல்லார். இவர் பாடல் புறநானூற்றில் இருக்கிறது.

தோற்றம்: கழுத்திலிருந்து கணைக்கால் வரையிலான ஒரே ஆடையாக நீண்ட ஆடை அணிந்திருக்கிறார். வளர்ந்த தலைமுடியைப் பின்னால் சேர்த்துப் பிடித்து

ஓர் இடைமுடிச்சு. அளவான அழகான கருமையான தாடி. (புலவர் அணிந்துள்ள நீண்ட ஆடையே பக்குடுக்கை. பக்கு-பை. பக்கு+உடுக்கை = பக்குடுக்கை)

திருக்குறள் இன்பத்துப்பாலில் வரும்

3. காதலன் சங்கக் காலத்து இளைஞன்

4. காதலி சங்கக் காலத்து இளம்பெண்

சிலப்பதிகாரத்தில் வரும்

5. கோவலன் வணிக மரபிலே வந்த கலை ஈடுபாடுள்ள குடிமகன்

6. மாதவி ஆடல், பாடல் வல்ல அழகிய இளம்பெண்

மகாபாரதத்தில் வரும்

7. துரியோதனன் அத்தினாபுரத்து அரசன்

8. பானுமதி துரியோதனின் அழகு மனைவி

9. கர்ணன் அங்க தேசத்துச் சிற்றரசன், துரியனுக்கு நண்பன்

பெருங்கதை அல்லது உதயணன் கதையில் வரும்

10. உதயணன் வத்தவ நாட்டு மன்னன்.

11. வாசவதத்தை ஓர் அரசிளங்குமரி, உதயணன் மனைவி

12. மானனீகை ஒப்பனைக்கலையோடு யவனமொழியும் அறிந்த வண்ணமகள்.

13. காஞ்சனமாலை அரசியின் தோழி

இராமாயணத்தில் வரும்

14. இலக்குவன் வில்லம்புகளோடு தோன்றும் வீர இளைஞன்.

15. சீதை அழகிய இளவரசி, இராமன் மனைவி.

சோழர் காலத்தில் வாழ்ந்த

16. பொய்யாமொழிப் புலவர் பாகவதர் முடிகொண்ட நடுத்தர அகவையினர்.

17 அமைச்சர் சீநக்கர் நடுத்தர அகவையினர்.

18. அவர் மனைவி குடும்பப் பாங்கான பெண்.

====0====

காட்சி 1.

காட்சி நிகழும் இடம்: ஓர் அழகிய மலைச்சாரல்

காட்சியில் வருவோர். ஒரு கவிஞர், புலவர் பக்குடுக்கை நன்கணியார்.

கவிஞர் தற்காலத்தவர். இவர் வாழும் கதைமாந்தர் ஆனதால் தோற்ற விளக்கம் தரப்படவில்லை.

பக்குடுக்கை நன்கணியார். சங்கப்புலவர்களில் ஒருவர், காலக்கணித வல்லார்.

காட்சி நிலை.

சிறு குன்றின்மேல் அமர்ந்து புலவரும் கவிஞரும் உரையாடிக்கொண்டிருக்கின்றனர்.

கவிஞர்- வணக்கம் புலவர் ஐயா! நீங்கள் தமிழுக்குப் பொற்காலமான சங்கக்காலப் புலவர். உங்களைக் காணக்கிடைத்தது பெரிய நற்பேறு என்று மகிழ்ச்சியடைகிறேன், ஐயா!

புலவர்- மகிழ்ச்சி, மகிழ்ச்சி! எனக்கும் உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. நீங்களும் ஒரு புலவர் என்பதை நானறிவேன்.

கவிஞ- நான் புலவனா ? புலவரய்யா! இப்போதெல்லாம் பாட்டெழுதும் எங்களுக்குக் கவிஞர் என்பது பெயர். மலேசிய நாட்டிலுள்ள கவிஞர்களில் நானும் ஒருவன். ஏதோ… அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில கவிதைகள்…

புல- தெரியும், தெரியும். எனக்கு எல்லாம் தெரியும். உங்கள் தன்னடக்கமும் தெரியும். நீங்கள் சங்கக்காலம் என்று குறிப்பிடும் எங்கள் காலத்திலே தமிழ் இலக்கியத்தின் எழுத்து வடிவம் பா என்னும் செய்யுள்தான். உரைநடையை ஏதோ ஊறுகாய்போலத் தொட்டுக்கொள்வேம். இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலே உங்கள் காலமும் பொற்காலந்தான். இலக்கிய வடிவங்களில்தான் எத்தனை வகை… தொகை… அதனால், படைப்பிலக்கிய வாணர்களுக்கும் பல பெயர்கள்.

கவிஞ- தமிழில் நல்ல புலமை பெற்றவர்களை இப்போதும் புலவர் என அழைக்கின்றோம். ஆனால், அவர்கள் பாப் புனைவர்களாகத்தான் இருக்கவேண்டும் என எந்தக் கட்டும் இல்லை.

புல- ஆமாம், ஆமாம். கட்டு என்பதுகூட ஒரு முட்டாகத் தெரிவது உங்கள் காலம்.

கவிஞ- நான் உங்களைக் காணவந்ததுகூட ஒரு முட்டுக்கு விளக்கம் பெறுவதற்குத்தான் ஐயா!

புல- சொல்லுங்கள், சொல்லுங்கள்! உங்களுக்கு என்ன ஐயம் ? நாம் கலந்து பேசியே

விளக்கம் பெறலாமே!

கவிஞ- என்ன ஐயம் என்று கேட்டார்களே, அந்த ஐயத்தைப்பற்றித்தான் ஒரு முட்டு.

புல- நன்று நன்று. ஐயத்தைப்பற்றியே ஐயமா!

