இரண்டொழிய

This entry is part [part not set] of 34 in the series 20030607_Issue

பாரதிராமன்


இதை ஏ.கே.வெங்கடாசலத்துக்குத் தெரியாமல்தான் எழுதுகிறேன்.

அ.கு.எ.632301-ல் நாங்கள் ஒன்றாகப் படித்துவந்த காலம். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய நாட்கள்.( அப்போதெல்லாம் அ. கு. எ. கிடையாது!) எதிர்காலத்துக்கான ஏராளமான கனவுகளை மனதில் தேக்கி வைத்திருந்த காலம். ஒவ்வொரு சினிமாப்படம் பார்க்கும்போதும் அந்தந்த கதாநாயகர்களைப்போல வாழ்க்கையில் சிறந்து விளங்கவேண்டும் என்று கனவுகள் அவ்வப்பொழுது மாறிக்கொண்டே போகும். கடைசியில் இப்போதைய நடப்புக்கும் அந்தக்காலக் கனவுகளுக்கும் சம்பந்தமே இல்லாமல் போய்விட்டது. இதில் வருத்தத்திற்கோ வியப்புக்கோ இடமில்லை. எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏற்படுவதுதான் இது!

என்னுடைய பள்ளியிறுதிச் சான்றிதழ் புத்தகத்தில் ‘ பற்களையும் ஈறுகளையும் சுத்தமாக வைத்திருக்கிறான் ‘ என்று என் வகுப்பாசிரியர் குறிப்பெழுதி தலைமையாசிரியர் கையொப்பமிட்டிருந்தார். ஏ.கே. வெங்கடாசலத்தின் புத்தகத்திலும் இதேபோலவே குறிப்பிடப்பட்டிருந்தது. அவனுக்கு மேல் வரிசையில் இரண்டு பற்கள் விழுந்துவிட்டிருந்தன. விழுந்துவிட்ட பற்கள் சார்பதிவாளர் அலுவலகத்துச் சுற்றுச் சுவரில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததற்கு நானே சாட்சி. தவிர அவனுடைய வாயில் மேலும் சில பற்கள் சொத்தையும் பிடித்திருந்தன. உண்மை இவ்வாறிருக்க அவனுடைய பள்ளி இறுதிச்சான்றிதழ் புத்தகத்திலிருந்த பாராட்டு என்னை உறுத்தியது. ஆனால் எல்லா மாணவர்களுடைய புத்தகங்களிலும் இக்குறிப்புகள் எவ்வாறு எழுதப்படுகின்றன என்பதை அறிந்தபோது இதை அவ்வளவாக நான் பொருட்படுத்தவில்லை.

உண்மையில் சிறந்த பற்களுக்கான பாராட்டு குறிப்பிடப்படவேண்டுமென்றால் பேபி பாலகுமாரியின் புத்தகத்தில்தான் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். அவளுடைய புத்தகத்தில் ‘ நன்றாக உடையணிந்து அழகைப் பேணுகிறாள் ‘ என்றே இருந்தது.

அந்தக் காலத்திய டி.ஆர்.ராஜகுமாரியைப்போல பல்வரிசைகள் அழகாக இருக்கும் பேபி பாலகுமாரி கறுப்பு என்றாலும் களையான முகம். படிப்பில் கெட்டிக்காரியில்லை என்றாலும் ஒவ்வொரு வகுப்பிலும் ஃபெயிலாகாமல் தேறி எங்களுடனேயே எஸ்.எஸ்.எல்.சி வரை வந்துவிட்டாள். அதுவரை அவளுடைய வீட்டார் அவளைப் படிக்கவைத்ததே ஆச்சரியம்தான். ஒவ்வொரு வகுப்பிலும் தேறி அவள் எங்கள்கூடவே வந்தது எங்களுக்கு உற்சாகமாக இருந்தது.

