இனி, அவள்…

This entry is part [part not set] of 29 in the series 20030112_Issue

அலர்மேல் மங்கை


வீட்டினுள்ளே நுழைந்த போது அப்பத்தா அருவாமணையில் மீனைத் துண்டம் போட்டுக் கொண்டிருந்தாள். அம்மியில் மசாலா அரைத்து, வழித்து, கழுவி விடப் பட்டிருந்தது. சுருங்கிய தோலும், இடுங்கிய கண்ணும், நடுங்கிய விரலுமாக அவள் குத்த வைத்திருப்பதைக் கண்ட ராசாத்திக்கு மனசை வலித்தது.

‘இன்னிக்கு என்ன விசேசம்னு மீனு வாங்கியாந்திருக்கள்ளா ? ‘ என்றாள்.

நிமிர்ந்து பார்த்த அப்பத்தா கண்களில் பூரிப்பு.

‘உங்கப்பன் வந்திருக்கான்ட்டி..வாய்க்காலுக்குப் போயிருக்கான் குளிக்க.. ‘

சில பற்களே துருத்திக் கொண்டிருந்த வாய் புன்னகையிலும், பூரிப்பிலும் விரிந்தது. ராசாத்திக்கு ஆங்காரம் மூண்டது.

‘ஒம்மகன் வந்திருக்கான்னு சொல்லு..எங்கப்பனாம் அப்பன்…. ‘

எரிச்சலுடன் கூறி விட்டு அங்கணத்தில் சென்று கால்களைக் கழுவிக் கொண்டாள். முகத்திலும் தண்ணீரை வாரி அடித்துக் கொண்டாள். அவள் வேலை பார்க்கும் வீட்டில் மிளகாய்ப் பொடி, இடித்தது இன்னும் கண்ணும், மூக்கும் எரிந்தது. இப்போது கூடவே வயிறும், மனசும்……

அப்பத்தா மீனை அரிந்து விட்டு இப்போது கழுவிக் கொண்டிருந்தாள். கண்ணீர் வற்றிப் போனாலும், ஈரம் வற்றாத குரல் நடுங்கிக் கொண்டு, உள்ளத்தின் துடிப்பையும் சேர்த்து ஒலித்தது.

‘ஆமா, இந்த அப்பன் இல்லாம இவா ஆகாசத்துல இருந்து குதிச்சுட்டா. அவன் பண்ண பாவம் பொண்டாட்டி அறுத்துட்டு போய்ட்டா. பிள்ள கரிச்சுக் கொட்டுது..கூட்டிகிட்டவ அடிச்சுப் பத்துதா…. ‘ பொறுப்பற்ற மனிதன் என்றாலும் அவள் மகன். அவள் மகனை, அவனுடைய மகளே வைதாலும் அந்தக் கிழவிக்குப் பொறுக்க முடியாது. ராசாத்தி ஒன்றும் கூறாமல் குடிசைக்கு வெளியே வந்தாள். இன்னும் கொஞ்சம் நேரம் அப்பத்தாவின் புலம்பல் தொடரும். குடிசைக்கு வெளியே கிடந்த ஆட்டுரலில் அமர்ந்து வாய்க்கால் பக்கமாகப் பார்வையைத் திருப்பினாள்.

அங்கு அவ்வளவாகக் கூட்டமில்லை.

ஏனோ காரணமில்லாமல் மனம் குமுறிக் கொண்டு வந்தது. அப்பனைப் பார்க்கும் போதெல்லாம் ஆத்திரம் குமுறிக் கொண்டு வருகிறது. அப்பனால்தானே இந்த கஷ்ட ஜீவனம். ஒரு நல்ல புருஷனாக, அப்பனாக இருந்திருந்தால், அவளுக்கும் ஒரு திருப்தியான வாழ்க்கை அமைந்திருக்கும்.

அம்மா இப்படி அறுத்துக் கொண்டு போயிருக்க மாட்டாள். இப்போது அவள் அப்பனும் இல்லாமல் ஆத்தாளும் இல்லாமல் வயதான அப்பத்தாவுக்குப் பாரமாக இருந்திருக்க வேண்டாம்.

‘இவா ஏன் அழுதா ? நால்லா முட்டிகிட்டு அழணும் ? புள்ளையத் துப்புக் கெட்டத் தனமா வளத்துட்டு இவா ஏன் அழுதா ? ‘

அப்பத்தா மீது கோபமாக வந்தது. அங்கு இருக்கப் பிடிக்கவில்லை அவளுக்கு. பக்கத்துக் குடிசையில் சங்கரம்மா அக்கா வேலை முடிந்து வந்து உலை வைத்துக் கொண்டிருந்தாள். மனசு சந்தோஷமாக இருக்கும் போது மட்டும் சங்கரம்மா அக்காவுடன் பேசப் பிடிக்கிறது. பொங்கி வரும் போது வாய்க்காலை வெறுமே வெறிக்கத்தான் தோன்றுகிறது. இப்போது அப்பன் எதற்காக வந்திருக்கிறான் என்று தெரியவில்லை. இப்படித்தான் மூன்று நான்கு மாதத்துக்கு ஒரு முறை வந்து பெற்றவளிடம் சீராடி விட்டு, அந்தக் கிழவியிடம் இருந்து பத்து, இருபது என்று வாங்கிப் போகிறான், வெட்கம் கெட்டவன்! அவனைப் பார்க்கும் போதெல்லாம் ஆங்காரம் பீறிக் கொண்டு வருகிறது. அவளுடைய வாழ்க்கையின் அவலத்துக்கு மட்டுமல்லாமல், அப்பத்தா, அவள் தாய் எல்லோருடைய வாழ்க்கையின் சறுக்கல்களுக்கும் அவன்தான் காரணம் என்ற உண்மை மனதைக் கீறி ரணமாக்குகிறது. மறு நாள் வேலைக்குப் போகும் வரை ரணம் சீழ் பிடித்து நாற்றமடிக்கிறது. மறுநாள் வேலைக்குப் போகும் வீட்டில் மீனா அக்காவைப் பார்க்கும் வரை ரணத்தில் ஊறி, வெந்துதான் போகிறாள். ஆனால் மீனா அக்காவைப் பார்த்தவுடன் மூச்சு வருகிறது. அவள் புன்னகையில் ஆறுதல் வருகிறது. அவள் பேச்சில் உலகம் மீண்டும் பிடித்ததாக மாறுகிறது.

அவள் வேலை பார்க்கும் வீட்டு அம்மாவின் மகள் மீனா அக்கா. கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருக்கிறாள். ராசாத்தியின் பார்வையில் அவள் ஒரு ராஜ குமாரியாகத் தெரிகிறாள். அழகி..அதை விட அதி கெட்டிக்காரி. எப்போதும் எதையாவது வாசித்துக் கொண்டே இருக்கிறாள். சிலது ஆங்கிலம், சிலது தமிழ். டி வியில் அவள் மற்றவர்களைப் போல வெறும் சினிமாக்களையும், சினிமாப் பாட்டுக்களையும் மட்டும் பார்ப்பதில்லை. அவள் பார்க்கும் காட்சிகளெல்லாம் ராசாத்திக்கு விசித்திரமாக இருக்கிறது. விலங்குகளைப் பற்றியும், பறவைகளைப் பற்றியும் அதிகம் இருக்கிறது. வித விதமான ஊர்களைப் பற்றியும் மனிதர்களைப் பற்றியும் இருக்கிறது. எல்லாம் ஆங்கிலமாக இருப்பதில் ராசாத்திக்கு ஒன்றும் புரிவதில்லை. சில சமயங்களில் மீனா அக்காவே ராசாத்திக்கு அவை எல்லாம் என்னவென்று விளக்குகிறாள். ராசாத்திக்கு ஆச்சர்யமாக இருக்கும், எவ்வளவெல்லாம் தெரிகிறது அவளுக்கு. ஒரு நாள் ராசாத்தி மீனா அக்காவிடம் கேட்டாள்,

‘ எப்பப் பார்த்தாலும் எதையாவது வாசிக்கிறிக…. டி விலயும் என்னல்லாமோ பார்க்கிறீக…இவ்வளவெல்லாம் தெரிஞ்சு என்ன பண்ணப் போறிக ? ‘ என்று. மீனா அக்கா எப்போதும் போல அழகாகச் சிரித்தாள். வெகு நேரம் ஒன்றும் கூறாமல் யோசித்தாள். ராசாத்தி அறையை மெழுகிக் கொண்டிருந்தாள். துணியைத் தண்ணீரில் நனைப்பதும், பிழிவதும் மெழுகுவதும் என்ற ஓசைகள் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

‘ராசாத்தி இங்க வா ‘ என்றாள் மீனா அக்கா. ராசாத்தி துணியை வாளிக்குள் போட்டு விட்டு மீனா அக்கா அருகில் சென்று அமர்ந்தாள்.

‘உனக்குப் பிடிச்சது என்னதுன்னு சொல்லு.. ‘

ராசாத்திக்கு ரெம்ப சந்தோஷமாக இருந்தது. இது வரை யாரும் அவளிடம் அதைக் கேட்டதில்லை. ராசாத்தி யோசிக்காமல் பதில் சொன்னாள்.

‘எனக்கு உங்களப் பிடிக்கும். ‘

மீனா அக்கா பெரிதாகச் சிரித்தாள்.

‘அது சரி..ஆனா வேற என்ன பிடிக்கும் ? ‘

‘வேற என்ன ? அப்பத்தாளைப் பிடிக்கும், அவா பண்ணுற மீன் குழம்பு பிடிக்கும், எங்க ஊர் அம்மன் கொடைக்குப் போகப் பிடிக்கும், பொருட்காச்சி போற நேரமெல்லாம் என்னையும் கூட்டிப் போறிகள்ளா, அது பிடிக்கும், சினிமா பார்க்கப் பிடிக்கும், எங்க பக்கத்துக் குடிசைல சங்கரம்மா அக்கா இருக்கால்லா ? அவளோட பேசப் பிடிக்கும்… ‘

மீனா அக்கா அவளையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘சரி..உனக்கு இதெல்லாம் பிடிக்கிற மாதிரி, எனக்கு வாசிக்கப் பிடிக்கும். உனக்குச் சொல்லியிருகேன்ல, இந்த உலகம் ரெம்பப் பெரிசு, பல தரப் பட்ட மனுஷங்க, எங்கெல்லாமோ வாழ்றாங்கன்னு ? அவங்க வாழ்க்கை பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கணும்னு ஆசை. உலகத்தப் பத்தி எல்லா விஷயங்களும் தெரிஞ்சால் எவ்வளவு நல்லா இருக்கும் ? அதான் இவ்வளவு வாசிக்கிறேன், அப்படியும் திருப்தி ஆக மாட்டேங்குது. வாசிக்க வாசிக்கத்தான், நமக்குத் தெரிஞ்சது கம்மிதான்னு தெரியுது. ஐயையோ, நாம வாழ்ந்து முடிக்கிறதுக்குள்ள எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணுமேன்னு பதட்டமா இருக்கு…. ‘ என்று நிறுத்தினாள் மீனா அக்கா. ராசாத்திக்கு மீனா அக்காவைப் பார்க்கப் பாவமாக இருந்தது. வசதியான வீட்டில் பிறந்து சந்தோஷமாக அல்லவா இருக்க வேண்டும் ? ஆனால் மீனா அக்கா அவ்வளவு சந்தோஷமாக இல்லையென்று ராசாத்திக்குத் தோன்றியது. மீனா அக்கா மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று ரெம்ப விரும்பினாள். எதோ ஆராய்ச்சிப் படிப்பாம். ஆனால் அதற்கு வெளியூர்தான் போக வேண்டும். எனவே மீனா அக்காவின் தாத்தாவும், பாட்டியும் பெண் பிள்ளை வெளியூர் போய்ப் படிக்கக் கூடாது என்று தடுத்து விட்டார்கள். மீனா அக்காவின் அம்மா ஒரு வாயில்லாப் பூச்சி. அவளுடைய அப்பா மீனா அக்காவை விட பெரிய படிப்பாளி. அவருக்கு மாடியில் அவருடைய அறையும், புத்தகங்களூம், மாலையில் விளையாடப் போகும் பந்தாட்டமும்தான் வாழ்க்கை. மீனா அக்காவின் சகோதரர்கள் இருவரும் வெளியூரில் பெரிய படிப்பு படித்துக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு மீனா அக்கா நசுங்குவதாகத்தான் பட்டது ராசாத்திக்கு

எப்போதும் புத்தகமும், கையுமாக மீனா அக்கா இருப்பது அவள் பாட்டிக்குப் பிடிப்பதில்லை.

‘பொட்டப் பிள்ளயா லட்சணமா, சமையல் படிச்சோமா, வீட்ட ஒதுங்க வச்சோமான்னு இல்லாம எப்பப் பாரு அப்படி என்னதான் மாயம் இருக்கோ அந்தப் புஸ்தகத்துல.. ‘ என்பாள்.

பாட்டிக்குப், பேத்தி வரும் நல்ல மாப்பிள்ளைகளையெல்லாம் கழிப்பதில் ரெம்ப வருத்தம். மீனா அக்கா ஜாதியிலேயே இல்லாத வழக்கமாக மாப்பிளையுடன் பேசிப் பார்த்துதான் முடிவெடுப்பேன் என்று சொல்லி விட்டாள். மீனா அக்காவுக்கு இது வரை ஒரு மாப்பிளையையும் பிடிக்கவில்லை. ஒரு முறை ராசாத்திடம் மீனா அக்கா சொன்னாள்,

‘ நம்ம தாமிரபரணிய ஒரு சொம்புக்குள்ள அடச்சு வச்சுட்டா அது வெறும் தண்ணிதான ? ஆனா அது காடுலயும், மலையிலேயும் ஓடினாத்தான ஆறு ? அது மாதிரித்தான் இப்ப என்னை வீட்டுக்குள்ள, அடச்சு வச்சிருக்கிறது. இந்த வீடு எனக்கு ஒரு ஜெயில். இந்த ஜெயில்லேருந்து தப்பி இன்னொரு ஜெயிலுக்குள்ள போயிட்டால் நான் செத்துப் போயிருவேன். அதனாலதான் எனக்கு வர்ர புருஷனாவது என்னைச் சுதந்திரமாக இருக்க விடணும். என்னை ஒரு சுதந்திர மனுஷியா வாழ விடணும். அப்படி என்னிக்கு ஒரு மாப்பிள்ளை வாரானோ அன்னிக்குத்தான் எனக்கு விடுதலை. ‘

ராசாத்தி அன்றிலிருந்து மீனா அக்காவுக்கு அவளுக்குப் பிடித்த மாதிரி நல்ல மாப்பிள்ளை வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.

மீனா அக்கா ராசாத்திடம் ரெம்பப் பிரியமாக இருந்தாள். என்னவெல்லாமோ கற்றுத் தந்தாள். ஆங்கில வார்த்தைகளை எழுத்துக் கூட்டி வாசிக்க, அமைதியாகப் பேச என்று என்னென்னவோ. சங்கரம்மா அக்கா புருஷன் கோபத்தில் யாரையோ வெட்டி விட்டதில் ஜெயிலுக்குப் போய் விட்டார் என்று சொன்ன போது, மீனா அக்கா அவளுக்கு கோபத்தைக் கட்டுப் படுத்தச் சொல்லித் தந்தாள். கோபமாக இருந்தாலும், சந்தோஷமாக இருந்தாலும் அதைச் சிறிது நேரம் ஆறப் போட வேண்டும் என்று பாடம் சொல்லித் தந்தாள். எந்தெந்த நேரத்தில் எப்படிப் பேச வேண்டும் என்று புரிய வைத்தாள். இது நாள் வரை ராசாத்திக்கு உள்ள சம்பளப் பணத்தையெல்லாம் அவளுக்கு மூன்று பவுன் சங்கிலியாகவும், தோடாகவும் மாற்றியது அவள்தான். குடிகாரனுக்கும், பொறுப்பற்றவனுக்கும் கழுத்தை நீட்டவே கூடாது, என்று அவள் மனதில் உரமேற்றி வைத்திருந்தாள். சத்துணவுக் கூட வேலை வாங்கித் தருவதில் முனைப்பாக இருந்தாள். அப்பேர்ப் பட்ட மீனா அக்காவுக்கு, அவள் விருப்பம் போலவே மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்று ராசாத்தி வேண்டாத நாளில்லை. மீனா அக்கா இருக்கப் போய்த்தான் அப்பன் வந்து போகும் நேரமெல்லாம் ஒரு மனுஷியாக நடந்து கொள்ள முடிகிறது.

‘போகட்டும் வெக்கம் கெட்டவன்.. நாலு நாள் இருந்து மீனும், கருவாடும் தின்னுட்டுத் துட்டையும் புடிங்கிட்டுப் போவான். இருந்துட்டுப் போறான். அவன் மூஞ்சியையே பார்க்க வேண்டாம். ‘ என்று நினைத்துக் கொண்டாள். அப்பத்தாளிடம் கோபமாகப் பேசியது வருத்த, மீண்டும் குடிசைக்கு உள்ளே சென்றாள். அப்பத்தா தனக்குள் எதோ புலம்பியவாறே புகையும் அடுப்புடன் தானும் புகைந்து கொண்டிருந்தாள். ராசாத்தி அப்பத்தாளுக்கு எதிரே சென்று அமர்ந்து கொண்டாள். அப்பத்தா அவளைப் பார்த்தும் பாராதவள் போல,

‘யாரு வூட்டுக்கு வாரான் ? அவன் ஆத்தாகிட்டத்தான வாரான் ? இவா புருசன் சம்பாதிச்சுப் போட்ட சோத்தையா திங்க வாரான் ? என்னவோ பேசுதா…இவா ஆத்தா, பெத்த புள்ளைய வேண்டான்னு இன்னொருத்தனைக் கூட்டிகிட்டா….இவா ஆத்தாளைப் போல நானும் புள்ளை வேண்டான்னு அறுத்துரணுமாக்கும் ? ‘ என்று அடுப்பிடம் மன்றாடினாள். ராசாத்திக்கு ஒரு கணம் கோபம் முணுக்கென்றது. ஆனால் பாவம் அப்பத்தா என்றும் தோன்ற,

‘யாரும் வரட்டும், விருந்தாடிட்டுப் போகட்டும் எனக்கென்ன ? மீனாக்கா அம்மா இட்லியும் மிளகாப்பொடியும் குடுத்து விட்டாக. மகனுக்கு எல்லாத்தையும் படையல் வெச்சிராத, நீயும் தின்னு.. ‘ என்றாள். அப்பத்தா திரும்பி ஒரு கணம் ராசாத்தியைப் பார்த்தாள். அடுப்புப் புகையில் கலங்கிய கண்கள் ‘என் ராசாத்தி ‘ என்றது. ராசாத்தி எழுந்து குடிசைக்கு வெளியே வந்தாள். சங்கரம்மா அக்கா குடிசையில் படுத்துக் கொள்ளலாம் என்று அங்கு போனாள், அப்பன் முகத்தில் விழிக்கப் பிடிக்காமல்.

இந்த முறை அப்பன் ரெம்ப அடங்கியவனாக இருந்தான். குடிக்கவெல்லாம் போவதில்லை. அப்பத்தாளுக்கு மகன் அப்படிச் சோர்ந்து கிடப்பது, மகன் மீது இன்னும் இரக்கம் பொங்கியது. அவள் வேலை பார்க்கும் வீட்டில் மதியம் சோறு கொடுத்த உடன் எடுத்துக் கொண்டு ஓடி வந்தாள், மகனுக்காக. அவன், அவளுக்குச் செய்யும் கடமை தவறி, அவள் அந்த வயதிலும் அவனுக்காக ஓடுவது அவளுக்கும், அவள் மகனுக்கும் தவறாகப் படவில்லை. மகனுடைய வாழ்க்கை இப்படிச் சுகமிழந்து போனதில், அதில் அவன் பெண்டாட்டிக்கும், அவன் கூட்டிக் கொண்டவர்களுக்கும் இருந்த பங்கையும் மட்டும் புலம்பித் தீர்த்தாள். மகளுடைய பாராமுகம் அவனை ஒன்றும் செய்வதில்லை. ராசாத்தி அவனிடம் பேசாமல் இருப்பதே மேல் என்ற எண்ணம்தான் அவனுக்கு இருந்தது. அவனோடு அவள் பேச நேரும் போதெல்லாம் சுடும் கங்குகள்தான் வந்து விழுகின்றது. மீனா அக்கா சொல்லித் தந்தது போல ஆத்திரத்தைத் திசை திருப்ப முடிவதில்லை.

ராசாத்தி மீனா அக்காவிடம் அப்பன் வந்துள்ள சேதியைக் கூறிய போது, இருந்து விட்டுப் போகட்டும் என்றாள். மீனா அக்கா சொன்னதால் மட்டுமே அவன் இருப்பைத் தாங்கிக் கொள்ள முடிந்தது. அடுத்த வார அம்மன் கோவில் கொடைக்கு இருந்து விட்டுப் போ என்று அப்பத்தா மகனைத் தாங்குவது எதற்காக என்று தெரியவில்லை. அந்த ஒற்றை அறைக் குடிசைக்குள் அவன் கண்ணில் படாமல் நடமாடுவது பெரிய காரியம்தான். ஆனால் அவள் இருக்கும் நேரங்கள் எல்லாம் அவன் குடிசைக்குள் இருப்பதில்லை. வாய்க்கால் கரை, புதுப் பேட்டைத் தெரு என்று எங்காவது போய் விடுகிறான். அப்படியே அவன் இருக்க நேர்ந்து விட்டால், அவள் சங்கரம்மா அக்காவின் குடிசையில் தஞ்சம் அடைகிறாள். மகளுக்கும், அப்பனுக்கும் நடக்கும் கண்ணா மூச்சி ஆட்டத்தைப் பார்த்து விட்டு அதிகரிக்கும் அப்பத்தாவின் புலம்பல்கள்தான் இம்சிக்கின்றன. அவள் கண்களில் படாமல் அவன் ஒளிந்து செல்வதும், வருவதும் மகள் முன்னே தலை குனிந்து நிற்பதும், ராசாத்திக்குச் சில சமயங்களில் பாவமாகத்தான் இருந்தது. மீனா அக்கா வீட்டில் தந்த வடையை வீட்டுக்கு வந்ததும் அப்பன் கையில் தந்த போது அவன் கண்களில் தெரிந்த ஆச்சர்யமும், ஆவலையும் அப்புறமாக சங்கரம்மா அக்காவிடம் சொல்லிச் சிரித்தாள். கடைசியில் அப்பன் கொடைக்கு இருந்து விட்டுத்தான் போவான் என்று தெரிந்தது. இருந்து விட்டுப் போகட்டும் என்றும் தோன்றியது. அப்பத்தா பேத்தியின் சிற்சில மாற்றங்களைக் கண்டு பூரித்துதான் போனாள். ராசாத்திக்கே அப்பன் மீது கோபம் குறைவது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஒரு வேளை, அவன் இங்கேயே தங்குவது என்று முடிவெடுத்து விட்டால், அவனுக்கு

