இந்தி நடிகருடன் ஒரு இரயில் பயணம்

This entry is part [part not set] of 24 in the series 20090430_Issue

அப்துல் கையூம்


கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்தி நடிகர் பெரோஸ்கான் புற்றுநோயால் அவதிப்பட்டு உயிர் துறந்த செய்தி என் மனதைப் பிசைந்தது. காலைச் சிற்றுண்டியை அரைகுறையாய் முடித்துக் கொண்டு எழுந்தேன். அவர் யாரோ, நான் யாரோ. அவரை நான் நேரில் பார்த்ததுகூட கிடையாது.

இந்தியாவைப்போல புற்றுநோயும் Secular-தானோ? அடுக்கு மொழி அண்ணாவையும், துடுக்குமொழி பெரோஸ்கானையும் அது பாரபட்சம் காட்டுவதில்லை. அள்ளிக் கொண்டு போய் விடுகிறது. மருத்துவத் துறையில் என்னென்னமோ சாதனை செய்கிறார்கள். புற்றுநோய்க்கு ஒரு மருந்து கண்டுபிடித்து கொடுக்க மாட்டார்களா?

என்னைப் போல் அவரும் ஒரு ‘சவுத் இண்டியன்’ என்பதால் இந்த பாசப்பிணைப்போ என்னமோ தெரியவில்லை. நம்ம ஊரு பக்கத்துலே பெங்களூரூதானே அவரு ஊரு. அதனால் இருக்குமோ?

இப்படித்தான், வாழ்க்கை எனும் இரயில் பயணத்தில் நமக்குத் தெரியாமலேயே சிலர், நமது இதயத்து புட்போர்டில் ‘வித்-அவுட்’களாக வந்து தொற்றிக் கொள்கிறார்கள். எந்த ரயில்வே கார்டு வந்தாலும் அவர்களை இறக்கவே முடியாது.

பெரோஸ்கானுடைய ‘டிபார்ச்சர்’ நிஜமாகவே நேற்று நிகழ்ந்து விட்டதை அறிந்தபோது ஓடிக்கொண்டிருந்த ரயிலை யாரோ அபாயச் சங்கிலி பிடித்து இழுத்ததைப் போல ஓர் உணர்வு. காலியான பிளாட்பாரம் போல என் மனதுக்குள் வெறுமை சூழ்ந்துக் கொண்டது. எனக்குள் இருந்த உற்சாகம் கைகாட்டியாய் சரிந்துக் கொண்டது. எனது நினைவுகள் மீட்டர் கேஜ்ஜிலிருந்து அகலப் பாதைக்கு மாறியது.

அவர் பாகிஸ்தான் சென்றபோது குடித்து விட்டு கலாட்டா செய்தது நம் எல்லோரையும் முகஞ்சுளிக்க வைத்தது. அப்போது கூட அவரை என் உள்ளத்து கம்பார்ட்மென்டிலிருந்து உதறிவிட முடியவில்லை.

ஒரு கையில் மாதும், ஒரு கையில் மதுவும் உடன் இருக்கையில் என் ஜீவன் பிரிய வேண்டும் என்று மொழிந்த கண்ணதாசனை நாமென்ன வெறுத்து ஒதுக்கவா செய்தோம்?

ரவீந்தரநாத் தாகூர் எழுதிய ‘காபுலிவாலா’ என்ற கதை, இளம் பிராயத்தில் எனக்குள் ஒரு இனங்காண முடியாத தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றது. அதில் வரும் ‘காபுலிவாலா’ பாத்திரம் இன்றும் என் கண்முன் நிழலாடுகிறது. காபுலிவாலாவின் சல்வார் கமீஸ் தோற்றத்தையும், அவன் சுமந்து போகும் பெரிய சாக்குப்பையையும் பார்த்து ‘புள்ளை புடிக்குறவன்’ என்று நினைக்கும் சிறுமி மின்னி, நாளடைவில் அவனோடு நட்பாகி விடுகிறாள்.

பெரோஸ்கானின் ‘ஆத்மி அவுர் இன்ஸான்’ ‘ஊன்ச்சே லோக்’ ‘ஆர்சூ” போன்ற படங்களைப் பார்த்ததிலிருந்து மின்னியைப்போல் நானும் Khan Fan ஆகிவிட்டேன்.

