இழந்த பின்னும் இருக்கும் உலகம்

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

சுகுமாரன்


பள்ளிக்கூடத்தில் நான் கால்வைத்த முதல் நாள் மழை பெய்தது என்றும் துவைத்து உலரப் போட்டிருந்த துணிகளை எடுத்துவைப்பதற்காக என்னை தலைமை ஆசிரியர் ரத்தினத்தின் மேஜைக்கு அருகிலேயே நிறுத்தி விட்டு வீட்டுக்கு ஓடி வந்ததாகவும் அத்தை தெரிவித்த தகவல்தான் என்னுடைய பள்ளிப் பிராயத்தின் முதல் ஞாபகம். தனிமையில் விடப்பட்ட நான் தலைமை ஆசிரியரின் மேஜை மேலிருந்த உலக உருண்டையைச் சுழற்றப்போய், அது புரண்டு விழுந்து தீர்க்கரேகை வளையத்திலிருந்து உருண்டோடியது அந்த சம்பவத்தின் அடுத்த காட்சி.

என்னுடைய பள்ளிப்பருவம் இரண்டு மாவட்டங்களில் மூன்று பள்ளிகளில் நடந்தேறியது.மூன்றும் கிறித்துவப் பள்ளிகள் என்பது அவற்றுக்கிடையிலான ஒற்றுமை. பிள்ளையில்லாத அத்தை -அப்பாவின் சகோதரி – ஒரு வயதுப் பிராயத்திலேயே என்னை நீலகிரி மாவட்டம் வெல்லிங்டனுக்கு எடுத்துக் கொண்டுபோய் வளர்த்தார்.மாமாவுக்கு வெல்லிங்டன் எம்.ஆர்.சியின் துணைப் பிரிவான எம்.இ.எஸ்ஸில் வேலை.எனவே வெல்லிங்டன் புனித ஜோசப் ஆரம்பப் பள்ளியில் தொடக்கக் கல்வி. நான்காம் வகுப்பு தேறிய பின்னர் கோவை தூய மைக்கேல் உயர் நிலைப் பள்ளியின் தொடக்கப் பிரிவான புனித ஜான் பிரிப்பரேட்டரி பள்ளியில் மீண்டும் நான்காம் வகுப்பு.வயதுக்கு வருவதற்கு முன்பே பள்ளிக்குப் போக ஆசைப்பட்டதன் பலன்.

அதிகாரபூர்வமாகப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னரே நான் மாணவனாகியிருந்தேன்.வெல்லிங்டனில் எங்கள் பக்கத்து வீட்டு சுமதியக்காஅரிச்சுவடியும் வாய்ப்பாடும் கற்பித்திருந்தாள்.அவளுடனேயே எப்போதும் ஒட்டிக்கொண்டு இருக்க ஆசைப்பட்டதன் காரணமாக வாரத்தில் இரண்டு மூன்று நாட்களாவது அவள் படித்த ஆறாம் வகுப்பில் போய் உட்கார்ந்து கொள்வேன்.ஆசிரியைகளின் கண்டிப்பும் மற்ற மாணவிகளின் கேலியும் சுமதியக்காவை சங்கடப்படுத்தியிருக்க வேண்டும்.ஒரு கட்டத்தில் என்னை தவிர்க்க ஆரம்பித்தாள்.எனக்கும் அது வருத்தமாகத்தான் இருந்தது.ஆனால் பொம்பளைங்க ஸ்கூலுக்குப் போகும் என்னை தெருப் பையன்கள் கேலி செய்யத் தொடங்கியிருந்தார்கள்.அவமானம் தாங்க முடியாமல் சுமதியுடன் பள்ளிக்குப் போவதை நிறுத்திக்கொண்டேன்.

அடுத்த கல்வியாண்டு தொடங்கியதும் அத்தையும் மாமாவும் பள்ளிக்கு அழைத்துப் போனார்கள்.’உங்க பையனா?’ என்று தலைமை ஆசிரியர் கேட்டார். இருவரும் தயங்கி ‘எங்க பையன்னா, எங்க தம்பியோட பையன்’ என்றார்கள்.’அப்ப, அவரை வரச் சொல்லுங்க’ என்றார் தலைமை ஆசிரியர்.

‘அவங்க இங்கே இல்ல,கோயம்புத்தூரில இருக்காங்க.இவன் எங்க கிட்டத்தான் வளர்றான்’ என்று அத்தை சொன்னார். ரத்தினம் சார் ஒரு காகிதத்தையும் பேனாவையும் நீட்டி மாமாவைக் கையெழுத்துப் போடச்சொன்னார்.ஸ்பானரும் ரிஞ்சும் பிடித்து தடித்துபோயிருந்த விரல்களால் மாமா பேனாவை வாங்கினார்.அதன் மூடி கழன்று விழுந்ததும் அதைத் திரும்பப் பேனாவின் பின்பகுதியில் செருகியதும் மாமா கையெழுத்துப் போடும் போது சி. பி. கே… ஏ… என்… என்… ஏ… என். – சி.பி.கண்ணன் என்று அவர் பெயரை ஒவ்வொரு எழுத்தாக நான் உச்சரித்ததும் நினைவிலிருக்கிறது.

