இலக்கிய சந்திப்பு: கனடா – பகுதி இரண்டு

This entry is part [part not set] of 31 in the series 20030525_Issue

சுந்தர ராமசாமி


கேரளா, வங்காளம் ஆகிய இரண்டு இடங்களில் இடதுசாரிகள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அரசியல் மாற்றங்கள் மூலம், கல்வியின் மூலம் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லலாமா ?

கேரளாவில் இடதுசாரி கட்சி ஆட்சிக்கு வந்தது ஒரு முக்கியமான பாதிப்பு என்று நான் நினைக்கிறேன். வங்காளத்திலும் இடதுசாரி கட்சி ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆனால் இந்த இடதுசாரி கட்சி ஆட்சிக்கு வராத இடங்களிலும் முக்கியமாக கன்னடம், மராட்டி, ஹிந்தி மொழிகளிலும் இந்த மதிப்பீடு சார்ந்த தெளிவுகள் ஓரளவேனும் இருக்கின்றன. ஆனால் விஷயங்கள் ஒரளவுக்கு கூர்மையாக இருப்பதற்கு இடதுசாரி கட்சிகள் ஆட்சிக்கு வந்தது காரணமாக இருந்திருக்கலாம். தீவிரமான சிந்தனைகளை அவர்கள் வாசகர்கள் முன் வைத்திருக்கிறார்கள். வாழ்க்கைப் பிரச்சினைகள் சார்ந்து பல கூரான விமர்சனங்கள் நடந்திருக்கின்றன. முக்கியமாக சமுதாயம் சார்ந்த எண்ணங்களை மக்கள் உணர்வதற்கு இந்தக் கட்சிகளின் செயல்பாடுகள் ஒரு காரணமாக இருந்திருக்கிறது. ஆனால் வங்காளமும் கேரளாவும் தவிர மராட்டி, கன்னடம், ஹிந்தி இந்த மூன்று மொழிகளிலும் இந்த விஷயங்கள் தெளிவாக இருக்கிறது. மிக மோசமாக இருப்பது என்னுடைய பார்வையில் உலக அளவிலும் சரி, இந்தியாவிலும் சரி, தமிழகத்தில்தான் என்று நினைக்கின்றேன். உலகத்தில் எனக்குத் தெரிந்தவரையிலும் சரி இந்த மதிப்பீடு சார்ந்த குழப்பம் இந்த அளவுக்கு வளர்ந்த மொழிகள் எதிலும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவிலும் தமிழகத்தைவிட பின்தங்கிய மாகாணங்கள் இருக்கின்றன. இன்னும் கல்வி வசதி குறைவான, இன்னும் வறுமையான மாநிலங்கள் இந்த அளவுக்கு தொழில் வளர்ச்சி இல்லாத மாநிலங்கள் இந்தியாவில் இருக்கின்றன. அங்குகூட வியாபாரிகள் சமுதாய மதிப்பீடுகளைத் தீர்மானிக்கக் கூடியவர்களாக இல்லை.

வணிக போக்கு திரைப்படத்திலிருந்து வந்ததா ? முக்கியமாக திரைப்படத்துறையிலிருந்துதான் உருவாகியிருக்கிறது என்பது என்னுடைய அபிப்பிராயம்.

திரைப்படத்துறை, தொலைகாட்சி, வானொலி அல்லது அரசியல் கட்சிகள், பல்கலைக்கழகங்கள், சமய நிறுவனங்கள் என்றெல்லாம் நான் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கவில்லை. எல்லாவற்றையும் ஒரே அமைப்பின் பல்வேறுபட்ட முகங்களாகதான் நான் பார்க்கிறேன். தமிழகத்தில் கலாச்சார ரீதியான ஒரு விழிப்புணர்வு இருந்தது என்றால் திரைப்படங்கள் பெயரில் தீவிரமான விமர்சனங்கள் வெளிவந்திருக்க முடியும். எந்தத் தீவிரமான விமர்சனமும் இல்லை.

தீவிர எழுத்தாளர்கள், திரைப்படங்கள் மேல் பெரிய விமர்சனங்களைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். முப்பது நாற்பது வருஷமாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அது பொதுமக்களுடைய கவனத்திற்குப் போய்ச் சேருவதில்லை. சிறுபான்மையினருடைய கவனத்திற்குத்தான் வந்திருக்கிறது. அரசாங்கம் எப்போதுமே மோசமான திரைப்படங்களைத்தான் ஆதரித்துச் செயல்படுகிறது. பரிசும் எப்பொழுதும் மோசமான படங்களுக்குத்தான் கிடைக்கிறது. இந்தச் சூழ்நிலையும் கேரளாவில் இல்லை. கேரளாவில் சிறந்த படங்களுக்குத்தான் பரிசு கொடுப்பார்கள். ஆகச் சிறந்த படங்களுக்கு அவர்கள் பரிசு கொடுக்காமல் இருக்கலாம். நிச்சயமாக மோசமான படங்களுக்கு அந்தப் பரிசுகள் போய்ச் சேராது.

தமிழில் அரசியல்வாதிகளும் சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களும் ஒரே நபர்கள்தான். ஒரு சினிமாக்காரர் எந்த நிமிடமும் அரசியல்வாதியாக ஆகிடலாம். எந்த அரசியல்வாதியும் எந்த நிமிடமும் ஒரு சினிமாக்காரரும் ஆகலாம். அவர்கள் இரண்டு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களுடைய அக்கறைகள், எதிர்ப்பார்ப்புகள், மதிப்பீடுகள் ஒரே விதமானவை என்றுதான் நான் நினைக்கிறேன்.

தமிழ் நாட்டில் அரசியல் விழிப்புணர்வு, சமுதாய மாற்றம் நிகழ்வற்குக் கலாச்சார ரீதியான ஒரு மறுபார்வையும் புதிய மதிப்பீடுகளும் தோன்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இன்று இருக்கக்கூடிய கலாச்சாரச் சீரழிவில் அரசியல் மாற்றமோ சமுதாய மாற்றமோ நிகழ்வதற்கான வாய்ப்புகள் எதுமில்லை. இன்றைய அமைப்பைத் தொடர்ந்து எப்படி நீடித்துக்கொண்டு போவது என்ற நோக்கில் செயல்படுவது வணிகக் கலாச்சாரத்தின் ஒரு முக்கியமான கூறு. சமுதாய மாற்றத்திற்கெதிரான சக்திகள் சமுதாயத்தை சுரண்டக்கூடிய காரியங்களை வெற்றிகரமாகச் செய்து கொண்டு வருகின்றன. மக்களிடம் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது மிக முக்கியமான விஷயம். நிலைமையை இன்று அவர்கள் பார்க்கக்கூடிய முறையில் விழிப்புணர்ச்சிகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. அவர்களுடைய கனவுகள் வேறுவிதமாக இருக்கின்றன. மக்களுடைய கனவுகள் சார்ந்துதான் இந்தப் புத்தகங்கள் இன்றைக்கு விற்பனை ஆகின்றன.

வணிக சக்திகள் முதலில் மக்களைச் சீரழிக்கிறார்கள். மக்களின் பார்வை மிகவும் குறுகிப் போகிறது. யதார்த்தத்தை அவர்களுக்குப் பார்க்க முடியாமல் ஆகிவிடுகிறது. அவர்களுக்கு வாழ்க்கையை நேரடியாக எதிர்கொள்ளவதில் ஒரு பயமும் அச்சமும் ஏற்படுகிறது. கனவுகளே அவர்களுக்குச் சந்தோஷத்தைத் தரக்கூடியதாக இருக்கிறது. தங்கள் வாழ்க்கையில் இல்லாத விஷயங்களைப் போராடிப் பெறுவதற்குப் பதிலாக தங்கள் வாழ்க்கையில் இல்லாத விஷயங்களைப் பார்த்து, படித்து, ஒருவிதமான சுய இன்பத்தை அவர்கள் அடைந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி அவர்களைப் பழக்கப்படுத்திய பின் மக்களுடைய தேவையே இதுதான் என்று ஆகிவிடுகிறது. இந்த விதமான படைப்புகள் அல்லது கனவு இலக்கியம்தான் அவர்களின் விருப்பமாக இருக்கிறது. எனவே அதை நாங்கள் உற்பத்தி செய்து தருகிறோம் என்று இன்றைக்கு வணிக இலக்கியம், வணிக பத்திரிகைகள் அல்லது வணிக சினிமாக்கள் எல்லாமே நியாயம் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

ஜனங்கள் இதைதான் விரும்புகிறார்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் வரையிலும், ஜனங்களைப் பாதிக்கக்கூடிய ஒரு விஷயத்தை உருவாக்காதது வரையிலும், அவர்களிடம் எந்தவிதமான விழிப்புணர்வையும் உருவாக்காதவரையிலும், அவர்கள் பார்வைகள் சினிமா சம்பந்தப்பட்டு, தமிழ் அரசியல் சம்பந்தப்பட்டு, தமிழ் பல்கலைக்கழகங்கள் சம்பந்தப்பட்டு, நிறுவனங்கள் சம்பந்தப்பட்டு, ஒரளவேனும் மாறாதவரையிலும் தமிழ் சமுதாயத்தில் எந்த விதமான மாற்றத்தையும் நிகழ்த்த முடியாது.

ஆனால் இன்றைக்கு தமிழ் நாட்டில் உயிர்த் துடிப்புடன் இருக்கும், மிகவும் சத்தான ஒரு விஷயம் சிறுபத்திரிகை இயக்கம்தான். இந்த இயக்கத்திற்குள் பல்வேறுபட்ட கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். இந்தக் கூறுகளை விரிவடையச் செய்வதன் மூலம் சமூகத்தில் அவை நாம் எதிர்ப்பார்க்கக்கூடிய விதங்களில் நிகழலாம் அல்லது வேறுவிதமாக நிகழலாம். நாம் நினைக்கக்கூடியவற்றிற்கு முற்றிலும் வேறுபட்ட மாற்றத்தை ஜனங்கள் விரும்பவும் செய்யலாம் – ஆனால் இங்கு இன்றிருக்கக்கூடிய மிக ஜீவனான அம்சம் இந்த சிறுபத்திரிகை அம்சம்தான். இந்த அம்சத்தை வளர்க்காதவரையிலும் எந்தத் தளத்திலிருந்தும் வேறுவிதமான சிந்தனைகள் வரக்கூடிய வாய்ப்பு இன்று தமிழ் சமூகத்தில் இல்லை என்று நான் நினைக்கிறேன். சிறுபத்திரிகை வட்டாரத்தில்தான் அதிகப்படியான ஒரு பிரக்ஞை இருக்கிறது. அந்தப் பிரக்ஞை கூட, சிறுபத்திரிகைகள் சார்ந்த பிரக்ஞைகள்கூட, மற்ற தேசங்களில் இருக்கக்கூடிய விஷயங்களுடன் ஒப்பிடக்கூடிய சமயங்களில் மிகவும் பின் தங்கித்தான் இருக்கிறது. தமிழகத்தில் இருக்கக்கூடியவற்றில் ஆகக்கூடிய சிந்தனை கொண்டவையாக சிறுபத்திரிகை சார்ந்த சிந்தனைகள் தான் இருக்கின்றன. எனவே அந்த சிந்தனைகளை வளர்த்தெடுப்பதற்கான வழிமுறைகளைப் பற்றித்தான் நடைமுறையில் நாம் யோசிக்க முடியும். அதிலிருந்துதான் அரசியல் கட்சிகள் அல்லது சினிமா சம்பந்தப்பட்ட பார்வைகள் எல்லாம் கல்வி சம்பந்தப்பட்ட பார்வைகள் எல்லாமே மாற்றம் பெறமுடியும். ஒரு சமுதாய மாற்றம் அப்படியாகத்தான் உருவாக முடியும்.

பாரதியாருடைய படைப்புக்கள் தமிழ் நாட்டில் எப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது ?

பாரதியாருடைய படைப்புக்கள் நிச்சயமாக தமிழ் சமூகத்தைப் பாதித்திருக்கிறது. ஆனால் அந்த பாதிப்பெல்லாம் எனக்குத் தெரிந்தவரைக்கும் சிறுபத்திரிகை இயக்கத்திற்குள்தான் நிகழ்ந்திருக்கிறது. வணிக எழுத்தாளர்கள் பாரதியுடைய பெயரைச் சொல்லலாம். ஆனால் அவர்கள் பாரதியை நேர்மையாக எதிர்கொள்ளுபவர்கள் அல்ல. நேர்மையாக விமர்சிப்பவர்களும் அல்ல. உதட்டளவில் பாராட்டிப் பேசுகிறார்கள். ஒருவரும் அவருடைய கருத்துக்களை ஆழ்ந்து பரிசீலிக்கவில்லை. பாரதியின் கருத்துக்களை ஏற்பது பலவிதமான பிரச்சனைகளை உருவாக்கக்கூடியது. பாரதியை அனுசரிப்பது எளிமையான காரியம் அல்ல. வணிக எழுத்தாளர்கள் பொதுமேடைகளில், பிற சமயங்களில் பாரதியைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள். பாரதி பற்றி ஆழ்ந்த சிந்தனைகளோ, விமர்சனங்களோ அவர்கள் இடையில் எழுந்ததில்லை. 1921லிருந்து இன்று 1993 வரையிலும் பாரதி பற்றி மிகப் பெரிய விமர்சனங்கள் வரவில்லை. அவரைப்பற்றிய சிறந்த வாழ்க்கை வரலாறு கூட வரவில்லை.

ஆனால் இதுவரையிலும் வந்திருக்கக்கூடிய விமர்சனங்களும், வாழ்க்கை வரலாறுகளும் சிறுபத்திரிகை சார்ந்த எழுத்தாளர்களிடமிருந்துதான் வந்திருக்கிறது. வணிக பத்திரிகைகள் சார்ந்த எழுத்தாளர்கள் யாரிடமிருந்தும் பாரதி பற்றி எதுவும் வரவில்லை. அவர்கள் பொதுவாக மேடைகளில் அவரது பாடல்களைப் பயன்படுத்துவார்கள். ஒரு சில பாடல்களை அவர்கள் மனப்பாடம் செய்து வைத்திருப்பார்கள். கிட்டத்தட்ட ஒரு ஐம்பது கவிதைகளைப் படித்திருப்பார்கள். அவை எல்லா சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தக்கூடிய விதமானதாகத்தான் இருக்கும். அந்த வகையில் அது அவர்களுடைய ஒருவிதமான பிழைப்பு என்று நினைக்கிறேன். அந்த பிழைப்புக்குத் தேவையான அளவிற்கு பாரதியைப் படிப்பார்கள். பயன்படுத்துவார்கள். அவ்வளவுதான்.

ஒரு படைப்பாளி தான் எழுதுவதையும் சொல்வதையும் வாழ்க்கையில் கடைப்பிடித்தாக வேண்டுமா ? அல்லது அவன் தன்னுடைய வாழ்க்கையில், ஒருவிதமாகவும் படைப்புக்களில் வேறு விஷயங்களை முக்கியப்படுத்துபவனாகவும் இருக்கலாமா ? ஒரு உதாரணத்தை சொல்கிறேனே. மாக்சிம் கார்க்கி பல நல்ல நல்ல கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். வாழ்க்கையில் அவற்றைக் கடைப்பிடித்தாகத் தெரியவில்லை. இது பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன ?

கார்க்கி அவர் கூறிய கருத்துக்களை அனுசரிக்கவில்லை என்று நினைக்கவில்லை. நீங்கள் கூறுவது நான் அறியாத விஷயமாக இருக்கிறது. என்னுடைய அபிப்பிராயங்கள் ஒரு பக்கமிருக்க உலகத்தில், விமர்சகர்கள் பல்வேறுபட்ட சமயங்களில் மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முதலில் ஒரு எழுத்தாளனுடைய எழுத்தை மட்டும் பார்த்தால் போதும்; அவனுடைய வாழ்க்கையைப் பார்க்க வேண்டியதில்லை என்று சொல்லக்கூடிய போக்கு மிக வலுவானதாக இருந்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் வாழக்கூடிய எழுத்தாளர்களுடைய வாழ்க்கையை நாம் அறிந்துகொள்ள முடியும். முற்காலத்தில் வாழ்ந்த படைப்பாளிகளின் வாழ்க்கையைப் பார்க்க நமக்கு சந்தர்ப்பம் இல்லை. சமகால எழுத்தாளனுடைய, ஓவியனுடைய இசைக் கலைஞனுடைய வாழ்க்கையை அடிப்படையாக வைத்து அதன் அடிப்படையில் அவர்களுடைய கலைகளை விமர்சிக்கக்கூடிய விமர்சனம் தவறான விமர்சனமாக அமைய வாய்ப்பிருக்கிறது.

ஆகவே ஒரு படைப்பாளி தனது படைப்புக்களில் என்னென்ன விஷயங்களைச் சொல்கிறானோ, அதை அனுசரிக்கிறானா இல்லையா என்பதைப் பார்ப்பதைவிடப் படைப்புக்களில் சொல்ல வந்த விஷயத்தைத் தீவிரமாக சொல்லியிருக்கிறானா, அவை மனித மனங்களைப் பாதிக்கக்கூடிய அளவிற்குத் தீவிரமாக இருக்கிறதா ? இந்தக் கூறுகளை, அவன் அந்த படைப்புகளில் தருவதில் வெற்றிப் பெற்றிருக்கிறானா என்பதை மட்டும் பார்த்தால் போதும் என்ற அபிப்பிரயம் வலுவாக இருக்கிறது.

எழுத்தாளன் தான் எந்த விஷயங்களை சொல்லுகிறனோ அதை அவன் அனுசரிக்காத வரையிலும் அவன் சொல்லக்கூடிய விஷயங்களுடைய சாராம்சத்தை, வீரியத்தை அவனால் உணரமுடியாது. அவனே அதன் சக்தியை உணர வேண்டுமென்றால் அந்த விஷயங்களை அவன் நடைமுறை வாழ்க்கையில் அனுசரித்து அதிலிருக்கக்கூடிய நெருக்கடிகளை அவன் அனுபவித்திருக்க வேண்டும். அவன் அனுபவிக்காத வரையிலும் அவனுடைய கருத்துக்கள் ஒரு ஜீவித இயக்கத்தின் கூறாக மலராது. அது மூளையில் ஒட்டிக்கொண்டு இருக்கக்கூடிய சில கருத்துகளாக மட்டுமே இருக்கும். அதிலிருந்து மேலான படைப்புகள் வர முடியாது என்னும் இன்னொரு விதமான கருத்தும் இருக்கிறது. நான் இரண்டாவது கருத்தை நம்பக்கூடியவன். ஒரு எழுத்தாளன் சில விஷயங்களை சொல்கிறான் என்றால் ஒன்று அவன் முழுமையாக அதை அனுசரிக்க வேண்டும். அல்லது அதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மனிதன் என்கிற அளவில் அவனிடம் பலகீனங்கள், சறுக்கல்கள் இருக்கலாம். நாம் பரிபூரணத்தை எழுத்தாளனிடம் எதிர்ப்பார்க்க முடியாதுதான். அவன் உணர்ச்சிவசப்பட்டவன். பல்வேறுபட்ட குறைவான வாழ்க்கைப் பின்னணிகளில்தான் அவன் வளர்ந்து வந்திருக்கிறான். ஆகவே அவனிடம் பல்வேறுபட்ட கோளாறுகள் இருக்கலாம். ஆனால் தாம் நம்பக்கூடிய விஷயங்களை, பகிரங்கப்படுத்தக்கூடிய விஷயங்களை அனுசரிக்கக் கூடியதற்கான ஒரு வேட்கை, ஒரு தீவிரமான முனைப்பு அவனிடம் இருந்தாக வேண்டும். அப்படி இருந்தால்தான் அவன் நேர்மையான எழுத்தாளன். அந்த முனைப்பில் இருந்துதான் அவன் ஒரு ஆவேசத்தைப் பெறுகிறான். அந்த ஆவேசம்தான் இலக்கியங்களில் பிரதிபலிக்கிறது. தைரியத்தை உருவாக்குகிறது என்று நான் என்னளவில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.

