இந்தியாவின் வட கிழக்கில் மற்றொரு அல்-கொய்தா

This entry is part [part not set] of 27 in the series 20020819_Issue

அரவிந்தன் நீலகண்டன்


ஏழு வயது ஸ்ரீமாவுக்கு அது ஒரு சந்தோஷமான ஞாயிற்றுக்கிழமையாகத்தான் விடிந்தது. அந்த வருடம் முழுவதும் அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த ஞாயிற்றுக் கிழமை அது. மறுநாள் பாரதமெங்கும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளான மகர சங்கராந்தி. எனவே இன்று குடும்பத்துடன் அவள் சிங்கிசெரா சந்தைக்குச் செல்லலாம்; புது பொம்மைகள், புதிய துணிகள், புத்தம் புதிய வண்ண வண்ண வளையல்கள் எல்லாம் வாங்கலாம். ஸ்ரீமாவைப் போலவே பல்லாயிரக் கணக்கான திரிபுராவின் குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மகர சங்கராந்தியின் முந்தைய நாள் ஞாயிற்றுக் கிழமையானதில் பெரும் சந்தோஷம்தான். சிங்கிசெரா சந்தை அன்று நிரம்பி வழிந்தது. பல குடும்பங்களுக்கு அது ஒரு மிக மகிழ்ச்சியான தினம். ஆனால் தங்கள் மகிழ்ச்சியின் மூலம் NLFT எனும் ஒரு அடிப்படைவாத பயங்கரவாத அமைப்பின் உத்தரவை தாங்கள் மீறிவிட்டது அவர்களில் பெரும்பாலானோருக்கு தெரியாது. அதற்காக தாங்கள் கொடுக்கப் போகும் பயங்கர விலையையும் அவர்கள் அறிய மாட்டார்கள்.

ஏழு வயது ஸ்ரீமா இனி என்றுமே மகர சங்கிராந்தி திருநாளைக் கொண்டாடப் போவதில்லை. ஏனெனில் ஜனவரி 13, 2002 அன்று மகர சங்கராந்தி திருவிழா கூட்டத்தால் நிரம்பி வழிந்த சிங்கிசெரா சந்தையில் 13 NLFT பயங்கரவாதிகள் நுழைந்து கண்மூடித் தனமாக சுட்ட போது இறந்து போன பதினாறு பேர்களில் ஸ்ரீமாவும் அடக்கம். (பெயர் மாற்றப் படவில்லை – தகவல்கள் ஆதாரம் : பிடிஐ செய்தி, 13-ஜனவரி-2002).

நேஷனல் லிபரேஷன் ப்ரண்ட் ஆஃப் திரிபுரா (NLFT) எனப்படும் பயங்கரவாத அமைப்பின் பரிணாம வளர்ச்சி பல விதங்களில், வட கிழக்கு மாநிலங்களில் எவ்வாறு தீவிரவாத, பிரிவினைவாத அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. வனவாசிகளின் மீதான கொடுமைகளின் விளைவாக அவர்களின் விடுதலைக்காகவே போராடி வரும் விடுதலை அமைப்புகளாக வெளியே தங்களை பிரச்சாரப்படுத்தி வரும் இத்தகைய அமைப்புகளின் உண்மை மூலமும், முகங்களும் எத்தனை கொடுமையானவை என்பதோடு எத்தகைய இன மற்றும் கலாச்சார படுகொலைகளுக்கு இவை வித்திடுகின்றன என்பதும் நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம்.

NLFT க்கு தார்மீக ஆதரவை மட்டுமல்லாது ஆயுதங்களையும் அளிக்கும் முக்கிய அமைப்பு திரிபுராவில் தீவிரமாக இயங்கி வரும் கிறிஸ்தவ மிஷனரி அமைப்பான பாப்டிஸ்ட் சர்ச்சாகும். அண்மையில் திரிபுராவின் நோவபரா பகுதியின் பாப்டிஸ்ட் சர்ச்சின் செயலாளரான திரு. நாக்மன்லால் ஹலாம் திரிபுரா காவல் துறையினரால் கைது செய்ய பட்ட போது அவரிடம் இருந்து 50 ஜெலாட்டின் குச்சிகளும் மற்றும் நவீன வெடிமருந்துகள் செய்யத் தேவையான இரசாயனக் கலவைகளும் கைப்பற்றப் பட்டன. NLFT க்கு வெடி மருந்து மற்றும் ஆயுதங்களை தாம் (பாப்டிஸ்ட் சர்ச்) அளிப்பதை அவர் ஒத்துக் கொண்டார். மற்றொரு பாப்டிஸ்ட் சர்ச் அதிகாரியான திரு. ஜட்னா கொலாய் 1999 இல் NLFT பயங்கரவாதிகளுக்கு கொரில்லா போர் பயிற்சி அளித்த முகாம்களில் தாம் கலந்து கொண்டதாக வாக்குமூலம் அளித்தார். (தகவல்கள் ஆதாரம்: ‘தீவிரவாதிகளுக்கு சர்ச் அளிக்கும் ஆதரவு ‘ எனும் தலைப்பில் 18/4/2000 அன்று வெளியான BBC செய்தி )