பள்ளிக்குள் பேபி பாலகுமாரியின் பல் சரிசகள் எங்களைக் கவர்ந்ததுபோலவே பள்ளிக்கு வெளியே டி.ஆர்.ராஜகுமாரியின் பல்லழகு எங்களைக் கவர்ந்ததும் உண்மை. அதனாலேயே கொத்தமங்கலம் சீனு, பி.யு.சின்னப்பா, எம்.கே.டி. பாகவதர் ஆகியோரது கூடுகளுக்குள் கூடு பாய்ந்து நாங்கள் ராஜகுமாரியுடன் நெருங்கிப் பழகினோம். பின்னாட்களில் ராஜகுமாரி கொடுமைக்காரி வேடங்களில் நடிக்கப் போகவும் நாங்கள் விலகிகொண்டோம். பல் மட்டும் நன்றாக இருந்தால் போதாது, அது சினிமாவானாலும், பண்பும் நன்றாக இருக்கவேண்டும் என்று நாங்கள் நம்பிய காலம் அது. பிறகு என் மத்திய வயதில் ‘புன்னக அரசி ‘யின் பல்லழகால் கவரப்பட்ட நிலையில் யாருக்கும் களங்கம் ஏற்படாமலிருக்கவேண்டும் என்ற கவலையில் பழங்காலக் கனவுகளில் மட்டுமே நான் மூழ்கிக் களிப்புறுவது உண்டு. ஏ.கே.வென்கடாசலத்துக்கும் இந்த அனுபவமே நேர்ந்திருக்கும். அவனுடைய பள்ளி இறுதிச் சான்றிதழ் குறிப்புக்கேற்ப இது சாத்தியம் கூட.வயதாகிய இப்போதைய நிலையில் எந்த நடிகையுடைய பல்வரிசையால் கவரப்படுகிறோம் என்று சொல்லத்தெரியவில்லை.

இது விஷயத்தில் ஏ.கே.வெங்கடாசலமும் என்னுடன் ஒத்துப்போவான் என்றே நினைக்கிறேன்.

இப்போதெல்லாம் எனக்கு அடிக்கடி பல்வலி வருகிறது.வந்தால் இரண்டு மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து வலி இருக்கும். வைத்தியரிடம் போகவேண்டுமென்று எனக்குத் தோன்றுவதில்லை.இலவங்கத் தைலத்தைத் தடவிக்கொண்டு வலியைத் தாங்கிக்கொண்டு சமாளிக்கப் பார்ப்பேன். வலி நின்றதும் பல்லைப்பற்றிய எண்ணங்கள் மறந்துபோகும், அடுத்து வலி தோன்றும்வரை.இனியும் இப்படியே தொடரலாகாது என்று ஒருநாள் சங்கல்ப்பித்துக்கொண்டேன். அடுத்தமுறை வலி ஏற்பட்டதும் ஒரு பல்வைத்தியரிடம் சிகிச்சைக்குச் செல்லவேண்டுமென்றும் முடிவு செய்தேன். ‘ உயிருடன் இருக்கையில் மிக எளிதில் சேதமடையக்கூடியது. ஆனால் உயிர் பிரிந்ததும் பல்லாயிரம் ஆண்டுகள் சேதாரமடையாமல் இருக்ககூடியது.உணவு ஜீரணிக்கும் வேலையை ஆரம்பித்து வைப்பது இதனுடைய பலவீனம் பல நோய்களுக்கு வித்திடும். கண்களையும் மூளையையும்கூட பாதிக்கும் என்று கருதி வந்த காலமும் உண்டு. முப்பத்தியைந்து வயதுவரை எனாமலைத்தாக்கிப் பற்களைப் பலவீனப்படுத்தும் கிருமிகளைப் பற்றிய பயம் என்றால் அதற்குப் பிறகு ஈறுகளைத் தாக்கிப் பற்களை வீழ்த்தும் கிருமிகளின் சேட்டைகளைப் .பற்றிய பயம் தொடரும் ‘- இப்படி பற்களைப் பற்றிய தகவல்கள் என்னுள் பதிந்திருந்ததும் இம்முடிவுக்குக் காரணமாக அமைந்திருக்கக்கூடும்.

ஒவ்வொருமுறை பல்வலி வரும்போதும் ஏ.கே.வெங்கடாசலம் பந்தால் அடிபட்டுக்கொண்டு அவஸ்தைப்பட்டது எனக்கு நினைவு வரும்.

மாவட்ட உயர்நிலைப்பள்ளிகளிடையேயான பல விளையாட்டுப் போட்டிகள் வருடா வருடம் எல்லா முக்கிய நகரங்களிலும் மாறி மாறி நடக்கும். ஒரு சமயம் கைப்பந்து இறுதிப்போட்டி அ.கு.எ.632301-ல் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. அதற்கு முந்தைய மூன்று வருடங்களாக சாம்பியனாக இருந்த அ.கு.எ.606601 அணிக்கும் அ.கு.எ.632301 அணிக்கும் இடையிதான் போட்டி. வழக்கமாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் அ.கு. எ.635851 அணி, அந்த வருடம் கால் இறுதிவரை மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

அதற்குக் காரணம் அ.கு.எ.632301 அணியில் அபாரமாக விளையாடுகின்ற தம்பியும், பலராமும் மேலும் மேலும் பலம் பெற்றுவந்ததே. தம்பி நல்ல உயரம், ஆஜானுபாகு.பெயர்தான் தம்பியே தவிர பீமனும் அனுமனும் கூட தம்பிக்குத் தம்பிகளாகவே தோற்றமளிக்ககூடிய உடல்கட்டு அவனுக்கு. ‘நெட் ‘டின் ஓரத்தில் வந்து ‘பஞ்ச் ‘ செய்யும்போதெல்லாம் பந்து தடுக்கப்படாவிட்டால் தரையே பள்ளமாகிவிடும். அவ்வளவு வலிமை. அந்தப் பந்தை எடுக்ககூடிய வலிமையும் தந்திரமும் அ.கு.எ. 606601 அணியிடத்தில் இல்லை. அ.கு.எ.606601 அணியைச் சேர்ந்த ஒவ்வொரு வீரனின் ஆட்டப்போக்கும் அவனுக்கு அத்துப்படி.

முந்தைய இரண்டு வருடங்களில் அரை இறுதிப் போட்டிகளில் அவர்களிடம் விளையாடித் தோற்றுப்போனாலும் இதையெல்லாம் அவன் கவனித்து வைத்திருந்தான். இம்முறை அ.கு.எ.635851, அ.கு.எ. 631001 அணிகளை வென்று இறுதிப்போட்டிக்கு அ.கு.எ. 632301 அணியால் எளிதில் வர முடிந்தது. அடுத்து அ.கு.எ. 606601 அணியைத் தோற்கடிக்கவேண்டி பலமான பயிற்சிகளில் அவ்வணி ஈடுபடலாயிற்று. அ.கு.ர். 632301 கோட்டை மைதானம்தான் பயிற்சிக்களம். அக்கோட்டை மிகவும் அழகானது. பல அரசாங்க அலுவலகங்களும், உயர்நிலைப்பள்ளி, சிறை, அரசாங்க ஆஸ்பத்திரி போன்றவைகளும் கோட்டைக்குள் அமைந்திருந்தன. சுற்றி தண்ணீருடன் கூடிய அகழியும், கோட்டைக்குள் நுழைய நான்கு புற வாயில்களும் உண்டு. கைலாசநாதருக்கான பெரிய கோயிலும், குளமும் தேரும் கூட கோட்டைக்குள் இருந்தன. நிழலான காரியங்கள் பலவற்றுக்குத் தோதான, பேர்போன கோட்டை அ.கு.எ. 632001-ன் கோட்டையைப்போல அ.கு.எ. 632301 கோட்டை தன் பெயரை இழக்கவில்லை.

எங்கள் பள்ளியில் படித்துவந்த இரண்டு தீனன்களுக்கும் ( ட்டி.தீனன், சி. தீனன்) ஏ.கே.வெங்கடாசலத்துடன் சேர்ந்து வாலிபால் விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. சாதாரண ஆட்டங்கள் என்றால்கூட மூவரும் கட்டாயம் ஆஜராகி எல்லைக்கோட்டை பந்து தாண்டி விழ விழ ஓடி எடுத்துவந்து மூச்சிறைக்க எறிவார்கள். பரபரப்புடன் விளையாட்டைப் பார்ப்பார்கள். விளையாடுபவர்களுக்கு உற்சாகம் ஊட்டுவார்கள். இருவருக்கும் சிறு காற்று மழைக்குமே தாளாத பூஞ்சை உடல். இது இவ்வாறிருக்க, மாவட்ட வாலிபால் இறுதிப் போட்டிக்கான பயிற்சிகளின்போது தினமும் பயிற்சிக்களத்தின் ஓரத்தில் அமர்ந்துகொண்டு அவர்கள் உற்சாகப்படுத்திவந்ததில் வியப்பே இல்லை.இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் பயிற்சி. கள எல்லையைச் சுற்றி உற்சாகமான கும்பல்.வலைக்கு சமீபத்தில் எல்லைக்கோட்டை அடுத்து இரண்டு தீனன்களுக்கும் மத்தியில் ஏ.கே.வெங்கடாசலம்.அப்போது அவன் பலராமைக் கிண்டலடித்தபடிஎதிரணிக்கு அமோக ஆதரவாகக் குரல் எழுப்பிக்கொண்டிருந்தான். இந்நிலையில் பலராம் எகிறிக் குதித்துத் தட்டிய ஒரு ‘பஞ்ச் ‘சில் பந்து எதிர்பாராமல் ஏ.கே.வெங்கடாசலத்தின் முகத்தைத் தாக்கியது.

வாயிலிருந்து வழிகின்ற ரத்தத்தைத் துடைத்துவிட்டு சிறிது சாக்பீஸ் பவுடரை அப்பி ருத்ரகோடி மாஸ்டர் ஏ.கே.வெங்கடாசலத்தை மெல்லத் தூக்கி அணைத்து வெளியே இட்டுச்செல்ல முயன்றார்.பாவம், ஏ.கே.வெங்கடாசலம் வாயைத் திறந்து பலராமைத் திட்ட்க்கூட முடியவில்லை.அவன் முகம் வீங்கி ஒருமாதிரி அனுமார்த்தனம் வந்திருந்தது அவனிடம். வலியைப் பொறுத்துக்கொண்ல்டு ஏ.கே.வி. ஒரு வீம்புடன் பயிற்சி விளையாட்டைத் தொடர்ந்து பார்க்கத் தீர்மானித்துவிட்டான். ஆனாலும் எல்லைக்கோட்டுக்கு சற்று தள்ளியும் அதிக ஜாக்கிரதையுடனும் அவன் நிற்க வேண்டியிருந்தது.

அன்று இரவுதான் அவனுக்குத் தன் பற்களில் பட்ட காயத்தின் பரிமாணம் தெரியவந்தது.மேல் வரிசையில் இரண்டு முன் பற்கள் ஆட்டம் கண்டுவிட்டிருந்தன. ரத்தக் கசிவு நின்றுவிட்டிருந்தாலும் வலி இன்னமும் இருந்தது. பற்களின் ஆட்டம் அதிகமாகி அவை விழுந்துவிடுகின்ற நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டிருந்தன.

அடுத்த நாள் இறுதிப் போட்டியில் அ..கு.எ.606601 அணி தோல்வியுற்றது. அதற்கடுத்த நாள் அ.கு.எ. 632301 அணியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதற்கடுத்த நாள் மதிய இடைவேளையில் முருங்கைக்காயைச் சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஏ.கே.வி.யின் ஆட்டம் கண்டிருந்த இரண்டு பற்களும் தெறித்து விழுந்து விட்டன. அப்பற்களைக் கையில் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று அவன் விழித்துக்கொண்டிருந்தான்.