மீனா அக்கா அப்பாவிடம் கூறி ஏதேனும் வேலை வாங்கித் தரச் சொல்ல வேண்டும் என்று கூட நினைத்துக் கொண்டாள்.

மீனா அக்காவிடம் கொடைக்குப் போவதைப் பற்றி சந்தோஷமாகக் கூறிக் கொண்டாள். மீனா அக்காவின் அம்மா அவள் கொடைக்குப் போயிருக்கும் தினங்களில், டில்லியில் இருந்து ஒரு மாப்பிள்ளை மீனா அக்காவைப் பார்க்க வரப் போவதாகக் கூறினாள். ராசாத்திக்கு அந்த மாப்பிளையைப் பார்க்க முடியாமல் போகிறதே என்று இருந்தது.

‘இப்ப வர்றவரு மட்டும் என்ன பெரிசா வித்தியாசமா இருக்கப் போறாரு ? நமக்கு இந்தாளு லாயக்குப் படாதுன்னு நான் சொல்லப் பேறேன், என்கிட்டப் பேசிட்டு, ‘இந்தப் பொண்ணு குடும்பத்துக்கு லாயக்கில்லேன்னு அவரு ஓடப் போறரு. அந்தக் கூத்தப் பாக்க நீ இருக்கணுமாக்கும் ? நீ நல்லா ஜாலியா கொடைக்குப் போயிட்டு வா, ‘ என்று சிரித்துக் கொண்டே கூறினாள். பின், ராசாத்தியின் சங்கிலியையும், தோடையும் எடுத்துத் தந்தாள். பாதுகாப்பு கருதி, அவளுடைய நகைகளை அப்பத்தா மீனா அக்கா வீட்டில்தான் கொடுத்து வைத்திருந்தாள். கொடுக்கும் போது மீனா அக்கா ஆயிரம் முறை ‘பத்திரம் ‘ என்று கூறி விட்டாள்.

கொடையில் அப்பன் ரெம்பப் பிரியமாக இருந்தது போலத் தெரிந்தது. அவள் கையில் இருபது ரூபாய்களைத் தந்து எது வேணுமானாலும் வாங்கிக்கோ என்று கூறினான். அவன் தரும் பணத்தை வாங்க மனதில்லை. ஆனால் அப்பத்தா உடனே, புலம்பத் துவங்கி விடுவாள் என்று தோன்ற அவன் தந்த பணத்தை வாங்கிக் கொண்டாள். இசக்கி அம்மனிடம், மீனா அக்காவுக்கு டில்லி மாப்பிளையைப் பிடிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். தனக்கும், அப்பனைப் போல இல்லாமல் ஒரு நல்லவன் புருஷனாக வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். கச்சேரி, கூத்து, கிடா வெட்டு என்று இரண்டு நாட்களும் சந்தோஷமாக இருந்தது. கொடை முடிந்து ஊர் திரும்பும் போது எப்போதும் மீனா அக்கா வீட்டுக்கு நேராகச் சென்று நகையைக் கொடுத்து விட்டுத்தான் திரும்புவது வழக்கம். ஆனால் அன்று அப்பன் இருப்பதால், வீட்டில் ஆண் துணை இருக்கிறது என்ற எண்ணத்தில் நேராகக் குடிசைக்கே சென்றனர். அவன் வந்த நாளில் இருந்து குடிசையிலேயே படுக்கவில்லை அவள். சங்கரம்மா அக்கா வீட்டில்தான் படுக்கை. ஆனால் அவன் மாறி வருவதைப் போன்ற எண்ணம் தோன்ற, அவனை எதிரி போல நடத்த வேண்டியதில்லை என்று நினைத்துக் கொண்டவளாக அன்று குடிசையிலேயே படுத்துக் கொண்டாள்.

