ஏன் இந்தத் தலைக்குனிவு

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

குரும்பையூர் பொன் சிவராசா


தலை குனிந்தபடியே வந்த தங்கம்மாவை

தற்செயலாய் சந்தித்தேன் சுவீடன் கடைத்தெருவில்

நாட்டிலே தங்கம் குமராய் இருக்கையிலே

தலை நிமிர்ந்து நடப்பாள் ஓர் வீர நடை

எவருக்கும் அடிபணியோம் நாம் பெண்கள்

என்று சொல்லியே தீரமுடன் வலம் வருவாள்

இங்கே மட்டும் என்ன தலைக்குனிவு

ஏன் இந்தத் தலைக்குனிவு…..

ஆணுடன் பெண்ணும் சரி சமனாய் வாழும்

இந் நாட்டில் ஏன் இந்தக் கோலம்?

ஏன் இந்தத் தலைக்குனிவு!

ஒன்றுமே புரியவில்லை எனக்கு

ஆவலை அடக்க முடியாமல் கேட்டேன் தங்கத்தை

ஏன் இந்தத் தலைக்குனிவு?

கேட்டதும் வந்ததே கோபம் பொத்துக்கொண்டு

எப்போ வந்தாய் நீ சுவீடனுக்கு

என்ன கேள்வி கேட்டாய் நீ என்னைப் போய்

எவ்வளவைத் தாங்கி எத்தனையைச் சுமந்து

நம் பெண்கள் இருக்கின்றார் இங்கு

தலை நிமிர முடியுமா நம்மால்?

நாட்டிலே இருந்து இப்போ வந்ததினால்

நிமிர்கிறதோ உனது தலை?

வாழ்ந்து பார் இந் நாட்டில் சில காலம்

நிமிர்ந்த தலை குனிந்து கொள்ளும்

வீர நடை சோர்ந்து போகும்

சொல்லி நின்றாள் தங்கமவள்

பெண்களின் உரிமைக்குப் பேர் எடுத்த சுவீடன் என்று

கனவுகளைச் சுமந்துகொண்டே வந்தேன் நானும் இங்கு

தங்கத்தின் கதை கேட்டு தளர்ந்து போனேன்

என் கனவெல்லாம் உடைந்தே போய்ச்சு

ஒன்றுமே புரியவில்லை எனக்கு

இங்கேயும் அடிமையாய் தலை குனிந்து வாழ்வதா?

எங்கே போனாலும் எம் பெண்கள் அடிமைதானா?

உள்ளூரப் பயம் ஒன்று

வாட்டி வதக்கியது என்னுள்ளே

கற்பனைகள் பலவோடு

காலடி எடுத்து வைத்தேன் நான் இங்கு

இந் நாட்டில் என்ன பயம்?

தலை நிமிர்ந்து போனால்

நம் தரம் கெட்டுப் போகுமா இங்கு?

அடிமை விலங்கொடிக்க அரும்பாடு படுகின்றார்

மகளிர் அங்கு தமிழ் ஈழத்தில்

அடிமையாய் வாழ்வதா நாம் இங்கே

தலி குனிந்து வாழ்வதற்கா

புலம் பெயர்ந்தோம் நாம் எல்லாம்

ஆயிரம் கேள்விகள் மனதுள்ளே எழுந்து வர

ஆத்திரமாய் நான் கேட்டேன்

அடக்குமுறை ஆண்கள் உள்ளனரா இன்றும்

போராட்டம் தொடங்கிடுவோம்

தலை நிமிர்ந்து வாழ்ந்திடுவோம்

பலமான சிரிப்புடனே பவ்வியமாய் சொன்னாள் தங்கம்

தலைக்குனிவு வந்ததிற்கு

நம் பெண்கள் தான் அடிப்படையே

வயதுக்கோர் பவுணில் தாலிக்கொடி போடாட்டில்

புலம்பெயர் நாட்டில் வக்கில்லாப் பெண்ணென்று

நையாண்டி செய்திடுவார் நம் பெண்கள்

அத்தானை வெருட்டித்தான்

ஐம்பதிலே செய்தேன் தாலிக்கொடி

இன்று தலை நிமிர்த்த முடியாமல்

அலைக்களிந்து திரிகின்றேன்

தலை நிமிர முடியுமா என்னால்?


ponsivraj@gmail.com

Series Navigation

குரும்பையூர் பொன் சிவராசா

குரும்பையூர் பொன் சிவராசா