இணையத்தின் புனிதர்

This entry is part [part not set] of 30 in the series 20020917_Issue

அரவிந்தன் நீலகண்டன்


கத்தோலிக்க துறவியும், மானுடவியல் மற்றும் தொல் பழம் விலங்கியல் ஆராய்ச்சியாளருமான ஒருவர் இணையத்தின் புனிதராக பலராலும் மதிக்கப்படுகிறார். ஆனால் அவர் சார்ந்திருந்த திருச்சபையோ அவரது நூல்களை முடிந்தவரை அமுக்கி அழிக்கவும், முடியாதபோது உதாசீனப்படுத்தவும் செய்தது. உயிரியலாளர்களிடமோ அவரது நூல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மேற்கின் மரபில் தன்னியல்பில் பிரிந்திருந்த மானுட உண்மை வேட்கையின் இரு பெரும் விளைவுகளை ஒருங்கிணைக்கும் சாத்திய கூறுகளை கண்டதோர் மனிதர் அவர். மனித உயிரினத்தின் அடுத்த கட்ட பரிணாம தாவுதலை மிகச் சரியாக கணித்த மிகவும் அரிய மேதாவிகளில் அவரும் ஒருவர்.

பியரி தெயில்ஹார்ட் தி சார்டின் (1881-1955) ஏசுசபைத் துறவி. கிறிஸ்தவ சமயத்தின் உள்ளார்ந்த ஆன்மீகத்தினுடன் பரிணாம அறிவியலின் உண்மையை இசைவு கொள்ள வைப்பதே சார்டினின் வாழ்வின் ஆன்மீக சாதனையாக அமைந்தது. மேற்கத்திய மரபு உருவாக்கியிருந்த முரண்பாடுகளை களைந்து ஆன்மீகத்தையும் அறிவியலையும் இயைவு காணச் செய்ய சார்டின் மேற்கொண்ட முயற்சிகள் தீவிரமானவை. தான் சார்ந்திருந்த திருச்சபையின் நம்பிக்கை வயப்பட்டதாகவே இருந்த ஆன்மீகக் கோட்பாடுகளை, அறிவியலையும் ஆன்மீகத்தையும் இசைவு கொள்ள செய்யும் தன் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் மறுெஆக்கம் செய்தார் சார்டின்.

சீனத்தில் தனது இருபது வருடங்களை தொல் மானுடவியல் ஆராய்ச்சிகளில் செலவிட்ட சார்டின் புகழ் பெற்ற ‘பீகிங் மனிதன் ‘ கண்டுபிடிப்பு மூலம் மானுட இனத்தின் பரிணாம உதயங்கள் குறித்து புதிய அறிவியல் அணுகுமுறைகளுக்கு வித்திட்டார்.ஆப்பிரிக்காவிற்கு வெளியே (மத்திய மங்கோலியாவில்) மானுடத்தின் மிகப் பழைய மூதாதைகளின் சுவடுகளை முதன்முதலில் ஆராய்ந்தறிந்தவர் சார்டின்தான். ஸொவ்கொவ்தியான் பள்ளத்தாக்கில் டிசம்பர்ெ2 1929 இல், சார்டின், யங் மற்றும் இளம் சீன தொல்மொனுடவியலளரான வென்சுகாங் பெய் ஆகியோரடங்கிய குழு கண்டுபிடித்த பீகிங் மனிதனின் மேல்மெண்டையோடுதான் இந்த உயிரினத்தின் மானுடத்தன்மைக்கு உறுதி அளித்தது. 19ெஆம் நூற்றாண்டினைச் சார்ந்த ‘ஜாவா மனிதன் ‘ அப்போது பெரும்ப ‘லும் நீள கைகளைக் கொண்ட குரங்கினத்தைச் சார்ந்தவனாகவே கருதப்பட்டான். அந்த எலும்புப் படிமங்களைக் கண்டுபிடித்த டச்சு அறிவியலாளரான யூஜின் தொபாய்ஸ் தன் கண்டுபிடிப்பு மனித பரிணாம வளர்ச்சியின் பாதையில் ஒரு முக்கிய கண்ணி என்பதனை விளக்க பெரும் விவாதங்களை சந்திக்க வேண்டியிருந்தது. நிமிர்ந்து நிற்கும் தன்மை மாத்திரம் அல்ல பண்பாட்டின் தொடக்கத்தையும் நாம் பீகிங் மனிதனிடம் காண்கிறோம். இப்பூவுலகின் பரிணாம வரலாற்றில் முதன்முதலாக நெருப்பினை பயன்படுத்திய பீகிங் மனிதன் ப்ரொமிதஸும் கூட. பரிணாமத்தின் மிகப் பெரிய மிக முக்கியமான தாவலை நிகழ்த்தி நாம் இன்றைய நாமாக வித்திட்ட நம் உயிரின மூதாதையாக பீகிங் மனிதனை கண்டறிந்தவர்களில் முதன்மையானவர் சார்டின். ஹோமோ எரெக்டஸ் (Homo erectus) என வகையிடப்படும் மனித பெரும் குடும்பத்தினைச் சார்ந்த உயிரினத்தின் மிகவும் ஆராயப்பட்ட உறைநிலை எலும்புகள் எனும் முறையில் ‘பீகிங் மனிதன் ‘ கண்டுபிடிப்பு மனித அறிவின் விரிவாக்கத்திற்கு பெரும் பங்கினை ஆற்றியுள்ளது. (புதிய கண்டுபிடிப்புக்கள் பழைய ஊகங்களையும் அறிதலையும் வேகமாக பொய்ப்பித்து புதுப்ப்பிக்கும் தொல் மானுடவியல் போன்றதோர் அறிவியல் துறையில், முதன்முதலாக நிமிர்ந்து நின்றதாக அறியப்பட்ட ஹோமோ