ஆப்கானிஸ்தானிலிருந்து நிறைய பத்தான்கள் (Pathan) பிழைப்புநாடி இங்கு வந்து குடிபெயர்ந்தார்கள். “கான்” என்ற வம்சத்துப்பெயர் அவர்களது பெயரோடு இணைந்திருக்கும். ரோஜாப்பூ நிறத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தோடு வாட்டசாட்டமாக காட்சியளிப்பார்கள்.

இம்ரான் கானையும் இளவரசர் சார்லஸையும் அருகருகே நிற்க வைத்தால், யார் ஆங்கிலேயர்? யார் பாகிஸ்தானி? என்று கண்டுபிடிப்பது சிரமம்.

“நம்ம சினிமாத் துறையிலே இருக்குற லியாகத் அலிகான், மன்சூர் அலிகான் இப்படி ரோஜாப்பூ மாதிரி இல்லையே?” என்று கேட்டு இம்சை படுத்தக்கூடாது. இவர்கள் பெயரளவில்தான் ‘கான்’ என்பதை நீ காண்.

சென்ற வருடம் சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் இஸ்லாமிய பேரவை நடிகர் விஜய காந்துக்கு, “விஜய கான்” என்று பெயரிட்டு விமோசனம் தேடிக் கொண்டது. [கொடுமையடா சாமி!]

கான்கள் நமக்கு அன்னியர்கள் அல்ல. நம் தேச விடுதலைக்காக பாடு பட்ட ‘எல்லை காந்தி’ கான் அப்துல் கபார் கானுக்கு, ‘பாரத ரத்னா’ விருது வழங்கி இந்திய அரசாங்கம் கெளரவித்தது. அகிம்சை போராட்டங்களில் மகாத்மா காந்திக்கு உறுதுணையாக இருந்தவர் இவர். இந்தியக் குடிமகனல்லாத ஒருவருக்கு கொடுக்கப்பட்ட முதல் உயர் விருது இது.

இன்றைய இந்திப்பட உலகில் ஷாரூக் கான், ஆமிர் கான், சல்மான் கான், சயீஃப் அலி கான், பர்தீன் கான், ஜாஹித் கான், இர்பான் கான், சுஹைல் கான், சாஹில் கான், அர்பாஸ் கான், பரா கான். சாஜித் கான், சரோஜ் கான், சுஹா அலி கான், லைலா கான் என்று எங்கெங்கு காணினும் ‘கான்’களாகவே இருக்கிறார்கள்.

Pop Corn-யைப் போலவே இந்த கான்களுக்கும் நல்ல மவுசு இருக்கிறது. பாலிவுட்டில் Khan Flavour ஏறியபின் அதற்கு இளமை மெருகும், துள்ளலும், கவர்ச்சியும் கூடியிருப்பது முற்றிலும் உண்மை.

என் நண்பனின் மகன், கையில் வெள்ளியிலான ‘டர்குவாய்ஸ்’ கல் பதித்த பிரேஸ்லெட் அணிந்திருந்தான். கேட்டால் “இதுதான் சல்மான் கான் பிரேஸ்லெட்” என்று பதில் சொல்லுகிறான். “அவரோட பிரேஸ்லெட் உன் கையிலே எப்படிடா வந்துச்சு?” என்று கேட்கணும் போலத் தோன்றியது. போகட்டும் என்று பேசாமல் இருந்து விட்டேன். சல்மான் கான் போல சட்டையை கழற்றிப் போட்டு ஆள்பாதி ஆடைபாதி என்று அரை அம்மணமாக அலையாமல் இருந்தால் சரி.

