உயிர்த்தெழுந்த குரல்

This entry is part [part not set] of 22 in the series 20050819_Issue

சுகுமாரன்


—-

பெண்ணியக் கருத்துக்களின் பரவல் மூலம் சமகால மலையாள இலக்கியத்தில்

மீட்டெடுக்கப் பட்ட எழுத்தாளர் கே.சரஸ்வதியம்மா. 1975 ஆம் ஆண்டு அவர் மறைந்தார்.

அவரோடு அவரது படைப்புகளும் இலக்கிய மறதியில் புதைந்தன. பெண்ணின் சுயத்தை

முன்னிருத்தும் பார்வைகள் வலுப்பெற ஆரம்பித்த அண்மைக் காலத்தில் சரஸ்வதியம்மாவின்

வாழ்வும் இலக்கியமும் மறு பிறப்பெடுத்துள்ளன. அவரது படைப்புகள் கண்டெடுத்துத்

தொகுக்கப்பட்டன. அவரது சுதந்திரமான நிலைப்பாடு பெண்ணிய இலக்கியச் சிந்தனையின்

தொடக்கப் புள்ளியாகப் போற்றப்படுகிறது.

மலையாளப் புனைகதைக்களம் பக்குவப்பட்டு சிறந்த முன்னோடிப் படைப்புகள் உருவாகி

வந்த கால அளவில் எழுத ஆரம்பித்தவர் சரஸ்வதியம்மா. தொடங்கிய சுருக்கிலேயே

அன்றைய முன்னணிப் படைப்பாளிகளுடன் ஒப்பிடக்கூடிய தரத்திலும் எண்ணிக்கையிலும்

எழுதியவர். அவரது முதல் சிறுகதையான ‘சீதாபவனம் ‘ 1938 இல் ‘மாத்ருபூமி ‘ இதழில்

வெளியானது. ஆனால் அவரது படைப்பாக்க முயற்சிகள் தீவிரமடையத் தொடங்கியது

1942 முதல்தான். பதினைந்து பதினாறு ஆண்டுகள் தொடர்ந்து எழுதினார். ஐம்பதுகளின்

இறுதியில் அவர் இலக்கிய ஈடுபாடுகளிலிருந்து பின்வாங்கி யாரும் அறியாத மெளனத்தில்

அடைக்கலம் புகுந்தார். அதற்குள் பன்னிரண்டு தொகுப்புகளாக வெளிவந்த சுமார் தொண்ணூறு

சிறுகதைகள், ஒரு நாவல், ஒரு நாடகம், ஒரு கட்டுரைத் தொகுப்பு ஆகியன வெளியாகி

இருந்தன. ஏறத்தாழ ஆயிரம் பக்கங்களுக்குள் அடங்கிவிடும் இந்தப் படைப்பாக்கம் மூலம்

தனக்கு சொந்தமான ஓரிடத்தை சரஸ்வதியம்மாவால் உருவாக்கிக்கொள்ள முடிந்தது. மிகச்

சில சிறுகதைகளைத் தவிர அவரது படைப்புகளின் பொதுமையம் ‘சுதந்திர வாஞ்சையுள்ள

பெண் ‘ என்பதாகவே அமைந்திருந்தது. சமூகத்தில் ஆண்களுக்குச் சமமாகச் செயல்படவும்

வாழவும் பெண்களால் இயலாமற் போவது ஏன் ? என்ற கேள்விக்கான பதில்களைத் தேடுவதே

அவரது எழுத்தின் நோக்கமாகவிருந்தது. இந்த பதில்கள் பெண் மனதின் சீற்றமாகவும்

துக்கமாகவும் ஏமாற்றமாகவும் வஞ்சனையாகவும் புலம்பலாகவும் தந்திரமாகவும் சாதுரியமாகவும்

மகிழ்ச்சியாகவும் வெவ்வேறு கோணங்களில் படர்ந்தன. ஆனால் இவற்றுக்குக் கிடைத்த

சமகால எதிர்வினை ஒற்றை வாக்கியமாக இருந்தது – ‘இவையெல்லாம் ஆண் எதிர்ப்புக்

கதைகள் ‘.

