இந்துத்துவம் ஏற்றம் பெற, அகண்டபாரதம் அரண்டு எழ சங்கியே சங்கூதிப் புறப்படு

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

சொதப்பப்பாசீ


**

குறிப்பு

சொதப்பப்பாஜி என்றுதான் நாம் எழுதுவது வழக்கம். தமிழ்நாட்டுக்கு ஏற்றாற்போல பாரதிய ஜனதா கட்சியினர் அரசியல் செய்யவேண்டுமாமே ? அதனால் ஜீ சீ ஆகிவிட்டது.

**

சங்கியே,

பாரதத்திருநாட்டின் அத்வானிசீ, வாசுப்பாய்சீச்சீ போன்ற மண்ணின் மைந்தர்கள் பூச்சிய குருசீயின் வழியில் நின்று , அகண்ட பாரதத்தை ஆகாயம் அளவிற்கு வளர்த்தெடுக்க குசராத்தில் குறுமதியினரைக் குலைத்த கோவேந்தன் நரேந்திர மோதியின் வழியில் நின்று செயலலிதா அம்மையார் இயற்றிய மதமாற்றத் தடைச் சட்டம் அந்தோ காணாமல் போய்விட்டது. இந்துத்துவம் இன்புற்று வாழ்ந்திட எம் சாக்காக்களில் குச்சியைச் சுழற்றி வந்த எம் சரசங்கஜாலக்குகளின் புரியாத சமற்கிருதத்தை விளங்கிக் கொள்ளாத முட்டாள் மக்கள் ரோமாபுரி ராணிக்குச் சாமரம் வீசிய கொடுமையை வேறு எங்கும் நீ கண்டதுண்டா ?

பாரத நாட்டின் பெருமைகளை அறியாத அசிங்கங்கள், பகுத்தறிவு பேசும் பாமரர்களுக்கும், இந்தியாவை மதச்சார்பின்மைப் படுகுழியில் தள்ளிய சவகர்லால் நேரு குடும்பத்தினருக்கும், சோசலிசம் உழைப்பாளர் உரிமை பேசும் இடதுசாரிகளுக்கும் அந்தோ தாரை வார்த்துவிட்டார்கள். இந்துத்துவாவின் மானம் காத்திட புயலெனப் பொங்கி எழு. கூவம் எனக் கூவி விரைந்திடு.

பாரதத்தின் பொற்காலத்தில் புலையர்கள் பூசிக்கத்தக்கவராய் சாக்கடை வாரிக் கொண்டிருந்தார்கள். சண்டாளர்கள் ஷங்கரருடம் சண்டமாருதமாய் விதண்டாவாதம் புரிந்தார்கள். யோகமும் , வேதமும் தழைத்த புண்ணியபூமியில் பசுவை தெய்வமாய் வணங்கினோம். ஆனால் பாவப்பட்ட மக்களைத் தீண்டமாட்டோம். மிலேச்சர்கள் புகுந்தார்கள். ஒன்றும் அறியாத பாமரர் மனதைக் கலைத்தார்கள் . சமத்துவம், சகோதரத்துவம் , சோசலிசம் என்றார்கள். பாரதம் அறியாத சமத்துவமா ? வசுதைவ குடும்பகம் கண்ட புனித நாடல்லவா இது. உலகமே குடும்பம் ஆகலாம், ஆனால் பக்கத்துவீட்டுக்காரன் கையில் தண்ணீர் அருந்தாத கண்ணிய பூமி அல்லவா நம் பரத கண்டம் ?

அத்வைதம் கண்ட பாரதத்தில், மகான்கள் அவதரித்த புண்ணிய பூமியில் மார்க்சும், மெக்காலேயும் நுழைந்தனர். என்ன ஆயிற்று பார்த்தாயா ? அவரவர் கருமத்தை அவரவர் செய்து கருமமே என்றிருப்பதை விட்டுவிட்டார்கள். மதம் மாற்றத் துடிக்கிறார்கள். மதம் மாறி இந்துத்துவாவிற்குத் துரோகம் இழைக்கிறார்கள். சங்கீ, தம்பி, எழுந்திரு புறப்படு, வேற்று மதம் இங்கே வேர் கொள்ளாமல் செய்ய நாளும் உழைத்திடு. இந்து மதத்தைப் பற்றிக் கவலைப்படாதே. இந்துத்துவா பற்றி மட்டுமே கவலைப் படு. அதுதான் நம் அரசியல்.

