உயிர் பிழைத்திருப்பதற்காக..

This entry is part [part not set] of 32 in the series 20100711_Issue

சோ.சுப்புராஜ்


..
வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து
வியாபாரம் செய்யும் கூடைக்காரிகளிடம்
விருப்பத்துடன் வாங்குங்கள்
பேரம் பேசியேனும்
விலை கொஞ்சம் அதிகமென்றாலும்……!
*** *** ***
கையேந்தும் மூன்றாம் பாலினத்திற்கு
காசு போடுங்கள் மறுக்காமல்
அவர்களின்
உழைப்பை மறுதலித்த சமூகத்தின்
அங்கம் தானே நாமெல்லாம்…..!
*** *** ***
இரயில் வண்டியின் இரைச்சலையும் மீறி
கூவிக் கூவி விற்கும்
கண்ணொளி இல்லாதவர்களிடம்
கனிவுடன் ஏதாவது
வாங்குங்கள் அவ்வப்போது……..
*** *** ***

வழிபாட்டுத் தலங்களுக்குப் போனால்
கடவுளுக்குக் காணிக்கை போடாவிட்டாலும்
வாசலில் காத்திருக்கும்
பிச்சைக் காரர்களுக்கு
ஏதாவது கொடுக்க மறக்காதீர்கள்…..!
*** *** ***
சின்ன இரும்பு வளையத்துக்குள்
உடலைக் குறுக்கி ஒடித்து வளைத்து
சிரமப்பட்டு நுழைந்து
வெளியேறும் சிறுமியும்
கொட்டடித்து குட்டிக்கரணம் போட்டு
வில்லாய் உடல் வளைத்தும்
விளையாட்டுக்காட்டும் சிறுவனும்
தட்டேந்தி வரும்போது
தவறாமல் காசு போடுங்கள்…..!
*** *** ***
சின்னப் பிள்ளைகளின்
இரயில் விளையாட்டைப் போல்
ஒருவர் கொடுக்கை
ஒருவர் பிடித்தபடி
நெரிசலினூடே பாடியபடிக்
கடந்து போகும் குருடர்களுக்கு
கண்டிப்பாய் கொடுங்கள் ஏதாவது…..!
*** *** ***
இவர்களெல்லாம்
உலக முதலாளிகளின் வரிசையில்
முதலிடம் பிடித்துவிடப் போவதில்லை;
இன்னும் கொஞ்ச நாள்
உயிர்த்திருக்க அவர்களுக்கு
உதவலாம் உங்கள் பணம்…..!

 சோ.சுப்புராஜ்

Series Navigationஇவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம் >>

சோ.சுப்புராஜ்

சோ.சுப்புராஜ்