‘ ‘என்னுடைய கதைகளை ஆண்விரோதக் கதைகள் என்று சொல்லக் கேட்டபோது உண்மையில்

அதிர்ச்சியேற்பட்டது. அதுமட்டுமல்ல, கதைகளில் சிறிதாவது ஆண் எதிர்ப்பு இருப்பதாக

எனக்குத் தெரியாமலிருந்தது. பதினேழாம் வயதில் தகப்பனார் இறந்துபோனார். அப்பாவின்

நிழலில்லாமல் வெளியுலகத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. வெளியிலிறங்கி ஆண்கள் நிறைந்த

உலகத்தில் வாழத் தொடங்கியபோதுதான் பெண்ணாகப் பிறந்ததன் வரையறைகள் புரியத்

தொடங்கின.அன்று இருந்தது முற்றிலும் ஆண்களுக்குரிய உலகம். ஆண்கள் என்னவேண்டுமா

னாலும் செய்யலாம். பெண்களுக்கு ஒன்றும் கூடாது. ஆணின் அதிகாரத்தை

ஒப்புக்கொண்டால்தான் வாழமுடியும் என்ற நிலை. பெண் எப்போதும் தாழ்ந்த படியிலேயே

நின்றுகொள்ள வேண்டும். இதை ஒப்புக்கொள்ள நான் தயாராக இல்லை. இதைத் தடுக்க

மட்டுமல்ல, எதிர்க்கவும் ஆயத்தமாக இருந்தேன். ஆண் எதிர்ப்பு என்று குறிப்பிடக் காரணம்

இதுவாக இருக்கலாம் ‘ ‘ என்று சரஸ்வதியம்மா முன்வைத்த மறுமொழி அவரது இலக்கியப்

பார்வைமட்டுமல்ல, வாழ்க்கையின் வாக்குமூலமும் கூட.

திருவனந்தபுரம் நகரத்தின் எல்லையோர கிராமமான குன்னப்புழையில் பிறந்தவர் சரஸ்வதியம்மா.

பிறந்த ஆண்டு 1919. அப்பா பத்மனாப பிள்ளை. அம்மா கார்த்தியாயினி.

தம்பதிகளின் மூன்று பெண்களில் கடைசிப் பிறப்பு சரஸ்வதி. ஒன்பதாவது வயதில் குடும்பம்

நகர எல்லைக்குட்பட்ட பால்குளங்கரை என்ற பகுதிக்குக் குடிமாறியது. பள்ளிப் படிப்பு

முடியும் தறுவாயில் அப்பா காலமானார். குடும்பத்தில் சரஸ்வதியிடம் பாசம் கொண்டிருந்த

ஒரே நபர் அவர்.. கதைகள் சொல்லிக்கொடுத்து இலக்கிய ருசி காட்டியிருந்தவரும் அவர்தான்.

பிடிவாதத்துடன் பள்ளிக் கல்வியை பூர்த்தி செய்தார் சரஸ்வதி. தொடர்ந்து கல்லூரிப் படிப்புக்கும்

ஆசைப் பட்டார். வீட்டின் வறுமையும் வீட்டவர்களின் பாராமுகமும் அவரை முதலில்

சோர்வடையச் செய்தன. உதவித் தொகை கிடைக்கப் பெற்றதன் மூலம் இன்டர்மீடியட்வரை

படித்தார். எப்போதும் கலவரம் கவ்விக் கிடந்த குடும்பச் சூழல். தேர்வில் தோல்வியடையக்

காரணமானது. சரஸ்வதி மனம் கொந்தளித்துத் தடுமாறினார். பிறகு தானாகவே தேறி தொடர்ந்து

படித்தார்.திருவனந்தபுரம் அரசினர் கலைக் கல்லூரியில் இளங்கலை மலையாளம் பயின்றபோது

அவருக்கு சக மாணவர்களாக இருந்தவர்கள் மலையாளத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவரான

சங்ஙம்புழையும் விமர்சகரும் அறிஞருமான எஸ்.குப்தன் நாயரும். இருவரில் சரஸ்வதியம்மாவின்

வெளிப்படையான இயல்பால் மருண்டுபோன சங்ஙம்புழை கிருஷ்ணபிள்ளைதான் தற்கால

மலையாள இலக்கியத்தின் அமர காதலர்களான ரமணனையும் சந்திரிகையையும் சிருஷ்டித்தவர்

என்பது சுவாரசியமான கிளைத் தகவல்.