என் இளைய மகன் டானிஷ், ஷாரூக் கான் போலவே ‘மிமிக்ரி’ செய்கிறான், எங்கே திக்குவாயாய் ஆகிவிடுவானோ என்று ஒரே பயமாக இருக்கிறது. கஜினி ஆமீர் கானை பின்பற்றி, வரப்பில் வாய்க்கால் வெட்டியதைப் போன்று, கண்றாவியான கிராப்பு வைத்துக் கொண்டு சிலர் ‘லோ லோ’வென அலைகிறார்கள்

நானறிந்த வகையில் இந்திப் பட உலகில், நடிப்புத் துறையில் யூசுப் கான்தான் முதலில் பிரபலம் அடைந்த கான். யூசுப் கான் என்ற தன் பெயரை வைத்து பட உலகில் முன்னேற முடியாது என்று நினைத்ததாலோ என்னவோ தன் பெயரை திலீப் குமார் என்று மாற்றிக் கொண்டார்.

நடிகர் கோவிந்தா உடன் சேர்ந்து நிறைய படத்தில் லூட்டி அடித்துக் கொண்டிருந்த காதர் கான், தன் ‘கான்’ட்ராவர்ஸி தொழிலை உதறிவிட்டு, இப்போது உஜாலாவுக்கு மாறி, ஆன்மீகத் தளத்தில் ‘கான்’கிரீட் போட்டுக் கொண்டார் என்பது கொசுறுச் செய்தி.

“அரே ஓ சாம்பா” என்று வசனம் பேசி, தொட்டிலில் தூங்கும் பச்சிளங் குழந்தைகளையும் பயமுறுத்திய ‘கப்பர் சிங்’ அம்ஜத் கானையும் நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட இயலாது. நம்ம ஊரு எஸ்.ஏ.அசோகனைப் போலவே வில்லனாக இருந்து காமெடியனாக ‘உரு’ மாறியவர்.

பெஷாவரைச் சேர்ந்த என் நண்பர் குறைஷ் கான் புனீரி, ஒருவித கொஞ்சல், சிணுங்கலுடன் பேசும் பஷ்து கலந்த உருது உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். நமீதா டமில் பேசுவது போலிருக்கும்.

தமிழ் சினிமாக்களில் இந்த பத்தான்களை “பட்டாணி” என்று உணவுப் பொருளாக்கி அவர்களை ‘பீஸ் பீஸ்’ ஆக்கிவிட்டார்கள். இந்த பட்டாணி எல்லா படங்களிலும் ஈட்டிக்காரனாகத்தான் வருவான். தலைப்பாகை அணிந்துக்கொண்டு “ஹரே ஷைத்தான் கீ பச்சா! நம்பள்கி காசு கொடுக்கலே, கான் நிம்பள்கி முட்டிக்கு முட்டி தட்டுவான்” என்று வீரவசனம் பேசி கடன்காரனை சைக்கிளில் சென்று துரத்துவான்.

தமிழ்நாட்டில் உருது மொழி பேசுபவர்களை “பட்டாணி” என்று அழைப்பது வழக்கமாகி விட்டது. அறியாமையினால்தான் இப்படி. அந்த ஒரிஜினல் பட்டாணிகள் இதனைக் கேள்வியுற்றால் வாழ்க்கையே வெறுத்துப் போய் விடுவார்கள்.

தக்கண பூமியைச் சேர்ந்த உருது மொழி பேசும் சகோதரர்களை “தக்னி” என்று அழைப்பதுதான் சாலப்பொருத்தம். அதிலும் ஷேக், செய்யத், பத்தான் என்று பல பிரிவுகள் இருக்கிறது.

சுமார் 45 வருடங்களுக்கு முன்பு இந்திப்பட உலகில் காலடி எடுத்து வைத்தார் நம் நாயகன் பெரோஸ்கான். அட்டகாசமான ஹேர் ஸ்டைல், இரண்டு மூன்று கம்பளிப்பூச்சியை கன்னத்தில் ஒட்டி வைத்ததைப் போன்ற அடர்த்தியான கிருதா. பார்க்கையில் எல்விஸ் பிரெஸ்லியின் ஞாபகம்தான் வரும். பிற்காலத்தில் அவர் மர்லின் பிராண்டோ மாதிரி ‘மொழுக்கென்று’ ஆனது வேறு கதை.

ஆங்கில மாட்டுக்கார வேலனைப் போன்ற அவரது தனிப்பட்ட ஸ்டைல் அவருக்கு ‘கீழைநாட்டு கிளிண்ட் ஈஸ்ட்உட்’ என்ற சிறப்புப் பெயரை பெற்றுத் தந்தது.

