ஏழைகளின் சிரிப்பில்

This entry is part [part not set] of 30 in the series 20090919_Issue

பி.ஏ.ஷேக் தாவூத்


“இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு” – திருவள்ளுவர்.

மரணத்தை வென்றதொரு வாழ்வை அடைந்து விட வேண்டுமென்று தான் இந்த நிலையில்லா உலகில் வாழும் எல்லோருமே விரும்புகிறோம். இறைவனின் அருளை பெறுவதில் வாழ்வின் பெரும்பகுதியை செலவிடும் ஆன்மீகவாதியும் இந்த நெடிய வாழ்க்கையையும் தா என்று இறைவனிடம் வேண்டுகிறார். இறைவனை மறுத்து போலி பகுத்தறிவு பேசுகின்ற நாத்திகவாதியும் வேண்டி நிற்த்தல் இந்த நெடிய வாழ்வை தான். இந்த வாழ்வு தங்களுக்கு கிடைத்துவிடாதா என்ற எண்ணத்தில் பாமரனுக்கும் படித்தவனுக்கும், ஏழைக்கும் பணக்காரனுக்கும், வலதுசாரிக்கும் இடதுசாரிக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை. வாழ்க்கையில் சில விடயங்கள் கிடைக்கவே கிடைக்காது என்று அறிந்த பின்னரும் அதை நோக்கியே நம் மனம் பயணிப்பதை நம்மால் தடுக்க இயலாது. மரணமில்லா வாழ்வும் அது போன்றதொரு கிடைக்காத விடயம் தான். மரணமில்லா வாழ்வு தான் கிடைக்கவில்லை குறைந்தபட்சம் நோயற்ற வாழ்வாவது கிடைக்காதா என்ற ஏக்கம் நம் எல்லோருடைய மனதிலும் இருந்து கொண்டுதானிருக்கிறது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று இதைதான் நம் முன்னோர்களும் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

உண்ணும் உணவும் குடிக்கின்ற தண்ணீரும் இரசாயன மயமாகிவிட்ட இன்றையச் சூழ்நிலையில் நோயில்லாமல் வாழ்வது அரிதாகிவிட்டது. முன்னர் ஒரு காலத்தில் பணக்காரர்களின் நோய்கள் என்று அழைக்கப்பட்ட பல நோய்கள் இன்று சர்வசாதாரணமாக எல்லோருக்கும் வருகின்றது. பணக்காரர்களுக்கு நோய் வந்தால் அவர்களை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள உயர்தர தனியார் மருத்துவமனைகள் பல இங்குண்டு. கட்டுகின்ற பணத்தின் அளவிற்கேற்ப கனிவான சேவைகள் அவர்களுக்கு கிடைக்கும். தொலைக்காட்சியில் வரும் ஒரு மருத்துவமனையின் விளம்பரத்தில் வருவது போன்ற அன்பான உபசரிப்புகள், புன்முறுவலுடன் கூடிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் சேவைகள் என்பது நோயாளிகளின் பொருளாதார பின்னணியோடு பின்னிப் பிணைந்து காலங்கள் பல ஆகிவிட்டன. சில மருத்துவர்களும் செவிலியர்களும் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம். அவர்கள் நமது போற்றுதல்களுக்கும் பாராட்டுகளுக்கும் உரியவர்கள்.

