சு. வேணுகோபால்
தமிழில் நாவல் முயற்சிகள் குறுகிய எல்லைகளுக்குள் தான் நிகழ்ந்திருந்தன. அவை மதிக்கத்தக்கவை என்றாலும் நாவல் வடிவத்தின் பெரும் சவாலை எதிர்கொண்டவை அல்ல. ஜெயமோகனின் விஷ்ணுபுரம் அந்த வகையில் தமிழ் நாவல் உலகத்தைப் புதிய திசையில் திருப்பியது. பிறகு பின்தொடரும் நிழலின் குரல், காடு. பெரும் நாவல்களை எழுதுகிற தமிழ்ப் படைப்பாளிக்கு தமிழ்ச்சூழல் அவ்வளவு உகந்ததாக இல்லை. அதற்குப் பற்பல காரணங்கள். முக்கியமான விசயம் கூர்ந்து படித்து அதன் எல்லா கூறுகளையும் கவனத்தில் தொகுத்துக்கொள்ளும் வாசகர்கள் குறைவாக இருப்பதே. ஆனாலும் கூர்மையான படைப்பாளிகளின் பெரும்பாலான படைப்புகள் சோடைபோவது கிடையாது. இதற்கு உதாரணமாகப் புதுமைப்பித்தனைச் சொல்லலாம். காரணம் சிறந்த படைப்புகள் உருவாவது காலம், சூழல் சார்ந்த விஷயமல்ல. அது படைப்பாளியின் குணாம்சம் சார்ந்த விஷயம்; அவனது பார்வை, கலை ஆற்றல் சார்ந்த விஷயம். ஏழாம் உலகம் ஜெயமோகனின் ஆறாவது நாவல். அவரின் ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு திசையில் ஊடறுத்துச் செல்லக்கூடியது. இந்நாவல் நமது சூழலில் நாம் அறிந்தேயிராத இருண்ட பகுதிக்குள் போகிறது.
சிலவருடங்களுக்கு முன் தமிழில் இனிமேல் யதார்த்தவாதத்துக்கு இடமில்லை அது செத்துவிட்டது என்ற குரல் எழுந்தது. மேலைநாடுகளில் அதை புதைத்துவிட்டார்கள் என்று சொன்னார்கள் . ஆனால் இப்போது யதார்த்தவாதம் மீண்டும் வீச்சுடன் அங்கே எழுந்துள்ளது. நுட்பமான சித்தரிப்பும் வரிதோறும் சொல்லப்படாத ஆழங்களும் கொண்ட இந்த நாவல் அத்தகைய புது யதார்த்தவாத படைப்பு. என்னைப் பொறுத்தவரையில் படைப்பு எந்த இஸத்தைக் கட்டிக்கொண்டு வந்திருக்கிறது என்று அளப்பதில்லை. வாசக மனசை முழுமையாகத் தன்னில் ஈர்த்துக் கொள்ளும் படியாக இருக்கிறதா என்றுதான் முதலில் கவனிக்கிறேன். ஜெயமோகன் எந்நிலையிலும் மேலை இலக்கியப் போக்குகளை மாதிரிகளாகக் கொண்டு படைப்பை உருவாக்குவதில்லை. ஒருபோதும் தன் நிலத்தின் தன்மையை இழந்துவிடாத வீரியம் அவருடையது.
இந்நாவல் தேர்ந்திருக்கிற உலகம் குறைப்பிறவிகளான, முடமான, பெருநோய்வாய்ப்பட்ட பிச்சைக்காரர்களின் , அவர்களைச் சுரண்டி மேய்ப்பவர்களின் உலகம். தெய்வ சந்நிதானத்தைச் சுற்றி இதுவரை நாம் கவனிக்காத ஒரு அடியுலகம் பேருருக் கொண்டு நாவலில் இயங்குகிறது. பக்தி பிரவகிக்கும் அதே இடத்தில் வைத்து நம் அபத்தங்களைப் பேசுகிறது. இதை வேறொருவரால் கலாபூர்வமாக எழுதமுடியாது. நாம் எதில் விரும்பி பயணமாகிறோமோ அதே பாதையில் நாம் அருவருக்கும் எச்சில்கள் நம்மீது காரித்துப்பப்பட்டபடியே இருக்கின்றன. கும்பிட்டு கண் திறந்தால் கருவறையில் பேய் உட்கார்ந்திருக்கிறது. உயர்ந்த படைப்பாளி அந்த ஏமாற்றங்களை அவமானங்களை, அசிங்கங்களை, ஏளனங்களை, சீரழிவுகளை ஒரு போதும் மறைக்க மாட்டான். உதிரிகளாக எங்கெங்கிருந்தோ வந்து மோதியிருக்கும் அவை ஒன்று திரண்டு இந்நாவலில் புனைவாகியிருக்கிறது. நாவலை வாசிக்க வாசிக்க மனித இருப்பின் அவலமும், அதைமீறி எந்நிலையிலும் வாழத் துடிக்கும் முனைப்பும், மனித மனங்களின் வக்கிரமும் நெகிழ்வும் நம்மை வந்து தாக்கியபடியே இருக்கின்றன.
