எனக்குப் பிடித்த கதைகள் – 5 – மெளனியின் ‘சாவில் பிறந்த சிருஷ்டி ‘ (பதற்றமும் பரிதாபமும்)

This entry is part [part not set] of 37 in the series 20020310_Issue

பாவண்ணன்


என் சிறந்த நண்பரொருவர் வங்கி ஊழியராக இருந்தார். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் ஐந்து குழந்தைகள் இருந்தனர். ஐந்தாவது குழந்தையின் பிரசவத்தில் ஏதோ சிக்கல் ஏற்பட்டதில் மனைவிக்கு மரணம் சம்பவித்து விட்டது. சோகத்தில் அமிழ்ந்து விட்டது குடும்பம். தொடக்கத்தில் மனம் துவண்டு போனாலும் மெதுமெதுவாகத் தன்னைத்தானே தேற்றிக் கொண்டு தன்னந்தனியாக அக்குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி விட்டார். அவருக்கு நேர்மாறாக மற்றொரு நண்பர் தன் மனைவி இறந்த இரண்டாவது மாதமே இன்னொரு பெண்ணைத் தேடித் திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது திருமணம் என்பது யாருடைய விமர்சனத்துக்கும் உரியதல்ல, அவரவர்கள் தேவை, சூழல், மனப்பக்குவம் ஆகியவற்றை ஒட்டி எடுக்கப்பட வேண்டிய முடிவு. சாப்ளினின் திருமணங்கள் தொடர்ந்து தோல்வியிலேயே முடிந்தன. தாஸ்தாவெஸ்கி தன் திருமணம் தோல்வியில் முடிந்ததும் தன்னிடம் தட்டச்சு செய்யவந்த பெண்ணை மணந்து கொண்டார். பெரியார் தன் நடுவயதில் மணியம்மையை மணந்து கொண்டார். ஆந்திரத்தில் முன்னணி நடிகராகவும் பல ஆண்டுகள் முதல்வராகவும் இருந்த என்.டி.ராமாராவ் தன் இறுதிக் காலத்தில் தன்னைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ள வந்த ஆய்வு மாணவியை மணந்து கொண்டார். அவரவர்கள் அந்தந்த சந்தர் ப்பங்கள் சார்ந்து எடுத்த முடிவே அத்திருமணங்கள்.

சமவயதோ அல்லது ஏழெட்டு ஆண்டுகளோ வித்தியாசம் இருக்கும் மட்டும் இத்தகு இரண்டாம் திருமணங்கள் பெரிய உறுத்தலாகத் தெரிவதில்லை. அதற்கும் மேலாகச் செல்லும் போதுதான் பலவித முரண்கள் உருவாகின்றன. தனக்குப் பிறந்த பெண்ணின் வயதையொத்த ஒரு பெண்ணுடன் ஓர் ஆணால் எப்படி அமைதியுடன் குடும்பம் நடத்த முடியும் ? தன் தந்தையையொத்த வயதையுடைய ஓர் ஆணுடன் ஒரு பெண்ணால்தான் எப்படி மலர்ச்சியுடன் உறவாட முடியும் ? பார்ப்பதற்கு எந்த மனச்சிக்கலும் இல்லாதவர்களாகக் காட்டிக் கொண்டாலும் உள்ளூர அவர்கள் மனம் எத்தகைய கொந்தளிப்புடன் இருக்கக் கூடும்.