அன்று காலையில்தான் எங்கள் வகுப்பில் புத்தரைப்பற்றிய பாடம் ஒன்று நடந்து முடிந்திருந்தது. புத்தருக்குச் சொந்தமான பல பொருட்கள் புனிதமாகக் கருதப்பட்டு பல இடங்களில் பாதுகாக்கப்பட்டு வணங்கப்படுவதாகவும், இலங்கையில் கண்டி மாநகரத்தில் அவருடைய பல் அவ்விதம் கோவிலில் வைத்து வணங்கப்படுவதாகவும் படித்து முடித்திருந்தோம். ஏ.கே.வெங்கடாசலத்தின் விழுந்துவிட்ட பற்களையும் பாதுகாப்பாக வைத்தால் என்ன என்று எங்கள் இருவருக்குமே தோன்றியது. அப்பற்களைக் கழுவி எடுத்துக்கொண்டு பள்ளியைவிட்டு வெளியே வந்தோம். அடுத்திருந்த சார்பதிவாளர் அலுவலகத்தைச் சுற்றி அப்போதுதான் சுற்றுச் சுவர் கட்டி பூச்சு வேலை நடந்துகொண்டிருந்தது.மதிய மற்றும் சிறு இடைவேளைகளில் மாணவர்கள் சார்பதிவாளர் நேரே பார்க்கிற நிலையில் ஒட்டுமொத்தமாக சர்ர்ரென்று டவுசரைத் தூக்கி தரிசனம் தந்தபடி ஒண்ணுக்கடிப்பதாலும், அந்தப் பகுதிக்கே ஒரு நச்சுக் காற்றை உருவாக்கும் படியாய் நிலைமை மோசமாகி வருவதாலும் சுற்றுச் சுவரின் அவசியம் ஏற்பட்டதை இடையில் சொல்ல விட்டு விட்டது.காயாத சிமெண்ட்டுடன்வேலையைப் பாதியில் விட்டுவிட்டு வேலையாட்கள் சாப்பிடப் போயிருந்தார்கள். சுற்றுச் சுவரின் ஒரு கோடியில் ஈரமாக இருந்த சிமெண்ட் பூச்சுக்குள் ஒரு பல்லையும் இன்னொரு கோடியில் இன்னொரு பல்லையுமாக யாரும் பார்க்காதபோது புதைத்துவிட்டு அப்படியே அங்கேயே ஒண்ணுக்கடித்துவிட்டு நழுவினோம்.

தன் பற்களைச் சுவரில் புதைத்ததில் ஏ.கே.வெங்கடாசலத்துக்குப் பெருமை பிடிபடவில்லை. சார்பதிவாளர் அலுவலகச் சுவர் உள்ளளவும் அவன் பற்கள் இருக்கும். இதை அவன் என்னிடம் அடிக்கடி கூறி பெருமை அடித்துக்கொள்வான். அப்போது அவன் சிரிக்கும் சிரிப்பு வினோதமாக இருக்கும். அவன் பெருமைக்கு நானே உதவியிருந்தாலும் எத்தனை நாள்தான் அவன் பீற்றலைப் பொறுத்துக் கொள்வது ? பொறுக்க முடியாதென்று போய்விட்ட நிலையில் நானும் அவனிடம் ஒரு சபதம் போட்டேன். ‘ரொம்பவும்தான் பீற்றிக்கொள்ளாதே! உன் பற்கள் சாதாரணச் சுவரில்தான் புதைதிருக்கின்றன. ஒரு புயலோ, இடியோ சுவரைப் பெயர்த்துவிட்டால் அவ்வளவுதான், உன்னுடைய பற்கள் போகுமிடம் தெரியாது.என்னுடைய பற்கள் என்றைக்காவது விழுந்துவிட்டால் அவற்றை இன்னும் உயர்ந்த நிலையான இடத்தில் புதைத்து வைத்து உன்னிடம் தெரிவிப்பேன். அப்போது தெரியும் யாருடைய பற்கள் உசத்தி என்று ‘ சற்று கடுமையான சபதம்தான். இன்று வரை நிறைவேறும் சாத்தியமில்லாமல் இருந்தது. என் பற்கள் விழவேயில்லை. அதற்கு கைப்பந்துகளுக்கு என் முகத்தை முத்தமிடும் பாக்கியம் கிட்டாததும், நான் பலராம் விளையாடும் பக்கமே நின்று வேடிக்கை பார்ப்பதும் கூடக் காரணங்களாக இருக்கலாம்.