எரெக்க்டஸ் இன்று அந்நிலையை இழந்து விட்டது. அஸ்த்ரோபைதிகஸ் மற்றும் ஹோமொ ஹாபிலிஸ் ஆகியவற்றின் பின் நவீன மனிதனுக்கு மிக நெருக்கமாக பீகிங் மனிதனின் விலங்கியல் பகுப்பு குழுவான ஹோமோ எரெக்டஸ் அறியப்படுகிறது.) 1935 ெஇல் சார்டின் இந்தியா வந்திருந்தார். சிவாலிக் பகுதிகளில் தொல்ெஉயிரியல் ஆராய்சிகளை மேற்கொண்டார்.

சார்டினின் தத்துவம் சார்ந்த பங்களிப்புகளில் பரிணாம அறிவியல் அவருக்கு அளித்த புற உலகின் அனுபவமும், அவரது இயல்பான ஆன்மீகத்தேடலும் சேர்ந்து வெளிப்படுவதை காணலாம். மனித இனம் கடந்து வந்த பரிணாம பாதையின் காலடித்தடங்களை கண்டவர் அவர். கூடவே மேற்கின் மிகப் பெரிய கூட்டு ஆன்மீக தோல்வியினை இரண்டாம் உலகப் போரின் போது அவர் உணர்ந்தார். (குறிப்பாக மிகப் பெரும் மனித அழிவுகளுக்கு காரணமான அச்சு நாடுகளுக்கு எதிரான நிலையை எடுக்காமல் முடிந்தவரை மெளனத்தில் நிலைத்த தனது திருச்சபையின் நிலை.) எனவே பரிணாமத்தின் அடுத்தக் கட்டம் குறித்த அவர் சிந்தனை ஒரு இயல்பான வெளிப்பாடு என்பதுடன், மனித இனத்தின் முக்கியமான பதிவாகவும் அது மாறியுள்ளது. 1955 ெ இல் வெளியான ‘மானுட நிகழ்வு ‘ எனும் நூலில் பூமியின் உயிரியல் பரிணாமத்தினைக் குறித்து பின்வருமாறு அவர் குறிப்பிடுகிறார்,

‘முதலில் கார்பன் மூலகங்களில் பல்லாயிரக்கணக்கான அணுக்கள் சமச்சீர் தன்மை கொண்ட வடிவமைப்புக்களில் அமைகின்றன. பின்னர் தன் ஒரு சிறு கன அளவிலும் பல்லாயிரக்கணக்கான மூலகங்களை கொண்ட சிக்கலான அமைவினைக் கொண்ட செல்கள் உருவாகின்றன. பின்னர் இத்தகைய செல்களை தம் அமைப்பில் எண்ணற்ற கோடிகளில் தம்முள் கொண்ட மெட்டஸோவா உயிரினங்கள். இவற்றிற்கிடையேயான ஒத்திசைவு கொண்ட உறவுகள் (symbiosis) அடுத்தக் கட்ட பரிணாமத் தாவலை ஏற்படுத்தி உயிர்களை உயர்ெஉயிரியல் தளத்திற்கு கொண்டு செல்கின்றன. இப்போதோ இந்த உலகின் பரிமாணங்களைக் கொண்டதோர் மன வலைப் பின்னல் நம் புவி மீது கவிகின்றது. பின்னி பின்னி ஓடும் இவ்வலைப்பின்னல்கள் ஒன்றை ஒன்று அறுத்துக் கொண்டு சமநிலை அடைவதில்லை மாறாக ஒரு பெரும் இயக்கத்தின் உயிரோட்ட இணைவாக மாறிவிடுகின்றன. ‘