பெருங்கோயில்களின் முன் அமர்ந்திருக்கிற முடப் பிச்சைக்காரர்கள் தங்கள் எஜமானர்களின் கொக்கிகளில் வதைபட்டுக் கொண்டிருக்கின்றனர். அது நாமறியாத வேறொரு உலகம். படுபயங்கரமான போக்கிரித்தனங்களின் உலகம். அத்தனை குரூரங்களும் எழுந்து பேயாட்டம் ஆடுகின்றன. தாஸ்தாவேஸ்கிதான் ‘மரணவீட்டின் குறிப்புகள் ‘ எழுதமுடியும். ஜெயமோகனால்தான் இதை எழுதமுடியும். ஜெயமோகனை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. எனக்கு பழநி பண்டாரங்களின் உலகம் கொஞ்சம் தெரியும் என்றாலும் அதனை இப்படி சீழும் நாற்றமும் படிக்கட்டுகளில் வழிந்து வரும்படி உக்கிரமாகப் படைத்திருக்க முடியாது. ஜெயமோகன் துணிந்து அதற்குள் புகுந்து போகிறார். ஒவ்வொரு படிகளிலும் கிடக்கும் உருப்படிகள் அற்பப்புழுவிலும் கேவலமான நிலையிலும் அத்தனை ஆசாபாசங்களுடனும் உயிர் பெற்று நம்மைப் போலவே வாழத் துடிக்கின்ற சித்திரத்தை சாதாரணமாக் உருவாக்கி செல்கிறார். வன்மையான எழுத்தாற்றல் உள்ள கலைஞனுக்கு மட்டுமே இது சாத்தியம். மனிதர்களை வைத்து நடக்கும் பெரும் வியாபாரத்தில் நம் பக்திமார்க்கம் நாறி நாற்றமெடுக்கிறது. எல்லா நிறுவனங்களும் முடிந்தமட்டுமான கொள்ளையை அடித்துக் கொண்டு நைசாக மறைந்து கொள்கின்றன. ஆன்மீக நிறுவனங்கள், காவல் நிலையங்கள், மருத்துவ மனைகள், வியாபாரிகள், சுற்றியிருக்கும் குடும்பங்கள் எல்லாம் எல்லாம் கொள்ளை அடித்துக் கொள்ளும் ஒரு முடிவற்ற திருவிழா நிகழ்வதாகத் தோன்றுகிறது.
அறம், கருணை, மனிதாபிமானம் என்றெல்லாம் நாம் காலங்காலமாக வளர்த்து வந்த நம்பிக்கைகளை இந்நாவல் வேரோடு பிடுங்கி விடுகிறது. இந்நாவலில் கடவுள் ஒரு கேலிப் பொருளாக மாறிவிடுகிறார். தங்கள் உள்ளே உறையும் அக்கடவுளால் கைவிடப்பட்ட மனிதர்கள் இன்னமும் ‘அரோகரா ‘ என்று நெருக்கியடித்துக்கொண்டு படிகளில் ஏறுகின்றனர், இறங்குகின்றனர். தங்களை அலங்கோலப்படுத்திக் கொண்டு கடவுள் முன் பிச்சை கேட்கிறார்கள். எந்தவித தயக்கமோ, மனக்கூச்சமோ இல்லாமல் பொருளுக்கும் சுகபோகத்திற்கும் அடிமையாகிப்போன இந்த நவீன உலகின் மனிதர்கள் வாழும்பொருட்டு கடவுள் என்றும் அறம் என்றும் பலவற்றை பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். ஆனால் வாழ்வதற்கான எந்தவிதமான பற்றுக்கோடும் அற்றவர்கள் இந்தப் பிச்சைக்காரர்கள். பந்தங்கள் அற்றவர்கள். எந்த உடமையையும் அற்றவர்கள். .இவர்களில் யாரையும் கொல்லலாம். எந்த அரசும் கடவுளும் அதை தடுக்கப்போவது இல்லை. அவர்களை விற்கலாம் . புணர வைத்து பெற்றுப்பெருகச்செய்யலாம். இவர்களின் வேதனைகள் சிரிப்பிற்குரியன , ஆசைகள் கேலிக்குரியன. உயிர்வாழ்வதற்கு எந்த முகாந்தரமும் இல்லாத இந்த ஜீவன்கள் தற்கொலை செய்து கொள்வார்களானால் அதற்கு அர்த்தம் உண்டு. ஆனால் அவர்களால் முடியாது. வாழும் உலகின் அனைத்து உயிர்ராசிகளையும் போல கடைசித்துளி வரை வாழ்ந்து விடவே துடிக்கின்றனர். விற்கப்பட்ட குழந்தைக்காக ஏங்கி பீழை தள்ள கண்மூடிகிடக்கும் முத்தம்மையின் பிடிவாதம் தளர்ந்து மீண்டும் சகஜமாகி பிச்சை எடுக்கப் போகிற இடம் இதில் ஒன்று. குழந்தையின் பிரிவுத்துயரம் கொடூரமானதுதான். மிச்சமிருக்கும் வாழ்க்கை அதைவிடக் கொடூரமானது , ஆயினும் வாழ்க்கை கவரத்தான் செய்கிறது.