பட்டப் படிப்பு முடித்து முதுகலை வகுப்பில் சேர்ந்தார் சரஸ்வதி. ஆனால் குடும்பப் பிடுங்கல்

தொடர்ந்து படிக்க அவரை அனுமதிக்கவில்லை. நாயர் சமுதாயத்தின் தலைவரான மன்னத்து

பத்மனாபனுக்கு தனது ஆர்வத்தையும் தரித்திரத்தையும் விளக்கி கடிதம் எழுதினார். மன்னத்தின்

பரிந்துரையில் பள்ளி ஆசிரியையாக வேலையும் கிடைத்தது. சில ஆண்டுகள் வெவ்வேறு

பள்ளிகளில் ஆசிரியையாகப் பணியாற்றினார். 1945இல் லோகல் ஃபண்ட் ஆடிட் துறையில்

நியமனம் கிடைத்து அரசு ஊழியரானார். காலூன்றி நிற்பதற்கான பொருளாதார பலம்

கிடைத்ததும் சரஸ்வதியம்மா செய்த முதல் காரியம் தனக்கென்று ஓரிடத்தை உருவாக்க

முனைந்ததுதான். குடும்ப வீட்டுக்கு அருகிலேயே மனை வாங்கி ஒரு வீட்டைக் கட்டினார்.

திருமணம் செய்துகொள்வதில்லை என்று உறுதியுடன் மூத்த சகோதரியின் மகனை வளர்க்கத்

தொடங்கினார். கல்லூரிக் காலத்திலேயே எழுதத் தொடங்கி கணிசமான எண்ணிக்கையில்

சிறுகதைகள் வெளியாகியுமிருந்தன. அவர் எழுதிய ஆரம்ப காலக் கதைகளில் ஒன்று

‘ரமணி ‘. 1939இல் எழுதப்பட்ட கதை 1943இல் வெளிவந்தது. சங்ஙம்புழையின் கவிதை

நாடகமான ‘ரமண ‘னுக்கு எதிர் நிலையில் எழுதப்பட்ட கதை. பெண்ணை வெறும் காதல்

பதுமையாக வெளிப்படுத்திய ஆண்மனதின் கற்பனைவாதப் போக்குக்கு மாற்றாக நிகழ்த்தப்பட்ட

சவால்.

இலக்கிய உலகின் கவனிப்புக்குரிய கதைகளை எழுதியவர் என்றவகையில் புகழும் விமர்சனமும்

சரஸ்வதியம்மாவுக்குக் கிடைத்திருந்தன. ஆனால் தனி வாழ்க்கையின் அவலநிழல்கள் அவரைத்

தொடர்ந்து தழுவிநெரித்துக்கொண்டிருந்தன. மூத்தசகோதரிகளுடனான உறவு சீர்குலைந்திருந்தது.

அதிலிருந்து தப்புவதற்காக சரஸ்வதியம்மா பணியிடங்களை அடிக்கடிமாற்றிக் கொண்டிருந்தார்.

அவர் வளர்த்து ஆளாக்கியிருந்த சகோதரி மகன் சுகு என்ற ரவீந்திரன் நாயர் ஆயுதக்

காவல்துறையில்துணை ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்ததன் இடையில்அகாலமரணமடைந்தார்.

இரண்டுஆண்டுகளுக்குப் பிறகு சரஸ்வதியம்மாவின் தாயும் இறந்தார். சித்தம் கலங்கிய மூத்த

சகோதரி துன்புறுத்தல்கள் அவரை விரட்டிக் கொண்டிருந்தன. சொந்த வீட்டில் ஆசுவாசமாகத்

தங்கமுடியாமல் விடுதிகளில் ஒடுங்கினார். சிறிது காலத்தில் அந்த சகோதரியும் மனநோய்

முற்றித் தற்கொலை செய்துகொண்டார். தன்னை வளைத்திருந்த இருண்ட சூழ்நிலையால்

திணறிய சரஸ்வதியம்மா அலுவலகப் பணியிலிருந்து நீண்ட விடுப்புகளெடுத்தார். அதுவும்

சரிவராமல் பணிக்காலம் முடிவதற்கு முன்பே விருப்ப ஓய்வு பெற்று விலகினார். இந்தக் கால

அளவில் இரண்டாவது சகோதரியும் மறைந்தார். சரஸ்வதியம்மாவின் வாழ்நாட்கள் ஆலய

வழிபாடுகளிலும் தீர்த்த யாத்திரைகளிலும் நகர்ந்தன. இரத்த அழுத்தமும் நீரிழிவும் வாட்டின.

பக்கவாதம் முடக்கிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஒருமாத கால சிகிச்சை

பெற்றும் பலனளிக்காமல் சரஸ்வதியம்மா காலமானார்.

