உறக்கத்தில் பளிச்சிடும் உள்ளொளி

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

மு. சுந்தரமூர்த்தி, சொ. சங்கரபாண்டி


முதல் நாள் மாலை பிடிகொடுக்காத பிரச்சினை ஒன்றுக்கு இரவு உறங்கி விழிக்கும்போது திடாரென்று பளிச்சென பதில் கிடைக்கும் அனுபவங்கள் சில தருணங்களில் நம் எல்லோருக்கும் நிகழ்ந்திருக்கும். அதே போல சில பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், கலை-இலக்கிய வெளிப்பாடுகளுக்கும் கூட உறக்கத்தின்போது பெற்ற உள்ளொளி (insight) முக்கிய காரணமாக இருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் இதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரமும், விளக்கமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. முதன்முறையாக உறக்கம் உள்ளொளியைத் தூண்டுகிறது என்பதற்கான ஆதாரத்தை ஜெர்மனியைச் சேர்ந்த உளவியல், நரம்பியல் அறிஞர்கள் ஐவர் பரிசோதனைகள் மூலம் நிறுவியுள்ளனர். இக்கட்டுரையின் முதற்பகுதியில், உறக்கம்/கனவு மூலம் உள்ளொளி எவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில அறிவியல், தொழில் நுட்ப, இலக்கிய சிந்தனைகளுக்கு அடிப்படையாக இருந்தது என்பதையும், இரண்டாவது பகுதியில் உறக்கம் தூண்டும் உள்ளொளிக்கான ஆதாரத்தை விளக்கும் சமீபத்திய பரிசோதனை பற்றியும் காணலாம்.

பகுதி ஒன்று

1. வாலைக்கவ்வும் பாம்பும் வளைய வடிவ பென்சீனும்: மிக எளிய C6H6 (ஆறு கார்பன் அணுக்களும், ஆறு ஹைட்ரஜன் அணுக்களும் கொண்ட வேதிப்பொருள்) என்ற வேதியியல் வாய்ப்பாட்டைக் கொண்ட பென்சீன் (benzene) மூலக்கூறின் வடிமைப்பு வேதியியல் அறிஞர்களுக்கு பிடிபடாமல் இருந்தது. அது குறித்து ஆராய்ந்து வந்த ஜெர்மனியைச் சேர்ந்த ஃபிரைட்ரிச் கெகுலே (Friedrich August Kekule, 1829-1896) என்ற வேதியியலாளர் தனக்கு வந்த கனவொன்றின் மூலம் கிடைத்த உள்ளொளியின் மூலம் பென்சீனின் அறுகோண வடிவமைப்பைக் கண்டடைந்தாக சொல்லப்படும் கதையை வேதியியலை ஒரு பாடமாக படித்த பலரும் கேள்விப்பட்டிருப்போம். இந்த கதையின்படி, பென்சீனின் வடிவமைப்பு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த கெகுலே ஒரு நாளிரவு நாற்காலியில் அமர்ந்தபடி உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டார். தான் நினைத்துக்கொண்டிருந்த நீள்வடிவ மூலக்கூறுகள் கனவில், பாம்புகளாக மாறி நர்த்தனமிடக் கண்டாரம். இந்த பாம்புகளில் ஒன்று தன் வாலையேக் கவ்வியபடி வட்டச் சங்கிலியாகப் பிணைந்து அவரை பரிகசித்ததாம். அதன் பின் விழித்துக்கொண்டு அவர் அன்று இரவு முழுவதும் அமர்ந்து பென்சீன் மூலக்கூறின் வடிவமைப்பை உருவாக்குவதில் ஈடுபட்டாராம். வாலைக் கவ்விய பாம்பு வட்டவளையமாக இருந்தது போலவே, பென்சீன் மூலக்கூறும் அடுத்தடுத்த ஒற்றை, இரட்டை பிணைப்புகளாலான வளைய வடிவம் கொண்டதென முடிவு செய்தாராம். அதுவே வளைய வடிவ மூலக்கூறுகளின் (aromatic molecules) வகைக்கான அடித்தளமாக அமைந்தது.

