என் கந்தல்

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

புதியமாதவி, மும்பை.


===================

என்
முகமும் முகவரியும்
மறந்து போயிருக்கலாம்.
உன்
நினைவில்
நிழலாட
நான் என்ன
அரசு அதிகாரியா ?
ஆண்டவர்கள் பரம்பரையா ?
அயல்நாட்டு வாசமா ?
ஆண்டாளின் பேரொளியா ?
என்னை ஆள
எதுவுமில்லையே
உன்னை ஆளும்
தமிழ் கூட
என்
ஏழ்மைக் கண்டு
ஒதுங்கி விட்டதே!
என் குடிசை
என் கந்தல்
கழிப்பறை கூட
இன்னும்
கனவாகவே இருக்கும்
என் சுற்றம்
என் வட்டம்

இங்கே
எதற்காகவும்
நீ-
வரமாட்டாய்..
உனக்கான
என் காத்திருப்பில்
நீயும்
உன் நிழலும்
கந்தலாகி…
என்னையே கிழிக்கின்றது.!

கிழி
=============

கிழி
காகிதங்களை
மட்டுமல்ல
கனவுகளையும்தான்.

கிழி
நினைவுகள்
ஒட்டாதபடி
தூள் தூளாய்
கிழி

கிழி
முகவரி இல்லாத
கடிதங்களை மட்டுமல்ல
உன்
முகவரி மறந்த
முகவரிகளையும்
கிழி
————————
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation