ஆஸ்திரேலியப் பழங்குடியினர் மீது ஆஸ்திரேலிய அரசின் தொடரும் அடக்குமுறை

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue


ஆஸ்திரேலியாவின் பழங்குடி சமூகத்தினருக்கும் வெள்ளையருக்கும் இடையேயான தொடரும் வெறுப்புணர்வு, சென்றவாரம் கலவரமாக வெடித்து ஸிட்னி போலீஸாருடன் பழங்குடியினர் போராட்டமும் மோதலுமாக ஆனது.

ஒரே பழங்குடி ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஆடன் ரிட்ஜ்வே பழங்குடியினருக்கும் வெள்ளை ஆஸ்திரேலியர்களுக்கும் இடையே இருக்கும் சமூகப் பிளவை சமன்படுத்துவதில் சென்ற பத்தாண்டுகளில் முன்னேற்றம் இல்லாமையே இந்த தொடரும் வன்முறை மற்றும் கலவரங்களுக்குக் காரணம் என்று கூறியிருக்கிறார்.

17 வயதான பழங்குடி இனத்து இளைஞன் தாமஸ் ஹிக்கியின் மரணத்தால் கோபமுற்ற 100 பழங்குடியினர், சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று, சுமார் 200 கலவரப் போலீசுடன் மோதினார்கள். மண்ணெண்ணெய் அடைத்த பாட்டில் குண்டுகள், கண்ணாடிகள், கற்கள் பறந்த கலவரம், சிட்னி நகரத்தின் சென்ற பத்தாண்டுகளில் காணப்படாத அளவுக்கு மூண்டது.

போலீஸால் துரத்தப்பட்ட ஹிக்கி பை சைக்கிளிலில் இருந்து விழுந்து ஒரு உலோகவேலியில் சிக்கி இறந்து போனார். அவரது குடும்பம் இந்த இளைஞனை துன்புறுத்தியதற்காக போலீசை குற்றம் சாட்டியது.

ஹிக்கியின் தாயார் கெயில் போலீஸால் துன்புறுத்தப்பட்டதே இவர் கீழே விழுந்தற்குக் காரணம் என்று குற்றம் சாட்டினார். ‘இவர்கள் எங்கள் குழந்தைகளை நடத்தும் முறை நிறுத்தப்படவேண்டும்.. அவர்கள் எங்கள் குழந்தைகளை நாயைப்போல நடத்துகிறார்கள். தேவையின்றி அடிக்கிறார்கள் ‘ என்று குற்றம் சாட்டினார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய ரிட்ஜ்வே, சமூகங்கள் இடையே இருக்கும் வெறுப்பும் மன அழுத்தமும் தாமஸ் ஹிக்கியின் மரணத்தால் வெடிப்புற்று இப்படிப்பட்ட தீவிரத்துடம் வெளிவரக்காரணமாகிவிட்டது என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சி எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் இயக்கத்தாலும் உபயோகப்படுத்தப்படவில்லை. ஆனால், இளைஞர்கள் வழியற்று நம்பிக்கையற்று வருத்தத்தில் வாழ்வின் வாய்ப்புகள் அற்று இருப்பதையே காட்டுகிறது என்று இவர் கூறினார்.

ஆஸ்திரேலியாவின் சுமார் 4 லட்சம் பழங்குடியினர்கள் மற்றும் டோரஸ் சந்தி தீவுவாசிகள் இந்த ஆஸ்திரேலியாவின் 2 கோடி மக்கள் தொகையில் சுமார் 2 சதவீதத்தினரே. இவர்களுக்காக அரசாங்கம் சுமார் 787 மில்லியன் டாலர் வருடத்துக்குச் செலவழிப்பதாகக் கூறுகிறது.

இருப்பினும், பெரும்பாலான பழங்குடியினர் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். இவர்கள் வெள்ளையர்களை விட 20 வருடங்கள் முந்தியே இறக்கின்றனர். வெள்ளையர்களில் சிறையில் இருப்பவர்களின் சதவீதத்தைவிட பழங்குடியினர் சிறையில் இருக்கும் சதவீதம் மிக மிக அதிகம்.

கூடவே, ஒரு லட்சம் பழங்குடி குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடமிருந்து பலவந்தமாக அரசாங்கத்தால் பிரிக்கப்பட்டு வெள்ளைஇன மக்களின் வேலையாட்களாக ஆக்கப்பட்டதனால் இருக்கும் ஆழமான மனவடுவையும் தாங்கியே இவர்கள் வாழ்கின்றனர். இவர்கள் 1910இலிருந்து 1970 வரை தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு வெள்ளை இன மக்களின் கலாச்சாரத்தில் இணைய வைப்பதாக அரசாங்கத்தால் கூறப்பட்டது. ரிட்ஜ்வே அவர்களின் தந்தையும் இப்படி தன் குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்ட ஒருவரே. இந்த பழங்குடியினர் தலைமுறையை திருடப்பட்ட தலைமுறை STOLEN GENERATION என்று இவர்கள் வழங்குகிறார்கள்

சமூகப் பிரச்னைகளை தீர்க்க எந்தவிதமான ஒரு உறுதிமொழியும் கொடுக்காத அரசாங்கமும், முன்பு அரசாங்கம் செய்த அநீதிகளுக்கு கட்டாயமாக தான் மன்னிப்புக் கேட்கமுடியாது என்று அரசாங்கம் மறுப்பதும் 216 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்த பிரிட்டிஷ் காலனியாதிக்கம் இந்த நாட்டின் பழங்குடி மக்கள் மீது இழைத்த அநீதிகள் இன்னும் தொடர்வதுமே இந்த கோபத்துக்குக் காரணம் எனக் கூறுகிறார்.

ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்களின் இடையே இருக்கும் அன்னியமாதல் தீவிரமடைவதற்குக் காரணம் இந்த சமூகத்தின் சுமார் 70 சதவீதம் இன்று 25 வயதுக்குள்ளானதாக இருப்பது என்றும் ரிட்ஜ்வே கூறுகிறார்.

ரெட்பெர்ன் என்ற சிட்னி பகுதியில் இந்த கலவரம் ஞாயிறு இரவு முழுவதும் தொடர்ந்து திங்கட்கிழமை காலையிலும் இந்த பழங்குடி இளைஞர்களால் தொடர்ந்தது.

Series Navigation