அறுபது வருடங்களுக்கு முன்பு நியூசிலாந்தைச் சார்ந்த பாப்டிஸ்ட் மிஷினரிகளால் திரிபுரா பாப்டிஸ்ட் சர்ச் உருவாக்கப்பட்டது. எனினும் 1980கள் வரை திரிபுராவில் பெரும் மதமாற்றங்களை அவர்களால் உருவாக்கிட முடியவில்லை. பின்னர் திரிபுராவின் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான இனக் கலவரங்கள் நடந்ததைத் தொடர்ந்து மதமாற்றங்களும் மும்மரமாக நடக்கத் துவங்கின. இந்த இனக்கலவரங்களைத் தூண்டிவிட்டதில் பாப்டிஸ்ட் சர்ச்சின் பங்கு மிக முக்கியமானது. (India ‘s North-East Resurgence: Ethnicity, Insurgency and Governance, Development by B.G. Vargheese, 1996, p.175.) இதனை தொடர்ந்து உருவானதே NLFT.எனவே தனது முக்கிய கோட்பாடுகளில் ஒன்றாக கிறிஸ்தவ மத மேன்மையையும், அம்மதத்தை பரப்புவதையும் NLFT தன் இயக்க நோக்கங்களில் முக்கியமானவையாகக் கொண்டதில் எந்த ஆச்சரியமுமில்லை.

பல்லாயிரம் ஆண்டுகளாக வனவாசிகள் இந்திய கலாச்சார மரபுகளில் தங்கள் பண்பாட்டு முகங்களை இழக்காமல் அதே சமயம் ஒத்திசைவுடன், இணக்கமான பண்பாட்டு இயைபுடன் வளர்ந்து வந்திருக்கின்றனர். ஆனால் பாப்டிஸ்ட் சர்ச்சோ, வனவாசிகளின் பண்பாட்டுக் கூறுகளையும் மேலும் பாரதத்துடன் அவர்களை பிணைக்கும் கலாச்சார வேர்களையும் முழுமையாக அழித்தொழிக்க மிகக் கொடுமையான முறைகளை NLFT மூலம நடைமுறைப்படுத்தி வருகின்றது. NLFT யின் இந்த உச்சகட்ட வன்முறை மூலமான கலாச்சாரத் துடைத்தெடுப்பால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் திரிபுராவின் ஜமாத்தியா வனவாசிகள்தாம். மிகச் சிறந்த சமுதாயக் கட்டமைப்பும், பாரம்பரிய ஆன்மீக வழிகாட்டுதலும் கொண்ட இவ்வனவாசிகள் எவ்வித மதமாற்ற முயற்சிக்கும் பணிய மறுத்துவிட்டவர்கள். எனவே இவர்களது சமுதாய அமைப்பிடங்களும், சமூக சேவை மற்றும் ஆன்மீக மையங்களும் மீண்டும், மீண்டும் NLFTயினரால் தாக்கப்பட்டு வருகின்றன.

ஆகஸ்ட் 2000 இல், ஜமாத்தியா சமுதாய ஆன்மீக தலைவர்களான திரு. ஜலுஷ்மொனி ஜமாத்தியா மற்றும் சாந்த குமார் த்ரிபுரா ஆகியோர் NLFT யால் கொல்லப்பட்டனர். இவர்களால் உருவாக்கப்பட்ட பதினொரு சிறுவர் பள்ளிகள் மற்றும் அனாதை குழந்தைகள் விடுதிகள் NLFTயினரால் மிரட்டப்பட்டு மூடப்பட்டன. ஜமாத்தியாக்களின் பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து அவர்கள் அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டனர். (தகவல்கள் ஆதாரம்: ‘தீவிரவாதிகள் ஹிந்து ஆசிரமங்களைத் தாக்கினர் ‘ எனும் தலைப்பில் ‘தி டெலிகிராப் ‘ பத்திரிகை செய்தி -டிசம்பர், 5 2000)

பாப்டிஸ்ட் சர்ச் மற்றும் NLFT யினரின் ‘திரிபுராவின் விடுதலைக்கான புனிதப் போரில் ‘ பெரிய இடையூறாக முளைத்திருப்பது சங்க பரிவார் அமைப்புகளின் தொண்டு நிறுவனமான வனவாசி கல்யாண கேந்திரம் தான். இந்த அமைப்பு தான் நடத்தும் பல பள்ளிகள் மற்றும் மருத்துவ சேவை மையங்கள் வனவாசிகளுக்கு தம் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதே வேளையில், அவர்களது கலாச்சார மற்றும் ஆன்மீகப் பாரம்பரிய மதிப்பீடுகள் மீது பற்றினையும், பாரதத்தின் கலாச்சாரப் பன்முக ஒருமையில் தாமும் சரி சமமான குடும்ப உறுப்பினர் எனும் உணர்வையும் ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக இந்த அமைப்பு வனவாசிகளிடம் பெரும் செல்வாக்கினைப் பெற்று வருகின்றது. எனவே மிகச் சரியாகவே NLFT வனவாசி கல்யாண் கேந்திரத்தை தன் முதல் எதிரியாக கருதிச் செயல்பட ஆரம்பித்தது.

