இந்த வாரம் இப்படி ஏப்ரல் 30, 2001

This entry is part [part not set] of 15 in the series 20010430_Issue

மஞ்சுளா நவநீதன்


தேர்தலோ தேர்தல்

தாமரைக் கனி கைது . பொய்ப் புகார் கொடுத்தாராம். மகன் கடத்தப் பட்டு விட்டதாக. (பொய்க்காகக் கைது செய்யப் பட வேண்டுமென்றால் எவ்வளவு பேரைத் தான் கைது செய்வது ?)

கருணாநிதி உருக்கம் : ‘இது தான் நான் பங்கேற்கும் கடைசித் தேர்தல். ‘ (என்ன, இதற்கப்புறம் தி மு க இருக்காதா ?)

புதுவையில் பா ம க கூண்டோடு கலைப்பு. இதற்கு ராம்தாஸ் சொல்லும் காரணம். ‘மஞ்சினி கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வந்தவர். மனைவி பெயரில் பணம் போடச் சொன்னார். பா ம கவிற்குப் பாதிப்பு ஏதும் இருக்காது. ‘ (பாதிப்பு இல்லையென்றால் ஏன் அவர் இதற்கு முன் தலைவராய் இருந்தார்.)

‘தேர்தல் வெற்றிக்குப் பிறகு நான் நகைகளை மீண்டும் அணிவேன் என்று பேசவில்லை. நான் நகைகளையெல்லாம் விற்று தான தருமம் செய்வேன் ‘ என்கிறார் ஜெய லலிதா. (ஏன் ஜெயித்த பின்பு தான் தானம் செய்ய வேண்டுமா ? இப்போதே செய்யலாமே ? ஒருவேளை ஜெயித்தால்( யோசிக்கவே கஷ்டமாக இருக்கிறது) நான் தானம் செய்து தான் இருக்கிறேன் ஆனால் அது மன்னார்குடிக் குடும்பத்தின் ஏழ்மையைப் போக்க உதவியிருக்கிறது என்பாரோ ?)

காங்கிரஸின் தேர்தல் அறிக்கை : ‘ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம். ‘ (பின் குறிப்பு தேவையா என்ன ?)

***

கியூபெக் நகரில் கூட்டம் – நாடுகளின் ஒற்றுமை என்ற பெயரில்

அமெரிக்க நாடுகளின் கூட்டமாம் இது. அமெரிக்கா என்றால் நாம் நினைப்பது அமெரிக்கா என்ற நாடு தான். அமெரிக்கத் துணைக்கண்டத்தில் கனடா, லத்தீன் அமெரிக்க நாடுகளும் உள்ளன. இது போன்ற நேரங்களில் தான் தான் அமெரிக்கத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதி என்று அமெரிக்க ஐக்கிய மானிலங்கள் என்று பெயர் கொண்ட அமெரிக்க நாட்டிற்கு ஞாபகம் வருகிறது. எல்லா நகரங்களும் தோழமை கொண்டு வர்த்தகத்தைப் பெருக்கினால் எல்லா ஊர்களிலும் சுபிட்சம் பெருக்கெடுத்து ஓடும் (கூடவே ஜனநாயகமும் பெருக்கெடுத்து ஓடும்) என்றும் ஒரு பிரசாரம். அமெரிக்காவிலிருந்து வேலை வாய்ப்புப் பறி போவதால், அமெரிக்க தொழிலாளர்கள் அமைப்பு இதனை எதிர்க்கின்றன. பன்னாட்டுக் கம்பெனிகள் லாபப் பெருக்கத்திற்கு இது வழி வகுக்கும் என்று இதனை வரவேற்கின்றனர். சுற்றுப் புறச் சூழல் பற்றிக் கவலை கொண்டவர்கள் , வளராத நாடுகளில் அமைக்கும் தொழிற்சாலைகள் எந்தக் கட்டுப் பாடும் இன்றி அமைக்கப் படுவதால் சுற்றுப் புறச் சூழ;ல் பாதிக்கப் படும் அபாயத்தை சுட்டிக் காட்டி இதனை எதிர்க்கின்றனர்.

உலக மயமாக்கல் தடுத்து நிறுத்தி விடக் கூடிய ஒன்றல்ல. தொடர்ந்த விழிப்புணர்ச்சியும், வளர்ச்சியில் எல்லா நாடுகளும் பங்கேற்கும் வகையில் உலகப் பொருளாதாரத் திட்ட அமைப்புகள் செயல் படுவதும் தான் இந்தப் பிரசினைக்குத் தீர்வாக முடியும்.