நான் ஒரு விஷயத்தைப் பின்பற்ற நினைக்கிறேன். ஆனால் பின்பற்ற முடியாமல் போகிறது. அதனால் சங்கடங்கள் ஏற்படுகிறது. தவறுகிறேன், திரும்பவும் பின்பற்ற முயற்சி செய்கிறேன். திரும்பவும் தவறுகிறேன். இந்த விதமான சங்கடங்கள் ஏற்படுகிறது. நானே என்னைக் குற்றப்படுத்திக் கொள்கிறேன். நானே என் மீது வருத்தம் கொள்கிறேன்.

இதில் படைப்புக்குரிய மதிப்பீடுகளில் நம்பிக்கை இல்லாமல் ஒன்றைச் சொல்லுவது, இன்னொன்றைச் செய்வது என்று வேஷம் போடக்கூடிய எந்த எழுத்தாளன் மீதும் மதிப்பு ஏற்படுவதில்லை. அவர்களுடைய படைப்புகள் எல்லாம் அவர்கள் போட்ட வேஷங்களைதான் அம்பலப்படுத்திக்கொண்டு இருக்கின்றன. தீவிரமான எழுத்தாளனுடைய புத்தகங்கள் அவன் இறந்து போன பிறகுதான் பெரும் வாழ்வு கொள்ளத் தொடங்குகின்றன. புதுமைப்பித்தன் இருக்கக்கூடிய காலத்தில் அவருடைய புத்தகங்கள் எதுவுமே பெரிய அளவில் வாழவில்லை. அவர் இறந்து போனதற்கு பின்னால் அவருடைய புத்தகங்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அது புதுமைப்பித்தனுக்குத் தெரியாது. இப்போது அவருடைய படைப்புக்களின் ஜீவித இயக்கம் முன்னைவிட அதிகமாக இருக்கிறது. இன்னும் பதினைந்து ஆண்டுகளில், இருபது ஆண்டுகளில் இன்னும் அதிகமாகதான் போய்க் கொண்டிருக்கும். இப்படித்தான் இலக்கியமும் இலக்கிய நியதிகளும் கால அளவில் செயல்படும் என்று நான் தன்னளவில் நம்புகிறேன். நம்பிக்கை சார்ந்த விஷயம்தான் இது. இதற்கு எதிர்நிலையில் பலவிதமான வாதங்கள் இருக்கின்றன.

ஈழத்து இலக்கியம் பற்றிய உங்களது கருத்துக்கள் என்ன ?

ஈழத்தில் இலக்கிய வளர்ச்சி பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு இல்லை. இப்போது சமீப காலங்களில் ஈழத்திலிருந்து ஈழத்து எழுத்தாளர்கள் எழுதக்கூடிய இலக்கியங்களில் ஒரு பகுதி ஈழத்தில் வெளிவருகிறது. இன்னொரு பகுதி உலகத்தின் பல நாடுகளில் இருந்து வெளிவரக்கூடிய ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. இந்தப் பத்திரிகைகள் தமிழகத்தில் கிடைக்கக்கூடிய வாய்ப்பு மிக குறைவு. அதுவும் கடந்த பத்து வருடங்களாக ஈழத்து எழுத்தாளர்கள் எந்தவிதமாகச் செயல்படுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதில் சில நடைமுறைச் சங்கடங்கள் இருக்கின்றன. ஆனால் மொத்தத்தில் இருபது அல்லது முப்பது வருஷங்கள் நடந்திருக்கக்கூடிய இலக்கிய வளர்ச்சி, கலாச்சார வளர்ச்சி, கலை சார்ந்த சிந்தனைகள் சம்பந்தமாக எனக்கு ஒரு பாராட்டதகுந்த, மனநிறைவு கொள்ளக்கூடிய எண்ணங்கள்தான் என் மனதில் இருக்கின்றன. இதை, நான் ஈழத்திலிருக்கக்கூடிய எழுத்தாளர்கள் மிகப் பெரிய எழுத்துக்களை எழுதியிருக்கிறார்கள் என்று நான் சொல்லுவதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அப்படி சாதிக்கவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். இந்த நெருக்கடிகள்கூட ஒரு நல்ல இலக்கியத்தை உருவாக்கக்கூடிய சந்தர்ப்பத்தை அவர்களுக்கு ஏன் தரவில்லை என்பது ஒரு கேள்வியாக இருக்கிறது.

தமிழ் வாழ்க்கையை எடுத்துக் கொண்டார்கள் என்றால் இந்தியாவில் வாழக்கூடிய தமிழர்களின் வாழ்க்கையும் ஈழத்தில் வாழக்கூடிய தமிழர்களின் வாழ்க்கையும் பெருமளவுக்கு வித்தியாசப்பட்டு இருக்கிறது. ஈழத் தமிழர்களுக்கு வாழ்க்கை சார்ந்து மிகப் பெரிய சோதனை இருந்து வருகிறது. கட்டாயத்தின் பேரில் வேறு வேறு தேசங்களுக்குப் போகவும், வேறு கலாச்சாரங்களைச் சார்ந்த ஆட்களுடன் பழகவும், வேறு கலாச்சாரங்களைப் பார்க்கவும், தங்களுடைய பழைய மனோபாவங்களை உதறவும் இது முக்கியமான காரணமாக இருந்திருக்கிறது. இதற்கு முன்னால் வரலாற்றில் எப்போதுமே நிகழாத ஒரு சந்தர்ப்பமாக இது அமைந்திருக்கிறது. மிக மோசமான நிகழ்வு என்று எண்ணும்போது கூட சிறு அனுகூலமும் அதில் இருக்கிறது. இன்னும் ஆழமான படைப்புக்களை அவர்கள் உருவாக்கியிருக்க வேண்டும்.

தமிழகப் படைப்புக்களில் இருக்கக்கூடிய சராசரித் தன்மையைவிட ஈழத்துப் படைப்புக்களில் ஒரு அனுபவபூர்வமான ஒரு தெளிவு, அபத்தமில்லாத நிலை, யதார்த்தம் சார்ந்து வாழ்க்கையை நேரடியாகப் பார்க்கக்கூடிய இயல்பு, எதிர்கொள்ளும் பிரச்சனைகளைச் சரிவர கனவுகள் இல்லாமல் மதிப்பிடக்கூடிய மனோபாவம் எல்லாக் கவிதைகளிலும் நாவல்களிலும் கட்டுரைகளிலும் வெளிப்பட்டிருக்கிறது. தமிழில் இருக்கக்கூடிய கனவு அம்சம் என்பது ஈழத்து இலக்கியத்தில் இல்லை. உயர்ந்த படைப்புக்கள் ஏன் வரவில்லை என்பது ஒரு வியப்பாகவும் இருக்கிறது. ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதென்று நம்புகிறேன். மிக சிறப்பான இலக்கியங்கள் உருவாவதற்கான சாத்தியங்கள் அங்கு இருக்கின்றன. இன்னும் காலம் அதற்கு துணை போகவில்லை போலிருக்கிறது. நெருக்கடியிலிருந்து ஈழத் தமிழர்கள் இன்னும் மீளவில்லை. நெருக்கடிக்குள் இருந்துகொண்டிருப்பது ஒரு மனத் தடையாக இருக்கலாம். நெருக்கடியிலிருந்து மீண்டு ஆசுவாசம் பெற்று, காலத்தின் இடைவெளியும் அவர்களுக்குத் தேவையாக இருக்கலாம். ஒரு சுவருக்குப் பக்கத்திலிருந்து சுவரைப் பார்க்க முடியாததைப் போல நெருக்கடிகளைப் பார்ப்பதற்கு அவசியமான இடைவெளியும் தேவைப்படுகிறது போலிருக்கிறது.

ஈழத்துக் கவிதைத்துறையில் நிலைமை சற்று மேலாக இருக்கிறதல்லவா.. ?

கவிதைத் துறையில் ஈழத்தில் முக்கிய கவிஞர்கள் எல்லாருமே பொருட்படுத்திப் பேசத் தகுந்த அளவில், மதிக்கத் தகுந்த அளவில், அபத்தம் எதுவுமே இல்லாமல், அனுபவங்களையும் சிந்தனைகளையும் தெளிவாக வெளிப்படுத்துகிறார்கள். அதில் பாவனையில்லை. பொய்யில்லை. கனவில்லை. ஆனால் வளர்ச்சியும் இல்லை. அதற்கு முக்கியமான காரணம் தமிழனின் இரத்ததில் ஊறி இருக்கக்கூடிய romantic மனோபாவம் என்று நினைக்கிறேன். அது தமிழகத்துத் தமிழர்களிடையே இருப்பதில் வியப்பில்லை. ஆனால் இவ்வளவு நெருக்கடிகளுக்கு ஆளான பிறகும், இவ்வளவு வாழ்க்கை நிதர்சனங்களைச் சந்தித்த பிறகும், ஈழத்துத் தமிழர்களிடையே இருப்பதைப் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது. சில கவிஞர்களுடைய வரிகள் மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்துகின்றன.

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு கவிஞரின் கவிதை ஒன்றைப் படித்தேன். அதில் ஒரு பெண் புல் பறித்துக் கொண்டிருக்கிறாள். அதைப் பற்றிப் பாடுகிறார். எனக்கு அதுபற்றி எந்த ஆட்சேபணையும் இல்லை. அந்தக் காட்சி முக்கியமானதுதான். அவர் பெற்ற அனுபவமாக இருக்கலாம். ஆனால் அந்தப் பெண்ணை ரம்பா, மேனகை என்று சொல்கிறார். அந்தப் புல் பறிக்கும் பெண்ணைப் பார்த்து அவர் அந்த அனுபவத்தைப் பெற்றிருக்கமாட்டார் என்பது நிச்சயம். அவர் தமிழன் என்பதால் அப்படிச் சொல்கிறார் என்று நான் நினைக்கிறேன். அது தவறான கண்ணோட்டம். ஏனெனில் அந்தக் கவிஞர் ரம்பை, மேனகை என்று எழுதிய பெண்களைப் பற்றி எனக்குத் தெரியும் உங்களுக்குத் தெரியும். அந்தப் பெண்களும் தம்மை அவர் அப்படி அழைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் கிடையாது. இந்நிலையில் அவர்களுக்கு நம்முடைய வார்த்தைகளால் எந்தவித லஞ்சமும் தரவேண்டிய அவசியமே கிடையாது. நம்முடைய முன்னோர்கள் அப்படிச் செய்திருக்கலாம். அது இன்று காலாவதியாகிவிட்ட பழக்கம். உண்மையாகவே அந்த பெண்கள் நம் மனதில் எப்படிப்படுகிறார்களோ அப்படியே சொல்லக்கூடிய நேர்மை நமக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் அவரை உண்மையான படைப்பாளியாக நாம் மதிக்க முடியும்.

தமிழகக் கவிஞர்களிடையே இந்த அபத்தம் வெகு அதிகமாக இருக்கும். வரிக்கு வரி இதுபோன்ற அபத்தங்கள் இருந்து கொண்டே இருக்கும். சிறந்த கவிஞர்கள் ரொம்பவும் தெளிவாகப் பேசுவார்கள். நடுத்தரமான கவிஞர்கள் ரொம்ப அளவிற்கு சமநிலை இல்லாமல் பேசுவார்கள். ஆனால் ஈழத்தில் பரவலாக தங்களுடைய விஷயங்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்துகிறார்கள்.

பாரதிக்கு இணையாக சேரன் போன்றவர்களை நீங்கள் சொல்லிக் கொண்டு வருகிறீர்கள்…அதுபற்றி உங்கள் அபிப்ராயம் என்ன ?

நான் பாரதிக்கு இணையாக நான் சேரனைச் சொன்னதில்லை. அவர் நல்ல கவிஞர்களில் முக்கியமானவர் என்று சொல்லியிருக்கிறேன். மகாகவியின் கவித்துவத்தைவிட சேரனுடைய கவித்துவம்தான் என் மனதிற்கு நெருங்கி வருகிறது என்று சொல்லியிருக்கிறேன். சமீபகாலத்தில் அவரது கவிதைகளில் ஒரு தொய்வு ஏற்பட்டிருக்கிறது. அந்தத் தொய்வைக்கூட நான் எதிர்மறையாகப் பார்க்கவில்லை. ஏன் எதிர்மறையாகப் பார்க்கவில்லை என்றால் எனக்குத் தெரிந்த அளவில் ஈழத்துக் கவிஞர்களில் சேரன் கவிதைப் படைப்பு ஒரு நீண்ட பயணம் என்னும் பிரக்ஞை கொண்டவர். என் எண்ணம் கவிஞன் எழுதி வரும்போது சில வெற்றிகள் சுலபமாகக் கிடைக்கும். மொழி சார்ந்த ஒரு பிடிமானம் கிடைக்கும். சில படிமங்கள் புதிதாகக் கிடைத்துவிடும். உடனே வாசகர்கள் ஆஹா ஓஹோ என்பார்கள். விமர்சகர்கள் இவன்தான் இந்த நூற்றாண்டின் சிறந்த கவிஞன் என்று சொல்லுவார்கள். இதிலே மயங்கிப் போய் முடங்கிப் போன கவிஞர்கள்தான் தமிழ் மொழியில் அதிகம். அங்கேயே உட்கார்ந்துவிடுவார்கள். அங்கேயே படுத்துக் கொண்டும் விடுவார்கள். சின்ன வெற்றிகள் கிடைத்ததும் இதுதான் நம்முடைய இடம் என்று கருதி அதே விஷயத்தையே ஐம்பது வருடங்கள் எழுதிக் கொண்டிருப்பார்கள். இது தமிழ்க் கவிஞனுடைய பொது மனநிலை. இதற்குக் கவிதை என்பது ஒரு பயணம் என்னும் பிரக்ஞையின்மையே காரணம். பயணம் என்ற பிரக்ஞை கொண்ட கவிஞராக எனக்குப் பட்டது சேரன்.

சமீப காலங்களில் அவருடைய தாழ்வுகள் கூட ஏற்கனவே அவர் அடைந்த வெற்றிகளைத் தூக்கியெறிந்துவிட்டு புதிய வெற்றிகளைத் தேடுவதால் ஏற்படக்கூடிய தாழ்வு என்று நினைக்கிறேன். நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அவசரப்பட்டு எதுவும் சொல்லிவிடக்கூடாது என்ற மனோபாவத்தில் இருக்கிறேன். தமிழ் நாட்டுக் கவிஞர்களில் பலருக்கும் காலம் தங்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது என்ற விஷயமே தெரியாது. அவர்கள் வீடு இருக்கிற இடத்திலேயே காலத்தை கட்டிப் போட்டிருப்பதுபோல் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். சேரன் சிறந்த கவிஞராக வரவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அது நிறைவேறக்கூடும் என்று நம்புகிறேன்.

சில வருடங்களுக்கு முன்னால் தளையசிங்கத்தினுடைய ஏழாண்டு கால இலக்கிய வளர்ச்சி என்று ஒரு புத்தகம் வந்தது. அதில் டானியல் போன்ற எழுத்தாளர்களைக் கொச்சைத்தனமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர் எழுதியிருப்பார். டானியலுடைய கொள்கையிலிருந்து தளையசிங்கத்தின் கொள்கைகள் மாறுபட்டிருக்கலாம். அதற்காக ஒருவரை கொச்சைத்தனமாக விமர்சிப்பது தவறென்று படவில்லையா உங்களுக்கு… ? தளையசிங்கம் மேல் நீங்கள் மதிப்பு வைத்திருக்கலாம். இலக்கிய விமர்சனம் குறித்து நீங்கள் என்ன கருத்து வைத்திருக்கிறீர்கள். டானியலின் ?பஞ்சமர் ? நாவல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

தளையசிங்கத்தை அறிமுகப்படுத்தி தமிழில் நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். அதில் தளையசிங்கத்திடம் எனக்கு என்ன வகையான ஈடுபாடு இருக்கிறது, எதனால் தளையசிங்கத்தை மதிக்கிறேன் என்பதை நான் சொல்ல முயன்றிருக்கிறேன். அந்தக் கட்டுரையை நீங்கள் படித்திருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. அது ஒரு முழுமையான கட்டுரை அல்ல. உண்மையாக அவர் மேல் எந்த அளவுக்கு மதிப்பு உண்டோ அதைவிடக் குறைவாகத்தான் அந்தக் கட்டுரையில் சொல்லி இருக்கிறேன். தமிழ் வாசகர்கள் தளையசிங்கத்தைச் சுதந்திரமாகப் படிப்பதற்கு என்னுடைய எழுத்து ஒரு தடையாக இருக்கக்கூடாது, அவரைப் பற்றி அதிகமாகச் சொல்வது ஒரு காரணமாக இருந்துவிடக்கூடாது. சுதந்திரமாக அவர்கள் அணுக வேண்டும். அணுகி அவரைப் பற்றி தங்களுக்கு என்ன அபிப்பிராயம் ஏற்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். ஆனால் பெரும்பான்மையான வாசகர்களுக்கும், தீவிர எழுத்தாளர்களுக்கும் தமிழகத்தில் தளையசிங்கத்தைப் பற்றித் தெரியாமல் இருக்கிற காரணத்தினால் நான் அவரைப் படித்த போது – எனக்கும் அவருக்கும் இருக்கக்கூடிய கருத்து ஒற்றுமைகள் – கருத்து வேற்றுமைகள் ஒரு பக்கம் இருக்க – தளையசிங்கம் ஒரு முக்கியமான எழுத்தாளன் என்னும் ஒரு தீர்மானம் என் மனதில் ஏற்பட்டதால் அவரை அறிமுகப்படுத்தி ஒரு கட்டுரை எழுதினேன். என்னுடைய கட்டுரையைத் தவிர தளையசிங்கம் சம்பந்தப்பட்ட கட்டுரையோ, குறிப்போ, அறிமுகமோ எதுவும் தமிழ்நாட்டில் வந்திருக்கிறதா என்பது தெரியவில்லை.