‘ இரண்டு கீழ் வரிசைக் கடைவாய்ப் பற்கள் பலமிழந்து இருக்கின்றன. இப்போது மூன்று நாட்களுக்கு சிமாக்ஸில் 500-ம் ஃபிளெக்சனும் சாப்பிட்டு வாருங்கள், வலி நிற்காவிட்டால் பற்களைப் பிடுங்கவேண்டி வரும் ‘ என்றார் ஒரு வாரம் முன்பு என்னைப் பரிசோதித பல் வைத்தியர் சீனுவாசன். அவர் சொன்ன மருந்துகளை மூன்று நாட்கள் சாப்பிட்டதில் வலி குறைந்திருந்தது. ஆனால் திடாரென மேல் வரிசைப் பற்களில் லேசாக வலி கண்டிருந்தது. இடையிடையே ஏ.கே.வெங்கடாசலத்தின் ஞாபகமும் வந்துகொண்டிருந்தது. அவனுடைய பள்ளி அவஸ்தைகளைப் பற்றிய ஞாபகம் மட்டும் அல்ல, என் சபதத்தின் ஞாபகமும் கூட.

நான்காவது நாள் பல் வைத்தியரைப் பார்க்கப் போனேன்.

‘ இப்போது வலி எப்படி இருக்கிறது ? ‘ என்று கேட்டார் பல் வைத்தியர். ‘அடாடா, மேல் வரிசையில் வலிக்கிறதா ? ‘ என்று கேட்டுவிட்டுப் பரிசோதனையைத் தொடர்ந்தார். ‘ இது ஈறு தொல்லைதான். ஒரு வாரம் ஈறுகளின்மேல் சென்ஸோஃபார்ம் பிசினைத் தடவி வாருங்கள். எட்டாம் நாள் வந்து பாருங்கள். ‘என்றார் வைத்தியர்.

‘ வலி நிற்காவிட்டால் பல்லைப் பிடுங்கவேண்டியிருக்குமோ டாக்டர் ? ‘ என்று சற்று பயந்துகொண்டேகேட்டேன்.

‘ அட, ஏன் சார் பயப்படறீங்க ? என் அப்பாவுக்குக்கூட இப்படித்தான் கீழ் வரிசை, மேல்வரிசை என்று மாறி மாறி வலி வந்துகொண்டேஇருந்தது. எங்கே முப்பது பற்களையும் பிடுங்கவேண்டி வருமோ என்று அவரும் நானுமே பயந்துகொண்டிருந்தோம். சரியான மருந்துகளைத் தொடர்ந்து உபயோகித்ததில் அப்படி ஏதும் நிகழவில்லை. உங்களுக்கும் அதுமாதிரியேதான். மருந்துகளைச் சரியாகவும் தொடர்ந்தும் உபயோகித்து வந்து போய்க்கொண்டிருங்கள் ‘ என்றார் வைத்தியர்.

‘ டாக்டர், உங்கள் தகப்பனாருக்கு முப்பது பற்களைப் பற்றிய பயம் இருந்தது என்கிறீர்களே மீதி இரண்டைப் பற்றிப் பயமே இல்லையா ? ‘ எனத் தயங்கியபடியே கேட்டேன்.

‘ ஓ அதுவா, அவருக்கு பத்து பன்னிரெண்டு வயதிலிருந்தே முன் வரிசையில் இரண்டு முன் பற்கள் கிடையாது ‘ என்றார் வைத்தியர் சிரித்துக்கொண்டே.

தற்செயலான பாவனையில் நான் மருந்துச் சீட்டில் வைத்தியரின் இனிஷியலைப் பார்த்தேன்.

————————————————–கலைமகள், ஜூன்-1999.

ஜோதி விநாயகம் நினைவு சிறுகதைப் பரிசுத் திட்டத்தில் பரிசு பெற்றது.

bharathiraman@vsnl.com

Series Navigation

பாரதிராமன்.

பாரதிராமன்.