என் மண்!

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

வ.ந.கிரிதரன்நான் பிறந்த,
நான் தவழ்ந்த,
நான் வளர்ந்த
மண்.
ஒரு தலைமுறைதான்
ஓடி விட்டது
பிரிந்து.
நீங்கியது
நேற்றுத்தான் போலிருக்கிறது.
கழிவிரக்கத்தில்
கழிகின்றது
நிகழ்.

இப்பொழுதும் பல சமயங்களில்
எனக்கு என் மண்மீதான
ஞாபகங்கள் எழுவதுண்டு.
இருண்டிருக்கும் நள்ளிரவு வானில்
பூத்துக் கிடக்கும் சுடர்ப்பூக்களைப்
பார்க்கையில்
என் மண்ணின் ஞாபகம் எனக்குள்
எழுவதுண்டு.
சோவென்று பெருமழை கொட்டுகையிலும்
நான் என் மண்ணைப் பற்றி
நினைத்துக் கொள்கிறேன்.
காற்றிலாடும் விருட்சங்கள் கண்டு
அதிகாலைகளில் தலை விரித்தாடும்
பனைப் பெண்களை
நினைத்துக் கொள்கின்றேன்.
ஒரு காலத்தில் எவ்வளவு
அமைதியாக இருந்தது என் மண்.
அதன் பின்னர் தான் எவ்வளவு
மாற்றங்கள்.
இரத்த மழைக்குள் குளித்துக்
கிடந்தது என் மண். ஆயினும்
அது தன் நம்பிக்கையை,
உறுதியை இழந்துவிடவில்லை
என்றுதான் படுகிறது. ஏனெனில்
அதன் வரலாறு
நீண்டது.
அந்த நெடிய பாதையில்தான்
எத்தனை போர்களை அது
கண்டிருக்கும்.
அன்று போல அது அனைத்தையும்
உள்வாங்கி
நம்பிக்கையுடன் காத்துக்
கிடப்பதுபோல்தான்
உணர்கின்றேன்.

அது நான் பிறந்த மண்.
அது நான் வளர்ந்த மண்.
சிந்தை முழுக்க
எப்பொழுதும் எனக்குள்
வியாபித்துக் கிடக்கும்
மண்தானே.
ஒரு கணமேனும் நினைக்காமல்
நானிருந்தேனா?
அது நான் கனவு கண்ட மண்.
இருக்கும் வரையில்
இந்தக் கனவுகள் என்னுடன்
கூடவே வரும்; தவறா?
தவிர்க்க முடியாதது.
எங்கிருந்தாலும் அதனுடனான
என் பிணைப்பை யாரால்தான்
அறுத்துவிட முடியும்?

ngiri2704@rogers.com

Series Navigation