டானியல் பற்றி அவர் மிக மோசமாக சில வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். தளையசிங்கம் எந்த இடத்திலேயும் எந்த எழுத்தாளனைப் பற்றியும் மோசமாகப் பேசியிருக்கிறார், கீழ்த் தரமாக பேசியிருக்கிறார் என்று நான் கருதவில்லை. அப்படிப்பட்ட வரிகள் எதுவும் என் மனதில் இல்லை. தளையசிங்கம் மிக நேர்மையாகத்தான் செயல்பட்டிருக்கிறார் என்று நம்புகிறேன். அவர் அவருடைய காலத்தில் மிகத் தீவிரமாக சிந்தித்த ஒரு தமிழ் எழுத்தாளர். என்னைப் பொறுத்தவரையில் அவருடைய காலத்தில் அவர் அளவுக்குத் தீவிரமாகச் சிந்தித்த தமிழ் எழுத்தாளன் இல்லையென்று என்னுடைய கட்டுரையில் சொல்லியிருக்கிறேன். பாரதி எப்படி எல்லாக் காலத்தையும் இணைத்து சிந்தித்தானோ அதே மாதிரி பாரதிக்குப் பின்னால் தமிழ் இலக்கியம் சார்ந்து தமிழ்க் கலாச்சாரம் சார்ந்து, உலகம் சார்ந்து சிந்தித்த ஒரு கலைஞன் என்று நான் அந்தக் கட்டுரையில் பட்டவர்த்தனமாகச் சொல்லியிருக்கிறேன். அவ்வாறு சொன்னது இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. அவர் தரக் குறைவாக எதுவும் சொல்லவில்லை. பொதுவாக தரக்குறைவான காரியங்களுக்கு எதிரான ஒரு மனோபாவத்தை அடிப்படையாகக் கொண்டவர் அவர். டானியல் பற்றி அவர் நல்ல நாவலாசிரியர் இல்லையென்று சொல்லியிருக்கலாம். எனக்கு ஞாபகம் இல்லை. டானியல் நல்ல நாவலாசிரியர் இல்லையென்றுதான் நானும் நினைக்கிறேன். அதற்கான காரண காரியங்கள் எனக்கு இருக்கிறது.

ஒரு நாவலாசிரியன் சமூகத்தை, ஜாதிக் கொடுமையைச் சாடியிருக்கலாம். ஏழைகள் பக்கம் நின்று பேசியிருக்கலாம். தொழிலாளர்கள் பக்கம் நின்று பேசியிருக்கலாம். அல்லது இடதுசாரிக் கட்சிகள் பக்கம் நின்று பேசியிருக்கலாம். இதெல்லாம் நல்ல விஷயங்கள்தான். இதில் கருத்து வேற்றுமை ஒன்றும் இல்லை. ஆனால் ஜாதி சம்பந்தப்பட்ட கூறுகளை அவன் எப்படி அவருடைய படைப்பில் வெளிப்படுத்துகிறார் என்பது முக்கியமான விஷயம். ஜாதிக் கொடுமை இருக்கிறது என்பதை டானியல் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. டானியல் பிறப்பதற்கு முன்பே தொன்று தொட்டு ஜாதிக் கொடுமை நம் சமுதாயத்தில் தாண்டவமாடி வருகிறது. நாம்தான் ஜாதியைப் பேணிக் கொண்டு வந்திருக்கிறோம். நேற்றைக்கல்ல இன்றைக்கல்ல, மேல்ஜாதிக்காரன் கீழ்ஜாதிப் பெண்ணைக் கெடுக்கும். நம் சமூகத்தில் பலாத்காரங்கள் தொடர்ந்து நடந்து வந்திருக்கின்றன. இதை மட்டும்தான் சொல்லத் தெரியுமென்றால் அவன் எனக்குப் படைப்பாளி இல்லை. அதைத்தான் தளையசிங்கம் சொல்லியிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.

?பஞ்சமர் ? நாவலில் முதலில் ஜாதி சார்ந்து கறுப்பு வெளிளை சித்திரங்களை உருவாக்குகிறார். ஜாதி என்ற ஒன்றை அவர் எதிர்க்கிறார் என்பதற்காக அவரை நீங்கள் சிறந்த படைப்பாளி என்று சொல்ல வேண்டாம். எத்தனையோ அரசியல்வாதிகள், சமூக சிந்தனையாளர்கள் ஜாதியை எதிர்க்கிறார்கள். ஓவியர்கள் எதிர்க்கிறார்கள். விஞ்ஞானிகள் எதிர்க்கிறார்கள். இசைக் கலைஞர்கள் எதிர்க்கிறார்கள். ஆனால் படைப்பில் மொழி சார்ந்து பேசக்கூடிய சமயத்தில் ஜாதி சார்ந்து நுட்பமாக என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பது முக்கியமான விஷயம். ஒன்றுமே சொல்லவில்லை. கீழ்ஜாதிப் பெண்ணை மேல்சாதிக்காரன் கெடுக்கிறான். ஏன் கீழ் ஜாதிக்காரனுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் மேல்ஜாதிப் பெண்ணைக் கெடுக்க மாட்டானா ? மனித மனங்கள் சம்பந்தமாகப் பொய் சொன்னால் அவனைக் கலைஞன் என்று ஒத்துக்கொள்ளக் காரணங்கள் எதுவுமே கிடையாது. ஜாதிக்கு எதிராக இருக்கிறார் என்பது முக்கியமான விஷயம். பாராட்டத்தகுந்த விஷயம். இந்த விஷயத்தைக் கறுப்பு வெளிளை சார்ந்து சமூக சிக்கல்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், மனித மனங்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், வரலாற்றைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், தன்னுடைய அனுபவங்களுக்கு விசுவாசமாக இல்லாமல், நுட்பமாக இந்த ஜாதியைச் சொல்வதற்கான சந்தர்ப்பங்களோ, சந்தர்ப்பங்களை எப்படி உருவாக்குவது என்பது பற்றிய பார்வைகள் எதுவுமே இல்லாமல், பொது சிந்தனையிலும் அரசியல் அவதானிப்புகளிலும் இருக்கும் வாசகங்களை ஒரு நாவலில் பிரதிபலித்தால் ஜாதிக்கு எதிராக அவர் இருக்கிறார் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு அவர் படைப்பாளியாக இல்லை என்பதும் உண்மை.

புத்தகங்களில் பல சிந்தனைகள் இருக்கின்றன. அவருடைய சமூக சிந்தனைகளை நான் கேள்வி கேட்கவில்லை. சமூக இயல் சார்ந்த அவர்கள் எவ்வளவோ ஆராய்ச்சிகள் செய்து இது சம்பந்தமான புள்ளி விபரங்களைச் சேகரித்து இந்த மனோபாவம் எப்படி வேலை செய்கிறது, எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றியெல்லாம் ரொம்பவும் விரிவாகச் சொல்லியிருக்கிறார். இந்தக் கருத்துகளைப் பிரதிபலிப்பதாலேயே ஒரு புத்தகம் சிறந்த புத்தகம் ஆகிவிடாது. சமூகத்தைப் பற்றி ஒரு கலைஞன் தன்னுடைய புதிய பார்வையை வெளிப்படுத்துகிறான். அவர் ஒரு சோஷியாலஜிஸ்ட்டாகவும் இருக்கலாம். ஒரு சோஷியாலஜிஸ்ட் கலைஞனாக இருக்க முடியாது. நீங்கள் சோஷியாலஜி சம்மந்தப்பட்ட புஸ்தகத்தை ஏன் ஒரு நாவலாக ஏற்றுக் கொள்வதில்லை. அதில் இவர் சொல்லக்கூடிய கருத்துகள் இதைவிட அதிகமாக இருக்கிறதே! நாம் இங்கே கேட்க வேண்டிய பிரச்சினை அவர் ஒரு படைப்பாளியா ? அவர் ஒரு படைப்புருவத்தை முன் வைக்கிறாரா ? அதன் மூலம் ஒரு மேலான அனுபவத்தைத் தந்திருக்கிறாரா ? அப்படியெல்லாம் எனக்கு எதுவுமே ஏற்படவில்லை. தளையசிங்கம் ஜாதிக்கு எதிராகப் போராடியவர் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அது முக்கியமான விஷயம். ஜாதிக்கெதிரான பிரச்சினை மொத்தத்தில் டானியல் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல; அது தளையசிங்கமும் சம்பந்தப்பட்ட பிரச்சினைதான். அதை ஒழிப்பதற்கான செயல்பாடுகளில் அவர் இறங்கியிருக்கிறார். அதற்கான வருத்தங்களை அவர் அடைந்திருக்கிறார். அதன் நீட்சியாகத்தான் அவர் இறந்திருக்கிறார். டானியலின் படைப்பின் மீது தளைய சிங்கத்திற்கு அவரளவில் ஒரு உறவை உருவாக்கிக் கொள்வது சுலபமானது. ஆனால் அவருடைய கலைக் கோட்பாடு, கலை பற்றிய அவருடைய ஆழ்ந்த நம்பிக்கைகள் அதற்கு எதிராகச் செயல்படுகிறது.

ஜே.ஜே.யின் குறிக்கோள் என்ன ? அதை எழுதியதின் பின்னணி என்ன ?

?ஜே.ஜே : சில குறிப்புக ?ளை நான் மலையாள இலக்கியப் பின்னணி சார்ந்து எழுதியிருக்கிறேன் என்றாலுங்கூட அது தமிழ் கலாச்சாரம் சார்ந்த ஒரு விமர்சனம். தமிழ்க் கலாச்சாரம் சார்ந்த ஒரு விமர்சனத்தை கலைப்பூர்வமாகச் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டேன். தமிழ்க் கலாச்சாரம் பற்றிய விமர்சனமானது இயற்கையாக தமிழ்க் கலாச்சாரப் பின்னணியில்தான் இருந்திருக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து கேரளப் பின்னணிக்குத் திசைதிருப்பிக் கொண்டு போனதற்கு ஒரு முக்கிய காரணம் தமிழ்க் கலாச்சாரம் சார்ந்த விமர்சனங்களை தமிழர்களை முன்னிறுத்திச் சொல்வதைவிட மற்றொரு மக்களை முன்னிறுத்திச் சொன்னால் அதைப் பற்றி ஆழ்ந்து யோசிப்பதற்கும் தங்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகிறது, தாம் கொடுமையாகத் தாக்கப்படுகிறோம், ஈவிரக்கமற்று தாங்கள் எடை போடப்படுகிறோம் என்ற பாதிப்புகளுக்கு ஆளாகாமல் அதைப் பற்றி நிதானமாகச் சிந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்கக்கூடும் என்கிற ஆசையில் அந்தப் பின்னணியைத் தமிழ் இலக்கியத்திலிருந்து மலையாள இலக்கியத்தின் பின்னணிக்கு மாற்றியிருக்கிறேன். சிறு வயதிலிருந்தே தமிழ் நவீன இலக்கியம் போல, மலையாள நவீன இலக்கியத்தையும் படித்துக் கொண்டு வந்திருந்தேன். அங்கு நடைபெறும் இலக்கியச் சர்ச்சைகள், வெளி வரும் புத்தகங்கள், அங்கு எழுத்தாளர்களிடையே இருக்கும் கருத்து ஒற்றுமைகள் அல்லது வேற்றுமைகள், வாசகர்களுடன் எழுத்தாளர்களுக்கு இருக்கும் உறவுகள், எழுத்தாளர்களுக்கும் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் இடையிலான தொடர்புகள் முதலான எண்ணற்ற ஊடுபாவுகள் பற்றிய உணர்வு இருந்ததால் அவர்களை மையமாக வைத்து எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றியது.

?ஜே.ஜே : சிலகுறிப்புக ?ளில் வரக்கூடிய கதாபாத்திரமான ஜோசப் ஜேம்ஸ் என்ற கதாபாத்திரமானது மலையாள எழுத்தாளரான சி.ஜே. தாமஸ் என்ற எழுத்தாளரை மனதில் வைத்து, ஓரளவு அவரைச் சார்ந்தும், மிக அதிக அளவுக்கு அவரைச் சாராமலும், உருவாக்கி இருக்கிறேன். அவர் ஒரு தீவிரமான சிந்தனையாளர். சொற்ப வயதிலேயே இறந்துபோனார். அவருடைய எழுத்துக்களை நான் இளைஞனாகப் படித்தபோது மிகத் தீவிரமாகப் பாதிக்கப்பட்டேன். அந்த நாவலில் ஜே.ஜேவுக்கும் பாலுவுக்கும் இடையில் இருந்த உறவானது எனக்கும் சி.ஜே.தாமஸ்க்கும் இடையில் இருந்த உறவோடு ஒப்பிடக் கூடியதுதான். நாவலில் வருவது போலவே நான் அவரை ஒரே ஒரு தடவைதான் சந்தித்திருக்கிறேன். இது போன்ற பல்வேறு விஷயங்கள் அந்த நாவல் எழுதுவதற்கு உதவி புரிந்திருக்கின்றன. ஆனால் அடிப்படையில் அது தமிழ்க் கலாச்சாரத்தின் மேல்வைத்த விமர்சனம்தான். அந்நாவலை பற்றித் தீவிரமான விமர்சனங்கள், எதிராகவும் ஆதரவாகவும் தோன்றியிருக்கின்றன.

?ஜே.ஜே : சில குறிப்புக்க ?ளில் ஒருவித கடினமான தன்மை இருப்பதாகத் தோன்றுகிறதே. ஈழத்து நண்பர்களிடையே கொடுத்த போது படிப்பதற்கு சிரமமாக இருக்கிறதே என்று சொன்னார்கள் . . .

ஈழம் சார்ந்து மட்டுமல்ல தமிழகத்தில் கூட இதுபோன்ற விமர்சனங்கள் வந்துள்ளன. என்னளவில் அதை ஒரு கடினமான படைப்பாக நான் பார்க்கவில்லை. அவ்வாறான எண்ணத்துடன் படைக்கவும் இல்லை. ஒரு வாசகன் எந்த விதமான வாசிப்பு மரபைச் சார்ந்தவன்; ஜே.ஜே.யைப் படிப்பதற்கு முன் அவன் என்னென்ன இலக்கியப் படைப்புக்களைப் படித்திருக்கிறான்; இலக்கிய உலகத்தில் என்னென்ன அனுபவங்களுக்கு ஆட்பட்டிருக்கிறான்; இவையெல்லாம் மிகவும் முக்கியமான விஷயங்கள். வணிக இலக்கியங்கள், வணிக சஞ்சிகைகள் இவற்றை மட்டுமே படித்து வந்தவனாக இருந்தால் ஜே.ஜே.யைப் படிக்கும் போது ஏற்படும் இடைவெளி, நெருடல், கடினத்தன்மை போன்றவை அது அந்தப் படைப்பின் மீதான குறை அல்ல. அந்தப் படைப்பிற்கும் அவனுக்குமான இடைவெளி அல்ல அது. அவனுக்கும் இலக்கியத்திற்குமான இடைவெளி அது. தீவிர இலக்கியத்திற்கும் ஒரு வாசகனுக்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருக்குமானால் ஜே.ஜே : சில குறிப்புகளுக்கும் அவனுக்குமான இடைவெளி நிச்சயமாக அதிகமாகத்தான் இருக்கும்.

இதற்கு மாறாக நான் சொன்ன தீவிர இலக்கியப் போக்குகளில் பரிச்சயம் கொண்ட அதாவது பாரதியிலிருந்து ஆரம்பித்து புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜானகிராமன், அழகிரிசாமி என்று தொடர்ந்து படித்துக் கொண்டு வந்திருக்கும் ஒருவனுக்கு ஜே.ஜே.யைப் படிக்கும் போது சிரமம் இருக்கலாம். கடினமாக இருக்கும் என்று தோன்றவில்லை. அதுதான் நியாயமாகப் பொருட்படுத்தத் தகுந்த அனுபவம். நான் இன்று வரையிலும் இலக்கியப் புத்தகங்கள் படித்ததேயில்லை. ஆனால் ஜே.ஜே. எனக்கு விளங்கவில்லை ஏன் என்று கேட்க ஒரு வாசகனுக்கு உரிமை இல்லை. தொடர்ந்து இலக்கியப் புத்தகங்கள் படித்திருந்தும் இந்த நாவல் ஏன் எனக்குப் புரியவில்லை என்ற கேள்விதான் நியாயமான கேள்வி.

அந்தக் கேள்விக்கு பதில் சொல்லக் கூடிய சமயத்தில் எல்லாப் படைப்புக்களும் என்னைப் பொறுத்த வரையில் ஒரு இடைவெளி தந்துதான் உருவாக வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஒருவிதமான நெருக்கடியை ஒரு படைப்பு முதலில் தரவேண்டும். அதைத் தாண்டித்தான் வாசகன் வரவேண்டும். இலக்கியம் மெலெடுத்துச் செல்லப்படுவது என்பது அதன்மூலம் தான் நடக்க முடியும். புதுமைப்பித்தனை எடுத்துக் கொண்டாலும் சரி, பாரதியை எடுத்துக் கொண்டாலும் சரி, தமிழில் முக்கியமானதாகக் கருதப்படக்கூடிய எந்த படைப்பாளியை எடுத்துக் கொண்டாலும் சரி, அது வெளிவந்த சமயத்தில் ஆச்சரியத்தையும் திக்பிரமையையும் ஒரு இடைவெளியையும் உருவாக்கியிருக்கின்றன. பின்னர் காலப் போக்கில் வாசகர்கள் தொடர்ந்து படித்து அது சம்பந்தமான உணர்வுகளைப் பெறத் தொடங்கும்போது கடினமான படைப்பும் புரியத் தொடங்கிவிடும். நெருங்கி வரத் தொடங்கிவிடும். இதுபோன்ற ஒரு காரியம் ஜே. ஜே. சம்பந்தமாகவும் நிகழும் என்று எதிர்பார்க்கிறேன்.

எந்தப் புள்ளியில் வாசகன் இருக்கிறானோ அதே புள்ளியில்தான் எழுத்தாளனும் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதில்லை. அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டு போகவும், பயணத்தை விரிக்கவும், புதிய அனுபவங்களை, புதிய தரிசனங்களை தமிழ் இலக்கியத்திற்குள் கொண்டு வரவும் செய்ய வேண்டும். படைப்பு என்றால் இதற்கு முன்னால் இல்லாதது என்றுதான் அர்த்தம். மாதிரியாகச் செய்யக்கூடியது இருக்கக்கூடிய புத்தகங்களில் இருந்து ஒன்றை உருவாக்குவது அல்லது பழைய இலக்கியத்தின் எதிரொலியாக ஒரு புதினத்தை உருவாக்குவது, பழையதின் தொடர்ச்சியாக இன்னொன்றை எழுதிக் காட்டுவது எல்லாமே படைப்பாற்றலின் கீழ் வராது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

மூன்றாவது பாதை என்று ‘ஜே.ஜே : சில குறிப்புக்க ‘ளில் எதைக் குறிப்பிடுகிறீர்கள் ?