2. ஆட்டோ லோவியின் நோபெல் பரிசுக்கு வழிகோலிய உள்ளொளி: உடலில் நரம்புச் சமிக்ஞைகள் வேதிப்பொருள் கடத்தல் மூலமாகவே நிகழ்கின்றன என்பதை முதலில் உணர்ந்து பிற்காலத்தில் அதை பரிசோதனையொன்றின் மூலம் மெய்ப்பித்த ஆட்டோ லோவி (Otto Loewi, 1873-1961) என்ற நோபெல் பரிசு பெற்ற அறிவியலாளர் தன் பரிசோதனைக்கான உள்ளொளி இரவு உறக்கத்துக்கிடையே கிடைத்தாக தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். 1921ம் ஆண்டில் ஈஸ்டர் ஞாயிறின் முந்தைய இரவில் உறக்கத்துக்கிடையே விழித்து, விளக்கை ஏற்றி ஒரு துண்டுத் தாளில் சில குறிப்புகளை எழுதினார். பின் உறங்கி விட்டார். மீண்டும் ஆறு மணிக்கு எழுந்தபோது ஏதோ முக்கியமான குறிப்பொன்றை நள்ளிரவில் எழுதிவைத்தது நினைவுக்கு வந்தது. ஆனால் அந்த கிறுக்கலை அவரால் அப்போது புரிந்துகொள்ள இயலவில்லை. அடுத்த நாள் இரவு மூன்று மணிக்கு உறக்கம் கலைந்து மீண்டும் அந்த எண்ணம் வந்தது. உடலில் வேதிப்பொருள் கடத்துதல் குறித்து அவரே 17 ஆண்டுகளுக்கு முன் தெரிவித்திருந்த கருதுகோளை சரிபார்ப்பதற்கான சோதனை வடிவமே அவர் முந்தைய நாளிரவு எழுதி வைத்த குறிப்புகள் என்பது தெளிந்தது. உடனடியாக எழுந்து ஆய்வுக்கூடத்திற்கு சென்று தவளையின் இதயத்தை வைத்து எளிய பரிசோதனையொன்றை நிகழ்த்தினார். இந்த ஆய்வின் முடிவின்படி நரம்புகள் நேரடியாக இதயத்தைக் பாதிப்பதில்லை. மாறாக நரம்புகளின் நுனியிலிருந்து வெளிப்படும் வேதிப்பொருட்களே இதயத்தில் நிகழும் மாற்றங்களுக்குக் காரணம் என்பதை நிரூபித்து வேதிச்செலுத்துகையின் (chemical transmission) மூலம் நிகழும் சமிக்ஞை பரிமாற்றங்களைக் குறித்த பெரும் ஆராய்ச்சிகளுக்கு வித்திட்டார். இந்த அரிய கண்டுபிடிப்புக்காக இவருக்கு நோபெல் 1936ல் நோபெல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், அடுத்த இரண்டாண்டுகளிலேயே, இவரை ஜெர்மனியின் நாஜிகள் சித்திரவதைப்படுத்தி, பரிசுப் பணத்தையும் பறித்துக்கொண்டு விரட்டியடிக்க, முதலில் இங்கிலாந்தில் அடைக்கலம் புகுந்து, பின் அமெரிக்கவுக்கு குடியேறினார்.