எங்கள் கிராமத்தில் ஐம்பது வயதான பண்ணையாரைத் திருமணம் செய்துகொண்டு வந்த இருபத்தைந்து வயதுப் பெண் மூன்றே வாரங்களில் அந்தப் பண்ணையில் மாடு கழுவிக் கொண்டிருந்தவனோடு ஊரைவிட்டே கிளம்பிப் போய்விட்டதைப் பார்த்திருக்கிறேன். தன் இளம்மனைவியை யாரும் பார்த்துவிடக் கூடாதே என்ற பதற்றத்துடன் அறைக்குள்ளாகவே வைத்துப் பூட்டிவிட்டுக் காவல் காக்கிற ஆட்களையும் பார்த்திருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். நிறையக் கூட்டம். மூன்று பேர் அமரக் கூடிய இருக்கையில் காலியாக இருந்த இடத்தில் உட்கார ஆசைப்பட்டு ‘அப்பாவை இந்தப் பக்கம் விட்டுவிட்டு நீங்க ஜன்னல் பக்கம் உக்காந்துக்கிறீங்களா ? ‘ என்று ஒரு பெண்ணிடம் கேட்டுவிட்டு நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன். அன்று முழுக்க, திரும்பத் திரும்ப ஆவேசப்பட்ட அந்த முகங்கள் மாறிமாறி வந்தபடி இருந்தன. அவர்கள் கணவன் மனைவி என்பது தாமதமாகத்தான் உறைத்தது. ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் சீண்டப்பட்டதாக உணர்வதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மன்னிப்புக் கோரும் என் குரலைச் சற்றும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசத் தொடங்கி விட்டார்கள் அவர்கள். என்னை முன்னிட்டு ஆண்டாண்டு காலமாக ஊர்க்காரர்களும் உறவினர்களும் அவர்களை நோக்கி வீசிய கேள்விகளுக்கெல்லாம் யோசித்து வைத்தும் சொல்ல முடியாமல் மனத்தில் அடக்கி வைத்திருந்த பதில்களையெல்லாம் தற்சமயம் என்னிடம் கொட்டுகிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. என் கேள்வி முன்வைக்கப்பட்ட கணம் அவர்கள் மனத்தைத் திறந்து விட்டது. எல்லா அழுத்தமும் ஒரேயடியாகப் பீறிட்டு வெளிப்படத் தொடங்கிவிட்டது. அத்தனை பேர் முன்னிலையில் அற்பப் புழுவாக என்னை நினைத்து அவமானப்படத்தக்க சொற்களை அவர்கள் வீசிய விதம் என்னைச் சீற்றமுற வைத்தாலும் அவர்கள் நிலை என் வாயைக் கட்டிப் போட்டது. மெளனமாக அந்த வசைகளை வாங்கிக் கொண்டேன்.

எவ்வளவோ சமயங்களில் எச்சரிக்கை உணர்வோடு இருந்தாலும் கோவில்களிலும் உணவு விடுதிகளிலும் சுற்றுலா மையங்களிலும் பயணங்களிலும் இதுபோன்ற ஜோடிகளைப் அடிக்கடி பார்க்க நேர்ந்து விடுகிறது. திரும்பத் திரும்ப வசமாக அகப்பட்டு வசையுறவும் நேர்கிறது. வசையுறும் ஒவ்வொரு தருணத்திலும் மனத்தில் எழுந்து அலையக்கூடிய சிறுகதை மெளனியின் ‘சாவில் பிறந்த சிருஷ்டி ‘