தமிழ் சமூகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் – பிரச்சனைகள் என்று சொல்வதை விடத் தாழ்வுகள், பின் தங்கல்கள், குறுகல்கள், நிறுவனங்கள் சார்ந்த இறுக்கங்கள் இதையெல்லாம் தக்க வைத்துக் கொண்டு போகக்கூடிய மனோபாவங்களுக்கு எதிராக, இருக்கக்கூடிய விஷயங்களை மறுபரிசீலனை செய்தோ, உடைத்துக் கொண்டு போகவோ வேண்டிய சுதந்திரம் கட்டாயமாக எழுத்தாளனுக்குத் தேவை என்கிற செய்தியை உங்களுக்கு உணர்த்த முயற்சி செய்கிறேன். தமிழ் மக்களுடைய சிந்தனை ஆற்றலை வலுவடையச் செய்யாமல் பெரும் புரட்சியையோ சிறு மாற்றங்களையோ செய்ய முடியாது. அந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளேனா இல்லையா என்பது வேறு விஷயம். மூன்றாவது பாதை என்னும்போது ஒரு படைப்பில் வாழ்க்கை சார்ந்த பிரச்சனைகள் அல்லது அனுபவங்கள் இவற்றைப் பிரதிபலிப்பதில் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறேனோ அந்த அளவுக்கு சமுதாயம் சார்ந்த தீர்வுகளைப் படைப்பில் சொல்வதில் நான் நம்பிக்கை வைக்கவில்லை. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் ஜனங்கள் மத்தியில் அந்த விவாதம் உருவாகி தீர்வுகள் அவர்கள் பக்கத்திலிருந்து எழுத்தாளர்களுடைய பக்கத்திற்கு வரவேண்டும். சிந்தனையாளர்களின் பக்கத்திற்கு வரவேண்டும். உடல் சார்ந்த, மனம் சார்ந்த, இருப்புச் சார்ந்த தேவைகள் எல்லாம் மக்கள் பக்கத்திலிருந்து எழுந்து வரவேண்டும். சமூகத்திலுள்ள படைப்பாளிகள் விஷயங்களை தமது படைப்புக்களில் கொண்டு வந்து கலைகளில் கொண்டு வந்து, கல்வியில் கொண்டு வந்து மக்கள் அதன் பாதிப்பில் திட்டங்களைத் தீட்டும்போதுதான் நிறைவான வாழ்க்கை என்ற ஒன்று மக்ளுக்குக் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாகும் என்று நான் நம்புகிறேன்.

இதுகாறும் நடந்து வந்துள்ளவை எல்லாம், ?எனக்கு உன் பிரச்சனைகள் தெரியும். உன் பிரச்சனைகள் சார்ந்த தீர்வு தெரியும். ஆகவே இந்த விடைகள் சார்ந்து நான் தீட்டும் திட்டத்தை உன் தலையில் வைத்துக் கட்டுகிறேன். அதனை நீ ஏற்றுக் கொள் ? என்ற செயல்பாடுதான் உலகம் பூராவும் நடந்து வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஆக, ?முதன் முதலாக இதைச்செய்கிறேன்; இது கிடைப்பதற்கரிய விஷயம்; இதைப் பெற்றுக் கொண்டு சந்தோஷமாக இரு ? என்று சொல்வதைவிட நான் எதைச் செய்தால் நீ சந்தோஷமாக இருப்பாய் என்று அரசியல்வாதிகளும், எழுத்தாளர்களும், அறிஞர்களும், தத்துவார்த்தவாதிகளும், கலைஞர்களும் சாதாரண மனிதனைப் பார்த்து கேட்க வேண்டும். என்னுடைய மூன்றாவது பாதை என்பது உலகம் பூராவும் இன்று வரையிலும் பல்வேறுபட்ட சோதனைகள் நடந்திருக்கின்றன. இந்தச் சோதனைகள் பெரும்பாலும் தோல்வியடைந்துவிட்டன. இன்றைய நிலையில் இதையெல்லாம் அறிந்து கொண்டு இதுவரை நடந்திருக்கக் கூடிய காரியங்களின் குறைகளை நாம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறான பணியை மேற்கொள்ளுவது தான் எழுத்தாளர்களுடைய கடமை. கலைஞர்களுடைய கடமை. அரசியல்வாதிகளுடைய கடமை. எல்லாருடையவும் கடமை. அந்தச் சூழ்நிலை உருவாக்கும் செயல்பாட்டைத்தான் நான் மூன்றாவது பார்வை என்று சொல்கிறேன்.

ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் பல தேசங்களிலும் இன்றுவரையிலும் உருவாகவில்லை. இந்தியாவில் அந்தக் கண்ணோட்டமே இன்று இல்லை. ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் வாழ்க்கைச் சார்ந்த பிரச்சினைகள் தெரிந்திருக்கக்கூடிய அளவுக்கு அவனுக்கு விடைகளும் தெரிந்திருக்கிறது. அந்த விடைகளை அமுல்படுத்திவிட்டால் வாழ்க்கை உன்னதமானதாக இருக்கும்; சந்தோஷமானதாக இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். பெரும்பாலும் அது சரியாக இராது என்பது என்னுடைய எண்ணம். மனிதனுடைய பொருளாதாரத் தேவைகளை ஓரளவேனும் புரிந்து கொள்ள முடியும். மனத் தேவைகளைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. தேவைகள் காலப்போக்கில் மாறிக் கொண்டு வருகின்றன. அவனுக்குப் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகள் வாழ்க்கையில் இருக்கிறது. அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு வாழ்க்கையை மாற்றக்கூடிய முயற்சியால்தான் அவன் ஓரளவுக்கு சந்தோஷத்தையும் சுகத்தையும் அடைய முடியும். எதிர்பார்ப்புகள் காலப்போக்கில் விரிந்து கொண்டே போகிறது. எனக்குத் தெரிந்த வரையிலும் எப்போதும் அவனுக்கு சுதந்திரம் மிக முக்கியமானதாக இருந்திருக்கிறது. ஆனால் சுதந்திரத்தை மதிப்பிடும் பார்வை விரிந்து கொண்டே போகிறது. உணவு பற்றாக்குறையைக்கூட அவனுக்கு சுதந்திரம் இருக்கக்கூடிய காலங்களில் பொறுத்துக் கொள்ள முடிகிறது. இன்று அவன் பெற விரும்பும் சுதந்திரத்தை அவன் பெற்று விட்டால், சுதந்திரத்தைப் பற்றிய அவனது மதிப்பீட்டிலேயே ஒரு மாற்றம் நிகழ்ந்து, புதிய சுதந்திரத்தை அவன் கேட்கத் தொடங்குகிறான். ஆக இந்த விதமான சிந்தனைகள் தமிழ் சமுதாயத்தில் சிந்தனையாளர்கள் மத்தியிலும் சாதாரண மக்கள் மனங்களிலும் உருவாகிவர வேண்டும். அதைத்தான் நான் மூன்றாவது பாதை என்று அழைக்கிறேன்.

படைப்புக்கும் படைப்பாளிக்கும் இருக்கக்கூடிய முரண்பாடுகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? யாரால் நீங்கள் பாதிக்கப்பட்டார்கள் ?

படைப்பாளியாக நான் விந்தனாலோ ரகுநாதனாலோ பாதிக்கப்படவில்லை. நான் படைப்பாளியாக ஆரம்பநிலையில் புதுமைப்பித்தனால் பாதிக்கப்பட்டவன். என்னுடைய கதைகளைப் படிக்கக்கூடிய ஒரு நுட்பமான வாசகன் சுலபமாக அந்தப் பாதிப்புகளைப் புரிந்து கொள்ளக்கூடிய நிலையில்தான் இருப்பான் என்று நான் நினைக்கிறேன். ஆனால் ரகுநாதனும் விந்தனும் இரண்டு பேருமே புதுமைப்பித்தனால் பாதிக்கப்பட்டவர்கள். ஆக என்னுடைய எழுத்துகள் விந்தனாலும் ரகுநாதனாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று தவறாகச் சொல்வதற்கு ஒரு முகாந்திரம் இருக்கிறது. புதுமைப்பித்தன் தான் மூல காரணம் என்பதை உணராத ஒரு வாசகன் விந்தனாலும் ரகுநாதனாலும் அவர்களைப் போன்ற வேறு எழுத்தாளர்களாலும் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று சொல்லலாம்.

தமிழில் இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய தீவிரமான எழுத்தாளர்கள் பலரும் புதுமைப்பித்தனால் பாதிக்கப்பட்டவர்கள்தான். எனது ஆரம்ப காலத்திலிருந்து இன்றுவரைக்கும் பலவிதமான மாற்றங்கள் என் எழுத்தில் நிகழ்ந்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். அந்த மாற்றங்கள் நிகழ்ந்தது எனக்கு ஒரு மனநிறைவைத் தருகிறது. நான் மொத்தத்தில் இந்த சமூகத்தைப் பற்றி, தமிழ் வாழ்க்கையைப் பற்றி, தமிழர்களைப் பற்றி சிந்தித்தவை ஒரே மாதிரியாக இல்லை. காலத்துக்கு காலம் அந்த சிந்தனைகளில் பல்வேறுபட்ட மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நான் என்னுடைய அனுபவங்கள் சார்ந்தும், புத்தகப் படிப்பு சார்ந்தும் இந்த வாழ்க்கையை இணைப்பதற்கான முயற்சிகளை செய்து பார்த்திருக்கிறேன். கண்டடைந்த முடிவுகள், வெளிப்படுத்திய விதங்கள் எந்த அளவிற்கு சரியாக இருக்கின்றன என்று எனக்குத் தெரியவில்லை. தவறாக இருக்கலாம். குறையாக இருக்கலாம். திருப்தி தராமல் இருக்கலாம். ஆனால் என்றும் எனக்கு ஒரு முனைப்பு, ஒரு வேட்கை இருந்து வந்திருக்கிறது.

நான் பொதுவாக போதாமையில் இருக்கக்கூடிய – ஏழைகள் என்று மட்டும் அர்த்தப்படுத்த விரும்பவில்லை – போதாமைகளில் இருக்கக்கூடிய மக்கள் சார்ந்து பேச ஆரம்பித்த நான் அவர்களை விட்டு விட்டு வேறு சில விஷயங்களைப் பற்றி பேசக்கூடியவனாக மாறிவிட்டேன் என்ற ஒரு குற்றச்சாட்டு தமிழ்நாட்டில் ரொம்ப அதிகமாகவே இருக்கிறது. இதற்கு நான் தொடர்ந்து பதில் சொல்ல முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன். அது அவர்களுக்குக் கேட்கமாட்டேன் என்கிறது. கேட்கவில்லையா அல்லது கேட்காதது மாதிரி பாவனை பண்ண வேண்டிய அவசியமோ கட்டாயமோ அவர்களுக்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் நான் தொடர்ந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன். இந்தப் போதாமை சார்ந்த மக்கள் பேரில்தான் என்னுடைய கவனம் இன்றைக்கும் இருக்கிறது. ஏனென்றால் இன்றைக்கு இந்திய வாழ்க்கையில் பெரும்பான்மையான மக்கள் அந்த தளத்தில்தான் இன்னும் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் என் 20, 22 வயசில் போதாமையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஒரு வேலை கொடுத்துவிட்டால், வயிறு நிறைய உணவு தந்துவிட்டால், திருப்தி அடைந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில்தான் இருந்தேன். இவற்றை நம்ப முடியாத அளவு எனக்கு வாழ்க்கையில் பல்வேறுபட்ட அனுபவங்களும் அவை பற்றிய சிந்தனைகளும், அந்த சிந்தனைகளைத் தூண்டக் கூடிய வாசிப்பும் கிடைத்தன. பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள் எல்லாம் முக்கியமானதுதான். அதையும் தாண்டியும் பல விஷயங்கள் இருக்கின்றன. ஆன்மீகம் சார்ந்த, சுதந்திரம் சார்ந்த, ஆளுமை சார்ந்த, அறிவை எல்லையற்ற வெளிக்கு எடுத்துச் செல்வதான பிரச்னைகள் எவ்வளவோ இருக்கின்றன. அவைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு சிந்திப்பதன் மூலம்தான் மாறுபட்ட, நிறைவான ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும். எல்லாருக்கும் சோறு போடுவதும் எல்லாருக்கும் வேலை தருவதும் சாதிக்கக் கூடியவைதான். அதனால் பிரச்னைகள் தீர்ந்து விடும் என்று சொல்வதற்கில்லை. இரண்டாயிரம் வருஷங்களாகவோ மூவாயிரம் வருஷங்களாகவோ இந்த மக்கள் தொடர்ந்து சங்கடத்தில் வாழ்ந்து கொண்டு வந்திருக்கிறார்கள். இனிமேலாவது ஒரு நிறைவான, எப்போதும் அவர்களுக்கு ஒரு நிறைவைத் தரக்கூடிய ஒரு நீண்ட காலத் திட்டத்தை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இந்த எண்ணங்கள் ஏற்பட்டதன் மூலம் என் எழுத்தில் பல மாற்றங்கள் வந்திருக்கின்றன.

நான் நம்பி வந்தவற்றிற்கு மாறாக அதிர்ச்சி தரக்கூடிய பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஒரு அனுபவத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். தோட்டி வேலை செய்யக்கூடிய மக்களுக்கு என்னுடைய நண்பரான ஒருவர் – அரசியலில் இருக்கக்கூடிய அபூர்வமான ஆத்மாக்களில் ஒருவர் – அவர்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும் என்பதற்காக ஒரு திட்டத்தை உருவாக்கினார். உங்களுக்குத் தெரியும் இந்திய உத்தியோக வர்க்கத்தின் முட்டுக்கட்டைகள் மித மிஞ்சி நிற்கிற ஒரு அமைப்பில் இதுபோன்ற விஷயங்களை மேலெடுத்துக் கொண்டுபோய் அதற்கான பணத்தை ஒதுக்கச் சொல்லி ஒப்பந்தங்கள் போட்டு சரிவர கட்டி முடிப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம் என்பது. மிகவும் கஷ்டப்பட்டு ரொம்ப அற்புதமாக வாழ வசதியான அடுக்குமாடி வீடுகளை உருவாக்கி, கிட்டத்தட்ட 50 குடும்பங்களை அந்தப் பிளாட்ஸுக்கு அவர் மாற்றினார்.

அந்த நாளில் நான் அவருடைய நண்பனாக இருந்தேன். ஆனால் இரண்டு மூன்று நாட்கள் கழிந்த பின்னால் அந்த நண்பர் அந்த குடியிருப்பிற்குப் போய்ப் பார்த்தபோது அவர்கள் வந்து சொன்னதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தார். உண்மையில் அவர்கள் எல்லோரும் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தார்கள். ஏமாற்றத்தில் இருந்தார்கள். ஒவ்வொருவரும் நிறையக் குறைகள் சொன்னார்கள். இதுவரையிலும் சாதாரணக் குடிசைகளில் வசித்து வந்திருந்தனர். எந்தவிதமான பாதுகாப்பும் அங்கு இருந்ததில்லை. மழைக்காலங்களில் அவர்களது குடிசைகள் அடித்துக்கொண்டு போய்விடும். திரும்ப புதிதாகக் கட்டிக் கொள்வார்கள். புறம்போக்கில் குடிசை போட்டுக் கொள்வார்கள். அது சம்பந்தமாக ஆட்கள் புகார் செய்வார்கள். ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் புதிதாகக் கட்டப்பட்ட வீடுகள் மிகக் குறைந்த வாடகையில் மாதம் பத்து ரூபாயோ ஐந்து ரூபாயோ கட்டுவதன் மூலம் இருபது வருடங்களிலோ முப்பது வருடங்களிலோ அந்த வீடுகள் அவர்களுக்கே சொந்தமாகிவிடும்.

அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை உருவாக்கித் தந்ததில் நாம் எதிர்பார்க்கிற மாதிரி அவர்கள் மனநிறைவை அடைந்து விடவில்லை. அவர்களுக்கு அந்த வீடுகள் பிடிக்கவேயில்லை. மண்ணே இல்லையே என்றார்கள். என் குழந்தை எங்கே, என் குழந்தையை என்னிடமிருந்து பிரித்து விட்டார்களே என்று ஒரு தாய் கேட்பது போல் இருந்தது என்று சொன்னார் என் நண்பர். எங்கள் குடிசையில் நாங்கள் கோழி வளர்ப்போம். கோழி வளர்க்க இப்போது இடமில்லையே. இந்த வீடு எங்களுக்குச் சுத்தமாக பிடிக்கவில்லை. முன்பு குடிசைகளில் நாங்கள் உட்கார்ந்தோமானால் பக்கத்து வீட்டுக்காரங்களைப் பார்ப்போம், பேசுவோம். கொல்லப் பக்கம் போவதற்கே இங்கு வழியில்லையே. வாசல் கதவைச் சாத்தி வைத்துக்கொள்வது எங்களுக்குப் பிடிக்கவில்லை. தெருவை வேடிக்கை பார்ப்பதோ, உறவினர்கள், தெரிந்தவர்களை பார்க்க முடியாமல் ஆகிவிட்டதே.

ஆக நீங்கள் தயாரிக்கக்கூடிய சமுதாயத் திட்டங்களில் அவர்கள் போய் பொருந்திக் கொள்ளவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கறது நியாயமான விஷயம் அல்ல. இந்த சிந்தனைகள் எல்லாம் வந்தபின் என் எழுத்துகளில் பல்வேறுபட்ட மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இதில் ஒன்றும் எனக்கு முரண்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.

டானியலை ஏன் கடுமையாகத் தாக்குகிறீர்கள் ?

டானியலை தாக்கவில்லை. ஒரு படைப்பாளியாக அவருக்கும் வாசகனாக எனக்கும் இருக்கிற இடைவெளியைப் பற்றித்தான் சொன்னேன். அவர் வாழ்க்கை சார்ந்த சிக்கலை கணக்கிலெடுத்துக் கொள்ளவேயில்லை. சிக்கலான பிரச்சினைகளைப் பற்றிய விசாரணை, படைப்பில் அதற்கு உயிரைத் தரக்கூடிய அம்சம் எதுவுமே கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. தெருவில் போகிறவன் ஜாதி ஒழிக என்று கத்துகிறான். அது மாதிரி எழுத்தாளன் கத்த முடியாது. ஜாதி எப்படி ஒழிய வேண்டும் ? ஜாதி சார்ந்த சிக்கல்கள் என்ன ? ஜாதியை யார் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் ? ஜாதி உங்களுக்கு எந்த வகையில் தேவையாக இருக்கிறது ? ஜாதி சார்ந்த வேர்கள் நம் மூளைக்குள் பல நூற்றாண்டுகள் வேரோடி, அது மூளையில் ஒரு பகுதியாகவே இயங்கிக் கொண்டிருக்கும். எப்படி அதை அறுக்கப் போகிறோம்.