3. தனிம வரிசை அட்டவணையை உருவாக்கிய மென்டலிஃப் இன் கனவு: இரவு உறக்கத்தின் மூலம் நிகழ்ந்த இன்னொரு முக்கியமான கண்டுபிடிப்பு, நவீன வேதியியலின் ஆதாரமாக விளங்கும் தனிம வரிசை அட்டவணை (Periodic table). ரஷ்யாவின் புனிதர் பீட்டர்ஸ்பர்க் (St Petersburg) பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த 35 வயது நிரம்பிய திமித்ரி மென்டெலிஃப் (Dimitry Ivanovich Mendeleyev, 1834-1907) 1869ம் ஆண்டு பிப்ரவரியில் வேதியியல் துறையின் முக்கியமான புதிர் ஒன்றுக்கு விடை காண்பதில் ஈடுபட்டிருந்தார். அப்போது அறியப்பட்டிருந்த 63 தனிமங்களை வரிசைப்படுத்துவதற்கான அடிப்படை விதி என்ன என்பதே அந்த புதிர். தனிமங்களை அவற்றின் பண்புகளைக் கொண்டு வகைப்படுத்தவும், அல்லது அவற்றின் அணு நிறைகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தவும் முடியும் என்பது ஏற்கனவே அறியப்பட்டிருந்தது. ஆனால் தனிமங்களின் பண்புகளுக்கும், அவற்றின் அணு நிறைகளுக்கும் இடையே உள்ள தொடர்பு மர்மமாகவே இருந்தது. ஒரு நாள் இரவு இதை விளக்கும் முயற்சிகளுக்கிடையில் மென்டெலிஃப் அயர்ந்து உறங்கி விட்டார். உறங்குவதற்கு முன் சில அட்டைகளில் பல்வேறு தனிமங்களின் குறியீடுகள், அணு நிறைகள், போன்றவற்றை எழுதிவைத்திருந்தார். தொடர்ந்து வந்த கனவில் அனைத்து தனிமங்களும் சரியான இடங்களில் பொருந்தியபடி ஒரு அட்டவணைத் தோன்றுவதைக் கண்டார். உடனடியாக விழித்து ஒரு தாளில் தான் கனவில் கண்டவற்றை எழுதி வைத்தார்.அதன்படி வெவ்வேறு வகையான தனிமங்கள் அவற்றின் அணு நிறை அடிப்படையிலும், பண்புகளின் அடிப்படையிலும் ஒரு தாள வரிசைப்படி அடங்குவது கண்டுபிடித்தார். தனிமங்களை அவற்றின் அணு நிறைகளின் ஏறு வரிசையில் அமைக்கும்போது ஒவ்வொரு எட்டாவது தனிமமும் ஒரே பண்பைப் பெற்றிருக்கும் என்ற பேருண்மையே அது. இந்த அட்டவணையே இன்று வேதியியல் துறையிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத தனிம வரிசையின் அடிப்படையாகும். மென்டலிஃப் இன் இந்த கண்டுபிடிப்பு ஏற்கனவே அறியப்பட்ட தனிமங்களை வரிசைப்படுத்துவது மட்டுமின்றி, உடனடியாக பல புதிய தனிமங்களை ஊகித்துணர்ந்து பிற்காலத்தில் அவற்றின் கண்டுபிடிப்புகளுக்கும் வழிகோலி வேதியியலில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

4. இராமனுஜனின் உறக்கத்தில் உதித்த கணிதச் சமன்பாடுகள்: புகழ்பெற்ற இந்திய கணிதமேதை இராமானுஜன் (1887-1920) தனது கணித ஆராய்ச்சிகளுக்குக் கிடைத்த உந்துதல்களும், உள்ளொளியும் பெரும்பாலும் கனவிலேயே நிகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். தனது குலதெய்வமான நாமகிரி கனவில் தோன்றி கணிதச் சமன்பாடுகளை தெரிவிப்பதும், உறக்கத்திலிருந்து விழித்தபின் இராமானுஜன் அச்சமன்பாடுகளை சரிபார்ப்பதும் அவருடைய வாழ்நாள் முழுவதும் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. இதற்கு உதாரணமாக, நீள்வட்டத் தொகைகளை (elliptic integrals) எவ்வாறு கண்டுணர்ந்தார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். ஒரு நாள் உறங்கிக்கொண்டிருந்தபோது இரத்தத்தினால் உருவான ஒரு சிவப்புத்திரையொன்றைக் கண்டதாகவும், அதில் ஒரு கை வந்து நீள்வட்டமொன்றை வரைந்து, அவ்வட்டத்துக்குள் நீள்வட்ட தொகைகளை எழுதியதாகவும், உறங்கி எழுந்தவுடன் பயனுள்ள அவற்றைத் தான் தன்னுடைய ஏட்டில் எழுதிக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