ஏழாம் உலகத்தில் எழுத்தின் மூர்க்கம் முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது. புறச்சூழலின் சித்திரத்தை ஆழமாகப் பேசுவதால் மட்டும் ஒரு படைப்பு மேலான படைப்பு என்றாகிவிடாது. படைப்பின் அந்தரங்க கதி என்று ஒன்று இருக்கிறது. அது இந்நாவலில் மிகச்சிறப்பாக உருவாகியிருக்கிறது. அதுதான் வாசகனை நம்பவைக்கிறது. கலையை நிஜமாக்கிறது. மேலும் நம் மனதில் விரிய வைக்கிறது. நாம் நாகரீகம் என்று நம்பக்கூடிய இந்த இருபதாயிரம் வருட வளர்ச்சிப் பாதையில் பின்னோக்கிக் கதறியபடி ஓடுகிறது இந்நாவல். முத்தம்மையை மலக்காட்டில் பன்றிக்கூட்டங்களிடையே கிடத்தி கூனனை அணைய விடுகிறபோது ‘ ‘ஐயோ வேண்டாம்!. ஒத்த வெரலு! ‘ ‘ என்று திரும்பத்திரும்பச் சொல்லி கதறும் குரல் மனித நாகரீகத்தின் மறு எல்லையிலிருந்து எழுவது. ஏழாம் உலகம் வேறெங்கும் இல்லை. நிஜத்திலேயே நம்மைச் சுற்றிலும் இருக்கிறது. நாமும் அதில் பங்கு பெறுகிறவர்கள்தாம்.
மனிதர்கள் பண்டமாகிப் போனகாலம் இது. இந்த நுகர்வு கலாச்சாரத்தில் மதிப்பீடுகளுக்கு இடமில்லை. நேர்மைக்கு இட மில்லை. சான்றாண்மைக்கு இடமில்லை. வாய்மைக்கு இட மில்லை. பணமே ஆகப்பெரிய கடவுள். அதுவே வணங்கத்தக்கது. எல்லாம் பொருள் குறித்தனவே என்ற பார்வையை இவ்வளவு உக்கிரமாக சொன்ன நாவல் தமிழில் வேறொன்றும் இல்லை. பணத்திற்காக எந்த அசிங்கத்தையும் செய்கிற இந்த வியாபார உலகம் ஆத்மாவைப் புதைத்துவிட்டு மிருகங்களாக உலவுவதைக் குறிப்பால் வெளிப்படுத்துகிறது நாவல். அதிகாரத்துக்கும் ஆன்மீகத்துக்கும் இடையே உள்ள நுட்பமான மோதலை நாம் மாங்காண்டிசாமியில் காண்கிறோம். நம் ஊரில்தான் எத்தனை சாமிகள் ? எத்தனை நிறுவனங்கள் ? பண்டாரம் சொல்வது போல ‘ அப்படிப்பார்த்தால் யார்தான் எரப்பாளி இல்லை ? ‘ ஒரு பக்கம் அழுகிய மதமும் கடவுளும். மறுபக்கம் எல்லா இழிவுகளையும் எங்கும் சிக்காத ஆன்மீகம் தாண்டிசெல்கிறது. காய்ந்த பீயில் எரிந்தாலும் தீ தீதான் என்கிறார் ராமப்பன்.