கையெழுத்துப் போட்டதும் மாமாவும் மழை அறிகுறியைப் பார்த்து அத்தையும் என்னை அங்கேயே விட்டுவிட்டுப் போனார்கள்.புதிதாகச் சேர வந்திருந்த பையன்களும் அவர்களது பெற்றோர்களுமாக ரத்தினம் சாரின் மேஜை முன்னால் பெரும் கூட்டம் நின்றிருந்தது.அவ்வளவு பெரிய கூட்டத்தின் நடுவில் ஓர் அநாதையாக நின்றிருந்தேன்.அத்தை உட்பட எங்கள் தெருப் பெண்கள் எல்லாருக்கும் தெரிந்தவரான மாசி டீச்சர் வந்து என்னை அணைத்து முதலாவது வகுப்புக்குக் கூட்டிப் போனார்.அந்த மழைக் குளிரில் அவரது அணைப்பை இதமாக உணர்ந்தது அன்றைய நோஞ்சான் உடம்பா மழலை மனமா என்று அப்போது தெரியவில்லை.இப்போதும்தான்.

மரச்சட்டத்தில் பெட்ஷீட்டுகளை திரையாக விரித்து ஆணியடித்திருந்த தடுப்புகள்தாம் வகுப்பறைகளாகப் பிரிந்திருந்தன.மாசி டீச்சர் முதல் பெஞ்சில் உட்காரவைத்தார்.அன்று தொடங்கி பள்ளிப் பருவம் முடியும்வரை – தவிர்க்க முடியாத சில சந்தர்ப்பங்களைத் தவிர – முதல் பெஞ்சு அல்லாமல் வேறு இடத்தில் உட்கார்ந்ததில்லை.அதற்குக் காரணம், படிப்பில் சூட்டிகையான மாணவனாக இருந்தேன் என்பதல்ல.ஆசிரியர்களின் செல்லமாக இருந்தேன் என்பதுதான்.

அன்றைக்கு மாலை மாமா புதிய சிலேட்டும் முதலாம் வகுப்புப் பாட புத்தகமும் சீருடைக்கான துணியும் வாங்கி வந்திருந்தார்.நான்கு மூலைகளிலும் பச்சை நிறத் தகரப்பட்டை அடித்திருந்த சிலேட்,தாமரைப்பூவின் படம் போட்ட புத்தகம்,
விநோதமான மணம் வீசிய பச்சைநிறச் சட்டைத் துணி, காக்கிநிற சராய்த் துணி, சுமதியக்காவின் பழைய தோள் பை எல்லாம் தந்த புத்துணர்வை முதன் முதலாக உணர்ந்தேன்.குண்டாராவ் என்று அழைக்கப்பட்ட எங்கள் தெரு நரசிங்க ராவ் மாமாவின் கைத்திறமையில் துணிகள் காலைக்குள் உடைகளாக மாறின.புதிய உடுப்பும் புதியபுத்தகமும் புதிய மனதுமாக பள்ளிக்குள் கால்வைத்தேன்.அன்று ஒரு புதிய உலகம் எனக்காகத் திறந்து கொண்டது.

ஏற்கனவே அரைகுறையாக அரிச்சுவடி தொடங்கியவன் என்பதானால் ஆசிரியர்களைத் துன்புறுத்தாத நல்லபிள்ளையாக இருக்க முடிந்தது. அந்த நல்லபிள்ளைத்தனத்தின் தொடர்ச்சியாகவே நான்கு வருடக் காலமும் கழிந்தன.எம்.ஆர்.சியில் ராணுவ அணிவகுப்பைப் பார்வையிட வந்த பிரதமரை வரவேற்க வெள்ளைநிறத் தாள் சுற்றிய முக்காலடிக் கம்பில் முக்கோணவடிவில் சிவப்பும் பச்சையுமான காகிதங்கள் ஒட்டிய கொடிகளுடன் பள்ளிக்கூடத்துக்குக் கீழேயுள்ள குன்னூர் ஊட்டி சாலையில் எல்லாப் பிள்ளைகளும் காத்து நின்றதும் வெள்ளை கோட்டின் இடது பக்கமாக ரோஜாப் பூ சொருகி வைத்திருந்த தொப்பிக்கார ஆள் திறந்த ஜீப்பில் வேகமாகப் போனதும் அவரைப் பார்த்ததும் மாசி டீச்சரும் டாலிஸ் டீச்சரும் ரத்தினம் சாரும் சின்னப்பன் சாரும் இரண்டு நாட்களாகச் சொல்லிக் கொடுத்திருந்த வாசகத்தைச் சொல்லச் சொன்னதும் ஆண்கள் – பெண்கள்பள்ளி மாணவர்கள் எல்லாரும் தொண்டை கிழிய ”நேரு மாமா வாழ்க”என்று கத்தியதும் பள்ளிப்பிராய நினைவுகளில் முதன்மையானது. இரண்டாம் வகுப்பை எட்டியபோது அதே மாமாவை ஒழியச் சொல்லி பெரிய பையன்களுடன் வெல்லிங்டன் பஜார் போஸ்ட் ஆபீஸ்வரை நடந்ததும் ஞாபகமிருக்கிறது.பெரிய பையன்கள் சிவப்பு நிற போர்டில் இங்கிலீஷ் எழுத்துக்களுக்குக் கீழேயிருந்த எழுத்துக்கள் மீது உருகிய தாரைப் பூசினார்கள்.அந்த எழுத்துக்களை வகுப்பில் அன்று உயிர் நண்பனாக இருந்த மோத்திலாலின் புத்தகத்துக்கு அட்டை போட்டிருந்த காகிதத்தில் பார்த்திருக்கிறேன்.அந்த எழுத்துக்களை பென்சிலை உடைத்துக் கரியாக்கி
அழிக்க முயன்றதும் மோத்தி என்னை அடித்ததும் நான் அழுததும் வகுப்பு
ஆசிரியர் சின்னப்பன் இருவரையும் கொண்டைப் பிரம்பால் வெளுத்து விட்டு அந்த அட்டையைக் கழற்றி வீசியதும் இந்திக்கார மோத்தியுடன் இரண்டொரு நாட்கள் காய்விட்டிருந்ததும் எச்சில் தொட்டு எழுதினால் அச்சாக விழுகிற காப்பியிங் பென்சிலை அவன் கொடுத்ததும் பழம் விட்டதும் ஞாபமிருக்கிறது.