5. கனவில் தோன்றிய ஈட்டி தையல் ஊசியாக உருவான கதை: ‘தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளிலேயே மிகப் பயனுள்ள ஒன்று தையல் இயந்திரம் ‘ என்றார் மகாத்மா காந்தி. இத்தகைய தையல் இயந்திரத்தை அமெரிக்க நாட்டின் கனெக்டிகட் மாநிலத்தைச் சேர்ந்த எலியாஸ் ஹோவே (Elias Howe, 1819-1867) எப்படிக் கண்டுபிடித்தார் தெரியுமா ? கனவில் தோன்றிய உள்ளொளிதான். பல மாதங்களாக தையல் இயந்திரத்தை வடிவமைத்துக் கொண்டிருந்த ஹோவேவுக்கு, அதன் முக்கிய உறுப்பான ஊசியை எப்படி வடிப்பது என்று புலப்படவில்லை. பல வடிவங்களில் முயற்சித்து பயனில்லாமல் நொந்து போயிருந்த அவரது ‘தையல் சிக்கல் ‘ கனவிலும் வந்து துன்புறுத்தியது. ஒரு நாளிரவு அவர் கண்ட பயங்கரக் கனவில், தையல் இயந்திரத்தை முடிக்காத குற்றத்திற்காக ஒரு நாட்டின் மன்னன் கொலைத்தண்டனை விதிக்கிறான். அவரை இழுத்து வந்த சேவகர்கள் அவருடைய தலையை நோக்கி இரு பக்கமும் ஈட்டிகளை வைத்து நெருங்க ஆரம்பிக்கின்றனர். அந்த இரண்டு ஈட்டி முனைகளிலும் துளைகளைக் கண்டவுடன் ஹோவேவுக்கு பொறி தட்டியது. உடனே உறக்கத்திலிருந்து எழுந்து பூட்டித்தைக்கும் (lock-stitch) இரட்டைத் தையல் ஊசிகளை வடிவமைத்தார். அதன் ஒரு ஊசி துணியின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு நூலைச் செலுத்தி ஒரு வளைவை (loop) உண்டு பண்ணி திரும்பி வரும். அடுத்த பக்கத்திலிருக்கும் இன்னொரு ஊசி அந்த வளைவின் வழியே இன்னொரு நூலைச் செலுத்திப் பூட்டி விடும்.

6. கனவில் கண்டுபிடிக்கப்பட்ட இலக்கியப் புதையல்: புதையல் தீவு (Treasure Island) மற்றும் ஜேக்கல் அன்ட் ஹைட்டின் வினோத வழக்கு (The Strange Case of Dr. Jekyll and Mr. Hyde) போன்ற பிரபல மற்றும் வெற்றிகரமான கதைகளை எழுதிய இராபர்ட் ஸ்டாவன்ஸன் (Robert Stevenson, 1850-1894), ஜேக்கல் அன்ட் ஹைட் கதைக்கான கருவைக் கண்டுபிடித்தது அவருடைய கனவில்தான். கனவில் தோன்றிய ஒரு மனிதன் எதோ வெள்ளை நிறக்கலவையை அருந்தியவுடன் கெட்ட குணங்கொண்ட மனிதனாக மாற்றமடைகிறான். அடுத்த நாள் காலை ஸ்டாவன்ஸன் எழுந்து எழுத ஆரம்பித்து விட்டார். மூன்றே நாட்களில் முப்பதாயிரம் வார்த்தைகள் கொண்ட ஒரு நூலை எழுதித் தள்ளினார். அது அவருடைய மனைவிக்குப் பிடிக்காததால் நெருப்பில் எறிந்து விட்டார். இருப்பினும் அந்தக் கருவை விட்டு விட மனதில்லை. அடுத்த ஆறு நாட்களில் அறுபத்தி நாலாயிரம் வார்த்தைகள் கொண்ட இன்னொரு நூலை முடிக்கிறார். அந்த நூல்தான் ஆறே மாதங்களுக்குள் 40000 பிரதிகள் விற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பகுதி இரண்டு:

இவைபோன்ற கதைகள் பலவற்றைக் கேட்டிருப்பினும், ‘உறக்கத்தில் பளிச்சிடும் உள்ளொளி ‘ என்ற கருதுகோள் ஒரு கறாரான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில்லை. முதன்முறையாக, ஜெர்மனியில் உளவியல், நரம்பியல் நிபுணர்கள் ஐவர் (Ullrich et al, 2004) அண்மையில் மனிதர்களை வைத்து நிகழ்த்திய நூதனமான பரிசோதனையின் மூலம் உறக்கம் காரணமாக பெறக்கூடிய உள்ளொளிக்கு சான்று கிடைத்துள்ளது. இந்த ஆய்வின் முடிபுகள் சில வாரங்களுக்கு முன் ஆங்கில அறிவியல் இதழான Nature இல் வெளியிடப்பட்டது. அச்சோதனையை விளக்கு முன்னர், ‘உள்ளொளி ‘ என்ற கருத்தாக்கத்தை வரையறுத்துக் கொள்வது நல்லது. உள்ளொளி என்பது மனநிலை மாற்றியமைக்கப்படுவதின் விளைவாக திடாரெனக் கிட்டும் வெளிப்படையான அறிவாற்றல், ஒருவருடைய நடத்தையில் நிகழ்த்துகின்ற தரப்பூர்வமான மாற்றம் எனலாம். உறக்கம் சமீபத்திய நினைவுகளை மனத்தில் நிலைப்படுத்துவதோடு, அந்த நினைவுகளை மாற்றியும் அமைத்து உள்ளொளி பிறக்க வகை செய்யும் என்பதே இந்த ஆய்வின் கருதுகோள்.