நாவலில் இத்தகைய முரண்பாட்டியக்கம் அரசியல், குடும்பம், என பல தளங்களையும் நுட்பமாகப் பிளந்து செல்கிறது. மனிதர்களை எங்குமே அடையாளப்படுத்த முடிவதில்லை. ரெளடி லாரன்சுடன் ஓடிவிட்ட மகள் வடிவம்மையை நினைத்து ஏங்கும் பண்டாரம் முத்தம்மையின் குழந்தைப் பாசத்தை பொருட்படுத்துவதேயில்லை. மனிதனின் அடிப்படை உணர்வான காமத்தில் முளைக்கும் கற்பனைகள் எந்த ஆழம்வரை வேர்விட்டுச் செல்லும் என்பதற்கு முதியவரான அர்ச்சகர் போத்தி முத்தம்மை குறித்து சொல்லுமிடமே உதாரணம். உளவியல் துறையை கலை வெற்றி கொள்ளும் இட ம் அடுத்த வரியிலேயே வந்துவிடுகிறது. ‘இல்லாட்டி வேண்டாம். நான் சொன்னதை மறந்திடு பண்டாரம். நான் அதைச் சொல்லல்ல. நீ கேட்கலல. நம்மளப் பத்தி அவளுக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் இருக்கு. அதை நாம களையப்பிடாது ‘ வாசகன் மனதில் உறைவு கொள்ளும் ஒரு முடிவை உடைத்து உடனே வேறொரு இடத்திற்கு மேலும் நகர்த்துவது பெருங்கலைப்படைப்புகளுக்கு மட்டும் இருக்கும் பண்பு. அதாவது அந்த உணர்வு ஒரு கணத்தின் முனை மட்டும்தான். மனிதனுக்குள் உள்ள அவனே அறியாத சிறிய துளி. மனித வாழ்க்கையின் சொல்லிவிடமுடியாத விதத்தை நல்ல படைப்புகள் நம்மை நம்பவைத்து சொல்லிக்காட்டும். ஆத்மா இல்லாத சீவன்கள் என்று முதலாளிகளால் உதாசீனப்படுத்தப்படும் சிறுமைப்படுத்தப்படும் இந்த குறையீனர்களிடையேதான் உறவுகள் மனிதார்த்தமாக இருக்கின்றன. ஆனால் இழப்பதற்கு எதுவுமில்லாத இந்த உருப்படிகளிடம் கூட சமூகத்தில் உள்ளுறைந்தும் வெளித்தெரிந்தும் இயங்கும் சாதிய மனோபாவங்கள் எதிரொலிக்கின்றன. இது இந்திய மண்ணின் மற்றுமொரு வாசனை.
தேர்ந்த நெசவுகாரன் ஊடுபாவு இழுத்து நெய்வதுபோல பலநிற நூல்களும் சரிகையுமாக இந்நாவல் பல கோடுகளினால் ஆனதாக உள்ளது. உருக்கள் வாழும் பழனி படிக்கட்டுகளில் உள்ள கீழ்மை ஒருவகை . பண்டாரத்தின் சமையலறை இன்னொரு வகை கீழ்மை . ஒற்றைக்கை குழந்தையை பொம்மைபோல விளையாடுகிறார்கள். வம்புக்கார உண்ணியம்மை ஆச்சியும் அழுகிய நோயாளிதான், அழுகியிருப்பது அவள் மனம். அப்படி எத்தனை வகையான நோயாளிகள். மிக குரூரமான சித்தரிப்புகள் வழியாக செல்லும் இந்த நாவலில் கூர்மையான நகைச்சுவை சரிகை ஓட்டம் போல கூடவே பின்னிச் சென்றபடியே உள்ளது. ஒன்றை இன்னொன்று ஈடுசெய்து காட்டுகிறது. எந்த இடத்தில் தர்மத்தின் குரல் ஒலிக்கும் என்று சொல்லிவிடமுடியாது. உருப்படிகளுக்கு சமானமான வாழ்க்கை கொண்ட பகடை எதனாலும் அசைக்கமுடியாத தார்மீக குரலாக ஒலிக்கிறான். முதல் வரியிலேயே சின்னவள் வடிவம்மையின் குணச்சித்திரம் அறிமுகமாகிவிடுகிறது. அவளை பண்டாரம் நினைவுகூரும் இடங்களை மட்டும் கவனித்தால் அவரது உள்மனசு அவளை எப்படி பார்த்தது என்று தெரியும். இப்படிப்பட்ட பல நூறு சிறிய புள்ளிகளை கவனம் கொடுத்து படித்தால்தான் இந்நாவல் நமக்கு கிடைக்கும்.