தமிழ் நாட்டில் ஜாதி பற்றி தன் மாணவிகளின் உதவியோடு ஒரு பேராசிரியை ஆராய்ச்சியை மேற்கொண்டார். முதலில் ஜாதி தேவையா இல்லையா என்று ஜனங்களிடம் கேட்டார்கள். 77 சதமான பெண்களும் ஆண்களும் ஜாதி எங்களுக்குத் தேவை என்று சொன்னார்கள். வேறு ஜாதியில் மண உறவுகள் கொள்வீர்களா என்று கேட்டதற்கு, நாங்கள் என்ன மானம் மரியாதை இல்லாதவர்களா என்று பலரும் கேட்டிருக்கிறார்கள். ?உங்க பொண்ணு வேற சாதியைச் சேர்ந்த ஒருத்தனைக் காதலிச்சா என்ன பண்ணுவீங்க ? அவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்களா ? என்று மாணவிகள் கேட்டதற்கு, ?அதெப்படி கட்டுவோம். நாங்க உயர்ந்த ஜாதியில்லையா ? நாங்க கட்டமாட்டோம் ? என்று பதில் கூறியிருக்கிறார்கள். உங்களைவிட மேல் ஜாதியைச் சேர்ந்த ஒருத்தனுக்குக் கட்டித் தருவீங்களா என்று கேட்டபோது அதுவும் மாட்டோம் என்று பதில் சொல்லியிருக்கின்றனர். வரதட்சணை வாங்குவீங்களா என்று கேட்டதற்கு ?வரதட்சணை வாங்கலைன்னா குடும்பத்திற்குப் பெருமையே கிடையாதே. நாங்க எங்க பொண்ணுகளுக்கு வரதட்சணை கொடுத்துத்தானே கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறோம் ? எங்க பையனுக்கு மட்டும் வாங்காம இருக்க முடியுமா ? எங்க பையன் என்ன பரதேசியா ? பி.ஏ. படிச்சிருக்கான், எம்.ஏ. படிச்சிருக்கான், டாக்டரா இருக்கான் அவனுக்கு வரதட்சணை வாங்காம கல்யாணம் பண்ணுவோமா என்ன ? என்று சொல்லியிருக்கின்றனர்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் இவர்களைப் பற்றிப்பேசக்கூடிய தத்துவாதிகள், மக்களின் உண்மையான தளத்திற்குப் போக வேண்டும். அது எவ்வளவு கசப்பானதாக இருந்தாலும் அவன் அதைச் சந்தித்தாகவேண்டும். இதைத்தான் முக்கியமான விஷயமாக நான் கருதுகிறேன். ஜாதியில்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் என்று ஆசை அல்லது கற்பனை அல்லது தத்துவம் சார்ந்த திட்டம் இவற்றை கத்திக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. ஏன் நம் மக்கள் இப்படி இருக்கிறார்கள் என்று சிந்தித்தாக வேண்டும். இந்தச் சிந்தனை மிகச் சிக்கலானது. ஜாதியின் உருவாக்கத்தின் ஆணி வேரைத் தேடிப் போக கூடியது. டானியலிடம் இந்த அம்சங்கள் எதுவுமே இல்லை.

டானியலுடைய முழுமையானப் படைப்புகளையும் பற்றியுமா சொல்கிறீர்கள் ?

இல்லை. ?பஞ்சமர் ? என்ற அந்த ஒரு நாவலைப் பற்றி மட்டும்தான் சொல்கிறேன். எல்லா படைப்புக்களையும் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால்கூட நடைமுறை சங்கடங்கள் எனக்கு நிறைய இருக்கின்றன. இந்தப் புத்தகம் அவர் தமிழ்நாட்டில் இருந்தபோதுதான் எழுதப்பட்டது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கே தான் அவர் நோய்வாய்ப்பட்டார். நண்பர்கள் சிகிச்சையளித்தார்கள். இந்தப் புத்தகம் தமிழ்நாட்டில்தான் வெளியாயிற்று. இதைப் படிக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தொடர்ந்து அவரைப் படிப்பது மிகுந்த அலுப்பைத் தரும் காரியமாக எனக்கு இருக்கலாம்.

மூன்றாவது பாதை பற்றி மேலும் சொல்ல முடியுமா ?

சமூகத்தை மாற்ற பல சோதனைகள் நடந்திருக்கின்றன. அந்தச் சோதனைகள் தோல்வி அடைந்ததைத் தெரிந்து கொள்ள 25 வருடங்கள் அல்லது 30 வருடங்கள் ஆகியிருக்கிறது. அதே விஷயங்களைத் தமிழகத்தில் வலுக்கட்டாயமாக அமுல்படுத்தி தோல்வி கண்டு, இன்னும் முப்பது நாற்பது வருடங்கள் கழித்து அதைப்பற்றிச் சிந்திப்பதைவிட இப்போதே உலகத்தில் நிகழ்ந்திருக்கக்கூடிய எல்லாவிதமான சோதனைகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டு நாம் ஒரு வழியை உருவாக்கலாம். இந்த வழியை உருவாக்குவதற்கு ஆசிரியர்கள், படிப்பாளிகள், அரசியல்வாதிகளைவிட மக்கள்தான் அதற்கு முக்கியமாகப் பங்களிக்க வேண்டும். அந்த மக்கள் பங்களிப்பதற்கு அவர்கள் பிரக்ஞைபூர்வமாக இந்தப் பிரச்சிஆனையைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினைகள் பிரக்ஞைபூர்வமாக உணரப்படுவதற்கு எழுத்தாளர்களும் கலைஞர்களும் செயல்பட வேண்டும். ஒரு விழிப்பு நிலை மக்களிடையே உருவாக வேண்டும். அந்தப் பிரச்சினைகள் சார்ந்த விடைகளையும் எதிர்ப்புகளையும் அவர்கள் ஓரளவு சொல்லக்கூடும். அதை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் சமூக மாற்றங்களை நிகழ்த்த முடியும், வேண்டும் என்பதைத்தான் மூன்றாவது பாதையாகக் குறிப்பிடுகிறேன்.

தமிழ் நாட்டில் இந்துத்துவ உணர்வு புத்துயிர் பெறுமா ?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்து மதத்தினுடைய பழைய மதிப்பீடுகளை திரும்பவும் நிலைநாட்டக்கூடிய ஒரு முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்த முயற்சி இப்போதுதான் தமிழ்நாட்டில் காலூன்றி இருக்கிறது. ஒரு பதினைந்து அல்லது இருபது வருஷடங்களுக்கு முன்னால் இந்த மாதிரியான முயற்சிகள் தமிழ்நாட்டில் இல்லவே இல்லை. அந்தக் கட்சிகள் காலூன்றவில்லை. அந்தக் கட்சிகளுக்கு எந்தவிதமான செல்வாக்கும் அங்கு கிடையாது. ஆனால் இன்று அவர்கள் – பரவலாக இல்லை, ஒரு சில இடங்களில் – தங்களுடைய செல்வாக்கை நிலைநிறுத்தியிருக்கிறார்கள். ஆனால் என்னளவில் தமிழ் நாட்டில் இந்துத்துவம் என்கிற கோட்பாடு பரவலாக, மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு கோட்பாடாக மாறுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று நான் நினைக்கிறேன். அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. ஏனெனில் திராவிட கலாச்சாரம் சார்ந்த சில அடிப்படையான கூறுகள் சார்ந்து மக்களிடம் ஒரு உறுதி இருந்து கொண்டிருக்கிறது. அந்த உறுதி இருக்கக்கூடிய மக்களிடம் இந்தப் பிரச்சாரம் சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்கள் செல்லுபடியாவதற்கு வாய்ப்பு இல்லை. ஆகவே இப்போது இந்துத்துவ சக்திகள் சில குறிப்பிட்ட அரசியல் நிலைகள் காரணமாக காலூன்றி இருந்தாலுங்கூட பரவலாக அவர்கள் மேலே வர முடியாது என்று நான் நினைக்கிறேன். இதுதான் தமிழ்நாட்டில் இன்று இருக்கக்கூடிய நிலை. அவர்களுக்கு பெரிய அளவில் அரசியல் எதிர்பார்ப்புகள் சாத்தியமாகாது. அவர்கள் ஒரு கட்சியை உருவாக்கி பதவிக்கு வரவோ அல்லது தமிழ் மக்களுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய விஷயங்களைச் செய்யவோ வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன்.

உங்கள் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். உங்களுடைய எழுத்துகளை நான் தொடர்ந்து வாசித்து வந்துள்ளேன். டானியலின் மொத்தப் படைப்புக்களையும் படிக்காமல் அவரைப்பற்றி இப்படியான விமர்சனத்தை நீங்கள் வைப்பது தவறு என்று நான் கருதுகிறேன்.

உங்களுக்கும் எனக்கும் இடையில் பெரிய அளவில் கருத்து வேறுபாடு இருப்பதாக நான் நினைக்கவில்லை. டானியல் முதன் முதலாக தமிழ்நாட்டில் சரஸ்வதி என்னும் பத்திரிகையில்தான் எழுதினார். கே.டானியல் சரஸ்வதி யில் எழுதுவதற்கு முன்னால் தமிழக இதழ்கள் வேறு எவற்றிலும் அவர் எழுதியதாகத் தெரியவில்லை. சரஸ்வதி பத்திரிகையில் அப்போது நான்குபேர் ஆசிரியர் குழுவில் இருந்தோம். விஜயபாஸ்கரன், ரகுநாதன், எஸ். ராமகிருஷ்ணன், நான். நினைவிலிருந்து இந்தத் தகவல்களைக் கூறுகிறேன். அந்தக் காலத்தில்தான் என்னுடைய ஞாபகத்தில் கே. டானியலுடைய சிறுகதை தமிழ்நாட்டில் முதன்முதலாக வெளிவருகிறது. சரஸ்வதி முன் அட்டையில் அவர் புகைப்படம் வெளிவந்தது. அந்த காலகட்டத்தில்தான் விஜயபாஸ்கரனும் ஸ்ரீலங்காவுக்கு சென்று ஈழத்துப் பகுதிகளில் பயணம் செய்து கொண்டுவந்தார். அப்போதுதான் முதன்முதலாக ஈழத்து இலக்கியங்களைப் பற்றி எங்களுக்குத் தெரிய வர ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.

டானியலைப் பற்றி, நான் படிக்காத புத்தகங்களையும் சேர்த்துச் சொல்லி அவர் பற்றித் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இல்லை. டானியல் ஒரு முற்போக்கு எழுத்தாளர் என்னும் அளவில்தான் அவர் கதைகளை வெளியிட்டிருக்கிறோம். எனக்கு இன்றைக்கும் அவர் முற்போக்கு எழுத்தாளராக இருக்கிறார். சமூகம் சார்ந்த பல சிந்தனைகளில் அவருக்கு முற்போக்கான சிந்தனைகள் இருக்கிறது. இது பற்றி எனக்கு முரண்பாடு எதுவும் இல்லை. நண்பர் கேட்ட கேள்வி டானியலுடைய மொத்த இலக்கியம் சம்பந்தப்பட்ட கேள்வி அல்ல. டானியலுடைய பஞ்சமர் என்கிற நாவல் சம்பந்தப்பட்ட கேள்விதான்.

ஒரு எழுத்தாளன் எவ்வாறு உருவாக்கப்படுகிறான் ?

எவ்வாறு உருவாக்கப்படுகிறான் என்று சொல்வதைவிட எவ்வாறு உருவாகிறான் என்று சொல்லவே விரும்புகிறேன். ஆரம்பநிலையில் ஒரு எழுத்தாளன் உருவாகி வரக்கூடிய காலத்தில் அவன் தூண்டுதல் பெற பல்வேறுபட்ட காரணங்கள் இருக்கலாம். குடும்பத்திற்கும் அவனுக்கும் இருக்கக்கூடிய மோதல்கள்- குடும்பத்தில் இருக்கக்கூடிய பெரியவர்கள் அவன் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாத நிலை. நாம் எழுதுவதன் மூலம் சமுதாயத்தில் நம்மையொத்த சிந்தனையாளர்களுடன் ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்பி அவன் செயல்படத் தொடங்கலாம். தாழ்வு மனப்பான்மை காரணமாகவும் அவன் எழுதத் தொடங்கலாம். தாழ்வு மனப்பான்மையை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் சில செயல்பாடுகளை நோக்கி இழுத்துச் செல்லும் அல்லது ஓரளவுக்குப் புகழடைய வேண்டும், ஒரு அங்கீகாரம் வேண்டும், எந்த துறையிலும் நாம் வெற்றி பெறவில்லை. இந்தத் துறையிலாவது வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவும் அவன் எழுதத் தொடங்கலாம். ஒரு எழுத்தாளனை எடுத்துக் கொண்டால் பல்வேறுபட்ட காரணங்களுக்காக அவன் எழுதத் தொடங்கலாம். சமூகத்தின் பேரில் தான் கொள்ளும் கோபத்தின் வெளிப்பாடாகவும் எழுதும் முயற்சி தோன்றலாம். எழுதி வளர்ச்சி பெறக் கூடிய சமயத்தில் அவனுக்குப் பல்வேறுபட்ட பார்வைகள் ஏற்படுகிறது. சமுதாயம் என்னும் பார்வை, சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்கிற பார்வை, சில பிற்போக்கான அம்சங்களைச் சாடவேண்டும் என்கிற பார்வை, சில புதிய சிந்தனைகளை வரவேற்க வேண்டும் என்னும் பார்வை இவையெல்லாம் காலப்போக்கில் உருவாகி வருகிறது.

சூழ்நிலையால்தான் எழுத்தாளன் உருவாகிறான் என்று சொல்ல முடியுமா ?

சூழ்நிலை எழுத்தாளனை உருவாக்குகிறது என்பது ஒரளவிற்கு உண்மைதான். ஆனால் அவனுக்கும் அதில் ஒரு பங்கு இருக்கிறது. அதே சூழ்நிலைதான் அவனுடைய தம்பிக்கோ அண்ணனுக்கோ இருக்கிறது. இருந்தாலும் அந்தத் தம்பியோ, அண்ணனோ எழுத்தாளனாக உருவாகாமல் இவன் மட்டும் உருவாகுவதால் சூழ்நிலைக்கு ஒரு பங்கு இருக்கிறது என்றாலும் அவனுக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்று நினைக்கிறேன்.

ஒவ்வொரு எழுத்தாளனும் எந்த சமுதாய சூழ்நிலையில் வாழ்கிறானோ அந்த சமுதாய பொருளாதார அரசியல் சூழ்நிலையால்தான் உருவாக்கப்படுகிறான்.

அப்படி இயந்திர ரீதியாகச் சொல்லமுடியும் என்று தோன்றவில்லை. இந்த கணிப்புகள் எல்லாம் தவறு என்ற எண்ணம் இந்த எண்ணங்களை முன்நிறுத்தியவர்களுக்கு ஏற்பட்டாயிற்று. ஒரு குறிப்பிட்ட பொருளாதார அடிப்படையிலேயே மாறுபட்ட சிந்தனைகள் இருக்கின்றன. ஒரே குறிப்பிட்ட இடத்திலேயே மாறுபட்ட சிந்தனைகள் இருக்கின்றன. ஒரு குடும்பத்தில் ஏறத்தாழ ஒரேவிதமாக நிலைமைகள் இருந்தும்கூட இரண்டு நபர்கள் இரண்டு விதமாக சிந்திக்கத்தான் செய்கிறார்கள். சூழல் பாதிக்கும் என்பது மிகவும் உண்மை. ஆனால் அது மட்டுமே பாதிக்கவில்லை என்பதை இப்போது கணக்கிலெடுத்துக் கொண்டு யோசிக்கிறார்கள். இதை ஒரு நல்ல வளர்ச்சி என்று நான் நினைக்கிறேன்.

தலித் இலக்கியம் அதே சமூகத்தைச் சார்ந்தவர்களால், பாதிக்கப்பட்டவர்களால் உருவாக்கப்படுகிறபோது இருப்பதற்கும் பிறர் எழுதும்போது இருப்பதற்கும் அந்தச் சமூகத்தைப்பற்றி பெரிய அளவுக்கு வித்தியாசம் ஏற்படுகிறது இல்லையா… ?

தலித்துகளுக்கு இப்போது ஒரு புதிய பார்வை கிடைத்திருக்கிறது. தலித் வாழ்க்கையைப் பற்றி தலித்துகள் எழுதுவதுதான் சிறப்பாக அமையும் என்று நினைக்கிறேன். தலித் வாழ்க்கை தரும் கஷ்டங்கள், மன நெருக்கடிகள், முக்கியமாக அவர்கள் அடைந்துவரும் அவமானம் இவையெல்லாம் அவர்களிடம்தான் வாழ்க்கை தந்த அனுபவங்களாக இருக்கின்றன.

தமிழ் எழுத்தாளனின் நிலை தமிழ் நாட்டில் எப்படி இருக்கிறது ?

தமிழ்நாட்டில் எழுத்தாளன் எழுத்தை அடிப்படையாக வைத்து வாழக் கூடிய சூழல் இல்லை. நமக்குத் தெரிந்த வரையிலும் சுமார் நூறு வருஷங்களாக இப்படித்தான் இருக்கிறது. யாராவது ஒரு எழுத்தாளன் தன் முழு நேரத்தையும் படைப்பிற்குச் செலவிடும் சந்தர்ப்பத்தில் அவன் பல்வேறுபட்ட இன்னல்களையும் கஷ்டங்களையும் அனுபவிக்கிறான். எழுத்தாளன் தனிமனிதனாக மட்டுமே இல்லாமல் ஒரு குடும்பம் சார்ந்தவனாகவும் இருக்கிறான். அவனுக்கு மனைவி குழந்தைகள் இருக்கிறார்கள். வருமானம் இல்லாத, லட்சிய பூர்வமான, மிகத் தீவிரமான, சமுதாயத்திற்கு மேன்மைத் தரக்கூடிய ஒரு செயல்பாடை நான் செய்து கொண்டிருக்கிறேன்; அந்தச் செயல்பாடுகளை முழு சமூகத்திற்கும் என்னால் எடுத்துச் செல்ல முடியவில்லை; ஆகவே பலவிதமான இன்னல்களையும் கஷ்டங்களையும் நான் அனுபவிக்கிறேன் என்று ஒரு எழுத்தாளன் தனக்குத் தானே சமாதானம் தேடிக் கொள்கிறான். நான் லட்சிய பூர்வமாக, உன்னதமான ஒரு காரியத்தைச் செய்கிறேன், ஆகவே நீங்கள் சமுதாயத்தில் ஏழைகளாகவும் கஷ்டப்படுகிறவர்களாகவும் வாழ்ந்து வாருங்கள் என்று ஒரு எழுத்தாளனுக்கு தன் மனைவி, குழந்தைகளைப் பார்த்துக் கூற எந்த உரிமையும் இல்லை. என்னுடைய லட்சியபூர்வமான காரியங்கள் என்னோடு வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய வேறு ஜீவன்களை பாதிக்க வைக்கக்கூடாது என்பதை புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன் ஆகியோரின் அனுபவங்களை முன் வைத்து நான் கற்றுக் கொண்டேன்.

(முற்றும்)

‘காலம் ‘ இதழ் சார்பில் டோரண்டோ பல்கலைக் கழக அரங்கில் நடைபெற்ற கூட்டம், செப். – 1993.