இந்த ஆய்வாளர்கள் நடத்திய பரிசோதனையில் பங்கேற்றவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பணி தரப்பட்டது. இந்தப் பணி படம் 1 இல் கொடுத்துள்ளது போன்ற சில கணக்குகளை செய்வதாகும். படத்தில் காட்டியுள்ளபடி, கொடுக்கப்பட்ட ஒரு எட்டிலக்க எண் கோர்வையை (string of eight digits) அடிப்படையாக வைத்து புதிய ஏழிலக்க எண் கோர்வையொன்றை உருவாக்க வேண்டும். புதிய எண்கோர்வையின் கடைசி இலக்கமே கணக்கிற்கான விடையாகும். இந்த புதிய எண்கோர்வையை உருவாக்குவதற்கு படத்தின் அடிக்குறிப்பில் கண்டுள்ளபடி இரண்டு விதிகள் கொடுக்கப்பட்டன. இந்த விதிகளின்படி, ஒவ்வொன்றாக ஏழு அடிகளையும் செய்தபின்னரே புதிய எண்கோர்வையின் கடைசி இலக்கத்தைக் கண்டுபிடிக்க இயலும். ஆனால் முழுக்கணக்கையும் படிப்படியாக செய்யாமல், மூன்று அடியிலேயே கடைசி இலக்கத்தைக் கண்டுபிடிக்கும் குறுக்கு வழியொன்று இந்த புதிருக்குள் மறைந்திருக்கிறது. ஆனால் இந்த உண்மை இப்பரிசோனையில் பங்கேற்றவர்களுக்கு சொல்லப்படவில்லை. இந்த மூன்றாவது விதியை கண்டுபிடித்தால் புதிரை சீக்கிரமாக விடுவித்து விடையை சொல்லிவிடலாம் (இந்த குறுக்கு வழியும் படம் 1 இன் அடிக்குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது). இந்த குறுக்கு வழியை கண்டுபிடிப்பதே உள்ளொளி பெற்றதற்கான சான்றாகக் கருதப்பட்டது.

பங்கேற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் முதலில் வெவ்வேறு எண் கோர்வைகளைக் கொண்ட மூன்று புதிர்கள் கொடுத்து பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கு பிறகு எட்டு மணி நேர இடைவெளி கொடுக்கப்பட்டது. இந்த எட்டு மணி நேர இடைவெளியில் 22 பேர் கொண்ட ஒரு குழுவினர் உறங்க அனுமதிக்கப்பட்டனர். இன்னும் இரண்டு குழுவினரில் (ஒவ்வொன்றிலும் 22 பேர்), ஒரு குழுவினர் பகலிலும், மற்ற குழு இரவிலுமாக எட்டு மணி நேரம் விழித்திருந்தனர். இந்த எட்டு மணி நேர இடைவெளிக்குப் பிறகு, ஒவ்வொருவருக்கும் புதிதாக தலா பத்து எண்கோர்வைகள் கொடுக்கப்பட்டு அவற்றின் விடைகளை கண்டுபிடிக்கப் பணிக்கப்பட்டனர். இதில், இரவு எட்டு மணி நேரம் உறங்கிய குழுவில் 60 விழுக்காட்டினர் மறைந்திருந்த விதியை தாமாக கண்டுபிடித்து, இறுதி விடைகளை வெகு வேகமாக கண்டுபிடித்துச் சொன்னார்கள். விழித்திருந்த இரண்டு குழுக்களிலும் 22 விழுக்காட்டினர் மட்டுமே மறைக்கப்பட்ட விதியை உணர்ந்து வேகமாக விடைகளை கண்டுபிடித்தனர். மற்றவர்கள் அனைவரும் முழுமையாக ஏழு அடிகளையும் கடந்த பின்னரே இறுதி விடைகளைச் சொன்னார்கள். இந்த எண்ணிக்கைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இரவு உறங்கியவர்களில் பகலிலோ அல்லது இரவிலோ விழித்திருந்தவர்களைவிட மும்மடங்கு அதிகமானோர் குறுக்குவழியில் விடைகாணும் விதியை கண்டறிந்தனர். ஆனால் இரவில் விழித்திருந்தவர்கள், பகலில் விழித்திருந்தவர்கள் என்ற இரு வேறு குழுவினர்களுக்குள் எந்த வேறுபாடும் தெரியவில்லை.