தூரத்துச் சொந்தக்காரர்கள் யாரோ இரண்டாவது நாள் பத்திரிகையில் ஒரு நீத்தார் குறிப்பை

வெளியிட்டிருந்தார்கள். ‘பால்குளங்கரை கே.சரஸ்வதியம்மா (ரிட்டயர்ட் லோக்கல் ஃபண்ட்

இன்ஸ்பெக்டர்)26.12.75 மாலை 7.45 க்கு பொது மருத்துவமனையில் காலமான செய்தியை

வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். உறவினர்கள். ‘ அந்த உறவினர்களோ அந்தச்

செய்தியை அச்சேற்றிய நாளேடோ அந்த லோக்கல் ஃபண்ட் இன்ஸ்பெக்டர் நவீன மலையாள

இலக்கியத்தின் முக்கியமான கட்டத்தில் தனது படைப்புக்கள் மூலம் கவனத்துக்குரிய பங்களிப்புச்

செய்த எழுத்தாளர் என்று அறிந்திருக்கவில்லை. இலக்கிய உலகமும் அவரை மறந்து

போயிருந்தது. ஆனால் தனது எழுத்துக்களின் விளைவைப் பற்றி அவை வாசித்து விவாதிக்கப்

பட்ட காலத்திலேயே சரஸ்வதியம்மாவுக்கு திட்டமான கருத்து இருந்தது. ‘ ‘சமுதாயத்தில்

பெண்களோடான அணுகுமுறையில் ஆரோக்கியமான மாற்றமேற்படுத்துவதில் எனது கதைகள்

உதவவில்லை என்று யாரால் சொல்ல முடியும் ? பணிபுரியும் பெண்கள்பால் சமுதாயத்துக்குள்ள

மனோபாவத்தில் இன்று மாற்றம் வரவில்லையா ? அந்த மாற்றத்துக்கு என் கதைகள் துணை

புரிந்திருக்கின்றன ‘ ‘ என்று அவரே மதிப்பிட்டிருந்தார். அது உண்மை.

மலையாளப் புனைகதை இலக்கியத்தின், குறிப்பாகச் சிறுகதையின் ஆரம்பகட்டம் அறிமுக

முயற்சிகள். 1891 இல் வேங்ஙயில் குஞ்ஞிராமன் நாயனார் எழுதிய ‘வாசனா விக்ருதி ‘ (பழக்க

தோஷம்) என்ற முதல் சிறுகதையுடன் இந்த முதல் பருவம் தொடங்குகிறது. சிறுகதை என்ற

புது வடிவத்தை ஓர் இலக்கிய ஊடகமாக முன்வைத்த பருவம். இதைத் தொடர்ந்து

வந்த ஆண்டுகளில் சமூக சீர்திருத்தத்தில் முனைப்புடனிருந்தவர்கள் சிறுகதையை கருத்துச்

சாதனமாகக் கையாண்டார்கள். மூன்றாம் கட்டமான நாற்பது ஐம்பதுகளில்தான் சிறுகதை

செறிவான கலைவடிவம் பெற்றது.வைக்கம் முகம்மது பஷீர், தகழி சிவசங்கரன் பிள்ளை,

பி.கேசவதேவ், பொன்குன்னம்வர்க்கி, எஸ்.கே.பொற்றேக்காடு, காரூர் நீலகண்ட பிள்ளை,

லலிதாம்பிகா அந்தர்ஜனம் என்று பெரும் ஆளுமைகள் கதைக்கலையின் ஆகச் சிறந்த

மாதிரிகளை உருவாக்கிக் கொண்டிருந்த தருணத்தில்தான் கே.சரஸ்வதியம்மா தனது அழுத்தமான

கதைகளுடன் அறிமுகமானார். லலிதா அந்தர்ஜனத்துக்கும் சரஸ்வதியம்மாவுக்கும் முன்னர்

பெண் சிறுகதையாளர்கள் இருந்தனர். ஆனால் அவர்களது எழுத்துக்களில் பெண்ணின்

மனமோ அனுபவமோ இயங்கியிருக்கவில்லை. அந்த வகையில் மலையாளத்தின் முதல்

பெண்ணெழுத்து அந்தர்ஜனத்தினுடையது. அதில் பெண் அனுபவத்தின் பொறிகளும்

கனல்களுமிருந்தன. அவை கருத்தாக்கத்தின் ஜுவாலையாக சரஸ்வதியம்மாவின் எழுத்தில்

தீவிரமடைந்தன. அந்தர்ஜனத்தின் கதைகளில் தென்படும் கற்பனாவாத அணுகுமுறையை

சரஸ்வதியம்மா அறிந்தே தவிர்த்திருக்கிறார். ஆண் மைய எழுத்தின் அதிகாரச் சாயல்

ரொமாண்டிசிசத்துக்கு உண்டு என்று அவர் எண்ணியிருந்திருக்க வேண்டும்.