***

kalachuvadu@sancharnet.in

Series Navigation

சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி

இலக்கிய சந்திப்பு: கனடா – பகுதி – ஒன்று

This entry is part [part not set] of 35 in the series 20030518_Issue

சுந்தர ராமசாமி


அன்பார்ந்த நண்பர்களே,

முதலில் ஒரு பதினைந்து நிமிடங்கள் என்னுடைய கருத்துக்களை நான் பேசலாம் என்றும் அதற்கு பின் நண்பர் மகாலிங்கம் அவர்களின் கவிதைத் தொகுப்பை வெளியிடலாம் என்றும் அதையடுத்து நான் ஆரம்பத்தில் பேசிய கருத்துகளைப் பற்றி விவாதிக்கலாம் என்றும் நண்பர் மூர்த்தி அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கேற்ப ஒரு பதினைந்து நிமிடங்கள், ஒரு விவாதத்தை துவங்கி வைக்கும் முகமாக, ஒரு தூண்டுகோலாக ஒரு சில விஷயங்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

அதற்கு முன்னால் நான் இங்கு வந்து சேர்ந்த விஷயத்தைப் பற்றி ஒருசில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். சமீபத்தில், வாழ்க்கையில் சற்றும் எதிர்பாராமல் வெளிநாட்டு பயணம் ஒன்று யு.எஸ். ஏ. க்கு வரும்படி கிடைத்தது. யு. எஸ். ஏ. வில் மருத்துவராக இருக்கும் என் மகளுடன் ஒரு மூன்று மாத காலம் அமைதியாக இருந்துவிட்டு, முடியுமானால் அந்தக் காலத்தைப் படிப்பதற்கு பயன்படுத்திவிட்டு, வேறு எங்கும் அதிகமாகச் செல்லாமல் திரும்பிப் போகவேண்டும் என்பதே என்னுடைய எண்ணமாக இருந்தது. இந்தியாவைச் சேர்ந்த தமிழ் அன்பர்கள் பலர் யு. எஸ். ஏ. யில் இருக்கிறார்கள் என்று தெரியும். அவர்களில் சிலர் என்னுடைய நண்பர்களும்கூட. இருந்தும் யு. எஸ். ஏ.வுக்கு வரும் விஷயத்தை நான் ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை. அவர்கள் என்னை அழைத்தால் நான் பலவிதமான பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும்; என்னுடைய காலம் வீணாகும். மேலும், என்னுடைய நோக்கம் பயணம் செய்வது அல்ல. அமைதியாக ஒரு இடத்தில் ஒதுங்கியிருந்து என்னுடைய குழந்தைகளுடன் பொழுதை செலவழித்து, மிச்சம் கிடைக்கக்கூடிய நேரங்களில் புத்தகங்களைப் படித்துவிட்டு ஊர் திரும்ப வேண்டும் என்ற எண்ணம்தான்.

இந்த யோசனையில் வந்த எனக்குத் தொடர்ந்து ஈழத்து நண்பர்களிடமிருந்து தொலைபேசிகள் வரத்தொடங்கின. இது நான் சற்றும் எதிர்பாராத ஒரு விஷயமாக இருந்தது. என்னைத் தொலைபேசியில் அழைத்தவர்கள் எவரும் எனக்கு நேரடியாகப் பழக்கம் உள்ளவர்களும் அல்ல. கனடாவைச் சேர்ந்த நண்பர்கள்-முக்கியமாக செல்வம், மகாலிங்கம் போன்ற நண்பர்கள் – என்னைத் தொலைபேசியில் அழைத்து, இங்கு வரும்படி கூறியபோது முன்பின் தெரியாத நண்பர்கள் வாசகர்கள் என்றாலும் இந்த அளவுக்கு ஆர்வத்துடன் அழைக்கிறார்களே, என்று ஒரு மனநெகிழ்ச்சி ஏற்பட்டது. அவர்களுடைய அழைப்பைத் தட்டுவதற்கான தெம்பு இல்லாமல், ‘நான் வருகிறேன்’ என்று சம்மதித்தேன். அதன் மூலம் இங்கு வருவதற்கான ஒரு வாய்ப்பும் உங்களைச் சந்திப்பதற்கான ஒரு சந்தர்ப்பமும் எனக்குக் கிடைத்தன. இங்கு வாழும் தமிழர்களின் வாழ்க்கை பற்றி தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக நண்பர் மகாலிங்கம் அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே தமிழகத்தில் இங்கு இருக்கக்கூடிய ஈழத் தமிழர்களுடைய பிரச்சினைகள் பற்றிப் பரவலாக எங்களுக்குத் தெரிய வந்திருக்கின்றன. என்றாலுங்கூட அவர்கள் வாழும் இடத்திற்கே வந்து அவர்களுடைய வாழ்க்கையைப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது ஒரு மிகப் பெரிய அனுபவம் என்று நினைக்கிறேன். ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பார்ப்பதற்கும் பழகுவதற்கும் சந்தர்ப்பம் இல்லையென்றாலுங்கூட மொத்தமாக எல்லோரையும் அல்லது ஒரு சிறு பகுதியினரை முக்கியமாக இளைஞர்களைப் பார்ப்பது சந்தோஷமாகவும் மனநிறைவாகவும் இருக்கிறது.

தமிழில் நவீன இலக்கியத்தின் நிலை பற்றி சில எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். இவை இறுதியான முடிவுகள் அல்ல. இதைப் பற்றிப் பலரும் பல கோணங்களில் சிந்திக்கலாம். இந்தக் கருத்துக்கள் சார்ந்தும் அல்லது மனதில் இருக்கும் வேறு பல கருத்துக்கள் சார்ந்தும் நீங்கள் வெளிப்படையாக விவாதிக்கலாம்.

என்னுடைய சிந்தனைகளில் ஒன்று, முக்கியமாக, இந்த நூற்றாண்டு இலக்கியம் சார்ந்ததாக இருக்கிறது. அதற்கான காரணம் இந்த நூற்றாண்டைத்தான் என்னால் உணர்வுபூர்வமாக உணர முடிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு இலக்கியம், பதினெட்டாம் நூற்றாண்டு இலக்கியம், அதற்கு முந்தைய காலகட்டங்களைச் சேர்ந்த இலக்கியங்கள் இவற்றையெல்லாம் புத்ததகங்கள் மூலமாகப் படித்துத் தெரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் கூட, அவை சம்பந்தப்பட்ட தகவல்கள், கருத்துக்கள் என் மனதில் இருக்கின்றனவே தவிர, அவற்றோடு என் அளவில் உணர்வுபூர்வமாக ஒட்ட முடியாத நிலையே இருக்கிறது. பாரதியிலிருந்து இன்று வரையிலான காலகட்டத்தைத்தான் உணர்வுபூர்வமாகப் பார்க்க முடிகிறது. இந்தக் காலகட்டத்தில் நாம் அடைந்திருக்கும் உயர்வு தாழ்வுகளைப் பரிசீலனை செய்து உலகின் பிற நாடுகளில் என்னென்ன மாற்றங்கள் நடந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்து, இனிமேல் நாம் செல்ல வேண்டிய பாதை என்ன என்பதைப் பிரக்ஞைபூர்வமாக வரையறுக்க வேண்டும் என்ற துடிப்போடு நான் இருந்து கொண்டிருக்கிறேன். இந்தக் கோணத்தில்தான் தமிழ் இலக்கியத்தின் இன்றைய நிகழ்வுகளை நான் பார்க்கிறேன்.

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து தமிழ் இலக்கியத்தில் இரண்டுவிதமான, ஒன்றுக்கொன்று எதிரான போக்குகள் இருந்து வந்திருக்கின்றன. ஒரு போக்கு, வாழ்க்கை சார்ந்து சிந்திக்கும் எழுத்தாளர்களுடைய போக்கு. இன்னொன்று வணிக மனோபாவம் கொண்ட எழுத்தாளர்களுடைய போக்கு.

இந்த நூற்றாண்டில் இதுவரைக்கும் மாபெரும் உந்து சக்தியாக இருந்து கொண்டிருப்பவர் சுப்பிரமணிய பாரதி. அவரைத் தாண்டிய பெரும் கலை வீச்சு, படைப்புத்திறன் தமிழகத்தில் தோன்றிவிடவில்லை என்பது என்னுடைய கணிப்பு. அவர் கொடுத்த உத்வேகம், உந்து சக்திதான் பல்வேறுபட்ட காரியங்கள் இந்த நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தில் நடப்பதற்கு அடிகோலியிருக்கிறது. அவர் முழுக்க முழுக்க இலக்கியத்தை வாழ்க்கையோடு இணைப்பதற்கான ஒரு கண்ணோட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். பாரதிக்கு முற்பட்ட காலத்தில் 1850 அதாவது 1860 கால கட்டத்தில் இருந்த தமிழ் இலக்கியத்திற்கும் அப்போது இருந்த உலக இலக்கியத்திற்கும் இடையே இருந்த மிகப் பெரிய இடைவெளியானது பாரதி என்ற தனிமனிதனால் வெகுவாகக் குறைந்துவிட்டது.

வசனம் சார்ந்தும், கவிதை சார்ந்தும், சிந்தனை சார்ந்தும், பத்திரிகை தொழில் சார்ந்தும், இசை சார்ந்தும், அரசியல் சார்ந்தும், சமூக முன்னேற்றங்கள் சார்ந்தும், பாரதி வெளிப்படுத்திய கருத்துகள் ஒரு இருபது ஆண்டுக்குள்ளாகவே தமிழுக்கும் உலகத்தின் படைப்புத்திறன் சார்ந்த தரத்திற்கும் இருந்த இடைவெளியை மிகவும் குறைத்துவிட்டது என்பது ஒரு விந்தையான நிகழ்ச்சியாக இருக்கிறது. அவர் வாழ்ந்திருந்த காலமோ நாற்பதாண்டுகள் தான். செயல்பட்ட காலங்கள் இருபதாண்டுகள். ஊக்கமாகச் செயல்பட்டது பத்தாண்டுகள் என்று சொல்லலாம். இந்த காலகட்டத்திற்குள்ளேயே பாரதி மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்திவிட்டுப் போயிருக்கிறான். அவனுக்குப் பின்னால் இன்று – 1993 வரையும் – அவருடைய தீவிரமான மனோபாவத்தையொட்டி வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கிறவர்கள் – இவர்கள் எல்லோருமே ஒரேவிதமான சிந்தனையைக் கொண்டவர்கள் அல்ல; பல்வேறுபட்ட கருத்து வேற்றுமை கொண்டவர்கள்- அடிப்படையில் இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்குமான உறவைக் கெட்டிப்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள். வாழ்க்கையின் துக்கங்கள் மறைந்து புதிய வாழ்க்கை ஒன்று தோன்ற வேண்டும் என்ற கனவை மனதில் தக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள், பாரதி காலத்திலிருந்து இன்றுவரைத் தொடர்ந்து தமிழில் இருந்து வந்திருக்கிறார்கள். பாரதிக்குப் பின்னால் வ.வே.சு. ஐயர் தோன்றி முதன்முதலாக நவீன இலக்கிய விமர்சனத்தை உருவாக்கி கம்ப ராமாயணத்தை மதிப்பிட்டுக் காட்டினார். உலகத்தில் இருப்பதிலேயே மிகச் சிறந்த காவியம் கம்பராமாயணம் தான் என்று, பழம் பெருமை பேசும் மனோபாவத்தை விட்டுவிட்டுத் தர்க்க ரீதியாக காவியத்தின் அடிக்கோடுகள் என்ன என்றும் கவிஞனின் பார்வைகள் எந்த அளவுக்கு இதில் வெளிப்பட்டிருக்கிறது என்பதையெல்லாம் நவீன இலக்கிய விமர்சனக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு அலசி ஆராய்ந்து, உலகக் காவியங்களுடன் ஒப்பிட்டுக் கம்ப ராமாயணம் மிகப் பெரிய ஒரு காவியம் என்று நிறுவியது, குன்றிக் கிடந்த தமிழ் மனங்கள் நிமிருவதற்கு ஒரு முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து ‘மணிக்கொடி’ என்ற இதழ் 1930வாக்கில் தமிழில் தோன்றியது. அந்தப் பத்திரிகையின் மூலமாக உருவானவர்களில் மிக முக்கியமானவர் புதுமைப்பித்தன். ஒரு மேதை என்று கருதத்தக்கவர். அதற்குப் பின் அவரையொட்டி மெளனி, பி.எஸ். ராமையா, க.நா. சுப்பிரமணியம், சி.சு. செல்லப்பா, பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன் என்று மிகக் குறுகிய காலப் பகுதியில் – இவ்வளவு சிறந்த எழுத்தாளர்கள் தோன்றுவது உலக இலக்கியங்களில்கூட மிக அபூர்வமான ஒரு நிகழ்ச்சியாக தோன்றக்கூடிய அளவுக்கு – தோன்றி வாழ்க்கை சார்ந்த இலக்கியங்களை அதிக அளவுக்கு உறுதிப்படுத்திக் கொண்டு போயிருக்கிறார்கள். அதற்குப் பின்னாலும் இன்று வரையிலும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் லா. ச. ராமாமிர்தம், ஆர். சண்முகசுந்தரம், தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி, ஜெயகாந்தன், ஜி. நாகராஜன் என்று பலரும் உருவாகி இந்த இயக்கமானது தொடர்ந்து தமிழில் இருந்து கொண்டிருக்கிறது. புதிதாக யார் யார் என்னென்ன எழுதுகிறார்கள், என்னென்ன பணிகள் செய்கிறார்கள் என்பதை விவாதத்தின்போது சந்தர்ப்பம் கிடைத்தால் விரிவாகப் பார்க்கலாம்.

பாரதியால் வலுப்பெற்ற இந்தப் போக்குக்கு எதிர் நிலையில் 1910லிருந்தே மற்றொரு போக்கு செயல்பட்டு வந்திருக்கிறது. அதை வணிகப் போக்கு, கலாச்சாரச் சீரழிவுப் போக்கு, மனிதர்களை வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்க விடாமல் கனவுகளை அவர்கள் மனதில் புகுத்தி, பிரச்சனைகளை மழுங்கடிக்கும் போக்கு என்று சொல்லலாம் – இதை முன்னெடுத்துச் சென்றவர்களை பிரக்ஞைபூர்வமாக தமிழ் சமுதாயத்தைக் கெடுக்க நினைத்தவர்கள் என்று நான் சொல்லவில்லை – ஆனால், அவர்கள் உருவாக்கிய இலக்கியம் வாழ்க்கை சார்ந்த நெறிகளுக்கு எதிராக, சுவாரஸ்யமே மிக முக்கியமானதாக, சுவாரஸ்யத்தைத் துண்டக்கூடிய கனவுகளே மிக முக்கியமானதாகக் கருதக்கூடிய, தமிழ் வாழ்க்கை பற்றிய மிகச் செயற்கையான கற்பனைகளை அப்பட்டமாக சொல்லக்கூடிய இலக்கிய நெறியை ஒரு இலக்கிய போக்கை உருவாக்கி வந்திருக்கிறது. அப்போக்கை மிக வெற்றிகரமாக வளர்த்தவர் கல்கி என்கிற ரா. கிருஷ்ணமூர்த்தி. நாற்பதில் தோன்றி கிட்டதட்ட ஒரு பதினைந்து வருடங்கள் தமிழ் இலக்கியத்தில் ஒரு புயல்போல் வாழ்ந்துவிட்டுப் போனவர். மிகத் திறமையான ஒரு எழுத்தாளர். எந்த அளவுக்கு திறமையான எழுத்தாளராக இருந்தாரோ, அந்த அளவுக்கு அதீதமான மனோபாவங்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளும் அவருக்கு இருந்தன.

அவரைத் தொடர்ந்து காலப்போக்கில் பல எழுத்தாளர்கள் வாழ்க்கை சார்ந்த பிரக்ஞை எதுவுமே இல்லாமல், தமிழ் வாழ்வுடைய நிலைமைகள் நெருக்கடிகள் மிக மோசமாக இருக்கக்கூடிய நேரத்திலும் கூட அது பற்றிய எந்த அக்கறையும் இன்றி, உலகின் பிற பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள், புதிய போக்குகள் இவற்றைத் தமிழ் வாழ்க்கை பிரதிபலிக்காமல் இருக்கக்கூடிய நிலைமைகளைப் பார்த்து எந்த விதமான வேதனைகளும் இல்லாமல் தமிழ் மக்களை ஒரு கனவுலகில் ஆழ்ந்து கிடப்பதற்கான காரியங்களைத் தொடர்ந்து செய்து கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த வணிகப் போக்கைப் பற்றியும் வாழ்க்கை நெறி சார்ந்த போக்கைப் பற்றியும் நாம் விவாதத்தில் அதிக அளவுக்குப் பேச முடியும் என்று நம்புகிறேன்.

இந்த இரண்டு போக்குகள் தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள எல்லா மொழிகளிலும் இருக்கின்றன. எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் வாழ்க்கை நெறி சார்ந்த இலக்கியப் போக்கும் வணிகப் போக்கும் இருக்கின்றன. இருந்தும் உலகம் பூராவும் இருக்கக்கூடிய ஒரு பொதுநிலையைத் தாண்டி தமிழகத்தைப் பற்றிய அதிகப்படியான ஒரு அக்கறையும் கவலையும் நாம் கொள்ள வேண்டியதற்குக் காரணம் அங்கெல்லாம் இந்த இரு போக்குகள் இருந்தும்கூட அவை இரு வேறு பிரிவுகளாக மதிக்கப்படுகின்றன. வணிகப் போக்கு ஒன்றாகவும், வாழ்க்கை நெறி சார்ந்த தீவிர இலக்கியப் போக்கு மற்றொன்றாகவும் இருக்கிறது. விமர்சகர்கள் தெளிளத் தெளிவாக இரண்டின் வேற்றுமையைச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். தேர்ந்த வாசகர்கள் இந்த இரண்டு போக்கையும் தனியாகப் பிரித்துப் பார்க்கிறார்கள். பல்கலைக் கழகங்கள் இந்தப் போக்கைப் பிரித்துப் பார்க்கின்றன. சமூக அங்கீகாரம் என்பது எப்போதுமே இலக்கியப் போக்குக்குத்தான் அளிக்கப்படுகிறது. வியாபாரப் போக்குக்கு அளிக்கப்படுவதில்லை. வேறு முதலாளித்துவ சமுதாயங்களில் இந்த இரு போக்குகளும் மதிப்பீடுகள் சார்ந்த பிரச்சினைகளையோ குழப்பங்களையோ உருவாக்கவில்லை. கீழான எழுத்தாளர்களுக்கு அல்லது வணிக எழுத்தாளர்களுக்கு சமூகம் சார்ந்து எந்தவிதமான செல்வாக்கும் இல்லை. அவர்கள் புத்தகங்கள் அதிக அளவுக்கு விற்கலாம். அவர்கள் பணக்காரர்களாக இருக்கலாம். அதிகப் புகழ் கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு அங்கு மரியாதை கிடையாது. அவர்கள்தான் வாழ்க்கை நெறிகளை மதிப்பீடுகளைத் தீர்மானிக்கக் கூடியவர்கள் என்ற எண்ணம் அங்குள்ள மக்களிடையே கிடையாது.