இந்துமதத்தைத் தூற்றிய தலைவர்களுடன் கூட்டணி கண்டோம் . இல்லையென்று சொல்லவில்லை. இந்து என்றால் திருடன் என்று முழங்கியவர்களின் முன்னால் மண்டியிட்டோம். மறுக்கவில்லை . ஆனால் ஏன் அப்படிச் செய்தோம் என்று யோசித்தாயா ? ஆட்சியில் உட்கார்வது அவசியம் என்று செய்தோம் , இந்துமதம் எப்படியோ போகட்டும், இந்துத்துவாவைக் காப்பாற்ற இது தானே வழி ?

ஆனால் , இந்தியத் தலைமை தான் கூட்டணி கண்டதே தவிர தமிழ்நாட்டின் பா ச க வேற்றணியாய் இருந்து செயலலிதா புகழ் பாடியது. அம்மையாரின் மதமாற்றத் தடைச் சட்டம் கண்டு அகமகிழ்ந்து, உளம் குளிர்ந்திருந்த வேளையிலே, தேர்தல் முடிவுகள் வந்தன. அம்மையார் இந்துத்துவாவிற்குத் துரோகம் செய்ய முனைந்தார். மதமாற்றத் தடைச் சட்டத்தை நீக்கி மாற்றார் மனதைக் கவர முயல்கிறார். விடலாமா இதை ? மாற்றார் தோட்டத்து மதம் மணக்காது என்று தெரியாதா அம்மையாருக்கு ?

சிந்தித்துப்பார் சங்கியே. நாம் எங்கெல்லாம் வலிமை பெற்றிருக்கிறோம் என்பதனை.

எங்கேயெல்லாம் முஸ்லீம்களும் கிரிஸ்துவர்களும் லொல்லு பண்ணுகிறார்களோ அங்கெல்லாம்தாம் நாம் வலிமை பெற்றிருக்கிறோம். அவர்கள் லொல்லு பண்ணாமல் இருந்தால் அவர்களை லொல்லு பண்ணவைப்பதல்லவா நம் குறிக்கோள். அதனால்தானே, மசூதிக்கு முன்னால் மத்தளம் அடிப்பதையும், சர்ச்சுக்கு முன்னால் சங்கு ஊதுவதையும் செய்துகொண்டிருக்கிறோம். அப்போதுதானே அவர்கள் வெளியில் வந்து சத்தம்போடுவார்கள். இந்த மசூதி என் முப்பாட்டன் கட்டின கோயில் மேல் இருக்கிறது, அந்த மேரி ஆலயம், மாரியம்மா கோயிலில் கட்டப் பட்டது என்று பொய்யையும், புரளியைக் கிளப்பிடப் புயல் போல் கிளம்பி வா. அப்போதுதானே நாம் அவர்களுக்கு எதிராகப் போராடி அவர்களைத் திட்டி, பாபரின் பிள்ளைகள் என்றெல்லாம் அவர்களைச் சீண்டி நாம் கட்சி வளர்க்க முடியும் ?

மதமாற்றத்தடைச்சட்டம் மூலம் மதம் மாறுபவர்களை எல்லாம் தடுப்பதல்ல நம் குறிக்கோள். ஓரளவுக்கு மதம் மாறவேண்டும் என்பதனை மனத்தில் இருத்திவை. யாரும் மதம் மாறாவிட்டால் நம் கட்சி நடத்த கிரிஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எங்கே போவது ? அவர்களை பங்களாதேஷிலிருந்து இறக்குமதி செய்ய காங்கிரசையும் கம்யூனிஸ்டுகளையும் நம்பிடலாம் என்றாலும், உள்நாட்டு கிரிஸ்துவர்களும் உள்நாட்டு முஸ்லீம்களும்தானே நமது முக்கிய எதிரிகள் என்பதனை நன்கு சிந்தித்துப்பார்.