இந்த நாட்டிலே இரண்டு வேளை உணவைக் கூட வயிறார உண்ணமுடியாத நிலையில் 30 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழுகின்றனர். அவர்களுக்கு இத்தகைய கொடூர நோய்கள் வந்துவிட்டால் அவர்களின் வாழ்வே கேள்விக்குறியாகி விடுகின்றது. இலட்சங்களை செலவழித்து தரமான மருத்துவ சேவைகளை பெறுவதற்கு அவர்களின் பொருளாதாரம் அறவே இடம் கொடுக்காது. இரண்டு வேளை உணவுக்கே நாள் முழுவதும் வியர்வை சிந்தி உழைக்கின்ற இவர்கள் இலட்சங்களை செலவழிக்க எங்கே செல்வார்கள்? அபரிதமான பொருளாதாரத்தை கையில் வைத்திருக்கும் மேல்தட்டு வர்க்கத்திற்கும், கடனை வாங்கியாவது மருத்துவமனையின் கட்டணங்களை கட்டிவிடும் நடுத்தர வர்க்கத்திற்கும் வேண்டுமானால் இந்த தரமான மருத்துவ சேவைகள் கிடைக்கலாம்.

அன்றாடம் உழைத்தால் தான் உயிர் வாழ முடியும் என்ற நிலையில் இருப்பவர்கள் நோயாளிகளாக மாறிவிட்டால் அவர்களின் ஒரே போக்கிடம் அரசு மருத்துவமனைகள் தான். இவர்களை தாக்கிய நோய் பாதி உயிரையும் அரசு மருத்துவமனைகளின் “அன்பான” உபசரிப்புகள் மீதி உயிரையும் எடுத்து விடும். ஏனெனில் பல அரசு மருத்துவமனைகள் மனிதாபிமானத்தை துறந்து காலங்கள் பல உருண்டோடிவிட்டன. நோயாளிகளுக்கு தேவை கனிவான சேவைகளும் மனதை காயப்படுத்தாத வார்த்தைகளுமே. இவ்விரண்டும் கிடைக்கின்ற அரசு மருத்துவமனைகள் அபூர்வமாகி விட்டன.

இப்படிப்பட்ட இன்னல்களின் மத்தியில் வாழ்க்கையை கழிக்கின்ற அடிமட்ட மக்களின் நெஞ்சில் பாலை வார்த்தது போன்ற ஓர் திட்டத்தை நம் தமிழக முதல்வர் திரு. கருணாநிதி அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அந்த திட்டம் என்னவெனில் அடித்தள மக்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்தி விடும் என்ற ஓர் உன்னத திட்டம் தான். இதற்காக 200 கோடி ரூபாயை இந்த ஆண்டு தமிழக அரசு ஒதுக்கியிருக்கிறது. நோய் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தின் படி தனியார் மருத்துவமனைகளில் தங்கி தரமான சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என்பது அடித்தட்டு மக்களின் காதுகளில் தேன் வந்து பாய்ந்தது போன்ற ஒரு உணர்வை தோற்றுவித்தது என்றால் அது மிகையில்லை.

“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” என்றார் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை. அவரின் தம்பி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் இந்த திட்டத்தின் மூலம் உண்மையிலேயே ஏழை எளிய அடித்தட்டு மக்களுக்கு நன்மைகளை செய்திருக்கிறார். ஏற்கனவே “108” இலவச அவசர ஊர்தி மூலம் நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களுக்கும் மருத்துவ சேவை செய்து நல்ல பெயரை எடுத்திருக்கும் தமிழக அரசு இந்த திட்டத்தின் மூலம் இன்னும் ஒரு படி மேலே நம் மனதில் உயர்ந்து நிற்கிறது. தமிழக முதல்வர் அவர்கள் இதே அக்கறையை அரசு மருத்துவமனைகளை தரத்தை உயர்த்துவதிலும் அதில் சிறப்பான சேவைகளை அளிப்பதிலும் காட்ட வேண்டும். நாள்தோறும் இலட்சக்கணக்கான மக்கள் அரசு மருத்துவமனைகளைத் தான் தம் நோய் தீர்க்க நாடுகின்றனர் என்பதை நம் முதல்வர் மறந்து விடக் கூடாது.

பி.ஏ.ஷேக் தாவூத்
pasdawood@gmail.com

Series Navigation

பி.ஏ.ஷேக் தாவூத்

பி.ஏ.ஷேக் தாவூத்