சுப்பு ஐயரைப் பற்றியும் அவரது இரண்டாவது மனைவியான கெளரியைப் பற்றியும் சொல்கிறது அக்கதை. ஐயருக்கு ஐம்பதையொட்டிய வயது. கெளரிக்கு இருபதையொட்டிய வயது. தன் தங்கை திருமணத்துக்காக தாய்வீட்டுக்குச் சென்ற கெளரியைப் பிரிந்து ஒரு மாதத்துக்கும் மேல் இருக்க முடியாமல் முகூர்த்ததுக்கு முன்னால் ஊரில் போய் நிற்கிறார் ஐயர். கல்யாண இரண்டாம் நாள். கூடத்திலிருந்து கெளரியின் நகைப்பொலியைக் கேட்டு இன்ப உணர்ச்சி பொங்குகிறது ஐயருக்கு. மறுகணமே, இந்த உணர்ச்சியை இதுவரை உணர்வதற்கு வழியேயில்லாமல் இத்தனை ஆண்டுகள் தன்னோடு வாழ்ந்திருக்கிறாளே என்று ஆத்திரம் பொங்குகிறது. ஆவேசத்தில் தனியே அழைத்து ஏதோ சொல்லி உடனே புறப்பட வைத்து விடுகிறார். ஸ்டேஷனில் வண்டி பிடித்து உட்கார்ந்ததும்தான் சுயநினைவு வருகிறது அவருக்கு. கெளரிக்குப் பிடித்தவிதமாக இருக்க முனைகிறார். அவளுக்குப் பிடித்த இளைஞனை நினைவூட்டிப் பேசுகிறார். சொந்தக்காரர்கள் முன்னால் மனைவி சிரிப்பதையே தவறாகப் பார்த்தவர் பெட்டிக்குள் பயணம் செய்யும் அறிமுகமில்லாத இளைஞனொருவடன் பேச வாய்ப்பேற்படுத்துகிறார். ‘பொண்ணா சார் ? ‘ என்ற அப்பாவித்தனமாகக் கேட்பவனிடம் கோபமே இல்லாமல் ‘ஒய்ப்ஃ சார் ‘ என்று சிரித்தபடி சொல்கிறார். ஆவேசமாக உதிர்க்கப்பட்ட ஒரு வார்த்தையை அவள் மறந்து விடவேண்டும் என்று பயணம் முழுக்க வேறொரு முகத்துடன் பேசிக் கொண்டு வருகிறார். தன் மனைவிக்கு அதிகபட்ச சந்தோஷம் கொடுக்கக் கூடிய வார்த்தையைத் தான் மட்டுமே சொல்ல வேண்டும் என்றும் தன் மனைவியின் சிரிப்பும் உபசரிப்பும் தனக்காகவே அமைய வேண்டும் என்றும் அவர் நினைக்கிறார். ஆனால் தன் எண்ணத்தை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் எண்ணத்துக்கு மாறாக சூழல் மாறும் போது வெடிக்கிறார். அந்த வெடிப்பின் புண்ணை ஆற்றுவதற்காக ஆனமட்டும் முயற்சி செய்து தன் அன்பை வெளிப்படுத்த முனைகிறார். பதற்றத்துக்கும் பரிதாபத்துக்கும் இடையே அவர் மனம் ஊசலாடிக் கொண்டே இருக்கிறது. மகளாகவும் பார்க்க முடியாமல் மனைவியாகவும் முழு உரிமை எடுத்துக் கொள்ள முடியாமல் தவிக்கும் நிலை ஆணுக்கு. தந்தையாகவும் அணுகமுடியாமல் கணவனாகவும் அனுசரித்துப் போகமுடியாமல் தவிக்கும் நிலை பெண்ணுக்கு.

கதையில் சுப்பு ஐயர் சொல்வதாக ஒரு உரையாடல் இடம்பெறுகிறது. ‘கிழக்கே போகிற வண்டிக்கு மூன்று தரம் மணியடிக்க வேண்டும், மேற்கே போகிற வண்டிக்கு ரெண்டு தரம். மாத்தி அடிச்சா வண்டி திக்குதிசை தெரியாம போயிடும் ‘. திருமண வாழ்வின் படிமமாக இதைப் பார்க்கும் சாத்தியம் அழகாக உள்ளது. கெளரி என்னும் வண்டியைத் திக்குதிசை தெரியாமல் திரும்பிவிடும் வண்ணம் மணியடித்தது தானே என்கிற குற்ற உணர்வு ஐயருக்கு இல்லாமலில்லை. ஆனால் அவ்வண்டியைத் திருப்பி விடாமல் தனக்குப் பயணமில்லை என்கிற சுயலாபத்தில் அத்திருமணம் நிகழ்ந்து விட்டிருக்கிறது. சுயலாபத்தின் அடிப்படையில் ஆளாளுக்கு வேண்டிய சந்தர்ப்பத்தில் மணியடித்துக் கொண்டும் வண்டிகளைத் திசைமாற்றிக் கொண்டும் செல்லச்செல்ல வாழ்வில் குழப்பமே எஞ்சி விடுகிறது.

