எக்ஸ்-ரே பரிசோதனைகள் இருட்பொருள் (Dark Matter) பெரும்பாலும் குளிர்ந்து இருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.

This entry is part [part not set] of 37 in the series 20030619_Issue


பிரபஞ்சத்தின் பெரும்பாலான பொருள் (Matter) நம் கண்கலால் பார்க்க முடியாதவை, நம்மால் இன்னும் புரிந்து கொள்ள முடியாதவை என்று சொன்னால் கொஞ்சம் வினோதமாகத்தான் இருக்கும். அதற்குள், இன்னும் ஒரு படி சென்று, இந்த ‘இருட்பொருள் ‘ (Dark Matter) கொஞ்சம் சூடானதாகவும், கொஞ்சம் குளிரானதாகவும் இருக்கிறது என்று அறிவியலறிஞர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

சமீபத்தில் நடந்த ஒரு பரிசோதனை, இந்த இருட்பொருளின் 80 சதவீதம் குளிர்வகையைச் சேர்ந்தது என்று காட்டுகிறது.

யாருக்கும் இந்த இருட்பொருள் என்றால் என்னவென்று தெரியாது. ஆனால் வானவியலாளர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு இருட்பொருள் இருக்கிறது என்பது தெரியும். இல்லையெனில் இந்த அகிலங்களும், பேரண்டங்களும் இப்படி இருப்பதைப் பார்க்க இயலாது. நாம் பார்க்கும் சுற்றுப்பாதைகளில் நட்சத்திரங்கள் செல்லவும் முடியாது. இது பற்றி தேற்றம் எழுதுபவர்கள் (therorists) இந்த இருட்பொருள்கள் அணுவளவுக்கும் குறைவான பொருட்கள் (subatomic) என்றும், இவை ஒன்றுடன் ஒன்று உறவு கொள்கின்றன என்றும், சாதாரண பொருள் (Normal matter) புவியீர்ப்பு விசை மூலமும் உறவு கொள்கின்றன என்றும் கூறுகிறார்கள்.

குளிர்ந்த இருட்பொருள் என்பது இருப்பதாக கருதப்படுவதற்குக் காரணம், பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் உருவான இருட்பொருள் மெதுவாக நகர்ந்து கொண்டு இருந்திருக்கவேண்டும் என்ற தேற்றம்தான்.

சந்திரா எக்ஸ்ரே தொலைநோக்கு கண்காணிப்பகம் ( NASA ‘s Chandra X-ray Observatory) சமீபத்தில் வானவியலாளர்களால் எங்கு இருட்பொருள் இருக்கிறது என்பதை ஆராயவும், எந்த பெரும் பேரண்டங்களில் இருட்பொருள் இருக்கிறது என்பதை ஆராயவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பூமியிலிருந்து சுமார் 1 பில்லியன் ஒளிவருடங்கள் தொலைவில் இருக்கும் அபெல் 2029 (Abell 2029) என்ற பேரண்டத்தில் ஆயிரக்கணக்கான அண்டங்கள் ஒரு பெரும் சூடான வாயு மண்டலத்தைச் சுற்றி இருப்பதும் அந்த வாயு மண்டலத்தில் இருக்கும் இருட்பொருளின் அளவு பல நூறு டிரில்லியன் சூரியன்களின் அளவை விட அதிகம் என்றும் சந்திரா கண்டறிந்துள்ளது. இந்த பேரண்டங்களின் நடுவே மாபெரும் பேரண்டம் ஒன்று நீள்வட்ட வடிவில் பல அண்டங்கள் சேர்ந்து உருவானது போல காணப்படுகிறது.

எக்ஸ்ரே பரிசோதனை விபரங்கள் இருட்பொருள் இந்த பேரண்டத்தின் சுற்றுபுறத்தில் குறைவாகவும் மெல்ல மெல்ல அது அதிகரித்துக்கொண்டே சென்று இந்த பேரண்டத்தின் மத்தியில் அதிகமான அளவில் இருப்பதும் தெரிகிறது. இந்த கண்டுபிடிப்பு குளிர் இருட்பொருள் பற்றிய தேற்றத்தை உருவாக்கிய கொள்கைகளோடு ஒத்துப்போகின்றது.

Series Navigation