மாசி டீச்சரும் டாலிஸ் டீச்சரும் சேர்ந்து சொல்லிக்கொடுத்த நாடகத்தில் கோமாளி வேடம் போட்டது; நான்காம் வகுப்பில் படிக்கையில் சுமதியக்கா அவள் பள்ளியில் பாடிப் பரிசு பெற்ற புத்தகத்தை எனக்குக் கொடுத்ததும் அதிலிருந்த ஒரு பாட்டை அவளே சொல்லிக் கொடுத்த அபிநயங்களுடன் தலைப்பாகை கட்டி கோட்டுப் போட்டு பெரிய கரிமீசை எழுதிய முகத்துடன் பள்ளி ஆண்டு விழாவில் நான்கு பூனைக் குட்டிகளின் படங்களைப் பிடித்துக்கொண்டு பாடியதும் தங்க நிறமான அலுமினிய சோப்புப் பெட்டியை முதல் பரிசாகப் பெற்றதும் ஞாபகமிருக்கிறது.

வெளியான ஒரு வருடத்துக்குப் பிறகு வெல்லிங்டன் கவுடர் தியேட்டரில் இரண்டாவது ஓட்டமாக வந்த ‘கர்ணன்’ படத்தின் காலைக் காட்சிக்கு பள்ளி மாணவர்களை அழைத்துப் போனார்கள்.அநாதையான கர்ணனிடம் நான் என்னையே பார்த்தேன்.அந்த துக்கம் தாளாமல் விம்மியழுதேன். கொட்டாப்புளி சார் முதலில் மிரட்டிப் பார்த்தார்.அழுகை அடங்காது என்று தெரிந்ததும் கொட்டகைக்கு வெளியே அழைத்து வந்து தின்பதற்கு வாங்கித் தந்தார்.தின்பண்டத்தை அதக்கிக்கொண்டே தொடர்ந்து அழுதபடியே மறுபடியும் இருளின் கர்ப்பத்துக்குள் நுழைந்ததும் பள்ளிக்கால துக்கக் காட்சிகளில் ஒன்று.வீட்டுக்குத் திரும்பிய பிறகு பழைய நோட்டுப் புத்தகத்தின் அட்டையை வெட்டி ஜரிகைக் காகிதம் ஒட்டி கிரீடம் செய்தேன். மறுநாள் இண்டர்வெல்லில் அதை மண்டையில் மாட்டிக்கொண்டு அடிக்கோலை வாளைப்போல உருவியபடி நின்றபோது ‘டே, அழுமூஞ்சி கர்ணன்டா’ என்று கேலிசெய்த செல்வராஜை வாளால் தாக்கினேன். முறிந்த வாள் அவனுடைய தாடையில் குத்தி ரத்தம் வழிந்தது.கிரீடத்தைக் கழற்றி வீசிவிட்டுப் போர்க்
களத்திலிருந்து ஒரே ஓட்டம்.பையைக் கூட எடுக்காமல் ஓடினேன்.முதலில் வெல்லிங்டன் பாலத்துக்குக் கீழே நீலகிரி பாசஞ்சர் கடந்து போகிறவரைக்கும் ஒளிந்திருந்தேன்.அப்புறம் எங்கள் தெருவின் மறு கோடியில் இருந்த ராமர் கோவில் தோட்டத்துக்குள் போய்ப் பதுங்கினேன்.பகலில் அதிகம் யாரும் வராத கோவில் அது.மூடிக்கிடந்த கதவின் மேல் தொற்றிக்கொண்டு திட்டி வாசல் வழியாகத் தெரிந்த ராமரிடம் என்னை செத்துப் போகச் செய்யும்படி வேண்டிக்கொண்டேன்.அங்கிருந்து பார்த்தால் எங்கள் ஏகாம்பரம் பிள்ளை தெரு முழுவதும் தெரியும்.அவ்வப்போது எட்டியெட்டிப் பார்த்து ஆள் நடமாட்டத்தைக் கவனித்துக்கொண்டேன். கண்டோன்மெண்ட் போர்டு பள்ளியிலும் எங்கள் பள்ளியிலும் மதிய உணவு இடைவேளை மணியடித்தது.பசி வயிற்றைச் சுருட்டியது.பயம் கால்களை நகர முடியாமல் இறுக்கியது.

எங்கள் தெருவுக்கு இரண்டு தெரு தள்ளியிருக்கிற போயர் தெருவுக்கு ராமர் தோட்டத்தையொட்டிப் போவது குறுக்கு வழி.நேர் வழி செங்குத்தானது என்பதால் அந்தத் தெருக்காரர்களுக்கு இப்படிப் போவதுதான் சுலபம். அந்த வழியாகப் போன இட்லி ஸ்கூல் எனிமி ஒருத்தன் என்னை பார்த்துவிட்டு வந்த வழியே ஓடினான். (வெல்லிங்டன் கண்டோன்மெண்ட் போர்டு நடத்தும் பள்ளிக்கும் எங்கள் ஜோசப் பள்ளிக்கும் சண்டை இருந்ததாக நாங்கள் நினைத்திருந்தோம்.அதனால் அந்தப் பள்ளிக்கு இட்லி ஸ்கூல் என்று பட்டப்
பெயர்.எங்கள் பள்ளிக்கு அவர்கள் வைத்தபெயர் கூழ் ஸ்கூல்.)