மறு நாள் அப்பத்தாவின் கூக்குரலில் திடுக்கிட்டு விழித்த போது, விடிந்திருந்தது. சங்கரம்மா அக்காவும், எதிர்க் குடிசை கோமுவும் அப்பத்தாவுடன். அப்பத்தாவின் ஓலம் வயிற்றைப் பிசைய அவசரமாக எழுந்து வந்தாள். அவளைக் கண்டதும் அப்பத்தா, கைகளை மார்பில் அடித்துக் கொண்டு குமுறினாள். பதற்றத்துடன் அவள் அருகே சென்று, ‘ஏளா..என்னாச்சு ? ‘ என்று பரபரத்தாள். அப்பத்தாவின் ஒலத்துடன் சேர்ந்து வந்து விழுந்த வார்த்தைகளை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. சங்கரம்மா அக்கா, ‘உங்கப்பனக் காணோம், ‘ என்றாள்.

‘சொல்லாமப் போறது அவன் வழக்கம்தான ? இதுக்கு ஏன் இந்தக் கிழவி இப்படி ஒப்பாரி வைக்கா ? ‘ என்றாள்.

‘அட பாதகத்தி மகளே..மோசம் போயிட்டோமே… ‘ என்று அப்பத்தா மீண்டும் நெஞ்சில் அறைந்து கொண்டாள்.

‘உன் நகையை எடுத்துட்டுப் போய்ட்டான்.. ‘ என்றாள் சங்கரம்மா அக்கா மெதுவாக. ராசாத்திக்கு ஒரு கணம் மூளைக்கு ரத்தம் போவது நின்றது. தலை சுற்ற கீழே அமர்ந்தாள். கோமு அக்கா அவசரமாக அவளருகே வந்து அமர்ந்து கொண்டாள். அப்பதாளைப் போலக் கூக்குரலிட்டு அழத் தோன்றியது. ஆனால் குரல் எழும்பவில்லை. தலை கிறுகிறுப்பதை போலத் தோன்றச் சிறிது கண்களை மூடினாள். சங்கரம்மா அக்கா குடிசைக்குள் ஓடித் தண்ணீர் எடுத்து வந்தாள். அதை வாங்கி மடக் மடகென்று குடித்தவளுக்கு, அப்பத்தாளின் அழுகை மனதைப் பிசைய எழுந்து அவளருகே சென்றாள்.

‘உள்ளாற வா, அப்பத்தா.. ‘ என்று அவளை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள். அது வரை அப்பத்தா அழுதே பார்த்ததில்லை அவள். அந்தக் கிழ முகத்தில் எப்போதும் வயதையும், சோர்வையும் மீறிய மலர்ச்சிதான் இருந்துள்ளது. அப்பத்தா தரையில் அமர்ந்து கொள்ள இயலாதவளாக, சரிந்தாள். ராசாத்தி அப்பத்தா அருகே அமர்ந்தாள். முதல் முறையாக அப்பத்தாளின் வாயில் இருந்து மகனை நிந்திக்கும் சாபங்கள் பொழிந்தன. ராசாத்திக்குத் துக்கம் பொங்க, கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. ஏழைத் தாயிடம் இருந்தும் மகளிடம் இருந்தும் திருடுபவன் எப்பேர்ப்பட்ட மனிதனாக இருக்க வேண்டும் ? அவள் அழுவதைப் பார்த்த அப்பத்தா, எழுந்து அவளைக் கட்டிக் கொண்டாள்.

‘அழாதட்டி..ராசாத்தீ…அப்பன் செத்துப் போய்ட்டான்னு நினச்சுக்கோ.. நா இருக்கேன்…அழாதத்தா.. ‘ அப்பத்தாளின் குரல் நடுங்கியது.

‘ஐயோ அப்பத்தா… நகை போனதுனால நா அழலை…மகன் மகன்னு கிடந்து மன்னாடினியே, இப்படிப் பண்ணிட்டானேன்னு இருக்கே.. ‘ என்று குமுறினாள். அப்பத்தாளின் வாழ்க்கையில் இருந்த ஒரு சிறு நம்பிக்கையும் செத்து விட்ட துக்கம் தாளாமல் வெகு நேரம் அழுதாள். ஒரு தாயின் பாசமும், மகளின் நம்பிக்கையும் குலைந்து போன சோகத்தைக் கண்ட சங்கரம்மா அக்காளும், கோமுவும் அழுதனர்.