ஒரு படைப்பாளியைப் பெருங்கலைஞன் என எப்படி மதிப்பிடுவது ? எனது அனுபவத்திலிருந்து சொல்கிறேன். வேறொரு எழுத்தாளனால் எழுதவே முடியாத அபூர்வமான இடங்களை இலகுவாக எழுதிச் செல்கிறபோதுதான் . மற்றவர்கள் நின்றுவிடும் இடத்திலே மேலே செல்லும்போதுதான். போத்திவேலு பண்டாரம் பெரிய மோசடிப் பேர்வழிதான். துஷ்டன்தான். ரோகிகளை வைத்துச் சுரண்டிய பணத்தோடு நாயக்கர் கையாளுக்குப் போக்குக் காட்டிவிட்டுத்தான் பேருந்தில் ஏறித்தப்பிக்கிறார். ஆனால் ‘பேருந்தில் கண்களை மூடியபடி சாய்ந்து முருகா என்றார். முருகா உன்னைப் பாக்காம போறன் மறுகணம் அவரால் கட்டுப்படுத்த முடியாதபடி அழுகை வந்து உடம்பு உலுக்கியது. ‘ இதுதான் கலையின் உயிர்த்துடிப்பு. தைப்பூச வசூல் முடிந்து ஊர்திரும்பிய பண்டாரம் பணத்தை உண்டியலில் திணிப்பதும் அப்படியொரு இடம். கதவுக்குப் பின் மறைந்து பேசும் சம்பந்தக்கார அம்மணியின் உருமாற்றம் இன்னொரு இடம். ‘நாம ஆருக்கும் ஒரு பாவமும் செய்யல்ல ‘ என்று ஏக்கியம்மை முழு ஆத்மார்த்தத்துடன் சொல்லுமிடம் இன்னொரு உதாரணம்.
அதேபோல குஷ்டரோகி தன் மூளிக்குழந்தையைத் தொடும்போது வேகாலப்பட்டுத் திட்டுகிற சப்பை முத்தம்மை இந்நாவலில் உயிர்ப்புள்ள பாத்திரம். குழந்தை மீதான தாயின் பெருங்காதலை இந்நாவலில் வாசித்தபோது நான் எழுதிக்கொண்டிருக்கும் கதையையும் சேர்த்து எழுதிவிட்டாரே என்று ஒரு நாள் இரவு முழுக்கத் தூங்காமல் அவதிப்பட்டேன். நல்லவேளையாக அது வேறொரு பாதையில் போகிறது என்று ஆறுதல்பட்டுக் கொண்டேன். தொரப்பன் தன் மகனைத் தொடுவதற்கு முன்கொள்ளும் பரபரப்பு மேலான இலக்கியத்தில் அபூர்வமாகவே காணக்கூடிய ஒன்று. கடைக்குட்டி மீனாட்சிக்கு வாக்களித்தபடி வளையல்கள் வாங்கமுடியாது வந்துவிடும் பண்டாரத்துள் பொங்கும் அன்பை நம் மண்ணின் அனுபவதளத்தில் வைத்துதான் புரிந்துகொள்ள முடியும். சரி. ஏன் பண்டாரம் இந்த இழிதொழிலை கைக்கொண்டார் ? பொருளுக்கு அடிமையானார் ? அவர் கண்களுக்கு குறையுடம்பு ஜீவன்கள் ஏன் மனிதர்களாகப் படவில்லை ? சமூகம் நிர்பந்திக்கிறது. மூன்று பெண்பிள்ளைகளை வைத்திருப்பவர்களுக்குத் தெரியும் மாப்பிள்ளைகளை விலைக்கு வாங்கவேண்டிய பாரம் எத்தகையது என்பது. இந்தக் காட்டில் சிறிதை தின்னும் மிருகத்தை அதைவிடபெரிது தின்னுகிறது.
மனிதர்கள் விற்பனையானபடியே இருக்கிறார்கள். தங்களைத்தாங்களே விற்கிறார்கள், பிறரை விற்கிறார்கள், விற்று வாங்குகிறார்கள். திருவிழாக்களில் உருப்படிகள் விலைபோகின்றன கல்யாண மார்க்கெட்டில் பெண்கள், மாப்பிள்ளைகள். கண் தெரியாத கூனனின் உடலுறுப்பை மருத்துவர்கள் மலிவாக வாங்குகிறார்கள். குளத்தில் கொலை செய்யப்பட்ட அன்னக்காவடிப்பண்டாரத்தின் தங்கப்பல் நகை கடுக்கன் எல்லா உடைமைகளையும் போலிஸ், முனிசிபாலிட்டி வேலையாள், டாக்டர் வரை திருடிக் கொள்கிறார்கள். தன்னையும் பிறரையும் சாமர்த்தியமாக விற்கும் வியாபாரத்தந்திரம் மட்டுமே உலகை ஆளும் என்ற வெறுமையை வாசகன் இந்நாவலில் கண்டடைகிறான். வியாபாரப்பேச்சை விதவிதமான நுட்பங்களுடன் அமைத்திருக்கிறார் ஜெயமோகன். கம்யூனிஸமும் நாராயணகுருவும் இந்த வியாபாரிகளுக்கு வெறும் போர்வை மட்டுமே. சுய வியாபாரத்தை என்பதை ஒரு சகஜநிலையாக ஏற்றுக்கொண்டிருக்கும் சமூகத்தைக் காட்டுகிறார்.