இந்த மிகப்பெரிய வேறுபாட்டின் பின்னணியில் உறக்கம்-உறக்கமின்மை என்ற காரணம் என்பது வெளிப்படை. இருப்பினும், அதன் அடிப்படை என்ன என்பதை தெளிவுபடுத்த இன்னொரு துணைப் பரிசோதனையையும் செய்தனர். உண்மையான பாதிப்பு உறக்கத்தின் முன் அளிக்கப்பட்ட பயிற்சி மூலம் மூளையில் பதிந்த நினைவுக் குறிப்புகளா அல்லது நல்ல உறக்கத்திற்குப் பிறகோ அல்லது முன்போ இருக்கும் தெளிந்த மன நிலையா என்பதை கண்டறிவதே இதன் நோக்கம். இதன்படி, இன்னும் இரு குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்விரு குழுவினருக்கும் முன்பயிற்சி எதுவும் கொடுக்கப்படாமல் ஒரேயடியாக தலா 13 எண் கோர்வைகள் கொடுக்கப்பட்டன. ஒரு குழுவினர் இரவு உறங்கி விழித்த பிறகு காலை 7 மணிக்கு சோதிக்கப்பட்டனர். இன்னொரு குழுவினர் பகல் முழுதும் விழித்திருந்தபின் மாலை 7 மணிக்கு சோதிக்கப்பட்டனர். இவ்விரு குழுக்களிலும் 25 விழுக்காட்டினர் குறுக்குவழி விதியைக் கண்டுபிடித்து இறுதி விடைகளை வேகமாகச் சொன்னார்கள். இந்த முடிபுகளும் முன்பயிற்சி பெற்றும் உறங்காமலிருந்த மற்ற இரண்டு குழுக்களின் முடிபுகளை ஒத்திருப்பதைக் காணலாம்.

அனைத்துக் குழுக்களிலும், மறைந்திருந்த குறுக்கு வழியைக் உணராததால் துரிதமாக விடை காணாதவர்கள், தொடர்ந்து ஏழு அடிகளையும் செய்தே இறுதி விடைகளைக் கண்டுபிடித்தனர். ஆகவே, மறைந்திருந்த விதியை தாமாகக் கண்டுணர்ந்தவர்கள் உள்ளொளி பெற்றவர்களாகவும், கொடுக்கப்பட்ட விதிகளை மட்டும் பயன்படுத்திய மற்றவர்கள் உள்ளொளி பெறாதவர்களாகவும் கருதப்பட்டனர்.

இந்த பரிசோதனையில் பங்கு பெற்றவர்கள், நினைவுத் தூண்டல்-எதிர்வினை புரிதல் என்கிற செயல்பாடுகளைக் கற்கும் பணியைச் செய்தனர். இப்பணியை தொடர்ந்து செய்யும்போது பயிற்சியின் காரணமாக, எதிர்வினை புரிவதற்கான வேகம் படிப்படியாக கூடிக்கொண்டே போகும். ஆனால், மறைந்து கிடக்கும் பூடகமான விதியை உணர்ந்து உள்ளொளி பெறும்போதோ எதிர்வினை புரிவதில் திடார் பாய்ச்சலும் நிகழக்கூடும். ஆகவே, இதில் பங்கேற்றவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் அவர்களுக்கு உள்ளொளி கிட்டும் சரியான தருணத்தை கணிக்க முடிந்தது. இவ்வாறு உள்ளொளி பெற்றவர்களின் மனம், விதிகளின்படி விடைகாணும் ஒற்றைவழிப் பாதையில் தொடர்ந்து செல்லாமல், எண்கோர்வையின் மற்ற பண்புகளை ஆராயும் வேலையையும் செய்ததாலேயே சொல்லப்படாத விதியையும் கண்டுணர முடிந்தது. இதற்கு உறக்கம் பெரிதும் உறுதுணையாக இருப்பது புலனாகிறது. இந்த பரிசோதனைகளின் முடிபுகளை வைத்து, புதிதாக மனதில் பதிந்த நினைவுகள் மாற்றியமைக்கப்பட்டு மறைந்துக் கிடக்கும் உண்மைகளை உணரும் உள்ளொளி பெற உறக்கம் வகை செய்கிறது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