அப்பத்தாள் இரண்டு நாட்கள் சோர்ந்து கிடந்தாள். ராசாத்தியை அவள் தேற்றினாலும், அவளை ராசாத்தியால் தேற்ற முடியவில்லை. மகளின் வாழ்க்கையைத் திருடிக் கொண்டு போன திருட்டுப் பயலின் வாழ்க்கை இனி நாசம்தான் என்று சபித்தாள். ராசாத்திக்கு மீனா அக்காளைப் பார்க்க வேண்டும், மீனா அக்காவின் அப்பாவிடம்தான் இதற்கு வழி கேட்க வேண்டும் என்று தோன்ற, அன்று வேலைக்குக் கிளம்பினாள். அப்பத்தா நிலை குலைந்து போயிருந்தது, ராசாத்திக்குக் கவலையாக இருந்தது. நகை போனாலும் போகட்டும், அவளுக்கு எதுவும் ஆகி விடக் கூடாதே என்று பயந்தாள். மீனா அக்காவைப் பார்த்தாலே மனசு நிம்மதியாகி விடும் என்று தோன்றியது. மீனா அக்காவின் பேச்சு, எது தொலைந்தாலும், அதை மீட்டுத் தந்து விடும்….அப்பத்தாளையும் மறு நாள் கூட்டி வந்து மீனா அக்காவுடன் பேசச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். மீனா அக்கா வீட்டுக்குள் நுழைந்த போதே டில்லி மாப்பிள்ளை வந்து விட்டுப் போயிருப்பார் என்று தோன்ற, கூடவே என்ன ஆனதோ என்ற நினைப்பும் எழுந்தது. மீனா அக்காவைக் காணவில்லை. மீனா அக்காவின் அம்மா இவளைக் கண்டதும் புன்னகைத்தவாறே,

‘வாடி, கொடை முடிஞ்சு ரெண்டு நாளா வரலையே ? என்ன ஆச்சோன்னு மீனா புலம்பிக்கிட்டு இருக்கா…. ‘ என்றாள். ராசாத்திக்கு எங்கே பேசினால் அழுகை வந்து விடுமோ என்று தோன்ற, ஒன்றும் கூறாமல் நின்றாள்.

பின் மெதுவாக, ‘அக்காளை எங்கம்மா ? ‘ என்றாள்.

மீனாக்கா அம்மா சிரித்தாள். பின், ‘உங்க அக்காளுக்கு டில்லி மாப்பிளையைப் பிடிச்சுப் போச்சு. மாப்பிள்ளைக்கும் அக்காளப் பிடிச்சுப் போச்சு. தை மாசம் கல்யாணந்தான்.. ‘ என்றாள். ராசாத்தி நம்ப முடியாதவளாகப் பார்த்தாள்.

‘நெசம்மாவா ? ‘ என்றாள் ஆச்சர்யத்துடன்.

‘நெசம்மாத்தான். போய்க் கேளு, அக்காகிட்டயே..மாடில இருக்கா போ.. ‘

ராசாத்தி, அப்பனும், அப்பத்தாளும், நகையும் மறந்து போனவளாக மாடிக்கு ஓடினாள். அக்கா எபோதும் போலக் கையில் ஒரு புத்தகத்துடன் இருந்தாள். அவள் முகம் மிகத் தெளிவாக இருந்தது. ரெம்பச் சந்தோஷமாக இருப்பது தெரிந்தது. அவளைக் கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. மீனா அக்கா ராசாத்தியைப் பார்த்தவுடன் முகம் மலரச் சிரித்தாள்.

‘என்ன ராசாத்தி ? கொடை முடிஞ்சு ரெண்டு நாளாக் காணலியேன்னு நெனச்சேன்.. ‘ என்றாள். வாய் வரை வந்து விட்ட துக்கம் மடிந்து உள்ளே போக மீனா அக்காவைப் பார்த்துச் சிரித்தாள். நகையைத் திருடிப் போன அப்பனைப் பற்றி மெதுவாகச் சொல்லிக் கொள்ளலாம் என்று தோன்றியது.

***

alamu_perumal@yahoo.com

Series Navigation

அலர்மேல் மங்கை

அலர்மேல் மங்கை