இந்த பரிணாம மாற்றத்தின் விளைவாக புவியின் மீது ஏற்பட்டிருக்கும் மன மண்டலத்திற்கு அவர் கொடுத்த பெயர் ‘ந்யூஸ்பியர் ‘ (noosphere). தமிழில் புவிமெனக் கோளம் எனலாம். இரஷ்ய புவியியலாளரான விளாதிமீர் இவனோவிச் வெர்னாட்ஸ்கி இக் கோட்பாட்டால் மிகவும் கவரப்பட்டவர். புவியியல் சார்ந்த வேதி நிகழ்வுகளில் உயிர்கோளத்தின் பிரித்தறிய இயலா இணைப்பினால் ஈர்க்கப்பட்ட இவர், புவிமெனக் கோளம் சார்ந்தே உருவாகும் தொழில்நுட்பம் புவியின் பல வேதியியல் தன்மைகளை மிக அதிகமாக பாதிக்கும் என்பதனை 1910 களிலேயே சுட்டிக்காட்டினார். இன்றைய ஜேம்ஸ் லவ்லாக் மற்றும் லின் மர்குலிஸ்ஸின் ‘காயா ‘ (Gaia) அறிவியல் கோட்பாட்டின் முன்னோடியாக வெர்னாட்ஸ்கி அறியப்படுகிறார்.

சார்டின் பரிணாம இயக்கத்தை ஒரு பிரபஞ்ச மனது தன்னை தானே அறிந்து கொள்ளும் பெரும் விழிப்பாக உணர்ந்தார். ‘பரிணாமம் ெ கிறிஸ்துவின் முழுமை உணர்தல். ‘ இதில் நம் உறவு என்ன ? ‘பிரபஞ்ச இயக்கத்திற்கு ஒரு பாதையினை பரிணாமம் அளித்தது. இப்பாதையின் உண்மையே நம் செயல்களுக்கு அர்த்தம் அளிக்கிறது. இப்பிரபஞ்ச இயக்கத்தில் தன் பங்கினை அளிப்பதே நம் வாழ்விற்கான அர்த்தம். ‘ சார்டினைப் பொறுத்தவரை தன்னைத் தான் உணரும் பிரக்ஞையே பரிணாமம் மானுடத்திற்கு அளித்த பெரும் கொடை. ‘மனிதன் தன்னை உணரும் நிலையினை அடைந்த பரிணாம வளர்ச்சி. நாம் ஒவ்வொருவரும் பரிணாமம் தன்னைத் தானே நோக்குவதின் வெளிப்பாடு. ‘ ஆக ஒரு பெரும் பிரபஞ்ச பிரக்ஞையே இறை அல்லது கிறிஸ்து. இது தன்னைத் தானே உணரும் லீலையே பரிணாமம். இந்த அறிதலின் மூலம் நாம் நமது உண்மைத்தன்மையை அறிகிறோம்.இந்த சுயெஅறிதலின் மீதாகவே நம் ஆன்மீகமும் மதிப்பீடுகளும் எழுப்பப்பட வேண்டும். இத்தகைய தனிமனிதனின் ஆன்மீக அனுபவத்திற்கும் தேடலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு துறவியை திருச்சபை மிகக் கொடூரமாக அடக்கியது. அதிஷ்டவசமாக சில நூற்றாண்டுகளால் கட்டி வைத்து எரிக்கப்படுவதிலிருந்து சார்டின் தப்பினார் அன்றைய பாப்பரசரான பயஸ்-X தன் பழமைவாதத்திற்கு பெயர் போனவர். ஹிட்லரின் போப் என அறியப்பட்ட அவருக்கு சார்டினின் கோட்பாடுகள் பயங்கர புரட்சி வாதமாக தோன்றின. சமய விஷயங்களை பேசக்கூடாதென்றும், தன் படைப்புக்களை வெளியிடக்கூடாதென்றும் சார்டின் திருச்சபையால் கட்டாயப்படுத்தப் பட்டார்.ஒரு சிறந்த துறவியாக தன் திருச்சபைக்கு முழுமையான பணிவினை அளித்த சார்டினின் தத்துவ நூல்கள் அவர் இறந்த பின்னே வெளியிடப்பட்டன.