******

நாகாலாந்தில் போர் நிறுத்தம் சிறீலங்காவில் போர்த் தொடர்ச்சி

வட கிழக்கு மகாணமான நாகாலாந்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கிருக்கும் ஒரு பிரிவினைவாத தீவிரவாத அமைப்புடன் போர்நிறுத்த ஒப்பந்தம் இருக்கிறது (அது முய்வா பிரிவுடன்). இது இன்னொரு பிரிவுக்கு (காப்லாங் பிரிவு). காஷ்மீரில் ஏற்கனவே போர் நிறுத்தம் அறிவிக்கப் பட்டாலும் வன்முறைகள் குறைந்த பாடில்லை. போர் நிறுத்த அறிவிப்பு மட்டுமே வன் முறையைக் குறைத்து விடாது. போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து இரண்டு தரப்பினரும் நேர்மையான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவது தான் வன்முறையைக் குறைக்கும். காஷ்மீர் பேச்சு வார்த்தை முன்னோக்கி நகர்கிற அடையாளம் தென் படவில்லை. நாகாலாந்திலாவது போர் நிறுத்தம் பயனுள்ளதாய் அமையுமா என்று பார்க்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தைக் கைவிட்ட அறிவிப்பு வந்த உடனேயே ஸ்ரீலங்காவின் அரசு தமிழர் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளது என்றும், தொடர்ந்த போரில் இரு தரப்பிலுமே உயிரிழப்பு என்று செய்திகள் வந்துள்ளன. துயரம் எப்போது தான் முடிவு பெறும் ?

******

ஜெயலலிதா எம் எல் ஏ ஆக முடியாது; முதல்வர் ஆகலாமா ?

ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் வேட்பாளராய் விண்ணப்பம் செய்ததும், ஜெயலலிதாவின் மனு நிராகரிக்கப் பட்டதும் பழைய செய்தி. கருணா நிதியின் சதி இது என்று பிரசாரம் செய்கிறார் அவர். தேர்தல் மேடையில் சதிகளுக்கு என்ன குறைவு ? எம் எல் ஏ ஆக முடியா விட்டாலும் முதல்வர் ஆவதற்குத் தடை இல்லை என்று பிரச்சாரம் நடக்கிறது. மக்களை ஏமாற்ற எத்தனையோ வழிகள் அதில் இது ஒன்று.

ஆறு மாதத்தில் முதல்வர் எம் எல் ஏ ஆக வேண்டும் என்பது விதி. ஏற்கனவே அவருடைய வேட்பு மனு நிராகரிக்கப் பட்ட நிலையில் வேட்பு மனு நிராகரிக்கப் பட்டது தவறு என்று தேர்தல் ஆணையமோ, உச்ச நீதி மன்றமோ தீர்ப்பு அளிக்காத வரையில் அவர் முதல்வர் ஆக முடியாது என்பது எளிமையான யோசனை உள்ள அனைவருக்கும் தெரிந்த விஷயம். இருந்தாலும் டைம்ஸ் ஆஃப் இந்தியா என்னும் காங்கிரஸ் கட்சியின் நடுநிலை நாளேட்டில் ஆறுமாதம் வரை முதல்வராக இருந்துவிட்டு ஒருவாரம் விடுமுறை எடுத்துவிட்டு மீண்டும் ஆறுமாதம் முதல்வராக இருக்கலாம் என்று ஒரு தலைப்புக்கட்டுரை யோசனை சொல்கிறது. இது சட்டரீதியாக சரியான விஷயம் என்றும் எழுதுகிறது.

சமீபத்தில் ஜெயலலிதா ‘ஓட்டு வேட்டை ‘ (எத்தனை பேர் பலியோ!) ஆடும்போது ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்பு ‘ என்ற எம்ஜியார் பாட்டைப்பாட்டி ஓட்டுகேட்டார் என்று படித்தேன். அதன் கூடவே அடுத்த வரியில் ‘நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா ? அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா ? ‘ என்றும் வருகிறது. அது மக்களுக்கு ஞாபகம் இருந்து சட்டத்தை வளைக்கத் தேவையில்லாதபடி ஓட்டுப் போட்டால் நாடு சுபிட்சமாக இருக்கும்.

******

Series Navigation

author

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

Similar Posts