உதாரணமாக ஜுலை, 2000 ெஇல் வட திரிபுராவின் ஆனந்த பஜார் பகுதியில் வனவாசி கல்யாண கேந்திரத்தின் பாலர் பள்ளியின் மாணவர் தங்கும் விடுதி தீக்கிறையாக்கப் பட்டது. கேந்திரத்தின் நான்கு முழு நேர ஊழியர்கள் பிணை கைதிகளாக கடத்தப் பட்டனர். தம் வாழ்வை முழுவதுமே சமூகசேவைக்காக அர்ப்பணித்த இந்நால்வரும் தமது அறுபதுகளைத் தாண்டியவர்கள். இவர்கள் அனைவருமே பல மாத சித்திரவதைக்குப் பின் கொல்லப்பட்டனர். ( ‘ஹிந்து இயக்கங்களுக்கு NLFT தடை ‘ எனும் தலைப்பிட்ட ‘தி டெலிகிராப் ‘ பத்திரிகை செய்தி – செப்டம்பர் 14, 2000)

ஏறக்குறைய இதே சமயத்தில்தான் பாப்டிஸ்ட் சர்ச்சின் அமெரிக்க பிரிவு பல கோடி ஹிந்துக்கள் சைத்தானின் இருளில் ஆழ்ந்திருப்பதாகவும் அவர்களின் ‘ஆத்மாக்களை ‘ இரட்சிக்க தீவிர முயற்சிகள் அவசியம் என அறிவித்தது. இந்த சர்ச்சைக்குள்ளான அறிவிப்பைத் தொடர்ந்து, அதன் எதிரொலி போல NLFT பல கலாச்சார பாரம்பரிய நடைமுறைகளை தடை செய்தது. வனவாசிகளின் மதச் சடங்குகள், வளையல்கள் அணிவது, திலகம் இடுவது, ஹிந்தி எழுத்துக்களை பயன்படுத்துவது, துர்க்கா பூஜை மற்றும் மகர சங்கராந்தி போன்ற பாரத பண்டிகைகளை கொண்டாடுவது போன்றவை அனைத்துமே NLFT யினரால் இன்று விலக்கப்பட்டுள்ளன. இதனை மீறுபவர்களை மற்றும் மதம் மாற மறுப்பவர்களை NLFT கொல்லத் தயங்குவதில்லை. NLFTயின் தடை உத்தரவை மீறியதற்காக கொல்லப்பட்ட இருபது வனவாசிகள் 2001 -இல் கொல்லப்பட்டனர். ஒரு குடும்பம் தனது குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த போது உயிருடன் எரிக்கப்பட்டது. (தகவல் ஆதாரம்: BBC செய்தி ஏப்ரல் 14, 2000)

NLFT யின் இக்கலாச்சாரத் துடைத்தெடுப்பை எதிர்த்து ஆகஸ்ட் 2001 இல் 19 வனவாசி இனக்குழு தலைவர்கள் சேர்ந்து ‘வனவாசிகள் கலாச்சார பாதுகாப்பு குழு ‘வினை மதமாற்றத்தை தடுக்க ஏற்படுத்தியுள்ளனர். ( ‘மதமாற்றத்திற்கு எதிராக திரிபுராவின் வனவாசிகள் ‘ எனும் தலைப்பில் திரு.சையது சாரிர் ஹுசைன் அளித்த செய்தி: பார்க்க இணைய தள முகவரி: www.rediff.com/news/2001/august/02trip.htm )

பாரதத்தின் அறுவடை திருநாளான மகர சங்கராந்தியைக் கொண்டாடிய ‘பாவத்தி ‘ற்காக தன் உயிரை இழந்த ஏழு வயது ஸ்ரீமாவின் படத்தை நீங்கள் எந்த வாரப் பத்திரிகையின் அட்டையிலும் பார்த்திருக்க முடியாது. வனவாசிகளின் கல்விக்காக அவர்களது கலாச்சார பாதுகாப்பிற்காக தங்கள் வாழ்நாளை முழுவதும் அர்ப்பணித்து பின்னர் தங்கள் முதிய பருவத்தில் பிணைக்கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைச் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வனவாசி கல்யாண் கேந்திர ஊழியர்களைப் பற்றி, கண்டனத் தலையங்கங்களை நீங்கள் எந்த ஆங்கிலப் பத்திரிகையிலும் காண முடியாது. எனினும் அடுத்த பொங்கலை நீங்கள் கொண்டாடும் போது ஸ்ரீமாவையும் அவள் குடும்பத்தினரையும், நம்மால் கவனிக்கப்படாமலே நம் பண்பாட்டை காப்பாற்ற தங்கள் அனைத்தையும் தியாகம் செய்யும் வடகிழக்கின் நம் வனவாசி சகோதரர்களையும், அவர்களுக்கு துணை நிற்கும் தேச பக்த இயக்க பலிதானிகளையும் ஒருமுறை நினைவு கொள்ளுங்கள் – தயவு செய்து.

hindoo_humanist@sify.com

Series Navigation

author

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்

Similar Posts