பரிணாமம் குறித்த சார்டினின் பார்வை டார்வினிய பரிணாமவாதிகளாலும் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. பரிணாமம் ஒரு இலக்கு குறித்த விரிவல்ல. கண்ணற்ற படைப்பாளியாக அதனை டார்வினிஸ்டுகள் உருவகப்படுத்துவர் (குறிப்பாக ரிச்சர்ட் டாவ்கின்ஸ்). இயற்கைத் தேர்வே முக்கியமான பரிணாம இயக்கமாக அறியப்படுகிறது. அதன் ‘குருட்டுத்தன்மை ‘ நிறுவப்பட்ட ஒன்று. இந்நிலையில், தன்னை உணரும் விரிவாக பரிணாமத்தை ‘அனுபவிக்கும் ‘ சார்டினின் கூற்றுக்கள் அறிவியல் என்பதனை விட அறிவியல் முலாம் பூசப்பட்ட கவித்துவ இறையியல் என்பது டார்வினிஸ்டுகளின் கருத்து. இது ஒரு நிலையில் உண்மையாக இருந்த போதிலும் கூட முதலில் டார்வினிஸ்டுகளால் ஏற்கப்படாத ‘உள்ளுறை இயைவுறவு ‘ (Endo-symbiosis) (இயற்கை தேர்வினைக் காட்டிலும்) மிகவும் பரவலான பரிணாம இயக்க முறைமையாக அறியப்பட்டிருக்கிறது. நம் செல்களின் அடிப்படை உயிர் வாழ்தல் மைட்டோகாண்டிரியா போன்றவற்றின் ‘உள்ளுறை இயைவுறவு ‘களாலும், இந்த புவியின் வளி மண்டலத்தின் வேதிகட்டமைப்பை மாற்றிய ஒளிச்சேர்க்கை ‘க்ளோரோப்ளாஸ்ட் ‘ போன்ற ‘உள்ளுறை இயைவுறவு ‘களாலும் தான் சாத்தியமாயிற்று. 1980களில் நுண்ணுயிரியலாளரான டாக்டர் லின் மர்குலிஸால் பலத்த போராட்டத்திற்கு பின் நிறுவப்பட்ட இவ்வுண்மை சார்டினின் கவித்துவ இறையியலால் முன்னறிவிக்கப்பட்டிருந்தது. நிச்சயமாக முழுவதுமாக ஏற்றுக்க்கொள்ளப்படாவிட்டாலும் கூட கவித்துவ இறையியலின் உள்ளொளி அறிவியலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் தன்மை கொண்டது என்பதற்கு சார்டின் ஒரு நல்ல உதாரணம்.

இணையம் இன்று மனித மனவோட்டங்களை இணைப்பதில் அடைந்துள்ள வெற்றி மகத்தானது. மனித அறிவினை காலெவெளிகளின் சுவர்களையும் மனிதன் ஏற்படுத்தி உள்ள பிரிவுகளையும் கடந்து இணையம் இணைக்கிறது. இந்த இணைப்பின் விளைவுகள் நம் அறிவின் தாகத்தின் தேசெஇனமெத எல்லைகளை மீறிய தன்மையினை உணர்த்துகின்றன. ‘கோடிக்கணக்கான மனங்களின் அறிவு வேட்கையின் விளைவுகள் உலகம் தழுவிய அறிவு பரிமாற்றத்திற்கான உயிர்த்தன்மை கொண்ட பிணைப்பினை, அறிவு வேட்கையென்னும் நம் அடிப்படை தேவையின் உயிர் நாடி ஆக்கிவிடும். ‘ 1950-55 காலகட்டத்தில் இவ்வார்த்தைகள் சார்டினால் எழுதப்பட்டன. மேலும் அவர் கூறுகிறார், ‘.. நான் இங்கு இளம் அறிவியலான சைபர்னடிக்ஸின் தொடக்கப்புள்ளியும், நம்பிகையுமாயிருக்கிற மின்னணு இயந்திரங்கள் மனித மனத்தின் ஆற்றலை கூட்டக்கூடிய தன்மையுடன் விளங்குவதை எண்ணிப்பார்க்கிறேன். ‘ விரைவில் தன் புவி-மன கோளத்திற்கான புலத்தினை இந்த ‘மின்னணு இயந்திரங்கள் ‘ அளிக்கப்போவதையும் சார்டின் உணர்ந்திருக்கலாம். புவிமென கோளத்திற்கான மிக நெருங்கிய உண்மையாக இணையம் இன்று திகழ்வதை பலர் உணர்ந்து வருகின்றனர். எனவேதான் நாசி போர் குற்றவாளிகளைக் கூட புனிதராக்க முயலும் திருச்சபையால் என்றும் அதிகாரபூர்வ புனிதராக அறிவிக்கப்பட முடியாத பியரி தெயில்ஹார்ட் தி சார்டின், அறிவிக்கப்படாமலே இணையத்தின் புனிதராகி விட்டார்.

****

hindoo_humanist@sify.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்