தெருவுக்குள் போன அந்த எனிமி அத்தையை அழைத்து வந்திருந்தான். அத்தையின் கையில் மின்னலும் இடிகளும் மறைந்திருந்தன என்பது அன்றுதான் தெரிந்தது.சட்டைக்காலரைப் பிடித்து என்னை இழுத்து நடந்தபோது இட்லி ஸ்கூல் எனிமியையும் என்னைச் சாகவிடாத ராமரையும் திட்டினேன்.வீட்டு வாசலில் ஒரு பெரும் கூட்டமிருந்தது.செல்வராஜ்,அவன் அம்மா இன்னும் நிறைய பேர்.எல்லாரும் கத்திக்கொண்டிருந்தார்கள்.அத்தையின் கையிலிருந்து மின்னல்கள் வெட்டி என் உடம்பில் இறங்கின. கொஞ்ச நேரத்தில் கூட்டம் கலைந்ததும் அத்தை வீட்டுக்குள்அழைத்துப்போய் சோற்றைப் போட்டார்.முடிந்ததும் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டுபோய் பள்ளியில் விட்டார்.வகுப்பு டீச்சர் டாலிசிடம் என்னவோ சொன்னார்.”நான் பாத்துக்கிறேன்.ஊசி நல்ல பையனாச்சே”என்று என்னை இழுத்து இடுப்போடு சேர்த்து அணைத்துக்கொண்டார்.அவருடைய கறுத்த உடம்பின் சூடும் இடுப்பில் தடவியிருந்த சைபால் களிம்பின் வாசனையும் இப்போதும் ஞாபகமிருக்கிறது.அன்று செய்த முடிவு – இனி அத்தை வீட்டிலிருந்து படிக்கமாட்டேன்.கோயம்புத்தூருக்கு அம்மா அப்பாவிடம் போய்விடுவேன்.அந்த வருடம் மே மாதம் விடுமுறை முடிவில் மலையிறங்கிக் கோவை வந்தவன் பிறகு மாணவனாக மலையேறவில்லை.

பள்ளிப் பருவத்தின் முதல் வருடங்களின் பல காட்சிகள் வயதின் பாரத்தில் உருத் தெரியாமல் நசுங்கிப் போய்விட்டன.ஆனால் பாதையில் கொடியுடன் காத்திருந்த பிள்ளைகளைப் பார்த்து பூச் சிரிப்புடன் கையாட்டிப் போன மாமாவின் சாம்பலை ராணுவ வண்டியில் கொண்டு வருவதைப் பார்க்க நின்றது, கிளாசில் ·பஸ்டாக வந்ததற்காக பள்ளி ஆண்டு விழாவில் பாதிரியார் பரிசளித்தது, வருடம் முழுவதும் பேசாமலிருந்த செல்வராஜு ”இனிமே இந்த ஸ்கூலுக்கு வரமாட்டேண்டா” என்று நான் சொன்னதைக்
கேட்டு அழுதது, நட்புக்கு அடையாளமாக கொஞ்சூண்டு தவிட்டுப் பழங்களையும் அவனை மறந்து விடாமலிருப்பதற்காக பைண்டு செய்த அவனுடைய வாய்ப்பாடைக் கொடுத்தது – எல்லாம் கலைந்து கொண்டிருக்கும் மேகத்தினிடையில் மிஞ்சியிருக்கும் ஞாபக நட்சத்திரங்கள்.

@

கோவை புனித ஜான் பிரிப்பரேட்டரி பள்ளியில் முதல் நாள் துக்கம் தருவதாகத் தோன்றியது.படித்த நான்காம் வகுப்பிலேயே மீண்டும் படிக்க வேண்டும் என்ற சலிப்பு. நண்பர்கள் யாரும் இல்லாத வருத்தம். வகுப்பு ஆசிரியர் ஞான வடிவேலு அழைத்து விசாரித்தார்.எங்கே இருந்து வருகிறேன் என்று கேட்டார்.வெல்லிங்டனிலிருந்து.அது எங்கேடா இருக்கு? ஊட்டிக்குப் பக்கம்.அதுதான் வறக்காட்டுல நட்ட கேரட்டு மாதிரி இருக்கிறீயாக்கும்? என்று அவர் சொன்னதும் சிரித்து விட்டேன்.அந்த மொழி
எனக்குப் புதிதாக இருந்தது.

வகுப்பில் கரிய நெற்றியில் பிரகாசமான விபூதிக் கீற்றுடன் உட்கார்ந்திருந்த பையனை அழைத்து இவந்தாண்டா உன் சிநேகிதன் என்று அறிமுகப் படுத்தினார்.வாடா என்று அந்தக் கறுப்பன் தனக்குப் பக்கத்தில் பெஞ்சில் இடம் கொடுத்தான்.உம் பேரென்ன? கேட்டான்.சொன்னேன்.உம் பேரு?கேட்டேன்.சொன்னான்.எம்.சண்முக சுந்தரம்.அன்று தொடங்கிய நட்பு நாற்பத்தி சொச்சம் வருடங்களைத் தாண்டிவிட்டது.பார்க்காமலும் பேசக் கிடைக்காமலும் இருந்தும் சுழிகளில் தத்தளித்து வாழ்க்கை திசைமாறிப் போயிருந்தும் நிலைத்து நிற்கிறது.ஞான வடிவேலு சார் அன்று அவனை அறிமுகப்படுத்தியபோது எனக்கு சிநேகிதம் பிடித்துத் தர இவர் யார் என்று எரிச்சலாகத்தான் இருந்தது.ஆனால் அது பள்ளிப் பருவத்தை கடந்தும் தொடர்ந்தது.அடுத்த ஆண்டு எங்களோடு பாலுமணி என்ற டி.பாலசுப்பிரமணியம் சேர்ந்துகொண்டான்.மூன்று பேரும் மிகச் சிறந்த மாணவர்கள் அல்ல.ஆனால் வகுப்பில் முதல் பத்து இடங்களில் நாங்கள் இருந்தோம்.