பல தமிழ் நாவலாசிரியர்களுக்கும் ஜெயமோகனுக்கும் உள்ள இடைவெளியை உணர்கிறேன். முத்தம்மையை ஒருவரால் தெருவிலிருந்து கண்டுபிடித்து சொல்லமுடியும்தான் . ஆனால் உயிருள்ள மனுஷியாக படைப்பில் நிறுத்த முடியாது. ஜெயமோகன் மிக இலகுவாக மனித குணாம்சங்களின் ரகசிய வாசல்களைத் தாண்டித்தாண்டி மேலே சென்றுகொண்இட இருக்கிறார். முத்தம்மை என்றில்லை சுப்பம்மை, வடிவம்மை, மீனாட்சி, எருக்கு என வரும் பெண்களும் தங்களளவில் அசலான பெண்கள் . கணந்தோறும் நாம் சந்திக்கிற மனுஷிகள். இச்சிறுநாவலில் வரும் ஏராளமான கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்குரிய குணங்களுடன்உள்ளனர். முரண்பாடுகளுடன் அழகுகளுடன் உள்ளனர். ஒவ்வொருவரிடமும் நாம் கண்டு புன்னகைக்கும் அல்லது வியக்கும் நுட்பமான தன்மைகள் உள்ளன. ஓரிரு வரிகளில் வரும் போலிஸ்காரர் தாணுபிள்ளை இந்த குரூரமான நாவலில் வரும் ஒரு வெள்ளைமனம்.
ஏதாவது இஸங்கள் சார்ந்து இந்நாவ லில் அர்த்தம் தேடுகிறவர்கள் ஏமாறக்கூடும். பெரும் படைப்பாளி எப்போதும் வடிவம்மை அக்கணத்தில் என்ன நினைக்கிறாள் என்றுதான் பின்தொடர்வான். அவளை பெண் என்று டைப் ஆக்கி பெண்ணியம் பேச வைக்கமாட்டான். அதில் சிருஷ்டிகரம் இருக்காது. அரட்டைதான் இருக்கும் . இந்நாவலை எந்தகோட்பாட்டு அடைப்புக்குள்ளும் சிக்கவைக்கமுடியாது. இதில் மனிதர்கள்தான் இருக்கிறார்கள். ஒரு ரெளடியைப் பற்றி எழுதுகிறபோது ரெளடியாகவும் ஒரு விபச்சாரியைப் பற்றி எழுகிறபோது விபச்சாரியாகவும் மாறாத படைப்பாளிகளின் படைப்புகளை கலை பொருட்படுத்தாது. தமிழ் எழுத்தாளர்கள் அநேகம் பேர் ‘கண்டு ‘சொல்கிறார்கள். ‘மதிப்பீடு ‘ செய்கிறார்கள் . அப்படி சுய மதிப்பீடுகளுக்கு சற்றும் இடம் கொடாமல் ஆழமான படைப்பாற்றலைத் தன் போக்கில் தேடவிட்டுப் பின்தொடரும் எழுத்தாக்கம் இந்த நாவல் முழுக்க விரிந்தபடியே இருக்கிறது.
கதாபாத்திரங்களைப் பேச வைப்பது என்பது ஒரு கலை. விதவிதமான குரல்கள் நாவலெங்கும் வட்டார வழக்குடன் கணீரென்று ஒலிக்கின்றன. இவை நம் மண்ணின் குரல்கள். திட்டமிட்டே இந்நாவலை எளியநடையில் ஜெயமோகன் எழுதியிருக்கிறார். குமரி வட்டார மக்களின் பேச்சுமொழி நம்பகத்தன்மைக்கு மட்டுமல்ல; உணர்ச்சிகளின் வெளிப்பாட்டுக்கும், நாவலின் வளர்ச்சிப் போக்கிற்கும் துணை செய்கிறது.
– ஒத்தச் செருப்ப உங்கப்பன் நாணப்பன் போடுவான். சவத்து மிண்டைக்க தலையில மயக்குன மரச்சீனி கிளங்குல்லா ?
– வேய் பெருமாளு. படியில என்னை குழந்தை பக்கத்தில போடும்வே. எட்டு நாளெங்கி எட்டு நாள் மனியனா இருந்து சாவுதேன் !
– தரகன்மாரு பலதும் சொல்லுவாக. உம்ம கெட்டினவள வேலிக்குப் பொறத்தால போறவன் மலத்திக் கெடத்தினான்னு சொன்னாவ. உள்ளதா வோய் ?