எங்கெல்லாம் மதக்கலவரம் இருக்கிறதோ அங்கெல்லாம் நம் கட்சி வளரும். ஆனால் அதனை மொழிக் கலவரமாக வளர்த்திட உதவிடாதே. அங்கெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் தூண்டில் போட்டுக்கொண்டிருக்கிறது என்பதை மறந்திடாதே. உருதுக்கு எதிராகக் கொடிபிடி . உருது இந்தியாவின் மொழி தான் என்றால் அது முஸ்லீம்களின் மொழி என்ற பொய்யை உரக்க முழங்கிடு. ஆனால் உருதுவையே வேற்று லிபியில் எழுதும் இந்திக்கு எதிரான கொடியாக மாற்றிடாதே. அங்கு திமுக சந்தடி சாக்கில் நுழைந்து விடும். தேவபாடையான சமஸ்கிருதம் வட மொழியல்ல, வளமான மொழி. வேதமும், நாதமும், சாதமும் முழங்கும் மொழி. நமக்கு அதில் அட்சரம் சுத்தமாக எதுவும் தெரியாவிட்டாலும் சமஸ்கிருதத்தின் புகழ் பாடுவதை நிறுத்திவிடாதே. சாக்கா என்றால் சாக்குப் பை, சாலக் என்றால் ஜாலக்கு, சர்சங்கசாலக் என்றால் ஆர் எஸ் எஸ்ஸை கெளரவிக்க பிரிட்டிஷ் அரசு நமக்கு அளித்த சர் பட்டம் என்பதை மறவாதே. செய் இந்த்!

சங்கத்தின் அறிவிப்பினை ஆணையாக ஏற்றுச் செயல்படும் வீரர்களாக உன் போன்ற சங்கிகள் திகழ்வீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

சங்கியே புறப்படு. புயலெனப் பொங்கி எழு. இந்துத்வாவை ஒழித்திட இருண்டமதியினர் புறப்பட்டுவிட்டார்கள். நீ இல்லையேல் இராமனே என் செய்ய இயலும் ? தடுத்திடு அவர்களை. அலைகடலென திரண்டுவா. கோட்டையை நோக்கிய ஊர்வலத்தில் கோஷங்களை எழுப்பிட வா.

மதமாற்றத்தடைச்சட்டத்தை நீக்கலாமா ? கூடாது கூடாது. ஆயிரமாயிரம் அரசு ஊழியர்கள் பழி வாங்கப் பட்டால் கண்டுகொள்ளாதே. காவிரியில் நீர் வறண்டு மக்கள் கஷ்டப்பட்டால் அதைக் கண்டு கொள்ளாதே. இந்துத்துவாவைக் காப்பாற்ற இந்தப் பிரசினைகள் உதவாது என்று உனக்குத் தெரியாதா ?

அதனை நிரூபிக்க தோழா, தோழமைக்கட்சிகளின் தொண்டுள்ளம் கொண்ட தூய தோழ உடன் பிறப்புக்களுடன் இணைந்து எறும்புகளாய் தேனீக்களாய் சுறுசுறுப்பு காட்டி வா சங்கியே, போவோம் கோட்டைக்கு.

வாழ்க சாவர்க்கர் நாமம், வாழ்க சாவர்க்கர் நமக்குப்போட்ட நாமம், வாழ்க சாவர்க்கர் பெயரில் மக்களுக்கு நாம் போடும் நாமம்.

வாழ்க இந்துத்வா. பூஜ்ய குருசியின் வழியில், அகண்ட பாரத அளவிற்கு நாம் பூஜ்யமாக ஆவோம் வா.

இந்துத்துவாவின் இனிய தொண்டன்,

சொதப்பப்பாசீச்சீ

**

Series Navigation

சொதப்பப்பாசீ

சொதப்பப்பாசீ