பிரிப்பரேட்டரி பள்ளி முடிந்ததும் ஆறாம் வகுப்பிலும் ஒரே பெஞ்சைப்பகிர்ந்துகொண்டோம். ஏழாம் வகுப்புப் படிக்கும்போது நான் எழுதிய கவிதைக்கு எம்.ஆர்.என்கிற சண்முக சுந்தரம்தான் படம் போட்டான்.பாலு மணி அதை அமல்ராஜ் சாரிடம் காட்டி பாராட்டு வாங்கிக்கொடுத்தான்.

ஆறு முதல் பதினொன்று வரையிலான வகுப்புகளில் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களில் மறக்கவே முடியாதவர்கள் மூன்று பேர்.ஆறு ஏழு வகுப்புகளில் நீதிபோதனைப் பிரிவுக்கு வந்த புலவர் கலியபெருமாள். அவர் எங்களுக்கு தமிழ்ப்பாடம் சொல்லித் தரவில்லை.ஆனால் தமிழை ரசிக்கவைத்தார்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் படித்து வந்தவர்.காவியங்களின்
கதையை அந்த வயதில் ருசிகரமாக அனுபவிக்கக் கற்றுக் கொடுத்தார். வாரத்தில் ஒரு நாள் வரும் நீதிபோதனைப் பாட வேளைக்காகக் காத்திருக்கச் செய்தார். திரையரங்கில் புதிதாக வந்த ஆங்கிலப் படங்கள், தமிழ் நாவல்கள், ஷேக்ஸ்பியர் நாடகங்கள், தமிழ் நாடகங்கள் எல்லாம் அவரிடமிருந்து கதையாகக் கேட்கக் கிடைத்தவை. அண்ணாதுரை மறைவுக்காக பள்ளியில்
நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசப் பேச உடைந்து அவர் அழுததைப் பார்த்து நான் வடித்த கண்ணீர் நினைவில் இன்னும் ஈரம் காயாமல் இருக்கிறது.

பாட்டுப் பாடியே செய்யுள்களைப் புரிய வைத்த சங்கரன் சார்,புலவர். சுந்தரராசனார்,ஆங்கிலத்தை சரளமாக்கிய ஸ்டீபன் சார், கணக்கை
சுவாரசியமாகக் கற்பித்த ஜேம்ஸ் தேவதாஸ் (அவர் வகுப்பெடுத்த அந்த வருடம் மட்டும் நான் இரண்டு தேர்வுகளில் நூற்றுக்கு நூறு வாங்கினேன்) என்று முகங்கள் தெரிகின்றன.ஜேம்ஸ் தேவதாஸ் சார்தான் எனக்குள்ளிருந்த கவிஞனை அங்கீகரித்த முதல் நபர்.என்னவோ கிறுக்குகிறான் என்று விடாமல் கிறிஸ்தவ கீதம் எழுத வைத்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய ‘ப்ரேம முதித மன்சே கஹோ ராம ராம நாம்’ என்ற பஜன் மெட்டில் நான் எழுதிய பாடலை வயலின் விற்பன்னரான அவர் பள்ளியின் இசைக்
குழுவினரைப் பாட வைத்தார்.பாடல் ஒத்திகை முடிந்ததும் எல்லாப் பையன்களும் கைதட்டியதுதான் என் எழுத்துக்கு வாய்த்த முதலாவது கூட்டப் பாராட்டு. (அந்தப் பாடல் அப்பட்டமான கிறித்துவச் சாயலில் இருக்கிறது என்று தலைமை ஆசிரியர் அந்தோணி லாரன்ஸ் அடிகள் சொல்லி விட அது கிறித்தவ மாணவர்கள் மட்டும் பங்கேற்கும் ‘உபதேச வகுப்புக’ளில்
(Catecheism class) மட்டும் பாடப்பட்டது. மூலப் பாடலை எழுதியவர் சாயிபாபா என்று தெரிந்த பிறகு அந்தப் பாட்டின் மேலிருந்த ஒட்டுதல் காணாமற் போனது).