இந்த நடை சாதாரணமாக ஒரு சூழலை நம்பகமாக உருவாக்கிவிடுகிறது. ஆனால் எல்லா உரையாடல்களிலும் பின்னணியில் மனம் சூட்சுமமாக செயல்படுவதன் அடையாளம் உள்ளது. சில இடங்கள் புரிந்து கொள்ளக் கடினமான இருந்தாலும் பிரதேசமணம் ஈர்ப்பாக இருக்கிறது. வர்ணனைகளையும் ஆசிரியன் கூற்றையும் கதாபாத்திரங்களின் மன ஓட்டத்தையும் முழுக்கவே தவிர்த்துவிட்டு நேரடியான, எளிமையான எழுத்து வகையை தேர்ந்து கொண்டிருக்கிறது இந்நாவல். என்றாலும் நெகிழ்வான இடங்களில் மொழி உருகுகிறது. வன்மம் மிகும் இடங்களில் முர்க்கமாக எழுகிறது, மனதின் இருண்ட பகுதிகளுக்குள் போகிறபோது புதிராகிறது. அதிலும் பலதரப்பட்ட வாழ்நிலைகளில் உள்ள பெண்களின் ஆழ்மன ஓட்டங்களை அவர்களின் வாய்மொழியிலேயே துல்லியமாகக் காட்டிவிடுகிறது. உண்ணியம்மை சமத்காரமாக பேசும்போது ஏக்கியம்மை வெள்ளந்தியாக பேசுகிறாள். வடிவம்மை பேசும்போது கிராமத்து இளம்பெண்ணின் குறும்பும் ஏக்கமும் தெரிகிறது.
‘மனுசனை மனுசன் விக்காம முதலாளித்துவம் உண்டா மக்கா ? ‘
‘அடித்தொண்டையில் பேசுறவன்பாரு அவன் எப்படியும் முன்னுக்கு வந்திருவான் ‘
போன்ற நக்கல் மிக்க இடங்களும்
‘பக்தன்ட்ட இருந்து சாமி தப்ப முடியுமா ? ‘ ‘
எந்த மனிதன் ஆனாலும் அவனுக்கு வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான காலம் குழந்தைகள் வளர்ந்துவரும் காலகட்டம்தான்
போன்ற உயிர்த்துடிப்பான தெறிப்புகளும் திணிப்புகளாக இல்லாமல் நாவல் தன் பயணத்தில் வெளிப்படுத்தும் அனுபவசாரமாக இருக்கின்றன.
நாவல் சட்டென்று முடிந்தபின் எழுதப்படாத பகுதிகள் நம் மனதில் தொடர்கின்றன. போத்திவேலு பண்டாரத்தையும் வண்டிமலையையும் பெருமாளையும் கொச்சனையும் திடாரென்று வெளி உலகத்தில நம்மால் பார்க்க கூடும். போத்திவேலு எய்ட்ஸ் வந்து சாகலாம் அல்லது திருவண்ணாமலையில் புழுதி மண்டிய தெருவில் திருவோடு ஏந்திப் பாடலாம்.
சாவான பாவம் மேலே
வாழ்வெனக்கு வந்ததடி
நோவான நோவெடுத்து
நெஞ்செரிஞ்சு வாழுறண்டி
பாவ புண்ணியங்கள் வெளியிலிருந்து வருவதில்லை. உன் மனத்திற்குள்ளேயே, நீ செய்யும் கரரியங்களிலேயே இருக்கிறது என்பதை இந்நாவல் எனக்கு உணர்த்துகிறது. வாசகர்கள் தங்கள் அனுமானங்களைச் சகல திசைகளிலும் மேலெடுத்துச் சொல்லலாம். மனிதன் தன் நெஞ்சுக்குப் பயப்படும் ஒரே இடமான கோயில்களே உண்மையில் மல்லிகைச்சரம் சுற்றி பேருந்து நிறுத்தங்களில் நிற்கும் மெளசுபோன கிராக்கிகள் போல் இந்நாவலில் வெளுத்து தெரிகின்றன. த்ீமையைத்தான் மனிதன் உண்மையில் கொண்டாடிக் கொண்டிருக்கிறான். தீமையே அனைத்தையும் வெற்றிகொள்ளும் சக்தி வாய்ந்த தெய்வமாக போற்றப்படுகிறது. தன்னைத் தவிர எதையும் பொருட்படுத்தாத ஒரு பெரு உலகமும் சக மனிதர்கள் மீது நேசம் வைக்கிற ஒரு மிகச் சிறிய உலகமும் இந்நாவலில் மோதியபடியே இருக்கின்றன. பிற மனிதர்களை நேசிக்க உண்மையில் ஆன்ம பலம் வேண்டும். அது எதையும் விற்று வாங்காத இந்தக் குறைப்பிறவிகளிடமே இன்னும் மிச்சமிருக்கிறது. அப்படியானால் அது உடமை, பற்று பற்றிய ஆழமான கேள்விகளுக்கு இட்டுச் செல்கிறது.
இந்த உக்கிரமான நாவலைப் படித்தபின் தெய்வம் இருக்கட்டுமே என என் மனசு ஏங்குகிறது. பிறகு மனிதன் எதை நம்பி வாழ்வான் ?
