எங்ஙனம்?

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

சபீர்


எல்லை தாண்டிய
பயங்கரவாதத்தில்
இயற்கையின்
இன்னொரு அலை
ஈடுபடாத வரை…
எங்ஙனம்
இயற்கை எய்திடல் சிறப்பு
என
எதிர்பார்ப்பு
எவர்க்கும் இருக்கலாம்!

சிலருக்கு
நித்திரையிலோ
நிம்மதியான இருப்பிலோ…
இன்னும் சிலருக்கு
தாம் விரும்பும்
மடியிலோ
தம்மை விரும்புபவர்
மடியிலோ…
இறந்துபோக ஆசை!

எனினும்
வாய்ப்ப தென்னவோ
வாகன விபத்திலோ
வன்மத்தின் முடிவிலோ
நீர்க் குமிழியாகவோ
நெஞ் சடைப்போடோ
உறுப் பறுந்தோ
நோய் வதைத்தோ
ஒற்றையாகவோ
கொத்துக் கொத்தாகவோதான்.

எனக்குமுண்டு
எதிர்பார்ப்பு…
ஒரு
தொலைதூரப் பயணத்திலிருந்து
வீடு திரும்பும் பின்னிரவில்
சன்னலோர
இருக்கையில்
குட்டிக் குட்டி
மரணங்களான
தூக்கத்தை
என் மகன்
ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கும்
அக்கணம்
அவன்
தோளில் தலை சாய்த்து
நான்
நடித்து முடித்திருக்க வேண்டும்
என…!

Series Navigation

சபீர்

சபீர்