என் கேள்வி..

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

கவியோகி வேதம்


பார்க்கின்ற போதிலே தேனாகப் பேசியே,
….பணம்தன்னைக் கறக்கும் ஒருவன்;
பாராத போதிலும் உள்நெஞ்சில் அன்பினைப்
….பாகெனச் சொரியும் ஒருவன்;
நேரெதிர் துருவத்தில் நிற்கின்ற இவரைஎன்
….நெருக்கத்தில் கொணர்ந்த தென்னே ?
…நெடிதுயர்ந்த மலைப்பாறைப் பிளவுக்குள் தீக்கங்கை
….நீட்டியே முழக்கம் என்னே ?
கார்காலப் போதிலும் தமிழ்மண்ணில் மேகத்தைக்
…காட்டாமல் ஒளிக்கும் நீயே,
..கடும்பாலை வனத்தில்போய்ப் பலநேரம் நீர்பெய்து
..கருணைபோல் செய்யும் தாயே!
சோர்வடையச் செய்வதும்,மாயையால் மறைப்பதும்,
..தூயஉன் பண்பிற் கழகோ ?
….சோலைகள் காவல்போல் ச்ருங்கேரி தனில்சூழச்
….சொலிக்கும்சா ரதைத்தேவியே!
.
மாந்தர்கள் மத்தியில் வேதாந்தம் பேசியே
..மகாசபைத் தலைவன் ஆனவன்;
..மகான்களின் பேர்சொல்லி,மனம்போலப் பணம்சேர்த்து,
..மதம்பிடித் தலைகின் றவன்,
சாந்துணையும் இவனைநீ சுகவாழ்வு பெறச்செய்து
…. சாகசம் புரிவ தேனோ ?
..சந்தனத்தில் காவியைக் கலந்துதரும் வணிகனைச்
..சார்ந்தும்நீ நிற்ப தேனோ ?
வேந்தனும் துறவியும் உன்கண்ணின் பார்வைமுன்
..மிகச்சமம் என்றல் பொய்யோ ?
..வேற்றுமை காட்டாமல் வரங்களை வழங்கினால்
..விதந்துகவி பாடு வேனோ ?
மாந்தளிர் இலைமேலே குயிலும்உன்மேல் பாடிடும்
…மகோன்னதம் பெற்ற தேவீ!
..மகான்களே ச்ருங்கேரி பீடம்கொலு விருக்க
..மணம்தங்கும் அருளை மேவி!
.
வித்தகர் நூல்ஆய்ந்தே அறிவுக் கனத்தினால்
..மேல்நோக்கிப் பேசி நிற்பார்!
….வினயமுடன் யாரொருவர் அண்டியே நின்றாலும்
. மிகவுமே அலட்டல் செய்வார்!
கத்திரி வெயிலிலும் சிலசமயம் மேகங்கள்
..கருணையுடன் கூடி நிற்கும்!
..கற்றவரோ அகந்தையால் அதட்டியே பேசுவார்!
..கனலையே கண்கள் உமிழும்!
இத்தனை செய்தாலும் இவருக்கே அருள் பெய்தே
…எம்மையே வாட்டல் ஏனோ ?
….ஏகாந்தம் நின்றுமே த்யானத்தில் உன்னையே
….என்மனம் எண்ணி உருகும்!
உத்தமீ!கண்ணழகி! சிருங்கேரி மீன்கூட
..உன்புகழ் பாடி நிற்கும்!
.. ஒருசொல் உரைத்திடு!கலிதன்னில் இன்றுநீ
. .உயர்ந்தோரைத் தாழ்த்தல் அழகோ ?
.
கோட்டான்கள் கூரையில்! கூவுமயில் பாறையில்!
..கோலமலங் கோலம் ஆச்சு!
….கூவினால் சேவலின் தொண்டையைக் கீறுகிற
….கூர்கெட்ட கால மாச்சு!
ஓட்டாலே ஏழையைக் கேவலப் படுத்திடும்
..உபாயம் அறிய லாச்சு!
….உல்லாசம் புயல்போலே பணம்கொண்டோர் மனத்திலே
….உலாவி அழிக்க லாச்சு!
கேட்பாரும் அருகிட கேட்டோர்கள் மாய்ந்திட
…கேவலம் உச்ச மாச்சு!
….கேள்வியே பதிலுக்கு, எமனாகி நின்றுமே
….கீழ்கள்கை ஓங்கி யாச்சு!
வாட்தடங் கண்ணிநீ!உலகத்தின் அன்னைநீ!
..மவுனமாய் நிற்ப தேனோ ?
….வளர்தென்னை ஓங்கிடும் ச்ருங்கேரி மண்ணிலே
….மனமாரச் சிரிக்கும் தாயே!
****
yogiyarvedham@vsnl.net

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்