ஜெயமோகன் படைப்புகளில் எது சிறந்தது என எடைபோடும் நேரம் இதுவல்ல. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உலகத்தைப் புதிய கோணத்தில் பேசுகிறது. ஆனாலும் ஏழாம் உலகம் தமிழ் நாவல் வரலாற்றில் வித்தியாசமான சாதனை, தமிழுக்கு ஒரு கொடை என்றே சொல்கிறேன். அவரது படைப்புகளுக்கான எதிர்வினைகள் சமகாலச் சூழலில் எப்படியிருப்பினும், பாரதி, புதுமைப்பித்தன் என இன்று நாம் பேசுகிற தளத்தில் ஜெயமோகனுக்கு நாளை இடம் உண்டு.
[தமிழினி வெளியீடான ‘ ‘ ஏழாம் உலகம் ‘ நாவலுக்கான முன்னுரை . தமிழினி 130/2 அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம் சென்னை 86 போன் 28110759 மின்னஞ்சல் tamizhininool@yahoo.co.in
சு வேணுகோபால் . முக்கியமான இளம் தமிழ் எழுத்தாளர். பூமிக்குள் ஓடுகிறது நதி . கூந்தப்பனை முதலிய சிறுகதை தொகுப்புகள் தமிழினி வெளியீடக வந்துள்ளன. நுண்வெளிகிரணங்கள் என்ற நாவலும் வெளியாகியுள்ளது. மூன்றுதலைமுறை வரலாற்றை சொல்லும் பெரும் நாவல் ஒன்றின் பணியில் இருக்கிறார். மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆசிரியர் .
நூல் வெளியீட்டுவிழா சென்னையில் தேவநேயபாவாணார் அரங்கில் பிப்ரவரி 28 அன்று நடக்கிறது]
tamizhininool@yahoo.co.in
- கனடாவில் கால்சட்டை வாங்குவது
- கவிதை
- கவிதை
- தவம்
- கவிதை
- ஒரு கவிதையே கேள்வியாக..
- தேவைகளே பக்கத்தில்
- பத்திரமாய்
- குட்டி இளவரசியின் பாடல் பற்றி
- அவன்
- பிரிவிலே ஓற்றுமையா ?!
- ஆறுகள் – கழிவு ஓடைகள் : ஜெயமோகனின் புது நாவல் ஏழாம் உலகம் .
- சுப்ரபாரதிமணியனின் சமயலறைக் கலயங்கள்
- சிதைந்த நம்பிக்கை
- கதை ஏன் படிக்கிறோம் ?
- தக்கையின்மீது நான்கு கண்கள் – குறும்படம்
- விருமாண்டி – கடைசிப் பார்வை
- நிழல்களின் உரையாடல்(Mothers and Shadows)-மார்த்தா த்ராபா[தமிழில் அமரந்த்தா]
- உஸ்தாத் படே குலாம் அலி கான் – ஹரி ஓம் தத்சத்
- ஃப்ரை கோஸ்ட்
- கடிதங்கள் – பிப்ரவரி 19,2004
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி
- கடிதம் – பிப் 19,2004
- மனிதம் : காவல் துறையும் மனித உரிமைகளும்
- கவிப்பெரும்பேரரசு கரடிமுத்துவுக்கு ஞானபீடப்பரிசு
- தேர்தல் ஸ்பெஷல் படங்கள்:
- வாரபலன் – பிப்ரவரி 19,2004 – சீனியர் மேனேஜர் அவஸ்தை – குறுநாவல் குறுகுறுப்புகள் – வழி தவறிய காவிய நயம்- குஞ்சுண்ணி
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 7
- மூடல்
- பொருட்காட்சிக்குப் போகலாமா..
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தாறு
- விடியும்! – நாவல் – (36)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -12)
- சில நேரங்களில்…சில குழந்தைகள்
- அமெரிக்கா ரிட்டர்ன்
- தாண்டவராயன்
- நாகம்
- இந்தியாவில் பெண்கள் மசூதியால் ஏற்பட்ட புயல்
- பயங்கரவாதியை உருவாக்குவது எது ? – பகுதி 1
- உறக்கத்தில் பளிச்சிடும் உள்ளொளி
- ஈராக்: அமெரிக்க ஆளுகையின்கீழ் பெண்ணுரிமை
- குழந்தைகளுக்கான கல்வி
- ஆஸ்திரேலியப் பழங்குடியினர் மீது ஆஸ்திரேலிய அரசின் தொடரும் அடக்குமுறை
- யுத்த நெடி , இந்தியக் கூலியின் அரேபியக் காலம் , இருத்தலிஸம்
- அன்புடன் இதயம் – 8 – ஒரு வாரிசு உருவாகிறது
- கிராமத்தில் உயிர்!
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- காலத்தின் கணமொன்றில்
- விட்டுசெல்….
- நிசப்தத்தின் நிழலில்
- நெஞ்சத்திலே நேற்று