பரிசோதனை:

மேலே உள்ள படத்தில் ‘1 ‘ ‘4 ‘ ‘9 ‘ எண்களால் ஆன எட்டிலக்க எண்கோர்வை கொடுக்கப்பட்டுள்ளது. கீழ்காணும் இரண்டு விதிகளை பயன்படுத்தி இந்த எண்கோவையை மாற்றியமைத்து புதிய ஏழிலக்க எண்கோர்வையை உருவாக்கவேண்டும். இந்த புதிய எண்கோர்வையின் கடைசி (ஏழாவது) இலக்கத்தை சரியாகக் கண்டுபிடித்துக் சொல்வதே இறுதி விடையாக கருதப்படும்.

விதி 1 (ஒரே எண் விதி): இரண்டு இலக்கங்களும் ஒரே எண்ணாக இருந்தால் அதே எண்ணை புதிய கோர்வையிலும் பயன்படுத்தவேண்டும். உதாரணமாக, முதல் அடியில் இரண்டு எண்களும் ‘1 ‘ ஆகவே இருப்பதால் புதிய கோர்வையில் ‘1 ‘ பயன்படுத்தப்பட்டுள்ளது.

விதி 2 (வெவ்வேறு எண் விதி): இரண்டு இலக்கங்களும் வெவ்வெறு எண்களைக் கொண்டிருந்தால், அந்த எண்களைத் தவிர்த்த மூன்றாவது எண்ணை பயன்படுத்தவேண்டும். உதாரணமாக இரண்டாவது அடியில், ‘1 ‘ம், ‘4 ‘ம் இருப்பதால், ‘9 ‘ புதிய இலக்கமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உதாரணத்தில் இப்படி ஏழு அடிகள் செய்தபின்னர் கடைசி இலக்கமாக கிடைத்துள்ள ‘9 ‘ தான் இறுதி விடை.

நேர்வழி: இந்த விடையை ஒவ்வொரு கணக்கிலும், ஏழு அடிகளையும் செய்தபின்னரே கடைசி இலக்கத்தைப் பெறுவது நேர்வழி. இது பயிற்சி மூலம் கண்டடையப்படுவது

குறுக்குவழி: ஒரிரண்டு கணக்குகளை நேர்வழியில் செய்தபின்னர் புதிய கோர்வைகளை சோதித்துப் பார்த்தால் இந்த இலக்கங்களுக்குள் ஒரு ஒற்றுமை மறைந்திருப்பதைக் காணலாம். புதிய கோர்வையில் முதல் இலக்கத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால் மற்ற ஆறு இலக்கங்கள் ‘கண்ணாடி பிம்ப ‘ மாக இருப்பதைக் காணலாம். அதாவது கடைசி மூன்று இலக்கங்களும் முதல் மூன்று இலக்கங்களை எதிரொளிக்கின்றன. இந்த உண்மைத் தெரிந்தவுடன் அடுத்து எல்லாக் கணக்குகளுக்கும் இரண்டாவது இலக்கத்தைக் கண்டுபிடித்தவுடனேயே சொல்லிவிடலாம். இது உள்ளொளி மூலம் கண்டடையப்படுவது.

முடிவுரை:

உறக்கம் காரணமாக உள்ளொளி பெறும் சாத்தியம் அதிகம் என்பதை இந்த ஆராய்ச்சி உறுதிப்படுத்தினாலும், அதற்கு சரியான அறிவியல் விளக்கம் இன்னும் கிடைக்கவில்லை. ‘இந்த ஆராய்ச்சி முடிவு கல்விக்கூடங்கள், தொழிலதிபர்கள், அரசு நிறுவனங்கள் போன்ற அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை ‘ என்கின்றனர் பிரான்ஸ் நாட்டின் லீஜ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த உளவியல் அறிஞர்களான பியரி மேக்கிட்டும் (Pierre Maquet) பெர்ரின் ரூபியும் (Perrine Ruby). ‘உறக்கம் மூளைச் செயல்பாட்டில் பெரியதோர் பங்கு வகிக்கிறது என்பதே இந்த ஆராய்ச்சியினால் தெளிவாகியிருக்கும் உண்மை. எனவே, போதுமான அளவு உறங்க வேண்டியதன் அவசியத்தை — குறிப்பாக உறக்கம் குறைந்து வரும் தற்காலச் சூழலில் — நாம் மதிக்க வேண்டும் ‘ என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்தியக் கலாச்சாரத்திலும் காலங்காலமாக நம்முடைய தொன்மங்களும், இலக்கியங்களும் போதுமான அளவு உறங்க வேண்டியதன் அவசியத்தையும், இரவில் உறங்கும் நேரத்தையும், அதிகாலையில் எழும் நேரத்தையும் வற்புறுத்தி வந்திருக்கின்றன. ‘காலை எழுந்தவுடன் படிப்பு ‘, ‘வைகறைத் துயில் எழு ‘, ‘அதிகாலை எழுந்து படிப்பவர்களின் நாக்கில் சரஸ்வதி குடியேறுவாள் ‘ என்பது போன்ற போதனைகளின் பின்னணியில் கூட உறக்கம் தரக்கூடிய பலன்கள் உணரப்பட்டிருப்பது புரிகிறது. காலையில் எழுந்து புத்துணர்வோடு பள்ளிப்பாடங்களைப் படித்த பொழுது மிக விரைவாக மனப்பாடம் செய்ய முடிந்ததையும், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை எளிதாக புரிந்து கொண்டுள்ளதையும் நாம் அறிவோம். ஆனால் நவீன உலகில் இரவு நீண்ட நேரம் விழித்து தொலைகாட்சி பார்ப்பது, இணையதளங்களில் உலாவுதல் போன்ற பழக்கங்கள் பெற்றோர்களிடமும், பிள்ளைகளிடமும் உறக்கத்தை குறைக்கும் ஆபத்து இருக்கிறது. இந்த புதிய தொழில்நுட்பங்கள் தகவல் அடிப்படையிலான அறிவைப் பெருக்கும் என்பது உண்மை. ஆனால் தூக்கம் கெட்டு விழித்திருப்பது சுயமான படைப்பாற்றலை வெகுவாக பாதிக்கும் என்பதையும் உணரவேண்டும். ஆகவே, குழந்தைகளை இரவில் சீக்கிரம் நன்றாகத் தூங்க வைத்து அதிகாலையில் எழச்செய்து படிக்க வைப்பது அவர்களின் படைப்பாற்றல் திறனை (creativity) வளர்க்க உதவும் என்பதை இவ்வாராய்ச்சி உணர்த்துகின்றது.

பின்குறிப்பு: ‘நிறைவேறாத ஆசைகளே கனவுகளாக வெளிப்படுகின்றன ‘ என்னும் சிக்மன்ட் ஃப்ராய்டின் விளக்கம் நவீன உளவியல், நரம்பியல் துறை ஆராச்சிகளில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஃப்ராய்டின் ‘Interpretation of Dreams ‘ என்னும் புகழ்பெற்ற நூலை அடிப்படையாக வைத்து, திண்ணை வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான நாகூர் ரூமி (பேராசிரியர் முகமது ரஃபி) ‘கனவுகளின் விளக்கம் – சிக்மன்ட் ஃப்ராய்டு ‘ என்ற அரிய நூலை தமிழில் எழுதியுள்ளார். இது அவருடைய இணையதளத்திலும் படிக்கக் கிடைக்கிறது (http://abedheen.tripod.com/Freud/Freudmain.html)

இந்த கட்டுரைக்கு ஆதாரமாக இருந்த கட்டுரைகள்

1. Ullrich Wagner, Steffenn Gais, Hilde Haider, Rolf Verleger & Jan Born (2004). Sleep inspires insight. Nature. Vol. 427, pp352-354.

2. Pierre Maquet and Perrine Ruby (2004). Insight and the sleep committee. Nature. Vol. 427, pp304-305

மற்றும் பல்வேறு இணைய தளங்கள்

—-

m.sundaramoorthy@vanderbilt.edu

sankarpost@hotmail.com

Series Navigation