சரஸ்வதியம்மாவின் கதைகள் பெண்ணை முதன்மையாகக் கொண்டவை. அவளது

அனுபவங்களையும் அவற்றிலிருந்து அவள் சென்றடையும் கருத்தாக்கத் தளத்தையும்

முன்வைப்பவை. காதல், திருமணம், தாம்பத்தியம், குடும்பம், அலுவலகச் சூழல், தனிமை,

என்று பெண்ணை ஆதாரமாகக்கொண்ட கதைத் தருணங்களை அவர் எழுதத் தேர்ந்தெடுத்துக்

கொண்டிருந்தார். இந்த அனுபவங்களை கருத்து நிலைக்கு எட்டச் செய்கிறார். அல்லது

சொந்த வாழ்க்கை அனுபவங்களுக்கு கருத்துருவமாக்குகிறார். திருமணம் என்ற ஆணுக்குச்

செளகரியமான ஏற்பாடு பெண்ணைக் கீழிறக்கும் வியாபாரம். அதனாலேயே தனி வாழ்வில்

அந்த உறவைப் பொருட்டாகக் கருதாமல் வாழ்ந்தவர் சரஸ்வதியம்மா. ‘திருமணம் சொர்க்கத்தில்

நடத்தப்படுகிறது ‘ கதையில் வரும் மாதவி திருமணத்துக்குப் பின் அந்தத் தலைப்பின்

அபத்தத்தைப் புரிந்துகொள்கிறாள்.

கதையின் தொடக்கத்திலேயே திருமணம் பற்றிய அபிப்பிராயத்தைப் பதிவு செய்துவிடுகிறார்

சரஸ்வதியம்மா. ‘ ‘ என்னவானாலும் மாதவிக்கு காசு கொடுத்து ஒரு கணவனைத் தேடவேண்டாம்

என்று அவளுடைய அப்பா அம்மா தீர்மானம் செய்திருந்தார்கள் ‘ ‘ ஆனால் இருபத்து மூன்று

வயசுவரை கல்யாணமாகாமல் ‘புரை நிறைந்து நிற்கிற ‘ மூத்த பெண் மற்ற சகோதரிகளின்

வாழ்க்கைக்குத் தடையாவதை விலக்க ஐந்நூறு ரூபாய் செலவில் ஒரு மணமகனைக் கண்டுபிடித்து

மணமுடித்து வைக்கிறார்கள். புகுந்த இடத்தின் பிரச்சனைகள் காரணமாக

மாதவி தாய்வீட்டுக்கே திரும்பி வருகிறாள். இரு தரப்பிலும் உரசல் அதிகரித்து வழக்கில்

முடிகிறது. இளம் பெண்ணைக் காட்டி திருமண நேரத்தில் மாதவியைக் கட்டிவைத்து விட்டதாக

மறுவீட்டார் குற்றம் சாட்டுகிறார்கள். பிரச்சனை கோர்ட்டுக்குப் போகாமலிருக்க ஊர்ப்பிரமுகர்கள்

பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். பெண் பார்க்கவந்த தினத்தில் மாப்பிள்ளை சார்பில் வந்தவர்கள்

போட்டிருந்த உடை, அங்க அடையாளங்கள், அவர்கள் நடந்துகொண்ட விதம், அன்று நிகழ்ந்த

சின்னச்சின்ன சம்பவங்கள் எல்லாவற்றையும் சாதுரியமாக ஞாபகத்திலிருந்து எடுத்துச் சொல்லி

அவர்களின் வாதங்களை முறியடிக்கிறாள். முற்றத்திலிருந்து வீட்டுக்குள் ஏறும்போது

கண்ணில் திருமணத்தன்று வாசித்து அளித்த வாழ்த்து மடல் மாதவியின் படுகிறது.

