இணைய(ா) நட்பு!

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

தமிழில் — நா.முத்து நிலவன்.


சந்தித்த தில்லை என்றாலும் – அட
சத்திய மாய்,நாம் நண்பர்களே!
சிந்தித்த துண்டே இதயத்தால் – நாம்
சேர்ந்ததும் உண்டே இணையத்தால்! (1)

எப்படி யெல்லாம் நீவந்தாய்!- ஓ
எத்தனை உதவிகள் நீதந்தாய்!
எப்படி அப்படி நன்றியினை – நான்
இப்படிச் சொற்படி நல்குவெனோ! (2)

ஆறுத லாக மார்தந்தாய் – எனக்(கு)
அவ்வப் போதும் தோள்தந்தாய்
நூறுபல் லாண்டுகள் பழகியதாய் – நீ
நுட்ப மாக உதவிய,தாய்! (3)

‘சுழிநட் ‘பென்றே சொல்லிடுவார் – நம்
சூக்குமம் அறியார்,தள்ளிடு நீ!
அழிநட் பல்ல! அருளாகும்!- நம்
ஆயுள் வளர்க்கும் பொருளாகும். (4)

அன்பெனும் வெள்ளமாய்த் தளும்புகிறாய்!- ‘நன்றி ‘
ஆழம் புரிந்ததால் புலம்புகிறேன்
பண்பெனும் தேவதை, சிறகோடு – நம்
பக்கம் தொடர்கிறாள் உறவோடு. (5)

கோப்பெருஞ் சோழன் பிசிராந்தை – முன்
‘கூடா ‘ நட்பைப் பழசாக்கி,
மாப்பெரும் உலகம் எழுகிறது!- ‘எலி ‘
மயக்கும் வலையால் விரிகிறது! (6)

—(நன்றி:tamilulagam@yahoogroups.com)

muthunilavan@yahoo.com

Series Navigation

தகவல்: நா.முத்துநிலவன்

தகவல்: நா.முத்துநிலவன்