தான் எடுத்த முடிவைப் பற்றி உள்ளூர வருத்தம் இருப்பதைப் பூடகமான வார்த்தைகளால் சுப்பு ஐயர் பயணத்தில் அறிமுகமாகும் சுப்புணியிடம் பேசும் போது புரிந்து கொள்ள முடிகிறது. தன்னை மணந்து கொள்ளவில்லை என்றால் சுப்புணி போன்ற இளைஞனொருவனுடன் அவள் வாழ்வு மலர்ந்திருக்கலாம் என்று அவர் நினைப்பது போலத் தோன்றகிறது. வண்டி நிற்குமிடங்களிலெல்லாம் அவர் அடிக்கடி இறங்கிச் செல்வது வெளியேயிருந்து ஒரு பார்வையாளராக தன் மனைவியையும் சுப்புணியையும் இணைத்துப் பார்க்கத்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. அழகிய நகரை அடையும் ஆவலைப் பாடும் கிழவியின் பாடலைக் காது கொடுத்துக் கேட்கும் சூழல், அடிக்கடி துாக்கத்தில் அமிழும் கெளரியின் நிலை, ஐயரின் பேச்சில் லயித்த இளைஞனைப் பாவமாகப் பார்க்கும் பார்வை எல்லாவற்றிலும் கெளரியின் நாட்டமின்மை ஒரு நுட்பமான குறிப்பாகத் தென்பட்டபடி உள்ளது. உச்சத்தில் ஐயர் இளைஞனிடம் சொல்லும் கதை முக்கியமானது. சிவன், திருமால், பிரம்மா ஆகியோரின் தொழில் பற்றியும் பிரம்மாவின் துயிலைப் பற்றியும் ரசனையோடு சொல்கிறார் ஐயர். பிரம்மா துாங்கும் போது கூட அழித்தல் தொழிலைக் கைவிடாத சிவன் முதலில் பிரம்மா உருவாக்கியதையெல்லாம் அழித்துவிட்டு பிறகு, பிரம்மா படைக்காததையும் அழிக்கத் தொடங்கி விடுகிறார். துாங்கி எழுந்த பிரம்மா விவரம் தெரியாமல் ஏற்கனவே அழிந்த ஒன்றையே சிருஷ்டி செய்யத் தொடங்கினார் என்று கதையை முடிக்கிறார். பதற்றத்துக்கும் பரிதாபத்துக்கும் இடையே தினந்தினமும் ஊசலாடித் தவிக்கும் தான் ஏற்கனவே இறந்து போன சிருஷ்டி என்று சுயஇரக்கத்துடனும் எள்ளலுடனும் தீர்மானமாகவே சொல்லி முடிக்கிறார். வண்டி நிற்குமுன் எழுந்ததால் தள்ளாடிச் சாய்ந்தவர் பக்கத்தில் இருந்த கெளரியின் அணைப்பில் அகப்பட்டுக் கீழே விழாமல் தப்பிப்பதாக இடம்பெறும் இறுதிக்காட்சியைக் கற்பனை செய்து பார்க்கும் போது இறந்த பிணமொன்று இன்னொரு பிணத்தின் தாங்குதலோடு நிற்பது போன்ற காட்சியே மனத்தில் விரிகிறது.

ஒருவர் உயிருடன் இருக்கும் போதே தான் ஏற்கனவே இறந்து போனவர் என எண்ணும்படி வாழ்வு அமைந்து போவது துரதிருஷ்டவசமானது அல்லவா ? அதிர்ஷ்டங்களுக்கு மட்டுமன்றி, துரதிருஷ்டங்களுக்கும் இடம் தந்தபடி இயங்குவதே வாழ்வின் இலக்கணம் போலும்.

***

Series Navigation