தமிழ் சமுதாயத்திலோ யார் வெற்றி பெற்றிருக்கிறார்களோ, யார் வணிக நோக்கில் எழுதிக் கொண்டிருக்கிறார்களோ, யார் மிக மோசமான காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்களோ, யார் தரக் குறைவான காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்களோ, யாருக்கு இந்த உலகில் நடந்து கொண்டிருக்கும் காரியங்களைப் பற்றி எந்தவிதமான பிரக்ஞையும் இல்லாமல் பிழைப்பு ஒன்றே பிரதானமாக இருக்கிறதோ அவர்கள்தான் இன்று தமிழ் வாழ்க்கையைத் தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் மற்ற சமுதாயங்களிலிருந்து தமிழ்ச் சமுதாயத்தை முற்றிலும் பிரித்துக் காட்டுகிறது. இதைத்தான் நான் பிரச்சனையின் மையமாக முன்வைக்கிறேன். மற்றபடி வணிகப் போக்கு என்பதும் வாழ்க்கை நெறி சார்ந்த இலக்கியப் போக்கு என்பதும் யு.எஸ்.ஏ. உட்பட கனடா உட்பட பிரெஞ்சு, இத்தாலி உட்பட எல்லா தேசங்களிலும் இருக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் மற்ற தேசங்களில் எல்லாம் இந்தப் போக்குகளை ஒன்றுக் கொன்று குழப்பாமல் மதிப்பீடுகளைத் தெளிவாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் தீவிரமான இலக்கியங்கள் புறக்கணிக்கப்பட்டு வணிக இலக்கியங்கள் ஆட்சியில் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன என்பதைத்தான் நான் மிக முக்கியமான பிரச்சனையாகச் சொல்கிறேன்.

இந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? இது போன்ற சிந்தனைகள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா ? இது போன்ற நிலை தமிழகத்தில் ஏற்படுவதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா ? எப்படி அந்த நிலையை மாற்ற முடியும். அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் ? இந்தியாவை விட்டு, தமிழகத்தை விட்டு, ஈழத்தை விட்டு வெளியே வந்திருக்கும் தமிழர்கள் இந்த விஷயங்களை மாற்ற, செம்மைப்படுத்த, மேல் நிலைக்குக் கொண்டுவர ஏதேனும் பங்கை ஆற்ற முடியுமா ? இது பற்றிய உங்கள் கருத்துக்களை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டு என்னுடைய பேச்சை முடித்துக் கொள்கிறேன்.

என். கே. மகாலிங்கம் (கனடா) அவர்களின் உஞூளொO கவிதைத் தொகுதியை வெளியிடுவதற்கு முன்னால் ஒரு சில வார்த்தைகள் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். முக்கியமாகச் சொல்ல வேண்டியது மகாலிங்கம் அவர்களுடைய எழுத்துகளைப் படிப்பதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை. அவருடைய ஒரு சிறுகதைத் தொகுதி தமிழகத்தில் வந்திருந்தும்கூட அந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கான வாய்ப்பை இழந்து விட்டிருக்கிறேன். பல புத்தகங்களை நான் தேடிப் படிப்பேன் என்று மகாலிங்கம் சொன்னார். அது ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் அவருடைய புத்தகத்தை நான் படிக்காமல் விட்டிருக்கிறேன் என்பது மகாலிங்கம் அவர்களை நேரில் சந்தித்த பின்புதான் எனக்குத் தெரிய வந்தது. ‘பூரணி’ என்றொரு இதழைப் பற்றி எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அந்த இதழில் வந்த இலக்கியச் சர்ச்சைகள்- அந்தச் சர்ச்சைகளில் நான் நேரடியாகப் பங்குபெறவில்லை என்றாலுங்கூட – அவை நடந்த காலங்கள், அதில் வந்த விஷயங்கள் எல்லாம் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. இப்போது இவருடன் நான் தங்கியிருந்தபோது இவரது சில கதைகளையும் கவிதைகளையும் படித்துப் பார்த்தேன். இவரைப் போன்ற கலைஞர்கள் இன்றையச் சூழலில் தங்களுடைய எழுத்துப் பணியைத் தொடராமல் இருப்பது மிகப் பெரிய குற்றம் என்று சொல்லத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு இவர்களுக்கு விஷயங்கள் தெரிந்திருக்கின்றன. தங்களுடைய ஆற்றலை எழுத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நிலைமையோ மிக மோசமாக இருக்கிறது. ஓரளவிற்கு விஷயம் தெரிந்தவர்கள், வெளிநாடுகளுக்குச் சென்று பல அனுபவங்களைப் பெற்றவர்கள், ஆங்கிலம் வாயிலாக உலக இலக்கியத்தை மிக நன்றாகவோ அல்லது ஓரளவுக்கோ படித்தவர்கள் எல்லோருமே பங்காற்ற வேண்டிய சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது. அதை உணர்ந்து அவர் மிகுந்த அளவிற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு பல்வேறுபட்ட படைப்புகளை தொடர்ந்து படைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொண்டு இந்தக் கவிதைத் தொகுதியை வெளியிடுகிறேன்.

தலித் இலக்கியம் என்று சொல்கிறார்களே, அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

தலித் இலக்கியம் என்பது இந்திய இலக்கியங்களில் சமீப காலமாக வேகம் பெற்று வரக்கூடிய ஒரு இலக்கியம். இந்தியாவிலுள்ள ஜாதிமுறைகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஏறத்தாழ அதே ஜாதிக் கட்டுமானந்தான் யாழ்ப்பாணத்திலும் அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியாவில் மிக முக்கியமான சமூகப்பணி செய்து கொண்டிருக்கும், வாழ்வுக்கு அடிப்படையான ஒரு பணி ஆற்றிக் கொண்டிருக்கும் விவசாயிகள் காலங்காலமாக ஒதுக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் நீண்ட வரலாறு ஒன்று இருக்கிறது. பல்வேறு புரட்சிகளில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்தப் புரட்சிகள் ஒடுக்கப்பட்டிருக்கின்றன. 2000 வருடங்களாக ஒரு நீண்ட போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்றும் சில காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தத்துவப் போக்குகள் உருவாகியிருக்கின்றன. இன்று சமீப காலமாக மராட்டியில் தலித் இலக்கியம் என்பது வகை உருவாகி வந்துள்ளது. தலித் என்கிற சொல் ஒரு மராட்டிய சொல். தலித் என்றால் பஞ்சமர்கள் என்று பொருள். அங்கு சமூக சிந்தனை கொண்ட சில எழுத்தாளர்கள் – அவர்கள் தலித்தாகவும் இருக்கலாம், தலித்தாக இல்லாமலும் இருக்கலாம் – தலித்துகளுடைய வாழ்க்கை சார்ந்த சில பிரச்சினைகளை முன்னெடுத்துக் கொண்டு வருகிறார்கள்.

இதற்கு முன்னாலும் தலித்துகள் பற்றி நவீன இலக்கியத்தில் வேறு எழுத்தாளர்களால் பேசப்பட்டிருந்தாலும்கூட அவர்கள் தலித்துகளைப் பற்றி பேசுவதற்கும் இன்று தலித்துகள் தங்களைப் பற்றி பேசிக் கொள்வதற்கும் அடிப்படையில் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இதற்கு முன்னால் பேசிய எழுத்தாளர்கள் அதிகமும் மேல்ஜாதி எழுத்தாளர்கள். தலித் வாழ்க்கையைப் பற்றி நேரடியான அனுபவம் இல்லாதவர்கள். மேல்ஜாதி எழுத்தாளர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளக்கூடிய சமூகப் போக்குகள் இருந்தாலும் எப்போதுமே தலித்துகள் ஊரைவிட்டே விலக்கப்பட்டு, பொது வாழ்க்கையில் எந்த முனையிலும் கலந்து கொள்ள முடியாமல், பொது வாழ்க்கையில் எந்த முனையையும் தொட முடியாமல் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தார்கள் என்பதால் பெரும்பாலும் மேல்ஜாதி எழுத்தாளர்கள் சொன்ன விஷயங்கள் அனுதாபம் சார்ந்த விஷயங்களாக இருந்திருக்கின்றன. இப்போது தலித்துகள் அந்த அனுதாபம் தங்களுக்குத் தேவையில்லை என்பதைத் தீர்மானித்திருக்கிறார்கள். மேல்ஜாதி எழுத்தாளர்களின் அனுதாபம் தங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தாது என்பது தெளிளத் தெளிவாக இப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. தங்களுடைய வாழ்க்கை எந்த நிலையில் இருக்கிறது என்பதை அவர்கள் மதிப்பிட்டு சுயவிமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசியலில் முப்பது நாற்பது வருடங்களாக சகல கட்சிகளும் தங்களைச் சுரண்டியிருக்கிறார்கள், ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதெல்லாம் இப்போது தலித்துகளில் எல்லோருக்குமே புரிந்துவிட்டது. இப்போது முதன்முறையாக தங்களுடைய வாழ்க்கையைத் தாங்கள்தான் தீர்மானித்துக் கொள்ளவேண்டும், அரசியலில் கலாச்சாரத்தில், இலக்கியத்தில், கலைகளில் தங்களுடைய ஆற்றல்களை தாங்களேதான் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

தங்களுடைய இயக்கமானது ஒரு போராட்டம் சார்ந்த இயக்கம். அது நீண்ட காலத்திற்கு தொடர வேண்டிய ஒரு இயக்கம். அந்த இயக்கத்தை விஞ்ஞான பூர்வமாக கோபமின்றி சமூக மாற்றங்களுக்கு உரிய கூறுகளை ஒன்றாக கற்றறிந்து செய்ய வேண்டும் என்கிற ஒரு பிரக்ஞை தலித் மக்களிடையே இந்தியாவில் ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம் தலித் இலக்கியம் மராட்டியில் ஓரளவிற்கு கலை வெற்றியோடும் அதே சமயத்தில் முற்போக்கான உள்ளடக்கத்தோடும் வர ஆரம்பித்தது. அதனுடைய பாதிப்புகள் இந்திய மொழிகளில் இப்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. மராட்டிய இலக்கியத்திலிருந்து தலித் இலக்கியத்தைச் சார்ந்த பகுதிகள் தமிழிலும் மற்ற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுகிறது. தலித் மக்கள் இந்தியாவில் பல மொழிகளிலும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் இந்த மொழிபெயர்ப்புகளில் இருந்தும் அவர்களுடைய கோட்பாடுகளில் இருந்தும் உத்வேகம் பெற்று தங்களுடைய மொழிகளில் புதிய இலக்கியங்களைப் படைக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். அதுபோல் தமிழ் எழுத்தாளர்களும் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் தமிழில் இன்று கோட்பாடுகள் சார்ந்த பிரக்ஞை எந்த அளவிற்கு வளர்ந்திருக்கின்றதோ அந்த அளவுக்கு படைப்புகள் சார்ந்த பிரக்ஞை இன்னும் தோன்றவில்லை. இனிமேல் தோன்றலாம். மிகப் பெரிய தலித் படைப்புகள் என்று எதுவும் தமிழில் தோன்றவில்லை. சிறுகதைகள், கவிதைகள் ஒரு சில பார்க்கக் கிடைக்கின்றன. அதிக அளவில் கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. தலித் பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தலித் படைப்புகள் போகப்போக வலுப்பெறும் என்று நம்புகிறேன்.

இதுதான் தமிழ் சார்ந்து தலித் இலக்கியத்தைப் பற்றி சொல்ல வேண்டிய விஷயம் என்று நினைக்கிறேன்.

தாங்கள் கூறியதுபோல் பத்திரிகைத் துறையும் சினிமாத் துறையும் வாழ்க்கை சார்ந்த பார்வையின்றி வணிக இலக்குடன்தான் இயங்கி வருகிறது. இதைப் பார்க்கும்போது விரக்தியும் அதிருப்தியும் தான் ஏற்படுகிறது. இதே நிலை தொடர்ந்து போனால் எதிர்காலம் எப்படி இருக்கும் ? தங்களைப் போன்ற முதல்தர படைப்பாளிகள் ஏதாவது ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள உத்தேசித்திருக்கிறீர்களா என அறிய விரும்புகிறேன்.

இதற்கு எதிரான ஒரு போக்கு இந்த நூற்றாண்டில் 93 வருடங்களாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்று நான் சொல்கிறேன். இந்தப் போக்கில் தீவிர எழுத்தாளர்கள் அடைந்திருக்கக்கூடிய வேதனைகள், சங்கடங்கள், அவமானங்கள், பிரச்சினைகள் இவற்றினுடைய கூட்டுத்தொகையை நீங்கள் நினைத்துப் பார்ப்பீர்கள் என்றால் உலகத்தில் எந்த எழுத்தாளர்களும் எந்த காலகட்டத்திலும் இந்த அளவு சோதனைக்கு ஆளானதில்லை என்று என் அளவில் கருதுகிறேன். அவ்வளவு மோசமான விஷயங்கள் நடந்திருக்கின்றன. ஏனென்றால் முதன்முதலாக எப்பொழுது நீங்கள் தீவிர இலக்கியத்தில் ஈடுபாடு கொள்கிறீர்களோ அப்போது ஒன்று தீர்மானமாகி விடுகிறது. உங்களுக்குப் போதுமான அளவுக்கு வாசகர்கள் கிடைக்க மாட்டார்கள். உங்களுடைய படைப்புகளை வெளியிட பத்திரிகைகள் இல்லை. வருமானம் கிடையாது. சமூக அந்தஸ்து கிடையாது. ஊடகங்கள், கல்வித்துறை ஆகியவை உங்களைக் கண்டுகொள்ளாது. நிலைமை இப்படியிருக்க, இதை மீறித்தான் ஒரு எழுத்தாளன் செயல்பட வேண்டும் என்பது மிகவும் வேதனையான விஷயம். இதனால் அந்த எழுத்தாளனுடைய குடும்பத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் உருவாகின்றன.

எப்பொழுது ஒருவன் தீவிர இலக்கியத்தில் ஈடுபட முடிவெடுக்கிறானோ அப்போது அவன் அதிக நேரம் படிக்க வேண்டியவனாகி விடுகிறான். அதிக நேரம் சிந்திக்க வேண்டியவனாகிவிடுகிறான். அவன் அதற்கான முயற்சிகளில் ஈடுபடும் பொழுது அவனுடைய காலமும் நேரமும் வீணாகின்றன என்று குடும்பத்தினர் கருதுகிறார்கள். இது இயற்கையான ஒரு விஷயம். எழுத்தாளர்கள் திருமணமாவது வரையில் தாய் தந்தையரோடும், திருமணம் முடிந்த பின் மனைவியோடும், பின்னால் குழந்தைகளோடும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். பதினைந்து வருடம் அல்லது இருபது வருடம் எழுதும் தமிழக எழுத்தாளர்களுக்கு ஐந்நூறு அல்லது ஆயிரம் வாசகர்கள்தான் இருக்கிறார்கள். மலையாளத்தில் ஒரு சாதாரண எழுத்தாளன் அல்லது ஒரு சுமாரான கவிஞன் ஒருவனை எடுத்துக் கொள்வோம் – மிகச் சிறந்த கவிஞன் அல்ல, ஒரு சுமாரான கவிஞன் – அவன் 23 அல்லது 24 வயதில் எழுத ஆரம்பிக்கலாம். அநேகமாக எழுத ஆரம்பித்த ஒன்றரை அல்லது இரண்டு வருடங்களுக்குள் அவன் இரண்டு லட்சம் வாசகர்களைச் சென்றடைகிறான். ஒரு உதாராணம் சொல்கிறேன், பாலசந்திரன் சுள்ளிக்காடு என்றொரு மலையாளக் கவிஞர். அரவிந்தனுடைய படத்தில்கூட அவர் நடித்திருக்கிறார். இங்கிருக்கும் ஒரு சிலர் அந்தப் படத்தைப் பார்த்திருக்கலாம். அவர் இப்போது மிகப் பெரிய கவிஞர் அல்ல. வளர்ந்து வரும் கவிஞர். தமிழ்நாட்டில் அவரைவிட மிகச் சிறந்த கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, அவரோடு ஒப்பிடத் தகுந்த கவிஞர் என்று சுகுமாரன் என்ற தமிழகக் கவிஞரைச் சொல்லலாம். சுகுமாரன் நிறைய வாசிக்கக்கூடியவர். சுயவிளம்பரம் தேடிக் கொள்ளாதவர். சுகுமாரனும் மூன்று நான்கு வருடங்களாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். சுமார் ஆயிரம் வாசகர்களைச் சம்பாதித்திருப்பாரா என்பதே சந்தேகம். பாலச்சந்திரன் சுள்ளிக்காடிற்குக் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் வாசகர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

சுகுமாரனின் கவிதைத் தொகுப்பு நாற்பது அல்லது ஐம்பது பக்கங்கள் கொண்டதாக இருக்கும். விலை, உங்களுடைய நாணயத்தில் சொன்னால் அரை டாலர். இருந்தும் விற்பனையாவதற்கு சுமார் இரண்டு வருடங்கள் ஆகும். அப்படியே அது விற்பனையானாலும் அந்தப் பணமும் அவருக்குக் கிடைக்கும் என்பதற்கு எந்த விதமான உத்திரவாதமும் கிடையாது. அவர் வெளியீட்டாளர்களிடம் அந்தப் பணத்தைக் கேட்க முடியாது. ஏனென்றால் வியாபாரத்திற்கான கூறுகள் ஒன்றும் அங்கு உருவாகவில்லை. வெளியீட்டாளர்கள் இதுபோன்ற புத்தகங்களை வெளியிடும்போது எந்தப் பொறுப்பும் ஏற்றுக்கொண்டு வெளியிடுவதில்லை. ஒரு உபகாரம், ஒரு உதவி என்ற அளவில்தான் செய்கிறார்கள். தனக்கு உதவி செய்த வெளியீட்டாளர்களிடம் ஒவ்வொரு எழுத்தாளரும் தங்களுடைய பணத்தைக் கேட்பதற்குக் கூச்சப்படுகிறார்கள். இந்த நிலைமைதான் தமிழகத்தில் பொதுவாக இருந்து கொண்டிருக்கிறது.

நான் 1950இல் எழுத ஆரம்பித்தேன். ரொம்பத் தீவிரமாகச் செயல்படவில்லை என்றாலும் தொடர்ந்து இந்தப் பின்னணியில் இருந்து கொண்டிருக்கிறேன். 1993 வரையிலான இந்த நாற்பத்திமூன்று வருடங்களில் தமிழகத்தை மட்டுமல்ல ஏறத்தாழ உலகம் முழுவதையும் கணக்கிலெடுத்துக் கொண்டால் எனக்கு 5000 வாசகர்கள் இருப்பார்கள். ஆனால் என்னுடைய தரத்திற்கு இணையாக நாற்பத்திமூன்று வருடங்கள் செயல்பட்ட, செயல்படக்கூடிய ஒரு வங்காள எழுத்தாளருக்கு அல்லது ஒரு மலையாள எழுத்தாளருக்கு, ஒரு கன்னட எழுத்தாளருக்கு ஒரு ஹிந்தி எழுத்தாளருக்கு, ஒரு ஆங்கில எழுத்தாளருக்கு, குறைந்த பட்சம் இரண்டு லட்சம் வாசகர்களேனும் இருப்பார்கள். இதுதான் தமிழுடைய நிலையாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதற்கு எதிரான போராட்டங்கள் நூறு வருடங்களாகத் தமிழில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் வந்திருக்கின்றன.