எனக்குள் ஊறிக் கொண்டிருந்த கவிதையார்வத்தையும் தமிழ்க் காதலையும் தீவிரப்படுத்தியவர் ஒன்பது பத்து வகுப்புகளில் தமிழாசிரியராக இருந்த புலவர்.மருதவாணன்.புலால் உணவூட்டித் தமிழைக் கற்றுத் தந்தார். தனிஅக்கறையுடன் என் ஆர்வத்தை வளர்ப்பதற்காகப் புத்தகங்களைக் கொடுத்து வாசிக்கச் செய்தார்.எழுதிய கவிதைகளில் பிழை திருத்தம் செய்து கொடுத்தார்.
மீசை வைக்காத அண்ணாவின் சாயல் அவருக்கு.அண்ணாவைப் போலவே அவரும் குள்ளம்.அண்ணாவைபோலவே கரகரத்த குரல்.திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் அமைந்தது தமிழ் படித்தவனுக்குக் கிடைத்த பெரும் பேறு என்று நம்பியவர்.அந்த நம்பிக்கை அவர் முகத்திலும் நடையிலும் தோளில் போட்டிருந்த இரட்டைக் கரை துண்டிலும் தென்பட்டதை அவரிடம் மாணவனாக இருந்த காலத்தில் பார்த்திருக்கிறேன்.பள்ளி நிர்வாகம் கரை போட்ட துண்டுக்கு ஆட்சேபம் தெரிவித்தபோது சரிகைத் துண்டுபோட
ஆரம்பித்தார்.(ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரி மாணவனாக அவரைச் சந்தித்தபோது அவருடைய தோளில் துண்டுக்குப் பதிலாக சால்வை கிடந்தது.அது துண்டுபோட்டவர்களை சந்தேகித்த அவசரநிலைக் காலம்).

அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் என்னுடைய வாசம் மருதவாணன் ஐயா வீட்டில்.அவர் எழுதி வெளியிடும் தமிழ்த் துணை நூல்களுக்கான கையெழுத்துப் படிகளை நகலெடுக்கும் வேலை.ஒன்பது பத்து பதினொன்றாம் வகுப்புகளுக்கான தமிழ் இலக்கணப் பகுதிகளும் துணைப் பாட நூல் கட்டுரைகளும் அதில் இருக்கும்.எங்கள் கையெழுத்து அழகாக இருக்கும் என்பதனால் அந்த வேலைகள் என்னிடமும் சக மாணவன் ரங்கராஜனிடமும் ஒப்படைக்கப்பட்டன.செல்வபுரத்திலிருந்த அவர் வீட்டுக்குப் போய்ச் சேர்வதற்கான பேருந்துக் கட்டணமும் உபரியாக சில்லறைக் காசுகளையும் மொத்தமாகக் கொடுத்து விடுவார்.ஆரம்பத்தில் சில நாட்கள் வந்த ரங்கராஜன் பிறகு வரவில்லை.ஐயா வீட்டுப் புலால் உணவு அய்யங்கார் வீட்டுப் பிள்ளையான அவனை விலக்கியது.அவனுக்காக சைவ உணவு சமைத்துக் கொடுக்க ஐயா சொல்லியிருந்தார்.அதையும் அதே பாத்திரங்களில்தானே சமைப்பார்கள் என்ற சந்தேகத்தின் பலனைப் பயன்படுத்தி ரங்கன் கழன்று கொண்டான். நான் முதன் முதலாக ஒரு தமிழ் எழுத்தாளரைப் பார்த்ததும் அவன் வீட்டில்தான். பின் மண்டையில் சின்னக் குடுமியுடன் அகலக் கரை போட்ட மேல் துண்டைப் போர்த்திக்கொண்டு உட்கார்ந்தவரைக் காட்டி ”எங்க பாஷ்யம் பெரியப்பாடா” என்றான் ரங்கன். அப்படி ஒரு பெயரை
நான் கேள்விப்பட்டதே இல்லை என்றேன்.”சாண்டில்யன்டா” என்ற ரங்கனின் முகத்தில் பெருமை மின்னிக்கொண்டிருந்தது.

மருதவாணன் ஐயாவின் செல்ல மாணவர்களில் ஒருவனாக இருந்ததில் எனக்குக் கிடைத்த ஆதாயங்கள் நிறைய. தீவிர நாத்திகராக இருந்தும் பக்தி இலக்கியங்களை அதன் கவிதை உருக்கம் குலையாமல் பாடம் கேட்க முடிந்தது.நான் எழுதிய பொதுக் கட்டுரை ஒன்று பெயரில்லாமல் அவருடைய துணை நூலில் இடம் பெற்றது.அச்சிலேறிய என்னுடைய முதல் எழுத்து அதுதான். அதற்குக் கிடைத்த பணிக்கூலிதான் சுவையான புலால் உணவும் பேருந்துக் கட்டணத்துடன் கிடைத்த சில்லறையும்.

தமிழ் மீதான ஆர்வத்தைப் பார்த்து திராவிட இலக்கியங்களைப் படிக்கத் தூண்டியவரும் ஐயாதான்.அவை மனசுக்குள் உருவாக்கிய பொற்காலக் கனவுகளை பத்தாம் வகுப்பாசிரியராக வந்த சோமசுந்தரம் கலைத்தார். சோமு சார் பள்ளி நிர்வாகத்திடம் கம்யூனிஸ்ட் என்று கெட்ட பெயர் எடுத்திருந்தார்.சிவப்பு அட்டையில் இரண்டு தாடிக்காரர்கள் படம் போட்ட பிளீச்சிங் பவுடரின் நெடி மாறாத வழுவழுப்பான தாள்களில் அச்சிட்ட பல புத்தகங்களை அவரிடம்தான் முதலில் பார்த்தேன்.அவர்தான் சிவப்புக் கொடி கட்டிய கட்டடத்துக்கு முதலில் அழைத்துப் போனார்.”இவன் கையெழுத்து அழகா இருக்கும்.தட்டி எழுதலாம்னு கூட்டிகிட்டு வந்தேன் தோழர் ” என்று அங்கே இருந்தவரிடம் சொன்னார்.ஆசிரியர்கள் போராட்டத்துக்கான வாசகங்களை எழுதவைத்தார்.அவருடன் போயிருந்த
ஒருமுறை புதிதாக ஒருவரைப் பார்த்தேன்.பிடறி வரை நீண்ட முடி, காதுகளுக்குப் பக்கத்தில் பட்டையான கிருதா, முறுக்கிய மீசை,பெரிய பெரிய பூக்கள்போட்ட சட்டை என்று விசித்திரமான தோற்றத்திலிருந்தார் அவர். நாற்காலியில் கால்மேல்கால்போட்டு உட்கார்ந்து உரத்த குரலில் சொற்பொழிவு ஆற்றுவதுபோலப் பேசிக்கொண்டிருந்தார்.”எதிரி லாவ லத்தினாய் வா வா வா”
என்று நெட்டுருச் செய்து வைத்திருந்த வரியை – வானொலியில் கேட்டதும் ”எதிரி லாவ லத்தினாய் ” என்றுதான் மனதில் பதிந்திருந்தது – ”எதிரிலா வலத்தினாய் வா வா வா” என்று திருத்தமாக அவர் சொல்வது கேட்டது. ”ஆருன்னு தெரியிதாடா?” என்று கேட்டார் சோமு சார்.” அவரு எழுதறதைப் படிக்கிறேனே, ஜெயகாந்தன்னு தெரியாதா சார்” என்றேன்.