அதில் இடம்பெறும் வாசகம் – திருமணங்கள் சொர்க்கத்தில் நடத்தப் படுகின்றன. இங்கே கதையை

முடித்துவிடுகிறார் சரஸ்வதியம்மா. அவர் விட்டு வைக்கும் இடத்தில் பெண்ணின் நிலை குறித்த

கேள்விகளும் விசாரணைகளும் மிஞ்சுகின்றன. அவரது கதைகளின் ஆதாரமான இயல்பு இது. 10

ஆண் பெண் உறவின் நுட்பங்களையும் சிக்கல்களையும் சரஸ்வதியம்மா கூர்மையாகக் கையாண்டார்.

இந்த உறவில் பெண் எவ்வளவு புத்திசாலியாகவும் கனிவுள்ளவளாகவும் இருந்தாலும் ஒருபடி

கீழானவளாகவே கருதப்படுகிறாள். ‘ஒரே ஒரு இரவு ‘ கதையில் வரும் நாடக நடிகை சித்ரா

அபாரமான தெளிவுகொண்ட பாத்திரம். குடும்பப் பொருளாதாரம் காரணமாக நடிப்பை

மேற்கொள்கிறாள். அவளது நடிப்பாற்றலுக்குப் பாந்தமான நாடகங்களை எழுதிய ராம சந்திரதாசைச்

சந்திக்கிறாள். அவளுடைய நுண்ணுணர்வையும் விவேகத்தையும் வியந்து பார்க்கிற எழுத்தாளன்

நாடகம் முடிந்து அவளுடன் அவள் வீட்டுக்குச் செல்கிறான். அவளது இயல்பால் வசீகரிக்கப்

படுகிறான். மின் தடையால் வீடு இருண்டு போகிற சொற்ப நேரத்தில் அவளைத் தழுவிக்கொள்ள

அவள் மனதில் அவனைப் பற்றிய பிம்பம் சிதறுண்டு போகிறது. அவளுடைய எதிர்வினை

சரஸ்வதியம்மாவின் பிரத்தியேக கதைச் சூழலுக்குரியது. ‘ ‘நீங்கள் காலையில் சிற்றுண்டி அருந்திவிட்டுப்

போகலாம். ஆனால் வாழ்க்கையில் இனி ஒருபோதும் நாம் சந்திக்க மாட்டோம் ‘ ‘ என்கிறாள் சித்ரா.

எழுதப்பட்ட காலத்தில் ஒரு பெண்ணின் சமரசமற்ற வாக்குமூலமாகக் கருதப்பட்டது இந்த நோக்கு.

பெண்களுக்கென்று வலியுறுத்தப்பட்டிருந்த விலக்குகளை கடப்பதையே சரஸ்வதியம்மா தனது

வாழ்க்கையாகவும் இலக்கிய அணுகுமுறையாகவும் கொண்டிருந்தார். அதனால் அவருக்கு நேர்ந்தவை

இழப்புகளே. உறவு வட்டங்களில் உதாசீனப்படுத்தப்பட்டார். இலக்கியச் சூழலில் இருட்டடிப்புச்

செய்யப்பட்டார். இந்த இருமுனைத் தாக்குதலில் தளர்ந்து ஆன்மீகத்தின் நிழலில் ஒதுங்கினார்.

இலக்கிய உலகம் அவரை வசதியாக மறந்தும் போயிற்று. இன்று பெண் சார்ந்து அவரது

எழுத்துக்கள் மறுவாசிப்புச் செய்யப்படும் சந்தர்ப்பத்தில் சரஸ்வதியம்மாவை காலத்தைத் தாண்டி

சிந்தித்தவர் என்று சொல்வது பொருந்தாத வாதமாக இராது. மலையாள இலக்கியத்தில் இன்று

அசலானதும் துணுச்சலானதுமான கதைகள் பெண்களால் எழுதப்படுகின்றன. அவற்றுக்கான

கருத்தியல் அடிப்படையை உருவாக்கித் தந்தது சரஸ்வதியம்மாவின் இலக்கியப் பார்வை. அவரது

படைப்புக்களைப் பெண்ணிய எழுத்து என்று சிறப்பிக்க முடியவில்லையென்றாலும்

பெண் நிலை எழுத்து என்று அங்கீகரிக்காமல் முடியாது.

@

சுகுமாரன்

@

ஆதாரம்: கே.சரஸ்வதியம்மயுடெ சம்பூர்ண க்ருதிகள் 2000

டி.ஸி.புக்ஸ், கோட்டயம்.

Series Navigation

சுகுமாரன்

சுகுமாரன்