இவர்களது எழுத்துமுறை – 2 புதுமைப்பித்தன்

This entry is part [part not set] of 33 in the series 20100725_Issue

வே.சபாநாயகம்


1. அச்சுப்பிழை பார்ப்பவரை ஒதுக்கி விட்டால் என் கதையின் முதல் வாசகன் நான்தான். அவ்வளவு ரசித்துப் படிப்பேன். வேகமாக எழுதிக்கொண்டு போவதனால் எழுதியதில் அங்கொன்றும் இங்கொன்றும்தான் என் ஞாபகத்தில் இருக்கும். கோர்வையாக, எழுத்து ரூபத்தில் என் கதைகளை நான் அச்சில்தான் பார்த்து வருகிறேன்.

2. பிரசுரிக்கும் நோக்கமே இல்லாமல் நான் கிழித்துப்போட்ட கதைகள் எந்தனயோ. எழுத்துக்கும் கைப்பழக்கம் மிகவும் அவசியம். முடுக்கிவிட்ட இயந்திரம் மாதிரி தானே ஒரு இடத்தில் வந்து நிற்கும். இது என் அனுபவம்.

3. நான் கதை எழுதுவதற்காக நிஷ்டையில் உட்கார்ந்து யோசித்து எழுதும் வழக்கம் இல்லை. என் கதைகளில் நூற்றுக்குத் தொண்ணூறு எடுத்த எடுப்பில் எழுதியும் வெற்றி பெறுவதற்குக் காரணம் என் நெஞ்சில் எழுதாக் கதைகளாகப் பல எப்போதும் கிடந்து கொண்டே இருக்கும். அந்தக் கிடங்கில் இருந்து எப்போதும் நான் எடுத்துக் கொள்வேன். கதை எழுதும் சிலர் இவற்றை விவரப் பட்டியல் எழுதி ஒரு மூலையில் போட்டு வைப்பார்கள். நான் அப்படியல்ல. ஞாபகமறதிக்கு அரிய வசதியளிப்பேன். ஆனால் ஒன்று. எழுத்து ரூபத்தில் அமையும்வரை மனதில் உறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில்அந்தக் கதைகள் யாவும் இதைவிடச் சிறந்த ரூபத்தில் இருந்தன என்பது என் நம்பிக்கை. எழுதி முடித்த பிறகு அவை சற்று ஏமாற்றம் அதிகநேரம் நீடிப்பதில்லை.

4. கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு, தாவித்தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக்கொண்ட ஒரு பாதை. அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது. அந்த முறையை சிறிதுகாலத்துக்குப் பிறகு கைவிட்டு விட்டேன். காரணம் அது சௌகரியக் குறைவுள்ள சாதனம் என்பதற்காக அல்ல. எனக்குப் பல முறைகளில் கதைகளைப் பின்னிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால் அதைக் கைவிட்டு வேறு வழிகளைப் பின்பற்றினேன்.

5. ரகுநாதன்; புதுமைப்பித்தன் கதையோ கட்டுரையோ எழுதும்போது நிதானமாக ஆர அமர இருந்து எழுதமாட்டார். பேனாவை எடுத்து விட்டால், அந்தப் பேனாவுக்குள் எங்கிருந்தோ ஒரு அசுரவேகம் வந்து புகுந்துவிடும். விறுவிறு என்று மெயில் வேகத்தில்கை ஓடும். இடையில் வெற்றிலை போட்டுக்கொள்ளும் நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் எழுதுவதில் ஸ்தம்பிப்பே ஏற்படாது. 0
(அடுத்து அகிலன்)

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்