‘குர்பானி’ படத்தில் இந்த கானை அந்த கான் தூக்கிச் சாப்பிட்டு விடுவார். ஹீரோவாக வரும் பெரோஸ்கானை இன்ஸ்பெக்டராக வரும் அம்ஜத்கான் ஓவர்டேக் செய்வது சுவராஸ்யம்.

பெரோஸ்கானுடைய மகன் பர்தீன் கான் வளர்ந்து வரும் நடிகர். மகள் பெயர் லைலா கான். ‘குர்பானி’ படத்தில் இடம்பெற்ற “லைலா ஓ லைலா” பாட்டுக்கும் இவரது மகளுடைய பெயருக்கும் ஏதாவது சென்டிமென்டல் தொடர்பு உள்ளதா என்பது சரியாகத் தெரியவில்லை. பாகிஸ்தானைச் சேர்ந்த நாஸியா ஹஸன் ‘குர்பானி’யில் பாடிய பாட்டு அத்தனைபேரையும் பித்துக்குளி ஆக்கியது.

அனைத்து இந்தி சேனல்களிலும் ‘ரியாலிட்டி ஷோ’ என்ற பெயரில் பாகிஸ்தான்காரர்களை அபிநயிக்க வைப்பதும், நடுவர்களாக ஆக்குவதும் இப்போது பேஷனாகி விட்டது.

சல்மா ஆகா, சாப்ரி பிரதர்ஸ், ஜுனூன் குழுவினர், அத்னான் சாமி, என்று எல்லோருக்கும் ‘லிப்ட்’ கொடுக்க ஆரம்பித்தார்கள். ஏ.ஆர்.ரகுமான் திறமையைத் தேடிப்போய் நுஸ்ரத் பதே அலிகானை பிடித்து இழுத்து வந்தார். ராஹத் பதே அலி கான் ஒரே மூச்சில் அனைத்து இசையமைப்பாளர்களோடும் பாடி முடித்து விட்டார். ‘ஷானே’ ஷகீல் முதலான ‘கலக்கல் மன்னர்கள்’ தலை காட்டாத காமெடி ஷோக்களே இன்று கிடையாது.

அண்டை நாட்டுடனான உறவை மேம்படுத்தும் வகையில் ‘சின்னக் குயில்’ நாஸியா ஹஸனை அறிமுகம் செய்து புரட்சி செய்து இந்த புதுஅலையை வீச வைத்தவர் நமது நாயகன் பெரோஸ்கான்.

புகழ்பெற்ற ஆங்கிலப் படம் ‘காட்பாதர்’ இவருக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘தர்மாத்மா’வில் வரும் குதிரைப் பந்தயக் காட்சிகள் ஆங்கிலப்படம் ‘பென்ஹர்’ படத்தில் வரும் ‘சாரியட் ரேஸை’ப் போல ‘தூள்’ கிளப்பும்.

இன்று பின்லேடன் ஒளிந்திருப்பதாக கருதப்படும் ஆப்கானிஸ்தானின் அழகான மலைப்பிரதேசத்து எழிற்காட்சிகளை காமிரா கண்களால் சிறைப்பிடித்தவர் இந்த கலையுணர்வு மிக்க மனிதர்.

அன்றைய கால கட்டத்தில் இதுபோன்று வெளிநாடுகளுக்குச் சென்று படமெடுப்பது மிகவும் அபூர்வம். இப்போதுள்ள நிலைமை வேறு. அஜீத்தும், தபுவும் முதலடி எகிப்து பிரமிட்டுக்கு அருகில் நின்று பாடினால் இரண்டாவது அடிக்கு ஜெர்மனி அல்லது ஆஸ்திரேலியா சென்று விடுகிறார்கள்.

பெரோஸ் கான் டி.ராஜேந்தரைப் போல அவரே தயாரித்து, அவரே இயக்கி, அவரே நடித்து, அவரே எடிட் செய்து தசாவதாரம் எடுப்பார். டி.ஆர்.ஆர். உடன் இவரை ஒப்பிடுவதற்கு காரணம் இவரும் அவரைப் போல முன்கோபி. உளறக் கூடாத இடங்களில் ஏதாவது எசகுபிசகாக உளறி வம்பில் மாட்டிக் கொள்ளும் கேரக்டர்கள்.