கவிஞ- புலவர் ஐயா! மனிதர்கள் ஒருவரைப்பற்றி ஒருவர் ஐயப்படுவது இயல்புதான்.நன்கு நெடுங்காலம் பழகியபிறகும் ஒருவரை ஐயப்படுவது கூடுமா, சரியா ? இதில் ஆணும் பெண்ணும் வேறுபடுவார்களா, என்ன!

புல- இதில் ஆண் பெண் எனப் பால் வேறுபாடு இல்லை. அவரவர்களின் தெளிவைப் பொறுத்து அமைவது இந்தக் குணம். யாரும் எதற்கும் ஐயப்படலாம். ஆய்ந்து ஒரு தெளிவை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். தேராதவனின் தெளிவும், தெளிந்துவிட்டபின் ஐயப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும் என்று திருவள்ளுவர் சொல்லவில்லையா!

கவிஞ- என் கேள்வி, ஆய்வு எல்லாம் ஆண் பெண் ஐயப்படும் குணத்தைப் பற்றித்தான். ஒரு பெண்ணை நம்பும் ஆண் பெரும்பாலும் அவளை ஐயப்படுவதில்லை. ஒரு ஆணை நம்பும் பெண் பெரும்பாலும் அவனை ஐயப்படுகிறாள். இதை, உங்களைப்போல திருவள்ளுவரைக் கூப்பிடாமல் எங்கள் காலத்து ஆகக் கடைசியான வழக்கப்படி திரைப்படப் பாட்டுகளாகப் பாடுகிறேனே! கேட்கிறீர்களா ?

புல- பாடுங்கள், பாடுங்கள்! இப்போது புலவர்களின் பட்டிமன்றங்கள்கூட திரைப்படப் பாடல்களைப் பற்றிக்கொண்டுதானே நடக்கின்றன!

கவிஞ- ஆமாம் புலவரே! இதோ பாடுகிறேன்!

சந்தேகம் தீராத வியாதி- அது

வந்தாலே தடுமாறும் அறிவென்னும் சோதி – சந்தேகம்

(வேறு இசை)

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் – அதற்கு

சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும் – தன்னைத்

(வேறு இசை)

சந்தேகம் என்னும் ஒரு சரக்கு – அது

பெண்கள் மனசிலேதான் இருக்கு – சந்தேகம்

இப்படிப் பல பாடல்கள் புலவரே!

புல- கடைசியாகப் பாடானீர்களே, சந்தேகம் என்னும் ஒரு சரக்கு, அது நகைச்சுவையாகப் பாடினாலும் நல்ல பாட்டு. அந்தப்பாட்டை ஆண் பாடுவதைமட்டும் பாடி நிறுத்திவிட்டார்கள். அதே பல்லவியைப் பெண்ணும் பாடுகிறாளே!

கவிஞ- ஆமாம் ஆமாம் புலவரே! நீங்கள் நன்கணியார் அல்லவா, எல்லாக் காலத்தையும் நிகழ்ச்சிகளையும் நன்றாகவே கணித்துத் தெரிந்துதான் வைத்திருக்கிறீர்கள்!

புல- சரி, பாட்டைப் பாடுங்கள், கேட்போம்!

கவிஞ- சந்தேகம் என்னும் ஒரு சரக்கு – அது

பெண்கள் மனசிலேதான் இருக்கு – சந்தேகம்

(என்று ஆண் பாடியதும் அதே பல்லவியை மடக்கிப் பெண்பாடுகிறாள்)

சந்தேகம் என்னும் ஒரு சரக்கு – அது

ஆண்கள் மனசிலேதான் இருக்கு – சந்தேகம்

புல- ஆகக் கவிஞரே, இந்தச் சந்தேகம் என்னும் சரக்கு ஆண், பெண் இருபாலரிடமும் இருக்கிறது. அப்படித்தானே!

கவிஞ- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு என்பது இருபாலருக்கும் உள்ளதுதான். ஆனால், அது பெண்களிடம்தான் கூடுதலாக – தூக்கலாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

புல- கூடுதலாகத் தெரிகிறது என்பதைவிடத் தூக்கலாகத் தெரிகிறது என்பதை எடுத்துக் கொள்வோமே! பெண்களிடத்தில் ஐயப்படும் குணம் தூக்கலாகத் தெரிகிறது என்பதை எப்படி விளக்கப்போகிறீர்கள்!

கவிஞ- தனிப்பட்டவர்களிடம் போய் இதற்கொரு கணக்கெடுப்பு நடத்தமுடியாது புலவரே! தமிழ் இலக்கியத்திலே, நூல்களிலே படித்த – கேட்ட சில காட்சிகளை….

புல… அதாவது பெண்கள் ஆண்கள்மேல் ஐயப்படும் காட்சிகளையா ?

கவிஞ- இல்லை புலவரே, இரண்டுவகைக் காட்சிகளையும் பார்ப்போமே!

புல- நன்று நன்று! அவை நல்ல இலக்கிய விருந்துக் காட்சிகள் ஆகலாம். தொடங்குக! தொடங்குக! இனிதே தொடங்குக, இன்னே தொடங்குக!

கவிஞ- திருக்குறளில் மூன்றாம் பாலிலே, அதாவது இன்பத்துப் பாலிலே சில இனிய காட்சிகளைக் காட்டுகிறார் திருவள்ளுவர்.

புல- ஆமாம் கவிஞரே! அவை அருமையான காதல் காட்சிகளாயிற்றே!

கவி- காதல் காட்சி மட்டுமா ? பெண்ணின் ஐயத்தைத் தூக்கிக் காட்டும் காட்சி.

(காட்சி நிறைவு – நாடகம் தொடரும்)

thiru36@streamyx.com

Series Navigation