பள்ளிப் பிராயத்தின் கடைசியில் மிகுந்த வறுமையை அனுபவித்தேன். ரேஷன் அரிசிச் சோறு,வெறும் ரசம் இல்லையென்றால் தக்காளியோ புளியோ கரைத்துத் தாளித்த சோறு இதைத் தவிர வேறு பதார்த்தங்களைப் பார்ப்பது அபூர்வமாக இருந்தது. பள்ளிச் சீருடை தவிர போட்டுக்கொள்ள வேறு உடைகளும் இல்லாமலிருந்தது.சனிக்கிழமைகளில் பள்ளியிருந்தால்
அன்றும் காக்கி வெள்ளைத் தோற்றத்தில் போக உடம்பு கூசும். அந்த தரித்திர யுகத்தில் வேலைநாளாக இருந்த ஒரு சனிக்கிழமை மத்தியானம் சோமு சார் அவருடைய ஸ்கூட்டரில் அவர் வீட்டுக்கு அழைத்துப் போனார்.கோவை பொள்ளாச்சி சாலையில் குறிச்சியில் இருந்தது வீடு.அந்த வருடத்தில் நான்உண்டதில் ருசியாக இருந்த சாப்பாடு அன்று அவர் மனைவி ஆக்கிப்போட்டதுதான்.மீன் வறுவல்,ஆட்டிறைச்சிக் குழம்பு, முட்டைப் பொரியல் என்று ஒரே வேளையில் அத்தனை அசைவ வகைகளை வீட்டில் பார்த்ததும் புசித்ததும் அன்றுதான்.கூச்சமாக இருந்தது.ஆனால் சாப்பிட்டு முடிந்ததும் தட்டு அப்போது வைத்த மாதிரி சுத்தமாக இருந்தது.சோமு சாரும் மனைவியும் திருப்தியா சாப்பிட்டியா? என்று கேட்டதும் கலங்கிக் கண்ணீராக வழிந்தேன்.
விடை பெற்று இறங்கும்போது மேலும் கலங்க வேண்டியிருந்தது.

படியிறங்கத் தயாரானபோது சோமு சாரின் மனைவி ஒரு பொட்டலத்தைக் கையில் கொடுத்தார்.பெரிய கடை வீதி சங்கம் -பாம்பே டையிங் ஷோ ரூமின் உறை.பிரித்துப் பார்க்கச் சொன்னார்கள்.பொட்டலத்தைப் பிரித்தேன். நீல நிறமுள்ள ஒரு சட்டைத் துணியும் கரு நீல நிறமுள்ள சராய்த் துணியும். தேம்பிக் கொண்டு நின்றவனைத் தட்டி பேருந்துக்கான காசைக் கொடுத்து பத்திரமாக
வீடு போகச் சொன்னார்கள் இருவரும்.திரும்பிப் பார்த்தால் மறுபடியும் அழுதுவிடுவேன் என்ற பயத்தில் பற்களைக் கடித்துக்கொண்டு ஓடிய ஓட்டம் நினைவிலிருக்கிறது.அவர்கள் வீட்டில் அவர்களைத் தவிர யாரையும் பார்க்கவில்லை என்பதும் நினைவிலிருக்கிறது. குறிப்பாகக் குழந்தைகளை.

புகுமுக வகுப்பும் பட்ட வகுப்பும் படிக்க வந்த பிறகும் அடிக்கடி சோமு சாரைப் பார்க்கும் வழக்கமிருந்தது.அவருடைய அஞ்சல் வழி எம்.ஏ. தமிழ்ப்பாடத் திட்டத்துக்கான ரெஸ்பான்ஸ் ஷீட்டுகளை பலமுறை நான் தான் எழுதினேன்.

@

மரணத்தைப் பெரும் பீதியாகவும் பேரழகாகவும் உணர்ந்த சந்தர்ப்பங்களும் பள்ளிப் பருவத்தைச் சேர்ந்தவை.

ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது எங்கள் வகுப்பு நண்பன் சிவராமன் இறந்து போனான்.மலம்புழா அணைக்கட்டுக்குச் சுற்றுலாப் போனபோது நடந்த விபத்து.பள்ளிக் கூடமே அரற்றியது.சுற்றுலாவுக்குப் போன ஆசிரியர்களும் மாணவர்களும் உடைந்து உடைந்து அழுதபடியே மைக்கில் பேசினார்கள்.முடிந்து எல்லாரும் ஊர்வலமாக அவனுடைய வீட்டுக்குப் போனோம்.சலிவன் தெருவில் இடுங்கிய சந்திலிருந்த வீடு.வாசலில் அவனுடைய சடலம் கிடத்தப் பட்டிருந்தது.முகம் கோணலாகச் சிதைந்திருந்தது.உடம்பு கருநீல நிறமாகக் குழைந்து கிடந்தது.அவன் பெற்றோரும் மற்றவர்களும் தொண்டை பிளந்து கதறிக்கொண்டிருந்தார்கள். ஊதுவத்தியின் அடர்ந்த புகையை மீறி ஒரு கவிச்சை வாடைவீசிக் கொண்டிருந்தது. எப்படியாவது அங்கிருந்து ஓடி விட வேண்டுமென்று தோன்றியது. எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பவனும் பாடகனும் பள்ளி நாடகங்களில் நடிப்பவனுமான அந்த நண்பன் வீங்கிப் போன நீர்ப்பிசாசு போலத் தெரிந்தான்.யாரையும் பயமுறுத்தாமல் செத்துப் போக வேண்டும் என்பது அன்றைய ஆசையாக இருந்தது.

சிவராமன் மரணத்துக்குச் சற்று முன்னதாகவோ பிறகோ துணைத் தலைமை ஆசிரியராக இருந்த ஆரோக்கிய சாமி சார் இறந்து போனார்.நிம்மதியாகத் தூங்கும்போதே புன்னகையுடன் இறந்து போயிருந்தார்.எங்கள் பள்ளி வளாகத்திலேயே இருக்கும் புனித மிக்கேல் அதிதூதர் தேவாலயத்தில் பிரார்த்தனைக்காகக் கொண்டு வந்து வைத்த சடலத்தை வரிசையாக நின்று பார்த்தோம்.வழக்கம்போல கோட்டும் சூட்டும் அணிந்து அசெம்பிளி சமயத்தில் கண்ணை மூடி நிற்பதுபோலவே தெரிந்தார். மணியோசை கேட்டதும் எழுந்து மேலே தூவியிருக்கும் ரோஜா இதழ்களை உதறி விட்டு பிரம்புடன் நடக்க ஆரம்பித்து விடுவார் என்று தோன்றியது.’இறைவனே! கருணையின் வடிவே! கர்த்தாவே! உம்முடைய நாமம் வாழ்த்தப்படுவதாக” என்று பள்ளிப் பிரார்த்தனையை உச்சரித்துக்கொண்டிருந்தேன். ஏ.எச்.எம்மும்அதையே முணுமுணுப்பதுபோல இருந்தது. சாரைப்போல அழகாகச்
செத்துப் போகவேண்டுமென்பதாக இருந்தது அன்றைய விருப்பம்.

முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் யோசிக்கும்போது பலரும் மரணத்தின் பீதியூட்டும் பிடியிலோ அல்லது அதன் இதமான அணைப்பிலோ தங்களை ஒப்புக்கொடுத்து மறைந்து போயிருக்கிறார்கள்.பலர் ஞாபக வரம்புகளைக் கடந்து போயிருக்கிறார்கள்.

எழுபத்து மூன்று எழுபத்தி நான்கு கல்வியாண்டுடன் என்னுடைய பள்ளிப்பருவம் முடிந்தது.நான் அந்தப் பள்ளியின் சந்ததி என்பதற்கு வெறும் பதிவேட்டுக் குறிப்பு மட்டுமல்ல; ஓர் இலக்கியச் சுவடும் இருக்கிறது. எழுபத்தி மூன்றாம் வருடத்திய பள்ளி ஆண்டு மலரில் நான் எழுதிய பத்து வெண்பாக்கள் அச்சாகியிருக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஓர் இலக்கிய ஆர்வலன் முளைவிட்ட இரண்டு இலைகள்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிள்ளைப் பிராய ஏக்கத்துடன் தூய. மைக்கேல் உயர்நிலைப் பள்ளிக்கு – இன்று அது மேல்நிலைப் பள்ளி – போனேன்.வாசலில் குதிரைமேல் ஆரோகணித்தபடி காலடியில் விழுந்து கிடக்கும் சாத்தானை ஈட்டியால் குத்திக்கொண்டிருக்கும் புனித மிக்கேல் அதிதூதரின் சிலையைத் தவிர எனக்குத் தெரிந்தவர்கள் எவருமிருக்கவில்லை. சனிக்கிழமை.காவல்காரரிடம் கேட்டு அலுவலக அறையிலிருந்த எழுத்தரிடம் அனுமதி பெற்று படியேறி நான் கடைசியாகப்
படித்த 11 பி பிரிவு இருந்த இடத்தைக் கண்டு பிடித்தேன்.இன்று அது 11 பி அல்ல. வகுப்பும் மேஜை நாற்காலிகளும் மாறியிருந்தன.அதன் முதல் பெஞ்சில் உட்கார்ந்தேன்.பாதுகாப்பையும் வெளியேற்றத்தையும் ஒரே கருப்பையில் வைத்திருக்கும் ஒரு பேருலகத்தை இழந்ததுபோல இருந்தது.

அந்த உலகம் இன்னும் இருப்பது போலவும் இருந்தது.


நன்றி: புதிய பார்வை இதழின் பள்ளிப்பிராயம் பத்திக்கு

n_sukumaran@rediffmail.com

Series Navigation

சுகுமாரன்

சுகுமாரன்