“என்னை ‘ஹாய் பேபி’ என்று உரிமையுடன் அழைக்கக்கூடிய ஒரே மனிதர். தங்கமான மனிதர்” என்று ‘ஹால்மார்க்’ முத்திரை வழங்குகிறார் பேரன், பேத்திகள் எடுத்துவிட்ட கனவுக்கன்னி ஹேமாமாலினி.

“க்யா கூபு லக்தீ ஹோ, படி சுந்தர் திக்தி ஹோ” என்ற பாடல் வரிகளின் வருணனைக்கேற்ப ஹேமா மாலினியை எவ்வளவு தூரம் எழில் தேவதையாக்கி காட்ட வேண்டுமோ அந்த அளவுக்கு செல்லுலாய்ட் பொம்மையாக்கி அழகுக்கு மெருகூட்டி காண்பித்திருப்பார் நம்ம கான் சாகிப்.

நுனிநாக்கு ஆங்கிலம், மூக்குநுனி கோபம், உதட்டில் வெண்சுருட்டு, கேளிக்கை விருந்து, மது, மாது என்று தன் ஆடம்பர வாழ்க்கையில் மூழ்கி காலத்தைத் தள்ளியவரிடம் அப்படி என்ன நல்ல குணம் இருந்து விடப் போகிறது என்று கேட்கலாம்.

சாண்டோ எம்.எம். சின்னப்பா தேவரைப் போலவே விலங்குகள் என்றால் இவருக்கு மிகவும் பிடிக்கும். படங்களில் சிம்பன்ஸி, சிங்கம் போன்ற விலங்குகளை நடிக்க வைத்து பெருமிதம் கொண்டார். இவர் இறந்தபோது ஜீவகாருண்ய சங்கத்தார் விரைந்து வந்து இவர் பூதவுடலுக்கு மலர்வலையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பெரோஸ்கானின் குடும்பத்தாரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அவரது சகோதரர் அக்பர் கான் ‘தாஜ்மகால்’ கதையை மறுபடியும் படமாக எடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்த நடிகர் திலகத்தைப்போல, மாவீரன் திப்பு சுல்தானின் தேசப்பற்றையும் மகத்தான சாதனைகளையும் உலகுக்கு படம்பிடித்துக் காட்டியவர் இவரது மற்றொரு சகோதரர் சஞ்சய் கான். அந்த தென்னாட்டுச் சிங்கத்தை சின்னத்திரை தொடர் மூலம் நம் வரவேற்பறைக்கு அழைத்து வந்தவர் அவர்.

தன் தேசத்திற்கு புறம்பாக பேசினார் என்று கூறி பெரோஸ்கானுக்கு பாகிஸ்தானுக்குள் நுழைவதற்கு தடை விதித்தார் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷர்ரப்.

“இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஒரு சீக்கியர் பிரதமராகவும், ஒரு முஸ்லீம் குடியரசுத்தலைவராகவும் ஒருங்கே இருப்பது இந்நாட்டின் பெருமைக்குரிய விஷயம். பாகிஸ்தானில் முஸ்லீம்களே முஸ்லீம்களை கொன்று குவிப்பது வேதனை தருகிறது” என்று துணிச்சலாக தன் கருத்தை வெளியிட்டு தன் தேசப்பற்றை வெளிக்காட்டிக் கொண்டவர்.

இரயில் பயணத்தில் அவருடைய ஸ்டேஷன் வந்ததும் அவர் இறங்கிக் கொண்டார். சக பயணியாய் பிரயாணம் செய்து அவர் ஏற்படுத்திச் சென்ற தாக்கம் அவ்வளவு எளிதில் மறையாது.

தடக்.. தடக்.. தடக்.. தடக். தடக்…இரயிலின் ஓசை.

மனதுக்குள் நிசப்தம்

தண்டவாளத்தில் இரயில் அதன் இலக்கை நோக்கி அதுபாட்டுக்கு போய்க் கொண்டே இருந்தது.

திண்ணையில்
vapuchi@hotmail.com

Series Navigation