பிற மொழியைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து எப்படி நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று மிகுந்த ஆச்சரியத்திற்கு ஆளாகிறார்கள். தமிழ்நாட்டில் நிலவக்கூடிய இந்த நிலையைப் பற்றியும், எழுத்தாளர்கள் நடத்திக் கொண்டுவரும் போராட்டத்தைப் பற்றியும் மலையாள விமர்சகர்கள் தங்கள் வியப்பைக் கட்டுரைகளில் தெரிவித்திருக்கிறார்கள். ஆக, வணிகப் போக்கிற்கு எதிரான நிலை ஒன்று தமிழில் வலுவாக இருந்து வருகிறது. சிறு பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற தீவிர எழுத்தாளர்களுடைய புத்தகங்களை வெளியிடக்கூடிய பதிப்பகங்கள் இருக்கின்றன. எழுத்தாளர்களே தங்களுடைய புத்தகங்களை அச்சிட்டு நண்பர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். சிறு பத்திரிகைகள் இதுபற்றி விமர்சனங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்தக் கூட்டங்களில் விவாதங்கள் நடைபெறுகின்றன.

வாழ்க்கை குறித்த தீவிரமான பார்வையுடைய இவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்குள்ளோ, ரேடியோவுக்குள்ளோ, டி.வி.க்குள்ளோ, அரசாங்கத்தைச் சார்ந்த நிறுவனங்களுக்குள்ளோ உரிய இடம் தரப்படவில்லை. சினிமாவுக்கு வசனங்கள் எழுதக்கூடிய அல்லது பாடல்கள் எழுதக் கூடிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இருந்தாலும், நிறுவனங்கள் சார்ந்த எல்லாவிதமான புறக்கணிப்புகளையும் எதிர்கொண்டு அதுபற்றி கவலைப்படாமல் இருக்கக்கூடிய ஒரு விஷயமும் அங்கு இருந்து கொண்டிருக்கிறது.

‘சுபமங்களா’ அல்லது ‘இந்தியா டுடே’ தமிழ்ப் பதிப்பு போன்றவை இந்த வணிகப் போக்கைப் பாதித்திருக்கிறதா ?

சுபமங்களா வைப் பொறுத்தவரை அது வணிகப் பத்திரிகைகள் மீது ஒரு தாக்கத்தை உண்டாக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உண்டாக்கவும் இல்லை. ஆனால் சுபமங்களா தன்னளவில் நிற்பதற்கான ஒரு சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்தப் பத்திரிகையை கோமல் திறமையாக நடத்திக் கொண்டு வருகிறார். ‘சூழலில் இருக்கக்கூடிய பல்வேறு போக்குகளை கணக்கிலெடுத்துக் கொண்டு, பத்திரிகை தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தால் ஒரு சில நல்ல காரியங்களையேனும் செய்ய முடியும்; ஆகவே சில சமரசங்களை மேற்கொள்வது தவறல்ல’ என்ற ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டு அவர் இந்தப் பத்திரிகையை நடத்திக் கொண்டு வருகிறார். அது நிலைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று நம்புகிறேன்.

அந்தப் பத்திரிகை, பிரபல பத்திரிகைகள், வணிக பத்திரிகைகள் மீது எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. வணிகப் பத்திரிகைகளின் ஒரேவிதமான நோக்கம் எப்படி லாபம் சம்பாதிப்பது என்பதுதான். அதிகபட்சமான லாபத்தை எப்படி சம்பாதிப்பது. அது தொழில் சம்பந்தப்பட்ட விஷயம். அதை நான் குறை சொல்லவில்லை. ஆனால் வணிக பத்திரிகைகள் நடத்தக் கூடியவர்கள், வணிகப் படங்கள் எடுக்கக் கூடியவர்கள், வணிகத்தையே முக்கியமானதாகக் கருதக்கூடிய அரசியல்வாதிகள், வணிக மனோபாவம் கொண்ட டிவிக்காரர்கள், வணிக மனோபாவம் கொண்ட ரேடியோக்காரர்கள் தமிழ்க் கலாச்சாரம் சார்ந்த மதிப்பீடுகளை மிக மோசமாகப் பாதித்து தமிழ் வாழ்க்கைச் சார்ந்த கீழான நெறிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் முக்கியமான பிரச்சினையாகக் கொள்ள வேண்டும்.

வியாபாரிகள் லாபம் சார்ந்து செயல்படுவது இயற்கையான விஷயம். ஆனால் அவர்கள் சமுதாயத்தினுடைய மதிப்பீடுகளைக் குழப்பக் கூடாது. வாழ்க்கை நெறிகளை அவர்கள் உருவாக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அதற்கான ஒரு தடுப்பு, ஒரு பாதுகாப்பு தமிழ் சமுதாயத்தில் இன்று இல்லை. அதுதான் மிக மோசமான பிரச்சினையாக என்னுடையப் பார்வையில் இருந்து கொண்டிருக்கிறது

சிறுபத்திரிகை ஆயிரத்திற்கு மேல் விற்காது. சுபமங்களா அதை தாண்டி இருக்கிறதா ?

சுபமங்களா பல ஆயிரம் பிரதிகள் விற்பனை ஆகலாம் என்று நினைக்கிறேன். இடதுசாரி வாசகர்களின் ஆதரவு அதற்கு இருக்கிறது.

இது வளர்ச்சியா ?

நிச்சயமாக வளர்ச்சிதான். குறைந்தபட்சம் சுபமங்களா விற்கான ஒரு பிரதியை மூன்று நான்கு பேர் படிப்பதற்கான வாய்ப்பு உண்டு. மிகச் சிறந்த கவிதைகளையோ, மிகச் சிறந்த சிறுகதைகளையோ அதிக அளவு அவர் வெளியிட்டுவிட்டதாக நான் நினைக்கவில்லை. ஆனால் ஒரளவு நல்ல கட்டுரைகளை, கருத்துகளை, சிந்தனைகளை அவர் வெளியிடுகிறார். நேர்காணல்களை வாசகர்கள் விரும்பிப் படிக்கிறார்கள். முக்கியமாக நல்ல புத்தகங்களுடைய நல்ல மதிப்புரைகளை அவர் மிகக் கவனமாக வெளியிடுகிறார். குறைந்தபட்சம் நல்ல புத்தகங்கள் வெளியாகிற செய்தியாவது வாசகர்களுக்குப் போய் சேர்கிறது. இந்த புத்தகங்களை ஒரு சிலர் படிக்கலாம். அந்த புத்தகத்தின் தாக்கங்களை அவர்கள் பெறலாம். இதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த openning ஒரு நல்ல விஷயமாக எனக்கு தோன்றுகிறது.

எழுத்தாளர்கள் கூட்டு சேர்ந்து ஒரு அமைப்பு உருவாக்கி இன்றைய இளைய தலைமுறையினருக்கு சிறந்த படைப்புகளை அறிமுகம் செய்து வைத்தால் அது எந்த அளவுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ?

அதாவது வாசகர்களை தரமான வாசகர்களாக எப்படி உருவாக்குவது என்பதுதான் முக்கியமான பிரச்சனை. தரமான வாசகர்கள் இருந்தால் அவர்களில் ஒரு பகுதியாவது இந்த பத்திரிகைகளுக்கு அவர்களுடைய ஆதரவு கிடைக்கும். ஆனால் தரமான வாசகர்கள் உருவாவதற்கு எதிரான நடவடிக்கைகள் பரிபூர்ணமாக தமிழ் சமுதாயத்தில் செயல்படுகின்றன. தமிழ் குடும்பங்களை இன்று வரையிலும் புத்தகங்கள் வாங்கக்கூடிய பழக்கம் கொண்ட குடும்பங்கள் என்று சொல்ல முடியாது. அந்த பழக்கம் ஒரு நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னாலேயே ஒரு விதத்தில் அழிக்கப்பட்டுவிட்டது என்று சொல்லலாம். ஆனால் தமிழ் குடும்பங்கள் எதை எதையோ படிப்பதற்காக இன்றும் காசு செலவழிக்கின்றன. அத்தனையும் சஞ்சிகைகள். அவற்றை வாங்குகிறார்களே ஒழிய புத்தகங்களை அவர்கள் வாங்குவதில்லை.

ஆக ஒவ்வொரு தமிழ் குடும்பத்திற்குள்ளும் இன்று ஏதாவது ஒரு வணிக பத்திரிகை, ஒன்றல்ல குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு போகும் என்று நினைக்கிறேன். ஏனெனில் காலப்போக்கில் ஒரு இடைவெளி ஏற்படுகிறது. குடும்பங்களில் வயதானவர்கள் படிக்கக்கூடிய பத்திரிகையும் இளைஞர்கள் படிக்கக்கூடிய பத்திரிகையும் வெவ்வேறு ஆகிவிடுகின்றன. இளைஞர்களுக்காக ஒரு சில பத்திரிகைகள், குழந்தைகளுக்காக வேறு பத்திரிகைகள் என்று குடும்பங்களுக்குள் குறைந்தது இரண்டு அல்லது மூன்று பத்திரிகைகள் வருகிறது. சாரசரி ஒரு குடும்பம் மாதம் ஒன்றுக்கு கணிசமான தொகை, ஐம்பதிலிருந்து நூறு ரூபாய் வரையிலும் செலவழிக்கக்கூடிய நிலை இருந்தாலும்கூட அந்தப் பணம் வணிக சஞ்சிகைகளுக்குப் போய் சேருமே ஒழிய தரமான புத்தகங்களுக்கோ, தரமான பத்திரிகைகளுக்கோ போய்ச் சேராது.

குழந்தைகள் தங்களுடைய மூன்று வயது, நான்கு வயது, ஐந்து வயதிலிருந்து தொடர்ந்து ஆரம்பத்தில் வணிக பத்திரிகைகள் வெளியிடும் குழந்தை பத்திரிகைகளைப் படிக்க ஆரம்பித்து தொடர்ந்து அவர்களுடைய வயதிற்கேற்பப் படிக்கும் பத்திரிகைகளை மாற்றிக்கொண்டே வருகிறார்கள். கடைசியில் பக்தி இதழ்களுக்கு வந்து சேருகிறார்கள். ஆனால் ஒன்று : அவர்கள் படித்த பத்திரிகைகள் எல்லாமே வணிக பத்திரிகைகள்தான். இதன் மூலம் அவர்களுடைய மதிப்பிடு வெகுவாக நிர்ணயிக்கப்படுகிறது.

ஒரு சிறுகதை என்றால் என்ன ? ஒரு நாவல் என்றால் என்ன ? ஒரு கட்டுரை என்றால் என்ன ? யார் சிறப்பாக எழுதுகிறார்கள் ? சமுதாயத்தை எப்படிப் பார்க்க வேண்டும் ? அரசியல்வாதிகளைப் பற்றி நாம் எந்தவிதமாக சிந்திக்கவேண்டும் என்பது போன்ற பல்வேறு விஷயங்களையும் இந்த பத்திரிகைகள் அவர்களுடைய மூளைகளில் உருவாக்கிவிடுகின்றன. இவர்கள் பள்ளிகளுக்குப் போகிறவர்களாக இருக்கிறார்கள். தொடர்ந்து கல்லூரிகளுக்குப் போகிறவர்களாக இருக்கிறார்கள். இதன்மூலம் வேறுவிதமான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தும்கூட, சாதாரண வாசகர்கள் எப்படி வணிக பத்திரிகைகளுக்கும் வணிகக் கலாச்சாரத்திற்கும் அடிமைப்பட்டிருக்கிறார்களோ அதே மாதிரிதான் தமிழ் ஆசிரியர்களும், அவர்கள் ஆரம்ப பள்ளி ஆசிரியராக இருந்தாலும் சரி கல்லூரி ஆசிரியராக இருந்தாலும் சரி, முனைவர் பட்டம் பெற்றவர்களாக இருந்தாலும் சரி, வணிகப் பத்திரிகைகளுக்குதான் ஆட்பட்டிருக்கிறார்கள். ஆக, இந்தக் காலக்கட்டத்தில் இந்த கூண்டிலிருந்து வாசகர்கள் வெளியே வந்து, தீவிரமான சிந்தனைகளை வெளிப்படுத்தக்கூடிய எழுத்துக்களையோ, சிறுபத்திரிகைகளையோ, பத்திரிகைகளையோ, புத்தகங்களையோ, படிப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கிறது.

நூலகங்களை எடுத்துக்கொண்டால் நூல்நிலையங்களில் பெரும்பாலும் வெகுஜன எழுத்தாளர்களுடைய புத்தகங்கள்தான் குவிந்து கிடக்கின்றன. மிகக் குறைவாகவே தீவிரமான எழுத்தாளர்களுடைய புத்தகங்கள் கிடைக்கின்றன. அப்படி ஒரு எழுத்தாளனின் படைப்பைப் படித்தாலும்கூட வாசகர்கள் அதுவரையும் அந்த பெயரை கேள்விப்படாத காரணத்தினாலும், தொடர்ந்து சிறுவயதிலிருந்தே வணிக பத்திரிகைகள் மூலமாக வணிக எழுத்தாளர்களுடைய பெயர்களை கேள்விப்பட்டிருக்கிற காரணத்தினாலும், அந்த பிரிவைச் சார்ந்த எழுத்தாளர்களின் புத்தகங்களே பாடப்புத்தகங்களாக இருப்பதாலும், அவனுடைய ஆசிரியர்கள் அந்த எழுத்தாளர்களைப் பற்றி உயர்வான எண்ணம் கொண்டிருப்பதாலும், அரசாங்கம் சார்ந்த பரிசுகளை அவ்வகையான எழுத்தாளர்களே பெற்றிருப்பதாலும் அவர்கள் சினிமாவிற்கு கதை வசனம், பாடல்கள் எழுதி வருவதாலும் சராசரி வாசகர்களின் தேர்வு எப்போதும் வணிக படைப்புக்களாகவே இருக்கிறது. இதுபோன்ற எண்ணற்ற அவலங்கள் தமிழகத்தில் இருந்து கொண்டிருக்கின்றன.

தமிழ் இலக்கியத்தை மலையாளத்துடன் ஒப்பிட்டால் இன்றைய நிலை என்ன ?

தமிழகத்தில் கல்லூரிகள் மலையாளத்தைவிட பல மடங்கு அதிகம். இரண்டு இடத்திலும் கல்வி இன்னும் அதன் உயர்ந்தபட்ச அளவுகளை அடையவில்லை. ஆனால் கேரளாவோடு ஒப்பிட்டு பார்க்கக்கூடிய சமயத்தில் பல விஷயங்களில் தமிழ் நாடு பின்தங்கி இருக்கிறது. வணிக இலக்கியம் என்று நாம் அழைக்கிற இலக்கியம் கேரளாவிலும் இருக்கிறது. தமிழகத்தைவிட மோசமாக இருக்கிறது. ஆபாசமாக, வணிக நோக்கங்களுக்காக, வணிக வெற்றி பெறுவதற்காக, பெயர் பெறுவதற்காக, பணம் பெறுவதற்காக எவ்வளவு கீழ்தரமாக அல்லது பாலியல் சார்ந்து ஒரு தமிழ் எழுத்தாளன் எழுதுவானோ அதைவிடத் துணிவாக எழுதக்கூடிய பல மலையாள எழுத்தாளர்கள் இருந்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அங்கே அத்தகைய எழுத்தாளர்களுக்கு எழுத்தாளர்கள் என்ற கெளரவமில்லை. அவர்கள் வியாபாரிகளாகத்தான் கருதப்படுகிறார்கள். கேரளக் கலாச்சாரத்தில் மதிப்பீடுகளைத் தீர்மானிக்கும் மக்களிடையே அவர்களுக்கு எந்த விதமான பாதிப்பையும் செலுத்த முடிவதில்லை. ஒரு தேர்ந்த வாசகனைக் கேட்டால் நான் பல வணிகப் பத்திரிகைகளை படிக்கிறேன். ஆனால் சிறந்த எழுத்தாளர் என்று எடுத்துக்கொண்டால் தகழி சிவசங்கரன் பிள்ளைதான் சிறந்த எழுத்தாளர், அல்லது கேசவதேவ்தான் சிறந்த எழுத்தாளர், அல்லது வைக்கம் முகம்மது பஷீர்தான் சிறந்த எழுத்தாளர் என்றுதான் சொல்வார். வணிக எழுத்தாளர்கள் சிறந்த எழுத்தாளர்கள் இல்லை என்றும், அவர்கள் பொழுதுபோக்குக்காக எழுதக்கூடியவர்கள் என்றும், இவர்களுக்கும் வாழ்க்கைக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்றும் தெளிவாகச் சொல்லுவான்.

ஒரு இலக்கிய மாநாடு நடக்கிறது என்றால் அந்த மாநாட்டில் வணிக எழுத்தாளர்கள் அதிகச் செல்வாக்குச் செலுத்த முடியாது. சமுதாய நன்மை சார்ந்த கருத்துக்களை எல்லாம் அவர்கள் பேசி வேஷம் போட முடியாது. மொழி சார்ந்த கருத்துகளை எல்லாம் அவர்கள் கட்டவிழ்த்துவிட முடியாது. சமுதாய மாற்றத்திற்காக அவர்கள் துடித்துக் கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்ள முடியாது. அரசாங்கம், நிறுவனங்களின் பரிசுகள் பெறமுடியாது. இவர்களுடைய புத்தகங்களைப் பல்கலைக்கழகங்களில் பாடப்புத்தகங்களாக வைக்கமாட்டார்கள். இப்புத்தகங்கள் பற்றி ஆராச்சிகள் பெரும்பாலும் நடைபெறாது. அங்கு மதிப்பீடு தெளிவாக இருக்கிறது என்று நான் சொல்கிறேன். இந்த நிலை தமிழகத்தில் இல்லை. வணிக எழுத்துத்தான் தமிழ் சமுதாயத்தைப் பாதித்துக்கொண்டிருக்கிறது. வணிக எழுத்தாளர்களைச் சார்ந்துதான் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. இவைகளைப் புகழ்ந்துதான் கல்லூரி தமிழ் விரிவுரையாளர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் அவர்களுடைய எழுத்தைத்தான் படிக்கிறார்கள். இந்த எழுத்துக்கள்தான் சிறந்த எழுத்துக்கள் என்று நினைக்கிறார்கள். இதன் நீட்சியாக மோசமான சினிமா, மோசமான அரசியல், மக்களை ஏமாற்றும் சமயம் எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு கூட்டு வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது.

***

Series Navigation

சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி